Tuesday, December 30, 2014

நான் பாடும் ராகம்

ஒருவருக்கு ரெண்டு பெண் குழந்தைகளோ அல்லது ரெண்டு ஆண் குழந்தைகளோ பிறந்து, அந்த  ரெண்டு  பேருமே  ஏதோ ஒரு துறையில்  முக்கியமாய் சங்கீதத் துறையில்  பிரபலங்களாக ஆவதென்பது  எத்தனை பெரிய விஷயம்.  அவர்களைப் பெற்றவர்களுக்கு எத்தனை சந்தோஷமாயிருக்கும்.  காலையில் ஜெயாவில் ரஞ்சினி காயத்ரி கேட்ட  போது  இப்படி தோன்றியது.   கலைகளுக்கான எனது  பட்டியலில் எப்போதும் முதலிடம் சங்கீதத்துக்குதான்.   பிறகுதான் ஓவியம், டான்ஸ்  மற்றதெல்லாம்.  சங்கீதம் ஒன்றுதான் பாடுவரையும், கேட்பவரையும் ஒரு சேர உடனடியாய் மகிழ்விக்கும்.  ஒலி வடிவிலும் ரசிக்கலாம்.  .

என் ஆறு வயதில் என்னையும் என் அக்காவையும் அம்மா பாட்டு கிளாசுக்கு அனுப்பினாள்.   என் நேரம் காலம் எல்லாம்  நன்றாயிருந்திருந்தால் மைலாப்பூர் சகோதரிகளாய் சங்கீதத்தை ஒரு வழி பண்ணி இருப்போம். ஆனால் முதல் நாளே டீச்சர் என் அம்மாவிடம் சொல்லி விட்டாள்  "உச்சிக்கு பாட்டு வராது "   என்று. ( என் அக்கா ஆசையாய் உஷி என்று கூப்பிடும்  என் பெயர்தான்  டீச்சரின் வாயில் உச்சியாகி விட்டது)   பாட்டு டீச்சர் யார் தெரியுமோ?   பல பிரபலங்களுக்கு நாட்டியம்  கற்றுக்கொடுத்த இந்திரா  ராஜனின் அம்மாதான்.  

பிறகென்ன  என் அக்கா மட்டும் தொடர,  நான் அந்த சோகத்தில்  கதவிடுக்கில் மாட்டிய எலி  மாதிரி  குரலை மாற்றிக் கொண்டு  கீச்சுக் குரலில் பாடி பழக ஆரம்பித்தேன். என்னமா பாடறேன் !!   இந்த டீச்சருக்கு கொஞ்சம் கூட ஞானமேல்லயே... எனக்குப் போய் பாட்டு வராதுன்னுட்டாளே .... என்று  பொருமுவேன்.   உஷிக்குட்டி கொஞ்ச நாளில் எலிக்குட்டியானேன்.  அந்த கட்டைய எடுடி  எங்கயோ  எலி மாட்டிண்டுடுத்து என்பாள் என் அத்தை பெண்.

அப்போதெல்லாம் எங்கள் வீட்டு  குளியலறைக்கு கதவு கிடையாது.  கதவு வைக்க யாரும் வீட்டுக் காரரிடம் கேட்டதில்லை.  பாத்ரூம் என்பது வீட்டுக்கு பின் புறம் தனியாய் இருக்கும்.  நான்  குட்டிப் பெண்தான்  என்றாலும் முற்றத்தில் குளிக்க மாட்டேன்  பாத்ரூமில்தான் குளிப்பேன் என்று அடம் பிடிப்பேன்.  எங்கள் வீட்டில் பெரும்பாலும் பெண்கள்தான். என் அப்பா, நாராயண்ணா, என் குட்டித் தம்பி இவர்கள்தான் ஆண்கள்.  உள்ளே  யாரும் இல்லை என்று தெரிந்தால்தான் ஆண்கள் அந்தப் பக்கம்  போவார்கள். குளிக்கும் போது கீச்சுக் குரலில் பாடிக்கொண்டே குளிப்பதுதான் எனக்கு வழக்கம்.   நான் உள்ளே இருக்கிறேன் என்று தெரிவிப்பதும் கூட. அந்த சுவர்களுக்கு வாயிருந்தால் கதறியிருக்கும் பாடாதே என்று.    யார் கேட்டால் என்ன  கேட்கா விட்டால்  என்ன  என் பாட்டுக்கு நான் ரசிகை.   ரொம்பக் காலம்  இப்படி பாடிக் கொண்டிருந்தேன்.


எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு ஒரு பெரிய ஸ்டோர்.  30  ஒண்டுக் குடித்தனங்கள் உண்டு. அதில்  என் சினேகிதி இந்துவின் வீட்டின் சமையலறை எங்கள் பாத்ரூம் சுவரின் அடுத்த பக்கம் இருந்தது. அதன் வென்டிலேஷன் ஜன்னல்  எங்கள் பாத்ரூம் சுவரில்  ஏழடி உயரத்திற்கு  மேலே இருக்கும்.     ஒரு நாள்  இந்துவின் வீட்டுக்குப் போன  போது  அவள் அம்மா  "உஷா நீ நன்னா பாடறயே"   என்ற போதுதான்   ஆஹா எனக்கு  இன்னொரு ரசிகையும் இருகிறாள்  எனத் தெரிந்தது எனக்கு.   கொஞ்சம் கூச்சம், நிறைய சந்தோஷம் ...  "உங்க வெங்காய சாம்பாரும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  வாசனையும் கூட சூப்பர் மாமி   காலம்பர குளிக்கறச்சே வாசனை வந்துது"   இது என் பதில் பாராட்டு.  மாமிக்கும் சந்தோஷம் .  நான் வெளியில் வந்த  போது இந்துவின் அண்ணா என் பின்னால் ஓடி வந்தான்.

 "ஏய்  எங்காத்து வெங்காய சாம்பார், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் எல்லாத்தையும் வேணா உனக்கே கொடுத்துடறோம்  பதிலுக்கு  நீ ஒரு உபகாரம் செய்யணும் "

"என்னடா?"

"இனிமே பாடாதே.....தாங்கல"

நான் என்ன செய்தேன் என்கிறீர்கள்?  அடுத்த நாள் வெள்ளி விழா வாணிஸ்ரீ மாதிரி  (அந்தப் படம்  அப்போதுதான் வெளியாகியிருந்தது)  " நா.........ன்..... சத்தம் போட்டுதான் பாடுவேன்"   என்று  அந்தப் பாட்டையே   சவுண்டை அதிகரித்துப் பாடினேன்.   என்னைப பார்க்கும் போதெல்லாம்   பல்லைக் கடித்தபடி முறைப்பான் அவன்..   "உனக்குப் பிடிக்காட்டி  வீ ட்டை மாத்திண்டு போ " என்பேன் கறாராய்.

