Friday, August 28, 2015

வீடென்று எதனைச் சொல்வீர்?

வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே  கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ

எண்பதுகளில் படித்த மாலனின் இந்தக் கவிதை மார்க்கண்டேயனைப் போல் மரணமற்றது. அன்றைய என் வீட்டுக்கும் அது பொருத்தமாகவே இருந்ததால் எனக்குள்ளும் இக்கவிதை இன்னும் மரணமற்று மறக்கப்படாது இருக்கிறது. வீடென்பது வெறும் செங்கல்லும், சிமெண்ட்டும் மணலும் மட்டும் கலந்ததல்ல. அதனுள் வாழ்வது வெறும் வைக்கோல் பொம்மைகள் அல்ல. உயிருள்ள, உணர்வுகள் உள்ள மனிதர்கள். அவர்களின் அன்பும், பாசமும், சிநேகமும், தியாகமும், நல்லுணர்வுகளும் கலந்ததுதான் வீடு..

இப்போது நான் இருக்கும் வீட்டிற்கு மிகப் பெரிய சரித்திரம் உண்டு. மயிலையின் பஜார் வீதியில் மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஒரு கோவில் வீட்டில்தான் அப்பா குடியிருந்தார். அதே வீட்டின் இன்னொரு போர்ஷனில் சின்னத்தை குடும்பம் இருந்தது. ஒரு தெரு திரும்பினால் என் பெரிய அத்தை குடியிருந்த, (நான் இப்போதும் இருக்கும்) இந்த வீடு இருந்தது. பெரியத்தைக்கு நாராயண்ணா மட்டும்தான் ஒரே பிள்ளை. சின்னத்தை நாலு பெண்கள் கடைசியாக ஒரு பிள்ளை என்று ஐந்து பேரைப் பெற்றுக் களைத்து திடீரென்று உயிரை விட, அந்த ஐந்து போரையும் அப்பாவும், பெரியத்தையும்தான் பொறுப்பெடுத்துக் கொண்டு வளர்த்தார்கள். எங்கள் வீட்டிலும் நாங்கள் ஐந்து பேர்.

ஆரம்பத்தில் அப்பா உட்லாண்ட்ஸ் ஹோட்டலில்தான் தலைமை சமையலராக இருந்தார். அந்த அளவுக்கு அங்கு அவருக்கு மரியாதை உண்டு. பிறகு சொந்தமாய் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சற்றே பெரிய வீடாகத் தேடினார். பெரியத்தை குடியிருந்த வீட்டில் ஒரு பெரிய போர்ஷன் காலியாக அங்கே குடி பெயரத் தீர்மானித்தாலும் அப்பாவுக்கு பயமிருந்தது. கோயில் வீட்டில் பத்து ரூபாய் வாடகை மட்டுமே கொடுத்தவருக்கு திடீரென்று நாற்பது ரூபாய் வாடகை கொடுக்க வேண்டுமென்பது சற்றே கவலையும் பயமும் ஏற்படுத்தியது. அத்தையும் அம்மாவும் தைரியம் கொடுக்க, 1960 ஆம் ஆண்டுதான் (அப்போது எனக்கு மூன்று வயது) இந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தார். அன்று இங்கே மின் வசதி கிடையாது.

