Thursday, December 30, 2010

என்னைக் கவர்ந்த பதிவுகள்

பதிவுலகில் நான் அடியெடுத்து வைத்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆரம்பத்தில் பதிவெழுதி போஸ்ட் செய்தபின் அதோடு கடமை தீர்ந்தாற்போல் இருந்து விடுவேன். அத்திப் பூத்தாற்போல் பின்னூட்டங்கள் வரும். பிறகு இன்டலி, தமிழ்மணம் என்று எனது தளத்தை இணைத்த பிறகுதான் எனக்கு பதிவுலகம் பற்றி புரிய ஆரம்பித்தது. பல பேரை நான் பின் தொடர, என்னைப் பலர் பின்தொடர எனது நட்புகளும் எல்லைகளும் மெல்ல மெல்ல விரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஒன்றரை ஆண்டில் நூற்றுக் கணக்கான பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில பதிவுகள் என்னை வியக்க வைத்தன. சில சிரிக்க வைத்தன. சில பதிவுகள் நெகிழ வைத்தன. சில பதிவர்களின் எழுத்தாளுமை என்னை அட போட வைத்திருக்கிறது.

பதிவுகளில் சிலர் எழுதும் திரை விமர்சனங்கள் பிரபல பத்திரிகை எழுதும் விமர்சனத்தை விட தரமாகவும், அழுத்தமாகவும் நடுநிலையாகவும் (என்ன கொஞ்சம் நீளம்தான் கூடி விடும்) இருப்பது உண்மை.

2010 இன் இறுதியில் இருக்கிறோம். இந்த வருடம் நான் வாசித்தவற்றில் என்னைக் கவர்ந்த, சிந்திக்க வைத்த சில பதிவுகளை இங்கு பட்டியலிட விரும்புகிறேன்.


ரவி ஆதித்யா

இணையத்தில் நான் முதன் முதலில் எதேச்சையாய் வாசித்த பதிவு, ரவி ஆதித்யாவுடையது. ரிமோட் என்ற அந்தப் பதிவு நகைச்சுவையுடன் வித்யாசமாக எழுதப் பட்டிருந்தது. ரிமோட் என்கிற தம்மாத்தூண்டு பொருள் படுத்தும் பாட்டில் டிவியில் தெரியும் தொடர்பற்ற காட்சிகளையும் வசனங்களையும் நச்சென்று நயம்பட எழுதியிருந்தார். மற்றொரு பதிவில், தான் டைப்ரைட்டிங் கற்ற காலத்து நினைவுகளை மிகுந்த சுவாரசியாமாக சொல்லியிருந்தார். அநேகமாக எழுபதுகளில் இந்த அனுபவம் அன்றைய இளைஞர்கள் எல்லோருக்கும் இருந்திருக்கும். டைப்பிங் ஷார்ட் ஹேண்ட் கற்ற காலத்தின் மலரும் நினைவுகளில் நானும் ஆழ்ந்து போனேன்.

http://raviaditya.blogspot.com/2010/07/pack-my-box-with.html

http://raviaditya.blogspot.com/2010/05/blog-post_5367.html

அது ஒரு கனாக் காலம்.

தன இளவயது அனுபவங்களை அந்தக் கால வாசத்தோடும், மெல்லிய நகைச் சுவையுடனும், பசுமையான நினைவுகளுடனும் இதில் பகிர்ந்திருக்கிறார் பதிவர். மாப்பிள்ளைத் தோழனும் திரட்டிப் பாலும் என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். புரியும்.

வித்தியாசமான வியாதி-பெங்களூரு நினைவுகள் என்ற பதிவில் தனக்கு வந்த நோயைப் பற்றியும் மருத்துவ மனை அனுபவங்களையும் கூட நகைச்சுவையோடு இவர் சொல்லியிருந்த விதமும், பதிவை முடித்திருந்த விதமும் என்னைக் கவர்ந்தது.

http://trichisundar.blogspot.com/2010/05/blog-post_30.html


ரிஷபன்

பத்திரிகை மூலம் ஏற்கனவே நான் அறிந்தவர்தான் ரிஷபன். சிறுகதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணம் இவர் கதைகளில் பளிச்செனத் தெரியும். உணர்வு பூர்வமான இவரது எழுத்து எவரையும் ஆட்கொள்ளும். ஸ்ரீரங்கத்து மண் வாசம் கலந்த எழுத்து வேறு. கேட்கவா வேண்டும். இவரது கண்ணாடி என்ற சிறுகதையும் ரிக்ஷா நண்பர் என்ற கதையும் உன்னதமானது.

http://rishaban57.blogspot.com/2010/07/blog-post_18.html


சோத்துமூட்டை

அர. பார்த்தசாரதியின் பதிவில் ரயிலில் கிடைத்த ஆப்பு என்ற ஒரு சிறுகதை என்னை திகைக்க வைத்தது எனலாம். சிறுகதை இலக்கணத்தோடு, மிக மிக வித்தியாசமான ஒரு தொழிலைக் குறித்து எழுதியிருந்தார். படித்து விட்டு சில நிமிடம் அயர்ந்து அமர்ந்து விட்டேன். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்கிற வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

http://parthasarathyrengaraj.blogspot.com/2010/12/3.html


கோபி ராமமூர்த்தி.

இவரது ஜடையும் , சொம்பு புராணமும் என்னை மிகவும் கவர்ந்த சுவாரசியமான பதிவுகள். தான் எழுத எடுத்துக் கொள்ளும் பொருளை, அது புத்தக விமர்சனமாகட்டும், விழா நிகழ்வுகளாகட்டும் பயணமாகட்டும் , சொம்பு உருவாக்கமாகட்டும் அதுகுறித்த ஆழ்ந்த தகவல்களுடன் தெளிவான ஞானத்தோடு இவர் எழுதும் விதம அசத்துகிறது. சடையை நான் மிகவும் ரசித்தேன். இறுதியில் அது சிவனாரின் சடையில் ஆன்மீகத்துடன் இணைத்த விதம அற்புதம். இவரது எழுத்தாளுமையும், நுணுக்கமும் கொஞ்சம் சுஜாதா, கொஞ்சம் பாலகுமாரனை. நினைவுபடுத்துகிறது

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_19.html


ஆர்.வெங்கடசுப்ரமணியன் (தீராத விளையாட்டுப் பிள்ளை)

இவரது சங்கீதப் பதிவுகள் சுவாரசியமானவை. கலகலப்பாக பின்னி எடுக்கிறார். காசு கொடுத்து சங்கீதம் கேட்ட முதல் ஆள் யாரென்று ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார். தன்னைப் பற்றிய தகவல்களையும் கலகலப்பாக தந்திருக்கிறார். கண்டிப்பாக இவரது காது கர்னாடிக் காதுதான்

http://mannairvs.blogspot.com/2010/12/blog-post_30.html

.

ஜோதிஜி (தேவியர் இல்லம் திருப்பூர்)

திருப்பூர் சாயப் பட்டறைகளில் சாயக் கழிவுகளின் மூலம் நகரில் ஏற்படும் மாசும் அதுசார்பாக இடப்பட்ட அரசாணைகளும் , அதற்குப் பின் நடந்தவைகளையும் டெக்னிக்கலாக ஏராளமான தகவல்களோடு எழுதியிருக்கிறார். இறையன்புவின் நேர்மை கூடபிரச்சனைக்கு ஒரு காரணம் என்கிறார். சாயப் பட்டறைகள் குறித்து நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது.

http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_27.html


தங்கத்தமிழ்

எனக்கு காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு, இவரது பதிவு முழுக்க அவரது பாடல்களின் அலசல்கள்தான். தங்கத்தமிழ் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்

http://thangathamizh.blogspot.com

.

முத்துச் சிதறல்

மனோ சாமிநாதனை எண்பதுகளிலேயே எனக்குப் பழக்கம். இணைய எழுத்தாளராக அவர் அசத்திவருவது சமீபத்தில் தான் தெரியும். இவரது பாலைவன வாழ்க்கை வெகு சுவாரசியம். பெண்களுக்காக இவர் எழுதும் விஷயங்களும் பயனுள்ளவை.

http://muthusidharal.blogspot.com/2010/07/blog-post_10.html


திரை விமர்சனங்கள்

சினிமா விமர்சனங்கள் என்று எடுத்துக் கொண்டால் கேபிள் சங்கர், குடந்தை கீதப்பிரியன், சி.பி செந்தில் குமார், ஜாக்கிசேகர் என்று சொல்லிக் கொண்டு போகலாம். குடந்தை கீதப்ரியனின் தூங்கா நகரம் மதுரை, மதுரையை கண்முன் நிறுத்தியது. சி.பி.செந்தில்குமாரின் ஈரோடு வங்கி காசோலை மோசடி விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவு. (தலைப்பை நான் மாற்றி விட்டேன்)

http://geethappriyan.blogspot.com/2010/10/blog-post_17.html

http://adrasaka.blogspot.com/2010/12/blog-post_10.html


கவிதைகள்

என்னைக் கவர்ந்த சில எளிமையான மென்மையான கவிதைகள்.

உணர்ந்தேன். (ராஜியின் கற்றலும் கேட்டாலும்)

http://suharaji.blogspot.com/

உள் காயம் (கே.பி.ஜனா)

இனி ஒரு விதி செய்வோம் (ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி)

http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/12/blog-post_22.html

இடமும் வலமும் (உழவன்)

http://tamiluzhavan.blogspot.com/2010/11/blog-post.html

(பனித்துளி சங்கரின் கவிதைகளை படிக்க முயல்கிறேன். அவரது வலைப பக்கம் எனக்கு திறந்து பார்க்கவே முடியவில்லை. ஏன் எனத் தெரியவில்லை)


கொஞ்சம் வெட்டிப் பேச்சு (சித்ரா)

கடைசியாக, இந்த ஆண்டின் மிகச் சிறந்த பதிவாக எனக்குத் தோன்றியது சித்ராவின் விருந்திலே ஒரு இதயம் முளைக்குதோ என்ற பதிவுதான். வாழ்வின் மிகப்பெரிய உண்மையை ஒரு விருந்தின் மூலம் அனுபவபூர்வமாய் விருந்துண்டவர்களுக்கு உணர்த்தி, வாவ்! அற்புதம். அதை சித்ரா சற்றே நகைச்சுவையோடு எழுதி இருந்த விதமும் முடித்திருந்த விதமும் நெஞ்சை நெகிழ்த்தியது. இவரது பதிவுகள் படிக்கும்போது ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்கிறது

http://konjamvettipechu.blogspot.com/2010/12/blog-post_19.htm

.

நான் படித்தவற்றில் என்னை பாதித்தவைகளைத்தான் இங்கே பகிர்ந்து கொண்டேன். நான் படிக்க வேண்டியது இன்னும் கடலளவு இருக்கிறது.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 27, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2011 பிறக்கப் போகிறது. ஒருவருடமும், ஒரு வயதும் கழியப்போகிறது. இந்த ஒரு வருடத்தில் ஏதாவது உருப்படியாய் செய்தேனா? ஒரு டைரி குறிப்பை வாசிக்க மனசு சற்று பின்னோக்கிச் செல்கிறது.

ஜனவரி மாதம் எனது உப்புக் கணக்கு புதினம் வெளியானது. இந்த புத்தகம் எனது மூன்றாண்டு உழைப்பு. இந்த புத்தகத்தின் மூலம் என் வீட்டிற்கருகில் உள்ள விருபாக்ஷீஸ்வரர் கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.. இந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து நேரிடையாக வாங்கும்போது எனக்குக் கிடைக்கும் எழுத்தாளருக்கான கழிவை சிவனுக்கு அளித்து விடுவது என்பதே என் முடிவு. எனது முடிவைக் கேட்டு பல நண்பர்கள் என்னிடமே புத்தகம் வாங்க, கோயிலுக்கு பணம் போய்ச சேர்ந்தது. மனசுக்கு விலை மதிப்பற்ற ஒரு மகிழ்ச்சி கிடைத்தது.


இதுவரை எத்தனையோ வாசர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்றாலும், உப்புக் கணக்கு மூலம் இன்னும் பல நல்ல வாசகர்கள் கிடைத்தார்கள். எனது மின்னஞ்சல் முகவரிக்கு இந்த கதைக்காக வந்த மின்னஞ்சல்கள் நிறைய.


இந்த உப்புக் கணக்கு குறித்து முதலில் மைலாப்பூர் டைம்ஸ் விமர்சித்தது. பிறகு ஹிந்து நாளிதழ் தனது விமர்சனத்தை இந்த புதினத்திற்கு எழுதியது. பிறகு, தொடர்ந்து, கலைமகள், தினமணி, அமுதசுரபி என வரிசையாய் புத்தக மதிப்புரை எழுத, மொத்தத்தில் இந்த மண்ணில் நான் பிறந்ததற்கு இந்த படைப்பு மூலம் நான் இந்த தேசத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்திருப்பதாகவே நினைக்கிறேன்.


மே பதினெட்டு என் பிறந்த நாள் அன்று நான் இருந்தது திருவண்ணாமலையில். என் தங்கை பெண்ணின் கல்யாணம் வேறு. ஜானவாசத்தன்று எல்லோரும் சாப்பிடும்போது ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க, இன்று என் பிறந்த நாள் என்று அறிவிப்பு செய்து ஓசியில் விருந்து கொடுத்தேன்.(தங்கை செலவில்) அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி உறவினர்கள் பத்து பேருடன் கிரிவலம் செய்தது மறக்க முடியாதது. அது போல் ஒரு பிறந்த நாள் இது வரை கொண்டாடியதில்லை. அடி அண்ணா மலையிலிருந்து ஒரு பைரவர் எங்களோடு கிரிவலம் வந்து நாங்கள் சத்திரத்தை அடையும் வரை கூடவே வந்து எங்கள் கையால் உணவு சாப்பிட்டுச் சென்றது அதிசயமாக இருந்தது.


