Friday, January 29, 2016

அஹோபிலம் - 2

அஹோபிலம் - 2

கிழக்குத்  தொடர்ச்சி  மலையை  ஆதிசேஷனாக  கொண்டால், அதன்  தலைப்பகுதியில்,  திருப்பதியும்,  நடுப்பகுதியில், நல்லமல்லா  மலைத்தொடரில்  அஹோபிலமும்,  வால்பகுதியில்  ஸ்ரீ சைலமும்  இருக்கிறது. ஜ்வாலா நரசிம்மர்  இருப்பது   2800  அடி  உயரத்தில்.

மறுநாள்  காலை ஆறுமணிக்கு  காப்பி  மட்டும்  குடித்து  விட்டு   மலையேற்றத்திற்குத்  தயாராகக்  கிளம்பினோம்.  கீழ்  அஹோபிலத்தில்  எங்களை  இறக்கி  விட்டது  எங்கள்  பேருந்து.   இயற்கையான  ஒரு  குகையில்தான்  இங்கே  சுயம்புவான அஹோபில நரசிம்மர்  இருக்கிறார்.  ஹிரண்யனை  வதம்  செய்யும்  கோலத்தில்  உக்கிரமூர்த்தியாய்.  கீழே  பிரஹலாதனும் உள்ளான்.   நரசிம்மரை  தரிசிப்பதற்கு  முன்  ஆதிசங்கரர்  பிரதிஷ்டை  செய்த  சிவலிங்கமும்,  சுதர்சன,  ஸ்ரீ  சக்ரங்களும்   இருக்கிறது.   இஸ்லாமிய  படையெடுப்பின் போது  இங்குள்ள  குகை  ஒன்றில்  உள்ளே  நுழைந்த  ஜீயர்  ஒருவர்  பின்னர்  வெளியில்  வரவில்லை  என்றார்  வழிகாட்டி.  அந்த  குகை  இப்போது  மூடப்பட்டுள்ளது.  கருடனும்,  ராமரும்  வழிபட்ட  மூர்த்தி  இவர். தாயார்  சந்நிதி   தனியே  உள்ளது.

இந்தக்  கோயிலின்  வாசலில்  மலையேறுவதற்கு  உதவியாக  மூங்கில்  கழி  கிடைக்கும்.   இங்கிருந்து  ஒளவையார்  கோலம்தான்.   நெல்லிக்கனியும்  விற்கிறார்கள்.  கொஞ்சம் வாங்கிக்  கொண்டால்  நல்லது.  வாயில்  அடக்கிக்  கொண்டால்  அதிக  தாகம்  எடுக்காது.  சிறிய  தண்ணீர்  பாட்டிலும்,  கொஞ்சம்  சாக்லேட்களும்  வைத்திருக்கலாம்.  பையில்  அதிக  சுமை  வைத்திருக்க  வேண்டாம்.

அடுத்து  நாங்கள்  சென்றது  ஜ்வாலா  நரசிம்மரை  நோக்கி.   பாதை  எல்லாம்  கிடையாது.  பவநாசினி  நதியை ஒட்டி,  குட்டியானை  சைஸிலிருந்து,  குட்டிக்  குரங்கு  சைஸ்  வரை  பாறைக்  கற்கள்  கொட்டிக்  கிடக்கிறது.  இதில்  ஏறியும்,  புகுந்தும்,  புறப்பட்டு  செல்ல  வேண்டியதுதான்.  புகைப்படங்களைப்  பார்த்தால்  உங்களுக்கே  புரியும்.  ஜெய்  நரசிம்மா  என்று  கூறியபடி  முதலடியை  வைத்தோம்.  எனக்கு  இது  மாதிரி  டிரெக்கிங்  என்றால்  அல்வாதான்.  செம  குஷியாகி  விடுவேன்.   நடு  நடுவே  மரப்பலகைகள்    அடிக்கப்பட்ட  பாலங்களும்  இருக்கிறது.  பலகைகளில்  நிறைய  பிளவுகளும்  உடைந்து  போய் ஓட்டைகளும்  இருக்கிறது.  ஜாக்கிரதையாக  நடக்க  வேண்டும்.

ஜ்வாலா  போகும்  வழியிலேயே  குரோட  (வராஹ)  நரசிம்மர்  இருக்கிறார்.  ஒரு  காலத்தில் குகைக்குள்   தவழ்ந்து  சென்று  போய்த்தான்  இவரைப்  பார்க்க  முடியுமாம்.  இப்போது  குகையை  செதுக்கி  முன்  மண்டபம்  எழுப்பி  வசதி  செய்திருக்கிறார்கள்.  இவரை  வராஹ  மூர்த்தியாய்  மூக்கின்  மீது  பூதேவியை  சுமந்த  சுயம்பு வடிவம்.   ஒவ்வொரு  நரசிம்மர்  கோயிலிலுமே  சுயம்பு  வடிவத்தோடு  அதே  போன்ற  பிரதிஷ்டா  வடிவமும்  இருக்கிறது.  எங்கள்  யாத்திரை  மலை மேல் நோக்கி  தொடர்ந்தது.

