Saturday, March 21, 2015

உப்பு வேலி (The Great Hedges of India)

ஒரு வாரமாய்  முகநூல் பக்கம் செல்லவில்லை.   நான்  ஒரு கொடுமையான முட்புதர்  வேலியில் தொலைந்து போயிருந்தேன்.    மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் சரித்திரத்தின் மிச்சங்களைக்  கண்டறியும் ஒரு நீண்ட தேடலில் நானும்  கூடவே அலைந்து கொண்டிருந்தேன்.  சென்ற  வாரம்   "உப்பு வேலி" என்ற புத்தக வெளியீட்டைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா. அதன் தொடர்ச்சிதான் இது.  நண்பர் கிருஷ்ணா மூலம் அன்றிரவே புத்தகம்  என் கைக்கு வந்து சேர்ந்தது. பிரித்ததும் ஆச்சர்யம். உள்ளே ஆங்கில மூலத்தை எழுதிய Roy  Moxham  மற்றும் ஜெயமோகன்,   ஆகியோரின் கையொப்பங்களுடன்  புத்தகம் எனக்கு வந்திருந்தது. . உங்கள்  "உப்புக் கணக்கு"  பற்றி  Roy Moxham  இடம் கூறினேன்.  புத்தகத்தையும் காட்டினேன் என்று கிருஷ்ணா கூறிய  போது எனக்கு  மகிழ்ச்சியும் நன்றியும் பொங்கியது.  ஜெயமோகனிடமும் உப்புக் கணக்கு பற்றி தான்  சொன்னதாகவும்,  இப்படி ஒரு புத்தகம் வந்திருப்பதே எனக்கு தெரியாதே என்று  அவரும் ஆச்சர்யப்பட்டதாகவும்  கூறினார் கிருஷ்ணா.

கிருஷ்ணாவும் நானும்  வெகு நேரம் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.  கிருஷ்ணா ஒரு லட்சிய இளைஞர்.  மிகுந்த தேசப் பற்று கொண்டவர்.  இந்திய தேசம் பற்றி பல கனவுகள் உண்டு இவருக்கு. எனது  "உப்புக் கணக்கு"  வெளியான உடன்  புத்தகம் குறித்து எனக்கு முதலில் வந்த  மின்னஞ்சல் இவரிடமிருந்துதான்.  இன்று வரை அந்த  புத்தகத்தை எத்தனையோ பேரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.   2009 ல் எனது உப்புக்கணக்கு பிரிண்ட்டாகி  பைண்டிங்கில் இருந்த சமயத்தில்தான் நான் இந்த முட்புதர் வேலியைப்  பற்றிய குறிப்பை இணையத்தில் படித்தேன்.  அடடா இதைப் பற்றி எதுவுமே எழுத இயலாது  போய் விட்டதே என்று வருத்தப்பட்டேன்.  ஆனால் அதிக விவரம் அப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  Roy Moxham  இது குறித்து எழுதியிருப்பது பற்றி அப்போது தெரியவில்லை எனக்கு.   இப்போது  தமிழில் உப்புவேலியாக  வெளி வந்திருக்கிறது இது.

இனி "உப்புவேலி " பற்றி:

நம் நாட்டில் நடந்த ஒரு அவலத்தை, நம் சரித்திரங்களில் மறைக்கப்பட்டு விட்ட, அல்லது மறக்கப்பட்டுவிட்ட  மிகப்பெரியதொரு   உண்மையின் மிச்சங்களைத் தேடியறிவதே  தன்  வாழ்வின் லட்சியமாகக் கருதி பெரும் பொருட் செலவுகளைப் பொருட்படுத்தாமல்  ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டவர்,  நம்புங்கள்  அவர்  ஒரு இந்தியரல்ல,  ஆங்கிலேயர்.  ஒரு பழைய புத்தகக் கடையில் அவர் வாங்கின ஒரு புத்தகத்தில்தான் இந்தத் தேடலின் விதை  அவருக்குள் விழுந்திருக்கிறது என்பது  கண்டிப்பாக அசாதாரணமான ஒரு நிகழ்வுதான். அவருக்கிருந்த ஆவலும், லட்சியமும்,  நம் இந்திய அரசுக்கோ, இந்திய சரித்திர ஆய்வாளர்களுக்கோ, இந்தியக் கல்வித்துறைக்கோ  ஏன் துளியும் இல்லாமல் போனதென்று புரியவில்லை.