ஆகஸ்ட் மாசம் குருவாயூர், பாலக்காடு என்று ஒரு வார யாத்திரை. குருவாயூரில் பதினைந்து முறை சுவாமி தரிசனம். அங்கிருந்து திருநாவாய் என்ற ஷேத்திரத்திற்கு சென்றோம். சிவன், விஷ்ணு, பிரும்மா மூவரும் ஒரு சேர இருக்கும் இடம். நதிக்கு ஒரு கரையில் நவா முகுந்தனின் சந்நிதி. மறுகரையில் சிவனும் பிரும்மாவும். நாங்கள் போகும் போது நேரமாகி விட்ட படியால் முகுந்தனை மட்டுமே தரிசிக்க முடிந்தது. சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த முறை சிவனையும் பிரும்மாவையும் தரிசித்து விடுவது என்ற முடிவோடு பாலக்காட்டுக்கு பயணமானோம்.


பாலக்காட்டில் பஜனோத்சவம் நடந்துகொண்டிருந்தது. மகா கணபதியான் கோயில் மண்டபத்தில் ஐந்து நாள் விடிய விடிய பஜனைகள் நடக்கும். பல பிரபலங்கள் தங்கள் குழுவோடு வந்து பஜன்ஸ் பாடுவது வழக்கம். காலைக் காப்பியில் ஆரம்பித்து இரவு சாப்பாடு வரை கோயிலில்தான். கோயிலை ஒட்டி என் சின்ன மாமியார் வீடு. எந்நேரமும் நாமாவளி கேட்டுக் கொண்டேயிருந்தது. இடையில் ஒருநாள் காவசேரியில் உள்ள எங்கள் குலதெய்வ கோயிலுக்கும் (பரக்காட்டு பகவதி) சென்று வந்தேன். மற்றுமொரு நாள் பதினெட்டு ஆக்ராஹாரங்களில் உள்ள கோயில்களுக்கும் ஒரு விசிட். இந்த பயணம் நிச்சயம் ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீப்தான்.


அக்டோபர் மாசம் எனது சிறுகதை தொகுப்பு தகப்பன் சாமி வெளியாயிற்று. சிறுகதை என்பது தன்னுள் மிகப் பெரிய விருட்சத்தை ஒளித்து வைத்திருக்கும் வீரிய விதை. எனக்கு சிறுகதை மீது அதீத காதல் உண்டு.


17-12-2010 அன்று வெளி வந்த குமுதம் பக்தி இதழில் இதோ எந்தன் தெய்வம் என்ற பகுதியில் எனது ஆன்மீக கட்டுரை வெளிவந்துள்ளது.


இந்த ஆண்டு எனது இரண்டு பதிவுகள் வாசகர்களால் பிரபலப்படுத்தப் பட்டது, பத்திரிகையில் எழுதினால் காசு கிடைக்கும் என்றாலும் என்னமோ எனக்கு இப்போது பதிவு எழுதவே பிடித்திருக்கிறது, காரணம் இங்கே என்னை விட நன்கு எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். எனவே என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனது மனக் குமுறல்களையும் சமூகச் சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கிறேன்.


ஆக மொத்தம் இந்த வருடம் நன்றாகவே கழிந்திருக்கிறது. யாருக்கும், தெரியாமல் கூட எந்த தீமையும் செய்யவில்லை.


புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வித்யா சுப்ரமணியம்

Friday, December 24, 2010

என் பார்வையில் மன்மதன் அம்பு.

வெளியான முதல் நாளே மன்மதன் அம்பு பார்த்தது சந்தோஷமாக இருந்தது.
விமர்சனம் என்கிற பெயரில் ஒட்டு மொத்த கதையையும் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கமலின் தீவீர ரசிகை. அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் சர்ச்சைகள் வருத்தப் பட வைக்கிறது. ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை இது நிச்சயம் பாதிக்கும். நிற்க, மன்மதன் அம்புக்கு வருவோம்.

டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சண்டைக் காட்சிகள் இல்லை. நகைச் சுவைக்கு என்று தனி டிராக் கிடையாது. குத்துப் பாடல்கள் இல்லை. கட்டிப்பிடி நடனங்கள் இல்லை. குறைந்த பட்சம் தொட்டுப் பேசும் காட்சிகள் கூட இல்லை. திரிஷாவின் அறிமுகப் பாடல் மட்டும், அது கூட கதைக்கு தேவையானதால். தமிழ் சினிமாவின் பார்முலாவை அனாயாசமாக மாற்றி இருக்கிறார் கமல். ஒரு சிம்பிளான கதையை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கிறார். படத்திற்கு பலம், அவரது திரைக்கதையும் வசனமும். நடிகர் கமலஹாசனுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் கமல்ஹாசன் சளைத்தவர் இல்லை. ஒரு படி மேலேயே இருக்கிறார்.

பிரான்ஸ், வெனிஸ் என்று கேமரா அசத்துகிறது. அதற்காகவே பலமுறை படத்தைப் பார்க்கலாம். நகைச்சுவை, கதையோடு கலந்து அழகாக வெளிப் பட்டிருக்கிறது. கடைசி அரைமணி நேரத்தில் எப்பேர்ப் பட்ட சிடு மூஞ்சியும் சிரிக்கும் என்பது உறுதி. மாதவன் சங்கீதா திடீர் காதல்தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

கமல் மட்டும் எப்படி வயது குறைந்து கொண்டு வருகிறார் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். த்ரிஷா மிக கியூட்டாக இருக்கிறார். சொந்தக் குரலில் பேசி இருக்கிறார். தொடர்ந்து பேசலாம்.

சங்கீதாவுக்கு ஒரு ஓ போடலாம். சூப்பரா செய்திருக்கிறார். நகைச்சுவையில் நல்ல டைமிங் மிக முக்கியம். அத்தனை பெரும் அதை உணர்ந்து மிக இயல்பாக செய்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் அந்த குட்டி (சோடா புட்டி) பையன் வாவ்! எங்கேர்ந்து புடிச்சாங்கன்னு தெரியல. இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரலாம் போல இருக்கு. கமல் மாதவன் காம்பினேஷன் அன்பே சிவத்திற்குப் பிறகு மறுபடியும் நல்லதொரு படத்தை தந்திருக்கு.

மொத்தத்தில் மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டாக எல்லா கவலையும் (வெங்காயம் உட்பட) மறந்து விட்டு குழந்தைகளோடு அமர்ந்து பார்க்கலாம்.
மிக டீசன்ட்டான படம்.

Friday, December 17, 2010

யுதிஷ்ட்ரம் (சிறுகதை)

லஸ் கார்னரில் சிக்னலுக்காகக் காத்திருந்த சமயத்தில் ரஞ்சனியின் அழைப்பு வந்தது. வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைலை இயக்கி அவளோடு பேசினான்

.
"உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சதீஷ். இந்த டிசம்பர்ல அகாடமில பாடற சான்ஸ் கிடைச்சிருக்கு எனக்கு"

"ஒ! வெரி குட! மத்தியான கச்சேரியா? சாயங்கால கச்சேரியா?"


"மத்தியானம்தான். அதுவே எவ்ளோ பெரிய சான்ஸ்!"

"சந்தோஷம். வாழ்த்த்துக்கள்"

இதோட உன் பொறுப்பு தீர்ந்துட்டதா நினைச்சுடாதே. என் கச்சேரிக்கான ரெவியுவை உன் பேனாவால நீதான் எழுதற சரியா? உன் விமர்சனம் என்னை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தணும் என்ன?


"எழுதிட்டா போச்சு. அது என் வேலைதானே. நீ சொல்லணுமா என்ன?"
"அடுத்த வாரம் போன் பண்றேன். ஏர்போர்ட்டுக்கு வந்துடு. சீசன் முடியற வரை உங்க வீட்லதான் இருக்கப் போறேன். கொஞ்ச நாள்தான் முகம் பார்த்து காதலிப்போமே. என் கச்சேரி அன்னிக்கு
அப்பா, அம்மா வரும் போது கல்யாண தேதியை முடிவு பண்ணிடலாம்னு இருக்காங்க."


"அப்பாடா ஒரு வழியா இறங்கி வந்தாயே சந்தோஷம்"
"நா என்ன செய்யட்டும் சதீஷ்? ஆறு வருஷப் பிரயத்தனத்துக்குப் பிறகு இப்பதான் கொல்கொத்தா ரஞ்சனின்னு என் பேர் பேசப்பட ஆரம்பிச்சிருக்கு. அகாடமில ஒரே ஒரு பாட்டாவது பாடின பிறகுதான் கல்யாணம்னு இருந்தேன். ஒரு முழு கச்சேரிக்கே வாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்பறம் என்ன?"
"சரி பார்க்கலாம்" சதீஷ் மொபைலை பாக்கெட்டில் வைத்தபடி வண்டியைக் கிளப்பினான்.


ரஞ்சனி மிக நல்ல குரல் வளம் உள்ளவள். சங்கீத உலகில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக உழைத்ததில் இந்த ஆறு வருடத்தில் ஓரளவு நல்ல பெயரை சம்பாதித்திருந்தாள். டிசம்பர் சீசனில் பல்வேறு சபாக்களில் அவள் பாடியிருந்தாலும் கூட, அவளது கச்சேரிகளை விமர்சிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்ததில்லை.

அவனது பத்திரிகை அலுவலகம் அவனை அகாடமிக்கு என்று ஒதுக்கி இருந்தது. அதுவும் பிரபலங்களின் கச்சேரி மட்டும்தான். இந்த முறை எப்படியாவது ஆசிரியரின் அனுமதி பெற்று, ரஞ்சனியின் மத்தியான கச்சேரிக்குப் போய் விட வேண்டும் என அவன் தீர்மானித்தான். அவனது விமர்சனம் அவன் பணி புரியும் பத்திரிகையும் சங்கீத விமர்சனத்திற்குப் பெயர்பெற்றது. எத்தனையோ அறிமுகங்களை தாரகைகளாக உயர்த்தியிருக்கிறது.


அடுத்த வாரம் ரஞ்சனி வந்து சேர்ந்தாள். முன்பை விட அழகும் செழுமையும் கூடியிருந்தது.
"என்னோட நீ நிறைய இடத்துக்கு வரணும் சதீஷ். கச்சேரிக்கு நா நிறைய தயார் செய்துக்கணும்." என்றவள் அன்று மாலையே அவனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

"இந்த சீசன்ல ஏழு கச்சேரி பாடப் போறேன்." என்றவள் முதலில் நுழைந்தது ஒரு பிரபல ஜவுளிக் கடைக்குள். கடையையே புரட்டிப் போட்டுப் பார்த்து வித விதமாய் ஏழு பட்டுப் புடவைகள் வாங்கினாள். அடுத்த நாள் பிரபலங்களுக்கு ரவிக்கை தைக்கும் ஒரு தையல் கடை வாசலில் அவன் காத்திருக்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அவள் ரவிக்கை டிசைன் தேர்ந்தெடுத்து எப்படி தைக்க வேண்டும் என விளக்கி, துணிகளைக் கொடுத்துவிட்டு வந்தாள்.

"போலாமா?"

"வீட்டுக்குத்தானே?"

"இல்ல தி.நகர் போகணும்"

அவன் வண்டியை கிளப்பினான். வழி முழுக்க அவள் விடாமல் மொபைலில் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டே வந்தாள்.

"ஆமாம். மத்தியானக் கச்சேரிதான். ஆடிட்டோரியம் நிரம்பி வழியணும். உங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுங்க. உங்க மூலமா ஒரு அம்பது நூறு பேராவது வரணும். "
பேசிய எல்லோரிடமும் இந்த வசனத்தை மீண்டும் மீண்டும் கூறினாள்

"ஏன் சதீஷ், உங்க பத்திரிகைல சங்கீத முன்னோட்டம்னு போடுவீங்களே. அதுல இந்த முறை என்னைப் பத்தி போடுவீங்களா?

"என்ன போடணும்?"

"இந்த முறை கொல்கொத்தா ரஞ்சனியோட புடவைகளும் புது மோஸ்தர் நகைகளும் நிச்சயம் பெண்களைக் கவரும்னு ஒரு துணுக்கு போடச் சொல்லேன்.
சதீஷ் அவளை உற்றுப் பார்த்தான்.எதுவும் பேசவில்லை .பிறகு கேட்டான்

"அகாடமில என்னல்லாம் கீர்த்தனம் பாடப் போற ரஞ்சனி."
"இன்னும் முடிவு செய்யல, அதுக்கென்ன இன்னும் இருபது நாள் இருக்கே. நிறுத்து, நிறுத்து. இந்த நகைக் கடைதான்."

அவன் காரை நிறுத்தினான்."நீ போயிட்டு வா. பர்ச்சேஸ் முடிஞ்சதும் மிஸ்டு கால் குடு. வந்து கூட்டிட்டு போறேன்." அவன் அவளை இறக்கி விட்டு விட்டுச் சென்றான்.

மாலை நான்கு மணிக்கு உள்ளே நுழைந்தவள், இரவு ஒன்பது மணிக்கு அவனை அழைத்தாள். அவள் முகம் தங்கத்தை விட அதிகமாய் மின்னியது. வீட்டுக்கு வந்து நகைகளைக் கடை பரத்தி அம்மாவுக்கும் அவனுக்கும் காட்டினாள்.ஒவ்வொரு நகையாய் அணிந்து அழகு பார்த்தாள் சதீஷ் கொட்டாவி விட்டான்.

