Thursday, December 5, 2013

மொட்டை மாடி தோட்டம்

நேற்று  கிருஷ்ணமுர்த்தி  மாமா வீட்டிற்கு  அவர் வீட்டு மொட்டை  மாடி தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே  போயிருந்தேன்.    CSK  மாமா  மாமியுடன் 2006 ல் இருந்து  3 முறை  கயிலாயமும்,  ஆதி  கயிலாயமும்  சென்று வந்திருக்கிறேன்.   அவர் வயது 73.   சிறந்த சிவபக்தர்.  விங் கமாண்டர் அக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  முதுமையை எப்படி பயனுள்ளதாய் கழிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

நமது பாரம்பரிய மூலிகைகளின் மீது மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்.    தோட்டக் கலையில் அபார ஈடுபாடு உள்ளவர். மொட்டைமாடியில்  அபூர்வ மூலிகைச் செடிகளையும் இதர செடிகொடிகளையும்  வளர்த்து வருகிறார்.  பார்க்கவே பிரம்மிப்பாய் இருக்கிறது.   நம் ஆரோக்கியத்தை எப்படி  எல்லாம் பேணலாம் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார்.   காலை மாலை நேரங்களில் அந்த செடி கொடிகளுடன் அளவளாவியவாறு  நடை பழகுவது  கூட  தியானத்தின் ஒரு பகுதியாகவே எனக்குத் தோன்றியது.    

ஒவ்வொரு செடியையும்  தன குழந்தை மாதிரி பெருமையுடன் அறிமுகப் படுத்தினார்.  அவரது அன்பில் செழித்து வளர்ந்திருக்கின்றன அந்த குழந்தைகள். மொட்டைமாடியே பசுமையாக இருக்கிறது.  தக்காளி, கத்திரி, அகத்திக் கீரை,  லெமன் கிராஸ்,  அன்னாசி,  சித்தரத்தை,    வில்வம்,   திருநீற்று பச்சை என்று   பல்வேறு மூலிகைகளுமாய்  மொட்டை மாடியே மணம் வீசிக் கொண்டிருக்கிறது.  பெப்பர்மென்ட் செடியின் ஒரு இலையைக் கொடுத்து உண்ணச் சொன்னார். வாயெல்லாம் பெப்பர்மென்ட் வாசம்.

இன்சுலின் செடியின் இலை மெலிதான புளிப்புடன் இருக்கிறது.  சர்க்கரை நோய்க்கு அருமையான மருந்தாம் அது. தினம் ஒரு இலை சாப்பிட்டால் கணையத்தை வலுப்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யுமாம். இன்சுலின் செடியை பல பேருக்கு இலவசமாகவே கொடுப்பதாகக் கூறி எனக்கும் ஒன்று கொடுத்தார்.  கூடவே பெப்பர்மென்ட் செடியும் ஒன்று கொடுத்தார்.   கற்றாழை போல்  அடுத்தடுத்து பெருகி வளரக் கூடியவை என்றும் சொன்னார்.   என் வீட்டில் இரண்டு செடியையும் வைத்து தண்ணீர் ஊற்றி  பேசத் தொடங்கி விட்டேன்.  

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?  என்ற வைர வரிகள் நினைவுக்கு வருகிறது.   நாம் நமது  பாரம்பரிய உணவுகளையும் மருத்துவ மூலிகைகளையும்  மறந்து  விட்டு  நம் கலாச்சாரங்களை மாற்றிக் கொண்டதால்தான்  தமிழகம்  சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி  விட்டது. கேன்சர்  போன்ற உயிர்க் கொல்லி நோய்கள்  நமக்கிடையே பெருகி வருகிறது.  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? . விழித்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே.

                                                                                                                                                            

 எலுமிச்சை 
திருநீற்று பச்சை 

 அகத்திக் கீரை 

செத்தி 

 இன்சுலின் 

கொடி  எலுமிச்சை 

லெமன் கிராஸ் 

மயில் மாணிக்கம் 

நித்ய கல்யாணி 

நித்ய கல்யாணி 

சித்தரத்தை 

அன்னாசி 

தக்காளி 

வாஸ்து செடி 

வில்வம் Thursday, October 31, 2013

ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க

மனசுக்குள் ஒரு பெரிய வட்ட மேஜை மாநாடு நடத்தி (எல்லா இருக்கைகளிலும் நானே அமர்ந்து)  ஒரு வழியாய் தீபாவளிக்கு செவன் கேக் செய்வது என்று தீர்மானமாயிற்று.   பிறந்தது முதல் இரண்டே இரண்டு முறை தான் நான் ஸ்வீட்  செய்திருக்கிறேன். (குலாப்ஜாமூனைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை.)    அந்த இரண்டில் ஒன்று தேவி வார இதழில்  வி.ஐ.பி. கிச்சன்  பகுதிக்காக செய்தது.   அப்போதும் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டு செவன் கேக்தான் செய்தேன்.