அதெல்லாம் பொற்காலங்கள்.  என் சங்கீதக் காதல் இப்போது கேட்பதில் மட்டும்  தொடர்கிறது.  நான் எப்படிப் பாடினாலும் கேட்பான் என்பதால் கிருஷ்ணனுக்கு முன்னால்   ஞானப்பானயை  மட்டும்  (பி.லீலாவோடு சேர்ந்து)  முணுமுணுப்பேன்.

அடுத்த ஜன்மத்தில்   நீ பாடகியாய்ப்  பிறப்பாய் என்று  எந்த தெய்வமாவது  வரம் தந்தால்  டபுள் ஓகே சொல்லி   பிறக்க சம்மதிப்பேன்.
ஒரே ஒரு உத்தரவாதம் இப்போதே  உங்களுக்கு  தரத்தயார்.   சஞ்சய் சுப்ரமணியம் மாதிரி  ராகங்களை மட்டும் தக தகவென்று அலங்கரிப்பேன்.


Friday, December 26, 2014

சதயம் - திரைப்படம்

ரொம்ப நாள் கழித்து கிரண் டிவியில் "சதயம்"  பார்த்தேன்.  முதல் முதலில் இந்தப் படத்தை வித்யாவும், நானும் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பட,ம் முடிந்த கொஞ்ச நேரம் வீடு அமைதியாயிருந்தது.  இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. எதுவும் பேசிக் கொள்ளக் கூட தோன்றவில்லை.  கடைசி காட்சியில் ஒரு சொட்டு கண்ணீர் வெளிப்பட்டதே தவிர பிழியப் பிழிய அழவில்லை.  அப்படி ஒரு இறுக்கம் படம் முழுவதும்.

 மணற்  சிற்பம்  கலைக்கப் படும் போதே மனசுக்குள் அது எதற்கான ஆரம்பம் என்று ஒரு துணுக்குறல் ஏற்படும். மணற்  சிற்பம்தான் என்றாலும்,  அது கலையும்  போது நமக்கும் வலிக்கும்,

தூக்கு தண்டனை கைதி மோகன்லால். கருணை மனு அனுப்பி விட்டு வாழ்வா சாவா என்று காத்திருக்கிறார்.  இதனிடையே கதை நகரும்.  அவருக்குள்  ஒரு மாற்றம் நிகழும்.  தான் செய்தது சரியா என்ற உணர்வு ஏற்படும்? மிக நுட்பமான நடிப்பு அவருடையது.   அந்த முகத்தில் பரவும் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு.
இவரைத் தவிர வேறு யாராயிருந்தாலும் இப்படி ஒரு நடிப்பைத் தந்திருக்க முடியாது.

இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரைக் கொல்கிறான் சத்யன் (மோகன்லால்)  எதற்கு என அலசுவதுதான் சதயம்.  பொதுவாக ஒவ்வொரு கொலைக்கும் ஏதோ ஒரு மோட்டிவேஷன் இருக்கும். இதில் அந்த மோட்டிவேஷன என்னும் புதிர் மெல்ல மெல்ல அவிழும் போது  நமக்கு மனசு கனத்துப் போகும்.  இப்படி மனம் கனத்து போவதால்தான் சிறையில் அத்தனை பேரும் அவனிடம் கருணை காட்டுகிறார்கள். அவனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

சமூகத்தை தண்டிக்க முடியாத ஒரு சாதாரணன் எடுக்கும் முடிவுதான் கொலை. பயமுறுத்தும் இந்த உலகிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றி  இருக்கிறேன் நீங்கள் எந்த பயமுமின்றி  நிம்மதியாக இனி தூங்குங்கள் என்று கொன்று படுக்க வைத்திருக்கும் குழந்தைகளிடம் பேசும்  போது வெளிப்படும் மனப்பிறழ்ச்சி..... அற்புத நடிப்பு  அது ! .  ஆயிரம் ஆஸ்கார் அளிக்கலாம்.

எத்தனை நியாயம் சொல்லிக் கொண்டாலும் அடுத்தவர் வாழ்வையோ, மரணத்தையோ தீர்மானிக்க நாம் யார்  என்ற கேள்வி எழும்.  செய்த தவறுக்காக வருந்த வைக்கும்.  விபச்சாரியாய்  வாழ்ந்த தன் அம்மாவின் வாழ்வை  இறந்த காலத்திற்கு சென்று அழித்து மீண்டும் மாற்றி வடிவமைக்கும் சக்தி அவனுக்கில்லை.  ஆனால் கண்ணெதிரே சமூகம் சிதைக்கப் பார்த்த இவர்களது வாழ்வின் அவலத்தையாவது மாற்றி எழுத நினைத்தால்.அதிலும் தோல்விதான்.

பயமுறுத்துகிறவர்களைக் கொல்ல முடியாது. அது வெட்ட வெட்ட துளிர்க்கும் தலைகளைக் கொண்ட ராட்சஸனைப் போன்றது. வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். அதனால் நான்,  பயப்படும் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்வான் குழந்தைகளிடம்.  காப்பாற்றுதல் என்பது இங்கே கொல்லுதல். தான் செய்தது தன்  வரையில் நியாயம் என்ற உணர்வோடுதான் அவன் எவ்வித குற்ற உணர்வுமின்றி அமைதியாய் இருக்கிறான்.  

என் மகனை நீ கொன்று விட்டாய். உன்னைத்  தூக்கில் போட்ட பிறகு உன் மரணத்தை நான்தான் உறுதி செய்வேன் என்னும் திலகன் கூட பின்னர் மனம் மாறி அவன் மீது கருணை பொழிய,  சத்யன்  அத்தனை பேரும்  தன்னிடம் காட்டும் கருணையில் மீண்டும் வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் எங்கிருந்து கருணை கிடைக்க வேண்டுமோ அங்கே அது மறுக்கப் படுகிறது,   அவனது மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது.   அதற்குப் பிறகான காட்சிகள்  அந்த காட்சிகளின் ஒளி, ஒலியமைப்பு  .... அத்தனை நுணுக்கமான இயக்கம்.  Hats off to  Sibimalayil.. எம்.டி.வாசுதேவன் நாயரின் ஸ்கிரிப்ட் வேறு.  சொல்ல வேண்டுமா?

நள்ளிரவில் குளியல்,  விவரங்கள் சரிபார்த்தல்,  கைகளைப் பின்னால் கட்டி விலங்கிடல். தலையில் கருப்பு உறை  அணிவித்தல், தூக்கு மேடைக்கு அழைத்து வருதல்.....

எல்லோர் முகமும் இறுகிக் கிடக்கும்.   அவனோடு அத்தனை நாட்கள் பழகிய சிறை நண்பர்கள் மெல்லிய இருட்டில் மௌனமாய் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.   போலீஸ் அதிகாரி முரளியும், மருத்துவர் திலகனும், துக்கத்தை விழுங்கிக் கொண்டு கடமையைச்செய்ய  கடிகாரத்தைப் பார்த்தபடி காத்திருப்பார்கள்.