"இது அகாடமி கச்சேரிக்குக் கட்டிக்கப் போற நீலப் பட்டுப் புடவைக்குப் போட்டுக்கப் போற மேட்சிங் செட். இது நாரதகான சபைக்கு. இது மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ். இது....

"எனக்கு தூக்கம் வருது படுக்கட்டா" சதீஷ் மற்றொரு கொட்டாவியோடு நகர்ந்தான்.ரஞ்சனி மீண்டும் செல் போன் எடுத்து பேச ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாய் நகர்ந்தது.

"நாளைக்கு பார்லர் போகணும் சதீஷ். பெடிக்யூர், மேனிகியூர், பேஷியல், அது இதுன்னு நிறைய வேலை இருக்கு. கச்சேரிக்கு இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு. தினமும் அலைஞ்சதுல ஸ்கின் டோன் மாறிடுத்து. எல்லாத்தையும் சரி பண்ணிக்கணும்.

மறுநாள் பார்லர் விஜயத்திற்குப் பிறகு, அவள் அழகு பல மடங்கு கூடியிருந்தது, அவளது முதல் கச்சேரியே அகடமி கச்சேரி என்பதால், மிகுந்த பரபரப்பாக இருந்தாள். தூங்கினாத்தான் முகம் ப்ரஷ்ஷா இருக்கும் என்றவள் இரவு ஏழுமணிக்கே படுத்து தூங்கினாள். மறுநாள் பார்லருக்கு மீண்டும் சென்று ஒப்பனை செய்து கொண்டு வந்தாள்.

"தேவதை மாதிரி இருக்க" அம்மா அவளைப் பாராட்ட, அவன் புன்னகைத்தான்.
அகாடமியில் கணிசமாகக் கூட்டம் நிரம்பியிருந்தது. அவள் பட்டுப் புடவையும் நகைகளும் ஜொலிக்க அழகு தேவதையாக இறங்கினாள்.

"அடேயப்பா! என்ன அழகா இருக்கா! மாமிகள் வியந்தார்கள். தங்கள் வைர பேசரியை துடைத்துக் கொண்டு அட்டிகையை சரி செய்து கொண்டார்கள். தப்புத் தப்பாக தாளம் போட்டு தலையாட்டினார்கள்.

கேண்டீனில் ஒரு கூட்டம் கோதுமை அல்வாவை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தது. ராகம் கண்டுபிடிக்க ஒரு கூட்டம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது. நல்ல சங்கீதம் அறிந்த சிலரோ புருவம் சுருங்க எதோ முணுமுணுத்தார்கள். சங்கீத இலையில் சம்பந்தா சம்பந்தமில்லாத உணவுகள் வந்து விழ இது என்ன மெனு என்று புரியாமல் விழித்தனர் சிலர்.

இரண்டு மணி நேரக் கச்சேரி முடிந்ததும் பெண்கள் கூட்டம் ரஞ்சனியைச் சூழ்ந்து கொண்டது. அவள் புடவையையும் புது மோஸ்தர் நகைகளையும் பற்றி விசாரிக்க, ரஞ்சனியின் முகத்தில் பெருமையோ பெருமை.
வீட்டுக்கு வந்ததும் அம்மா சுற்றிப் போட்டு அவள் நெற்றி வழித்து சுடக்கு போட்டாள்.

"என்ன சதீஷ், நீ ஒண்ணுமே சொல்லலையே. உனக்குப் பிடிச்சிருந்துதா?"

"எது?"

"கொழுப்பைப் பார்"

சதீஷ் ஒரு மாதிரி சிரித்தபடி நகர்ந்தான்.

"ஒண்ணுமே சொல்லாம போனா எப்டி?"

"என் பேனா சொல்லும் ரெண்டு நாள் பொறு"

புதன் கிழமை அதிகாலையிலேயே அவள் எழுந்து விட்டாள். வாசலில் கிடந்த பேப்பரை எடுத்து ஆசையாகப் புரட்டினாள். சிறப்புப் பகுதியில் பளிச்சென அவள் படம் வண்ணத்தில் கால் பக்கத்திற்கு வெகு அழகாகப் போட்டிருந்தது. அவள் தன் அழகை வெகு நேரம் ரசித்துப் பார்த்தாள். பிறகுதான் விமர்சனத்திற்கு வந்தாள். 'அகாடமியில் அழகிய ரஞ்சனி' என்று தலைப்பிட்டிருந்த விமர்சனத்தை முக மலர்ச்சியுடன் படிக்கத் துவங்கினாள்.

வெள்ளிக் கிழமை மதியம் அகாடமி கேன்டீன் கோதுமை அல்வாவை விட பளபளப்பாக இருந்த கொல்கொத்தா ரஞ்சனியின் கச்சேரிக்கு வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ரஞ்சனியின் ஒவ்வொரு அசைவுக்கும் கை தட்டினார்கள். ரஞ்சனி மூன்றாம் பிறை ஸ்ரீதேவியைப் போல் வெகு அழகாக இருந்தார். அவர் பாடிய தோடியை விட அவரது நீல நிறப் பட்டுப் புடவை பாரம்பரிய நேர்த்தியோடு படு அழகாயிருந்தது. இந்தப் புடவைக்காக அவர் எத்தனை கடைகள் ஏறி இறங்கினாரோ என்று வியக்க வைத்தது. எனக்கு முன் வரிசையிலிருந்த சில பெண்மணிகள் ரஞ்சனி அணிந்திருந்த ரவிக்கை மாடலை வியந்து வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.


மூன்றாவதாக ரஞ்சனி பாடிய கல்யாணி, அவரது நீலக்கல் அட்டிகையின் அழகிலும், காது ஜிமிக்கியின் குலுக்கலிலும் கை வளையல்களின் உரசலுக்கும் முன்பு நிற்க குடியாமல் தள்ளாடித் தரையிறங்கி லதாங்கியாய் மாறியது, வெகு சிலரே அறிந்த சிதம்பர ரகசியம். அந்த அளவுக்கு அவரது முக ஒப்பனையும் அழகும் அனைவரையும் மதி மயங்க வைத்திருந்தது.


அகாடமி வாய்ப்பு என்பது வளரும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிகப் பெரிய கனவு. தன் கனவு நனவான மகிழ்ச்சியில் ரஞ்சனி மிக "அழகாக" அந்த வாய்ப்பை சரிவர பயன் படுத்திக் கொள்ளாமல்நழுவ விட்டு விட்டார். இருந்தாலும் அவரது புடவைக்கும் நகைகளுக்கும் ஒப்பனைக்கும் பாராட்டு. புடவை நிறத்திலாவது எம்.எஸ்ஸை பார்க்க முடிந்ததே.


ரஞ்சனியின் முகம் சிவந்து அஷ்டகோணலாயிற்று. கோபத்தில் அழகு அலங்கோலமாயிற்று. பேப்பரை சதீஷின் மீது வீசி எறிந்தால்.


" இப்டி காலை வாரிட்டயே!" எரித்து விடுவது போல் பார்த்தாள் அவனை.


"கோவப்படாதே ரஞ்சனி. என் தொழில் எழுதுவது. அதுவும் உண்மைகளை. நான் உண்மையைத்தான் எழுதி இருக்கிறேன். நீ எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தாயோ அதையெல்லாம் பாராட்டித்தானே எழுதியிருக்கிறேன்.


"சரி, நா சரியாவே பாடலன்னாலும் ஒரு வார்த்தை நல்லார்ந்துதுன்னு பொய் சொன்னா குறைஞ்சா போய்டுவ?"


"அது முடியாது ரஞ்சனி. என் தொழிலுக்கு ஒரு தர்மம் இருக்கு. தர்மபுத்திரன் தேர் தரையைத் தொட்டது ஒரு பொய்யாலதான். என் தேர் என் பேனாதான். அது தரையைத் தொடாம பாத்துக்கறது என் தர்மம். நா உன்னை மனசார பாராட்டணும்னுதான் ஆசைப் படறேன். அழகுணர்வு தப்புன்னு சொல்லல. நீ உன் ராகங்களையும் அழகு படுத்த முயற்சி செய். உன்னைப் பாராட்ட இந்த பேனாவுக்கு வாய்ப்புகளைக் கொடு"


ரஞ்சனி யோசிக்க ஆரம்பித்தாள்.


(இது சங்கீத சீசன் அல்லவா? அதற்காகத்தான் இந்த சிறுகதை. அமுதசுரபி இதழில் வெளிவந்த கதை இது. )

Sunday, December 12, 2010

குப்பை இல்லாத பூமி வேண்டும்

இன்று காலை Z தமிழ் தொலைக் காட்சியில் சென்னை மேயரின் குறை தீர்க்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைபேசின மக்களில் பெரும்பாலானவர்கள் குப்பைகள் அகற்றவில்லை, மழை நீர் தேங்கியிருப்பது போன்ற குறைகளையே கூறினார்கள். நான் சற்றே யோசித்தேன்.

குப்பைகள் எப்படி சேருகிறது? கை கால் முளைத்து தானாகவா வீதியில் நடந்து வந்து விழும்? நான் பார்த்த வகையில் குப்பையை வீசி எறிவதிலிருந்தே மனிதர்களின் சாமர்த்தியத்தை அறிந்து கொள்ளலாம். இவர்கள் ஒருபோதும்

குப்பை வண்டி வரும்போது குப்பையை அதில் போட மாட்டார்கள். வண்டி தனது வீடு தாண்டிச் செல்லும் வரை காத்திருப்பார்கள். அது போனபிறகு வந்து வீதியில் வீசி விட்டுச் செல்வார்கள். அதுவும் தன் வீட்டு வாசலில் போட மாட்டார்கள். மறக்காமல் அடுத்தவர் வீட்டை ஒட்டித்தான் எறிவார்கள்.

ஒருவர் குப்பை பையை எறிந்தால் போதும் மற்றவர்கள், அவரைப் பின்தொடர்வார்கள். பொத்து பொத்தென்று வரிசையாய் விழுந்து அங்கே ஒரு மலையே உருவாகி விடும். தன்வீடு மட்டும் சுத்தமாய் இருந்தால் போதும்.
ஊர் நாசமாய்ப் போனால் என்ன?

நல்லதைக் கற்றுக் கொடுக்க இங்கே யாருமில்லை. கற்றுக்கொள்ளவும் யாருக்கும் விருப்பமுமில்லை. சுத்தம் சோறு போடும் என்று பள்ளியில் படித்ததெல்லாம் சும்மா மதிப்பெண்களுக்காக. ஒரு சில பெரிய மனிதர்கள்
இருக்கிறார்கள். இவர்கள் சிங்கப்பூரில் மட்டும்தான் வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பார்கள். இங்கே காலை வைத்ததும் காறித் துப்புவார்கள்.

எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தைக் குறை சொல்வதும் அவர்கள் உதவியைக் கோருவதுமே நம்மவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எதெதற்கோ சபதம் எடுக்கிறோம். இனி குப்பையை வீதியில் வீசி எரிவதில்லை என்று எல்லோரும் சேர்ந்து சபதம் எடுத்தால் நன்றாக இருக்கும்.

குப்பை வண்டிகள் குப்பையை சேகரிக்கும் வேலையை மட்டுமே செய்ய வீண்டும். கீழே இருந்து அள்ளிப் போடும் நிலை ஏற்படக் கூடாது. அவர்களும் மனிதர்கள்தானே? வண்டி வரவில்லை எனில் புகார் செய்யலாம். வண்டி வருவதற்கு ஏற்பாடு செய்யலாம். அப்படியும் வரவில்லை எனில் அந்தந்த ஏரியா மாநகராட்சி அலுவலகம் முன்பு சென்று குப்பைகளை வைத்து விட்டு வர வீண்டும். NEEL மெட்டலின் செயல்பாடு மிகவும் அதிருப்தி தரக் கூடியதாத்தான் உள்ளது. அதற்காக நாம் நம் ஒழுக்கத்திலிருந்து விலகி விடக் கூடாது.

ஒரு நல்ல சமுதாயம் என்பது, சுத்தமான உலகம் என்பது ஒவ்வொரு வீட்டில் இருந்தும்தான் ஆரம்பிக்கிறது இந்தியா எனது தேசம் , இந்திய மக்கள் என் சகோதரர்கள் என்கிற உறுதி மொழியில், இனி ஒருநாளும் வீதியில் குப்பை போட மாட்டேன் என்கிற வரிகளையும் சேர்க்கலாம். சட்டத்தினால் மட்டும் மாற்றங்கள் வந்து விடாது. தனிமனித ஒழுக்கம் பேணப் பட்டால்தான் நாடு குப்பையிலிருந்து விடுதலை பெரும்.

ஒரு குட்டிக் கதை உண்டு. மூன்று பேருக்கு அவர்களது தகப்பன் ஆளுக்கு ஒரு அறையும் கொஞ்சம் பணமும் கொடுத்து அந்தப் பணத்தைக் கொண்டு அந்த அறையை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம் என்றாராம்.

முதல் மகன் பணத்தை செலவழிப்பதற்காகவும், அறையை நிரப்பும் எண்ணத்திலும் தனக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி நிரப்பினானாம்.

இரண்டாவது மகன் குறைந்த விலையில் நிறைய வைக்கோலையும் வரட்டிகளையும் வாங்கி அடுக்கினானாம்.

பத்து நாட்கள் கழித்து தகப்பன் ஒவ்வொரு அறையாகப் பார்க்க வந்தார்.
முதல் இரண்டு அறைகளைப் பார்த்தவர் முகம் சுழித்து மூக்கைப் பொத்திக் கொண்டார்.