கடுமையான  காட்டு  வழி  என்பதால்  தனியே  செல்வதைத்  தவிர்க்கலாம்.  ஆனாலும்  நான்  மொபைலில்  நின்று  நிதானமாக  படம்  எடுத்துக்  கொண்டுதான்  நடந்தேன்.   இருந்தாலும்  வேகத்தைக்  கூட்டி  என்னோடு  வந்தவர்களுடன்  இணைந்து  விடுவேன். நம்மைக்  கடந்து  டோலிகளில்  செல்பவர்களையும்  காணலாம். வழியில்  ஓரிடத்தில்  வழிகாட்டி  இங்கே  வந்து  பாருங்க  என்று  எதையோ  காட்டினார்.  அவர்  காட்டிய  இடத்தில்  தெரிந்தது  உக்கிரஸ்தம்பம்.     நரசிம்ம்மர்  வெளிப்பட்ட  தூண்.  அதன்  உச்சியில்  செந்நிறக்  கொடிகள்.

ஏறமுடியுமா?  நான்  கேட்டேன்.  கொஞ்சம்  கஷ்டம்மா. என்றார்

எவ்ளோ  நேரமாகும்?

ரெண்டு  மணி  நேரமாவது  ஆகும்.

கவிதாவின்  மைத்துனன்  மிதுன்  நா  போயிட்டு  வரட்டுமா  என்றான்  தன்   தாயிடம்.  எனக்கும்  போக வேண்டும்  என்ற  ஆசை.   ஆனால்  சம்மந்தியிடமிருந்து  அனுமதி  கிடைக்கவில்லை.  மற்ற  நரசிம்மரை  எல்லாம்  பார்த்துட்டு  நாலு  மணிக்கானம்  புறப்பட்டாதான்  ஊர்  போய்ச்  சேர  முடியும்  என்று  மறுத்து  விட்டார்.  தவிர  நாங்கள்  ரிஸ்க்  எடுத்து  அந்தக்  குறுகிய  செங்குத்தான  ஸ்தம்பத்தில்  ஏறுவதையும்  அவர்  விரும்பவில்லை. மிதுனிற்கு  இதில்  நிறைய  வருத்தம்.  பாவம்  சின்ன  பையன்.  சுலபமாக  ஏறி   விடக்  கூடியவன்தான்.  என்ன  செய்ய?

ஸ்தம்பத்தை  ஏக்கத்தோடு  பார்த்தபடி  தொடர்ந்து  நடந்தேன்.   பாறைக்  கற்களைக்  கடந்து  நடந்த  பிறகு  படிகள்  மூலம்தான்  ஏற  வேண்டும்.  உண்மையில்  படிகளில்  ஏறிச் செல்வதுதான்  கடினம்.  கிட்டத்தட்ட  எழுநூறு  எண்ணூறு  படிகள்  இருக்கும்.  ஆனால்  நம்புங்கள்.  நெல்லிக்கனி  உபயத்தில்  நான்  அதிகம்  நீர்  அருந்தவில்லை.  உடனடி  சக்திக்கு  சாக்லெட்டும் .   தேவைப்படவில்லை.  சர்க்கரை அளவு   குறைந்து  விடக்  கூடாதே  என்பதற்காக  நானாக  நடுவில்  ஒரே  ஒரு  சாக்லேட்  எடுத்து  சாப்பிட்டேன்.  ஒரு  வழியாக  படிகள்  முடிந்து  சற்று  தூரத்தில்  நமக்கு  இடப்புறம்  கோயில்  தெரிந்தது.  ஒற்றையடிப்பாதை.  வேதாத்திரி  மலைக்கும்,  கருடாத்ரி  மலைக்கும்  இடையே  ஒரு  சிறிய  குகைக்  கோயில்.  குகைக்கு  வெளியே  கம்பிக் கதவு.