ரகசியம் என்னவென்றால்  நிருபர் வருவதற்கு முன்பே என் அம்மா கேக்கை செய்து முடித்து விட்டார்.  செய்முறை மட்டும் நான் எழுதிக் கொடுத்து விட்டு கேக்கோடு நின்று ஸ்டைலாக  குடும்பத்துடன் போஸ்  கொடுத்து விட்டேன்.   அதன் பிறகு என் வாழ் நாளில் நான் தீபாவளிக்கு இனிப்பு செய்ததில்லை. என் கணவரோ அம்மாவோதான் செய்திருக்கிறார்கள். நான் கை முறுக்கு மட்டும் அழகாய் செய்து விடுவேன்.   இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த தீபாவளிக்கு  செவன் கேக் செய்யும் ஆசை எதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை.  ஒரு வேளை  என் சின்ன பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் சந்தோஷமோ என்னமோ?   (எல்லோரும் வாழ்த்துங்கப்பா)  செவன் கேக் செய்யப் புறப்பட்டே விட்டேன்.

அடுப்படியில் வேண்டிய சாமான்கள் எல்லாம் ரெடி.  சர்வ லோகங்களிலும் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் அடுப்படிக்கு அழைத்து  கேக் நன்றாக வர ஆசீர்வதிக்க கட்டளை இட்டாயிற்று.  முப்பத்து முக்கோடி தேவர்களையும் விட்டு வைக்காமல் தெய்வங்களுக்கு துணையாய் நிறுத்தி வைத்தாயிற்று.  மனசுக்குள் என் அப்பா, கணவர்   இருவரையும் வணங்கிக் கொண்டு அடுப்பை பற்ற வைத்தேன்.  ஒரு டம்ளர்  கடலை மாவு, ஒரு டம்ளர் பால்,  ஒரு டம்ளர் தேங்காய்த் துருவல், 3 டம்ளர் சர்க்கரை,  ஒரு டம்ளர் நெய்  என அனைத்து (செவன் வந்து விட்டது சரியா?)   சமாச்சாரங்களையும்  ஒன்றாய் கடாயில் விட்டு கலக்கி அடுப்பில் வைத்தேன். 9 என் லக்கி நம்பர் என்பதால் கொஞ்சம் முந்திரியும் ஏலக்கா யும் உடன் சேர்த்துக் கொண்டேன்.

மிதமான தீயில் வைத்துக் கிளறும்போது தோழி ஒருத்தியிடமிருந்து தொலை பேசி என் ஞாபக மறதிதான் ஊரறிந்ததாயிற்றே. அடுப்பை சமர்த்தாக அணைத்து விட்டு   தொலை பேசி விட்டு மீண்டும் பற்ற வைத்தேன்.    பத்து நிமிடத்திற்குள் மற்றொரு போன்.   விகடனிலிருந்து ராம்ஜி அழைத்தார்.  கிரகப்பிரவேச அழபிதழ் கொடுக்க வரலாமா வீட்டில் இருக்கிறீர்களா என்றார்.  இருக்கிறேன் என்றதும் உடனே வருவதாகச் சொன்னார். மறுபடியும் சமர்த்தாக அடுப்பை அனைத்து விட்டு ராம்ஜிக்காக காத்திருந்தேன்.  அவர் வருவதற்குள் அருகிலிருந்த கடைக்கு சென்று இன்னொரு நெய் பாட்டில் வாங்கி வருவதற்குள் ராம்ஜியும் ரகோத்தமனும் வந்து விட்டார்கள்.  அவர்களோடு பல விஷயங்களும் பேசிவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் மீண்டும் அடுப்பை பற்ற வைத்த சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. டெலிபோன் ரிப்பேர் செய்ய  லைன்  மேன்  வந்திருந்தார். உடனே அடுப்பை அணை.

அவர் வேலை முடித்து  செல்ல அரை மணி யாகியது.  மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு கிளற ஆரம்பித்தேன். 15 நிமிடங்களுக்குப்  பிறகும் கொதி வரவில்லை என்னாயிற்று என்று பார்த்தால்  புஸ்ஸ்ஸ்!    கேஸ் தீர்ந்து போயிருந்தது. அட ராமா என்ற படி கேசை மாற்றி மீண்டும் கிளறத் துடங்குவதற்கு  முன் செல்லை சைலன்சில் போட்டேன்.    வாசற்கதவில் பூட்டை தொங்க விட்டேன். ( நான் இல்லையாம் வீட்டில்)   பிறகு முக்கால்  மணியில் அப்பாடா ஒரு வழியாய் செவன் கேக் பக்குவத்திற்கு வர நெய் தடவின தட்டில்  கொட்டி ஆற விட்டு வில்லைகள் போட்டு முடித்த போது நம்ப முடியவில்லை. அட நான்தானா  செய்தேன்?   நன்றி தெய்வங்களே, தேவர்களே, பித்ருக்களே.   இந்த ஸ்டேட்டசை  நம்பாதவர்கள்  புகைப்படத்தைப் பாருங்கள் நம்புவீர்கள்.   ஒரு பெரிய போராட்டமே தெரியும்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள்


