Thursday, October 20, 2016

வெளிச்சம் - தீபாவளி சிறுகதை

வெளிச்சம்.

கதை  கேட்டபடி  என்  மடியிலேயே  தூங்கிப்  போயிருந்த மகளை,  அவள்  உறக்கம்  கலைந்து  விடாமல்  படுக்கைக்கு  மாற்றி,  போர்த்தி விட்டு அவள் முகத்தைச் சற்று நேரம் அன்போடு பார்த்தேன். ஆறு வயசுக்கு அதி புத்திசாலி. அடேயப்பா எத்தனை கேள்விகள்! பதில் சொல்லி  மாளாது.  சில கேள்விகள் திணறடிக்கும். அவள் கேள்விகளுக்கு பதில்  சொல்வதற்காகாகவே நான் நிறைய புத்தகம் புரட்ட வேண்டியிருந்தது. 

"சாமி  ஏம்பா  கண்ணுக்கு  தெரியறதில்ல?"  கோகுலத்து கிருஷ்ணனின்  லீலைகளைப்  பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது அவள் கேட்ட  கேள்வி  இது.  

"ஏன்  தெரியாம?  எத்தனையோ பேர் சாமியப் பாத்திருக்காங்களே"

"நீ  பாத்திருக்கயா?"

"இல்லையே"

"ஏன்?"

அதுக்கெல்லாம்  நிறைய  தவம்  பண்ணனும். பரிசுத்தமான பக்தியோட  எப்பவும்  கடவுள்  நினைப்புலயே  இருக்கணும்"

"நல்லவங்க  கூப்ட்டா  கடவுள்  ஓடி  வருவார்னு  சொன்னயே.  அப்போ  நாம  நல்லவங்க  இல்லையா?"

“இது  கலியுகம்டா  செல்லம். சாமி நேரா வர மாட்டார்.  மனுஷங்க  மூலமா வந்துதான் நல்லது செய்வார். "

"அப்போ  மனுஷங்கதான்  சாமியாப்பா?"

"அப்டித்தான்.'

"அப்போ  ஏன்  நிறைய  பாம்  பிளாஸ்ட்  எல்லாம்  நடக்குது?"

"நான் ஒரு வினாடி என்ன  சொல்வதெனப் புரியாமல்  திணறினேன். பிறகு சுதாரித்துக்க்குக் கொண்டு  சொன்னேன். தேவர்களுக்கு  எதிரா  அசுரர்கள் இருக்கறதில்லையா?  தெய்வம்  மட்டும்  மனுஷ  ரூபம் இல்லடா  செல்லம். அசுரரும் மனுஷ ரூபம்தான் கலியுகத்துல". 

பெண்ணின்  புத்திசாலித்தனம்  கண்டு  ஒரு  தந்தையாய்  பெருமிதம் கொண்ட அதே  நேரம்  மனசின்  மூலையில் மெலிதாய்  ஒரு வலி. இரண்டு  நாட்களுக்கு முன் நான்  கண்ட குழந்தைகள் என் நினைவுக்கு வர என் அடி வயிறு கனத்துப் போனது.  

குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆவணப் படமொன்று எடுப்பதற்காகத் தென்கோடியிலிருந்த ஒரு கிராமத்திற்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருக்க  நேரிட்டது. இதுநாள் வரை கேள்வி மட்டுமே பட்டிருந்த விஷயங்கள் கண்முன்னே காட்சிகளாய்க் கண்ட போது  மனம் சொல்லவொண்ணா துயரத்திலாழ்ந்தது. 

                                                     **********

விடியல்  இருளில்  பேருந்து  ஒலிப்பானின் சப்தம் அந்த ஊரின் நிசப்தத்தைக் கலைத்த சில நிமிடங்களில் ஒவ்வொரு வீட்டுக் கதவும் திறந்தது. பல குழந்தைகள் உறக்கம் கலையாமல் வெளிப்பட்டனர். கேமரா மூலம் அந்த சிறுவர்களின் முகங்களை நெருக்கத்தில் கண்ட போது மனசு அதிர்ந்தது. பால் வடியும் முகங்கள். தமக்கையின் கை பிடித்து தூக்கக் கலக்கத்தோடு நடந்தான் ஒரு பாலகன்,  விரல் சூப்பலைக் கூட நிறுத்தாத ஒரு ஐந்தாறு வயது சிறுமி வாயில் விரலோடு பேருந்தை நோக்கி நடந்ததைப் பார்த்ததும் என் உள்ளம் அதிர்ந்தது.    

சொகுசான பேருந்து பயணம் என்ற தூண்டிலில் பிடிக்கப் பட்ட சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள். கந்தக வாசத்துடன் களங்கமில்லாமல் சிரித்த மலர்கள். 

"உம்  பேரென்னம்மா ?"

"தாமர"

"அட  ....அழகார்க்கே  பேரு.  ஆமா  படிக்க  இஷ்டமில்லையா  உங்களுக்கெல்லாம்?  இந்த  வயசுல வேலைக்குப்  போறீங்க?"

என்  கேள்வி  புரியாதது  போல  அவள்  சிரித்தாள். 

"ஒரு  நாளைக்கு  எவ்ளோ  சம்பாதிப்ப?

"தெரியாது.  அம்மா  கிட்டதான்  தருவாங்க"

"கை  வலிக்கலையா  உனக்கு?"

"வலிக்கும்"

அம்மா கிட்ட  சொன்னயா  வலிக்குதுன்னு?"

