Wednesday, March 2, 2016

கொடியாலம் கிராமம் சென்ற அனுபவம்

உப்புக் கணக்கு நாவல் வேதாரண்யம் சத்தியாக்கிரகத்தின் பின்னணியில் எழுதப்பட்ட புதினம். இதை எழுத நான் பலவகை தகவல்கள் திரட்டினேன். ராஜாஜியின் தலைமையில் சத்தியாக்கிரகிகள் சென்ற பாதையில் செல்ல ஆசைப்பட்டாலும் அது லபிக்கவில்லை. இருந்தாலும் திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலடி, திருவையாறு, தஞ்சை வரை சென்றேன். ( வாகனத்தில்தான். நடந்தல்ல)


 ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தாற்போல் தஞ்சாவூர் கலெக்டர் தார்ன் துரையின் ஏக கெடுபிடி செய்தான். சத்தியாக்கிரகிகளுக்கு சாப்பாடு கொடுத்தால் தண்டனை என்று தண்டோரா போட்டு மக்களை பயமுறுத்தி இருக்கிறான். சத்தியாக்கிரகிகளை தேசவிரோத கூட்டம் என்றும் கூறியிருக்கிறான். இந்நிலையில் அடுத்த கேம்ப்பில் உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியா விட்டாலும் சத்தியாக்கிரகிகள் உற்சாகமும் உத்வேகமும் குறையாது கோஷமெழுப்பியவாறு நடக்கிறார்கள். அடுத்த ஊரான கோவிலடியில் ஒரு ஆளைக் கூட காணவில்லை. தாரனுக்கு பயந்து விட்டார்கள் மக்கள் என்று நினைத்த வேளையில் ஒரு திருப்பத்தில் பெரும் கூட்டத்தோடு அவர்களை வரவேற்று அன்னமிட்டு வாழ்த்தி உரையாற்றியவர்தான் கொடியாலம் திரு ரங்கசாமி ஐயங்கார் அவர்கள்   (முதல்  படம்  உப்பு  சத்தியாக்கிரகி  கொடியாலம்  ரங்கசாமி  ஐயங்கார் ,  இரண்டாவது  படம்,  இடப்புறம்  அவரது  தந்தை  வாசுதேவ  ஐயங்கார்,  வலப்புறம்  கொடியாலம்  ரங்கசாமி  ஐயங்கார் ,   மூன்றாவது  கொடியாலம்  ரங்கசாமியின்  மகன்  வாசுதேவ  ஐயங்கார்.).
கொடியாலம் ரங்கசாமி அவர்கள் ஆற்றிய உரையையும் நான் நாவலில் எழுதியிருந்தேன். என் பிறப்புக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. "உப்புக் கணக்கு" புதினம் 2009 ஆம் ஆண்டு வெளியாயிற்று. ஏழாண்டுகள் ஓடிவிட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் அறிமுகமாகி விரைவிலேயே எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகி விட்ட திருமதி வசந்தா பாலா அவர்கள். திருமதி வசந்தா பாலா DAV கோபாலபுரம், கில் நகர் (Ghill Nagar) பள்ளியின் பிரின்சிபாலாக இருந்து ஓய்வு பெற்றவர். அமைதியானவர். இனிமையானவர். விஷயஞானி என்றாலும் அலட்டிக் கொள்ளாதவர். முகநூல் எனக்களித்த வெகுமதிகளில் இவரது நட்பும் அடங்கும். இவரும் ராதிகா பார்த்தசாரதி மேடமும் பள்ளிப் படிப்பிலிருந்து ஒன்றாகப் பயின்ற தோழிகள். (இடது  கோடியில்  நிற்பவர்  திருமதி  வசந்தா  பாலா)