நம் மனம் பதை பதைக்கும். கடவுளே ஏதாவது அதிசயம் நடந்து இது நின்று விடாதா  நம் தமிழ்ப்படங்களைப் போல ?  என்று தவிக்கும்.

"ரெடி சத்யா?" முரளி குரல் உடைய  கேட்பார்.

"ரெடி சார்"  கறுப்புத்துணி மூடிய முகத்தின் உள்ளிருந்து பதில் வரும்.

அடுத்த வினாடி அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு  லீவர் இழுக்கப்படும் ஓசை கர்ண கொடூரமாக கேட்கும்.

பிறகு முழு திரையிலும் அந்த கயிறு மட்டுமே சில நொடிகள்!
 

இந்தப் படம் சொல்லும் விஷயம்தான் என்ன?  மனச் சிக்கல்தான்.  வாழ்வில் தோற்றுக் கொண்டே , அவமானப் பட்டுக்கொண்டே  இருக்கும் ஒரு சாதாரணன்,   சமூகத்தின் அவலங்களை முறியடிக்க முடியாத நிலையில்,  வல்லூறுகளிடமிருந்து இரண்டு கோழிக்குஞ்சுகளையாவது காப்போம்  என்று மனம் பிறழி முடிவெடுப்பது.   வெட்ட வெட்ட துளிர்ப்பது பயமுறுத்தும் ராட்சஸன் மட்டும் இல்லை.  பயப்படுகிறவர்களும் துளிர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.  எத்தனை பேரைக்  குத்திக் காப்பாற்ற முடியும்?. இதை யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.  தற்கொலை என்பதும், கொலை என்பதும் சில வினாடி உணர்ச்சிவசப்படலில் நிகழ்வதுதான்.

எத்தனை நியாயம் சொன்னாலும்  தவறு தவறுதான் என்று சட்டம் தண்டிக்கிறது. தூக்கு தண்டனை சரியா தவறா என்று வாதிடுவது இந்த படத்தின் நோக்கமல்ல.  ஆனால் அந்த பதை பதைப்பை நமக்கு ஏற்படுத்துகிறது.  இதைப் பார்த்தால் ஒரு வேளை  அடுத்தவர் வாழ்வை தீர்மானிக்கும் வேலையை இனி யாரும் கையில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள், குற்றங்கள் குறைந்து விடும்  என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம்.

இந்தப்படம் இப்படி என்றால் இதே மாதிரி ஒரு சாயலுள்ள படம்தான்  "கதாவிசேஷம்."  திலீப் நடித்தது.  இங்கே கொலை. அங்கே தற்கொலை.  இங்கே கொலைக்கான காரணம் தேடி கதை நகரும். அங்கே தற்கொலைக்கான காரணம்  தேடி பின்னோக்கி நகரும் காட்சிகள். அங்கேயும் சமூக அவலங்கள்தான் வில்லன்.   இறுதியில், அவன் மரணத்திற்கான காரணத்தை  அறியும் போது நம் மனசு அதிரும்.

"வாழ்வதை அவமானமாக நினைக்கிறேன்   ( for the shame of being alive)

ஆக சமூக அவலங்கள் எதையும் தடுத்து நிறுத்த இயலாத சாதாரண மனிதர்களின் கதைதான் இந்த இரண்டு படங்களும்.  ஒன்று  கொலை, மற்றது தற்கொலை. நாம் எல்லோரும் அந்நியன்கள்  அல்லவே.  சமூகம் என்பது எது?.  மனிதர்களைக் கொண்டதுதானே?  சமூகம் எதற்கும் வெட்கப்படாதா?

இன்று மீண்டும் என்னை ஒரு நீண்ட அமைதியில் தள்ளி விட்டது சதயம்.

Thursday, December 25, 2014

என்ன செய்தேன் இந்த ஆண்டில்?

மேலும் ஒரு ஆண்டு முடியப்போகிறது.   என்ன செய்தேன் சென்ற ஆண்டில்?
பெரிதாய் ஒன்றுமில்லை என்றாலும் ஒன்றுமேயில்லை என்றும் சொல்லி விட முடியாது.   இரண்டு ஓவியங்கள் முடித்தேன்.     நான்கைந்து சிறுகதைகளும்,   ஒரு குறுந்தொடரும்,  ஒன்றிரண்டு கட்டுரைகளும் எழுதனேன்.  FB யில் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டேன்.  நிறைய நட்புகளை சம்பாதித்துக் கொண்டேன்.    தவறான  பிறந்த தேதியால்   இரண்டு வருடம் முன்னாலேயே  நல்லபடியாய்  பணி ஓய்வு பெற்றேன்.

கவிதாவின் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தினேன்.  குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவழித்தேன். அவர்களிடமிருந்து பல விஷயங்கள் கற்றேன்.    நிறைய சங்கீதம் கேட்டேன்.   தங்கையின் மரணத்தில் நிலை குலைந்தேன்.   இரண்டு முறை  குருவாயூர்  போய் வந்தேன்.

கொஞ்சம்  புத்தகங்கள் வாசித்தேன்.    திரை (கன்னடம்) (S.L. பைரப்பா) தமிழில் ஜெயா வெங்கட்ராமன்,     அரசூர் வம்சம்  - இரா.முருகன்.,     6174 -  சுதாகர் கஸ்தூரி,  எழுத்தும் வாழ்க்கையும் - அகிலன்.     இந்தியப் பிரிவினை -- மருதன், திருமந்திர விளக்கம் - ஜி.வரதராஜன்     காங்கிரஸ் சரித்திரம்  - அல்லயன்ஸ்  வெளியீடு.     விஸ்வரூபம்  - படித்துக் கொண்டிருக்கிறேன்    

இது போதுமா ?  எழுதுவதற்கும்,  வாசிப்பதற்கும், வரைவதற்கும்  ஏகப்பட்டது கொட்டிக் கிடக்கிறது.   எவ்வளவு படித்தாலும் கையளவுதான்,  எவ்வளவு எழுதினாலும் அதுவும் கையளவுதான்.   நான் வாசித்ததும்  எழுதியதும்,  ஒரே ஒரு ஒற்றை மணற் துகள் அளவுதான்.   சக்தி கொடு தெய்வமே.  இன்னும் ஒரே ஒரு துகள் அளவாவது வாசிக்கவும்,  அறியவும்,  எழுதவும்.