Monday, February 11, 2013

பதிலற்ற கேள்விகள்

தன்னை சந்திக்காமலே இறந்து போன ஒரு வாசகி குறித்து  எழுத்தாளர் இரா.முருகன்  தனது  முக  சுவரில்  எழுதியுள்ளது படித்த போது எனக்கும்  சற்றே வலித்தது. காரணம்  பல வருடங்களுக்கு முன் எனக்கும் இது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு, இன்று வரை அது ஒரு ஆறாத  காயமாக இருக்கிறது.  எனது ஒவ்வொரு நாவல் வெளியாகும் போதும் எனது  எழுத்தாள நண்பர் பாலகுமாரன்  அவர்களுக்கு கொடுப்பது வழக்கம். அவரும் தனது புத்தகங்களை கொடுப்பார்.  அப்படித்தான் எனது "ஆகாச தூது"  புதினம் வெளியான போதும் அவர் இல்லத்திற்கு சென்று கொடுத்து  விட்டு எல்லோரிடமும் சற்று நேரம் பேசி விட்டு வந்தேன். அவர் அம்மாவும் அங்கு  இருந்தார். மகா மேதை அற்புதமான மனுஷி அவர்.  எப்போது போனாலும் அன்போடு பேசுவார் என் புத்தகங்கள் குறித்து விசாரிப்பார். அவரை நமஸ்காரம் செய்து கொண்டு கிளம்பினேன்.     ஒரு மாதம் கழிந்திருக்கும்  ஒருநாள் பாலகுமாரனிடமிருந்து போன்.  "உஷா   எங்க வீட்டுக்கு வர முடியுமா?  என்றார் என்னப்பா விஷயம்? என்று கேட்டதற்கு "அம்மா உன்னைப்   பார்க்கணுமாம்.  உன்னோட "ஆகாசத் தூதை " படிச்சுட்டு உன்னைப் பார்த்தே ஆகணுமாம் அதைப் பத்தி பேசணுமாம். வரச் சொல்லுன்ரா.  வந்துட்டு போயேன்" என்றார்.  கண்டிப்பா வரேன் பாலா என்றேன்.   அனால் தொடர்ந்து மாற்றி மாற்றி எதோ ஒரு வேலை. ஒரு ஆட்டோ பிடித்தால் பததே நிமிட தூரம்தான்.  ஆனாலும்  நான் அங்கு செல்ல முடியாதபடி தடைகள்.   இந்த  சனி ஞாயிறில் கண்டிப்பாக போய்  விட வேண்டும் என்று நான் நினைத்த நேரம்  ஒரு இரவு சாந்தாவிடமிருந்து போன்."உஷா பாலாவோட அம்மா தவறிட்டாங்க"   நான் துடித்துப் போனேன்   அது போல் வலி எப்போதும் ஏற்பட்டதில்லை.  அடுத்த நிமிடம்  என் கணவரோடு  ஓடினேன் அவர் வீட்டுக்கு.    என் கண்ணிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர். " உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டா" பாலா சொன்ன போது  குற்ற உணர்ச்சியில் தவித்தேன்.  என்னிடம் என்ன பேச நினைத்தாய் தாயே ?  இன்று வரை இந்த கேள்வி எனக்குள் பதிலின்றி உறைந்து போயிருக்கிறது. .
Sunday, January 13, 2013

முள்ளை முள்ளால்

                                                       முள்ளை முள்ளால்.......