இருவாரம் முன்பு என்னை அழைத்த வசந்தா பாலா "வித்யா என்னோட நீங்க ஒரு இடத்துக்கு வரணும்". என்றார். எங்கே என்றேன். நீங்கள் உப்புக் கணக்கில் கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் அல்லவா? அந்த கொடியாலம் கிராமத்தில் பிரம்மோத்சவம் நடக்க இருக்கிறது. நாங்கள் ஆண்டு தோறும் ஏதேனும் இரண்டு நாட்களாவது அங்கு செல்வோம். இம்முறை நீங்களும் எங்களோடு வரவேண்டும் என்பது என் ஆசை என்றார். ஆஹா எப்பேர்ப்பட்ட வாய்ப்பு! கசக்குமா என்ன? உடனே வருகிறேன் என மகிழ்ச்சியோடு கூறினேன்.


25-2-2016 வியாழனன்று காலை காரில் நாங்கள் ஆறு பேர் கிளம்பினோம். கொடியாலம் ரங்கசாமி அவர்களது பேரன் திரு ரங்கசாமி திருமதி வசந்தாவின் கணவர் திரு பாலாவுக்கு நெருங்கிய தோழர். இருவரும் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள். நீண்ட கால குடும்ப நண்பர்கள். ரங்கனை சேவித்த கையோடு ஸ்ரீரங்கத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கொடியாலத்திற்குப் பயணம். பசுமையும் அழகும் நிறைந்த சிறு கிராமம். நூறு சத்தியாக்கிரகிகள் வந்து தங்கிய, உணவருந்திய, அவர்களுக்கு உணவிட்ட அந்த மகானின் இல்லத்தின் முன் எங்கள் கார் நின்றது. மறக்க முடியாத தருணம் அது. சுதந்திர வரலாற்றில் பெயர் செதுக்கிய புகழ்பெற்ற ஒரு மனிதர். அந்த குடும்பத்தின் பெருமையும், கண்ணியமும், விருந்தோம்பலும் இன்று வரை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் அவரது பேரன் திரு ரங்கசாமி வீட்டுக்கு முன்புறம் வேய்ந்திருந்த பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அவரது மனைவி சித்ரா எங்களை அன்புடன் வரவேற்றார். என் கரம் பற்றிக் கொண்டு உங்களைப் பற்றி வசந்தா மூலம் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் உங்களது முகநூல் எழுத்துக்களை வாசிப்பதுண்டு என்றார். (முதல்  படத்தில்  புத்தகத்தை  மடியில் வைத்தபடி  அமர்ந்திருப்பவர்தான்கொடியாலம்  ரங்கசாமியின்  பேரன் ரங்கசாமி   எனக்கு  இடப்புறம்  வலது  கோடியில்  அமர்ந்திருப்பவர்  அவரது  மனைவி.)
வசந்தா தான் கொண்டு வந்திருந்த உப்புக் கணக்கு புத்தகத்தை கொடியாலம் ரங்கசாமியின் பேரன் திரு ரங்கசாமியிடம் கொடுத்தார். உப்பு சரித்திரத்தின் அங்கமான அந்த ஊரில் வைத்து அந்த மாமனிதரின் வழித்தோன்றலிடம் அப்புத்தகத்தைக் கொடுப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம். தன் தாத்தாவின் பங்காற்றலும் நிறைந்த அந்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் போது அந்த பேரனின் முகத்திலும் அவ்வளவு பெருமை.


நூற்று முப்பத்தேழாவது பக்கத்தை பிரித்து படித்தவர் கண்கள் ஒளிர்ந்தது. இப்போதைக்கு இங்கே நான்தான் கொடியாலம் ரங்கசாமி என்றார் சிரித்தபடி. சரித்திரக் கதைகளில் முதலாம் ராஜராஜன், இரண்டாம் ராஜராஜன் மூன்றாம் ராஜராஜன் என்று சொல்வார்கள். பரம்பரை பரம்பரையாக பெயர்களும் தொடரும். அது போல்தான் இங்கேயும் தொடர்கிறது. வாசுதேவ ஐயங்காரின் மகன் ரங்கசாமி அய்யாங்கார். ரங்கசாமி ஐயங்காரின் மகன் வாசுதேவன். அந்த வாசுதேவ ஐயங்காரின் மகன் இப்போதைய ரங்கசாமி ஐயங்கார். இவரது மகன் பெயர் வாசுதேவன்