கீழே  இந்த ஆண்டில்  நான் வரைந்த ஓவியங்கள்


Wednesday, December 24, 2014

இயக்குனர் சிகரம்

திரு பாலசந்தர்  என் அத்திம்பேருக்கு தாயாதி உறவு.  புஷ்பா கந்தசாமியின் கல்யாணத்திற்கு  என் அக்கா வீட்டுக்கு அழைப்பு  வந்திருந்தது.  "வரயாடி நிறைய நடிகர் நடிகைகளைப் பார்க்கலாம்" என்றாள்  என் அக்கா.   வரேன். ஆனா நடிகர் நடிகைகளுக்காக அல்ல.  பாலச்சந்தரைப் பார்க்கறதுக்காக வரேன்  என்றேன்.  அதே மாதிரி ஏ.வி,.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்திற்கு எல்லோருடனும் சென்றிருந்தேன்.   சரிதாவும்,  சீமாவும் இன்னும் சிலரும்தான் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.  என்னைக்கடந்து எலுமிச்சம்பழ நிறத்தில் ஒரு ஆப்பிள் பழம்  நடந்து சென்றது. ஜெயலலிதா.   யார் மீதும் என் கவனம் செல்லவில்லை.  பாலச்சந்தரைத் தேடி என் கண்கள் அலைந்தன. ஒரு வழியாய்  யாருடனோ பேசியபடி மேடை நோக்கி நடந்து வந்த அவரைப் பார்த்தே விட்டேன்.  போதுண்டா சாமி  என்பது போல் பரவசமாயிற்று.

ஏய் வா சாப்பிடலாம் என் அக்கா என்னை இழுத்துச் சென்றாள்.   அங்கே கூட்டம் அலை மோதியது.   எனக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி.  பிரபலங்கள் எல்லாம் சாப்பாட்டு ஹாலுக்குள் நுழைய படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு பாலச்சந்தரைப் பார்த்ததுலயே வயறு  நிறைஞ்சாச்சு.  நா வரல நீங்க வேணா சாப்ட்டுட்டு வாங்கோ. நா முன்னாடி போய் உக்காந்துண்டு கொஞ்ச நேரம் கூட அவரைப் பார்த்துண்டிருக்கேன். என்றேன்.  கடைசியில் கூட்டம் பார்த்து பயந்து யாருமே சாப்பிடவில்லை. கிளம்பி விட்டோம்.

இதற்குப் பிறகு மீண்டும் நான் அவரைப் பார்த்தது தமிழரசி விருது வழங்கும் விழாவில்.  என் சிறுகதை ஒன்று இரண்டாம் பரிசு பெற்றிருந்தது. திரு நடராசன் அவர்கள்தான் பரிசளித்தார்.  புகைப்படத்தில்  கை தட்டுவது யாரெனத் தெரிகிறதா?  பாலசந்தர் அவர்கள்தான்.   அப்போது எனக்கேற்பட்ட உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என சொல்லவும் வேண்டுமோ?

பரிசளிப்பு முடிந்ததும் நான் முதலில் பாலசந்தரிடம் ஓடினேன்.   என் கையிலிருந்த இரண்டு புகைப்படங்களை அவரிடம் காட்டினேன்.

"எங்கப்பா அப்டியே அச்சு அசலா உங்களாட்டமே இருப்பார் சார்.  நீங்க இதுல உங்க கையெழுத்து போட்டு தரணும்"  என்றேன்.

அவர் புகைப்படங்களைப் பார்த்து வியந்தார். "நீ என்னை எப்டி  கூப்டப் போற  சித்தப்பான்னா,  பெரியப்பானா?"  என்று சிரித்தபடி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.  "எங்கப்பா உங்களை விட நன்லஞ்சு வயசு நிச்சயம் பெரியவராத்தான் இருக்கணும். அதனால சித்தப்பாதான்"  என்றேன்  நானும் சிரித்தபடி.

அதற்குப் பிறகு நான் அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிகப்பெரிய கனவு இருக்கும்.  பாலச்சந்தர் இயக்கத்தில் தங்களது ஒரு கதையாவது  திரைப்படமாகாதா என்ற ஏக்கம் இருக்கும். எனக்குமிருந்தது.     அதெல்லாம் நடக்கிற காரியமா?  ஆயினும் நான் என் கற்பனையில் நடத்திக் கொள்வேன்.   என் கதை அவர் இயக்கத்தில் படமாவது போல் கற்பனையில் நினைத்து மகிழ்வேன்.  அவர் இல்லா  விட்டாலும் கற்பனை தொடர்ந்து கொண்டிருக்கும். .

கீழே என் அப்பாவின் புகைப்படங்கள். அதன் பின் புறம் பாலசந்தர் சாரின் கையொப்பம்.   நான் விருது வாங்கிய  தமிழரசி விருது புகைப்படம்.  என் பார்வை கூட பாலசந்தர் மீதுதான் இருக்கும் பாருங்கள்.

உங்கள் ஆன்மா திரையுலகில் நிரந்தரமாய் உறைந்திருக்கும் KB  சார்.








Tuesday, December 23, 2014

புல்லாங்குழல் பட்ட பாடு

"நிவேத்யம்"  என்ற மலையாளப் படம்  வந்திருந்த  சமயம் அது.   "கோலக்குழல் விளி கேட்டோ?" பாட்டுதான் எங்கும்.    ஒன்றிரண்டு வருஷம் அதுதான் என்னுடைய காலர் டியூன் ஆக இருந்தது.   கல்பாத்தி தேருக்காக  நானும் கவிதாவும்  பாலக்காடு சென்றிருந்த சமயம் அக்ரஹாரம் முழுவதும்  புல்லாங்குழல் விற்றுக் கொண்டிருந்த பையன்கள் எல்லாம் கோலக்குழல் பாட்டை வாசித்துதான் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.   அவர்கள் வாசித்த  கோலக்குழல்தான்  காற்று  முழுவதும்  நிறைந்திருந்தது.  

"ஏம்ப்பா எனக்கு இதுல கோலக்குழல் வாசிக்க வருமா?"

அவன் நிச்சயம் வரும் என்றான்.  வராது என்று எனக்குத் தெரியாதாக்கும்..

"அம்மா வாங்கும்மா நா இதே மாதிரி வாசிச்சுக் காட்றேன் உனக்கு"  இது கவிதாவின்  கெஞ்சல். 

பேரக் குழந்தைகளுக்கும் இருக்கட்டும் என்று ஒன்றுக்கு இரண்டாய் வாங்கினேன்.   அதை எடுத்துக் கொண்டு  வீட்டுக்கு வந்து ஊஞ்சலில் சௌகர்யமாய் உட்கார்ந்து  வாசித்தால் வெறும் காற்றுதான் வந்தது. கொஞ்சம் force  கொடுத்தால் வெறும் பிகில் சப்தம்தான்  கேட்டது.  மனசுக்குள் இருந்த   கோலக்குழல்,   இந்த குழலில் வருவேனா என்று அடம் பிடித்தது.     "அது........   இந்த ஊஞ்சல் ஆடிண்டே  இருக்கா....  அதான் வாசிப்பு தப்பறது "

"போதும் போதும்  ஊஞ்சலை குறை சொல்றயாக்கும் குடு அதை"  கவிதா பிடுங்கிக் கொண்டாள்.

நா வாசிக்கிறேன்   நா வாசிக்கிறேன் என்று  வாசலில் இருந்தவர்கள் எல்லாம் கூட தேரை அம்போ என்று விட்டு விட்டு வந்து  ஆளாளுக்கு குழலூத ஆரம்பிக்க,   வராதவர்களிடம் நாங்களே சென்று  கொடுத்து வாசிக்க சொன்னோம்.  எல்லோரும் ப்பிப்பீ என்று  பஸ்ஸில் கண்டக்டர்  விசிலடிப்பது போல் அடித்தார்கள்.  .