"அம்மா  அடிச்சா  இத விட  வலிக்குமே"

"இது  படிக்கற  வயசு தெரியுமா"

"அப்டின்னா?"

அங்கே இருந்த பல குழந்தைகளுக்கு படிப்பு பற்றி, பள்ளிக்கூடம் பற்றி தெரியவில்லை. எது கேட்டாலும் சிரித்தார்கள். பசை, குச்சி, கந்தகம்,  தீப்பெட்டி, இதைத் தாண்டி வேறெதுவும் தெரியவில்லை. இருட்டோடு உறக்கம் கலையாத விழிகளுடன் கிளம்பும் இவர்கள் இருட்டிய பிறகு பேருந்திலேயே தூங்கிக் கொண்டு வீடு திரும்பிய கொடுமையைப் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிய போது மனசு கனத்துப் போயிற்று. கிளம்புவதற்கு முன் தாமரையின் தாயாரைப் பார்த்தேன்.  "என்ன  கொடுமைங்க  இது?  இப்டி  குழந்தைகளை  வேலைக்கு  அனுப்பினா,  ஓடி  விளையாட  வேண்டிய  அவங்க  குழந்தைப்  பருவத்தை  இழந்துட  மாட்டாங்களா?"

"அதுக்கென்னய்யா  செய்ய?  பாவப்பட்ட ஜன்மம் நாங்க. இதான் எங்க தலையெழுத்து."

“அதுக்காக  குழந்தைகளை  வேலைக்கு  அனுப்பலாமா?

“என்ன  செய்ய  சொல்றீங்க?  வறுமை!.  அதுங்க வயத்துக்கு அதுங்க சம்பாதிச்சாதான் சோறு. எங்க  நிலைமை அதான். பழகிப் போச்சுங்க."

நான்  தாமரையை  அருகில்  அழைத்தேன்.  சாக்லேட்  டப்பா  ஒன்றை  நீட்டினேன்.  "பஸ்சுல   எல்லார்க்கும்  கொடுத்துட்டு  நீயும்  சாப்டு."

"என்ன  இது?"

"இனிப்பு"

"அப்டின்னா?"

"சாப்ட்டுப் பாரு. நான் வரட்டுமா? இன்னிக்கு ஊருக்குக் கிளம்பறோம்"

"மறுபடியும்  வருவீங்களா?"

"ஏதாவது  வேலையிருந்தா  வருவேன்"

"உங்களுக்கு  குழந்தை  இருக்கா?"

"ஒரு  பொண்ணு  இருக்கு.  ஆறு  வயசாகுது "

"உங்க பொண்ணு எந்த பட்டாசு கம்பெனில வேலை  பாக்கது?"  தாமரை கேட்டதும் அதிர்ந்தேன். அவளைப்  பொறுத்தவரை எல்லா குழந்தைகளும் பட்டாசு கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். அவளுக்கு அதுதான் தெரியும். நான் கனத்த மனதோடு அவள்  முதுகில்  தட்டிக்  கொடுத்து  விட்டு  கிளம்பினேன்.  தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைகளுக்கு வேலையும் கூடியிருந்தது. கைகளில் கந்தகம்,  கண்களில் சோர்வு, இதழ்களில் புன்னகை. தாயின் மடிசுகம் தெரியாது. தந்தையின் அரவணைப்பு கிடையாது. தாயின் தாலாட்டு,  உணவுக்கு பதார்த்தமாய் பழந்தமிழ்க் கதைகள், காலைத் தூக்கம், மாலை விளையாட்டு, கல்வி,  நல்ல உணவு எதுவும் இவர்கள் வாழ்க்கையில் கிடையாது.  

நான்  பெருமூச்சு  விட்டேன்.  

*********************************

"ஊர்லேர்ந்து  வந்ததுலேர்ந்து  என்ன  யோசனை?"  திவ்யா நின்று போயிருந்த கடிகாரத்திற்கு பேட்டரி மாற்றியபடி என் சிந்தனையைக் கலைத்தாள். 

"ஒண்ணுமில்லை"

"போன  காரியம்  நல்லபடி  முடிஞ்சுதா?  ஆவணப்  படம்  சரியா வந்திருக்கா?"

"ம்"

"நாலு  நாளில்  தீபாவளி.  அப்பா  வேணும்னு உங்க பொண்ணு ஒரே ரகளை. நீங்கதான் டிரெஸ் எடுக்கணுமாம். நா எடுத்தா போட்டுக்க மாட்டாளாம். நாளைக்கு முதல் வேலையா அவளுக்கு டிரெஸ் வாங்கப் போறோம் சொல்லிட்டேன்”. 

"ம்"  நான் திரும்பிப் படுத்தேன். ஏனோ தாமரையின் முகம் கண்ணுக்குள் வந்து போயிற்று.  

மறுநாள் துணிக்கடைக்குப் போய் பெண்ணுக்கு விலை உயர்ந்த கவுன் வாங்கினோம். அவள் கேட்ட மற்ற பொருட்களையும் வாங்கிக்  கொடுத்தேன். 

"பட்டாசுப்பா?"

"வாங்கலாம்"

"நிறைய  வாங்கணும்பா"

"சரி"

பட்டாசுக்  கடையில்  கூட்டம்  அலைமோதியது.  திவ்யாவும்  பெண்ணும் பட்டாசு தேர்ந்தெடுப்பதில் மும்மூரமாக,  எனக்கோ ஒவ்வொரு பட்டாசிலும் தூக்கக் கலக்கத்தோடு ஒரு குழந்தையின் முகம் தெரிந்தது. சட்டென கடையை விட்டு வெளியில் வந்து நின்றேன்..  