கொடியாலத்தில் இருக்கும் கோயில் அவர்களது கோயில். ஒரு பெரிய வீடே கோவிலானாற்போல் இருக்கிறது. கருவறைக்கு மேலே விமானம். கருவறைக்கு முன்பு கொடிமரம். கொடிமரத்தின் உச்சியின் மேலே தேக்குமரக் கட்டைகள் பொருத்திய பண்டைய காலத்து சீலிங் தெரிகிறது.
மூலவர் சந்தான கோபாலன். தாயார் ருக்மிணியும் உடனுறைகிறாள். சற்று கீழே நவநீத கிருஷ்ணன். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும்.
நாங்கள் சென்ற பொது சேஷவாகனம் தயாராக இருந்தது வீதிஉலா செல்ல. உற்சவர் தகதகவென்று குட்டி குருவாயூரப்பனாக ஜொலிக்கிறார். கோயிலை ஒரு சுற்று சுற்றிய பிறகு வாசலில் நின்று நாயனக்காரர்கள் ஊதும் மகுடிக்கு உற்சவர் அசைந்தாடுகிறார். அந்நிகழ்வு முடிந்ததும் மண்டபம் கொண்டு செல்லப்படும் உற்சவர் திரைக்குப் பின்னே மறைகிறார்.
பின்னர்அரை மணி கழித்து அந்த ஆச்சர்யம் ஆரம்பிக்கிறது.


கழுத்தில் வீணையைக் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு நின்றபடி வீணை வாசித்து கூடவே தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலைப் பாடல்களை பாடவும் செய்கிறார்கள் இருவர் . ஒவ்வொரு பாடலும் முடிந்த பின் பின்னோக்கி ரெண்டடி நடந்து மீண்டும் வாசித்து பாடுகிறார்கள். நின்று வாசிப்பதே கடினம். அதோடு பாடவும் வேண்டுமானால் எவ்வளவு கடினம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் நீள்கிறது இந்நிகழ்வு. . உற்சவர் உள்ளே செல்ல இனிதே நிறைகிறது. உற்சவரைத் தூக்க ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்துதான் ஆட்கள் வருகிறார்கள். எல்லா பூஜா கர்மங்களும் முறைப்படி நடக்கிறது.ரங்கசாமியவர்களின் குடும்பக் கோவில் என்பதால் பிரம்மோத்சவத்திற்கான முழுச் செலவும் அவர்களுடையதுதான். கோயிலில் உண்டியல் கிடையாது. கோவிலுக்கு எதிரே சத்திரம் போல் அவர்கள் வீடு. எத்தனை பேர் வந்தாலும் வாய்க்கு ருசியாய் எவ்வித கேடும் செய்யாத உணவு.
மொத்தத்தில் இது போல் ஒரு விழா இதுவரை கண்டதில்லை. பச்சைப் பசேல் கிராமம், பண்பு நிறைந்த மனிதர்கள். ராஜாஜியின் நண்பரும் சுதந்திர போராட்ட வீரருமான, பிரபல சத்தியாக்கிரகி ஒருவரின் வழித்தோன்றலுக்கு எனது உப்புக் கணக்கை கொடுக்க இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்றோ, நாவலில் எழுதிய சத்யாக்கிரக யாத்திரையின் முக்கியமான ஒரு இடத்திற்கு சென்று பார்ப்பேன் என்றோ நான் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இறையருளால் இது நிகழ்ந்ததாகவே நினைக்கிறேன். மனம் நிறைந்து விட்டது.