கவிதாவும் என் நாத்தனார் Mythili Ganesh ம்  குழலை வாயில் வைத்து  தலையைத் தலையை ஆட்டி  ஏதேதோ ஒலியெழுப்பி குழலால் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இவள் பாட்டுக்கு,  அவள்  எசப்பாட்டு வாசிக்கறாளாம் .  

எம். ஜெயச்சந்திரன்  மட்டும் பார்த்திருந்தால் இனி சினிமா பாட்டில் குழல் சப்தமே வைக்க மாட்டேன் என்று ஓடிப்போயிருப்பார்

" பேசாம அந்த புல்லாங்குழல் விக்கறவன் கிட்ட  போய்  அசிஸ்டெண்ட்டா  சேர்ந்தா ஒரு வேளை  வாசிக்க வந்துடுமோ? "  இது என் நப்பாசை.   ஆக  மொத்தம் அந்த புல்லாங்குழல்கள்  அன்று  எங்களிடம் படாத பாடு பட்டன.  வாயிருந்தும்  அவை  அழவில்லை.   அழுதா  அந்த அழுகை சப்தம்  கூட குழலோசையாதானே வரும்.!  உடனே  நாங்க யாராவது ஹை   நா வாசிச்சுட்டேன் என்று பீற்றிக்கொண்டால்?   பாவம் அது கம்மென்று இருந்தது.

இதெல்லாம்  பொய்யில்லைங்க.   தேர்  பற்றி   நாங்க ஒரு வீடியோ பண்ணி இருக்கோம்னு சொன்னேனே. அதுல இந்த கொட்டமெல்லாம் கூட இருக்கு.

இப்போ எதுக்கு  சும்மா கிடந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்கறேன்னு  யோசிக்கறது  புரியறது.    பாலக்காடுலேர்ந்து திரும்பி சென்னைக்கு வந்த ரெண்டாம் நாள்  டிவில  சானல் மாத்தும் போது எதேச்சையா பொதிகைல என்.எஸ். கிருஷ்ணன் புல்லாங்குழலும் கையுமா நிக்கறார். நாங்களும்  ஆஹா அவர் குழல் வாசிப்பதைப் பார்ப்போமேன்னு பொதிகைலயே  நின்னுட்டோம்.   பி...........ப்பீ       பி.........பீ  

"அம்மா இத விட நா சூப்பரா வாசிச்சேனா இல்லையா மனசைத் தொட்டு சொல்லு?

"கண்டிப்பாடி செல்லம்  உன் வாசிப்பு பெட்டர்தான் போ."

என்.எஸ்.கிருஷ்ணன் வாசித்த நாராசம் கேட்டு  டி.ஏ.மதுரம் கோபமாக வந்து குழலைப் பிடுங்கி அடுப்பில் போடுவார்.  இவர் சோகமாக வெளியில் செல்வார்.

மறுநாள்  மற்றொரு புல்லாங்குழலோடு வந்து வாசிக்க பல்லை நற  நறவென்று கடித்தபடி டி .ஏ.மதுரம் வர,  அதுவும் அடுப்பில் போய்  விழும். இப்படி ஒவ்வொரு குழலாக  அடுப்பில் விழுந்து கரியாக இவர் அடுத்து கொண்டு வரும்  புல்லாங்குழல்  தூக்கவே முடியாத அளவுக்கு மெகா  சைஸில்  இருக்கும்.  இத எப்பிடி அடுப்பில வைப்ப என்பது போல் பார்ப்பார்.  மதுரம் அதையும் உடைத்து அடுப்பில் எறிவார்.  நீ வேணா பாரு நா போய்  புல்லாங்குழல் வாசிக்க கத்துக் கிட்டு வந்து உன் முன்னால வாசிச்சு காட்டல.........என்று சவால் விட்டு செல்வார்.

கிருஷ்ணனை நினைத்து கடும் தவம் இருப்பார்.  பாவம் என்று கிருஷ்ணனும் காட்சி தர இவர்   குழல் வாசிக்கும்  வரம் அருளக் கேட்பார்.   கிருஷ்ணனும்  இதோ தந்தேன் என்பார். பிறகு குழலோடு வீட்டுக்கு  வந்து  வாசிக்க, அந்த வாசிப்பில் மதுரம் மயங்கிப் போவார்.  அதே பெருமையோடு இவர் வெளியில் வந்து வாசிப்பார்.   கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக குழலை வாயிலிருந்து எடுப்பார்.    ஆனால் வாசிப்பு சத்தம்  அவர் வாசிக்காமலே தொடர்ந்து அதிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கும்.  அந்த சப்தத்தை நிறுத்தமுடியாமல் தவிப்பார். ஒரு கட்டத்தில் என்ன கொடுமைடா இது என்பது போல் கிருஷ்ணனை  அழைப்பார்.   நிறுத்து ..நிறுத்து.. இதை..நிறுத்து  ..என்று அலறுவார்.  இனி குழலைத் தொடுவ? என்பது போல் கண்ணன் சிரிப்பான்.  

இந்த நகைச்சுவை கலாட்டாவைப் பார்த்து விட்டு  பாலக்காட்டில் நாங்கள் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு அடித்த  கொட்டத்தையும் நினைத்துக் கொண்டு நாங்கள்  இருவரும் வயிறு வலிக்க சிரித்தோம் அன்று.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "பாரிஜாதம்" என்ற திரைப்படத்தில்தான் இந்த காட்சி. இது போல் நகைச்சுவை காட்சிகள் எல்லாம்  இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  யாரையாவது அடிப்பதும் உதைப்பதும், சுத்தியலைத் தலை மீது விழ வைப்பதும்,  சுடும் தோசைக்கல்லில் உடகாரவைத்து  அவரை அலறிக்கொண்டு ஓட வைப்பதும்தான்  நகைச்சுவை என்று ஆகி விட்டது.

இந்த புல்லாங்குழல் நகைச் சுவை காட்சிகளை யூ டியூபில் தேடித் தேடித் பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை.  யாருக்காவது இது பற்றி தெரியுமா? இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

கீழே கோலக்குழல் பாடலின் இணைப்பு.

https://www.youtube.com/watch?v=XqEwWwgr6rU

  

Monday, December 22, 2014

நம்பிக்கையே அமிர்தம்.