மாடியில் வீட்டுக்கு உரிமையாளர்கள். கீழே இரண்டே இரண்டு போர்ஷன்கள். ஒன்று ஒரு ஒற்றை அறையும், சிறிய சமையலறையும் கொண்டது. மற்றது ஒரு அறை, பெரிய கூடம், கூடம் போன்றே பெரிய சமையலறை. இரட்டை விறகடுப்பும், புகை போக்கியும் கொண்டது. அத்தை வீட்டின் சிறிய சமையலறைக்கும் தனி புகை போக்கி இருக்கும். அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலுமே அநேகமாய் புகை போக்கி இருக்கும். நடுவில் பெரிய முற்றம். முற்றத்தை சுற்றிலு, ரேழிகள், பர்மா தேக்கில் உத்தரக் கட்டைகள், கருங்காலி தூண்கள் முட்டுக் கொடுக்க, கனத்த பர்மா தேக்கு கட்டைகள், முற்றத்திற்கு கிழக்கு பகுதியில் கார்ப்பொரேஷன் குழாய், அது ஒரு தொட்டி போன்ற அமைப்புக்குள் இருக்கும். இரண்டு படிகள் இறங்கிச்சென்றுதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதை அடுத்து தரையில் பதிக்கப்பட்ட பெரிய ஆட்டுக்கல். முற்றத்தின் தென் கிழக்கு ஓரத்தில் ஆண்டிற்கு ஒரு முறை முழு வீட்டுக்கும் சுண்ணாம்பு அடிக்கிற காலத்தில் சுண்ணாம்பு கிளிஞ்சல்களை ஊற வைப்பதற்காகவே ஒரு தொட்டி இருக்கும். மற்ற நாட்களில் அதில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.முற்றத்தின் தென் பகுதியில் மாடிக்கு செல்லும் படிகள். முற்றத்தின் வட கிழக்கில் என் அப்பா இருந்த போர்ஷனுக்கும் முற்றத்திற்கும் நடுவில் பின் பக்கமாக கொல்லைப்புறம். அதன் ஒரு பக்கம், குளியலறையும், மறு கோடி ஈசான்ய மூலையில் மேற் கூரையற்ற கழிப்பறையும் இருக்கும். குளியலறைக்கு மட்டும் தகரத்தில் மேற் கூரை போட்டிருக்கும். ஆனால் கதவு கிடையாது. இரண்டிற்கும் நடுவே பெரிதாய் துவைக்கும் கல் உண்டு. பின் பக்கம் முழுவதுமே வானம் பார்த்ததுதான். இரவில் பின் பக்கம் செல்வதற்கான ஒரு சிறிய மரக்கதவை மூடி தாள் போட்டு விடுவார்கள். வீட்டுக்குச் சொந்தக்காரர் மிக மிக நல்லவர். கண்ணியமானவர். எங்களுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். எங்கள் சொந்த வீடு போல்தான் நாங்கள் இருந்தோம்.இந்த வீட்டில்தான் நாங்கள் ஐந்து பேர் வளர்ந்தோம், படித்தோம், எங்கள் ஐநது பேரின் திருமணம் நடந்தது. இங்கேதான் என் அப்பாவின் அறுபதாம் கல்யாணம் கோலாகலமாய் நடந்தது. இந்த வீட்டில்தான் என் இரண்டு பெண்களும் பிறந்தார்கள். இந்த வீட்டில்தான் என் அப்பா செத்துப் போனார். என் கணவரை இழந்தேன். இங்குதான் என் ரெண்டு பெண்கள் வளர்ந்தார்கள். படித்தார்கள். இங்கிருந்துதான் அவர்கள் திருமணமாகி சென்றார்கள். என் பேரக் குழந்தைகள் வந்து விளையாடி விட்டுப் போகிறார்கள். நான்கு தலைமுறைகளைக் கண்ட வீடு இது. எத்தனையோ பிரபலங்கள் என் அப்பாவிடம் பட்சணங்கள் வாங்க வந்து சென்ற வீடு. பல எழுத்தாள நண்பர்கள் வந்து சென்ற வீடு. அற்புதமான பல நல்ல சிநேகிதங்கள் இன்றும் வந்து சென்று கொண்டிருக்கும் வீடு.

.