கடைசி சவாரியை அண்ணாநகரில் இறக்கி விட்ட பிறகு முருகேசன் ஆட்டோவைக் கிளப்பினான். ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. போகிற வழியில் டீக்கடை ஒன்றின் முன் வண்டியை நிறுத்தினான். டீ ஒன்று சொல்லி விட்டு மணியைப் பார்த்தான். ஒன்பது ஐம்பது.. வழக்கமாய் எட்டரை மணிக்கு மேல் சவாரி ஏற்றியதில்லை. தீபாவளி சமயம் என்பதால் சவாரிக்கும் பஞ்சமில்லை செலவுக்கும் பஞ்சமில்லை என்பதால் நேரம் பார்க்காமல் ஓட்டினான். பிள்ளைகள் இருவருக்கும் புதுத்துணி வாங்க வேண்டும். பட்டாசு, பட்சணம், இனிப்பு என்று செலவு எகிறிவிடும். விற்கிற விலைவாசியில் வர வர பண்டிகைகள் வந்தாலே சந்தோஷத்திற்கு பதில் சலிப்புதான் வருகிறது. ஆயினும் குடும்பத்தின் சந்தோஷம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?.டீக்கு காசைக் கொடுத்து விட்டு வண்டியைக் கிளப்பும் நேரத்தில் ஏம்ப்பா ஆட்டோ என்றபடி ஒரு உருவம் லொங்கு லொங்கென்று ஒடி வந்தது. “சென்ட்ரல் போகணும் வரயாப்பா?” மூச்சிரைக்க கேட்டவருக்கு அறுபது வயதிருக்கும்.

“இல்லிங்க நா வேற ரூட்ல போறேன் வீட்டுக்கு. நீங்க வேற வண்டி பாருங்க”

“எவ்ளோ வேணாலும் கேட்டு வாங்கிக்கப்பா ரொம்ப அவசரம்.”

“அதுக்கில்லைங்க. இப்பவே மணி பத்து.. உங்கள விட்டுட்டு வீடு போறதுக்குள்ள மணியாய்டும். தவிர ரொம்ப தூரம் வேற.”“நீ திரும்பி போறதுக்கும் சேர்த்து காசு தரேம்ப்பா. கொஞ்சம் உதவியா நெனச்சு செய்யேன். என் பொண்டாட்டி ரொம்ப முடியாம இருக்கா. அவளைப் பார்க்கத்தான் போறேன். ப்ளீஸ்ப்பா”பெரியவர் கண்களில் இருந்த பதட்டமும் அவர் கெஞ்சிய விதமும் முருகேசனை இரக்கப்பட வைத்தது.

“இருநூறு ரூவா தந்துடுங்க. உங்களுக்காகத்தான் வரேன்.”

“நியாயமா கேக்கற. தந்துடறேம்ப்பா.” அவர் ஏறிக்கொள்ள வண்டியைக் கிளப்பினான்.“ஏம் பெரியவரே பொண்டாட்டிக்கு ஒடம்பு சரியில்லன்றீங்க. அவங்க பக்கத்துல இல்லாம நீங்க இம்புட்டு தூரம் வந்து என்ன செய்யறீங்க?”“நா என் சின்ன பிள்ளகிட்ட இருக்கேன். அவ பெங்களூர்ல என் பெரிய பையன் கிட்ட இருக்காப்பா.”

“என்ன சார் விசு பட கதையாட்டம் சொல்றீங்க.”

“நாட்டுல நடக்கறதத் தான அவங்க சினிமாவ எடுக்கறாங்க.”

“நீங்க ஏன் அவங்களோட இருக்கீங்க? தனிக்குடித்தனம் பண்ணிக்க வேண்டியதுதானே?”

“பெரியவனுக்கு ரெண்டும் பையன். சின்னவனுக்கு ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்கும் ஒத்தாசைக்கு ஆள் தேவைப்படுது. நா பெரியவன் வீட்டுல உதவியா இருக்கேன். அவ சின்னவங்கிட்ட இருக்கா”“அம்மாவுக்கு என்ன ஒடம்பு?”நெஞ்சு வலின்னு போன் வந்துச்சு கொஞ்சம் முன்னாடி. பெரியவன் வேற ஊர்ல இல்ல.. அதான் தனியா கிளம்பிட்டேன். பத்தே முக்காலுக்குள்ள போயிடலாமில்ல? டிக்கெட் வேற வாங்கணும்.“போயிடலாம். கவலைப்படாதீங்க.” அவன் வண்டியின் வேகத்தைச் சற்று அதிகப்படுத்தினான்.“வயசு காலத்துல ஆளுக்கு ஒரு எடமா இருக்கறது கஷ்டமா தெரியலையா?”“வாழ்க்கைன்னா இப்டித்தான். எதுக்காவது அனுசரிச்சுதான் போகணும். நம்ம சுகம்தான் பெரிசுன்னு இருந்துட முடியாதில்ல.”சரியாக பத்தே முக்காலுக்கு சென்ட்ரலை அடைந்தது வண்டி. பெரியவர் ரூபாயை கொடுத்து விட்டு ரொம்ப நன்றிப்பா என்றபடி டிக்கெட் எடுக்க விரைந்து நடந்து கூட்டத்தில் மறைந்தார். முருகேசன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி பதினொன்று நாற்பது.“என்னங்க இவ்ளோ லேட்டு. பயந்தே போய்ட்டோம். ஒரு செல் போனாவது வாங்கிக்குங்கன்னா கேக்க மாட்டேன்றீங்க”.“வாங்கலாம் வாங்கலாம். பசிக்குது மொதல்ல சாப்பாடு எடுத்து வையி கைகால் கழுவிட்டு வரேன்”“என்னங்க இது பையி?”

