Thursday, May 31, 2012

எழுத்து சித்தர்.


எண்பதுகளின்  மத்தியில் `அமுதசுரபி' மாத இதழில் எனது "அடைப்பு" என்ற சிறுகதை பரிசு பெற்றிருந்தது.  பரிசளிப்பு விழா ஸ்ரீராம் நிறுவனத்தால் மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடத்தப் பட்டது.  அதில் புதினம், கட்டுரைகள் என்று பல்வேறு தளத்தில் பரிசுகள் வழங்கப்பட இருந்தது.  புதினத்திற்காக பரிசு வாங்கியது திரு பாலகுமாரன்.  ஒரே மேடையில் அவரோடு நானும்  மேடையில் அமர்த்தப் பட்ட போது  ஒருவினாடி அது கனவா நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது எனக்கு.


பரிசளிப்பு விழா முடிந்து வெளியில் அவர் தன் குடும்பத்தாருடன் நின்று பேசிக்கொண்டிருக்க, என கணவர் என்னையும் அழைத்துக் கொண்டு நேராக அவரருகில் சென்றார்.  என மனைவி உங்கள் தீவீர வாசகி என்று என்னை அறிமுகப்படுத்த,  அவர் என்னை ஏறிட்டு பார்த்தார்.  "நீ சிறுகதைக்காக பரிசு வாங்கினாய் அல்லவா?" என்றார்.  ஆமாம் என்றேன்.
தன் மனைவிகளை எனக்கு அறிமுகப் படுத்தினார்.  பிறகு முடிந்தால் நீ வீட்டுக்கு வாயேன், நாம் நிறைய பேசுவோம் என்றார். என் கணவரிடம். விலாசமும் சொன்னார். வரும் முன் போன் பண்ணி விட்டு வா என்றார்.


அடுத்து வந்த விடுமுறை நாளில் போன் பண்ணி விட்டு கிளம்பினேன்.
என் கணவர் அவர் வீட்டின் காம்பசில் விட்டு விட்டு நீ போய் பேசி விட்டு வா.  நான் சற்று பொறுத்து வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.  கமலாவும் சாந்தாவும் புன்னகையோடு என்னை வரவேற்று அமர வைக்க,  சற்று பொறுத்து வந்தார் பாலா.  கூரை வேயப்பட்ட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்.    மெர்க்குரிப் பூக்களில் துவங்கி அதுவரை அவர் எழுதியிருந்தவை  அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எழுத்துலகில் பிரவேசித்திருந்த எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.


 மூன்று மணி நேரப் பொழுது மூன்று நிமிடம் போல் கரைந்திருந்தது.  நான் விடை பெற்று கிளம்பினேன்.  எப்படி போவாய்.?  இது அவர் கேள்வி.
என்னவர் காத்திருப்பார் - இது என் பதில்.  அவர் கண்கள் விரிந்தது. அவர் வந்திருக்கிறாரா?  சொல்லவே இல்லையே,. என்ன பெண் நீ.  அவரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே என்றார்.   இவ்வளவு நேரம் அவரால் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது.  என்றேன்.  நீளவாக்கில் செல்லும் காம்பவுண்டு அது. என்னோடு துணைக்கு வந்தார்.  கேட் அருகில் நின்றிருந்தார் என்னவர்.   ச்சே என்ன மாதிரி ஒரு ஆம்படையான் உனக்கு!   இப்டி ஒருத்தனை நா பார்த்ததே இல்லை என்று நெகிழ்ந்தார் என் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு.


அன்று துவங்கியது எங்கள் நட்பு.   ஒரு நாள்  காலை அவர் எங்கள் வீட்டிற்கு வந்தார்.  ஒரு பக்கம் சமையல், குழந்தைகளை ஸ்கூலுக்கு கிளப்பும் படலம், ஜன்னல் திட்டில் கிடைக்கும் கேப்பில் நான் எழுதிக்க் கொண்டிருந்த கதை பேப்பர்கள்,  என்று அமர்க்க்களமாக இருந்தது,   குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும் வரை பொறுமையாய் காத்திருந்தார்.  பிறகு அரைமணி நேரம்  தான் அடுத்து எழுதப் போகும் நாவல் குறித்து பேசி விட்டு கிளம்பினார்.