ஒவ்வொரு டிசம்பர் சீசன் வரும்போதும் எனக்கு என் சின்னக்காவுடைய   மாப்பிள்ளையின் நினைவு வரும்.  அவர் ஒரு கடம் மற்றும் மிருதங்க வித்வான்.  இந்த வாத்தியங்களை வாசிப்பவருக்கு விரல்கள் எவ்வளவு முக்கியம் என்று சொல்லத் தேவையில்லை.  சும்மார் பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பு என் அக்கா பெண்,   தன பிறந்த குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார இவர் வாகனம் ஒட்டி இருக்கிறார்.  லஸ்  சர்ச் சாலையில் எதிரில் வந்த டெம்போ டிராவலர் இவர் மீது  லேசாய் மோதிய வேகத்தில்  வண்டியின் handle bar ஐ பிடித்திருந்த இவரது இரு கைகளின் எட்டு விரல்களிலும்  அவை மடங்கும் இடத்திலுள்ள மூட்டுகள் நொறுங்கிப் போயிற்று.    நல்ல காலம் குழந்தைக்கும் என் அக்க பெண்ணுக்கும் ஒன்றும் இல்லை. விரல்களால்தான் வாழ்வே என்ற நிலையில் இரண்டு கைகளிலும் விரல்கள்  இப்படி ஆகிவிட  என் அக்காவும் அவள்   பெண்ணும் மனம் நொறுங்கிப் போனார்கள்.   ஆனால் என் அக்காவின்  மாப்பிள்ளை மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்.

டாக்டர் சுப்பிரமணியம் மட்டும் சளைக்காமல்,  உன்னை சரிப்படுத்தி காட்டுகிறேன் என்று  விரல் மூட்டுகளில் மிகச் சிறிய அளவில் அவை அசையும் வண்ணம்  அதற்குத் தகுந்தார்போன்ற பிளேட் பொருத்தினார்.  வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை. எட்டு விரல்களிலும் அறுவை சிகிச்சை நடந்தது.    அடுத்தவர் உதவியின்றி எதுவும் முடியாது.  ஆபரேஷன் ஆனதும்  அடுத்த நிமிடம் சரியாகி விடுமா ஏன்ன?  அதற்குப் பிறகு அந்த விரல்கள் அசைய வேண்டுமே. physiotherapy  ஆரம்பித்தது.   ஆரம்பத்தில் ஒரு விரலும் அசையவில்லை.  அனால் இவர் விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையை இழக்காமல்  ஒரு ரப்பர் பந்தை கையில் வைத்து மெல்ல பிசைந்து பிசைந்து  அவைகளில் அசைவைக் கொண்டு வந்தார்.    அப்போதும் அவரால் கடம் வாசிக்க முடியுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அவராவது விடுவதாவது.  தன்னம்பிக்கையோடு மிகுந்த இறை பக்தியும் கொண்டவர் அவர்.    கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் கடுமையான  முயற்சி செய்து ஒரு வழியாக  மீண்டும் கடம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்.  இந்த சீசனிலும் கூட அவரது பங்களிப்பு இருக்கிறது.    இருங்கள், இதோடு முடிந்து விடவில்லை விஷயம்.


அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து அதற்கு அதற்கு ஒரு வயசாகும் போது அவர்  குழந்தையின் ஆயுஷோமத்திற்கு அழைப்பதற்காக  என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போதுதான் நான்  கைலாஷ் மானசரோவர் யாத்திரை முடித்து திரும்பியிருந்தேன்.  அவருக்கு மானசரோவர் தீர்த்தமும் அங்கு நடத்திய ஹோம பிரசாதங்களும் கொடுத்து  பேசிக்கொண்டிருந்தேன்.

ஆயுஷோமத்திற்கு இரண்டு நாள் முன்பு என் அக்கா  எனக்கு போன்  பண்ணினாள்.   ஆயுஷ் ஹோமம் கேன்சல்  ஆகியிருப்பதாக சொன்னவளின் குரலில் துக்கம் தெரிய நான் என்ன ஏதென்று விசாரித்தேன். அவள் உடைந்து அழுதாள்.   மாப்பிள்ளைக்கு உடம்பு சரியில்ல.  அட்மிட் பண்ணி இருக்கு. ஆபரேஷன் பண்ணப் போறா என்றாள்   என்னடி பிரச்சனை நன்னாத்தானே இருந்தார் என்றேன்.   "அவருக்கு...    "   அவள் மேலும் அழுதாள். அழுகையினூடே திக்கித் திக்கி அவருக்கு கேன்ஸராம்   என்றாள். அவ்ளோதானே  சரியாப் போய்டப் போறது. எவ்ளவோ ட்ரீட்மென்ட் வந்தாச்சு இதுக்கு இப்போ என்றேன்.

என் நினைப்பு பூராவும் அங்குதான் இருந்தது. மிருத்யஞ்ச மந்திரத்தை இடை விடாமல் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என் வீட்டு கிருஷ்ணனிடம் சண்டை போட்டேன்.  போன வாரம் இதோ உன் முன்னால்  இங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த மனுஷனோடு இப்படி நீ விளையாடலாமா?   நீ என்ன செய்வாயோ தெரியாது  அவர் நல்லபடியாக குணமடைந்து இங்கே வந்து இதே இடத்தில்  உன் முன்னால் மீண்டும்  உட்கார்ந்து என்னோடு பேச வேண்டும். இது வேண்டுதல் எல்லாம் இல்லை. என் அன்புக் கட்டளை என்று கெஞ்சினேன்.   கிட்டத்தட்ட பதிமூன்று  மணிநேரம்  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து  முடிந்தது.     நான் தொலைபேசியில்  அடிக்கடி பேசி தகவல் கேட்டு ஆறுதலும் தைரியமும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அடுத்தநாள்  போஸ்ட் ஆபரேஷன் தியேட்டரில் மீண்டும் பதட்டம்.  சற்றே நினைவு வந்தவர்  வலி தாங்காமலோ என்னவோ தன்மீது சிலந்தி வலை மாதிரி  அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த  மூக்கிலும், கைகளிலும் பொருத்தப்பட்டிருந்த அத்தனை குழாய்களையும்   அரை மயக்க நிலையில் பிடுங்கிப் போட்டிருக்கிறார்.   டாக்டர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளாத  குறையாய்  மீண்டும் அவற்றைப் பொருத்தி விட்டு 24 மணிநேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று  சொல்லி இருக்கிறார்கள்.   என் அத்திம்பேர் சௌந்தர்யலஹரியிலிருந்து  அத்தனை  சுலோகங்களையும் அவர் அருகிலமர்ந்து சொல்லிக் கொண்டிருக்க  24 மணி நேரத்தில் ஒரு முறை கண் விழித்தவர்,   நா வர மாட்டேன் எனக்கு நிறைய வேலையிருக்கு என்று மட்டும்  குழறலாய் சொல்லி இருக்கிறார்.  அவர் யாரிடம் அதைச்சொல்லியிருக்கக் கூடும்?   நிச்சயம் அவருக்கும் எமனுக்கும் இடையேயான வாக்குவாதத்தின் கடைசி வரியாகத்தான் இருக்கக் கூடும்.