மூன்றாவது அறையை கடைசி மகன் திறந்து காட்ட அவர் சற்றே மயங்கி நின்றார். உள்ளே எந்தப் பொருளும் இல்லை. அரை முழுக்க உயர்தர
வாசனையை நிரப்பி வைத்திருந்தான் அந்த மகன்.

நாம் நம் மனசைக் கூட இப்படித்தான் எதை எதையோ அடைத்து வைத்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறோம். உள்ளம் சுத்தமாயிருப்பதும், ஊர் சுத்தமாயிருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

Friday, December 10, 2010

பொதிகை மலை உச்சியிலே (பகுதி-இரண்டு)

பொதிகை உச்சியில் அகத்தியரின்
திரு உருவம்.

சங்கு மித்ராவில் சற்று ஓய்வு.



சங்கு மித்ரா

எவ்வளவு அடர்த்தியான காடு!



அடர்ந்த காட்டில் திறந்த வெளியில், கண்ணிக்கட்டி ஆற்றின் கரை ஓரமாய்
பாறைகளின் மீது எங்கள் முதல் நாள் இரவைக கழித்தது மறக்க முடியாத அனுபவம்தான். பாரிஸ் கார்னரில் மூன்றுக்கு இரண்டு மீட்டர் அகலத்தில் வாங்கிய பிளாஸ்டிக் ஷீட்டின் அருமை அப்போதுதான் புரிந்தது. சென்னையில் சரியான மே மாத வெயில் கொளுத்தும்போது இது வேறு எதற்கு வீண் சுமை என்று நினைத்தபடிதான் அதைக் கொண்டு போனோம். உயரே செல்ல செல்ல அப்படி ஒரு குளிர். கீழே அதைவிரித்து, அதையே அப்படியே மடித்து நம் மீது போர்த்திக் கொண்டால் ஆஹா! சுகம்தான் போங்க.
நாங்கள் படுத்திருந்த பாறை சற்றே சரிவாக இருந்தது. பிளாஸ்டிக் விரிப்பு வேறு. வழுக்குவதற்கு கேட்க வேண்டுமா. படுத்த நிலையிலேயே சற்றே உடம்பு கீழே வழுக்குச் செல்லும். மீண்டும் உந்திக் கொண்டு மேல் நோக்கி நகர்ந்து சரியாய் படுப்போம். மீண்டும் வழுக்கிச் செல்லும். நேரமாக ஆக ஆட்களின் வருகை அதிகமாயிற்று. எங்கள் காலுக்கு கீழெல்லாம் படுத்திருந்தார்கள். வழுக்கிச் செல்லும் போது எங்கள் பாதம் அவர்களை சிரசில் பதிந்து ஆசிர்வதிக்கும். மேலும் மேலும் வழுக்காமலிருக்க அவர்களே தடையாகி விட்டதால் பிறகென்ன சூப்பர் தூக்கம்தான். எட்டுமணிநேரம் நடந்த நடைக்கு அடுத்த நாள் உடல் வலி தெரியாதிருக்க ஒரு குரோசின் போட்டு விட்டுப் படுப்பது நலம்.
அரைத்தூக்கத்திலும் பக் பக்கென்று எதற்கோ சிரித்துக் கொண்டே தூங்கிப் போனோம். மறுநாள் காலைதான் அந்த இடத்தின் ஆபத்து புரிந்தது. அது ஒரு அட்டைக் காடு. நல்ல காலம் மழையில்லாததால் மிக அதிக அளவில் அவை இல்லை. இருப்பினும் பலரது உடம்பில் அட்டை ரத்தம் உறிஞ்சி இருந்தது. நட்ட நடுக் காட்டில் ஆகாசமே கூரையாகஎந்த பயமும் இன்றி எல்லா ஆபத்தில் இருந்தும் அகத்தியர் காப்பாற்றி விடுவார் என்கிற பரி பூரண சரணாகதியில்தான் அனைவரும் அங்கே குறட்டை விட்டுத் தூங்கினோம்.
அங்கேயும் சிலர் புகை பிடித்தார்கள். புருஷோத்தமன் ஒரு சத்தம் போட்டாரே பார்க்கலாம். எவன்டா அவன் சிகரெட் பிடிக்கறது. வெட்டி பலி போட்டா என்ன உன்னை? ஆத்திரமாகத்தான் வந்தது. அடர்ந்த காடு. அக்கினி குஞ்சொன்றைக் கண்டால் வெந்து தணியாதா

மறு நாள் மீண்டும் மலையேற்றம் துவங்கியது. கன்னிக் கட்டி ஆற்றைக் கடந்து ஒரு குறுகல் வழியில் மிகவும் செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது.


பத்தடி ஏறுவதற்குள் மூச்சிரைத்தது. இரண்டு மணி நேர ஏற்றத்தில் பேயாரு குறுக்கிடுகிறது. நடந்த நடையில் உடம்பு வியர்வையில் நனைந்திருந்தது. அங்கே எல்லாரும் குளிக்கலாம் என்றார்கள். ஐஸ் தண்ணீர்தான். சுகமாகக் குளித்து விட்டு உடைமாற்றி, ஈரத் துணிகளை மரங்களில் காய வைத்து விட்டோம். திரும்பி வரும்போது எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். நல்ல ஐடியாதான்.


மீண்டும் மூச்சிரைக்க மலையேற்றம். மணிக்கணக்கில் தொடர்கிறது. கிட்டத்தட்ட 3100 அடி உயரத்தில் இருந்தோம். நடுவில் கல்லாறு குறுக்கிடுகிறது. அங்கே சற்று ஓய்வு. வழியில் மிக அடர்த்தியான மூங்கில் காடு வருகிறது. கோரைப்புற்கள் வேறு. நீல நீலம் மறைந்திருந்தாலும் தெரியாது.


கல்லாறு கடந்ததும் ஏற்றம் மிக மிக கடுமையாய் மாறுகிறது. நிறைய வழுக்குப் பாறைகளைக் கடக்க வேண்டியுள்ளது. வெகு நேர மலைஎற்றத்திற்குப் பிறகு நாங்கள் அடைந்த இடம் சங்குமித்ரா. அந்த இடத்தை அடைந்ததும் ஒரு வினாடி விழி விரிய நின்று விட்டோம். அப்படி ஒரு அழகு. சுற்றிலும் கிடு கிடு பள்ளத்தாக்குகள். கேரளா எல்லையும் தமிழக எல்லையும் இணையும் இடம்.


அப்படி ஒரு காற்று. எங்கள் பொருட்களை பிளாஸ்டிக் விரிப்பில் சிதறி பெரும் பாறைக் கற்களை அதன் மீது வைத்தோம். இல்லாவிட்டால் காற்று தூக்கி எறிந்து  விடும்.


மலையாளிகள் இந்த இடத்தை  பொங்காலப்  பாறை என்கிறார்கள். சமைக்கும் இடம் என்று அர்த்தமாம். ஒரு யானைக் கூட்டம் அப்போதுதான் அங்கே இருந்து விட்டுப் போயிருக்கிறது. அதன் கழிவுகள் சற்று கத கதப்பாகவே இருந்ததால் அப்போதுதான் அவை இடம் பெயர்ந்திருக்க வேண்டும். எதற்கு வம்பு என்று நாங்கள் இடத்தை மாற்றி பொருட்களைக் கொண்டு வைத்தோம்.
சங்கு மித்ராவில் இருந்து பொதிகை மலையின் உச்சியை அடையப் போகும் இந்த கடைசி சில மணித்துளிகள் இந்த யாத்திரையின் உச்சக்கட்ட த்ரில்லிங்கான அனுபவம் எனலாம். ஒரு பிரும்மாண்டமான் வழுக்குப் பாறை வருகிறது. இதன் மீது நிமிர்ந்து நடக்க பெரும் பயிற்சி வேண்டும். கிட்டத்தட்ட நம் முன்னோர்களின் அவதாரத்தை அந்த இடத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியதுதான். புரியலையா? அட கைகளையும் ஊன்றிக் கொண்டு தவழ்ந்து ஏற வேண்டியதுதான். கீழே பார்க்காமல் ஏறுவது உத்தமம்.
பொதிகை உச்சியை எப்போது அடைவோம்? அருகில் வந்தவரிடம் கேட்டேன்.அதோ ஓஒ அந்த ஒரு வழுக்குப் பாறையையும் ஏறி விட்டால் உச்சிதான் என்றார். அவர் காட்டிய இடத்தை பார்த்ததும் அயர்ந்தே போனேன். கிட்டத்தட்ட ஒரு மெகா சைஸ் குழவிக்கல் ஒன்று செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. இதன் மீது எப்படி ஏற முடியும்? அப்பாவியாகக் கேட்டேன். அவர் சிரித்தார்.
பாறையின் அருகில் சென்றதும் சூட்சுமம் புரிந்தது. அந்தப் பாறையில் சங்கிலிகளும் கயிறும் நூலேணி மாதிரி கட்டியிருந்தது. அதைப் பிடித்தபடி பாறையில் அனுபவஸ்தர்கள் இருபுறமும் அமர்ந்து கொண்டு நமக்கு கை கொடுக்கிறார்கள். அந்த கயிறாய் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவர்கள் உதவியோடு ஒரு வழியாக மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏறினோம்.
யப்பா ஆ ஆ ! நான் பொதிகை உச்சியில் நின்றிருந்தேன். சந்தோஷத்தில் அழுகை வந்தது. காற்று நம்மை தள்ளியது. பொதிகைத் தென்றலா அது! அப்படி ஒரு சூறைக் காற்று. விட்டால் நம்மை ஒரே வீச்சில் மதுரை கோபுரத்தில் கொண்டு போய் ஓட்ட வைத்து விடும் போலிருந்தது.
6500 அடி உயரம். அகத்திய மகரிஷி கால் பதித்து பூமியை சமன் செய்த இடம்.
எத்தனையே தேவாதி தேவர்கள் புடை சூழ இன்னமும் அவர் வாழும் இடம். அந்த இடத்தில் நான் நிற்பது கனவா? நனவா? சுற்றிலும் அப்படி ஒரு மூடுபனி. மேகங்கள் உரசிச் செல்கின்றன.
பொதிகையின் உச்சியில் ஒரு அகத்தியர் திரு உருவம் இருக்கிறது. இதற்கு அபிஷேகம் ஆராதனை பாடல்கள் என்று அமர்க்களப் படுகிறது. குழு குழுவாக வந்து அவரை ஆராதிக்கிறார்கள். நாங்கள் கீழே இருந்து குடம் குடமாகக் கொண்டு சென்ற அபிஷேகப் பால் இரண்டு நாட்களாகியும் கெடவில்லை. என்ன அதிசயம்!
பூஜைக்குப் பிறகு மழை பெய்யும் என்றார்கள். அதன்படி சாரல் மழையும் பெய்தது. சற்று நேரம் தான். நின்று விட்டது. ஆராதனைகள் முடிந்து வழுக்குப் பாறைகளில் அதி ஜாக்கிரதையாக இறங்கி சங்கு மித்ராவை அடைந்தோம். அன்றிரவு அங்குதான் படுக்கை. வானத்தில் அடை அடையாய் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள் மின்னின. காற்றான காடு. குளிரில் கைகள் விறைத்துப் போயிற்று. பற்கள் கிடு கிடுத்தன. எனக்கு கயிலாயக் குளிர்தான் நினைவுக்கு வந்தது, அங்கு ஐந்தடுக்கு உடைகளையும் மீறி குளிர் ஊசியாய்த் துளைக்கும். இங்கோ ஒரு ஸ்வெட்டர் கூட உடம்பில் இல்லை. கேட்கவா வேண்டும்?

வாழ்க்கையில் எத்தனையோ இரவுகள் . ஆனால் பொதிகை மலையில் வெட்ட வெளியில் இரண்டு இரவுகள் படுத்துறங்கிய அந்த உறக்கம் இனி கிடைக்குமா என்பது சந்தேகமே.

மீண்டும் இறக்கம். ஏறிய மலை அத்தனையும் ஒரே நாளில் இறங்க வேண்டும். காரையார் அணையில் படகில் திரும்பும் போது, தூரத்தில் தெரிந்த பொதிகை உச்சியும், பஞ்ச பொதிகையும், நாக பொதிகையும் எங்களைவழியனுப்புவதுபோல் தோன்ற என்மனதில் ஞானசம்பந்தனின் பாடல்தான்ஓடியது
.
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி
நல்வினைப் பயனிடை......

நன்றி பொறுமையாய் உடன் வந்ததற்கு.







Thursday, December 9, 2010

பொதிகை மலை உச்சியிலே....

night halt at peyaar. eppoodi?
Paeyaaru

Through the forest (me)

Boating at kaaraiyaar dam

kalyaana theertham.

k way to kalyaana theertham.


pothigai forest.


பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலே
தவழ்ந்திடும் தென்றல்

இந்த இனிமையான பாடலைக் கேட்கும் போதெல்லாம் அதென்ன அப்படி ஒரு சுகம் அந்த பொதிகைத் தென்றலுக்கு என்று யோசிப்பேன். கூடவே பொதிகை மலை உச்சிக்கு ஏறிப் போய் அந்த தென்றலை அனுபவிக்கும் ஆசையும் ஏற்படும். நான் அப்படி ஆசைப் பட்ட போது எந்த தேவதை 'ததாஸ்து' என்றதோ? ஒரு சுபயோக சுபதினத்தில் நன் அந்த பொதிகை உச்சியில் நின்றிருந்தேன். அட கனவில்லைங்க நிஜமாத்தான்.

பொதிகை உச்சிக்கு எல்லாம் மனிதர்கள் போவார்கள் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. நான் அங்கு வரவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் எனில் அதை நோக்கித்தானே எல்லா காரியங்களும் நடக்கும்?