***********************


தீபாவளிக்கு முதல் நாள் நான் திடுதிப்பென்று அந்த கிராமத்திற்கு கிளம்பினேன்.  

'அப்பா என்னப்பா தீபாவளிக்கு இருக்க மாட்டீங்களா" பெண் என்னை ஏமாற்றத்துடன் கேட்டாள்.  

"முக்கியமான வேலைடா செல்லம். நீ என்ஜாய் பண்ணு சரியா?" நான் கிளம்ப அவர்கள் முகத்தில் ஏமாற்றம். ஏனோ இந்த தீபாவளியை அந்தக் குழந்தைகளோடு கழிக்க வேண்டும் போலிருந்தது. அந்த குழந்தைகள் தங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் போலிருந்தது. அந்த கிராமத்தில் ஒரு என்பது குழந்தைகள் இருப்பார்களா?  அத்தனை பேருக்கும் இனிப்புகளும் மத்தாப்பும், புஸ்வான பெட்டிகளும்,  ஊசி வெடிகளும் வாங்கிக் கொண்டேன். நான் போய்ச் சேரந்த நேரம் இருட்டிப் போயிருந்தது. தீபாவளியின் உற்சாகம் எங்கும் தென்படவில்லை.  பட்டாசுக் கம்பெனி பேருந்து ஒலிப்பானை அலற விட்டபடி வந்து நின்று, தூக்கக் கலக்கத்துடன் இருந்த சிறுவர்களை உதிர்த்து விட்டுச் சென்றது.

என்னைப்  பார்த்ததும் படம் பிடிக்கத்தான்  வந்திருப்பதாக எண்ணி சற்றே நின்றார்கள்.  

"இனிப்பு  வாங்கிக்குங்க" நான் அவர்களிடம் இனிப்பு பெட்டிகளை நீட்ட எவர் முகத்திலும்  ஆர்வமில்லை. 

நாளைக்கு  தீபாவளியில்ல....உங்களுக்காக  பட்டாசு  வாங்கிட்டு வந்திருக்கேன். கொண்டு போய் வெடிங்க. இந்த மத்தாப்பு புஸ்வாணமெல்லாம்  நல்லா வெளிச்சமா கலர் கலரா இருக்கும்""

குழந்தைகள் அதிலும் ஆர்வம் காட்டாது அசட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

"தாமர...இந்தா  வாங்கிக்  கொடு  எல்லாருக்கும்"  நான் தாமரையைத்  துணைக்கழைத்தேன். 

"வேணாம்"

"ஏம்மா"

"எங்களுக்கு  இந்த  வெளிச்சம்  வேணாம்"

நான்  திகைத்து நின்றிருந்த போதே,  குழந்தைகள் என்னைத் தாண்டி அரைத் தூக்கத்தோடு நடந்து சென்றார்கள். தாமரை எந்த அர்த்தத்தில் இதைச் சொன்னாளோ தெரியாது. அதில் வேறொரு அர்த்தமுமிருந்தது எனக்கு உரைத்தது. நான் கையாலாகாதவனாக அடுத்த பேருந்தைப்  பிடித்தேன்.                                  ****************************************


Tuesday, September 27, 2016

உயர்வு

எனக்கென்று  சில  கொள்கைகள்  இருக்கிறது.  அதை  எந்த சுய லாபத்திற்காகவும்  விட்டுக்  கொடுக்க  மாட்டேன்.  புகை,  புகையிலை இவற்றிற்கு  எதிரானவள்  நான்.   புகைக்கு  எதிராக  பல  விழிப்புணர்வு பதிவுகள்  கட்டுரைகள்  எழுதியிருக்கிறேன். இது  என்னுடைய  மற்றொரு அனுபவம்.

2009  ஆம்  ஆண்டு    என்  அலுவலகம் எனக்கு  கண்காணிப்பாளராக  பதவி  உயர்வு  அளித்தது.  சந்தோஷமான  விஷயம்தான்.  சில  பல நிர்வாக  குளறுபடிக;ளால்  இந்த  பதவி  உயர்வு   எனக்கு  கால  தாமதமாகவே  வழங்கப்  பட்டது.  என்னைவிட  ஜூனியர்களுக்கு  எனக்கு  முன்பே  வழங்கப்  பட்டிருந்தது.  நான்  பலமுறை  சுட்டிக்  காட்டியும்  ஏதேதோ  காரணம்  சொல்லி  தட்டிக்  கழித்தார்கள்.    2007  ல்   வர  வேண்டிய  பதவி  உயர்வு   ஒரு  வழியாக  2009  ல்  வந்தும்  சந்தோஷப்  பட முடியவில்லை.  கிருஷ்ணகிரிக்கு  அருகே  சூளகிரி  என்ற  ஊரில்  எனக்கு  போஸ்டிங்  போட்டு  இருந்தார்கள்.  கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த  கவிதாவை  தன்னந்தனியே  சென்னையில்  விட்டு  விட்டு  என்னால்  செல்ல  முடியாத  சூழல்.  அதைக்  குறிப்பிட்டு  சென்னையிலேயே  பணியிடம்  வழங்கக்  கேட்டேன்.  மறுத்து  விட்டார்கள்.


