Monday, March 30, 2015

நானும் மயிலையும்

நான் பிறந்து வளர்ந்து இன்று வரை  வாழ்ந்து கொண்டிருப்பது மயிலையில்தான்.  நினைவு தெரிந்த நாளில் நான் கண்ட மயிலைக்கும், இன்று காணும் மயிலைக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்.  சுதந்திர நாட்டில் வளர்ச்சி தேவைதான் என்றாலும், அந்த பண்டைய அழகு அடியோடு அழிந்து விட்டதே என்ற ஆதங்கம் ஏற்படத்தான் செய்கிறது.  குளத்தை சுற்றிலும்  கடைகள் கிடையாது. தென்னை மரங்களைக்  காணலாம். குளக்கரை படியில்தான் ரெண்டு மாசத்துக்கொருதரம் அத்தை அம்பட்டனிடம் தலை மழித்துக்கொண்டு குளத்தில் ஸ்நானம் பண்ணுவாள்.  தலை பண்ணிக்கபோறேன் கூட வா என்று என்னை இழுத்துச் செல்வாள். அந்தக்  கொடுமையெல்லாம் புரியாத வயது அது.  நீ மட்டும் எதுக்கு மொட்டையடிச்சுக்கற  ஏன் நல்ல புடவை கட்டிக்கறதில்ல , சட்டை போட்டுக்கறதில்ல? என்று கேட்பேன். அத்தை பதில் சொல்ல மாட்டாள்.

இப்போது கோயிலைச்சுற்றியிருந்த பாரம்பரிய அழகுகள் எல்லாம்  அடியோடு அழிந்து விட்டது.  அழிக்கம்பி போட்ட திண்ணைகள் கொண்ட பெரிய பெரிய வீடுகள் எல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன.  இன்றைய அம்பிகா அப்பளம் கடை,  NAC,  சுக்ரா, விஜயா ஸ்டோர்ஸ் எல்லாம் அன்றைய அழகான  பெரிய வீடுகளிருந்த இடம். அந்த வீடுகளின் மாடியிலிருந்து தேர் இழுத்துச்செல்பவர்கள் மீது சிலீரென தண்ணீரை மோந்து மோந்து கொட்டுவார்கள்.

நள்ளிரவில் எழுந்து, அத்தையின் கை பிடித்து ரிஷப வாகனம் காணவும்,  வியர்க்க விறுவிறுக்க, தேரோட்டம்  காணவும்,  மூன்று மணி வெயிலில் 63 நாயன்மார்கள் அணிவகுத்து செல்வதை  தரிசிக்கவும், சென்றதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மல்லிகை பூக்கும் காலம் இது.  எங்கள் குடும்பம் அப்போது பெரியது. அத்தை குடும்பங்கள் எல்லாம் அருகருகே வசித்த காலம்.  ஒரு படி மல்லிகை மொக்குகளை வாங்கி கூடத்தில் கொட்டி, பெரியத்தையும், சின்ன அத்தை பெண்களும், அம்மாவும், அக்காக்களும், தொடுப்பார்கள்.  சுவாமிக்கும் அம்பாளுக்கும் சார்த்த அப்பா வேட்டி புடவை வாங்கி தயாராக வைத்திருப்பார். ரெண்டு மணிக்கெல்லாம், ஒவ்வொருவராய் கிளம்பத்தயாராவார்கள்.  அத்தை பெண்ணோ அல்லது அக்காவோ எனக்கு ரெட்டைப் பின்னலிட, அத்தை அதில் பூவை சொருகுவாள்.  நல்ல பாவாடை சட்டை அணிவித்து என்னை தயார் செய்வாள் அக்கா.

மொத்த குடும்பமும் பேச்சும் சிரிப்புமாய்  கிளம்புவோம்.என்னை அத்தையின் கை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும்.  வீட்டில் எத்தனை பட்சணங்கள் இரைந்தாலும், அங்கே தள்ளுவண்டியில் தட்டு நிறைய அடுக்கி வைத்திருக்கும், கமர்கட்டுக்கு நாக்கு ஏங்கும். வாங்கித்தா என்று கேட்டால் அத்தை விழி உருட்டி முறைப்பாள்.  அதெல்லாம் சாப்டப்படாது. பேசாம வா கேட்டயா?  அவள் ஆசையாய்  வளையல் ரிப்பன்கள்,  சாந்துக் குப்பிகள்,  மணிமாலைகள் என்று வரிசையாய்  வாங்கித் தந்ததும்,  கமர்கட் மறந்து விடும்.