அந்த  ஒற்றையடிப்  பாதையில்  வேதாத்திரி  மலையைத்  தொட்டபடி  நடக்கையில்  மலையிலிருந்து  நம் மீது  நீர்  சொறிகிறது.  மழையற்ற  போதே  நீர்  சொரிகிறது  என்றால்  மழையின்  போது?     குற்றாலம்  மாதிரி  கொட்டுமாம்.  இணையத்தில்  அருவி  கொட்டும்  ஒரு  புகைப்படமும்  கிடைத்தது.  ஜ்வாலாவுக்கு  செல்லும்  வழியிலேயே  வலப்புறமாய்  உக்கிரஸ்தம்பத்திற்கு  ஏறும்  வழி  உள்ளது.  வழியா?  வானரம்  போல்  ஏற  முடிந்தால்  அதுதான்  வழி.  உடலால்  செல்ல வாய்ப்பு  கிடைக்கா விட்டால்  என்ன?.  நமக்குதான்  மானசீகமாகவும்  செல்ல  முடியுமே.  கிடு கிடுவென்று  மனசால்  ஏறிசென்று, அங்கு  வீசும்  பேய்க் காற்றை  அனுபவித்து  விட்டு,  நரசிம்ம  பாதங்களை,  கொடியையும்  பார்த்தாயிற்று, முழுவதும்  ஏறா  விட்டாலும்  மிதுன்  ஆசைக்கு  கொஞ்ச  தூரம்  ஏறி  விட்டுத்  திரும்பினான்.  இருவரும்  அந்த  வழியில்  நின்று  புகைப்படம்  மட்டும்  எடுத்துக்  கொண்டோம்.வேதாத்திரி  மலையை  ஒட்டி இன்னும்  இரண்டடி  நடந்தால்  மலையை  ஒட்டி  கீழே  ஒரு  குண்டம்.  அதற்கு  மலையே  குடை  பிடித்தாற்போல்  இருக்கிறது. மூங்கில்  கழிகளால்  தடுப்பு  கட்டியிருக்கிறார்கள்.   உள்ளே  இளம்  சிவப்பு  நிறத்தில்  நீர்.  அதுதான்  ரக்த  குண்டமாம்.  ஹிரண்ய  வதம்  முடிந்த  பின்  நரசிம்மர்    இரத்தம்  படிந்த  தன  கரங்களைக்  கழுவிய  இடம்.    தண்ணீர்  கல்கண்டு  போல்  இனித்தது.  என்  தண்ணீர்  பாட்டிலை  காலி  செய்து  விட்டு  தடுப்புக்கு  உள்ளே  சென்று  நீர்  எடுத்துக்  கொண்டிருந்த  ஒரு  மனிதரிடம்  கேட்டு  பாட்டிலில்  நீர்  சேகரித்துக்  கொண்டேன்.

ரக்த  குண்டத்தை  ஒட்டி  ஜ்வாலா  நரசிம்மர்.  மிஞ்சிப்போனால் உள்ளே  பத்து  பேர்  நிற்கலாம்.  அவ்வளவுதான்  இடம்.  சுயம்பு  நரசிம்ம  மூர்த்தியைப்  பார்த்து  பக்தியோடு  ஆச்சரியமும்  ஏற்பட்டது.  மடியில்  ஹிரண்யன்,  இரு கைகள்  அவன்  தலையையும்,  தொடையையும்  அழுத்திப்  பிடிக்க,  இரு  கைகள்  வயிற்றைக்  கிழிக்க,  இரு  கைகள்  குடலை  உருவி,  மாலையாக  அணிய, உக்கிரமூர்த்தியாக  சிலையாக  வடிக்கப்  பட்டாற்போல்  ஒரு  சுயம்பு மூர்த்தியா  என்று  வியக்காமல்  இருக்க  முடியவில்லை.  அவ்வளவு  துல்லியம்.

ரக்த  குண்டத்திலிருந்து  காணும்  போது  எதிர்புறம்  தெரிந்த   கருடாத்ரி  மலை  சிறகு  விரித்த  கருடன்  போலவே  தெரிகிறது.  உற்று  கவனித்தால்  மூக்கு  கூடத்  தெரியும்.  நரசிம்ம  அவதாரத்தை  காண  விரும்பிய  கருடனை  மகா  விஷ்ணு  இம்மலைக்குச்  சென்று  தவம்  செய்யுமாறு  கூறியனுப்ப,   அவரும்  இங்கே  வந்து  தவக்கோலத்தில்  இருந்திருக்கிறார்.  கிருத  யுகத்தில்  இம்மலை  ஹிரண்யனின்  அரண்மனையாக  இருந்திருக்கிறது.  ஹிரண்ய  வதத்திற்காக   தூண்  பிளந்து  வந்த  நரசிம்மமூர்த்தியை  கருடனும், பிரஹலாதனும்   சேவித்திருக்கிறார்கள்.

(காத்திருங்கள்  தொடர்ந்து  தரிசிப்போம்)Thursday, January 28, 2016

அஹோபிலம் அனுபவம் - 1

அஹோபிலம்   - 1

எத்தனையோ  ஆண்டு  ஆசை  அஹோபிலம்  செல்ல  வேண்டும்  என்பது. அது  இப்போதுதான்  லபித்தது.  என்  சம்பந்தி,  கவிதாவின்  மாமனார்   நாராயணன்தான்  எல்லா  ஏற்பாடும்  செய்திருந்தார்.  தைப்பூசம்  அன்று  கிளம்பினோம்.  திருத்தணி  தாண்டும்போது  மலை தரிசனமாயிற்று.  ஒரு    மணி  வாக்கில்  போய்ச்  சேர்ந்தால்  அஹோபில  மடத்தில்  புக்  பண்ணி  வைத்திருந்த  அறைகள்  கிடைக்கவில்லை.  அதற்கு  முதல் நாள்  அங்கு  தங்கியிருந்து  பாவனா  நரசிம்மரைக்  கானச்சென்றவர்களின்  ஜீப்  பழுதுபட்டு  அவர்கள்  வெகு  தாமதமாக  வந்ததால்,  அறையை  காலி  செய்ய  முடியாத  சூழல்.  இதனால்  எங்களுக்கு  அறைகள்  கிடைப்பதில்  சிக்கல்  ஏற்பட  அருகில்  ஒரு  லாட்ஜில்  ஒருவழியாய்  அறைகள்  கிடைத்தது.