நம் சரித்திரத்தைப் பற்றி நாமே கவலைப்படவில்லை.  ஆனால் Roy  Moxham, பிரித்தானிய அரசு இந்திய மக்களுக்கு செய்த கொடுமையின் உச்சக்கட்டமான ஒரு விஷயத்தை   தனது கடுமையான  தேடலின் முடிவில், பல்வேறு  ஆதாரங்களுடன்  வெளிப்படுத்தியிருக்கிறார்.

உப்பு பெறாத விஷயம் என்று  சுலபமாகச் சொல்கிறோம்.  ஆனால் இந்த உப்பை விலை கொடுத்து வாங்க இயலாமல்  இந்த தேசத்தில் கோடிக்கணக்கானவர்கள் உயிர் துறந்திருக்கிறார்கள்.  உப்பை வைத்து மிகக் கேவலமான அரசியலை நிகழ்த்தியிருக்கிறது ஆங்கில அரசு.   இந்திய அடிமைகளின் உழைப்பைச்சுரண்டி உற்பத்தி செய்யப்பட்ட உப்பு  மூலம், ஆங்கிலேயர்கள்  மாபெரும் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள்.  இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அளவற்ற  பணம் பிரிட்டனை வளப்படுத்தியிருக்கிறது.   ஏழைகளுக்கு மிகச் சுலபமாக கிடைக்க வேண்டிய உப்பு, அவர்களுக்கு எட்டாக்கனியாக மாறி கூட்டம்கூட்டமாய் இந்திய ஏழைகள் உயிரைவிடக் காரணமாகி இருக்கிறது அவர்கள் விதித்த உப்பு வரி.

உப்பு வரியை வசூலிக்கவும், உப்புக் கடத்தலைத் தடுக்கவும் அவர்கள் எழுப்பியதுதான்  சுங்கவேலி.  இந்தியாவின் குறுக்காக கிட்டத்தட்ட 2500 மைல் நீளத்திற்கு, முட்புதர்களையும், இலந்தை மரங்களையும், சப்பாத்திக் கள்ளிகளையும் இன்னும் பலவிதமான தாவரப் புதர்களையும் கொண்டு 12 அடி உயரம், பதினான்கடி  அகலத்தில்  ஒரு முட் சுவரை எழுப்பி இருக்கிறார்கள்.   ஜஸ்ட் 150 வருடங்களுக்கு முன்புதான்  இந்த மெகா திட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.   இதை அமைக்க எந்த அளவுக்கு மனித சக்தி தேவைப்பட்டிருக்கும்.  எத்தனை கிராமங்கள் பாதிக்கப் பட்டிருக்கும்.  1857 ல் நடந்த கலகத்தைக் குறித்து  எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டுள்ள  நிலையில்,  அதே காலக் கட்டத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையான  வேலி  திட்டத்தைப் பற்றி நம் சரித்திரத தொடர்பான நூல்களில் எங்குமே எழுதப்படவில்லை என்பது புரியாத புதிர்.  ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மன்னர்கள் குறித்து ஆர்வமுடன் எழுதுபவர்கள் கூட 1800 களில் நடந்த இந்த விஷயத்தைப் பற்றி  தெரிந்து கொள்ள  ஆர்வம் காட்டாமல் விட்டது ஆச்சர்யமாயிருக்கிறது.

1823 ல்  சிறிய அளவில் எழுப்பப்பட்ட இந்த சுங்க வேலி   1869 ல் 2500 மைல் அளவுக்கு எழுப்பப்பட்டு   முழுமையடைந்திருக்கிறது.  கோடிக்கணக்கில்  இந்திய மக்களிடமிருந்து உப்பு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.  12000 பேர் இந்த வேலியின் பாதுகாப்பிற்கும், வரி வசூலிக்கவும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  மக்கள் இதற்கெதிராகப்  போராடி இருக்கிறார்கள்.  திருட்டுத்தனமாய் உப்புக் கடத்தல் செய்திருக்கிறார்கள்.  வேலியைப்  பல இடங்களில் தீயிட்டு கொளுத்தி இருக்கிறார்கள்.  பல இடங்களில் வேலி  இயற்கை இடர்பாடுகளால்  தானாய் அழிந்திருக்கிறது.  பஞ்சக் காலங்களில்  கூட  ஈவிரக்கமின்றி உப்பு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.  லட்ச லட்சமாய் மக்கள் பஞ்சத்திலும், உப்புக் குறைபாட்டினாலும் நோய் கண்டு மடிந்திருக்கிறார்கள்.  1879 ல் இந்த சுங்க வேலி  வரி வசூலிப்பு கை விடப்பட்டிருக்கிறது.