தாவணி அணிய ஆரம்பித்ததிலிருந்தே நான் திருவிழாக்களுக்கு செல்வதை விரும்பவில்லை.  அந்தக் கூட்டம் அலர்ஜியை ஏற்படுத்தியது.  தவிர வாசலில் உட்கார்ந்து வண்ண மயமாய் திருவிழாக்களுக்கு செல்லும் கூட்டத்தைப் பார்ப்பதே ஒரு சுவாரசியமாயிற்று.  ஆனால் பிக்ஷாண்டவர்  தரிசனம் மட்டும் இன்று வரை காணத் தவறியதில்லை   வருடம் முழுக்க நமக்கு படியளப்பவன் அன்று பிட்சை  பாத்திரம் ஏந்தி வளம் வருகிறான். அவன் பிச்சைப் பாத்திரத்தில் பணம் போடுவதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?  அதனால் அதை மட்டும் தவற விடுவதில்லை.


திருவிழாவுக்கு போகா விட்டாலும் அப்போதெல்லாம் திருவிழா  முடிந்து கோயிலில் கச்சேரி களை  கட்டும்  போது  மட்டும் தவறாமல் அத்தையோடு ஆஜராகி விடுவேன்.  பாதி கச்சேரியில் அத்தை போலாம் வாடி  என்று என்னை இழுக்கும் போது  முழுசும் கேட்டுட்டு போலாம் அத்தை என்று கெஞ்சுவேன்.  நாளைக்கு வேலை இருக்குடி, ஏந்துர்க்கணும் வா போலாம் என்று இழுத்துக் கொண்டு செல்வாள்.

ஆனால் ஒருவரது  கச்சேரிக்கு மட்டும் அப்பாவைத்தவிர அத்தனை பேரும் முன்னாலேயே போய்  இடம்பிடித்து உட்கார்ந்து விடுவோம்.  கச்சேரி முடியும் வரை அசங்க மாட்டோம்.  அன்று கோவிலில் எள்ளு போட்டால் கீழே விழாது.  நவக்கிரக சந்நிதி ஆரம்பித்து முன்னால்  இருக்கும் சந்நிதிகளின் மேலே எல்லாம்  சிவகணங்கள் மாதிரி ஏறி அமர்ந்திருக்கும் வாலிபர்களின் கூட்டம்.  அந்த பாடகர் வெண்கலக்குரல் மன்னன் சீர்காழி கோவிந்தராஜன்.  தனி வாசிப்பின் போது கடம் வாசிப்பவர் கடத்தை  ரெண்டு முறை தூக்கிப் போட்டு பிடிப்பார் பாருங்கள், கரகோஷம் அள்ளும்.


அப்போதெல்லாம் அறுபத்திமூவரன்று மிஞ்சிப்போனால் நீர் மோர் கொடுப்பார்கள் பார்த்திருக்கிறேன். பிறகு ரோஸ்  மில்க் அதோடு சேர்ந்து கொண்டது. அதன் பிறகு, சாம்பார் சாதம், தயிர்சாதம் சர்க்கரைப் பொங்கல் என்று விநியோகித்தார்கள்.  இப்போது பிரிஞ்சி பிரியாணி என்று  பட்டை லவங்க  வாசனை மயிலை முழுக்க காற்றில் பரவி வருகிறது. பசிக்கு உண்டது போய்  ருசிக்கு உண்ணும் கூட்டம் அதிகரித்து விட்டது.  தேவையோ தேவையில்லையோ கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, பாதி தின்று, மீதியை வீதி எல்லாம் எறிந்து, கால் வைக்கும் இடமெல்லாம்  அன்று அன்னம்தான். மகா வேதனையாய்  இருக்கும்.

இதோ இப்போது திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.  அத்தையின் நினைவு வருகிறது. அவள் காட்டிய பாசமெல்லாம் நினைவுக்கு வருகிறது. அவளது விரல் ஸ்பரிசத்திற்கு மனசு ஏங்குகிறது. "பைத்தாரி நீயே பாட்டி ஆயாச்சு இன்னும்  என் கையைப் பிடிச்சுப்பயாக்கும்?"  அத்தை கெக்கலிப்பது கேட்கிறது. எனவே,  ஏற்கனவே கண்டதை எல்லாம் மனசில் நிறுத்தி மானசீகமாய் தரிசித்து திருப்திப் பட்டுக் கொள்கிறேன்.

இப்போதெல்லாம்  கோவிலுக்கருகில் சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்குள் நம் சக்தியெல்லாம் வடிந்து விட்டாற்போல் ஆயாசமேற்படுகிறது.  அத்தனை டிராபிக்,  நெரிசல், சத்தம், நடப்பவர்க்கு வழியற்ற பாதுகாப்பற்ற சூழல்.

கீழே  நடைபாதை கடைகளற்ற அழகான அமைதியான மயிலை தெப்பக்குளம்.