அஹோ  என்றால்  ஆச்சர்யம்.  பிலம்  என்றால்  குகை.  ஆச்சர்யமான  குகைகள்.  அதில்  சுயம்புவாய்  ஒன்பது  நரசிம்ம  மூர்த்தங்கள்    தூணைப் பிளந்து  வந்து  ஹிரண்யனை  நரசிம்மம்  வதம்  செய்த  இடம்.  என  பல  பெருமைகளைக்  கொண்ட  ஒரு  புனிதத்  தலம்.  ஒன்பது  நரசிம்மரும்  ஒவ்வொரு  கிரகத்திற்கு  அதிபதியாய்  இங்கு  அருள்பாலிக்கிறார்.

பார்கவ  நரசிம்மர்  -  சூரியன்
பாவன  நரசிம்மர்  -   புதன்
வராஹ (குரோட) நரசிம்மர்  -  ராகு
அஹோபில  நரசிம்மர் - குரு
ஜ்வாலா  நரசிம்மர்  -  செவ்வாய்
மாலோல  நரசிம்மர்  -  வெள்ளி
காரஞ்ச  நரசிம்மர்  -  திங்கள்
சக்ரவட  நரசிம்மர்  -  கேது
யோகானந்த  நரசிம்மர்  -  சனி

முதலில்  நாங்கள்  பார்கவ  நரசிம்மரை  தரிசித்தோம்.  கொஞ்ச  தூரம்  ஜீப்  பயணம்  பிறகு  அறுபது  எழுபது  படிகள்  ஏறிச்செல்ல  வேண்டும்.  அடிவாரத்தில்  ப்பர்கவா  தீர்த்தம்.   கோயில்  பூட்டியிருந்தாலும்  நரசிம்மரை  தரிசிக்க  முடிந்தது.  வழிகாட்டி  டார்ச்  அடிக்க,  நரசிம்மரும்,  அவர்  மடியில்  கிடந்த,  ஹிரன்யனும்,  கீழே  நின்றிருந்த  பிரஹலாதனும்   துல்லியமைத்  தெரிந்தார்கள்.  சுயம்புவா  இது  என்ற  அச்சர்யமேற்பட்டது. அடுத்தாற்போல்  பாவன  நரசிம்மரை  தரிசிக்கச்  சென்றோம்.  போக வர  45  கிலோமீட்டர் பயணம்  நடுக்காட்டில்  உள்ளது.  போகிற  வழியில்  வெள்ளித்  தடாகமாய்  பவநாசினி  நதி.   கூட்டம்  கூட்டமாய்  வெள்ளை  வெளேரென்ற உடலும்,  கரு கருவென்று  கண்களுமாய்   மேய்ந்து  கொண்டிருந்த  நாட்டுப்  பசுக்கள்.  அவற்றின்  பால்  எப்படி  இருக்கும்  என்று  யோசித்தேன்.  நகரத்தில்  எங்கே  மேய்ச்சலுக்கு  விடுகிறார்கள்?   போடுகிற  தீனியைத்  தின்று,  ஊசி  மருந்துக்கு  சுரக்கும்  பசுக்களைப்  பார்த்த  கண்களுக்கு  அந்த  பசுக்கள்  கொள்ளை  அழகாகத்  தெரிந்தன.   ஜீப்  தொடர்ந்து  சென்றது.