எது? அவன் திரும்பினான். மனைவி கையிலிருந்த ஒரு தோல் பையை வியப்போடு பார்த்தான்.

குடு. என்றவன் அதை வாங்கினான். “கஸ்டமர் யாரோ விட்டுட்டாங்க போலருக்கு.” என்றவன் இப்படி ஒரு பையோடு யார் அன்று ஏறினார்கள் என்று யோசித்தான். அவன் கண்கள் பளிச்சிட்டது. கக்கத்தில் ஒரு பையை இடுக்கியபடி ஏறியது அந்த பெரியவர்தான். அட கடவுளே அவசரத்துல பையை மறந்துட்டாரே. அவரு யாரு என்னன்னு கூட தெரியாதே.

“சரி உள்ள வா பையில ஏதாவது விலாச அட்டை இருக்குதான்னு பார்த்து கொடுத்துடுவோம்.”சாப்பிட்ட பிறகு தோல் பையின் ஜிப்பை திறந்தான். அவன் கண்கள் விரிந்தன. கற்றையாய் ரூபாய் நோட்டுகள். ஆயிரமும் ஐநூறுமாய் எண்ணிப் பார்த்ததில் ஐம்பதினாயிரத்து சொச்சம் இருந்தது.“என்னங்க இது. பயமா இருக்குதே இதப் பார்த்தா!” மனைவி கலவரத்தோடு அவனையும் பணத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.பாவம் பெரியவர் மனைவியின் மருத்துவச் செலவுக்காகும் என்று நினைத்து எடுத்துக் கொண்டு கிளம்பியிருப்பார்.. அவசரத்தில் மறந்திருக்கிறார். இப்போது என்ன செய்வது? அவன் மிகுந்த கவலையோடு யோசித்தான்.பைக்குள் விலாச அட்டை என்று எதுவுமில்லை. ஒரு போன் நம்பர் மாத்திரம் ஒரு அட்டையில் எழுதியிருந்தது. ஒரு வேளை இது பெங்களூர் நம்பராக இருக்குமோ.

சரி படு. காலேல இந்த நம்பருக்கு போன் போட்டு பேசறேன். என்றபடி பையை பீரோவில் பத்திரப்படுத்தி விட்டு படுத்தான்.மறுநாள் முதல் வேலையாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினான். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அது ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்டின் எண். அதற்கும் பெரியவருக்கும் தொடர்பில்லை என்பது புரிய பேசாமல் போலீசிலேயே பையை ஒப்படைத்து விடலாம் என்று தீர்மானித்தான். தங்கள் ஏரியாவிலிருந்த ஸ்டேஷனுக்கு போனான்.

என்னய்யா?

“அய்யா நா ஆட்டோ டிரைவருங்க. ராத்திரி ஒரு பெரியவர் அண்ணா நகர்ல ஏறி சென்ட்ரல்ல எறங்கினாருங்க. மனைவிக்கு உடம்பு சரியில்ல பெங்களூருக்கு அவசரமா போகணும்னு கெஞ்சி கூப்டடாருங்க. அவசரத்துல பைய விட்டுட்டு போயட்டருங்க. விலாசம் இருந்தா போய்க குடுத்துடலாம்னு திறந்து பார்த்தேன். உள்ள பணம் மட்டும்தான் இருந்துச்சு”.இவன் சொல்ல அந்த போலீஸ்காரரின் கண்கள் மின்னியது. “சரி அப்டி வெச்சுட்டு போ. யாராச்சும் பணம் காணும்னு வந்து புகார் குடுத்தா விசாரிச்சுட்டு குடுத்துடறோம்”.

முருகேசன் அவரை சற்றே உற்றுப் பார்த்தான். அவர் முகத்தைப் பார்த்த போது நம்பிக்கை வரவில்லை. எதோ கபடம் தெரிந்தது.“நா இந்த பையைக் கொண்டு வந்து கொடுத்ததுக்கு ஏதாவது எழுதிகொடுப்பீங்களா சார்?”அவர் முறைத்தார். “அதெல்லாம் தர மாட்டோம். கண்டு எடுக்கற பொருளை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்க வேண்டியது உங்க கடமை. அதை உரியவங்களை கண்டு பிடிச்சு ஒப்படைக்கற வேளை எங்களுது. இங்க குடுத்துட்ட இல்ல போயக்கிட்டேரு”.“சார் நீங்க இதை உரியவங்க கிட்ட ஒப்படைச்சுட்டீங்கன்னு நான் எப்டி தெரிஞ்சுக்கறது?”