2008 ஆம் ஆண்டை என்னால் மறக்க முடியாது. மே மாதம் பொதிகை மலை,
ஜூன் மாதம் ஆதி கைலாஷ் யாத்திரை, அக்டோபர் மாதம் சதுரகிரி என்று மூன்று முக்கியமான மலைகளை ஏறும் யோகம் கிட்டியிருந்தது.

ஆதி கயிலாய யாத்திரையைப் பிறகு பார்க்கலாம். அது மிகவும் கடினமான அதே நேரம் அற்புதமான யாத்திரை. அந்த யாத்திரை செல்வதற்கான உடல் தகுதியும் மன உறுதியும் நமக்கு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முறை பொதிகை மலை ஏறி விட்டு வர வேண்டும்.

2006 இல் என்னோடு கயிலாய யாத்திரை வந்த நண்பர்கள் சிலரோடு 2007 இல் ஆதி கயிலாயம் செல்வதற்கு முன் பொதிகை ஏறி விட வேண்டும் என்று புறப்பட்டோம்.

இதற்கு வன இலாகாவின் அனுமதி தேவை. சித்ரா பௌர்ணமி அன்றும், மே முதல் தேதியும் பொதிகை உச்சியில் பக்தர்கள் அகஸ்தியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது வழக்கம். பொதிகை மலை உச்சியை அடைய மூன்று நாட்கள் காட்டு வழியே மலை ஏற வேண்டும்.

ஆயிரக்கணக்கான் பக்தர்கள் காட்டு வழியே மேற்கொள்ளும் இந்த யாத்திரையால் காடுகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து சுற்றுச் சூழல் கெடுவதோடு வன விலங்குகளுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்துவதால் இந்த வருடம் பொதி மலையேற யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என வன இலாகா திட்ட வட்டமாக அறிவித்த போது என் பலூனில் காற்றெல்லாம் புஸ் !

இருப்பினும் விகரமாதித்யனைப் போல் மனம் தளராமல் அகத்தியரிடம் ஆணையிட்டு கூறி விட்டேன், வன இலாகாவின் ஆணையை உடைக்கச் சொல்லி.

குறித்த நாளில் அகத்தியருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்காவிடில் உம்மாச்சி வந்து கண்ணை குத்திப்புடும் என்கிற ரீதியில் பக்தர்கள் வன இலாகாவை எச்சரிக்கை செய்ய ஒருவழியாய் அவர்கள் மலையிறங்கி வந்தார்கள். மிகக் குறைந்த அளவில்தான் அனுமதி அளிப்போம் என்று நிபந்தனை விதித்தது. அகத்தியர் அருளால் எங்கள் ஐந்து பேருக்கும் அனுமதி கிடைத்து விட்டது.

ஏப்ரல் 28 ஆம் தேதி நெல்லை எக்ஸ்ப்ரசில் ஏறின போது பொதிகையே ஏறி விட்டாற்போல் ஒரு மகிழ்ச்சி. அடுத்த நாள் நெல்லையில் இறங்கியதும் முதலில் சங்கர நாராயணரை தரிசித்து விட்டு பாபனாசத்திற்குச் சென்றோம். அங்குதான் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

பாபநாசம் மிக அழகான ஊர். சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலைகள் அழகான கோயில், கோயில் வாசலில் படியிறங்கிச் சென்றால் தாமிரபரணி ஆறு சுழித்தோடிச் செல்கிறது. நெல்லைவாசிகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான். வருடம் முழுக்க அதிசுவையான நீரைக் குடிக்கிறார்கள். அப்படி ஒரு சுவை அந்த தண்ணீருக்கு. இயற்கையிலேயே தாமிரம் கலந்த நீரல்லவா? நான் அங்கே இருந்தவரை உணவு உண்டதை விட தண்ணீர் குடித்ததுதான் அதிகம். நெல்லை வாசிகள் மீது பொறாமையே வந்து விட்டது எனலாம்.

சென்னையில் கூவத்தைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த மனசு சுத்தமான நதியைக் கண்டதும் குழந்தையாகி விட்டது. அன்றிரவு ஆசை தீர அனைவரும்
நதியில் எருமை கணக்கில் கிடந்தோம்.

பாபவினாசத்தில் பொதிகை அடி இல்லம் என்றிருக்கிறது. இதன் உரிமையாளரான திரு புருஷோத்தமன் என்பவரது பொறுப்பில்தான் நாங்கள் பொதிகை மலை ஏற வேண்டும். மலை ஏறுவதற்கு முன்பு கல்யாண தீர்த்தம் என்னுமிடத்தில் அகத்தியருக்கு வழிபாடு செய்தது வன விலங்குகள் யாத்திரையிநூடே தொல்லை செய்யாமல் இருக்க காப்புக் கட்டுகிறார்கள். இப்படி காப்பு கட்டும்போது அகத்தியர் கானக விலங்குகளுக்கு உத்தரவிடுவாராம். என் பக்தர்கள் வருகிறார்கள், உங்கள் இருப்பிடத்தை இரண்டு நாட்களுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று. அது உண்மைதான். களக்காடு முண்டந்துரைக் காடுகள் எவ்வளவு அடர்த்தியானது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த மூன்று நாட்களும் நம் கண் களில் ஒரு மிருகம் கூட படாதது ஆச்சர்யம்தான்.

பொதிகை மலைக்கு ஏறுவதற்கு முன் அகத்தியரைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லது. ஈசனின் திருமண நாளன்று தென்புலம் உயர்ந்த போது அதனை சமன் படுத்த ஈசனால் அனுப்பப் பட்டவர்தான் அகத்தியக் குறுமுனி. பின்னர் அதுவே அவரது நிரந்தர வசிப்பிடமாயிற்று. தன்

கமண்டலத்தில் அவர் கொண்டு வந்த நீர்தான் பின்னர் தாமிரபரணியாயிற்று. சிவனின் அம்சமாக கும்பத்திலிருந்து அவதரித்ததால் கும்ப முனி. சிறிய உருவமாக இருந்ததால் குறுமுனி. பிறப்பு அற்றவர் என்பதால் அவருக்கு இறப்புமில்லை. அகத்தியரைத் தனது அம்சமாகவும் லோபாமுத்திரையை உமையின் அம்சமாகவும், சிவன் முன்மொழிந்திருக்கிறார். இன்றளவும் அவர் தன் மனைவி லோபமுத்ராவுடன் அங்கு வசிக்கிறார் என்பதே உண்மை. இதை அங்கு செல்லும்போது நிச்சயம் உணர்வோம்.

ஏப்ரல் முப்பதாம் தேதி பொதிகை அடி இல்லத்திலிருந்து நாங்கள் கிளம்பினோம். அதற்கு முன் ஏகப்பட்ட உத்தரவுகள். காட்டில் எந்த தாவரத்தையும் சட்டெனத் தொடக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை வீசி எரியக் கூடாது. கூட்டத்தை விட்டு பிரிந்து விடக் கூடாது, இப்படி நிறைய கட்டளைகள்.

எங்கள் பேருந்து எங்களை காரையார் அணையில் இறக்கி விட்டது. அங்கே வன இலாகாவினர் நம்மை சோதனை செய்கிறார்கள். அனுமதி கொடுத்தவர் பெயர்ப் பட்டியலை வாசிக்கிறார்கள். எங்கள் ஐந்து பேரில் மூவர் பெண்கள். எங்களைக் கண்டதும் வன இலாகா அதிகாரி தயங்கினார், முதல் முறை செல்கிறோம் என்றதும் அனுமதிக்க யோசித்தார். சாமி வரம் தந்தாலும் பூசாரி தர யோசிப்பார்னு இதைத்தான் சொல்றாங்க. அட கயிலாய மலையையே சுற்றி வந்து விட்டார்கள். இதிலும் ஏறி விடுவார்கள் என்று சிலர் சொல்ல ஒருவழியாய் பூசாரி வரம் கொடுத்தார். மனது மாறுவதற்குள் படகில் ஏறி அமர்ந்தோம்.

நீரைக் கிழித்தபடி படகு சென்றது. போகும்போதே எங்கள் தண்ணீர் பாட்டில்களில் நீரை நிரப்பிக் கொண்டோம். நீரில் கை விட்டு விளையாடிய படி வந்த என்னை படகோட்டி எச்சரித்தார். நீரில் நிறைய முதலைகள் உண்டு என்று.

வெடுக்கென்று கையை உள்ளே இழுத்துக் கொண்டேன். அணையின் மற்றொரு ஒதுக்குப் புறமாய் மலையை ஓட்டி படகுகள் நிற்க நாங்கள் இறங்கிக் கொண்டோம். குருமுனிக்கு அரோகரா! ஒருவர் குரலெழுப்பினார்.

புதர் மாதிரி ஓரிடம். முதலில் வழியறிந்த ஆண்கள் ஒன்றிரண்டு பேர், பிறகு சிறுவர்கள், பெண்கள், பிறகு முதியவர்கள், பின்னால் இளைஞர்கள் என்று ஒரு அணி வகுப்போடு நடக்க ஆரம்பித்தோம். பாதை என்று எதுவுமில்லை. காட்டுக்குள் செங்குத்தாக இருந்தது மலையேற்றம். முதல் மூன்று மணி நேர மலையேற்றம் தண்ணீர் குடிக்க வைக்கிறது. அதன் பிறகு துளுக்கமட்டை என்ற இடத்தை அடைவதற்குள் சக்தியெல்லாம் தீர்ந்து விட்டாற்போல் தோன்றுகிறது.

வன இலாகாவின் வண்டிப் பாதை இருந்தாலும் கூட நங்கள் குறுக்கு வழியில் அந்த இடத்தை அடைந்திருப்பதாக அறிந்தோம். அய்யோடா! அதுக்கே மூணு மணி நேரமா?

அடர்ந்த காடு, விண்ணைத் தொட்ட மரங்கள், பறவைகளின் சப்தங்கள், நாடு நடுவே சிற்றோடைகளின் சலசலப்பு, எங்கோ கேட்கும் அருவியின் இரைச்சல், என அடேயப்பா விலங்குகள் கொடுத்து வைத்தவைதான். என்ன ஆரோக்கியமான சூழலில் வாழ்கின்றன.

வழியில் ஆங்காங்கே பெரிய பெரிய காட்டு மரங்கள் சரிந்து கிடக்க, தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. ஒருவர் பின் ஒருவராய் எறும்பு கணக்கில் மலை மீது ஊர்ந்து சென்று கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் செங்குத்தாக ஏறி கொண்டிருந்தவர்களிப் பார்த்தால் பிரம்மிப்பாக இருந்தது. அப்படி ஒரு சரிவு அது. கொடிகளையும் வேர்களையும் கிளைகளையும் பற்றிக்கொண்டுதான் ஏற முடிந்தது. பல இடங்களில் பலர் எங்களுக்கு கை கொடுத்து ஏற்றி விட்டார்கள்.

பல மணி நேர கடுமையான மலை ஏற்றத்திற்குப் பிறகு ஒரு காட்டாறு தென்பட்டது. கண்ணாடி மாதிரி சுத்தமாக வழிந்த நீரை பாட்டிலில் பிடித்தால் ஐஸ் மாதிரி சில்லிட்டது. அடேயப்பா என்ன சுவை. அந்த இடத்தில் எங்கள் கட்டுச் சோற்றைப் பிரித்தோம். ஒருநாளுக்கான் உணவு மட்டும் பொதிகை அடி இல்லத்தில் தயார் செய்து கொடுக்கிறார்கள். மிச்ச நாட்களுக்கு இருக்கவே இருக்கிறது நொறுக்ஸ்.

சிற்றுண்டிக்குப் பிறகு சிறிது ஓய்வு. பின் மீண்டும் நடை. கண்ணிகட்டி என்ற இடம் வரை நடந்தால் வன இலாகாவுக்கு சொந்தமான பூத் பங்களா ஒன்றிருக்கிறது , அதில்தான் அன்றிரவு தங்க வேண்டும் என்றார்கள். எங்கள் அதிர்ஷ்டம் அந்த பங்களா அன்று வன அதிகாரிகள் தங்கியிருந்ததால் காலியாக இல்லை. மேலும் சில மணி நேரம் நடந்தால் பேயாற்றின் கரையில் தங்கலாம் என்றார்கள். ஹையா வானம் பார்த்து படுக்கலாமே! உற்சாகமாக நடந்தோம்.

பேயாற்றின் கரையை ஒருவழியாய் அடைந்தோம். அருவியோன்றிளிருந்து பாறைகள் வழியே ஓடும் நதியின் கரையில் ஆங்காங்கு சிறிதும் பெரிதுமான பார்கள். கட்டாந்தரைகள். அதில் எங்களது பிளாஸ்டிக் விரிப்புகளை விரித்தோம். சலசலவென்று ஓடும் நதி சுற்றிலும் ஓங்கி நெடிதுயர்ந்த மரங்கள், மேலே ஆகாசம், மின்னும் நட்சத்திரக் கூட்டம். குளிர்க் காற்று. அன்றைய இரவு அனுபவம் மறக்க முடியாதது.

கொஞ்சம் காத்திருங்கள். மீண்டும் நாளை வருகிறேன். தொடர்ந்து மலை ஏறுவோம்.







Sunday, December 5, 2010

இரக்கத்திற்குரியவன் (கவிதை)

மகாபாரதம்! இது துவாபர யுகத்தில்
நடந்த கதை என்கிறார்கள்
நான் சொல்கிறேன், குருஷேத்திரம்
இன்னும் ஓய்ந்தபாடில்லை!

