நான் இருந்தது ஒரு இருட்டு அறை. என் பசிக்கு உணவு யார் தந்தார்கள், நான் சுவாசிக்க யார் உதவுகிறார்கள்? எதுவும் தெரியாது எனக்கு.
அந்த இருட்டறையில் அவ்வப்போது என்னோடு வந்து பேசிக் கொண்டிருந்தவன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டான்.
அவன் மட்டுமே என் உற்ற தோழன். நற்றுணையும் அவனே. கடவுள் என்றால் என்ன உறவு? ஒருநாள் நான் அவனிடம் கேட்டேன்.
“அதை நீ உணரும் போது மீண்டும் என்னைக் காண்பாய்” என்றான் அவன்
“அது வரை உன்னைக் காண முடியாதா? ஏன் இப்படிச் சொல்கிறாய்? இனி எனக்குத் துணை யார்?
“கவலை வேண்டாம். உனக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள். நானும் உன்னோடுதான் இருப்பேன். நீ மனது வைத்தால் என்னைக் காண முடியும்.”
அவன் சொன்னது எதுவும் எனக்கு விளங்கவில்லை. என் உடல் நழுவுவது போலிருந்தது. உடம்பெல்லாம் வலி. நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தேன். கண் கூசிற்று.
என் பத்து விரல்களிலும் பொம்மலாட்ட பொம்மையைப் போல ஏகப்பட்ட பாசக் கயிறுகள். ஒவ்வொன்றும் ஒரு உறவு. அம்மா, அப்பா, பாட்டி அக்காக்கள், மாமாக்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்கள் சகோதரர்கள், நான் பிறந்த பிறகும் கூட கயிறுகள் புதுசாய் சுற்றிக் கொண்டன. தம்பி, தங்கைகள் என்றார்கள். வளர வளர நட்புக் கயிறுகளும் என்னைச் சுற்றிக் கொள்ள, ஆஹா இந்த உலகம் எவ்வளவு அன்பாய் அழகாயிருக்கிறது என்று பூரித்துப் போனேன்.
எல்லா உறவுகளுக்கும் நான் செல்லம். என் கண்ணில் கண்ணீர் வந்ததில்லை. வேளைக்கொரு உடை போட்டு அழகு பார்த்தார்கள். என் பசிக்கு பல கரங்கள் சோறூட்டக் காத்திருந்தன. நான் கடவுளை மறந்தே போனேன்.
ஒருநாள் மொத்த உறவுகளும் என்னை எங்கோ அழைத்துச் சென்றது.
கோயில் என்றார்கள். அப்படி என்றால்? நான் கேட்டேன்.
“கடவுள் இருக்கும் இடம்.”
நான் திகைத்தேன். எங்கே?
“உள்ளே கருவறையில்”
நான் ஓடினேன். கருவறை இருட்டாயிருந்தது உற்றுப் பார்த்தேன்.
கருப்பாய் சிலையொன்று கண்டேன். இதுவா கடவுள்? நான் கண்ட கடவுள் வேறு. காணும் கடவுள் வேறு. அவன் எங்கே? எனக்கு குழப்பமாயிருந்தது.
நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளேனா அல்லது வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு வந்துள்ளேனா? எனக்குப் புரியவில்லை
ஆயினும் இதுதான் கடவுள் என்று எல்லோரும் சொல்ல நானும் ஏற்றுக் கொண்டேன். இது ஏன் பேசவில்லை? ஏன் சிலையாய் அசையாது நின்றிருக்கிறது? கடவுள் பற்றி ஆளுக்கொன்று சொன்னார்கள். சிலர் பயமுறுத்தினார்கள். தப்பு செய்தால் கண்ணைக் குத்தும் என்றார்கள். சிலர் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றார்கள்.
யாருமே கடவுளை சரியாய் அறியவில்லை. தினப்படி பூ போட்டு, விளக்கேற்றி வழிபடுவது, பண்டிகைகள் கொண்டாடுதல் இவைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் செய்யும் காரியமாயிருந்தது. நானும் அந்த ஜோதியில் கலந்தேன். கடவுளைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொரு பருவமாய் என்னை விட்டு வலியின்றி பிரிந்தது. நான் தினமும் புதிதாய்ப் பிறந்தேன். வளர்ந்தேன்.
என் கழுத்தில் புதிதாய் ஒரு பாசக் கயிறு சுற்றிக் கொண்டது. புருஷன் என்றார்கள். இனி எல்லாம் அவன்தான் உனக்கு என்றார்கள். புருஷன் மூலமும் புதுசு புதுசாய் உறவுகள்.
நான் பிறக்கும்போது என் அம்மாவும் இப்படித்தான் அலறினாளா? நேற்று வரை என் குழந்தைகளும் கடவுளோடு பேசியிருக்குமோ?. எனக்கே இன்னும் விளங்காத உண்மையை அவர்களுக்கு எப்படி விளங்க வைக்கப் போகிறேன்.
மகளாய் மட்டுமிருந்தபோது வராத கஷ்டங்கள் எல்லாம் தாயான பிறகு வரிசை கட்டி வந்து நின்று வாசற கதவை தட்டியபோது வாழ்க்கை என்பது துன்பமும் நிறைந்தவைதான் எனப் புரிந்தது. இப்படித்தான் என்னைப் பெற்றவர்களும் துன்பங்களை மறைத்து என்னை வளர்த்தார்களோ?
பணம் பொருள் இன்பம் என்று தேடுதல் வேட்டையில், காலம் முதலையைப் போல என்னைப் புரட்டிப் புரட்டிப் போட்டது. என் உறவுகளும் நட்புகளும் திசைக்கொன்றாய் கயிறை அறுத்துச் செல்ல, மிகச் சில கயிறுகளே என் விரல்களில் மிச்சமிருந்தன. ஒன்று அப்பா இன்னொன்று அம்மா, பின், தம்பி, தங்கை அக்கா இவ்வளவே உடனிருந்தன.
ஒரு மழைநாளில் அப்பாவின் கயிறும் இற்றுப் போய் அறுந்தது. இனி அப்பாவைக் காண முடியாது என்பது கொடுமையான உண்மை. கொஞ்சம் சக்தி என்னை விட்டு அகன்றாற்போல் தோன்றியது. அப்பாவை மரணம் பிரித்தது என்றால். மற்றதை கருத்து வேறுபாடுகள் அறுத்தெறிந்தன.
என் கையில் புருஷனும் பெண்களும் மட்டுமே ஒட்டியிருந்தார்கள். என் கையில் மட்டும் ஏன் கயிறுகள் இத்தனை சீக்கிரம் அறுந்து போகின்றன. ஏன் என் பாதையில் மட்டும் இத்தனை மேடு பள்ளங்கள்? அந்த இருட்டில் எத்தனை சந்தோஷமாயிருந்தேன்.! எங்கே போனான் கடவுள்? உன்னோடு இருப்பேன் என்றானே! இருக்கிறானா இல்லையா, அல்லது என் கண்ணுக்குத்தான் தெரியவில்லையா?
“இருக்கிறேன், காணும் முயற்சியை நீதான் எடுக்கவில்லை,”
நான் திகைத்தேன். எங்கே இருந்து வந்தது இந்தக் குரல்.?
“உனக்குள்ளிருந்துதான்.”
உள்ளேயா?
“ஆம் உன் பார்வையை உள்ளே திருப்பு.”
நான் முயற்சித்தேன். நிறைய யோசித்தேன். வாசித்தேன்.
நிறைய பேர் கடவுளைக் கண்டிருக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள். அறியும் முயற்ச்சியில் இருக்கிறார்கள். மிக மெல்லிய திரைதான் அவனுக்கும் எனக்கும் நடுவில். அதை நீக்கி அவனைக் காண்பது என் கையில்தான் உள்ளது.. மும்மலமும் என்னிலிருந்து வெளியேறினால்தான் திரை நீங்கும. எப்படி நீக்குவது? அது அவ்வளவு சுலபமாயில்லை. நான் தவித்த நேரம் படீரென்று அறுந்தது மற்றொரு கயிறு. என் கழுத்து விடுபட்டது. என் உடலின் பாதி எரிந்து சாம்பலாயிற்று. மரணம் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஜீவன் உடலை விட்டு எங்கே செல்கிறது? இனி நான் என் காதலை எப்படி யாரிடம் காட்டுவேன்?
“ஏன் என்னிடம் காட்டேன்.”
நான் உள்ளே பார்த்தேன். சற்றே வெளிச்சம் தெரிந்தது. இருட்டில் நான் கண்ட அதே கண்கள்!
வந்து விட்டாயா நீ?
“எப்போதும் இங்குதான் இருக்கிறேன். நீதான் கவனிக்கவில்லை.”
ஆமாம் என்னைச் சுற்றி இருந்த உறவுகள் உன்னை மறைத்துக் கொண்டிருந்தன. அவர்கள்தாம் எல்லாம் என்ற அகந்தையில் நீ இருப்பதை கவனிக்கவில்லை. ஆனால் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருந்தேன் நம்பு.
அந்தக் கயிறுகள் நிலையற்றவை. என்னைப் பற்றிக் கொள். உன்னை என்றும் விட மாட்டேன். உன் துன்பங்கள் எல்லாம் நீயாகத் தேடிக்கொண்டவை. பாசம் எப்போதும் வழுக்கும். அதில் உழலாதே.
அப்படியானால் உன்னிடமும் பாசம் வைக்கலாகாதா?
“ என் கேள்விக்கு பதில் சொல். உன்னை நீ நேசிக்கிறாயா? “
“ஆம்”.
“அதே போல் என்னையும் நேசி. நீ வேறு நான் வேறு அல்ல. உண்மையான அன்பை மனிதர்கள் அறிய மாட்டார்கள். நான் அறிவேன். உன் பாசக் கயிறால் என்னை கட்டிப் போட்டுப் பார். அது என்றும் அறுந்து போகாது. நான் உனக்குள் கட்டுண்டு கிடப்பேன்.”
எனக்கு அழுகை வந்தது. “ஏன் மனிதர்களுக்கு அன்பு உணர முடியவில்லை.?”
“அதனால்தான் அவர்கள் மனிதர்களாகவும், நான் கடவுளாகவும் இருக்கிறேன்.”
என் இருள் சற்றே அகல, நான் அவனைப் பற்றிக் கொள்ளத் தயாரானேன். மனதில் பயமில்லை. பொய்யில்லை. அன்பு மட்டுமே இருந்தது.
நான் அவனைத் தொட்ட வினாடி மொத்த உலகத்தின் மீதும் என் அன்பு பொங்கி வழியத் துவங்கியது
பின் குறிப்பு.:
இந்த கதை, சிறுகதை இலக்கணம் மீறியது. காலம் பல உள்ளடக்கியது, இதை இப்படித்தான் எழுத முடியும் என்பதால் இலக்கணம் மீறியிருக்கிறேன்.