ஒரு வீடு என்பது தன் முன்னே பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும், சந்தோஷம், துக்கம், திறமைகள் என பலப்பல கதைகளையும், மௌனமாய் கண்டு கொண்டிருக்கும், வாயில்லா ஜீவன் என்றுதான் சொல்ல வேண்டும்.
எனக்கு நினைவு தெரிந்த பிறகு ஒரு முறை நான் அத்தையிடம் கேட்டேன். நீ எப்போ இந்த வீட்டுக்கு வந்த என்று. அத்தை, "நா இங்க வரும் போது உனக்கு ஒரு ஒரு வயசு இருக்கும்" என்றாள். "உனக்கு முன்னால இங்க யார் இருந்தா?" இது என் அடுத்த கேள்வி. யாரோ படம் வரையறவர் இருந்தாராம். அவரால வாடகை கொடுக்க முடியலைன்னு காலி பண்ண சொல்லிட்டாளாம். ஆனா அவா காலி பண்ணினப்பறம் வீட்டுக்காராளே இந்த இடத்தை உபயோகப்படுத்திண்டு இருந்தா. அதுக்கப்பறம் நா இங்க வந்தேன் என்றாள். ஓஹோ அப்டியா என்று கேட்டுக் கொண்டேன்.நாராயண்ணா ஒரு அற்புதமான ஓவியர், கோட்டு சித்திரமானாலும் சரி, வர்ணப்படமாக இருந்தாலும் சரி அது உயிரோட்டமாய் இருக்கும். அண்ணாவால்தான் எனக்கு படம் வரையும் ஆசை ஏற்பட்டது எனலாம். ஒரு முறை அண்ணாவிடம் கேட்டேன். இதுக்கு முன்னால இங்க இருந்தவா கூட படம் வரையவராமே உனக்குத் தெரியுமா என்றேன். தெரியுமே. ஆனா பழக்கமெல்லாம் கிடையாது. விகடன்ல எல்லாம் வரைவார் என்று சொன்னார். அப்போது நானும் சின்ன பெண் என்பதால் அதற்கு மேல் அது யார் என்ன பேர் அவருக்கு எனத் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏதும் ஏற்படவில்லை.இம்முறை மடிப்பாக்கத்திற்கு அம்மா வீட்டுக்கு சென்ற போது இத்தனை ஆண்டுகள் கழித்து,எங்கள் வீடு பற்றி பேச்சு வந்தது. அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் இருந்தது அது என எங்கள் வீட்டைப் பற்றிப் பேசியபடி பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தோம். அப்போது நான் என் அக்காவிடம், முன்பொரு முறை நாராயண்ணா என்னிடம் கூறியதைச சொல்லி, அந்தக்கால ஆனந்த விகடனில் படம் வரைந்து கொண்டிருந்தவர் நம் வீட்டில் குடி இருந்தாராம் அவரை உனக்குத் தெரியுமா என்றேன். அக்கா உடனே , "தெரியுமே அவர் யாருன்னு தெரியும். ஆனா பாத்ததில்ல. நம்மாத்துலேர்ந்து காலி பண்ணின ஒன்னு ரெண்டு வருஷத்துல அவர் செத்து போய்ட்டார்னு கேள்வி. நானுமே அப்போ சின்ன பொண்ணுதானே. அவர் பொண்ணு என் பிரெண்டோட பிரண்டு. அவாத்துக்கு கூட ஒரு முறை போயிருக்கேன் என்றாள். அவர் பேரென்ன என்று கேட்க, அதற்கு அவள் சொன்ன பெயரில் நான் சில வினாடிகள் சிலையாய் அமர்ந்திருந்தேன்.

"ராஜூன்னு பேர். கார்ட்டூன்லாம் போடுவாராம் விகடன்ல."

கார்டூனிஸ்ட் ராஜுவா? அந்த மாமனிதரா? அவர் குடியிருந்து கார்ட்டூன்கள் வரைந்த இடத்திலா இப்போது நான் இருக்கிறேன்? என்னால் நம்ப முடியவில்லை. இனம் புரியாத பெருமையும், கூடவே வாடகை கூட கொடுக்க முடியாமல் அவர் அன்று அவதிப்பட்டிருக்கிறார் என்ற உண்மை ஏற்படுத்திய சோகமும் ஒரு சேர என்னை அழுத்தியது. அதற்குப் பிறகு நான் வெகு நேரம் எதுவும் பேசாது மௌனமாகி விட்டேன். google ல் தேடியதில் கீழே உள்ள சிறிய விவரமும் அவர் வரைந்த சில நகைச்சுவைப் படங்களும் மட்டுமே கிடைத்தன. அவரது ஒரு புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை

//ராஜு( இயற்பெயர்: ஸ்ரீ நாராயணசாமி ) ‘மாலி’ கண்டெடுத்து ‘விகடனில் சேர்த்துக் கொண்ட ஒரு மாணிக்கம். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நகைச்சுவைச் சைத்திரிகர்களில் இவர் ஒருவர். 1953-இல் மிக இளம் வயதில் காலமாகி விட்டார்.//ஒரு ஓவியர் இருந்த இடத்தில் பிறகு என் அத்தை குடியேறி, அதே இடத்தில் நாராயண்ணாவும் ஓவியத்தில் ஆர்வம் கொண்டு நிறைய வரைந்து, நாராயண்ணாவின் பாதிப்பால் நானும் ஓவியத்தில் ஆர்வம் கொண்டு ஏதோ வரையத்துவங்கி, அத்தை காலி செய்து போன பிறகு அந்த இடத்திற்கு நான் குடி வந்து, பிறகு, பத்தாண்டுகள் கழித்து, பாகப் பிரிவினை செய்யப்பட்ட வீட்டில் நூறு வருட பழமையான கஜலஷ்மி சிற்பம் செதுக்கிய முன்புற வாசலோடு, ஓவியர் ராஜுவும் அத்தையும் குடியிருந்த அந்த நானூற்றி சொச்சம் சதுர அடியை நான் வாங்கிக் கொள்ளும் சூழ் நிலை வந்து, இன்று வரை அந்த வீட்டில், என் அப்பா, அத்தை, நாராயண்ணா, மற்றும் அங்கு நடந்த சுவையான மகிழ்ச்சியான பலப்பல சம்பவங்கள், சில துக்கங்கள் என்று...மறக்க இயலாத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ..இதனால்தான் எனக்கு மாலனின் மேற்கண்ட கவிதை நினைவுக்கு வந்தது.
"வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு "

ஆம். என் வீடு எனக்கு வெறும் வீடு மட்டுமல்ல. அதற்கு ஒரு ஜீவன் உள்ளது. அது என் வளர்ச்சியை அணு அணுவாய் கண்டிருக்கிறது. என் மழலைப் பேச்சையும், இளமைக் குறும்பையும், பள்ளிப் பருவத்தையும், கல்லூரி காலங்களையும், கல்யாண கோலத்தையும், தாய்மைப் பேற்றையும் கண்டிருக்கிறது. என் சுக துக்கங்கள், சந்தோஷங்கள், கோபங்கள், குமுறல்கள், என் கண்ணீர், என அனைத்துக்கும் அது சாட்சி. என் முதல் கதையிலிருந்து சென்ற மாதம் தினமலருக்கு எழுதிய "துளசி" குறுந்தொடர் வரை இங்கு எழுதப்பட்டதுதான். என் ஓவியங்களை இதன் சுவர்கள்தான் முதலில் கண்டன. சந்தோஷமோ சங்கடமோ வெறும் தரையில் முகம் பதித்து படுத்தால் ஒரு தாயின் அரவணைப்பைத் தரும் எனக்கு இது.

அதனால்தான் நான் அதை முழுவதும் இடித்து கட்ட விரும்பாது, பழமையை மாற்றாது உள்ளது உள்ளபடியே இருக்கட்டும் என்று அதை புதுப்பித்து ரிப்பேர் மட்டும் செய்தேன். இன்னும் பர்மா தேக்கு மர உத்தரக் கட்டைகள் இருக்கின்றன. பல நல்லவர்கள் வாழ்ந்த வீடு இது என்பதால் இதை ஒரு கோயிலாகவும் எண்ணுகிறேன். . இங்கு வருபவர்களுக்கு நல்ல அதிர்வலை கிடைக்குமாறு சுத்தமும், அமைதியும், இனம் புரியாத நிம்மதியும் கிடைக்கச செய்கிறேன். என் வீட்டைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். இதுநாள் வரை, என் வீடு என்றால், என் வீட்டு பெரியவர்கள் மட்டும்தான் நினைவுக்கு வந்து போவார்கள். இனி மாமனிதர் ஓவியர் ராஜுவும் என் நினைவில் இருப்பார்.

இம்முறை மடிப்பாக்கத்திலிருந்து வந்ததும் என் வீட்டின் அந்த புகழ் பெற்ற அறையில் (இப்போது அது பூஜையறை) கண்ணீர் கசிய வெகு நேரம் மௌனமாய் அமர்ந்திருந்தேன். அந்த ஓவியர் வாழ்ந்த இடத்தில் இப்போது நான் வரைந்து மாட்டியிருக்கும் தெய்வீக ஓவியங்கள் எல்லாம் அவரது ஆன்மாவைக் குளிரச் செய்திருக்கும் என நம்புகிறேன்.


இப்படி ஒரு வீட்டில் என்னை இருக்கச்செய்த இறைவா ...
எத்தனை கோடி இன்பம் (எண்ணங்கள்) வைத்தாய் இங்கு .!!!.Monday, August 3, 2015

பாலக்காடு அனுபவங்கள் - 1

இம்முறையும்  பாலக்காடு பயணம் எப்போதும் போல மனதுக்கு நிறைவாய் அமைந்தது. ஆகஸ்ட் ஒன்றாம்  தேதி போய்  இறங்கியதுமே குளித்து காப்பி குடித்து விட்டு காவசேரிக்கு  ஆட்டோவில் கிளம்பி விட்டோம்.  கர்கடக  மாசத்தில் பகவதியைத் தொழுதது மனதுக்கு நிறைவாக இருந்தது. என் கல்யாணம் ஆன புதிதில் என் மாமனார் மாமியார் என்று எல்லாரோடும் ஆண்டுக்கொரு முறை போவோம்.  அப்போதெல்லாம்  மிகச் சாதாரண நிலையில் இருந்த கோயில் இன்று நன்கு develop ஆகி விட்டது.  மாமனாருக்கு அங்கு  எல்லாரையும் தெரியும்.   எங்கள் வகையாக ஒவ்வொரு முறையும் பாயசம் தயாரிக்கச் சொல்வது வழக்கம்.