உங்களை  ஒரு பெரிய  பாட்டிலில்  போட்டு வேகமாய்க்  குலுக்கினால்   எப்படி  இருக்குமோ  அப்படி  இருந்தது  பயணம்.   வாயில்  நுரை  தள்ளவில்லை  அவ்வளவுதான்.   பாதி  இடங்களில்  ஜீப்  ரெண்டே  சக்கரத்தில்  செல்வது  போல்  சாய்வாக  சென்றது.  ஜீப்கள்  சென்று  சென்றுதான்  பாதை  என்றே  ஒரு  உருவாகியிருக்கிறது.  மற்றபடி  குறுகலான  ஒரு  வழியில்   பாறைக் கற்களில்  ஏறி  இறங்கி,  மேடும்  பள்ளமுமாய்,  பக்கவாட்டில்  மரக்கிளைகள்  மோதிக்  கிழிப்பது  போல் வந்து  படக்கென்று  ஜீப்பில்  மோதி  உடைந்து...சர்ரென்று  சரிவிலிறங்கி,  கிர்ரென்று  மேட்டிலேறி .... செம  அனுபவம் போங்கள்.  குலுங்கின  குலுங்கலில்   வயிற்றுக்குள்  சிறுகுடலும்  பெருங்குடலும்  சிக்கி  சிடுக்காயிருக்கும்.   ஏதோ  ஒரு  இடத்தில்  ஜீப்  நிற்க,  இதோ  வந்து விட்டதோ  என  நினைத்தால்   அது  செக்  போஸ்ட்டாம்.  அதற்குப்  பிறகும்   ஐந்து  கிலோ  மீட்டர்   பயணம்  உண்டு  என்றார்  ஓட்டுனர். அந்த  கடைசி  ஸ்ட்ரெச்  இன்னும்  மோசமான  பாதையாக  இருந்தது.  ஜீப்  கவிழ்ந்து  விடும்  போல்  சாய்ந்து  சென்றது. சுற்றிலும்  அடர்ந்த  காடு. ஆனால் மழையில்லாததால்  காய்ந்து  கிடந்தது.  இந்த  குறுகலான  வழியில்  எதிரில்  தரிசனம்  முடிந்து  திரும்பி  வரும்  ஜீப்களுக்கும்  வழி விட்டு ,  ஜாக்கிரதையாக  ஓட்டிச்சென்ற  ஓட்டுனர்களின்  அபாரமான  திறமை  அசத்துகிறது.
பயணத்தின்   சிரமம்  எல்லாம்  கோவிலைப்  பார்த்ததும்  பறந்து  போயிற்று. பின்புறம்  இரண்டு  மலைமுகடுகள்  தெரிய  சிறிய  கோயில்தான்.  இரு  மலைகளிலிருந்தும்  பவநாசினி நதி பெருகியிணைந்து   அருவியாய்க்  கொட்டுமாம்.   ஆனால்  மழை  இல்லாததால்  வெறும்  நீர்த்தடம்  மட்டுமே  தெரிந்தது. மகாலக்ஷ்மி  இங்கே  வேடுவப்  பெண்ணாய்  அவதரித்து  நரசிம்மரை  மணந்ததால்  இங்கு  மட்டும்  பலி  நடக்கிறது.   தரிசனம்  முடிந்து  மீண்டும்  அதே  பாதை.  அதே  குலுக்கல்.  அந்தி  சாய்ந்து  தைப்பூச  பௌர்ணமி  நிலவு  மலைகளுக்கு  மேலே  தங்கத்  தட்டாக  உயர்ந்து  எங்களை  எட்டிப்  பார்த்த  அழகில்  மனசு  சொக்கிப்  போயிற்று.  புகைப்படம்  எடுத்த  போ து  ஜீப்  ஒட்டிய  இளைஞர்  உங்க  ஊர்ல  நிலா  தெரியாதாம்மா  என்றாரே  பார்க்கலாம்.  வருமே.  ஆனா இங்கே  இயற்கையழகோட  பார்க்கறோம்  இல்லையா  அதான்  ஆசையா  போட்டோ  எடுக்கறேன்  என்று  சிரித்தேன். காட்டில்  எரியும்  நிலவின்  அழகே  அழகுதானே.    முதல்  நாள்  இந்த  இரு  நரசிம்மர்களைத்தான்  தரிசிக்க  முடிந்தது.
Thursday, January 21, 2016

உதை பந்துகள் (சிறுகதை)

                                  உதை பந்துகள்

அனந்தராமன் கரம் நடுங்க அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.  ஒரு  வருடமாக  எதைத் தேடித் தேடி ஊரெல்லாம் செருப்புகள் தேய  அலைந்தானோ அது ஒரு வழியாய் அவனுக்குக் கிடைத்து விட்டது. அனந்தராமன்  இழுத்து மூச்சு விட்டான். எவ்வளவு பெரிய ஆசுவாசம்!  எத்தனை
கஷ்டங்கள்! இந்த ஒரு  வருடத்தில் அண்ணாவும் அம்மாவும் எவ்வளவு குத்திக் குதறி இருப்பார்கள்.

 "கணக்குப் போட்டுப் பார்த்தா இதுவரை எவ்ளோ லட்சம் இவன் படிப்புக்குக் கொட்டி அழுதிருப்போம்! ஊர் முழுக்க இஞ்சினியரிங் படிப்புலதான் போய் விழறது.  தடுக்கி விழுந்தா நூறு எஞ்சினியர். அதனால வேலை கிடைக்கறது கஷ்டம்னு தலைபாடா அடிச்சுண்டேன். கேட்டேளாநல்ல மார்க் வாங்கிட்டான். எஞ்சினியரிங்தான் படிக்க வெக்கணும்னு ஒத்தைக் கால்ல நின்னார் அப்பா.  இருக்கற கடனெல்லாம் வாங்கி இவம்படிப்புக்கு கொட்டியாச்சு. அத்தனையும் முழுங்கி ஒரு எஞ்சினியர் பட்டத்தை வாங்கி இப்ப அதை பூஜை பண்ணிண்ருக்கான். படிச்ச படிப்புக்கும் வேலை கிடைக்கல. மத்த வேலைக்குப் போகவும் கௌரவக் குறைச்சல்.  இப்பப் பார்.... ஊரைச் சுத்திட்டு வந்து வெட்டிச் சோறு தின்னுண்ருக்கான்."

அண்ணா வலிப்பு வந்தாற்போல் கையை உதறி உதறி நாக்கைச் சுழற்றியடித்தான்.  நாவினால் சுட்ட காயங்கள் இப்படி ஆயிரக்கணக்கில் உண்டு.  அண்ணா சொன்னது நிஜம்தான்.  நிறைய  எஞ்சினியர்கள் வேலையில்லாமல் இருந்தார்கள்.  இருந்தாலும் அண்ணா பேசும்போது செத்து விடலாம் போலத்தான் இருக்கும்.  பணம் செலவழித்தது முழுக்க அப்பாதான் என்றாலும்  அண்ணா என்னமோ தான்தான் செலவு செய்தாற்போல் பேசுவான்.  அப்பா தன்னை வெறும் பிகாம் மட்டுமே படிக்க வைத்ததை  சொல்லி சொல்லிக் காட்டுவான்.