“அதுக்காக? உன்னையும் கூட்டிட்டு தெருத்தெருவா அந்தாளைத் தேடிக்கிட்டு அலையச் சொல்றியா? வேற வேல இல்லையா எங்களுக்கு. போய்யா கொடுத்துட்ட இல்ல எடத்தை காலி பண்ணு.”“அதெப்டிங்க. ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்லையே போறதுக்கு!. அம்பதாயிரத்து சொச்சத்தை எந்த ஆதாரமும் இல்லாம எப்டி குடுத்துட்டு போக? இவ்ளோ பணத்தை என் ஆட்டோல ஒருத்தர் விட்டுட்டு போய்ட்டார், அவர் எங்க ஏறினார், எங்க இறங்கினார் எப்டி இருந்தார்னு விவரமா எழுதித் தரேன். ஒரு சீல் போட்டு கையெழுத்து போட்டு குடுங்க. போயிடறேன். ஒருவேளை அந்த பெரியவர் எங்க யாச்சும் என் கண்ணுல பட்டாருன்னா நானே கூட்டிட்டு வந்து இந்த ஆதாரத்தைக் காட்டுவேன் இல்ல?”

அவன் பிடிவாதமாய் நிற்க, அவர் அவனை எரிச்சலோடு பார்த்தபடி எழுந்தார். அப்டியா இரு எங்க ஆபீசர் கிட்ட இதைக் காட்டி கேட்டுட்டு வந்து எழுதித் தரேன். என்ற படி அந்த பையை எடுத்துக் கொண்டு எழுந்து உள்ளே போனார்.

சற்றுப் பொறுத்து திரும்பி வந்தவர் அவனை பார்க்காதது போல் வேறு கேஸ்களை கவனிக்க ஆரம்பித்தார். அவராக ஏதாவது சொல்லுவார் என்று நின்றிருந்தவன் அரைமணி கழித்து, “சார் நான் போகணும் சவாரி எல்லாம் விட்டுட்டு நிக்கறேன் சார்” என்றான்.

“என்னய்யா வேணும் ஒனக்கு? எதுக்கு இங்க நிக்கற?” இப்படி அவர் கேட்டதும் அவன் திடுக்கிட்டான்.

“நா பணம் கொடுத்தேனே சார்”.

“என்ன பணம்? எதுக்கு கொடுத்த? யார்கிட்ட கொடுத்த?

அவனுக்குப் புரிந்து விட்டது. அவர்கள் ஏமாற்றுவதற்கு தீர்மானம் செய்து விட்டார்கள். பணத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கக் கூடாது. தானே எப்படியாவது பெரியவரைத் தேடிப் பிடித்துக் கொடுக்க முயற்சித்திருக்க வேண்டும். தப்பு செய்து விட்டோம். சட்டம் என்பது இந்நாட்டில் ஏழைகளுக்கு மட்டும் சரிவர பாதுகாப்பளிப்பதில்லை. உண்மையில் பணத்தை பெரியவர் தொலைக்கவில்லை. தான்தான் தொலைத்து விட்டோம் என்று தோன்றியது.

அவன் அந்த போலீஸ்காரனை வெறித்து பார்த்தபடி வெளியேறும்போது அதிகாரி ஒருவர் உள்ளே வர சற்றே நம்பிக்கையுடன் நின்றான். அவன் நோக்கம் புரிந்தாற்போல் அந்த போலீஸ்காரன், “புடி புடி எங்கடா ஓடப் பாக்கற?” என்றபடி பாய்ந்து ஓடி வந்து அவனைப் பிடித்தான்.அதிகாரி புருவம் நெரித்து இருவரையும் பார்த்தார். “சார் பிக் பாக்கெட் சார். ஆட்டோக்காரன் மாதிரி போய் திருடுவான் சார். கஷ்டப்பட்டு புடிச்சாந்தா ஓடப் பாக்கறான் சார்.”

தர தரவென்று அவனை இழுத்துச் சென்று சிறையிலடைத்தான். முருகேசன் ஸ்தம்பித்துப் போனான். கதற ஆரம்பித்தான். யாரும் கண்டு கொள்ளவேயில்லை. இதெல்லாம் இங்கு சகஜம் என்பது போல் அவரவர் வேலையைப் பார்த்தார்கள்.காலையில் போன புருஷன் இரவு வெகு நேராமாகியும் வராமல் போக, பிள்ளையை அழைத்துக் கொண்டு போலீஸ் உதவியை நாடி வந்தாள் முருகேசன் மனைவி.

“எம்புருஷனைக் காணும் சார்.”

“எழுதிக்கொடு. பேரென்ன என்ன வேலை செய்யறார்.?”

