அந்த வரிசை மிக நீண்டிருந்தது. ஏன் எதற்கு இப்படி வரிசையில் நின்றிருக்கிறார்கள் என்று புரியவில்லை. பிறந்த குழந்தைகளோடு கூட சிலர் நின்றிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. ஒரு சிலரது முகம் மட்டும் சற்றே வாடியிருந்தது.
என்ன வரிசை இது? நான் ஒரு இளைஞனிடம் கேட்டேன். முன்னால் போய்ப் பாரும்.
நான் போனேன். அங்கே ஒரு மிகப் பெரிய வாசல். அதன் முகப்பில் ஒரு பெரிய பலகை. அதில் ``இவ்விடம் உங்கள் பழைய சட்டையைக் கொடுத்து புதிய சட்டை வாங்கிச் செல்லுங்கள்.” என்று எழுதியிருந்தது. ஆஹா மிக்சி கிரைண்டர், டிவி க்கு தான் இப்படி ஒரு சலுகை கிடைக்கும். சட்டைக்குமா? சரிதான் நாமும் வாங்கி விட வேண்டியதுதான். நான் வரிசையில் நிற்கும் எண்ணத்தோடு மெல்ல நடந்தேன்.
வயது வித்தியாசமின்றி எல்லோரும் வரிசையில் புது சட்டைக்காக நின்றிருந்தது வியப்பாயிருந்தது.
``ஏங்க பெரியவரே என்ன வயசு உங்களுக்கு?”
யாருக்குத் தெரியும்? எனக்கு ஆறு புள்ளைங்க பொறந்த பொறவுதான் நாட்டுக்கு சொதந்தரம் கெடச்சுது.”
``இந்த வயசுல புது சட்டை போட ஆசையா?”
``ஏன்? எவனோ தருமராசன் கொடுக்கறான். உனக்கென்ன போச்சுதாம்?”
நான் யாரந்த தருமராசன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.
அவன் தன் கையில் அளவெடுக்கும் நாடா ஒன்று வைத்திருந்தான். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கொடுப்பதை ஒரு சிரிப்போடு கொடுத்தால்தான் என்ன என்று கேட்கத் தோன்றியது. அதற்கு மேலிருந்தான் அவனது உதவியாளன். வரிசையின் ஒழுங்கை கவனித்துக் கொண்டிருந்தான் அவன். நீ பின்னால போ, நீ முன்னால வா, நீ இன்னும் பின்னால போ என்று தன் விருப்பத்திற்கு வரிசையை மாற்றிக் கொண்டிருந்தான்.
ஏங்க தையல்காரரே உங்க ஆள் என்ன இப்டி செய்யறார்? ஒரு நியாயம் வேண்டாம்? “ பின்னால் விரட்டப் பட்ட யாரோ ஒரு முதியவர் கத்தினார். வயசானவன்னு ஒரு இரக்கம் வேணாம்?
தையல்காரர் காது கொடுத்தாற்போல் தெரியவில்லை.
வேறென்ன? சின்ன பசங்க கிட்ட லஞ்சம வாங்கியிருப்பான். அதான் நைசா முன்னாடி தள்ளி விட்டுட்டான்.
அவன் எந்த புலம்பலுக்கும் விடை பகரவில்லை.
தையல்காரர் அளவு நாடாவை சுழற்றி அடுத்த ஆளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றார்.
இத்தனை பேருக்கும் இவரிடம் புது சட்டை இருக்குமா?. சும்மா சொல்கிறாரோ?
``ஏங்க ஒரு ஆள் கூட புது சட்டையோடு வெளிய வரக காணுமே”.
``இது உள்ள போற வழி தம்பி. புது சட்டை வாங்கிட்ட பெறகு வேற வழியா வெளிய போவணுமாம்”
``எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க நல்ல சட்டைய வாங்கிட்டு பொத்தல் சட்டயத் தந்து எமாத்திடப் போறாங்க.”
``அட யார்யா இவன் சும்மா தொண தொணத்துக்கிட்டு போய்யா அப்பால”
நான் பின் வழியைத் தேடி நடந்தேன். பின்னால் பல வாசல்கள் தெரிந்தன. சற்று நேரம் அங்கே நின்றேன். கூட்டம் கூட்டமாய் பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. குட்டி யானை ஒன்று அசைந்து வந்தது வெளியில். ராஜகுமரன் போல் ஒரு சிறுவன் அதன் மீது கம்பீரமாய் அமர்ந்திருந்தான். அவனைத் தொடர்ந்து அழகிய பெண்கள், பஞ்சத்தில் அடிப்ட்டாற்போல் எலும்பு துருத்தும் குழந்தைகள் என்று பின் வாசலும் ஜே ஜே என்றிருந்தது.
நீங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா?
நாங்கள் புது சட்டை வாங்கியாயிற்று.
``எங்கே.... பிடித்திருக்கிறதா?..”
``எனக்குப் பிடித்திருக்கிறது. பழைய சட்டையில் நிறைய குறைகள் இருந்தன. இறுக்கிப் பிடித்துக்கொண்டு மூச்சே விட முடியாது. இந்த தையல்காரர் எமகாதகன்தான். நிமிடத்தில் கச்சிதமாய் ஒரு சட்டை தைத்துக் கொடுத்து விட்டார். ஆனால் அந்த நாடாவால் இழுப்பதுதான் பிடிக்கவில்லை. பயமாயிருக்கிறது. கொஞ்சம் அன்பாக அழைத்துச் சென்றால் என்னவாம்.”
``இலவசமாய் தருகிறார் அல்லவா அதான் அந்த திமிர்.”
``எனக்கும் என் சட்டை பிடித்திருக்கிறது. பழைய சட்டை மிகவும் நைந்திருந்தது இந்தப் புது சட்டை என்னை எப்படி இளமையாய் காட்டுகிறது பார்.
என்னோடு வந்த என் தாத்தாவைக் காணவில்லையே ஒரு பெண் பெரிதாய் அழுததும் பதறினேன் உதவியாளனிடம் ஓடிச்சென்று கேட்டேன்
``அவருக்கு சட்டை கிடையாது”
``எங்கே அவர்?”
நிர்வாணமாய் நிற்கிறார். வெளியில் வர மாட்டார்.
``அதெப்படி இத்தனை பேரை வெளியில் அனுப்பிவிட்டு அவரை மட்டும் எப்படி நிர்வாணமாய் நிற்க வைப்பீர்கள்? இது சரியாய்த் தெரியவில்லையே”
``அது அப்படித்தான் இங்கு யாரும் கேள்வி கேட்கக் கூடாது புரிந்ததா?”
``என்ன சர்வாதிகாரம் இது? நீங்கள் பாட்டுக்கு ஒரு ஆளை காணாமலடித்து விடுவீர்கள். நாங்கள் கேளிவியும் கேட்கக் கூடாது என்கிறீர்கள். இது அக்கிரமம்”
அவன் பதில் சொல்லாது நகர்ந்தான்.
``நீ கவலைப் படாதே பெண்ணே. நான் உள்ளே சென்று உன் தாத்தாவை அழைத்து வருகிறேன்”
நான் அவனை அழைத்தேன். ``இந்த வரிசையில் எங்கு நான் நிற்பது?“
``ஏற்கனவே நீ வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறாய். உன் நேரம் வரும் போது உள்ளே வா”
நான் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். இத்தனை பழைய சட்டைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இந்த தையல்காரர்? இவர் எலோருக்கும் நன்மை செய்கிறாரா? அல்லது ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரா?
``இரண்டும் இல்லை. எனக்கு சொல்லப் பட்ட பணியைச் செய்கிறேன்.”
தையல்காரர் அளவு நாடாவால் என்னை உள்ளே இழுத்தார்.
``யோவ் யோவ் பார்த்து” பயத்தில் நான் பதறினேன். கொஞ்சம் மூத்திரம் வந்து விட்டது.
உள்ளே வெளிச்சமாயிருந்தது. அங்கே கோடிக்கணக்கில் புது சட்டைகள் குவித்து வைக்கப் பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு அங்கே விடை கிடைத்தன. பல புதிர்கள் அவிழ்ந்தன.
``சட்டையைக் கழற்று”
நான் கழற்றினேன். புது சட்டை தருவதற்காக காத்திருந்தேன்.
``அப்படி போய் நில்”
``என் புது சட்டை எங்கே?”
``இல்லை”
அவன் அடுத்த ஆளை உள்ளே இழுத்தான்.
என்னை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
நான் நிர்வாணமாய் நின்றேன். அடுத்த ஆள் புது சட்டையோடு வெளியே சென்றதைப பார்த்துக் கொண்டிருந்தேன்.
``நீ கொடுத்து வைத்தவன். இனி உனக்கு வரிசை கிடையாது”
எனக்குப் புரிந்தது, நானறிந்த ரகசியங்களை வெளியில் சொல்ல எனக்கு அனுமதியில்லை.