பலரும்  என்னிடம்,  எந்தக்  காரணம்  கொண்டும்  பதவி  உயர்வை  துறக்காதே. இப்போது  விட்டால்  மீண்டும்  மூன்றாண்டுகள்  கழித்து  அதுவும்  வேகன்ஸி இருந்தால்தான்  மீண்டும்  பதவி  உயர்வு  தருவார்கள்.  அது  மேலும் இரண்டாண்டு   தள்ளிப்  போனால்  அதற்குள்  நீ  ரிடையர்  ஆகி  விடக்  கூடும்.   கிட்டத்தட்ட  இந்த  பதவி  உயர்வால்  உனக்கு  நல்ல  பெனிஃபிட்  கிடைக்கும், அதை  முட்டாள்தனமாக     இழந்து  விடாதே  என்றார்கள்.   சிலர்  சூலகிரியிலேயே  சென்று  பணியில்  சேர்ந்து விட்டு  பின்னர்  விடுப்பில் வா.  வந்து  பார்க்க  வேண்டியவர்களைப்   பார்த்து  சம்திங்  கொடுத்து  எப்படியாவது  சென்னைக்கு  மாறுதல்  பெற்று விடலாம்.  இதனால்  உன்  ரிடயர்மென்ட்  பெனிஃபிட் சில  லட்சங்கள்  அதிகரிக்கும்.  வாய்ப்பை  விட்டு  விடாதே  என்றார்கள்.  யாருக்கும்  லஞ்சம்  கொடுத்து  காரியம்  சாதிக்க  மாட்டேன்  என்று   உறுதியாகக்  கூறி    விட்டேன்.


 என்  முன்னால்   மூன்று  வழிகள்   இருந்தன.  ஒன்று  சூலகிரி   போய்  பணியில்  சேர  வேண்டும்.  இரண்டாவது  சென்னையிலேயே   வேறு  ஏதேனும்   துறையில்  டெபுடேஷன்  கிடைக்க  முயற்சிக்கலாம். மூன்றாவது    மூன்றாண்டுகளுக்கு  பதவி   உயர்வை  தற்காலிகமாகத்  துறந்து  (relinquish)    விடலாம்.   முதலாவது  நிச்சயம்  முடியாது.  மூன்றாவதை  சுலபமாக  ஒரு  வெள்ளை  தாள்  எடுத்து  எழுதினால்   இரண்டே  நிமிடத்தில் முடிந்து  விடும்.   ஆனால்  அப்படி  செய்வதற்கு  முன்  ஏன்  இரண்டாவதை  முயற்சித்து  பார்க்கக்  கூடாது  என்று  தோன்றியது.  முயற்சித்து  செய்து  பார்ப்போம்.   வெற்றி  கிடைக்கவில்லை  எனில்  மூன்றாவதைச்  செய்யலாம்  என்று  முடிவெடுத்தேன்.


 பல  துறைகளுக்கு   நானே  நேரிலும்,  நண்பர்கள்  மூலமாகவும்  முயற்சித்தேன்.  எங்கும்  கண்காணிப்பாளர்  பதவி  காலியில்லை  என்றே  கூறப்  பட்டது.   இதனிடையில்  எனக்குத்  தெரிந்த  ஒரு  ஐ.ஏ.எஸ்  ஆபிசரை  நேரில்  பார்த்து  அவரால்  எனக்கு  ஏதாவது  விதத்தில் உதவ  முடியுமா  எனக்  கேட்கலாம்  என  நினைத்து  அவரைத்  தேடி  தலைமைச்  செயலகம்  சென்றேன்.  எந்த  பந்தாவுமில்லாது  என்னிடம்  பேசினார்.  அவரிடம்  விஷயத்தைக்  கூறினேன்.  அவர்  அதற்கு,  மற்ற  துறைகள்  பற்றி  தனக்கு  ஏதும்  தெரியாது என்றும்,   தன்  கட்டுப்  பாட்டில்  இருக்கும்  டாஸ்மாக்  நிறுவனத்தில்  வேண்டுமானால்  டெபுடேஷன்  வாங்கித்  தரமுடியும்  அது  கூட  நிர்வாக (Head office)  அலுவலகத்தில்  இல்லை,  விற்பனை  அலுவலகம்  (Branch office ) ஒன்றில்தான்  தற்போது  காலியாக  உள்ளது  உங்களுக்கு  விருப்பம்  என்றால்  சொல்லுங்கள்  உடனே  ஏற்பாடு  செய்கிறேன் என்றார்.

நான்  ஒரு   நிமிடம்  கூடத்  தயங்கவில்லை.  இல்லை  சார்  என்னால்  அது முடியாது  என்றேன்.  ஏன்  இதிலென்ன  கஷ்டம்  என்றார்.   இல்லை  சார்  நான் புகை, மதுவுக்கு  எதிரானவள்.  ஒருபோதும்  அதை  ஆதரிக்க  மாட்டேன்.  என் லாபத்திற்காக  என்  கொள்கையை   ஒருபோதும்  விட   மாட்டேன். மன்னித்து விடுங்கள்   சார்.  உங்களை  தொந்தரவு  செய்து  விட்டேன்  நான்  வருகிறேன். என்றேன்.

உங்களைப்  பாராட்டுகிறேன்  என்று  அனுப்பி  வைத்தார்  என்னை.

அடுத்த  நாள்  எனது  பதவி  உயர்வை  மூன்றாண்டுகளுக்கு  துறப்பதாக  கடிதம்  எழுதிக்   கொடுத்து  விட்டேன்.