உள்  நடையிலேயே கருவறையின் பின்னால் பாயசம் தயாரிக்க ஒரு சின்ன இடம் உண்டு.  அரவணைப் பாயசம் என்பதால் மெதுவாகத்தான் தயாராகும். அதுவரை மாமனாரும் மற்றவர்களும் அங்குள்ளவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். கோவில்  வளாகத்திற்கு  உள்ளே  வலப்பக்கமாய் கொஞ்சம் நடந்தால் ஒரு குளம் இருக்கும். அதில்  குளித்து விட்டு, கோவிலை ஒட்டி வெளிப் பிரகாரத்தில் இருக்கும் ஒரு அறையில் உடை மாற்றிக் கொண்டுதான் பகவதியைத் தொழுவதற்குச் செல்லுவோம்.  பாயசத்திற்கு ஒரு தூக்குப் பாத்திரமும் பாலக்காட்டிலிருந்து எடுத்துச் சென்று விடுவோம்.

காலை ஏழு மணிக்கு சென்றோமானால் அங்கிருந்து கிளம்ப  உச்சிப் பொழுதாகிவிடும். அதெல்லாம் அந்தக் காலம்.  என் கணவர் இருந்த வரை  நாங்கள் குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தோம்.  அவர் போன பிறகு நானும் பெண்களும்  வருடம் தவறாமல் செல்வோம்..  இப்போதெல்லாம்  பழைய முகங்களைக்  காண முடியவில்லை. ரெண்டு பெண்களும் கல்யாணமாகிச்  சென்று  விட்டதால்  இம்முறை இங்கிருந்து நான் மட்டுமே. என் சித்தி (என் மாமியாரின் தங்கை)  என்னோடு காவிற்கு வந்தார்.  கற்கடகம் என்பது இராமாயண மாசமும் கூட. உள்ளே மேடையில் இராமாயண உபன்யாசம் நடக்கத் தயாராகிக்கொண்டிருந்தது.  ராம நாமத்தையும் இராமாயண உபன்யாசத்தையும்  இந்த  கற்கடக மாதத்தில் எல்லா கோவிலிலுமே  கேட்க முடியும்.

பகவதிக்கு பாவாடை சார்த்தி,  எல்லார் பெயருக்கும் புஷ்பாஞ்சலி செய்து, மெய்மறந்து பகவதியின் முன்பு நின்று மானசீகமாய் உரையாடி விட்டு வருவது என்று என் வழிபாடு,  அன்றைய விஸ்தாரமான வழிபாட்டிலிருந்து  நிறையவே மாறி விட்டது.   எப்போதும் காவுக்கு செல்வது என்னை பரவசப்படுத்தி விடுகிறது. அத்தனை அழகும், சாந்தமும், அமைதியும் கொண்டவள் பரக்காட்டு பகவதி.

முன்பொரு காலத்தில்  தேவி மூகாசுரனை வதம் செய்ய முனைந்த போது அவனது ஒவ்வொரு ரத்தத் துளியிளிருந்தும் ஒவ்வொரு அசுரன் உருவாக, ஒவ்வொருவராக சம்ஹாரம் செய்திருக்கிறாள் பகவதி. அதில் ஒருவன் பெயர் "பர".   இந்தக் காட்டில்தான் அவனை வதம் செய்திருக்கிறாள். அதனால்தான் பரக்காட்டு பகவதி என்ற பெயர்.  முன்பு இவளிருந்தது பறச்சேரி என்ற ஸ்தலத்தில் அங்கு ஏதோ அதிருப்தி எழுந்ததால்                                                         அங்கிருந்த உன்னிக்குமாரத்து குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியிடம் தீப்பந்தம் வேண்டுமென்று கேட்டிருக்கிறாள்.  நெற்கதிர்களைக் கொண்டு  அந்தப் பெண் பந்தமொன்று கொளுத்திக் கொடுக்க, அதன் வெளிச்சத்தில் பகவதி இந்த பரக்காட்டுக்கு வந்து குடியேறியதாக சொல்லப்படுகிறது

அதிப்பேட்டு மாங்கோட்டு பகவதி இவளது சகோதரி.  எனவே மீன மாசத்தில் (மார்ச்-ஏப்ரல்) ஏழு நாட்கள் இந்த ஆலயம் பூட்டப்பட்டு , பரக்காட்டு பகவதி தன்  சகோதரி மாங்கோட்டு பகவதியிடம் அழைத்துச்செல்லப்படுகிறாள்.  ஏழு நாட்கள் இவள் தன்  சகோதரியோடு இருந்து விட்டு திரும்புகிறாள்.

(பாலக்காடு அனுபவங்கள் தொடரும்)