பீஷ்மர், துரோணர், பாண்டு, திருதராட்டிரன்
துரியோதனன், துச்சாதனன், பாண்டவர்கள்
பாஞ்சாலி, குந்தி தேவி என
அனைவரும் இப்போதும் உண்டு

வாழும் மகான்கள் எல்லாம் பீஷ்மர்கள்
(பெண்களோடு ரகசியமாய் வாழ்பவரை நான் சொல்லவில்லை)
ஆட்சிப் பீடத்தில் சில துரியோதனர்கள்
எம்.எல்.எ, எம்.பி. மந்திரிகளாய் கௌரவர்கள்

காவல் நிலையங்களில் துச்சாதனர்கள்
அப்பாவி மக்கள்தான் பாண்டவர்கள்

கள்ளத்தனமாய் பிள்ளை பெற்று
குப்பையில் வீசும் குந்திகள் இன்றும் உண்டு
தர்மம் காக்கும் சில பரந்தாமர்களும் உண்டு

இன்றில்லாமல் போனவன் ஒரே ஒருவன்தான்
இரக்கத்திற்குரியவனும் அவனே

மன்னனாய்ப் பிறந்தவன்
அன்னையால் புறக்கணிக்கப் பட்டவன்
உலகின் முதல் அநாதை
கர்ணன்! ஆம் கர்ணன்தான்

பிறந்தவுடன் பேழையிலே
பின்னர் ஆற்றிலே
இவன் செய்த புண்ணியம்
தேரோட்டியின் உருவிலே

பேழை திறந்தான் தேரோட்டி
உள்ளே சிரித்தது சூரியன்
வாவென இவன் கைநீட்ட
தாவெனக் கேட்பதாக எண்ணி
கையில் பற்றியிருந்த மணிமாலை தந்து
தன் முதல் தானத்தைத் துவக்கிய வள்ளல்

தருமன் ஆடிக் கெட்டான்
இவனோ கொடுத்துக் கெட்டான்
கேட்டவர்க்குக் கேட்டதைக்
கொடுத்தே கெட்டான்

இல்லையெனில் ஓட்டிப் பிறந்த
கவச குண்டலம் அறுத்துக் கொடுத்து
தன் மரணத்திற்கு தானே
கதவு திறந்திருப்பானா?


சத்திரியன் அல்ல நீ என பாண்டவர் இகழ,
நீ சத்திரியனே ! பிராமணன் எனச் சொல்லி
ஏமாற்றிவிட்டாய் என்று பரசுராமன் சபிக்க
இவன் ஷத்திரியனா? தேரோட்டி மகனா?
உண்மையறிந்த அன்னையோ ஊமையாய்!

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
உறவுகள் உதறியவன் இவன்
கொடுப்பதில் இவனுக்கு நிகர் எவருமில்லை
வீரத்திலும் விஜயனுக்கு நிகரானவன்

சுயம்வர மண்டபத்தில் இவன் வில்லேந்தி இருந்தால்
பாஞ்சாலி இவனுக்கே பத்தினியாகி இருப்பாள்


அந்தோ பாவம்! தேரோட்டி மகனுக்கு
இங்கென்ன வேலையென்று விரட்டப் பட்டான்,
வெற்றி விஜயனுக்கு
இப்படி இவன் இழந்தவை ஏராளம்


இதற்கெல்லாம் கரணம் இவன் அன்னை!
அவளுக்கும் அன்போடு 'கேட்ட வரம்' தந்து
தன் மரணத்திற்கு நாள் நிச்சயித்தான்

பலங்கள் அனைத்தும் இழந்த பின்பும்
இவனைக் கொல்ல இயலவில்லை விஜயனால்

பார்த்தான் பரந்தாமன். காத்து நிற்பதது
அவன் செய்த தர்மங்களே என்றுணர்ந்தான்

வேடம் மாற்றி அருகில் சென்றான்
அவனது புண்ணியத்தையும் கேட்டு வாங்கினான்

யார் கொடுப்பார்கள் அதை?
அதையும் கொடுத்தான் நம் கர்ணன்
உதிரத்தால் தாரை வார்த்து
அதையும் கொடுத்தான்

புண்ணியம் கொடுத்ததால் பாவத்மா அல்ல அவன்
மகாத்மாவாய் மாறி விட்டான்

மண்ணில் அவன் வீழ்ந்த போது
கண்ணனும் கண்ணீர் விட்டழுதான்

உபதேசம் பெறாமலே கீதைவழி
நடந்த கர்மவீரன் உண்மையில் இவனே!

நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவன்
நண்பனுக்காக உயிர் விட்டவன்

இன்று இவன் போல் யார் உளர்?

அன்று யாரும் இவனை உணரவில்லை
உதாசீனம் செய்து விட்டார்கள்

அந்தத் தவறை இன்று நாமும் செய்ய வேண்டாம்
இரக்கத்திற்குரியவன் இவனே
எனத் தீர்ப்பெழுதுவோம்





Saturday, December 4, 2010

பணப்பார்வை ( சிறுகதை)

அனந்தராமன் கரம் நடுங்க அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். ஒரு வருடமாக எதைத் தேடித் தேடி ஊரெல்லாம் செருப்புகள் தேய அலைந்தானோ அது ஒரு வழியாய் அவனுக்குக் கிடைத்து விட்டது. அனந்தராமன் இழுத்து மூச்சு விட்டான். எவ்வளவு பெரிய ஆசுவாசம்! எத்தனை
கஷ்டங்கள்! இந்த ஒரு வருடத்தில் அண்ணாவும் அம்மாவும் எவ்வளவு குத்திக் குதறி இருப்பார்கள்.
"கணக்குப் போட்டுப் பார்த்தா இதுவரை எவ்ளோ லட்சம் இவன் படிப்புக்குக் கொட்டி அழுதிருப்போம்! ஊர் முழுக்க இஞ்சினியரிங் படிப்புலதான் போய் விழறது. தடுக்கி விழுந்தா நூறு எஞ்சினியர். அதனால வேலை கிடைக்கறது கஷ்டம்னு தலைபாடா அடிச்சுண்டேன். கேட்டேளா? நல்ல மார்க் வாங்கிட்டான். எஞ்சினியரிங்தான் படிக்க வெக்கணும்னு ஒத்தைக் கால்ல நின்னார் அப்பா. இருக்கற கடனெல்லாம் வாங்கி இவம்படிப்புக்கு கொட்டியாச்சு. அத்தனையும் முழுங்கி ஒரு எஞ்சினியர் பட்டத்தை வாங்கி இப்ப அதை பூஜை பண்ணிண்ருக்கான். படிச்ச படிப்புக்கும் வேலை கிடைக்கல. மத்த வேலைக்குப் போகவும் கௌரவக் குறைச்சல். இப்பப் பார்.... ஊரைச் சுத்திட்டு வந்து வெட்டிச் சோறு தின்னுண்ருக்கான்."
அண்ணா வலிப்பு வந்தாற்போல் கையை உதறி உதறி நாக்கைச் சுழற்றியடித்தான். நாவினால் சுட்ட காயங்கள் இப்படி ஆயிரக்கணக்கில் உண்டு. அண்ணா சொன்னது நிஜம்தான். நிறைய எஞ்சினியர்கள் வேலையில்லாமல் இருந்தார்கள். இருந்தாலும் அண்ணா பேசும்போது செத்து விடலாம் போலத்தான் இருக்கும். பணம் செலவழித்தது முழுக்க அப்பாதான் என்றாலும் அண்ணா என்னமோ தான்தான் செலவு செய்தாற்போல் பேசுவான். அப்பா தன்னை வெறும் பிகாம் மட்டுமே படிக்க வைத்ததை சொல்லி சொல்லிக் காட்டுவான்.
அந்த பீகாமுக்கே அவன் அதிர்ஷ்டம் அப்போது வங்கி வேலை கிடைத்து இப்போது கை நிறைய சம்பாதித்தாலும் அப்பா தனக்கு பணம் செலவழிக்கவில்லை என்பதைக் குத்திக் காட்டா விட்டால்
தூக்கம் வராது அவனுக்கு.
அனந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வரசித்தி விநாயகனுக்கு முன் வைத்து வணங்கி நன்றி சொன்னான். அப்பாவிடம்தான் முதலில் சொல்ல வேண்டும். இதேபோல் அவர் காலடியில் இதை வைத்து அவரிடம் ஆசி பெற வேண்டும்.
இந்த ஒரு வருடத்தில் அப்பாதான் அவனுக்கு முழு சப்போர்ட். அண்ணன் திட்டும் போதெல்லாம் அவன் மல்லீஸ்வரன் கோயிலுக்குப் போய் அமர்ந்து விடுவான். முதல் முறை அப்படி அமர்ந்திருந்த போது பரிவுடன் ஒரு கரம் அவன் முதுகில் தட்டியது.
அப்பாதான் பின்னால் நின்றிருந்தார்.
"என்னடா அனந்து அண்ணா திட்டினதுக்கா இந்த அசோக வனத்துக்கு வந்து உக்காந்துட்ட?"அப்பா புன்னகையோசு அவனருகில் அமர்ந்தார்.
அவன் சிரிக்க முயன்றான்.
"அண்ணா திட்டறது சாதாரண கஷ்டம்டா அனந்து. இதுக்கே சோர்ந்து போய்ட்டா எப்டி? இது சமுத்திரத்துல சின்ன அலை. இன்னும் எவ்ளோ இருக்கு! ஆளையே முழுங்கடிக்கற அளவுக்கு வரும். அதுக்கெல்லாம் என்ன செய்வ? கமான் கண்ணா கவலையைத் தட்டி விட்டுட்டு வேலையைப் பார்ப்பயா?"
"படிப்பு முடிஞ்சதுமே வேலை கிடைக்கணும்னா எப்டி? எல்லார்க்குமா உடனே வேளை கிடைச்சுடறது? அம்மாக்கும் அண்ணாக்கும் இது ஏன் புரிய மாட்டேங்கறது? முந்தாநேத்து அம்மா கிட்ட கொஞ்சம் பணம் கேட்டேன். உன் சில்லற செலவுகளுக்காவது எதாவது வேலை பார்க்கக் கூடாதான்னு கேக்கறான் அண்ணா எவ்ளோ கஷ்டமார்க்கும் எனக்கு?"
"புரியரதுடா. இங்க பார் அனந்து. படிப்பு முடிஞ்சு நல்ல வேலை கிடைக்கற வரை ஒரு இளைஞனுக்கு சோதனையான காலம்தான். கால் பந்து மாதிரிதான் அவன் நிலை. ஆளாளுக்கு எட்டி உதைப்பா. எந்த உதைலயாவது கோல் பாயன்ட்டுக்குள்ள விழுந்துட மாட்டாநான்னு ஒரு நப்பாசை. அதுக்கெல்லாம் வருத்தப் படக்கூடாது. இனிமே எதுக்கும் அம்மாட்டயோ அண்ணா கிட்டயோ நீ காசு கேக்க வேண்டாம் சரியா? மாசா மாசம் உன் அப்ளிகேஷன் இன்டர்வியு செலவுக்குன்னு நான் ஐநூறு ரூபா தரேன். முதல்லையே நீ எங்கிட்ட கேட்ருக்கலாம். என் ஞாபகம் வரலையா உனக்கு?"
"இதுவரை அம்மாட்டதான் கேட்ருக்கேன்"
"இனிமே நான் தரேன். இதோ பார் அனந்து வேலைக்கு முயற்சி பண்ணு. அது கிடைக்கறப்போ கிடைச்சுட்டு போறது. எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு. நமக்கு எப்போ எது கிடைக்கனும்னு இருக்கோ அப்போ அது கிடைச்சுடும். யாராலையும் தடுக்க முடியாது. அது நல்லதார்ந்தாலும் சரி. கெட்டதார்ந்தாலும் சரி. அதனால வேலை கிடைக்கற வரை இப்டி தாடி வளர்த்துண்டு சோகமா அலையணும்னு அவசியமில்ல. சந்தோஷமா இரு. யார் இளக்காரமா பேசினாலும் சட்டை பண்ணாதே. சினிமா பாக்கணுமா பாரு. பிரண்ட்சோட ஜாலியா வெளில போணுமா போ. வேலை கிடைக்காதவன் சந்தோஷமா இருக்கப் படாதுன்னு எந்த சட்டத்துலயும் சொல்லல. சோ பி ஹாப்பி மேன்"
அப்பா அவன் முதுகில் தட்டி விட்டு தன் பர்ஸ் பிரித்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.
"ஏம்ப்பா உன் சம்பளம் முழுக்க அம்மா வாங்கின்றுவாளே இதுக்கு என்ன கணக்கு சொல்லுவ?"
அப்பா புன்னகைத்தார். "அதைப்பத்தி என்ன? நான் பாத்துக்கறேன். நீ சந்தோஷமா இரு சரியா?"
அப்பா மட்டும் அன்பைக் காட்டியிராவிட்டால் கடினமான இந்த ஒரு வருடத்தை அவன் கடந்திருக்க முடியாது.மாதம் ஐநூறு ரூபாய் அவனுக்குத் தருவதற்காகவே அவர் ஒரு வக்கீலிடம் பார்ட் டைம் உத்தியோகம் பார்த்த விஷயம் கூட இரண்டு மாதம் முன்புதான் அவனுக்குத் தெரிய வந்தது. அடுத்த மாதம் அப்பா ஐநூறு ரூபாயை நீட்டிய போது அவன் அழுது விட்டான். அதை வாங்கிக் கொள்ள அவன் மனம் இடம் தரவில்லை.
"என்னடா ...?"
"எனக்காக எதுக்குப்பா?" பேச்சு கூட வரவில்லை. அப்பா சிரித்தார்.
"அட அசடே என் பிள்ளைக்கு நா தராம யார் தருவா? ஒரு பிடிமானம் கிடைக்கற வரை உன்னை போஷிக்க வேண்டியது என் கடமைடா கண்ணா"
எப்பேர்ப்பட்ட தகப்பன். யாருக்கு கிடைப்பார்கள் இப்படி.?
"உனக்காகவானும் எனக்கொரு வேலை கிடைக்கணும். கைநிறைய சம்பாதிக்கணும். அத்தனையும் உன்கிட்ட கொடுத்து நமஸ்காரம் பண்ணனும். "
"ம்ஹும் ! இதோ பாருடா அனந்து. என் சந்தோஷத்துக்காக குழந்தைகள் பெத்துண்டேன். பெற்ற சந்தோஷத்துக்காக உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு படிக்க வெச்சேன். மற்றபடி நீங்க கை நிறைய சம்பாதிச்ச்சு என் மடி நிறைய கொட்டணும்னு எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்ல. பெத்தவாளைப் பார்த்துண்டே ஆகணும், அது உங்க கடமைன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த மாட்டேன். ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருந்தா போதும. என் காலத்துக்கப்பறம் உங்களால் எனக்கு திவசம் போட முடியலன்னா கூட குற்ற உணர்வு வேண்டாம். பித்ரு சாபம் அது இதுன்னு எல்லாம் யாராவது பயமுறுத்தினாலும் பயப்பட வேண்டாம். வாழும்போது அன்பா இருக்கற தகப்பன் பித்ருவானாலும் அன்பாத்தான் இருப்பான். சபிக்க மாட்டான்."
"இப்போ எதுக்கு சாவைப் பத்தி?"
"ஏன் நாமெல்லாம் சாகாவரமா வாங்கிண்டு வந்திருக்கோம்?"
"அது வரும்போது வந்துட்டு போகட்டுமே"
"அப்டி ஒரு வேளை வந்துட்டா அவா சொல்றா இவா சொல்றான்னு பயந்துண்டு சாஸ்திரம் சம்பிரதாயம்னு பணத்தை வாரி இறைக்க வேண்டாம்னுதான் சொல்றேன். தினமும் அன்போட என்னை ஒரு முறை நினைச்சுண்டாலே போதும். நித்ய திவசம் போட்டாப் போலதான்."
"போருமேப்பா... இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு.?"
நெருப்புன்னா வாய் வெந்துடாதுடா"
சரி போதும் விடு. பெத்தவாளுக்கு திவசம் போட்டுத்தான் பிள்ளைகள் போண்டியாய்டப் போறாளாக்கும்"
"மாட்டா. ஆனா ஒரு அப்பனுக்குப் போட்டாப் போதுமா? பட்டினத்தார் படிச்சதில்ல நீ?
அப்பன் எத்தனை எத்தனையோ!
அன்னை எத்தனை எத்தனையோ!
ஓரோரு ஜென்மால ஓரோரு அப்பா. இதுவரை எத்தனை அப்பாவோ? எத்தனை அம்மாவோ? எல்லார்க்கும் போட்டுண்டு இருக்கோமான்ன?
குழந்தைகள் நம் மூலம் பிறக்கிறதே தவிர நம்மால் அல்ல. பிறகெதற்கு பயமுறுத்தல்களும் பேரங்களும்? ஆனா அன்புக்கு மட்டும் எல்லையே கிடையாதுடா அனந்து, நாம் முயற்சி செய்தா நம்ம காலுக்கு கீழ இருக்கற புழு பூச்சிலேர்ந்து ஆண்ட ஆகாசம் வரை எல்லாத்தையும் நேசிக்கலாம். அந்த மாதிரி ஒரு அன்புதான் உங்க கிட்டேர்ந்து எனக்கு வேணுமே தவிர அப்பாங்கற உறவுக்காக பயந்துண்டு செய்யப்படற கர்மாக்கள் அல்ல. இதெல்லாம் உன்கிட்ட எப்பவானும் சொல்லணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன். மத்தபடி சாவுங்கறது பதற்றப்பட வேண்டிய விஷயமில்லை. அதுவும் சுவாரசியமான விஷயம்தான். மனுஷனுக்கு உண்மையான விடுதலை மரணம்தானே? விடுதலைக்கு யாரானம் பயப்படுவாளோ?"
அப்பா சிரித்தார்.
அவன் யோசிக்க ஆரம்பித்தான் . யோசிக்க யோசிக்கத்தான் அவர் எதை விரும்புகிறார் என்பது புரிந்தது. எல்லையற்ற அன்பு அவனுக்குள் விரிந்தது. இந்த ஜென்மா அவர் மூலம் கிடைத்ததற்காக அவன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
வேலைக்கான உத்தரவைக் கண்டால் அவர் மகிழ்ந்து போவார். அவன் வேகமாக நடந்தான். கடையில் கொஞ்சம் இனிப்பு வாங்கிக் கொண்டான். வீட்டில் எல்லோரும் நிச்சயம் முகம் மலர்வார்கள். ஆனால் அப்பாவின் மலர்ச்சி எதையும் எதிர்பாராத மலர்ச்சியாக இருக்கும். மற்றவர்களுடையது உள் நோக்கம் கொண்டதாயிருக்கும். அது தேவ்வையில்லை அவனுக்கு. அப்பா மட்டும் போதும்.
மன்னி வாசல் பிறையில் விளக்கு வைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் அண்ணாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள், அவன் தலையைக் கண்டதும் பேச்சை நிறுத்தினார்கள்.
"அப்பா இன்னும் வரல?"
"எதுக்கு அவரைத் தேடற?"
"காரியமாத்தான்"
"வெளில போயிருக்கார். என்ன விஷயம்? நா உன் அம்மாதான். எங்கிட்ட சொல்லலாமோல்யோ?"
"எனக்கு வேலை கிடைச்சாச்சு. பெரிய கம்பெனி. சம்பளம் மாசம் முப்பத்தஞ்சாயிரம்."
"என்ன?" அம்மாவின் முகத்தில் சூரியன் குடியேறினான்.
"நா சொல்லலம்மா, நிச்சயம் அவனுக்கு நல்ல வேலை கிடைச்சுடும்னு!"
அண்ணன் சொன்ன போது பளாரென்று அவனை அறைய வேண்டும் போலிருந்தது. இருப்பினும் அப்பாவின் குணத்தை தனக்குள் ஏற்றிக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மா சதைகள் ஆட உள்ளே போய் சுடச் சுட அவனுக்கு காப்பியும் டிபனும் கொண்டு வந்தாள்." நல்லா சாப்டுடா கண்ணா"
மன்னியின் பார்வையில் புது மரியாதை தெரிந்தது. அண்ணா ப்ரிஜ்ஜிளிருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து வைத்தான்.
"சித்தப்பா சாப்ட்டுட்டு வரேளா? கணக்கு சொல்லித் தரனும். ரெண்டு நோட்புக் அட்டையும் போடணும்." அண்ணா பிள்ளை சொல்ல அம்மா அவசரமாய் குறுக்கிட்டாள்.
"இனிமே சித்தப்பாவை சிரமப்படுத்தக் கூடாது தெரிஞ்சுதா? எல்லாத்தையும் இனி தாத்தாட்ட கேளு. அவர்தான் ரிடயராயாச்சே!. சும்மாதானே இருக்கப் போறார்"
அனந்தராமன் அதிர்ந்தான். அப்பா அன்றுதான் ஓய்வு பெறுகிறார் என்பதே அப்போதுதான் நினைவுக்கு வந்தது. சாப்பிடப் பிடிக்காமல் எழுந்து வாசலுக்கு வந்தான். அப்பா பை நிறைய சாமான்களோடு தெரு முனையில் வந்து கொண்டிருந்தார். மளிகை சாமான். இத்தனை நாளாக அவன்தான் வங்கி வருவது வழக்கம்.அம்மாவும் அண்ணாவும் உதைத்து விளையாட புதுசாய் ஒரு கால்பந்து!
அவன் மனசு வலித்தது. வாழ்க்கையை பணத்தால் வாழ்பவர்களுக்கு சும்மா இருப்பவர்கள் எல்லோரும் கால்பந்துதான். அப்பாவுக்குள் இருப்பது எப்பேர்ப்பட்ட ஆத்மா என்பதை எப்போதுதான் அறிவார்கள் அவர்கள்? அறிவார்களா அல்லது கடைசி வரை அறியாமையிலேயே உழல்வார்களா?
கண்ணீர்ப் படலத்தில் அப்பா மங்கலாகத் தெரிந்தார்.
(தீபாவளி மலர் ஒன்றில் வந்த சிறுகதை)