மூன்றாண்டுகள்  கழிந்து  விட்டது.  இதோ வந்து  விடும்  பதவி  உயர்வு  என்ற நிலையில் எங்கள் அலுவலகம்  ஜனவரி  2012 ல்   திடீரென  தீ  விபத்தில் எரிந்து முழுவதும்  சாம்பலாக, எங்கள்  பணிப்  பதிவேடுகள்  உட்பட  அத்தனை பொருட்களும்  சாம்பல். எதுவும்  மிஞ்சவில்லை.  வெறும் கையோடு   கூவம்  நதியோரம்,  சிந்தாதிரிபேட்டையில்  ஒரு  பள்ளியில்   லட்சக்  கணக்காய்  பறந்த  கொசுக்களுக்கு  ரத்ததானம்  செய்யும்  கூடுதல்  வேலையோடு  குடியேறினோம்.  கோப்புகளைப்  புதிதாக  தயாரிக்கும்  பணியில்  அத்தனை  பேரும்   பிசாசு  மாதிரி  உழைத்தோம்.  நான்  எனக்கு   பதவி  உயர்வு  கிடைக்கும்  என்ற  நம்பிக்கையை  இழந்து  விட்டேன்.  அதை  மறந்தும்  விட்டேன்.  ஆனால்  அப்போது  இருந்தது  துடிப்பான  ஒரு  பெண்  ஐ.ஏ.எஸ். அதிகாரி.  அவரது  வழிகாட்டுதலில்தான்  அலுவலகம்  மீண்டும்  தலையெடுத்தது  என்பேன்.  ஊழியர்களை  உற்சாகப்   படுத்தி  வேலை  செய்ய வைப்பார்.

அவரது  முயற்சியால்,  தலைமைச்   செயலகத்திலிருந்து  பெற்ற  சீனியாரிட்டி  பட்டியலை  வைத்து  ஆகஸ்ட் 2012 ல்  பலருக்கு  பதவி  உயர்வு  கிடைத்தது.  எனக்கு  சென்னையில், அதுவும்  head  office லேயே,  அதுவும்  நான் உதவியாளராகப்  பணியாற்றிக்  கொண்டிருந்த    மான்யப்  பிரிவிலேயே, எவ்வித  மேலிடத்து  சிபாரிசும்  இல்லாமல்  இயக்குனரின்  விருப்பப்படி   கண்காணிப்பாளராக  பதவி  உயர்வு  கிடைத்தது.     பதவி   உயர்வு  ஆணை வெளி வருவதற்கு  முன்பே  இயக்குனர்  போகிற  போக்கில்  என்னைப்  பார்த்து வாழ்த்துக்கள்  உஷா  என்று  சொல்லி விட்டு  போன பிறகுதான்   எனக்கே பதவு  உயர்வு  விஷயம்  தெரிய  வந்தது.   உஷாவை  மான்யப்   பிரிவிலேயே  போடுங்கள்.  excellent  worker  என்று  என்  பெயரை  மானிய  பிரிவுக்கு  டிக்  செய்திருக்கிறார்.

 அந்த  நிமிடத்தில்  கிடைத்த சந்தோஷத்தின்  முன்  என்  சில  லட்ச  நஷ்டங்கள்  அனைத்தும்   தூசியாகயிருந்தது.   என்  மதிப்பு   ஆபீசிலும்  வீட்டிலும்  அதிகரித்திருந்தது.   முகம்  கழுவுவது  போல்  என்  ஆனந்தக்  கண்ணீரை  யாரும்  பார்க்காமல் கழுவிக்  கொண்டேன்.  கண்டிப்பாக  என்  அப்பா  மகிழ்ந்திருப்பார்.  ஆசீர்வதித்திருப்பார்.

பிரசவம்

பிரசவம்:
(சற்றே பெரிய பதிவுதான். மன்னிக்க. வேறுவழியில்லை)
(இப்பதிவு ஆண்களுக்கும்தான். உங்களுக்கும் மனைவி, பெண்கள், சகோதரிகள் இருப்பார்கள். எனவே தெரிந்து கொள்வது தவறல்ல)

சந்தேகமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது, அது நார்மல் டெலிவரியோ, சீசெக்ஷனோ மறுபிறப்புதான். ஒரு காலத்தில் தொண்ணூறு சதவிகிதம் நார்மல் டெலிவரிதான் நிகழும். அபூர்வமாகத்தான் சிசேரியன் நடக்கும். எங்கள் குடும்பம் பெரியது. அத்தை மகள்கள், மாமா மகள்கள் அக்காக்கள் மன்னிகள் என்று நிறைய பேர். அத்தனை பேருக்குமே நார்மல் டெலிவரி மூலம்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் மருத்துவ மனைகள் எப்போது கார்பொரேட் மயமாகியதோ அப்போதிலிருந்து நார்மலாகப் பிறக்கவேண்டிய குழந்தைகள் எல்லாம் சிசேரியனில் பிறக்கத் தொடங்கின. மருத்துவமனைகளின் லாபத்திற்காக வயிறுகள் கிழிக்கப் பட்டன. இப்போதும் அரசு மருத்துவ மனைகளில் நார்மல் டெலிவரிதான் அதிகம். ஏனெனில் அது லாபத்திற்காக இயங்குவதில்லை. ஆனால் சுத்தம், சுகாதாரக் குறைவு, ஊழியர்களின் அலட்சியம், சிடுமூஞ்சித்தனம், இவைதான் அங்கு செல்ல விடாது தடுக்கிறது.

சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்ததற்கு மருத்துவமனைகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இந்தக்காலப் பெண்களுக்கும் பிரசவ வலியை எதிர் கொள்ளும் துணிச்சலோ பொறுமையோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலபேர் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களிடம் தனக்கு சிசேரியனே பண்ணி விடுங்கள் என்று சொல்வதாக அறிந்த போது ஒரு பக்கம் வியப்பும் கூடவே பரிதாபமும்தான் ஏற்பட்டது. பிரசவ வலி என்ற உன்னதமான அனுபவத்தை அவர்கள் இழக்கிறார்களே என்ற பரிதாபம்தான். எனக்கு தெரிந்த சில பெண்கள் கூட, தாங்களாகவே ஒரு பயத்தில் தங்களுக்கு சிசேரியன் செய்து விடுங்கள் என்று கேட்டு அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது தெரியும்.

கவிதா கன்சீவ் ஆனதுமே அவளை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டலாம் என்று நிறைய விசாரித்து, இணையத்திலும் நிறைய தேடினோம். நாங்கள் அறிந்த வரையில் சீதாபதி கிளினிக்கில் அதிகம் நார்மல் டெலிவரியில் குழந்தைகள் பிறந்திருந்தன. பலரும் நல்ல அபிப்பிராயங்களைக் கூறினார்கள். எனவே சீதாபதிக்குதான் அவளை அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தோம்.

சீதாபதி மருத்துவமனைக்குள் முதன் முதலில் நுழைந்த போது அங்கிருந்த ஹோம்லி அட்மாஸ்பியர் என்னைக் கவர்ந்தது. யார் முகத்திலும் பதட்டமில்லை. மருத்துவர்கள் கனிவாகப் பேசினார்கள். ஒவ்வொரு கர்ப்பிணியையும் அக்கறையாக பரிசோதித்தார்கள். அவர்களுடைய தலையாய நோக்கமே நார்மல் டெலிவரியை ஊக்குவிப்பதே என்பது நன்கு புரிந்தது. கர்ப்பிணிகளை மனதளவில் நார்மல் டெலிவரிக்குத் தயார் செய்கிறார்கள். அங்கேயும் சிசேரியன் நடக்காமல் இல்லை. ஆனால் அது குறைவு. சிக்கல் ஏதேனும் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை.

இங்கு பிரசவ வலியை எதிர்கொள்வது பற்றி வகுப்புகள் எடுக்கிறார்கள். அந்த வகுப்புகளுக்கு கணவரும் உடன் வரவேண்டும். கணவர் வெளியூரில் இருந்தால் அம்மா செல்லலாம். கவிதாவோடு நான்தான் சென்றேன். லேபர் பற்றி, தாய்ப்பால் கொடுப்பது பற்றி என்று அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு வகுப்புகளும் அற்புதம். டாக்டர் ரேகா சுதர்சன் வெகு சுவாரசியமாக பல அறிய தகவல்களைக் கூறுகிறார். லேபரை எதிர்கொள்ளும் ஆர்வத்தை எழுப்புகிறார். இந்த வகுப்புகளில் தாங்கள் கையாண்ட வித விதமான பிரசவங்களைப் பற்றி அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரசவ பயத்தைப் போக்குவதற்காக எடுக்கப் படும் இந்த வகுப்புகள் நிஜமாகவே பயத்தைக் களைய வைக்கிறது எனலாம்.

பிரசவ வலி...! தாளமுடியாததுதான். ஆனால் தாய் படும் சிரமத்தை விட அதிகமாய் உள்ளே இருக்கும் சேய் படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். லேபர் பெய்ன் பற்றிய வகுப்பில் டாக்டர் கூறும் அறிவுரையில் மிக முக்கியமானது தயவுசெய்து யாரும் கத்தி கூப்பாடு போடாதீர்கள் என்பதுதான் கத்திக் கூப்பாடு போடும்போது அதிலேயே முக்கால்வாசி எனர்ஜி செலவழிந்து விடுவதால் குழந்தையை வெளித் தள்ளுவதற்கு சக்தியில்லாது போய் விடுகிறது. இதனால் ஒரு மணி நேரத்தில் முடியவேண்டிய பிரசவ நேரம் மூன்று நான்கு மணிநேரம் நீண்டு போகிறது. இதனால் உள்ளிருக்கும் சிசுவின் சிரமமும் கூடுகிறது.


பல வெளிநாடுகளில் பிரசவ நேரத்தில் கத்தக் கூடாது, மீறி கத்தினால் அபராதம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பலர் என்ன கொடுமை இது கூறலாம். ஆனால் அதற்கு உண்மையான காரணம், கத்தி கத்தி எனர்ஜி வீணாகி பிரசவ நேரம் அதிகரித்துவிடும், உள்ளிருக்கும் சிசுவை புஷ் பண்ணும் சக்தியை அவர்கள் இழந்து விடக் கூடும் என்பதால் அந்தக் கட்டுப்பாடு என்பது டாக்டர் ரேகா சுதர்சனின் அறிவுரைக்குப் பின்னர்தான் புரிந்தது.

அந்தக் காலங்களில் உடலுழைப்பு அதிகமிருந்தது. சுகப் பிரசவத்திற்கு அது ஒரு பெரிய காரணமாக இருந்தது. இப்போது எல்லாமே இயந்திர மயம் என்ற நிலையில் உடலுழைப்பிற்கு அதிக வாய்ப்பில்லை. ஆனால் அதற்கு பதில் Prenatal excercise என்று யோகா உட்பட பல பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள் அதில் ஒன்று காற்றடிக்கப்பட்ட பெரிய பந்து ஒன்றின் மீது செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியைத் தவறாது செய்து வரும் போது அற்புதமான பலனை அது தருகிறது என்றும் அறிந்தேன். தவிர குறைந்த எடையுள்ள டம்பிள்ஸ் பயிற்சியும் செய்வதும் சிறந்தது.