Saturday, March 21, 2015

உப்பு வேலி (The Great Hedges of India)

ஒரு வாரமாய்  முகநூல் பக்கம் செல்லவில்லை.   நான்  ஒரு கொடுமையான முட்புதர்  வேலியில் தொலைந்து போயிருந்தேன்.    மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் சரித்திரத்தின் மிச்சங்களைக்  கண்டறியும் ஒரு நீண்ட தேடலில் நானும்  கூடவே அலைந்து கொண்டிருந்தேன்.  சென்ற  வாரம்   "உப்பு வேலி" என்ற புத்தக வெளியீட்டைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா. அதன் தொடர்ச்சிதான் இது.  நண்பர் கிருஷ்ணா மூலம் அன்றிரவே புத்தகம்  என் கைக்கு வந்து சேர்ந்தது. பிரித்ததும் ஆச்சர்யம். உள்ளே ஆங்கில மூலத்தை எழுதிய Roy  Moxham  மற்றும் ஜெயமோகன்,   ஆகியோரின் கையொப்பங்களுடன்  புத்தகம் எனக்கு வந்திருந்தது. . உங்கள்  "உப்புக் கணக்கு"  பற்றி  Roy Moxham  இடம் கூறினேன்.  புத்தகத்தையும் காட்டினேன் என்று கிருஷ்ணா கூறிய  போது எனக்கு  மகிழ்ச்சியும் நன்றியும் பொங்கியது.  ஜெயமோகனிடமும் உப்புக் கணக்கு பற்றி தான்  சொன்னதாகவும்,  இப்படி ஒரு புத்தகம் வந்திருப்பதே எனக்கு தெரியாதே என்று  அவரும் ஆச்சர்யப்பட்டதாகவும்  கூறினார் கிருஷ்ணா.

கிருஷ்ணாவும் நானும்  வெகு நேரம் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.  கிருஷ்ணா ஒரு லட்சிய இளைஞர்.  மிகுந்த தேசப் பற்று கொண்டவர்.  இந்திய தேசம் பற்றி பல கனவுகள் உண்டு இவருக்கு. எனது  "உப்புக் கணக்கு"  வெளியான உடன்  புத்தகம் குறித்து எனக்கு முதலில் வந்த  மின்னஞ்சல் இவரிடமிருந்துதான்.  இன்று வரை அந்த  புத்தகத்தை எத்தனையோ பேரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.   2009 ல் எனது உப்புக்கணக்கு பிரிண்ட்டாகி  பைண்டிங்கில் இருந்த சமயத்தில்தான் நான் இந்த முட்புதர் வேலியைப்  பற்றிய குறிப்பை இணையத்தில் படித்தேன்.  அடடா இதைப் பற்றி எதுவுமே எழுத இயலாது  போய் விட்டதே என்று வருத்தப்பட்டேன்.  ஆனால் அதிக விவரம் அப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  Roy Moxham  இது குறித்து எழுதியிருப்பது பற்றி அப்போது தெரியவில்லை எனக்கு.   இப்போது  தமிழில் உப்புவேலியாக  வெளி வந்திருக்கிறது இது.

இனி "உப்புவேலி " பற்றி:

நம் நாட்டில் நடந்த ஒரு அவலத்தை, நம் சரித்திரங்களில் மறைக்கப்பட்டு விட்ட, அல்லது மறக்கப்பட்டுவிட்ட  மிகப்பெரியதொரு   உண்மையின் மிச்சங்களைத் தேடியறிவதே  தன்  வாழ்வின் லட்சியமாகக் கருதி பெரும் பொருட் செலவுகளைப் பொருட்படுத்தாமல்  ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டவர்,  நம்புங்கள்  அவர்  ஒரு இந்தியரல்ல,  ஆங்கிலேயர்.  ஒரு பழைய புத்தகக் கடையில் அவர் வாங்கின ஒரு புத்தகத்தில்தான் இந்தத் தேடலின் விதை  அவருக்குள் விழுந்திருக்கிறது என்பது  கண்டிப்பாக அசாதாரணமான ஒரு நிகழ்வுதான். அவருக்கிருந்த ஆவலும், லட்சியமும்,  நம் இந்திய அரசுக்கோ, இந்திய சரித்திர ஆய்வாளர்களுக்கோ, இந்தியக் கல்வித்துறைக்கோ  ஏன் துளியும் இல்லாமல் போனதென்று புரியவில்லை.

நம் சரித்திரத்தைப் பற்றி நாமே கவலைப்படவில்லை.  ஆனால் Roy  Moxham, பிரித்தானிய அரசு இந்திய மக்களுக்கு செய்த கொடுமையின் உச்சக்கட்டமான ஒரு விஷயத்தை   தனது கடுமையான  தேடலின் முடிவில், பல்வேறு  ஆதாரங்களுடன்  வெளிப்படுத்தியிருக்கிறார்.