Wednesday, December 1, 2010

மதம் பிடித்தவர்கள்

காட்டிலிருந்து வழி தவறி நாட்டுப்புறம்,
நுழைந்து விட்டன ஜோடி யானை

கூக்குரலோடு பின்னால் ஓடினார்கள்
குழந்தைகள்

தம் வீரம் காட்ட அதன் மீதேற
முயற்ச்சித்தனர் இளைஞர்கள்

விநாயகா! கும்பிட்டனர்
ஒரு சிலர்

யானைகள் ஆடி அசைந்து
அமைதியாய் நின்றிருந்தன

"என்ன செய்யலாம்?" ஒருவர் கேட்டார்
"காவல் துறைக்கு சொல்வோம்"
என்றார் ஓருவர்

நமக்கே இருக்கட்டுமே, கோவிலில்
கட்டி வைப்போம்

"எந்தக் கோவிலில்?"

"இதென்ன கேள்வி? பெருமாள் கோவிலில்தான்"

"ஏன் சிவன் கோயிலில் கட்டினால் ஆகாதோ?"

"எதற்கு தர்க்கம்? இரண்டு யானைகள்
இருக்கையில்?"

"ஒன்று சிவனுக்கு, மற்றது பெருமாளுக்கு!"
தீர்ப்பு சொல்லிற்று ஒரு தலை

மனிதர்களின் மதம் யானைக்குப்
புரியவில்லை
அவை அமைதியாய் அவர்கள்
பின்னே சென்றன

திருநீற்றுப் பட்டையோடு
சிவன் கோயிலில் நின்றது ஒன்று

பெருமாள் கோயிலில் மீண்டும்
ஒரு தர்க்கம்

வடகலையா? தென்கலையா?
இன்னொரு யானை கிடைக்கும் வரை
தர்க்கம் தொடரும்

நாமம், பட்டை எதற்கும் அர்த்தம் புரியாத
யானைகள் ஒன்று மற்றதைத்
தேடிக் கொண்டிருக்கிறது

எந்தக் குறி சுமந்தாலும் யானை யானைதான்
என்பது எப்போது புரியும் மனிதருக்கு

நெற்றியில் குறி சுமக்கும் நாலாம் படியிலிருந்து
எப்போது முதல் படியை நோக்கி ஏறுவார்கள்
இந்த மனிதர்கள் என்பது போல் யானைகள்
அசைந்து கொண்டிருந்தன.



Sunday, November 28, 2010

தாய் மண்ணே வணக்கம்

சுற்றிலும் வெள்ளிப் பனி மலைகள்
சல சலவென ஓடும் நதிகள்
மனிதர்களில்லாத உயரத்தில்
பிராண வாயுவும் கூட குறைவாகவே
உள்ள இடத்தில் நான் மட்டும்
தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன்,
பசித்திருக்கிறேன், உங்களைப் பாதுகாக்க.


என் குடி நீர் வாயருகில் செல்வதற்கு முன்
உறைந்து விடும். என் உணவில் இரு சுவைதான்
ரொட்டியும் பருப்பும் மட்டுமே.
என்னை மகிழ்விக்க அங்கே எதுவுமில்லை
என் குடும்பம் புகைப் படமாய் என் பர்சில்.
என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீர்ந்து பல நாளாகிறது.
என் பொழுதுபோக்கு என் வீட்டிலிருந்து
எழுதப்பட்ட கடிதங்களே.
என் குழந்தையின் அசைவும் அழுகையும்
சிரிப்பும் எனக்குள் நான் சேமித்து
வைத்திருக்கும் சக்தி.

ஹோவென கூச்சலிடும் பேய்க் காற்றும்
சுள்ளென தசைச் சுடும் சூரியனும்
ஊசியாய் தரையிறங்கும் மழையுமாய்
சட்சட்டென பருவநிலை மாறினாலும்
என் பணி விழித்திருப்பதே எந்நேரமும்.
மாசற்ற வானில் கோடிகோடியாய்
மின்னும் நட்சத்திரங்களே உற்ற துணையாய்
என் இரவுகள் கரையும்.

எந்நேரமும் எமனை முதுகில் சுமந்து செல்லும்
நானும் இந்திய அரசு ஊழியன்தான்.
இந்தியாவைக் காக்கும் அரசு ஊழியன்.
எனது ஒவ்வொரு விடியலுமே நிச்சயமற்ற பிச்சைதான்
இருப்பினும் தினமும் நான் உற்சாகமாகவே
புதிதாய்ப் பிறக்கிறேன்.

எங்கள் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில்
வீர மரணம் அடைந்திருக்கிறார்கள்.
கார்கில் போரில் என்னுயிர்த் தோழனின் மரணம்
கண் முன்னே கண்டவன் நான்.

எங்கள் சாமி இந்தியத் தாய்தான்
எங்கள் மந்திரம் தாய் மண்ணே வணக்கம்தான்.

நா செத்துட்டா அழக்கூடாது
சல்யுட் அடித்து கர்வப்படனும் சரியா?
எனக்குப் பிறகு நீ அனாதையில்லை
என் சாமி உன்னை கை விட்டு விடாது

இது என் மனைவிக்கு இரு மாதம் முன்பு
நான் அனுப்பிய கடிதம்.

என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீருவதற்கு முன்
நான் கேட்ட கடைசி செய்தி கார்கில் வீட்டு
மனைகள் பற்றிய ஊழல்தான்.
செத்தவன் பேரைச் சொல்லி யாராரோ
அபகரித்திருக்கிறார்களே!
என்ன கொடுமை ஐயா இது?

