Thursday, October 31, 2013

ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க

மனசுக்குள் ஒரு பெரிய வட்ட மேஜை மாநாடு நடத்தி (எல்லா இருக்கைகளிலும் நானே அமர்ந்து)  ஒரு வழியாய் தீபாவளிக்கு செவன் கேக் செய்வது என்று தீர்மானமாயிற்று.   பிறந்தது முதல் இரண்டே இரண்டு முறை தான் நான் ஸ்வீட்  செய்திருக்கிறேன். (குலாப்ஜாமூனைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை.)    அந்த இரண்டில் ஒன்று தேவி வார இதழில்  வி.ஐ.பி. கிச்சன்  பகுதிக்காக செய்தது.   அப்போதும் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டு செவன் கேக்தான் செய்தேன்.

ரகசியம் என்னவென்றால்  நிருபர் வருவதற்கு முன்பே என் அம்மா கேக்கை செய்து முடித்து விட்டார்.  செய்முறை மட்டும் நான் எழுதிக் கொடுத்து விட்டு கேக்கோடு நின்று ஸ்டைலாக  குடும்பத்துடன் போஸ்  கொடுத்து விட்டேன்.   அதன் பிறகு என் வாழ் நாளில் நான் தீபாவளிக்கு இனிப்பு செய்ததில்லை. என் கணவரோ அம்மாவோதான் செய்திருக்கிறார்கள். நான் கை முறுக்கு மட்டும் அழகாய் செய்து விடுவேன்.   இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த தீபாவளிக்கு  செவன் கேக் செய்யும் ஆசை எதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை.  ஒரு வேளை  என் சின்ன பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் சந்தோஷமோ என்னமோ?   (எல்லோரும் வாழ்த்துங்கப்பா)  செவன் கேக் செய்யப் புறப்பட்டே விட்டேன்.

அடுப்படியில் வேண்டிய சாமான்கள் எல்லாம் ரெடி.  சர்வ லோகங்களிலும் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் அடுப்படிக்கு அழைத்து  கேக் நன்றாக வர ஆசீர்வதிக்க கட்டளை இட்டாயிற்று.  முப்பத்து முக்கோடி தேவர்களையும் விட்டு வைக்காமல் தெய்வங்களுக்கு துணையாய் நிறுத்தி வைத்தாயிற்று.  மனசுக்குள் என் அப்பா, கணவர்   இருவரையும் வணங்கிக் கொண்டு அடுப்பை பற்ற வைத்தேன்.  ஒரு டம்ளர்  கடலை மாவு, ஒரு டம்ளர் பால்,  ஒரு டம்ளர் தேங்காய்த் துருவல், 3 டம்ளர் சர்க்கரை,  ஒரு டம்ளர் நெய்  என அனைத்து (செவன் வந்து விட்டது சரியா?)   சமாச்சாரங்களையும்  ஒன்றாய் கடாயில் விட்டு கலக்கி அடுப்பில் வைத்தேன். 9 என் லக்கி நம்பர் என்பதால் கொஞ்சம் முந்திரியும் ஏலக்கா யும் உடன் சேர்த்துக் கொண்டேன்.

மிதமான தீயில் வைத்துக் கிளறும்போது தோழி ஒருத்தியிடமிருந்து தொலை பேசி என் ஞாபக மறதிதான் ஊரறிந்ததாயிற்றே. அடுப்பை சமர்த்தாக அணைத்து விட்டு   தொலை பேசி விட்டு மீண்டும் பற்ற வைத்தேன்.    பத்து நிமிடத்திற்குள் மற்றொரு போன்.   விகடனிலிருந்து ராம்ஜி அழைத்தார்.  கிரகப்பிரவேச அழபிதழ் கொடுக்க வரலாமா வீட்டில் இருக்கிறீர்களா என்றார்.  இருக்கிறேன் என்றதும் உடனே வருவதாகச் சொன்னார். மறுபடியும் சமர்த்தாக அடுப்பை அனைத்து விட்டு ராம்ஜிக்காக காத்திருந்தேன்.  அவர் வருவதற்குள் அருகிலிருந்த கடைக்கு சென்று இன்னொரு நெய் பாட்டில் வாங்கி வருவதற்குள் ராம்ஜியும் ரகோத்தமனும் வந்து விட்டார்கள்.  அவர்களோடு பல விஷயங்களும் பேசிவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் மீண்டும் அடுப்பை பற்ற வைத்த சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. டெலிபோன் ரிப்பேர் செய்ய  லைன்  மேன்  வந்திருந்தார். உடனே அடுப்பை அணை.

அவர் வேலை முடித்து  செல்ல அரை மணி யாகியது.  மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு கிளற ஆரம்பித்தேன். 15 நிமிடங்களுக்குப்  பிறகும் கொதி வரவில்லை என்னாயிற்று என்று பார்த்தால்  புஸ்ஸ்ஸ்!    கேஸ் தீர்ந்து போயிருந்தது. அட ராமா என்ற படி கேசை மாற்றி மீண்டும் கிளறத் துடங்குவதற்கு  முன் செல்லை சைலன்சில் போட்டேன்.    வாசற்கதவில் பூட்டை தொங்க விட்டேன். ( நான் இல்லையாம் வீட்டில்)   பிறகு முக்கால்  மணியில் அப்பாடா ஒரு வழியாய் செவன் கேக் பக்குவத்திற்கு வர நெய் தடவின தட்டில்  கொட்டி ஆற விட்டு வில்லைகள் போட்டு முடித்த போது நம்ப முடியவில்லை. அட நான்தானா  செய்தேன்?   நன்றி தெய்வங்களே, தேவர்களே, பித்ருக்களே.   இந்த ஸ்டேட்டசை  நம்பாதவர்கள்  புகைப்படத்தைப் பாருங்கள் நம்புவீர்கள்.   ஒரு பெரிய போராட்டமே தெரியும்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள்


14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு வேளை என் சின்ன பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் சந்தோஷமோ என்னமோ? //

மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள். நிச்சயமாக அதே அதே தான் இருக்கும். மிக்க மகிழ்ச்சி.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

// பிறகு முக்கால் மணியில் அப்பாடா ஒரு வழியாய் செவன் கேக் பக்குவத்திற்கு வர நெய் தடவின தட்டில் கொட்டி ஆற விட்டு வில்லைகள் போட்டு முடித்த போது நம்ப முடியவில்லை. அட நான்தானா செய்தேன்? //

செவன் கேக் எப்படியுள்ளதோ,எனக்குத் தெரியாது.

ஆனால் தாங்கள் அதைச்செய்ய படாத பாடு பட்டுள்ளதைப்படிக்க மிகவும் ருசியாகவே உள்ளது.;)

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சிரமப்பட்டுள்ளீர்கள்... உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...

இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

உஷா அன்பரசு said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி..

ரிஷபன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

”தளிர் சுரேஷ்” said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! எப்படியோ ஒரு வழியா கேக் பண்ணி அதை பதிவும் செய்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

Unknown said...

அன்பிற்குரிய அம்மா,

உங்கள் மனத்துள் ஊற்றெடுத்த இனிப்பு, ஒரு வழியாக இதயம் மற்றும் இன்னபல தடாகங்களில் மூழ்கி எழுந்து கரங்களின் வழியே கடாயில் விழுந்து எழுந்து, விழுங்குவதற்காக கரையேறி.... தட்டில் விழுந்துவிட்டது :)

தீபாவளித் திருநாளில் அது மீண்டும் உறவினர் நண்பர்களின் நாவின் மூலம் அவர்களின் மனத்திலும் இனிப்பை உண்டு பண்ணியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை :) :)

இனிப்போடு இனிப்பாய் தீபத்திருநாள் சென்றிருக்கும் :) உடனுக்குடன் வரவிருக்கும் அடுத்த திருவிழாவான தங்களது அன்பிற்குரிய மகளின் திருமணமும் அற்புதமாக நடந்தேற எல்லாம் வல்ல பரம்பொருள், முப்பத்து முக்கோடி தேவர்குழாம் சூழ வாழ்த்தியருளட்டும் :) :) :) :)

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

ஹுஸைனம்மா said...

இந்தப் பதிவைப் படிச்சதும் எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?? ஆமா, உங்களுக்கு ஸ்வீட் மட்டுந்தான் செய்யப் பிடிக்காதா? இல்லை, என்னை மாதிரி எல்லா சமையலுமேவா? :-))))

இன்னொரு சந்தேகம், அடுப்பை அவ்வப்போது அணைத்து அணைத்து கிண்டுவதை நிறுத்திச் செய்தால், ஸ்வீட் சரியாக வந்துவிடுமா? விடாமல் தொடர்ச்சியாகக் கிண்டவேண்டும் என்கிற வசியம் இல்லையா? (என்னவோ இன்னிக்கே இந்த ரெஸிப்பியைச் செஞ்சுப் பாக்கப்போற மாதிரி டவுட்டு வேற...)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வை.கோ. சார்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி தனபாலன், உஷா, மகேந்திரன்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ரிஷபன், சுரேஷ், சுந்தர், ஹுசைனம்மா.

Vatsala Vivek said...

Seven Cakes Recipe is very interesting.
நானும் உருப்படியாக எந்த ஸ்வீட்டும் செய்வதில்லை-பயம்--Indian Grocery
Stores போய் ஐந்தாம் வகை லட்டும்,can குலாப்ஜாமுனும் தான் எப்போதாவது. நல்லதுதான் ஸ்வீட் சாப்பிடும் ஆர்வமே போய் விட்டது. Diabetes கொஞ்சம் நகர்ந்து கொள்ளும்.

உங்களுடைய creative விஷயங்கள், சிறு வயது பயங்கள்
very interesting.
நான் உங்கள் கதைகளை, நாவல்களை விரும்பிப் படிப்பவள். இன்றுதான் Blog இருப்பது தெரிந்து வந்தேன்--அடேயப்பா--எத்தனை எத்தனை விருந்துகள்!

By the way, நான் இருப்பது Philadelphia, USA ல்
3௦௦0 வருடங்களுக்கு மேல்.
Thanks to Internet!

vatsala Vivek

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வத்சலா விவேக். நன்றி. பிளாக் மூலம் நட்பு கொண்டமைக்கு. தொடர்ந்து தொடர்பு கொள்ளவும்.