உப்பு பெறாத விஷயம் என்று  சுலபமாகச் சொல்கிறோம்.  ஆனால் இந்த உப்பை விலை கொடுத்து வாங்க இயலாமல்  இந்த தேசத்தில் கோடிக்கணக்கானவர்கள் உயிர் துறந்திருக்கிறார்கள்.  உப்பை வைத்து மிகக் கேவலமான அரசியலை நிகழ்த்தியிருக்கிறது ஆங்கில அரசு.   இந்திய அடிமைகளின் உழைப்பைச்சுரண்டி உற்பத்தி செய்யப்பட்ட உப்பு  மூலம், ஆங்கிலேயர்கள்  மாபெரும் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள்.  இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அளவற்ற  பணம் பிரிட்டனை வளப்படுத்தியிருக்கிறது.   ஏழைகளுக்கு மிகச் சுலபமாக கிடைக்க வேண்டிய உப்பு, அவர்களுக்கு எட்டாக்கனியாக மாறி கூட்டம்கூட்டமாய் இந்திய ஏழைகள் உயிரைவிடக் காரணமாகி இருக்கிறது அவர்கள் விதித்த உப்பு வரி.

உப்பு வரியை வசூலிக்கவும், உப்புக் கடத்தலைத் தடுக்கவும் அவர்கள் எழுப்பியதுதான்  சுங்கவேலி.  இந்தியாவின் குறுக்காக கிட்டத்தட்ட 2500 மைல் நீளத்திற்கு, முட்புதர்களையும், இலந்தை மரங்களையும், சப்பாத்திக் கள்ளிகளையும் இன்னும் பலவிதமான தாவரப் புதர்களையும் கொண்டு 12 அடி உயரம், பதினான்கடி  அகலத்தில்  ஒரு முட் சுவரை எழுப்பி இருக்கிறார்கள்.   ஜஸ்ட் 150 வருடங்களுக்கு முன்புதான்  இந்த மெகா திட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.   இதை அமைக்க எந்த அளவுக்கு மனித சக்தி தேவைப்பட்டிருக்கும்.  எத்தனை கிராமங்கள் பாதிக்கப் பட்டிருக்கும்.  1857 ல் நடந்த கலகத்தைக் குறித்து  எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டுள்ள  நிலையில்,  அதே காலக் கட்டத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையான  வேலி  திட்டத்தைப் பற்றி நம் சரித்திரத தொடர்பான நூல்களில் எங்குமே எழுதப்படவில்லை என்பது புரியாத புதிர்.  ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மன்னர்கள் குறித்து ஆர்வமுடன் எழுதுபவர்கள் கூட 1800 களில் நடந்த இந்த விஷயத்தைப் பற்றி  தெரிந்து கொள்ள  ஆர்வம் காட்டாமல் விட்டது ஆச்சர்யமாயிருக்கிறது.

1823 ல்  சிறிய அளவில் எழுப்பப்பட்ட இந்த சுங்க வேலி   1869 ல் 2500 மைல் அளவுக்கு எழுப்பப்பட்டு   முழுமையடைந்திருக்கிறது.  கோடிக்கணக்கில்  இந்திய மக்களிடமிருந்து உப்பு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.  12000 பேர் இந்த வேலியின் பாதுகாப்பிற்கும், வரி வசூலிக்கவும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  மக்கள் இதற்கெதிராகப்  போராடி இருக்கிறார்கள்.  திருட்டுத்தனமாய் உப்புக் கடத்தல் செய்திருக்கிறார்கள்.  வேலியைப்  பல இடங்களில் தீயிட்டு கொளுத்தி இருக்கிறார்கள்.  பல இடங்களில் வேலி  இயற்கை இடர்பாடுகளால்  தானாய் அழிந்திருக்கிறது.  பஞ்சக் காலங்களில்  கூட  ஈவிரக்கமின்றி உப்பு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.  லட்ச லட்சமாய் மக்கள் பஞ்சத்திலும், உப்புக் குறைபாட்டினாலும் நோய் கண்டு மடிந்திருக்கிறார்கள்.  1879 ல் இந்த சுங்க வேலி  வரி வசூலிப்பு கை விடப்பட்டிருக்கிறது.

இந்திய மக்களின் உழைப்பைக் கொண்டு வேலி எழுப்பி,  இந்திய  மக்களின் உழைப்பைக் கொண்டு உப்பு உற்பத்தி செய்து,   இநதிய மக்களுக்கே வரி விதித்து,  அவர்களை கசக்கிப் பிழிந்து, கோடி கோடியாய்  செல்வம் சேர்த்து அவற்றைக்கொண்டு செழிப்பாய் வாழ்ந்துள்ளனர் ஆங்கிலேயர்.  உழைத்தவனுக்கு மாதத்திற்கு காலணா கூலி.  ஆனால் அவன் வரியாகக் கட்ட வேண்டிய தொகையோ அதை விட பத்து மடங்கு.  பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்தின் அவலங்களைத்  மிகுந்த வேதனையுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்  ராய் மாக்ஸம்.

சட்ட விரோதமாய் வேலியைத் தாண்டிய  மனிதர்கள் மட்டுமல்ல, மான்களும், மற்ற விலங்குகளும்  கூட கூட்டம் கூட்டமாய் குழி பறித்துக்  கொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு பயணக் கட்டுரையாக ஆரம்பிக்கும் இந்தத் தேடல் போகப் போக ஒரு துப்பறியும்  நாவல் படிப்பதைப் போல் விறு விறுப்பாகச் செல்கிறது.   தன் வேலி  தேடிய  பயணத்தினூடே இன்றைய இந்தியாவில்  தான் கண்டவை கேட்டவை,  சந்தித்த மனிதர்கள்,  என அனைத்தையும் உள்ளது உள்ளபடி எவ்வித மேல்பூச்சுமின்றி விவரித்திருக்கிறார்.