இந்திய மக்களின் உழைப்பைக் கொண்டு வேலி எழுப்பி,  இந்திய  மக்களின் உழைப்பைக் கொண்டு உப்பு உற்பத்தி செய்து,   இநதிய மக்களுக்கே வரி விதித்து,  அவர்களை கசக்கிப் பிழிந்து, கோடி கோடியாய்  செல்வம் சேர்த்து அவற்றைக்கொண்டு செழிப்பாய் வாழ்ந்துள்ளனர் ஆங்கிலேயர்.  உழைத்தவனுக்கு மாதத்திற்கு காலணா கூலி.  ஆனால் அவன் வரியாகக் கட்ட வேண்டிய தொகையோ அதை விட பத்து மடங்கு.  பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்தின் அவலங்களைத்  மிகுந்த வேதனையுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்  ராய் மாக்ஸம்.

சட்ட விரோதமாய் வேலியைத் தாண்டிய  மனிதர்கள் மட்டுமல்ல, மான்களும், மற்ற விலங்குகளும்  கூட கூட்டம் கூட்டமாய் குழி பறித்துக்  கொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு பயணக் கட்டுரையாக ஆரம்பிக்கும் இந்தத் தேடல் போகப் போக ஒரு துப்பறியும்  நாவல் படிப்பதைப் போல் விறு விறுப்பாகச் செல்கிறது.   தன் வேலி  தேடிய  பயணத்தினூடே இன்றைய இந்தியாவில்  தான் கண்டவை கேட்டவை,  சந்தித்த மனிதர்கள்,  என அனைத்தையும் உள்ளது உள்ளபடி எவ்வித மேல்பூச்சுமின்றி விவரித்திருக்கிறார்.

உப்பின் சரித்திரம், முக்கியத்துவம், உப்புக் குறைபாடுகளால் ஏற்படும் மரணம் என  உப்பைக் குறித்து  எத்தனை   எத்தனை தகவல்கள்! அவை எல்லாமே வெகு விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கின்றன. உலக அளவில் சீனாவின் மேற்கு எல்லையில் தங்கக் கட்டிகளைப் போல் உப்புக்கட்டிகள் அரசு முத்திரையோடு உருவாக்கப்பட்டு  அவை தங்கத்திற்கு பண்ட மாற்றாக விற்கப்பட்டுள்ளன,  இந்த பண்டமாற்றிலும் கூட தந்திரம் மிகுந்த வியாபாரிகள் அதிகம் சம்பாதித்தனர் என  அறியும்  போது பிரம்மிப்பேற்படுகிறது.

உப்புக்காக பல போர்கள் நிகழ்ந்துள்ளது இந்த உலகில் என்கிறார் இதன் ஆசிரியர். இன்றைக்கு  தனக்கு வேண்டாதவரைக் கைது செய்ய அவர் வீட்டில் கஞ்சா  வைத்து விட்டு கைது செய்து சிறையில் அடைப்பதைப்போல, 1850 களில்  உப்பை ஒருவர்  வீட்டில் சிதற விட்டு, அதை காரணம் காட்டி அவர் சட்டவிரோதமாய் வீட்டில் உப்பு தயாரித்தார்  என்று கைது செய்து சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

இந்த பிரும்மாண்டமான நீளம் கொண்ட முட்புதர் வேலியின் சிறிய பகுதியையாவது  நிச்சயம் தான் கண்டு பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன்  அதற்கான, ஆதாரங்கள், வரை படங்கள், ஜி.பி.எஸ். கருவி, எனக் கிளம்பி இந்தியா வரும் ராய் மாக்ஸம் அட்சரேகை, தீர்க்க ரேகைகளை விவரங்களைத்  துல்லியமாக கணக்கிட்டு தனது கருவியில் குறித்துக் கொண்டு  அவற்றின் உதவியோடுதான். தன்  பயணத்தைத் துவக்கியிருக்கிறார். அவருடன் பயணித்த அந்த சந்தோஷ் எனும் இளைஞர் பாக்கியம் செய்தவர். அவரது பயணம் அசாதாரணமானது. ஆக்ரா, ஜான்சி, இட்டாவா, என்று அவர் சென்ற பாதைகளில் சரியான போக்கு வரத்து வசதிகள் கூட அவருக்குக் கிடைக்கவில்லை.  இறுதியில் இட்டாவாவிலிருந்து   சம்பல் நதி வழியே, நடைப்பயணமாக பல இடர்களை எதிர்கொண்டு  பலிகர் வந்து,  இறுதியில் ஒரு முதியவரின் துணையோடு Parmat  Lein  என்று அவரது  ஆழ்மனதில் பதிந்து விட்ட அந்த புதர்வேலியின் மிச்சங்களை அவர் காணும்  போது வாசித்துக் கொண்டிருந்த என் கண்களில் நீர் பொங்கியது.  நானே கண்டு விட்டாற்போல் ஆனந்தம் ஏற்பட்டது.