நாளை என் குடும்பத்திற்கும்
இதே நிலைதானா? இதற்காகவா
இங்கே நான் தனித்திருக்கிறேன்,
விழித்திருக்கிறேன், பசித்திருக்கிறேன்?

பிள்ளைக்கறி தின்னும் இந்த
காட்டு மிராண்டிகளையுமா பெற்றிருக்கிறாள்
என் இந்திய அன்னை?

உண்மையில் யாரைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறேன் நான் ?

தேசத் துரோகிகள் உள்ளேயும் இருக்கிறார்கள்
என் துப்பாக்கி முனை உட்புறமாய் திரும்பி விடுமோ ?
என் கரம் நடுங்குகிறது, இன்னொரு விடுதலைப்போர்
வேண்டும் அவசியம், நம்மை நம்மிடமிருந்து
காப்பாற்றிக் கொள்ள.

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி- கிளியே
வாய் சொல்லில் வீரரடி!







Friday, November 26, 2010

சென்ற வாரம் காந்தி சிலையருகில்

சென்ற வாரம் கடற்கரை சாலையில் நடந்தது இது. காந்தி சிலையருகே
பாரீஸ் முனையிலிருந்து திருவான்மியூர் வழியே செல்லும் மாநகரப் பேருந்து ஒன்று சிக்னலுக்காக மெதுவே வந்து நிற்பதற்கு முன் அதிலிருந்து ஒருவர் சிக்னலில் அவசரமாக அப்படியே கீழே குதிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது.

அவர் கீழே குதித்த அதே நேரத்தில் பேருந்தை ஓட்டி வந்து கொண்டிருந்த ஒரு பைக் ஓட்டுனர் மீது அவர் மோத, அந்த பைக் ஓட்டுனர் மட்டும் எகிறிச் சென்று நடைபாதையில் நிலைகுலைந்து விழ, அவரது பைக்
ஆளில்லாமல் அதுபாட்டுக்கு சற்று தூரம் ஓடி பேருந்து ஒன்றில் இடித்து கீழே விழுந்தது. ஆபத்து எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள். அந்த பைக் ஓட்டி எந்த சாலை விதியையும் மீறவில்லை. ஆயினும் சாலை விதியை மீறி ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் சடாரென கீழே குதித்ததால் ஒரு தவறும் செய்யாத அந்த பைக் ஒட்டிக்கு சரியான அடி.

இதை விதி என்று சொல்ல நான் தயாரில்லை. இந்தியாவில் யாரும் சட்டங்களையும் சரி சாலை விதிகளையும் சரி மதிப்பதில்லை. சிறிய தவறுகளோ பெரிய தவறுகளோ தண்டனை என்று ஒன்று இருந்தால்தான், தனி மனித ஒழுக்கம் மேம்படும். அமெரிக்காவில் அதிபரின் மகனோ மகளோ சாலை விதியை மீறினாலும் தண்டனை உண்டு. இங்கோ சாதாரண அடியாளுக்கு கூட ராஜ மரியாதை.

டிராபிக் போலீசுக்கு பணம் கொடுத்து விட்டால் குற்றவாளி கூட நிரபராதி. அந்த பைக் ஒட்டிக்கு நேற்று நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? எல்லா பேருந்துகளிலும் அவசியம் தானியங்கி கதவுகள் இருக்க வேண்டும். அவைகள் பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே திறக்க வேண்டும். பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து யாரும் ஏறவும் முடியாது. ஓடும் பேருந்திலிருந்து இறங்கவும் முடியாது. இனி ஒரு விதியை இனியாவது செய்யுமா நம் அரசு? ஸ்பெக்ட்ரம் எழுப்பும் சப்தத்தில் நம் கூப்பாடு யாருக்கு கேட்கப் போகிறது? இருப்பினும் ஊதும் சங்கை ஊதுவது நம் கடமை. ஊதியாயிற்று.

Wednesday, November 24, 2010

கண்ணாமூச்சி (பகுதி- இரண்டு)

எவ்வளவு முயற்சித்தாலும் மனம் எதிர்மறையாக கற்பனை செய்வதைத் தடுக்க இயலவில்லை. சாலையில் நடக்கும் போது மணி தடாலென விழுவது போலவும், எவனோ ஒருவன் குடித்து விட்டு விழுந்து கிடப்பதாக எண்ணி மனிதர்கள் அருவருப்போடு என்ன எது என்று பார்க்காமல் கடந்து செல்வது போலவும் காட்சி ஓடும்.

இன்னொரு காட்சியில் தொடர்ச்சியாய் அவர் சிகரெட் பிடித்து புகையை ஊதி விடுவார். பேருந்தில் செல்லும்போது ஸ்ட்ரோக் வந்து விழுவார்
நடுச் சாலையில் நெஞ்சடைத்து விழ பின்னால் வந்த வாகனம் அவர் மீது ஏறுவது போல் தோன்றும். ஒவ்வொரு காட்சிக்கும் ஐயோ என்று என் அடி வயிறு கதறும்.
காலோடு தலை தேகம் நடுங்கி வியர்க்கும். நல்லதை நினை மனமே என்று சொல்லிக் கொண்டாலும் மனம் ஒத்துழைக்காது.

ஒவ்வொரு வாரமும் ஊருக்கு வரும் புருஷனிடம் படிந்திருந்த புகை வாசனை மரண ஊதுபத்தியாக என்னை சுவாசம் திணற வைத்தது.

"சிகரெட் பிடிச்ச வாசனை வரதே "
"இல்லையே"
" ஏன் புளுகறீங்க?"
" இல்லம்மா"
'டோன்ட் டச் ..! புளுகர புருஷன் எனக்கு வேண்டாம்"

" டென்ஷன் மா ஜஸ்ட் ஒண்ணுதான்"

"எங்களுக்கு டென்ஷன் இல்லையா? இப்போ எனக்கேற்பட்டிருக்கற டென்ஷனுக்கு நானும் நாலு பாக்கெட் பிடிக்கவா?"

"வாங்கித் தரவா?

"ஜோக்கா? பளார்னு அறையலாம் போலருக்கு."

"இனிமே தொடமாட்டேன் போதுமா?"

"எதுக்கிந்த போய் சத்தியம்? எனக்கு நம்பிக்கையில்லபா.
நீங்க நல்லவரா இருந்தா மட்டும் போதாது. நல்ல பழக்க வழக்கமும் கொஞ்சம் வேணும். சந்தர்ப்பம் கிடைச்சாலும் சபலப் படக் கூடாது. சிகரெட்தான் முக்கியம்னு நினைக்கரவா எதுக்கு கல்யாணம் குழந்தைகள்னு பல்கிப் பெருகணும்? எல்லாரையும் கஷ்டப்படுத்தணும்?"

அந்த இரண்டு நாளும் பேசவே இல்லை. திங்கட் கிழமை காலை
சூட்கேசைத் தூக்கிக் கொண்டு என் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தார்.

"வழில எதுவும் சாப்ட வேண்டாம். இதுல இட்லி இருக்கு. ஜாக்ரதையா போயிட்டு வாங்கோ"

"கோவம் குறைஞ்சுதா?"

"இது கோவமில்ல வருத்தம். நான் சொன்னதெல்லாம் மறந்துட வேண்டாம்"

"வரட்டுமா" நழுவி நகர்ந்தார்.

ஊருக்குப் போய்ச் சேர்ந்து நாலு தினமாகிறது. இதுவரை ஒரு போன் பண்ணவில்லை. அப்படி என்ன வேலையோ. இன்றைக்காவது பேசுகிறாரா
பார்ப்போம்.

அலுவலகத்திலிருந்து கடற்கரை சாலையில் நடைப் பயணமாய் வீடு வந்து சேர்ந்த போது டெலிபோன் அடிப்பது கேட்டது. பெரிய பெண் எடுத்துப் பேச நான் உள்ளே சென்றேன்.

" யாருடி அப்பாவா?"

" இல்ல ஆனா அப்பா ஆபிஸ்லேர்ந்துதான் போன்"

"என்னவாம்?" கேட்கும்போதே என் குரல் லேசாய் நடுங்கிற்று.

"ஐ திங் அப்பா இஸ் நோ மோர்மா."

சுருண்டு மூலையில் அமர்ந்தேன். தேகம் முழுக்க மின்சாரம் தாக்கினாற்போல் சுண்டியிழுத்த வலி. அடி வயிறு கழன்று தனியே விழுந்து விட்டாற்போல் இருந்தது. அதிர்ச்சியில் கண்ணீர் அடைபட்டுப் போயிற்று.

"நிஜமா? நிஜம்தானா இது!..... ஏதாவது ராங் காலாக இருக்குமோ?

இல்லை என்றன தொடர்ந்த தொலை பேசி அழைப்புகள். என்னக்குள் எதோ நழுவியது.

" ஹலோ அங்கிள் சௌக்கியமா? நா சௌக்கியம்தான். உங்களுக்கு ஒரு வருத்தமான சேதி. கொஞ்சம் முன்னால அப்பா தவறிட்டார்.
ஹார்ட் அட்டாக் ."

இருபது வயதுப் பெண் தன் துக்கம்மறைத்து கேட்பவருக்கு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படாமல் பக்குவமாக நலம் விசாரித்து செய்தி சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தாள்
நான்கைந்து முறை விழுப்புரத்திர்க்குப் பேசி நிலவரங்களைக் கேட்டு அறிந்தாள்.
மாற்றி மாற்றி வந்த தொலை பேசி அழைப்புகளுக்கு அமைதியாக பதில்
அளித்தாள் அழுதபடி வந்த உறவுகளை ஆறுதல் சொல்லி அமர வைத்தாள்

அடுத்த நாள் எல்லாமே முடிந்து போயிற்று. உதட்டில் உட்கார்ந்து
கொண்டிருந்த நெருப்பு முழு உடம்பையும் சுவீகரித்துக் கொண்டது.

"ஆர் யு ஒகே மா?" பெண் என்னருகில் அமர்ந்து பரிவோடு கேட்க மெலிதாய் புன்னகைத்தேன்.

"இது நாள் வரை உள்ள இருந்து ஹிம்சை பண்ணிண்டிருந்த
பயமும் செத்துப் போய்டுத்து. நல்ல காலம் நா பயந்தாப் போலல்லாம் இல்லாம
நல்லபடியாத்தான்...."

அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டேன். யோசிக்க யோசிக்க ஒரு உண்மை விளங்கியது. மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை.
அந்த மரணம் நல்லபடி நிகழ வேண்டுமே என்ற பயம்தான் என்னைக் குடைந்திருக்கிறது. இணைவதற்கு ஒரு முகூர்த்தம் எனில், பிரிவதற்கும் ஒரு முகூர்த்தம் நிச்சயம் இருக்கும். அதற்கு சம்மதிக்கிற மனசு இதற்கும் நிச்சலனமாய் சம்மதித்துத் தானே ஆக வேண்டும். வாழ்க்கை ஒரு ரயில் பிரயாணம் என்று சும்மாவா சொன்னார்கள்! பிரிவுக்கு அஞ்சுபவர்களுக்கு பயண
சுகமும் அனுபவமும் கிட்டுவதில்லை. அந்த அனுபவங்கள் என் எண்ணங்களில்
இனிமையாக படர்ந்திருக்கும். மரணம் விடுதலை எனில் எதற்கு துக்கப் பட வேண்டும்? எல்லாத் துன்பமும் உடல் இருக்கும் வரைதானே. இனி அது உடலற்றது. அதற்கினி எந்த துன்பமும் இல்லை. வெய்யிலில் வாடாது. மழையில் நனையாது. பசியிருக்காது. தாகமிருக்காது. பி.பி. கிடையாது. அடைப்பு ஏற்படாது. அறுவை சிகிச்சைகள் கிடையாது. எவ்வளவு பெரிய விடுதலை. இருக்கட்டும். அது அப்படியே உடலற்று இருக்கட்டும். காமத்திற்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும்தான் உடல் வேண்டும். காதலுக்குத் தேவையில்லை.
உடலற்றதொடும் காதல் தொடரலாம்.

நீண்ட நாள் கழித்து நான் பயமின்றி உறங்கினேன்,

தொலைபேசி நீளமாய் அடித்தது. எழுந்து சென்று எடுத்துப் பேசினேன்.

"ஹலோ"

"நாந்தாம்மா எப்டியிருக்க? " அவர் குரல்தான்.

"நல்லார்க்கேன்"

"அப்பறம் என்ன விசேஷம்?"

"விசேஷம்தானே. உண்டு. நீங்கள் செத்துப் போய் விட்டீர்கள். ஞாயிற்றுக் கிழமை உங்களுக்கு பத்து. வந்து விடுங்கள்"

"கண்டிப்பா வரேன் படையல் மெனு என்ன?"

"உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் உண்டு. உப்பில்லாமல்."

"சிகரெட் உண்டா?"

"உண்டு. நிக்கோட்டின் இல்லாமல்."
*****************
பி.கு.
இந்த சுய கதை அமுதசுரபியில் வந்தது. கான்க்ரீட் மனசுகள் என்ற தொகுப்பிலும் சேர்க்கப் பட்டுள்ளது, அதே அமுதசுரபியிலும், குமுதம் ஹெல்த்திலும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வுக்காக இதைக் கட்டுரையாக எழுதிக்கொடுத்தேன். இதனைப் படிப்பவர்களில் உடனடியாய் சிலராவதும், போகப் போக பலரும் புகைப்பதை விட்டு விடுவார்கள் என்கிற ஆசையோடுதான் இங்கே இதனைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.