என் காலத்தில் இப்படி எல்லாம் வகுப்புகள் கிடையாது. இப்போதும் எத்தனை மருத்துவமனைகளில் இது போல் வகுப்புகள் எடுக்கப் படுகின்றன என்று தெரியாது. என் இரண்டு பெண்களும் நார்மல் டெலிவரியில்தான் பிறந்தார்கள் என்றாலும் நான் வலி தாளாது கத்தியிருக்கிறேன். குழந்தையை வெளித் தள்ளத் தெரியாது திணறி இருக்கிறேன். நல்ல மருத்துவர்கள் வரம். கனிவாக பேசும் நர்சுகள் கூடுதல் பலம்.
பிரசவலி என்பது தொடர்ச்சியாக வருவது அல்ல. விட்டு விட்டு வருவது. ஒரு வலிக்கும் அடுத்த வலிக்கும் இடையே முதலில் அதிக நேரம் இருக்கும். வலி தோன்றியதும் அதை உற்று கவனிக்க வேண்டுமே தவிர பதட்டப்படத் தேவையில்லை. வலியின் ஃப்ரீக்வென்ஸி குறைய ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு கிளம்பலாம். தாய்க்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் தேவையான பொருட்களை பத்து நாள் முன்பே ஒரு பையில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

கவிதா வெகு சின்சியராக அத்தனை பயிற்சியையும் செய்தாள். மாடிப் படிகளை பல முறை ஏறி இறங்கினாள். அவளுக்கு லேபர் ஆரம்பித்தவுடன் அவள் என்னிடம் உடனே சொல்லவில்லை. தானே அதை உற்று கவனித்து விட்டு டாக்டர் சொன்னபடி அடுத்தடுத்த வலியின் இடைவெளி குறைந்து ஒரு துளி ரெட் ஸ்பாட் தெரிந்ததும்தான் என்னிடம் கூறினாள். அப்போது விடியற்காலம் மணி இரண்டே முக்கால். நான் உடனே அவளது மாமனாருக்கு போன் செய்தேன். அவர் உடனே காரை எடுத்துக் கொண்டு வந்து எங்கள் தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவில் வாசலருகில் காத்திருந்தார். (எங்கள் தெருவில் கார் நுழையாது இருசக்கர வாகனங்கள் கன்னாபின்னாவென்று நிறுத்தப் பட்டிருக்கும்) எனவே தெருமுனைவரை எவ்வித பதட்டமும் இன்றி நடந்தே வந்து காரில் எறிக் கொண்டாள் அவள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம். டியூட்டி டாக்டர் செக்கப் பண்ணும் பொது கூட எனக்கு லேசாக சந்தேகம்தான். ஏனெனில் குறித்த நாளிற்கு பத்து நாள் முன்பு இந்த வலி வந்திருந்ததால் அது பொய்யா நிஜவலியா என்ற சந்தேகம்தான். ஆனால் டாக்டர் வெளியில் வந்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் டெலிவரியாகி விடும் என்ற போது என்னால் கவிதாவை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பிரசவ நேரத்தில் அங்கு கணவரோ தாயோ உடனிருக்கலாம். பயந்து பதறுகிறவர்கள் உள்ளே செல்லாமல் இருப்பதே நல்லது. நான் முதல் அரைமணி நேரம் லேபர் அறையில் கவிதாவோடு இருந்தேன். டாக்டர் ரேகா சுதர்சனின் வகுப்புகளில் கூறியபடி நூறு சதவிகித ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கவிதா. பிராணன் போகும் வலியிலும் அவளிடமிருந்து சின்ன சப்தம் கூட வரவில்லை. குழந்தையை வெளித்தள்ளுவதற்கு சில வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனைப் பின்பற்றி முயன்றால் சிரமம் குறையும். கடைசி வரை கவிதா வலியில் கத்தவே இல்லை. அவளது வலி முழுவதும் கண்களில் கண்ணீராக வெளியேறியதே தவிர அம்மா என்கிற சின்ன முனகல் கூட அவள் வாயிலிருந்து எழவில்லை. அவள் மீது என் மரியாதை மேலும் கூடியது. ஒரு தாயாக என்னால்தான் அந்த வலி மிகுந்த சூழலில் தொடர்ந்து நிற்க முடியவில்லை. அவள் மாமியாரை அங்கு விட்டு விட்டு வெளியில் வந்தேன். அடுத்த அரைமணியில் அவளது மாமியார் வெளியில் வந்தார். பெண்குழந்தை என்றபடி என்னை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

லேபர் அறையில் டியூட்டியில் இருந்த அத்தனை பேரும் கவிதாவைப் புகழ்ந்தார்கள். இந்த அளவுக்கு எந்த பெண்ணும் இதுவரை இப்படி ஒத்துழைப்பு அளித்ததில்லை என்று வியந்தார்கள். கவிதாவை மறக்கவே முடியாது என்று ஒரு நர்ஸ் பாராட்டினார். ஆனால் கவிதா மனமார நன்றி சொன்னது டாக்டர் ரேகா சுதர்சனுக்கு. அவர் கொடுத்த தைரியம்தான் தன் ஒத்துழைப்புக்குக் காரணம் என்றாள். நல்ல மருத்துவரும், சரியான வழிகாட்டுதலும் இருப்பின் பிரசவம் என்பது நல்லபடி நிகழக்கூடிய ஒன்றுதான். இப்போது மருத்துவ உலகம் டெக்னிகலாக எவ்வளவோ முன்னேறி விட்டது.