உப்பின் சரித்திரம், முக்கியத்துவம், உப்புக் குறைபாடுகளால் ஏற்படும் மரணம் என  உப்பைக் குறித்து  எத்தனை   எத்தனை தகவல்கள்! அவை எல்லாமே வெகு விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கின்றன. உலக அளவில் சீனாவின் மேற்கு எல்லையில் தங்கக் கட்டிகளைப் போல் உப்புக்கட்டிகள் அரசு முத்திரையோடு உருவாக்கப்பட்டு  அவை தங்கத்திற்கு பண்ட மாற்றாக விற்கப்பட்டுள்ளன,  இந்த பண்டமாற்றிலும் கூட தந்திரம் மிகுந்த வியாபாரிகள் அதிகம் சம்பாதித்தனர் என  அறியும்  போது பிரம்மிப்பேற்படுகிறது.

உப்புக்காக பல போர்கள் நிகழ்ந்துள்ளது இந்த உலகில் என்கிறார் இதன் ஆசிரியர். இன்றைக்கு  தனக்கு வேண்டாதவரைக் கைது செய்ய அவர் வீட்டில் கஞ்சா  வைத்து விட்டு கைது செய்து சிறையில் அடைப்பதைப்போல, 1850 களில்  உப்பை ஒருவர்  வீட்டில் சிதற விட்டு, அதை காரணம் காட்டி அவர் சட்டவிரோதமாய் வீட்டில் உப்பு தயாரித்தார்  என்று கைது செய்து சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

இந்த பிரும்மாண்டமான நீளம் கொண்ட முட்புதர் வேலியின் சிறிய பகுதியையாவது  நிச்சயம் தான் கண்டு பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன்  அதற்கான, ஆதாரங்கள், வரை படங்கள், ஜி.பி.எஸ். கருவி, எனக் கிளம்பி இந்தியா வரும் ராய் மாக்ஸம் அட்சரேகை, தீர்க்க ரேகைகளை விவரங்களைத்  துல்லியமாக கணக்கிட்டு தனது கருவியில் குறித்துக் கொண்டு  அவற்றின் உதவியோடுதான். தன்  பயணத்தைத் துவக்கியிருக்கிறார். அவருடன் பயணித்த அந்த சந்தோஷ் எனும் இளைஞர் பாக்கியம் செய்தவர். அவரது பயணம் அசாதாரணமானது. ஆக்ரா, ஜான்சி, இட்டாவா, என்று அவர் சென்ற பாதைகளில் சரியான போக்கு வரத்து வசதிகள் கூட அவருக்குக் கிடைக்கவில்லை.  இறுதியில் இட்டாவாவிலிருந்து   சம்பல் நதி வழியே, நடைப்பயணமாக பல இடர்களை எதிர்கொண்டு  பலிகர் வந்து,  இறுதியில் ஒரு முதியவரின் துணையோடு Parmat  Lein  என்று அவரது  ஆழ்மனதில் பதிந்து விட்ட அந்த புதர்வேலியின் மிச்சங்களை அவர் காணும்  போது வாசித்துக் கொண்டிருந்த என் கண்களில் நீர் பொங்கியது.  நானே கண்டு விட்டாற்போல் ஆனந்தம் ஏற்பட்டது.

முட்புதர் வேலி அமைப்பதற்கான  பாதை நன்கு உயர்த்தப்பட்டு  அதன் மீதுதான்  இந்த வேலியை  ஆங்கிலேயர்கள் அமைத்திருக்கிறார்கள். சில இடங்களில் இவை உயிருள்ள முள் மரங்களாலும், சில இடங்களில் வெட்டப்பட்ட புதர்களாலும்  அமைக்கப்பட்டிருக்கிறது.  1879 ல் இத்திட்டம் கைவிடப்பட்ட பிறகு இவற்றின் பெரும்பகுதி விவசாய நிலங்களாகவும். சாலைகளாகவும் மாறியது போக,  ராய் மாக்ஸம்  கண்டது அதன் ஒரு சிறு பகுதிதான்.  இனியாவது இந்திய அரசு விழித்துக் கொண்டு,  ஒரு கொடும் நிகழ்வுக்கு ஆதாரமாக மிச்சமிருக்கும் அந்த முட்புதரை சரித்திரச் சின்னமாக பாதுகாக்குமா? என்ற பெருமூச்சு வெளிப்பட்டது என்னிடமிருந்து.

ராய் மாக்ஸம்  இறுதியாய் பயணித்துக் கண்டறிந்த அந்த குறிப்பிட்ட இடத்தை Google  Earth ல்  தேடிப் பிடித்து screen  shot  எடுத்து அளித்துள்ளேன்.  (கடைசி படம்) ஏதோ என்னால் முடிந்தது.  சம்பல் நதியின் மீது அப்போது கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்த பாலம் கூட ஒரு கோடாகத் தெரிகிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. ஆங்கிலத்தில் "The Great Hedges of India" by Roy Moxham. தமிழில் "உப்புவேலி"  சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். "எழுத்து" பதிப்பிட்டிருக்கிறது.  ஜெயமோகன் முன்னுரை அளித்திருக்கிறார்.

இனி உணவு தயாரிக்க உப்பு ஜாடியை எடுக்கும்போதெல்லாம் அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டுதான்  உபயோகிப்பேன்  எனத் தோன்றுகிறது.








Friday, March 13, 2015

7.83 ஹெர்ட்ஸ் (புத்தக விமர்சனம் )

ஒரு வாரம் முன்னாடி படிப்பதற்காக இதை எடுத்தேன்.  என்னமோ தெரியவில்லை. கவனச் சிதறல்கள்.  40 பக்கம் தாண்ட நாலு நாளாயிற்று. இப்டி படிச்சா வெளங்கிடும்  (இது சுதாகரின் மைண்ட் வாய்ஸ் )  நேற்று மீண்டும் எடுத்ததும் எனக்கே ஒரு ரோஷம் ஏற்பட்டது.  எப்படியாவது இன்று இதை முடித்து விட்டுத்தான் மறுவேலை என்று முடிவு செய்து கொண்டேன்.

காலையில் பாலை அடுப்பில் வைத்து விட்டு புத்தகத்தைப் பிரித்தேன்.  குக்கர் பாட்டுக்கு விசிலடித்துக் கொண்டிருந்தது நம்புங்கள் என் காதில் உறைக்கவேயில்லை.   வாசல் பெருக்க வந்த வேலைக்காரி  கதவைத்தட்டி அக்கா ரொம்ப நாழியா விசில் சத்தம் வருதே என்று குரல் கொடுக்க ஓடிச்சென்று அடுப்பை அணைத்தேன்.  காப்பியைக் கலந்து கையில் வைத்துக் கொண்டு மீண்டும் வாசிப்பு.  எனக்கு காப்பி ஞாபகம் வரும்போது அது ஆடைபடிந்து ஆறிப்போய்....

அதை  மீண்டும் ஓவனில் சுடவைத்து குடித்த  கையோடு  அரிசியைக்  களைந்து குக்கரில்  வைத்து விட்டு கோவைக்காயை நறுக்கி கறிக்கு தாளித்து விட்டு  வந்து  மறுபடியும் புத்தகத்தை எடுத்தேன்.   கோவைக்காய் அடி பிடித்து கரிந்து போக, அதை மேலோட்டமாக எடுத்து  வைத்து விட்டு மீண்டும் வாசிப்பு.  சாம்பார், ரசம்  எதுவும் கிடையாது. பருப்புப் பொடியும் கோவைக்காய் கறியும் போதும் என்பது முடிவு.  ஒரு வழியாய்  விடிய விடிய விழித்திருந்து  வாசித்து முடித்த  போது மணி அதிகாலை  2.26.

உன் கதை போதும் நீ கதைக்கு வா என்று யாரோ கத்துவது புரிகிறது.  தோ வந்துட்டேன்.   கோயம்பேடிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸில் போயிருக்கிறீர்களா?   பஸ்  கிளம்பி,  தாம்பரம் வரும் வரை  ஒரே சத்தமும், கசகசப்புமாய்  லோக்கல் டிராபிக்கில்  நின்று நின்று  பயணத்தில் செட்டில் ஆக கொஞ்சம் டைம் எடுக்குமே  அது மாதிரி ஆரம்பத் தடுமாற்றம்  எனக்குக் கொஞ்சம்  ஏற்பட்டது.   ஆனால்  அதற்குப் பிறகு தாம்பரம், வண்டலூர் தாண்டி தங்க நாற்கர சாலையில் பேய்க்காற்று முகத்தில் அறைய  ஒரு வேகம் எடுக்கும் பாருங்கள்.  அதை விட நாலு மடங்கு வேகம் இதில் எடுக்கிறது  கதை.

அடேயப்பா...   எங்கேயோ ஆரம்பித்து, உலகம் முழுக்க ஒரு சுற்று சுற்றி வந்து, எத்தனை தகவல்கள்!   பிரம்மிப்பாய் இருக்கிறது.   இது வெறும் அறிவியல் புனைவுக்  கதை   மட்டுமல்ல.   சரித்திரம்,  பூகோளம், விலங்கியல், கணக்கு, மனோதத்துவம்,  காதல்,  பாசம்,  தத்துவம், உணர்வுகள்   என்று எல்லாமே  சரி விகிதத்தில் கலந்த அழகான கலவை இது. 

எத்தனை  எத்தனை புதிர்கள்!....  அவை ஒவ்வொன்றும் தெளிவாக விடுவிக்கப்படும் போது ஆசிரியரின் அறிவுத்திறமை வியக்க வைக்கிறது. அதுவும் அந்த போர்ஜ் துப்பாக்கியின் புதிர் விடுவிக்கப் படும்  போது சபாஷ் சொல்ல வைக்கிறது.  இதற்கென நீண்ட ஆராய்ச்சி செய்திருந்தாலொழிய, இது மாதிரி கதைகளை எல்லோராலும் எழுதி விட முடியாது.  சாண்டில்யன் படிக்கும்  போது  அவர் எழுதும் அரசியல் தந்திரம், போர் வியூகம் இதெல்லாம் நம்மை விழி விரிக்க வைக்குமே..   அப்படி ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   இந்த மனுஷனா ஒண்ணுமே தெரியாதது போல் என் எதிரில் அன்றொரு நாள்  உட்கார்ந்து படு சாதுவாய் பேசிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது.

ஓநாய்களின் மீது மரியாதையே வந்து விடும் அளவுக்கு  எத்தனை தகவல்கள். அதுவும் வேதநாயகம் தன்  இயல்பான தின்னவேலி பாஷையில்  அவற்றைப் பற்றிய தகவல்களை  சுவாரசியமாக சொல்லும்  போது   எனக்கு அந்த காதாபாத்திரத்தில் சுதாகரின் முகம்தான்  தெரிந்தது.  எத்தனை சவத்தெளவு!
அதுவும் சர்வைவல் மற்றும் உணவுச் சங்கிலி பற்றிய விரங்கள்.....அசத்தல்

பழிவாங்க இப்படியெல்லாம் கூட அறிவியல் யுத்தம் செய்ய முடியுமா? பயமாக இருக்கிறது.   இப்போதே இப்படித்தான் பலர் கொலைவெறியோடு அலைகிறார்கள்.  அவர்களது எம்.ஏ.ஓ  அல்லீல்களை  ஆராய்ந்தால் நல்லதாக இருக்குமோ?

மீன்கள்,  மீன்வளர்ப்பு,  மீன் ஏற்றுமதி  தொடர்பான தகவல்கள்,   இந்த உலகம் எந்த அளவுக்கு வணிகத்தில் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.   எல்லாவற்றிலும் கலப்படம்.  உண்ணும் உணவு விஷமாகும் அவலம்,  நோய்களின் முற்றுகை   இவையெல்லாம் கூட ஒருவித   பயோ டெர்ரரிசம்தானோ?

இந்த அறிவியல் நாவலுக்குள்,   கண்ணீர்த் துளிர்க்க வைக்கும், நமது 7.83 ஹெர்ட்ஸ்  அலைவரிசையை எகிரவைக்கும் ஒரு குட்டிக் கதையும் இருக்கிறது. வித்யாவின் flashback.  கொஞ்ச நாளாய் பாலியல் பலாத்காரத்தைக் குறித்து பெண்களாகிய நாங்கள்  நெஞ்சக் கொதிப்போடு விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது என் ரத்தக் கொதிப்பை அதிகரித்தது. நான் ஓநாயாக மாறி  18 Hz  ஐக் கடந்து  அந்த ராட்சஸனைப் பாய்ந்து குதறி குடலை உருவினேன் என் மனசுக்குள். 

திரிகோண எண்களைப பற்றி  புரிந்து கொள்ளும்  அளவுக்கு நான் கணக்கில் புலியில்லை.  என் கணக்கு ஞானத்தைப் பற்றி கொஞ்ச நாள் முன்பு நான் ஒரு பதிவே போட்டிருந்தேன்.  ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கவே கால்குலேட்டரோடு கடைக்குப் போகும் அளவுக்கு என் கணக்கு மூளை மந்தம். இந்த லட்சணத்தில்.......இதெல்லாம் எங்கே புரிய?  ஒருவேளை அய்யோ  பாவம் என்று  சுதாகர் ஒரு பத்து நாள் திரிகோண எண்கள்  பற்றி தனி வகுப்பு  எடுத்தால்  கண்டிப்பாக அவரிடம் சான்றிதழ் வாங்கி விடுவேன் சவத்தெளவென்று.    மற்றபடி கணக்குப் புலிகள் நிச்சயம் என்ஜாய் பண்ணுவார்கள்.

வண்ணத்துப் பூச்சியை இப்படி ஒரு உதாரணமாக இதில்தான் படிக்கிறேன். இதுதான் உண்மை என்றும் தோன்றியது.   "நம்பிக்கைதான் வாழ்க்கை. என்னளவுல நான் உண்மையா வாழறேனா?  அதான் முக்கியம். ஊரைப்பத்தி கவலைப்படல" என்று சொல்லும்  எம்.ஜி.கே. மீது இறுதியில் மரியாதை ஏற்படுகிறது.