அந்த பீகாமுக்கே அவன் அதிர்ஷ்டம் அப்போது வங்கி வேலை கிடைத்து இப்போது கை நிறைய சம்பாதித்தாலும் அப்பா தனக்கு பணம் செலவழிக்கவில்லை என்பதைக் குத்திக் காட்டா விட்டால்
தூக்கம் வராது அவனுக்கு.

அனந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை  வரசித்தி விநாயகனுக்கு முன் வைத்து வணங்கி நன்றி சொன்னான். அப்பாவிடம்தான் முதலில் சொல்ல வேண்டும். இதேபோல் அவர் காலடியில் இதை வைத்து அவரிடம் ஆசி பெற வேண்டும்.

இந்த ஒரு  வருடத்தில் அப்பாதான் அவனுக்கு முழு சப்போர்ட்.  அண்ணன் திட்டும் போதெல்லாம்  அவன் மல்லீஸ்வரன் கோயிலுக்குப் போய் அமர்ந்து விடுவான். முதல் முறை அப்படி அமர்ந்திருந்த போது பரிவுடன் ஒரு கரம் அவன் முதுகில் தட்டியது.

அப்பாதான் பின்னால் நின்றிருந்தார்.

"என்னடா  அனந்து அண்ணா திட்டினதுக்கா இந்த அசோக வனத்துக்கு வந்து உக்காந்துட்ட?"அப்பா 
புன்னகையோசு அவனருகில் அமர்ந்தார்.

அவன் சிரிக்க முயன்றான்.

"அண்ணா திட்டறது சாதாரண கஷ்டம்டா அனந்து. இதுக்கே சோர்ந்து போய்ட்டா எப்டிஇது சமுத்திரத்துல சின்ன அலை. இன்னும் எவ்ளோ இருக்கு!  ஆளையே முழுங்கடிக்கற அளவுக்கு வரும். அதுக்கெல்லாம் என்ன செய்வ? கமான் கண்ணா கவலையைத் தட்டி விட்டுட்டு வேலையைப் பார்ப்பயா?"

"படிப்பு முடிஞ்சதுமே வேலை கிடைக்கணும்னா எப்டி?   எல்லார்க்குமா உடனே வேளை கிடைச்சுடறதுஅம்மாக்கும் அண்ணாக்கும் இது ஏன் புரிய மாட்டேங்கறதுமுந்தாநேத்து அம்மா கிட்ட கொஞ்சம் பணம் கேட்டேன்.  உன் சில்லற செலவுகளுக்காவது எதாவது வேலை பார்க்கக் கூடாதான்னு கேக்கறான் அண்ணா  எவ்ளோ கஷ்டமார்க்கும் எனக்கு?"

"புரியரதுடா. இங்க பார் அனந்து. படிப்பு முடிஞ்சு நல்ல வேலை கிடைக்கற வரை ஒரு இளைஞனுக்கு சோதனையான காலம்தான்.  கால் பந்து மாதிரிதான் அவன் நிலை.  ஆளாளுக்கு எட்டி உதைப்பா. எந்த உதைலயாவது கோல் பாயன்ட்டுக்குள்ள விழுந்துட மாட்டாநான்னு  ஒரு நப்பாசை.  அதுக்கெல்லாம் வருத்தப் படக்கூடாது. இனிமே எதுக்கும் அம்மாட்டயோ அண்ணா கிட்டயோ நீ காசு கேக்க வேண்டாம் சரியாமாசா மாசம் உன் அப்ளிகேஷன் இன்டர்வியு செலவுக்குன்னு நான் ஐநூறு ரூபா தரேன். முதல்லையே நீ எங்கிட்ட கேட்ருக்கலாம்.  என் ஞாபகம் வரலையா உனக்கு?"

"இதுவரை அம்மாட்டதான் கேட்ருக்கேன்"

"இனிமே நான் தரேன். இதோ பார் அனந்து  வேலைக்கு முயற்சி பண்ணு. அது கிடைக்கறப்போ கிடைச்சுட்டு போறது. எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு. நமக்கு எப்போ எது கிடைக்கனும்னு இருக்கோ அப்போ அது கிடைச்சுடும்.  யாராலையும் தடுக்க முடியாது.  அது நல்லதார்ந்தாலும் சரி. கெட்டதார்ந்தாலும் சரி.  அதனால வேலை கிடைக்கற வரை இப்டி தாடி வளர்த்துண்டு சோகமா அலையணும்னு அவசியமில்ல. சந்தோஷமா இரு. யார் இளக்காரமா பேசினாலும் சட்டை பண்ணாதே. சினிமா பாக்கணுமா பாரு. பிரண்ட்சோட ஜாலியா வெளில போணுமா போ.  வேலை கிடைக்காதவன் சந்தோஷமா இருக்கப் படாதுன்னு எந்த சட்டத்துலயும் சொல்லல.  சோ பி ஹாப்பி மேன்"  அப்பா அவன் முதுகில் தட்டி விட்டு தன் பர்ஸ் பிரித்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.

"ஏம்ப்பா உன் சம்பளம் முழுக்க அம்மா வாங்கிண்ருவாளே  இதுக்கு என்ன கணக்கு சொல்லுவ?"

அப்பா புன்னகைத்தார். "அதைப்பத்தி என்ன? நான் பாத்துக்கறேன். நீ சந்தோஷமா இரு சரியா?"

அப்பா மட்டும் அன்பைக் காட்டியிராவிட்டால் கடினமான இந்த ஒரு வருடத்தை அவன் கடந்திருக்க முடியாது.

மாதம் ஐநூறு ரூபாய் அவனுக்குத் தருவதற்காகவே அவர் ஒரு வக்கீலிடம் பார்ட் டைம் உத்தியோகம் பார்த்த விஷயம் கூட இரண்டு மாதம் முன்புதான் அவனுக்குத் தெரிய வந்தது. அடுத்த மாதம் அப்பா ஐநூறு ரூபாயை நீட்டிய போது அவன்  அழுது விட்டான். அதை வாங்கிக் கொள்ள அவன் மனம் இடம் தரவில்லை.

"என்னடா ...?"

"எனக்காக எதுக்குப்பா?"  பேச்சு கூட வரவில்லை. அப்பா சிரித்தார்.
"அட அசடே என் பிள்ளைக்கு நா தராம யார் தருவா? ஒரு பிடிமானம் கிடைக்கற வரை உன்னை போஷிக்க வேண்டியது என் கடமைடா கண்ணா"

எப்பேர்ப்பட்ட தகப்பன். யாருக்கு கிடைப்பார்கள் இப்படி.?

"உனக்காகவானும் எனக்கொரு வேலை கிடைக்கணும். கைநிறைய சம்பாதிக்கணும். அத்தனையும்  உன்கிட்ட கொடுத்து நமஸ்காரம் பண்ணனும். "

"ம்ஹும் !  இதோ பாருடா  அனந்து. என் சந்தோஷத்துக்காக குழந்தைகள் பெத்துண்டேன். பெற்ற சந்தோஷத்துக்காக உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு படிக்க வெச்சேன்.  மற்றபடி நீங்க கை நிறைய சம்பாதிச்ச்சு என் மடி நிறைய கொட்டணும்னு எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்ல. பெத்தவாளைப் பார்த்துண்டே ஆகணும், அது உங்க கடமைன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த மாட்டேன்.  ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருந்தா போதும்.  என் காலத்துக்கப்பறம்
உங்களால் எனக்கு திவசம் போட முடியலன்னா கூட குற்ற உணர்வு வேண்டாம்.  பித்ரு சாபம் அது இதுன்னு எல்லாம் யாராவது பயமுறுத்தினாலும் பயப்பட வேண்டாம்.  வாழும்போது அன்பா இருக்கற தகப்பன் பித்ருவானாலும் அன்பாத்தான் இருப்பான். சபிக்க மாட்டான்."

"இப்போ எதுக்கு சாவைப் பத்தி?"

"ஏன் நாமெல்லாம் சாகாவரமா வாங்கிண்டு வந்திருக்கோம்?"

"அது வரும்போது வந்துட்டு போகட்டுமே"

அப்டி ஒரு வேளை வந்துட்டா அவா சொல்றா இவா சொல்றான்னு பயந்துண்டு சாஸ்திரம் சம்பிரதாயம்னு பணத்தை வாரி இறைக்க வேண்டாம்னுதான் சொல்றேன். தினமும் அன்போட என்னை ஒரு முறை நினைச்சுண்டாலே போதும். நித்ய  திவசம் போட்டாப் போலதான்."

"போருமேப்பா... இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு.?"

நெருப்புன்னா வாய் வெந்துடாதுடா"

சரி போதும் விடு. பெத்தவாளுக்கு திவசம் போட்டுத்தான் பிள்ளைகள் போண்டியாய்டப்  போறாளாக்கும்"

"மாட்டா.  ஆனா ஒரு அப்பனுக்குப் போட்டாப் போதுமா? பட்டினத்தார் படிச்சதில்ல நீ?


அப்பன் எத்தனை எத்தனையோ!
அன்னை எத்தனை எத்தனையோ!


ஓரோரு ஜென்மால ஓரோரு அப்பா. இதுவரை எத்தனை அப்பாவோ? எத்தனை அம்மாவோ? எல்லார்க்கும் போட்டுண்டு இருக்கோமான்ன?
குழந்தைகள் நம்  மூலம் பிறக்கிறதே தவிர நம்மால்  அல்ல. பிறகெதற்கு பயமுறுத்தல்களும் பேரங்களும்?   ஆனா அன்புக்கு மட்டும் எல்லையே கிடையாதுடா அனந்து, நாம் முயற்சி செய்தா நம்ம காலுக்கு கீழ இருக்கற புழு பூச்சிலேர்ந்து ஆண்ட ஆகாசம் வரை எல்லாத்தையும் நேசிக்கலாம். அந்த மாதிரி ஒரு அன்புதான் உங்க கிட்டேர்ந்து எனக்கு வேணுமே தவிர  அப்பாங்கற உறவுக்காக பயந்துண்டு செய்யப்படற கர்மாக்கள் அல்ல.  இதெல்லாம் உன்கிட்ட எப்பவானும் சொல்லணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன்.  மத்தபடி சாவுங்கறது பதற்றப்பட வேண்டிய விஷயமில்லை. அதுவும் சுவாரசியமான விஷயம்தான்.  மனுஷனுக்கு உண்மையான விடுதலை மரணம்தானே?  விடுதலைக்கு யாரானம் பயப்படுவாளோ?"

அப்பா சிரித்தார். அவன் யோசிக்க ஆரம்பித்தான் . யோசிக்க யோசிக்கத்தான் அவர் எதை விரும்புகிறார் என்பது புரிந்தது. எல்லையற்ற அன்பு அவனுக்குள் விரிந்தது. இந்த ஜென்மா அவர் மூலம் கிடைத்ததற்காக அவன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.

வேலைக்கான உத்தரவைக் கண்டால் அவர் மகிழ்ந்து போவார். அவன் வேகமாக நடந்தான்.  கடையில் கொஞ்சம் இனிப்பு வாங்கிக் கொண்டான்.  வீட்டில் எல்லோரும் நிச்சயம்  முகம் மலர்வார்கள்.  ஆனால் அப்பாவின் மலர்ச்சி எதையும் எதிர்பாராத மலர்ச்சியாக இருக்கும். மற்றவர்களுடையது உள் நோக்கம் கொண்டதாயிருக்கும். அது தேவ்வையில்லை அவனுக்கு.   அப்பா மட்டும்  போதும். 

மன்னி வாசல் பிறையில் விளக்கு வைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் அண்ணாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள்அவன் தலையைக் கண்டதும் பேச்சை நிறுத்தினார்கள்.

"அப்பா இன்னும் வரல?"

"எதுக்கு அவரைத் தேடற?"

"காரியமாத்தான்"

"வெளில போயிருக்கார். என்ன விஷயம்நா உன் அம்மாதான். எங்கிட்ட சொல்லலாமோல்யோ?"

"எனக்கு வேலை கிடைச்சாச்சு. பெரிய கம்பெனி.  சம்பளம் மாசம் முப்பத்தஞ்சாயிரம்." 

"என்ன?"  அம்மாவின் முகத்தில் சூரியன் குடியேறினான்.

"நா சொல்லலம்மா, நிச்சயம் அவனுக்கு நல்ல வேலை கிடைச்சுடும்னு!"

அண்ணன் சொன்ன போது பளாரென்று அவனை அறைய வேண்டும் போலிருந்தது. இருப்பினும் அப்பாவின் குணத்தை தனக்குள் ஏற்றிக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.  அம்மா சதைகள் ஆட உள்ளே போய் சுடச் சுட அவனுக்கு காப்பியும் டிபனும் கொண்டு வந்தாள்." நல்லா சாப்டுடா கண்ணா"

மன்னியின் பார்வையில் புது மரியாதை தெரிந்தது.  அண்ணா ப்ரிஜ்ஜிளிருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து வைத்தான்.

"சித்தப்பா சாப்ட்டுட்டு வரேளா? கணக்கு சொல்லித் தரணும். ரெண்டு நோட்புக் அட்டையும் போடணும்." அண்ணா பிள்ளை சொல்ல அம்மா அவசரமாய் குறுக்கிட்டாள்.

"இனிமே சித்தப்பாவை சிரமப்படுத்தக் கூடாது தெரிஞ்சுதா? எல்லாத்தையும் இனி தாத்தாட்ட கேளு.  அவர்தான் ரிடயராயாச்சே!. சும்மாதானே இருக்கப் போறார்"

அனந்தராமன் அதிர்ந்தான். அப்பா அன்றுதான் ஓய்வு பெறுகிறார் என்பதே  அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

சாப்பிடப் பிடிக்காமல் எழுந்து வாசலுக்கு வந்தான்.  அப்பா பை நிறைய சாமான்களோடு தெரு முனையில் வந்து கொண்டிருந்தார்.  மளிகை சாமான். இத்தனை நாளாக அவன்தான் வாங்கி வருவது வழக்கம்.  அம்மாவும் அண்ணாவும் உதைத்து விளையாட புதுசாய் ஒரு கால்பந்து!


அவன் மனசு வலித்தது.  வாழ்க்கையை பணத்தால் வாழ்பவர்களுக்கு சும்மா இருப்பவர்கள் எல்லோரும் கால்பந்துதான்.  அப்பாவுக்குள் இருப்பது எப்பேர்ப்பட்ட ஆத்மா என்பதை எப்போதுதான் அறிவார்கள் அவர்கள்? அறிவார்களா அல்லது கடைசி வரை அறியாமையிலேயே உழல்வார்களா?

கண்ணீர்ப் படலத்தில் அப்பா மங்கலாகத் தெரிந்தார்.