பிரசவம் குறித்து மட்டுமல்ல. தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் இங்கு வகுப்பு எடுக்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகளை விரிவாக கூறுகிறார்கள். ஏற்கனவே நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் அவர்களது விவரிப்பு சுவாரசியமாக இருக்கிறது. பல அனுபவஸ்தர்களை அழைத்து சிறப்பு லெக்சர் கொடுக்கச் செய்கிறார்கள். ஏற்கனவே அங்கு நார்மல் டெலிவரியாகி நல்ல முறையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து வருபவர்களையும் அழைத்து தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறார்கள். அங்கு பணி புரியும் ஒரு டாக்டரே தன் குழந்தைக்கு தினமும் தேவையான தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து வீட்டில் வைத்து விட்டு வருவதாகக் கூறினார். சில நேரம் தன் பணிக்கு இடையிலும் கூட குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து அனுப்புகிறார் என அறிந்த போது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்து மயிலைக்கு அருகில் உள்ள பிரபல மருத்துவமனையின் லேபர் வார்டில் குத்துப் பாட்டுகளை அலறவிட்டு பிரசவ வலியில் பரிதவிக்கும் பெண்களுக்கு கூடுதலாக தலைவலியையும் கொடுத்திருப்பதை அறிவேன். சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் முறையிட்டும் எந்த பயனுமில்லை. பல டாக்டர்கள் (நான் எல்லோரையும் சொல்லவில்லை) மருத்துவமனைக்கும் தனக்கும் லாபம் வேண்டி, கடைசி நேரத்தில் ஏதோ சிக்கல் இருப்பதாக பொய் சொல்லி, நார்மலாக நிகழ வேண்டிய பிரசவத்தை சீசெக்ஷனாக்கி இருக்கிறார்கள். இதை எழுதுவதற்கு முன் எனக்குத் தெரிந்தவர்கள் பலரிடம் அவர்களது பிரசவம் பற்றி கேட்டேன். நான் பேசிய பத்து பேரில் எட்டு பேர் கசப்பான அனுபவங்களையே கூறினார்கள்.

உங்கள் மகளோ, மருமகளோ, சகோதரியோ, மனைவியோ, கருவுற்றதும், முதலில் நல்ல மருத்துவர்களைக் கொண்ட நம்பகமான மருத்துவமனையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவர் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறாரா அல்லது மருத்துவமனையின் லாபத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது நல்லது. எனக்குத் தெரிந்து ஒரு பெண்ணிடம் அவளது மருத்துவர் கடைசி நேரம் ஏதோ சிக்கல் என்று சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூற, அவளது அம்மா துளியும் பயப்படாமல் அதெல்லாம் தேவையில்லை என் பெண்ணுக்கு சுகப் பிரசவமாகும். அதுவரை காத்திருப்போம் என்று உறுதியாக கூற, உடனே மருத்துவர், "அப்பறம் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா எங்களைக் குறை சொல்லக் கூடாது" என்று பயமுறுத்த, அப்போதும் அந்த அம்மா உறுதியாக இருந்திருக்கிறாள். இறுதியில் அந்தப் பெண்ணுக்கு நார்மலாக டெலிவரியாகியிருக்கிறது. அதே இடத்தில் பிரசவத்திற்காக சென்றிருந்த என் உறவினரிடமும் டாக்டர் இப்படி கூற இவர்கள் பயந்து சிசேரியனுக்கு சம்மதித்திருக்கிறார்கள். பிற்பாடு என் உறவினர் நாமும் அந்த அம்மா மாதிரி பயப்படாம இருந்திருந்தா நார்மலாவே குழந்தை பிறந்திருக்குமோ என்று யோசித்து வருந்தினார்.

முன்பெல்லாம் சீதாபதி மருத்துவமனையில் கேண்டீன் கிடையாதாம். இப்போது இரண்டாவது மாடியில் தரமான கேண்டீனும் இயங்குகிறது. அனைத்து ஐட்டங்களும் தரமாக சுவையாக இருக்கிறது. விலையும் சகாயமாக இருக்கிறது. கொடுக்கிற காசுக்கு வயிறு நிறைகிறது. குறை என்று சொல்ல வேண்டுமானால் இந்த கேண்டீன் பணியிலும் தமிழ் தெரியாத வடகிழக்கு ஆட்கள் இருக்கிறார்கள். சில நேரம் சொதப்புகிறார்கள். தவிர அறைகளில் கொசுத் தொல்லையும் இருக்கிறது. வேண்டிலேட்டர்களில் கொசு வலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டு வந்தோம்.

இறுதியாக ஒரு விஷயம். நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்றாலும் கருவுற்ற காலத்தில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்களை, அதாவது உடற் பயிற்சிகள், யோகா, தினசரி நடை பயிற்சி, சரிவிகித சத்துணவு, சர்க்கரை அளவு, இரத்தக்கொதிப்பு இவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற விஷயங்களை மன உறுதியோடு சரியான முறையில் கடைபிடித்தால், நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்றாலும், நார்மல் டெலிவரி என்பது உங்கள் கையில்தான். லேபர் பெயின் பற்றி நிறைய விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது. வீண் பதட்டமும் தேவையில்லை.

நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை மற்றவருக்குச் சொல்வதில்லையா. அது போல்தான், யாம் பெற்ற நல் அனுபவங்கள் என இவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மறுபடியும் நார்மல் பிரசவங்கள் அதிகரிக்கவேண்டும் என்ற ஆசையும் கூடத்தான். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே.