Tuesday, October 6, 2015

பார்வைகள் கோணங்கள்

லெக்கின்ஸ்  பற்றிய பல ஆண்களுடைய பதிவுகளைப் பார்த்தேன்.  கிண்டல் கேலி,  ஆபாசம் என்கிற ரீதியில் பல் வேறு கருத்துக்கள்.  ஒரு பெண்ணை அவளறியாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்களும்  அதில் போடப்பட்டிருந்தன. ஒரு பத்திரிகைதான் புத்தி  கெட்டு இதைப்பற்றி எழுதியதென்றால், முகநூலில்  எத்தனையோ பெண்களைத்  தன்  நட்புப் பட்டியலில் வைத்திருக்கும் ஆண்களும் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து ஏதோ தாங்கள்தான் ஒழுக்கத்தின் காவலர்கள் போல  லெக்கின்ஸ்  அணிவது ஆபாசம் என்கிற ரீதியில் பதிவுகள் போடுவதும், அதில் சில ஆண்கள் வந்து கமெண்ட் என்கிற பெயரில் கிண்டலும் கேலியும் செய்வதும்,  நீங்கள் ஆபாசம் என்று சொல்லும் லெக்கின்சை  விட ஆபாசமாயிருக்கிறது என்பதே நிஜம்.  இது சரி இது தவறு  என்று  எதையும் சொல்லிவிடமுடியாது.  சரி தவறு என்பதெல்லாம்  நம் பார்வைகளின் கோணம்தான்.

மனிதன் ஆதி காலத்தில் ஆடையின்றிதான் உலவினான்.  உண்ணுதல், உறங்குதலோடு வெறும் இனப்பெருக்கம் மட்டுமே அப்போது நடந்திருக்கிறது. அப்போது கூட  அவன் கண்களில் இத்தனை ஆபாசம் இருந்திருக்காது.  பின்னர் இலைகளையும் தழைகளையும் ஆடையாக அணிந்தான்.  மெல்ல மெல்ல அனைத்து அறிவும் பெற்றான். முனிவர்கள்  மரவுரி தரித்திருந்தார்கள்.  ராமாயணத்தில் வனவாசம் கிளம்பும் ராமன் மரவுரி தரித்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து  ஆடைகளின் வடிவமைப்பும் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் ராணிகளின் உடை கூட இரு கால்களையும் தனித்தனியே இறுக்கமாக காட்டும் அலங்கார உடைதான். மேலே வெறும்  மார்க்கச்சை மட்டுமே அணிந்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஆபாசம் என்று அப்போதும் சரி இப்போதும் சரி யாரும் முழக்கமிடல்லை.  அதை ஒரு கால கட்டத்தின் நாகரிகமாகவே பார்கிறோம். 

கோவில் சிற்பங்களில் காமக் காட்சிகளை செதுக்கியதை அந்த காலக் கட்டத்தில் யாரும் எதிர்த்தாற்போல் தெரியவில்லை.  கலையாகப் பார்த்தால் கலை. காமக் கண் கொண்டோருக்கு கற்தூணுக்கு புடவை கட்டினால் கூட ஆபாசமாய்த்தான் காணத் தோன்றும்.  நாகரிகம் வளர்ந்த பிறகுதான்  பார்வைகளில் ஆபாசமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  எந்தப் பெண்ணும்  ஒரு ஆணை ஆபாசமாக புகைப்படம்  எடுத்து  இங்கு பகிர்வதில்லை. சாலையோரம்  இயற்கைக் கடன் கழிக்கும்  எத்தனையோ நவநாகரிக ஆண்கள்  இன்றும்  உண்டு. அவர்களை எந்தப் பெண்ணாவது மறைந்திருந்து புகைப்படம் எடுத்து  முகநூலில்  பகிர்ந்திருப்பதை  சுட்டிக் காட்ட முடியுமா?


ஆண்கள்  உடை மாற்றும் போது  ரகசிய கேமரா மூலம் பார்க்கும் பெண்கள் எவரும் இல்லை. ஆனால் பெண்கள் உடை மாற்றும் அறையில்தான் அதிகம் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றால் இது பெண்ணின் தவறா அல்லது ஆணின் வக்கிரத்தனத்தை காசாக்குவதற்காக வைக்கப்பட்டதா?  மனதைத்தொட்டு சிந்தியுங்கள்.  நீங்கள் ரகசியமாய் அவள் அங்கங்களைப் பார்ப்பீர்கள். பொதுவெளியில் அவள் லெக்கின்ஸ் அணிந்து தொடை வடிவம் தெரிய வந்தால்  ஆபாசம் என்பீர்களா?

மொபைல் கேமரா கொண்டு பெண் அறியாது பெண்ணை பல நிலைகளில் புகைப்படம் எடுக்கும் வக்கிர ஆண்கள் பெருகி விட்ட நிலையில், அதைப்பற்றி எந்த ஆணும் குமுறி வெடித்து, அவனை கண்டித்து இங்கே எதுவும் எழுதுவதில்லை. ஆனால் ஒரு பெண் உடல் நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்து சென்றதை அவளறியாது ஆபாசமாய் படம் எடுத்து  போட்டு அவள்  ஏதோ உலகமகா குற்றம் புரிந்து விட்டது போல் ஆளாளுக்கு கருத்து சொல்லிக் கொண்டிருப்பது என்ன வகையான நாகரிகம் என்று புரியவில்லை.  உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் செல்வதுதானே?  நன்றாக ரசிக்க வேண்டியது  பிறகு ஐயோ ஆபாசம்  என்று  சாட வேண்டியது.  நம் திரைப்படங்களில் இல்லாத ஆபாசமா?  அவற்றைப் பார்க்காமலா இருக்கிறார்கள் ஆண்கள்.  நீங்கள் ரசிக்க ரசிக்கத்தானே நடிகைகளின் ஆடை குறைந்து கொண்டே போகிறது. ஆபாசம் எனக் கூறி நீங்கள் அத்திரைப்படங்களைக் காண்பதைத் தவிர்த்து வந்தால்  நஷ்டம்  தாங்காது இனி இப்படி ஆடைக் குறைப்பு செய்தால் படம் ஓடாது என்று  ஆடைக் குறைப்பு காட்சிகளும் குறையுமா இல்லையா? 

சொல்லப் போனால் அந்தக் காலத்தில் நடிகைகள் டைட்  பேண்ட்  என்ற பெயரில் இறுக்கமான முக்கால் பேண்ட்  போட்டு மேலே ஒரு சின்ன ஸ்லீவ்லெஸ் ஜாகெட் அணிந்து நடித்திருக்கிறார்கள்.  இப்போதும் பழைய படங்களில் காணலாம். அட்லீஸ்ட் இன்று லெக்கின்ஸ் போடுபவர்கள் அதை மறைக்க முழங்கால் வரை டாப்ஸ் அணிகிறார்கள். அன்று அது கூட இல்லை. அவற்றை எல்லாம் ஆபாசம் எனக் கூறாதவர்கள்  இன்று முகநூலில் பெண்ணுக்கு ஆடை அணிய  சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஆண்களின் காமப் பசியின் அடையாளம்தான் சிவப்பு விளக்கு பகுதிகள் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன். எல்லோரும் ராமனாக இருந்தால் பெண்ணுக்கு ஏன் இந்த நிலை?   தன்னால் ராமனாக இருக்க முடியாதவர்கள்,  பெண்கள் மட்டும் கண்ணகியாய், சீதையாய், நளாயினியாய்,  கற்புக்கரசியாய் இருக்க வேண்டும் என  எதிர்பார்ப்பது   வேடிக்கை.

மொத்தத்தில் ஆபாசம் என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. உங்கள் தாயை கண்ணியமாகப் பார்க்கும் நீங்கள் இதர பெண்களையும் அப்படியே பாருங்களேன்.  சொல்லப் போனால் இன்றைய நாளில் அம்மாவும் பெண்ணும் அக்கா தங்கை போல்தான் தோற்றத்தில் தெரிகிறார்கள்.  இளமையாக இருப்பது அவரவர் விருப்பம்.  அம்மாவும் பெண்ணும் சேர்ந்தே லெக்கின்ஸ் வாங்கும் காலம் இது.  அவரவர் உடையை அவரவர் முடிவு செய்ய உரிமை இல்லையா?

தன்  தாயாரின் புடவை  காற்றில் நழுவும்  போது உடனே விழிகளைத் திருப்பிக் கொள்ளும்   எத்தனையோ ஆண்களை  நான்  பார்த்திருக்கிறேன்.  அதே போல் அந்தப் பெண் வண்டியில் செல்லும் பொது காற்றில்  டாப்ஸ் விலகியிருக்கலாம். விழிகளைத் திருப்பிக்கொண்டு செல்லாமல் அதை ரகசியமாய் படம் பிடித்து பொது இடத்தில் பகிரும் வக்கிரம் மிகுந்த ஆண்கள் உலவும்  இதே  பாரத கண்டத்தில்தான்  ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும்,  இன்னும் பல உத்தமர்களும் மகான்களும் உதித்திருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்தவிழைகிறேன்.  நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் பெயரை நினைவிலிருத்தி  பெண்களை கண்ணியமாகப் பார்த்தால் போதும்.

ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையும்  நான் இங்கு குறை சொல்லவில்லை. குற்றமுள்ளவருக்கு நிச்சயம் குறுகுறுக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். ஏனெனில் என் நட்பில் எத்தனையோ கண்ணியமான ஆண்கள் இருக்கிறார்கள்.  அவர்களுடைய நட்பில்  மிகுந்த பெருமிதம் அடைகிறேன் நான்.