முட்புதர் வேலி அமைப்பதற்கான  பாதை நன்கு உயர்த்தப்பட்டு  அதன் மீதுதான்  இந்த வேலியை  ஆங்கிலேயர்கள் அமைத்திருக்கிறார்கள். சில இடங்களில் இவை உயிருள்ள முள் மரங்களாலும், சில இடங்களில் வெட்டப்பட்ட புதர்களாலும்  அமைக்கப்பட்டிருக்கிறது.  1879 ல் இத்திட்டம் கைவிடப்பட்ட பிறகு இவற்றின் பெரும்பகுதி விவசாய நிலங்களாகவும். சாலைகளாகவும் மாறியது போக,  ராய் மாக்ஸம்  கண்டது அதன் ஒரு சிறு பகுதிதான்.  இனியாவது இந்திய அரசு விழித்துக் கொண்டு,  ஒரு கொடும் நிகழ்வுக்கு ஆதாரமாக மிச்சமிருக்கும் அந்த முட்புதரை சரித்திரச் சின்னமாக பாதுகாக்குமா? என்ற பெருமூச்சு வெளிப்பட்டது என்னிடமிருந்து.

ராய் மாக்ஸம்  இறுதியாய் பயணித்துக் கண்டறிந்த அந்த குறிப்பிட்ட இடத்தை Google  Earth ல்  தேடிப் பிடித்து screen  shot  எடுத்து அளித்துள்ளேன்.  (கடைசி படம்) ஏதோ என்னால் முடிந்தது.  சம்பல் நதியின் மீது அப்போது கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்த பாலம் கூட ஒரு கோடாகத் தெரிகிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. ஆங்கிலத்தில் "The Great Hedges of India" by Roy Moxham. தமிழில் "உப்புவேலி"  சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். "எழுத்து" பதிப்பிட்டிருக்கிறது.  ஜெயமோகன் முன்னுரை அளித்திருக்கிறார்.

இனி உணவு தயாரிக்க உப்பு ஜாடியை எடுக்கும்போதெல்லாம் அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டுதான்  உபயோகிப்பேன்  எனத் தோன்றுகிறது.
11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உப்புச்சப்புள்ள மிகவும் அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

’உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று சொல்வார்கள்.

உப்பைப்பற்றிய உப்பலான இந்தப் பதிவு கொடுத்துள்ள உங்களையும் எப்போதும் நாங்கள் நினைப்போம்.

இன்றுகூட என் பதிவினில் உங்களை நினைத்து ஒருவிஷயம் எழுதியுள்ளேன். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

http://gopu1949.blogspot.in/2015/03/5.html

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வைகோ சார். எப்படி இருக்கிறீர்கள்?

'பரிவை' சே.குமார் said...

உப்புவேலி -
மிகவும் அருமையான பகிர்வு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உப்புக்காக வேலி என்கிற செய்தி வியக்க வைத்தது. இதை ஏன் வரலாறில் பதியப்படவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியதொன்றுதான். இதைப் பற்றி எழுத்தாவணமாக்கிய திரு. ராய் மாக்ஸம் அவர்களுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை... நன்றி...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

முஹம்மது நிஜாமுதின் நம் வரலாற்று ஆய்வாளர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இது. நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சே.குமார், தனபாலன் நன்றி.

vv9994013539@gmail.com said...

naanum ipa than kelvi padukeran. vupuku veli. vaalthukal.

Anuprem said...

இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் ...அருமையான பதிவு...தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அனுராதா பிரேம் நன்றி.

Unknown said...

நான் வேதாரண்யத்தை சார்ந்தவன், குறிப்பாக உப்புசத்தியாகிரக நினைவு துண் அமைந்துள்ள இடத்தை அழகுபடுத்தி பிரபளமாக்கும் திட்டதினை செயல்படுத்தும் பொருப்பில் உள்ளேன் எனக்கு இந்தபதிவு பயணுள்ளதாக இருக்கும்