வாசிப்பு அனுபவம் என்பது பலவகைப்படும்.  கண்ணீர் சிந்த வைக்கும்,  பேய் பிசாசு என்று பய அனுபவம் தரும்.  மேஜிகல் ரியலிசம் என்று புது மாதிரி அனுபவத்தைத் தரும்,  வாழ்வின் யதார்த்தங்களை கண் முன் நிறுத்தி உணர வைக்கும்.  காதல் மட்டுமே வாழ்க்கை என்ற கற்பனை சுகத்தைத் தருபவையும் உண்டு.   7.83 Hz  நாம் எந்த அளவுக்கு அறிவு ஜீவி என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

முருகன் ஜி..  உங்கள் முன்னுரையின் இறுதியில் உங்கள் பெயருக்கு மட்டும் xyz  போட்டுக் கொண்டது  தன்னடக்கத்தினாலா?  கூச்சத்தினாலா ? அல்லது அந்த XYZ யார் என்று கதை வாசிக்கும்  போது தானே தெரிந்து கொள்ளட்டும் என்றா?

முடிப்பதற்கு முன்,  இந்த புதினம் வாசித்த பிறகு என் மனசுக்குள் ஏற்பட்ட சில ஆசைகளை வரிசைப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.   இந்த மாதிரி  மின் காந்த அலைகள்  மூலம்  கீழ்க்கண்டவற்றை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 

1. தனியே செல்லும் பெண்கள்  குழந்தைகளைக் காணும்  போது அவளைக்  கெட்ட  எண்ணத்தோடு நெருங்கும் ஆண்களின் மனநிலையை மாற்றி, அவனுக்கு கூச்ச உணர்வை அதிகரித்து,   அவள் காலைத் தொட்டு வணங்கி விட்டு, வாயில்  இடது கை சுட்டு விரலை  வைத்து ஓரக்கண்ணால் பார்த்தவாறு,  உடம்பை ஒரு வெட்டு வெட்டியபடி அந்தக் கால ஒல்லிப்பிச்சான் கே.ஆர் விஜயா  ஓடுவாங்களே அந்த மாதிரி ஓடிரணும். இதற்கான நேனோ ரிசீவர் பெண்களின் செருப்பில் இருக்கும்..  அவள் அதை அழுத்தினால் அவனது காம உணர்வு மாறி வெட்க உணர்வு மேலிட்டு  ஓடிடுவான்.

2.  தேர்தல்ல ஓட்டு  வாங்கி கெலிச்சு மந்திரி பதவி ஏத்துக்கும்போது அவங்க மனநிலை 7.83 க்கும் கீழ போய்,  இந்த லஞ்சம் ஊழல்ங்கற வார்த்தையெல்லாம் மறந்து போய்  குறுக்கு வழில வர பணம்னாலே அலர்ஜி ஆய்டணும்.  அரசு ஊழியர்களுக்கும் இதேதான்.

3. ஆசைகளை எல்லாம் துறந்துட்டேன்னு கப்ஸா  விட்டு  சாமியார்ங்கற  பேர்ல, ஊரை ஏமாத்தி கோடி கோடியா சுரண்டி வெள்ளை மாளிகை அளவுக்கு ஆசிரமம் கட்டற பேராசை பிடிச்ச ஆன்மீகவியாதிகளுக்கு ஸ்பெஷல் தண்டனை என்னன்னா,  அவங்களுக்கு முன்னால  உட்கார்ந்திருக்கற பக்த கோடிகளுக்கு ஏதாவது  அயனோஸ்பியரிலிருந்து  நாச அலைகளை புகுத்தி வெறியேற்றி, அவர்களைக் கொண்டே  அந்தாளை துவம்சம் பண்ணணும்.

4. தான் எந்த மதம், என்ன ஜாதின்னு  எல்லார்க்கும்  சுத்தமா மறந்து  போய்டணும்.  மனுஷன்ற  நினைப்பு மட்டும்தான் இருக்கணும்.
எல்லாரோட அதிர்வலையும் 7.83  Hz லயே   உறைஞ்சு நின்னுடணும்.


ஏதோ இந்த பூமிப் பந்து  நல்லபடியா இருக்க என்னாலான யோசனைகள். நமக்கு டெக்னிக்கலா எல்லாம் சொல்லத் தெரியாது. நேயர் விருப்பம் இது. மானே தேனே பொன் மானேல்லாம் சேர்த்து என்ன செய்யணுமோ  செய்து மேற்படி விருப்பங்களை நிறைவேத்தணும்.

கடைசியா ஒரு அல்ப ஆசை.  இந்த மாதிரி ஏதாவது  அலையை அனுப்பி  (நா சுனாமியச் சொல்லல)  என்னை கணக்குப் புலியா  மாத்த முடியுமா? ரொம்பல்லாம் இல்ல, ஒரு சகுந்தலா தேவி  அளவுக்கு போதும்.

மொத்தத்தில் Hats off  to  you   வேறென்ன சொல்ல?