எமன் தற்காலிகமாக  பின்வாங்கி நகர அவர் நல்லபடியாய் கண்விழித்தார்.  ராகவேந்திரன் என்னை கைவிட மாட்டான்னு நம்பினேன், கைவிடல  என்றிருக்கிறார் மனைவியிடம்.   மிகப் பெரிய அறுவை சிகிச்சை அதைத் தொடர்ந்த கீமோ என்று படாத பாடு பட்டது அந்தக் குடும்பம்.   இதற்கு நடுவில் அடுத்த செக்கப்பில் மேலும் சில பகுதிகளில் நோயின் தாக்கம் இருப்பதாக டாக்டர்கள் சொன்னதோடு மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள்   மிஞ்சிப்போனால் இன்னும் நாற்பது நாட்கள்  அவர்  உயிருடன் இருப்பார் என்று  சொல்லி கிட்டத்தட்ட கை விட்டு விட்டார்கள்.

 என் அக்கா என் வீட்டுக்கு வந்த  போது  அன்றிரவு  என் வீட்டு  மொட்டை மாடியில்  வைத்து   இதைச் சொல்லி  குழந்தை மாதிரி அழுதாள். நான் உடனே சொன்னேன்,  இதை  யார் சொன்னது டாக்டர்தானே? கடவுள் இல்லையே?  டாக்டர் என்பவர் தனது பரிசோதனையின் முடிவில் தான் ஊகித்ததைச் சொல்கிறார் அவ்வளவே.   ஆனால் கடவுள் அம்முடிவுகளை மாற்றக் கூடிய சர்வ  வல்லமை கொண்டவர்.    நாம் திரௌபதியைப் போல் கை தூக்கி வேண்டுவோம்.  நீதான் கதி என்று அவனை கெட்டியாய்ப் பிடித்துக்கொள்வோம்.    தவிர உன் மாப்பிள்ளைக்கு இருக்கும் தன்னம்பிக்கைக்கு அவருக்கு ஒன்றும் ஆகாது.  அவரை அவ்வளவு சீக்கிரம் எமனால் நெருங்க முடியாது என்று  தைரியம் சொன்னேன்.

என் அக்கா கிளம்பிப் போனதும்  மீண்டும் கிருஷ்ணனோடு சண்டை.  உன்னை விட மாட்டேன் என்றேன்.   என் அக்கா மாப்பிள்ளைக்காக,  கோவில் கோவிலாக ஏறி இறங்கினேன்.  தன்வந்திரிக்கு எண் ணெய்  அபிஷேகம் செய்து செய்து கொடுத்தனுப்பினேன்.  உச்சக் கட்டமாக அவருக்காக பொதிகை மலை ஏறி வருவதாக வேண்டிக் கொண்டேன்.  அது மிகவும் கடினமான ஒரு மலை ஏற்றம்.  இரத்தம் குடிக்கும் அட்டைக்காடுகளின் வழியே மூன்று நாள் கடும் காட்டில் மலையேறி,   6200 அடி உயரத்தில் உள்ள அகத்தியரை தரிசிப்பது அவ்வளவு சுலபமல்ல.   அதுவும் கடைசி STRETCH  மிக மிக கடினம். சங்கிலியைப் பிடித்து தொற்றிக்கொண்டு தான்  குழவிக்கல் போல் நேராக நின்ருக்கும் ஐம்பதடி பாறையை ஏற வேண்டும்.  கடும் குளிர்க் காற்று  வீசி நிலை குலைய வைக்கும்.  நான் எதையும் சட்டை செய்யவில்லை. எனக்கேற்பட்ட நிலை என் அக்கா பெண்ணுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே ஒரு பிரார்த்தனையோடு   அகத்தியர் அருளால் ஒரு வழியாய் ஏறினேன்.  அவரருளால் அவரை தரிசித்தேன்.   என்னுடன் வந்தவர்கள் எல்லோரும் அங்கே அவருக்காக வேண்டிக் கொண்டனர்.

அதன் பிறகு நெல்லையப்பர் கோயிலில் வேறொரு விஷயம் எனக்கு சொல்லப்பட்டது.  அங்கே  காந்திமதியம்மன் சந்நிதிக்கு முன்  ஒரு குழி உள்ளது. ஸ்ரீ சக்கர குழி என்றார்கள். அதில்  நம் மூலாதாரத்தை  நடுவில் வைத்து அமர்ந்து அம்மனிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேற்றப் படும் என்றார்கள்.  நான் உடனே அதில் அமர்ந்து என் அக்கா மாப்பிள்ளையைக் காப்பாற்றக் கோரி வேண்டிக் கொண்டேன்.  பிறகு சந்நிதி சுற்றி வரும்போது இன்னொரு அதிசயம் நடந்தது.

பிரகாரத்தில்  ஒரு மரம் இருந்தது. அதனை சுற்றி தொட்டி மாதிரி மேடை கட்டி இருந்தது. அதிலிருந்து எல்லோரும் ஏதோ  எடுத்துச் சென்று கொண்டிருக்க நான் ஒருவரிடம் என்னவென்று  விசாரித்தேன்.  இது புற்று மண் அம்மா.  எவ்வளவு எடுத்தாலும் குறையாது வந்து கொண்டே இருக்கும்.  இதை நீரில் ஒரு சிட்டிகை போட்டு குடித்தாலும் போதும் புற்று நோய்  போய் விடும் என்று நம்பப் படுகிறது.  என்றார்.  எனக்கு கண் கலங்கி விட்டது.  என் தேவைக்கேற்ப அங்கங்கே வழிகள் தெரிய நான் ஒரு பிளாஸ்டிக் கவரில் நிறையவே புற்று மண்ணை எடுத்துக் கொண்டேன். ஊருக்கு வந்து அதையும் கொடுத்தனுப்பினேன்.   அவருக்காக எனது கயிலாய நண்பர்கள் பல சமயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

எந்த ஒரு நோய்க்கும்  வெளியிலிருந்து  கொடுக்கப் படும் மருந்தை விட மிகப் பெரிய மருந்து நமக்குள் இருக்கும் நம்பிக்கைதான். நம்பிக்கையின்றி மருந்தைக் குடித்தாலும் அது செயல்படாது போய்விடும்.  நம்பிக்கையுடம் விஷத்தையே குடித்தாலும் அது மருந்தை மாறிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  என் அக்கா மாப்பிள்ளையிடம் நம்பிக்கை என்பது வற்றாத கங்கையைப் போல்  பெருகிக் கொண்டிருந்தது.  நான் இப்போது மரணிக்க விரும்பவில்லை என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  அவரது பிடிவாதத்திற்கும், நம்பிக்கைக்கும், அவருக்காக எல்லோரும  செய்து கொண்டிருந்த  பிரார்த்தனைக்கும் மனமிரங்கி தெய்வம் மார்க்கண்டேயனுக்கு உதவினாற் போல் இவருக்கும் உதவியது.    இது வெறும் பிரார்த்தனையால் மட்டுமேநிகழ்ந்த அதிசயம் அல்ல.  நோயாளிக்கு நம்பிக்கையில்லாத இடத்தில் பிரார்த்தனைகளுக்கு பயனிருக்காது.

தனக்கு இன்னும்  நாற்பதே நாள்தான் என்ற நிலையை  அவர் தனது  தன்னம்பிக்கையால்தான்   மாற்றிகே கொண்டார்.  இதோ இன்று வரை அதே  தன்னம்பிக்கையோடு வளைய வந்து கொண்டிருக்கிறார்.   எனக்கு என்ன ஒரு கஷ்டம் வந்தாலும் இவரை நினைத்துக் கொள்வேன். என் மனம் வலுப்பெற்று விடும்.

இப்போதும்  கூட நான்  முகமறியாத புற்றுநோயாளிகளுக்காக வேண்டிக் கொண்டு,  மானசீகமாய் ஒரு முறை பொதிகை ஏறி அகத்தியரிடம் அவர்களுக்காக பிரார்த்தித்து வருகிறேன்.  தவிர அந்த ஸ்ரீ சக்ர குழியிலும் மானசீகமாய் அமர்ந்து யாராக இருந்தாலும் இந்நோயிலிருந்து காத்து விடு தாயே என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.   உங்களாலும் இது முடியும் நண்பர்களே.   இந்த நிமிடம் எத்தனையோ பேர் தவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக   தினமும் பிரார்த்திப்போம்.  நம் பிரார்த்தனையின் சக்தி கேன்சர் எனும் கொடிய நோயை  இந்த உலகை விட்டே ஒழித்து, இல்லாது ஆக்க வேண்டும்.   அதே நேரம் நோயாளிகளும் நம்பிக்கையோடு இருப்பது அவசியம்

நம்பிக்கை.....நம்பிக்கை....  நம்பிக்கைதான் அமிர்தம். அருமருந்து! .  கற்பக விருக்ஷம் வேறெங்கும் இல்லை. அது  நமக்குள்தான் இருக்கிறது  நாம் கேட்டதை அளிப்பதற்கு.  .எத்தகைய இடர் வரினும் நம்பிக்கையை மட்டும் இழக்காதிருப்போம்.     நம் நம்பிக்கை,  கடவுளைக் கூட தன்  முடிவைக் மாற்றிக்  கொள்ளச்  செய்து விடும் சர்வ சக்தி கொண்டது.  

Friday, December 19, 2014

விகடன் கடவுள்

ஒரு டஜன் சிறுகதைகள் வரை எழுதியிருப்பேன் ஆனந்த விகடனில்.  விகடனுக்கென்று பிரத்யேகமாக  எழுதி,  நம்பிக்கையுடன் தபாலில்தான் அனுப்பி வைப்பேன்.   ஒன்றிரண்டைத் தவிர  அத்தனையும் பிரசுரமாகி இருக்கிறது.   அனுப்பி விட்டு காத்திருக்க வேண்டும். சில நேரம் ஏழெட்டு மாதம் கூட ஆகும் முடிவு தெரிய.  " உங்கள்  சிறுகதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இக்கதையை வேறு எந்த பத்திரிகைக்கும் அனுப்பவில்லை என்பதை உடன் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" .  இப்படி ஒரு கடிதம் வரும்  போது அன்று முழுக்க என் கால்கள் தரையில் இருக்காது. 

உறுதி மொழி கடிதம் அனுப்பிய பிறகு வாரா வாரம் விகடன் வந்ததும் ஆவலுடன் பிரித்துப் பார்ப்பேன்.  சில வாரங்கள் கழித்து விகடனில் என் கதையும் பெயரும்  மிகச்சிறந்த ஓவியத்தோடு தெரியும் போது, கண்ணீர் அதை மறைக்கும்.  விகடனைத்  தடவித்தடவி பார்த்துக் கொண்டிருப்பேன். என் கதையை நானே மீண்டும் மீண்டும் படிப்பேன்.  தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் கதை பற்றி பாராட்டும் போதும்,  நானும் மீண்டும்   ஒரு முறை படிப்பேன்.  

அப்போதுதான் எழுத்தாளராய்  துளிர் விட்டிருந்த  எனக்கு விகடன்  கொடுத்த ஊக்கம்  மிகப்பெரிய விஷயம்.  அது எனது எழுத்தை மேலும் மேலும் செதுக்கியது.  இத்தனைக்கும் நான் நேரில் ஒரு முறை கூட அங்கு சென்றதில்லை. யாரையும் தெரியவும் தெரியாது.  கண்ணால் காணவில்லை என்றாலும் விகடன் ஆசிரியரும் எனக்கு  ஒரு  கடவுளைப் போலத்தான்.   கடவுள்களுக்கு மரணமில்லை.  அவர் ஒவ்வொரு விகடனிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். 

Wednesday, December 17, 2014

குசேல தினம்

இன்று  தனுர் மாதத்தின் முதல் புதன் கிழமை.  இது குசேல தினம்.  குசேலன் ஒரு பிடி அவலோடு  தன பால்ய தோழன் கிருஷ்ணனை  சந்திப்பதற்கு துவாரகைக்கு சென்ற தினம்.   குருவாயூரில் இன்று மிகவும் விசேஷமான நாள்.   கிருஷ்ணனுக்கு அவல்  நெய்வேத்தியம்  சிறப்பாக நடக்கும்.  அவல்  சமர்ப்பணமும்  செய்யப்படும்.   ஒரு பிடி அவலோடு  என் மனசும்  அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது .  என் கர்ம வினைகளை எல்லாம்  ஒரு பிடி அவலாக்கி,   கட்டி எடுத்துக் கொண்டு அவன் காலடியில் சமர்ப்பிக்க அலைந்து கொண்டிருக்கிறேன்.

இந்த சமர்ப்பணம் பொன்னும் பொருளும், மாட மாளிகையும்  யாசித்தல்ல.   அவன்  திருமுடி பீலியில் ஒரு இழையாய், பாதத்தில் ஒரு பூவிதழாய்,  அபிஷேக நீரில் ஒரு துளியாய்,  அந்த மதிலக சுற்று விளக்குகளில் ஒரு விளக்காய்,  கொட்டிக் கிடக்கும் மஞ்சாடி மணிகளில் ஒரு மணியாய்,  பால் பாயசத்தில்  துளி இனிப்பாய்,  ஏற்றுக் கொள்ளக் கோரும் யாசகம். எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதற்கெல்லாம்.!  செய்திருக்கிறேனா?  இன்னும் எத்தனை ஜென்மம் காத்திருக்க வேண்டும் இதற்கு!

வறுமையில் வாடும் குசேலன்

  பால்ய தோழர்கள்


துவாரகைக்கு அவல்  பொதியோடு செல்லும் குசேலன்


 குசேலனை வரவேற்கும் கிருஷ்ணன்

     நண்பனைக்  கட்டி அணைக்கும் கண்ணன்

 
 அவல்  பொதியைத தானே எடுத்துக் கொள்ளும் கிருஷ்ணன்



கால் அலம்பி மரியாதை செய்யும் மாயவன்

   மஞ்சாடி கண்ணன்


  ஹரே கிருஷ்ணா.  குருவாயூரப்பா!