“முருகேசன் சார். ஆட்டோ ஓட்டுவார்.”

“ஓ! அந்த ஆட்டோக்காரன் பொண்டாட்டி நீதானா? பிக் பாக்கெட் அடிக்கும்போது கையும் களவுமா சாட்சியோட புடிச்சு உள்ள வெச்சிருக்கோம் தெரியுமா?”

“அய்யோ எம்புருஷன் நல்லவர் சார். அவருக்கு எந்த தீய பழக்கமும் கிடையாது. காலேல கூட ஆட்டோல யாரோ விட்டுட்டு போன பணத்தை போலீஸ்ல ஒப்படைச்சுட்டு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டுதான் கிளம்பினார் சார்”.

“அதெல்லாம் வீட்டுல இருக்கறவங்க நம்பறதுக்காக போடற வேஷம். கையும் களவுமா புடிச்சோம்னு சொல்றேன். போம்மா போய்ட்டு திங்கக் கிழம கோர்ட்டுக்கு வா. அங்க ஆஜர்ப படுத்துவோம் உம புருஷனை”.“கடவுளே நாங்க என்ன செய்வோம்? இது அபாண்டம் சாமி. என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியும். அவர் அப்டி எல்லாம் செய்யறவர் இல்ல”.

“இப்போ போறயா இல்ல கலாட்ட பண்ற உன்னையும் உள்ள வெக்கவா?”

அவள் நடுங்கினாள். போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே அழுதபடி அமர்ந்தாள்.

அங்கு நின்றிருந்த ஒரு பெரியவர் அவளை இரக்கத்துடன் பார்த்தார்.

“போம்மா போய் அந்தாளுக்கு ஏதாவது பணத்தைக் கொடுத்துட்டு புருஷனைக் கூட்டிட்டு போகற வழியைப் பாரு. எதுக்கு கோர்ட்டு கேசுன்னு அலஞ்ட்ருக்க?”

“நாங்க எந்த தப்பும் பண்ணலைங்க. அவரு சவாரிக்கு கூட நியாயமாதான் காசு வாங்குவார்.”

“போலீசைப் பகைச்சுக்கிட்டா நமக்கு கிரிமினல் முத்திரை குத்திடுவாங்கம்மா. நா சொல்றதைக் கேளு. வா என்னோட. நா பேசி படிய வெக்கறேன்”.

அவர் உள்ளே சென்று போலீசோடு பேசினார்.. பிறகு அவளிடம் வந்தார்.

“பத்தாயிரம் தந்தா கேசு கீசுன்னு இழுக்காம விட்டுர்ராங்களாம்.”

“சாமீ! அவ்ளோ பணத்துக்கு நா எங்க போவேன்?”

“பதினஞ்சு கேட்டாங்க. நான்தான் பாவம்னு சொல்லி குறைச்சிருக்கேன். கோர்ட்டு வக்கீலு கேசுன்னு அலைஞ்சா இதை விட ஆவும். அப்பறம் உன் இஷ்டம்”

அவள் வெகு நேரம் யோசித்தாள். “எம்புருஷனை ஒரு முறை பார்த்துட்டு சொல்றேனே” என்று கெஞ்சினாள். ஒரு ஆள் பின் பக்கம் அழைத்துச் சென்றான். கம்பிக்குப் பின்னால் கூனிக் குறுகி அமர்ந்திருந்த முருகேசன் மனைவியைக் கண்டதும் பதறி எழுந்தான். கண்கள் கலங்கியது. அவள் விஷயத்தை சொன்னாள். அவனும் அவளிடம் நடந்தவற்றை எல்லாம் சொன்னான்.

அடப்பாவிங்களா? அவள் கொதித்துப் போனாள்

“நா இப்போ என்ன செய்யட்டும்? காது தோடை வெச்சா பத்தாயிரம் புரட்டிடலாம். போகட்டுமா? எனக்கு நீங்க முக்கியம். நம்ம மானம் மரியாதை முக்கியம். செய்யாத தப்புக்கு சந்தி சிரிக்கப் படாது. பணம் எவ்ளோ வேணா சம்பாதிச்சுக்கலாம். என்ன சொல்றீங்க?”

அவன் சரி என்பது போல் மவுனமாயிருந்தான். ஏழை சொல் அம்பலம் ஏறுவதாவது?

அவள் அரை மணியில் பணத்தோடு வந்தாள். கொடுத்து விட்டு புருஷனை அழைத்துப் போனாள்.

கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா? அவனுக்கு சந்தேகம் வந்தது. அப்படியே இருந்தாலும் அயோக்கியர்களுக்குத்தான் துணை போவானா அவன்? உள்ளம் வெறுத்துப் போயிற்று. வன்மம் துளிர் விட்டது.

அடுத்த நாள் முழுவதும் ஸ்டேஷனுக்கு சற்று தள்ளியே காத்திருந்தான். தலையில் முண்டாசு கட்டியிருந்தான். கேஸ் விஷயமாய் அந்த போலீஸ் எங்கோ புறப்பட்டது. ஜீப இல்லை. “யோவ் வண்டிய எடு திருவான்மியூர் வரை போகணும்.”

“நூறு ரூவா ஆகும் சார்” முகம் காட்டாமல் சொன்னான்.

“போலீஸ் கிட்டயே காசு கேப்பயா? எடுப்பா வண்டிய”

அவன் உறுமி விட்டு ஏறி அமர்ந்தான். முருகேசன் வண்டியை எடுத்தான்.

வண்டி கிளம்பிய சற்று நேரத்தில் பின்னாலிருந்து குறட்டை சத்தம் கேட்டது. திருவான்மியூர் தாண்டி ஊருக்கு வெளியில் எங்கோ சென்று கொண்டிருந்தது ஆட்டோ.. போலீஸ்காரன் கண் விழித்தபோது முருகேசன் அவனை சிறை வைத்திருந்தான். பறிகொடுத்த அனைத்தையும் கறந்துவிடும் எண்ணத்தோடு முருகேசன் அவனுக்கருகில் காத்திருந்தான். பெரியவரை எப்படியாவது கண்டு பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்ததது.

Sunday, January 6, 2013

நீண்ட நாள் கழித்து....

எனதருமை  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்.   என்னடா இவ்வளவு மாதங்களாய் காணவே இல்லையே என்று யோசிக்கக் கூடும்.    அதற்கு முதல் காரணம் என் பதி வுப் பக்கத்திற்கு என்னால் லாகின் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.   தவிர வேறு சில பணிச்சுமைகளும் ஒரு காரணம்.


 முதலாவது சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் பொங்கலன்று நள்ளிரவில் எங்கள் அலுவலகம் எரிந்து போனது.  எங்கள் அனைவரது பணிப் பதிவேடுகள் அனைத்தும் முற்றிலும் சாம்பலாகிப் போனது. இதனால் என்னால் விருப்ப ஓய்வு எடுக்க முடியாத சூழல்.  மறுபடியும் இருக்கிற  விவரங்களை வைத்துக்கொண்டு பணிப்பதிவேடு துவங்குவதிலிருந்து அலுவலகத்தின் அனைத்து கோப்புகளையும் புத்தாக்கம் செய்யும் பணிச்சுமை.       


இரண்டாவது,  என் சின்னப்  பெண்ணுக்கு வரன் தேடும் படலம்.  (இதன் மூலம் கிடைத்த சுவையான அனுபவங்கள்  ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கிறது)   


மூன்றாவது  என் சின்ன அக்காவின் திடீர் மரணம்.  இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவே இல்லை.    இரண்டு வருடமாய் உள்ளுக்குள் வளர்ந்திருந்த புற்று நோய் வெளியிலேயே தெரியாமல் இருந்து விட்டு திடீரென அவளை இருபதே நாளில்  வேரோடு வீழ்த்தி சாய்த்து விட்டது.       அவள் தனது மொத்த வலியையும் எங்கள் மனசிற்கு மாற்றிக் கொடுத்து விட்டு  மறைந்து விட்டாள்.     புத்தன் சொன்னது போல மரணமில்லாத வீடு இவ்வுலகில் இல்லை.   எனக்கு நான் எழுதிய தையல்காரன் பதிவுதான் நினைவிற்கு வந்தது.   இதுவரை அதனை வாசிக்காதவர்கள்  வாசிக்கவும்.


மேற்படி காரணங்களால் என்னால் பதிவுலகுடன் தொடர்பில் இருக்க இயலவில்லை. நண்பர்கள்   தவறாக எண்ண  வேண்டாம். முக்கியமாக  வை.கோ  சார் என்னை மன்னிக்க வேண்டும்.  அவரது மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. விருதுகளுக்கு நன்றி கூற இயலவில்லை.    இப்போது கூட ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் பதிவுப் பக்கம் திறந்து விட்டதோ எனத் தோன்றுகிறது.   இதுவரை மற்றவர் பதிவுக்கு கருத்து கூற இயலாத நிலையும் எனது சிஸ்டத்தில் இருந்தது என்ன காரணமோ ஒன்றும் விளங்கவில்லை  யாராவது ஆலோசனை சொன்னால்  நன்றாயிருக்கும்.    இனி மாதம் ஒரு பதிவாவது வெளியிட விரும்புகிறேன். முயற்சிக்கிறேன்.


  என்றென்றும் அன்புடன் உங்கள் தோழி வித்யா சுப்ரமணியம்.