என் வீட்டு விசேஷங்களுக்கு நான் அவரை அழைப்பதும்,  அவர் வீட்டு விசேஷங்களுக்கு அவர் எங்களை அழைப்பதும் வாடிக்கையாயிற்று.  ஆரம்பத்தில் இருந்த பயமெல்லாம் போய்  இலக்கிய தர்க்கம் அதிகரித்தது. சிலநேரம் அது சண்டை போல் தோன்றும் மற்றவர்களுக்கு,  என் கதையில் நான் காப்பி தம்ளர்கள்  நிறைய அலம்புகிறேன் என்று கிண்டல் செய்வார்.  கோபமாக வரும்.  பிறகு என் கதையை படித்து பார்த்த போது அது உண்மைதான் என்று தோன்றியது.   மாற்றிக் கொண்டேன்.  பாலகுமாரன் கிண்டல் செய்யாத அளவுக்கு வெகு ஜாக்கிரதையாக எழுத ஆரம்பித்தேன்.


நட்பு என்பது வெறும் காப்பி சாப்பிட்டு விட்டு பேசி விட்டுப் போவது மட்டுமல்ல என்பதை அவர் பல முறை எனக்குப் புரிய வைத்திருக்கிறார்.
ஒருசமயம் என் அக்காவுக்கு நான் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.   என்னிடம் பணமில்லை.   நகையை ஏதாவது வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக வந்தார் பாலா.  என் முகத்தை பார்த்து விட்டு ஏதாவது பிரச்சனையா என்றார்.  ஒனறும்  இல்லை என்றேன்   முகத்தை பார்த்தா அப்டி தெரியலையே. . என்ன சுப்ரமணியம் நீங்கதான் சொல்றது என்றதும் வேறு வழியின்றி பணத்தேவை குறித்து சொன்னோம்.   அவ்ளோதானே எங்கிட்ட கேட்டா நா தர மாட்டேனா என்றார்.   எங்களுக்கு கடன் வாங்கி பழக்கமே இல்லை என்றார் என் கணவர்.   எனக்கும் உங்களுக்கும் நடூல எதுக்கு அவ்ளோ பெரிய வார்த்தை எல்லாம் என்றவர் உடனே கிளம்பினார் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு. 


அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு கவரில் பணத்தோடு வந்தார்.  இந்தா. இதை நான் எப்போ திருப்பி கேட்கிறேனோ அப்போது கொடுத்தால போதும் என்றார்.   இல்லை என் புராவிடன்ட் பண்டு லோன் போட்டு பத்து நாள்ல குடுத்துடறேன் என்றார் என் கணவர்.  அதேபோல் பணத்தை திருப்பி கொடுத்த போது, வேற ஏதாவது கடன் இருந்தா இதை வைத்து அதை அடை.  எனக்கு வேண்டும் என்கிற போது நானே கேட்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.   வேறு கடன் எதுவும் இல்லாத நிலையில் பணத்தை அப்படியே வங்கியில் போட்டு விட்டு வந்தார் என் கணவர்.  ஆறு மாதம் கழித்து பணம் குறித்து நான் நினைவு படுத்த, சரி சுமையா இருந்தா கொடுத்து விடு என்று சொல்லி வாங்கிச் சென்றார்.


மற்றொரு முறை சமூக நலத்துறைக்கு துறை மாற்றம் செய்யப்பட்ட எனக்கு சமூக நலத்துறையில் பணியிடம் வழங்கவேயில்லை.  லீவுல இருக்கயா நீ  என்றார் என்னிடம். நான் விஷயத்தைச் சொன்னேன். உங்க துறைக்கு யார் செயலர் என்றார். நான் சொன்னேன்.  அட இவரா. எனக்கு நல்லா தெரியுமே. அவரைப் போய்ப் பார்க்கலாம் நாளைக்கு என்றார்.  அவரே அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் போனில் பேசி நேரம் வாங்கி, மறுநாள் என்னை அழைத்துச் சென்றார். ஆறுமாதம் நான் அலையாய் அலைந்தபோதும் நடக்காத விஷயம் அரைமணியில் மேஜிக் மாதிரி நடந்தது,   அடுத்த நாள் நான் பணியில் சேர்ந்தேன்.  இப்படி சின்னதும் பெரிதுமாக கேட்டும் கேட்காமலும் செய்த உதவிகள் கணக்கற்றவை.


எனது முதல் நாவல் பதிப்பகம் மூலம் புத்தக வடிவில் வெளி வந்தது அவர் தயவால்தான். அந்தப் புத்தகத்திற்கு அவரே முன்னுரையும் எழுதிக் கொடுத்தார்.  அவருடைய மிகச் சிறந்த சில புத்தகங்களுக்கு என்னை முன்னுரை எழுதவைத்ததார். முன்னுரை என்பது எப்படி எழுதப் பட வேண்டும் என்பதை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.


இதையெல்லாம் விட மிகப் பெரிய உதவியை ஒரு நண்பராக எனக்கு செய்திருக்கிறார். என் கணவருக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. கழுத்து வழியே மூளைக்கு செல்லும் தமனியில் கொழுப்பு அடைத்துக் கொண்டதால் பக்கவாதம் வந்திருந்தது.   மிக சிக்கலான அறுவை சிகிச்சை.  அறுவை சிகிச்சை நடக்கும்போதே ஸ்ட்ரோக் ஏற்பட நிறைய வாய்ப்பு இருந்தது.   அப்படி ஏற்பட்டால்   பிழைப்பதே கஷ்டம்தான்.

தமிழ்நாடு மருத்துவமனையில் என் கணவரோடு நான் மட்டுமே இருந்தேன்.  அதிகாலை அவரை அறுவை சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் சென்றதும், இனி உன்னை நல்ல படியாய் பார்ப்பேனா மாட்டேனா என்கிற பயமும் பதற்றமுமாய் நான் மட்டும் தனியே வெளியில் அமர்ந்திருந்த நிலையில் என் தோளைத் தொட்டது ஒரு கரம. திரும்பினால் பாலா.   என் கண்கள் உடைந்தது.    அவர் எதுவும் பேசாமல் என்னருகில் அமர்ந்தார்.  கிட்டத்தட்ட நான்கு மணிநேரம்.   இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.   சிலையாய் அமர்ந்திருந்தோம்.   டாக்டர் வெளியில் வர நான் எழுந்து ஓடினேன்.  டாக்டர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.   போஸ்ட் ஆபரேஷன் அறையில் இருக்கிறார். போய்ப் பாருங்கள் என்றார். நானும் பாலாவும் உள்ளே போனோம். டாக்டர் என்னைக் காட்டி யார் தெரிகிறதா என்றார்.  தெரிகிறது என்றார்.  பாலாவைக் காட்டி இது யார் சொல்லுங்கள் என்றார்.   பா   லா ...மிக மெலிதாக சொன்னதும் பாலகுமாரனின் கண்களில் கண்ணீர்.       பிறகு என் கணவர் டிஸ்சார்ஜ் ஆன போது,   அவரை தன் காரில் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டதும் அவர்தான்.


அங்கிருந்து சற்று நேரத்தில் கிளம்பியவர் நேராக என் வீட்டிற்கு சென்று என் அம்மாவிடம் சற்று கோபமாகவே பேசி இருக்கிறார். இப்டி அவளை தனியா விட்ருக்கப் படாது நீங்க.   ஏதோ ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா  தாங்கிப் பிடிச்சுக்கக் கூட யாருமில்லாம தன்னந்தனியா அவ உட்கார்ந்திருந்தது  வயத்தைக் கலக்கிடுத்து.  உங்களால முடியலைன்னா எங்கிட்ட சொல்லியிருந்தா நா சாந்தா கமலா ரெண்டு போரையும் அனுப்பி இருப்பேனே.  என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்.  பாவம் என் அம்மா  என் குழந்தைகளுக்கு காவலாய் தான் வீட்டிலிருந்ததை சொல்லி இருக்கிறாள்.


எப்படியோ காப்பாற்றியும் கூட என் கணவருக்கு தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை.   மறுபடியும் புகைப் பழக்கம் தொற்றிக் கொள்ள ஒரு நாள் அது அவரை முழுவதுமாய் எரித்து விட்டது.
பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த பாலா என் பெண்ணிடம் என் கணவரின் புகைப் படத்தை வாங்கிக் கொண்டு சென்று பத்திரிகைகளுக்கு செய்தி சொன்ன கையேடு அந்த படத்தை பெரிதாக்கி லாமினேட்டும் செய்து கொடுத்தார்.  அந்தப் படம் இன்று வரை பீரோவில்தான் இருக்கிறது. வெறும் புகைப்படமாய் என்னவரை பார்க்க எனக்கு விருப்பமில்லாததுதான்   வெளியில் வைக்காத காரணம்.


அதற்கு பிறகு பால குமாரன் என் வீட்டுப் பக்கமே வரவில்லை. நான் போன்  செய்து பேசி ஏம்ப்பா அப்பறம் இங்க வரவில்ல என்றபோது அவர் சொன்ன பதில்.   சுப்பிரமணியம் இல்லாத வீட்டுக்கு வர எனக்கு கஷ்டமார்க்கு. பிடிக்கல. உனக்கு தோணும போது நீ என் வீட்டுக்கு வந்து பேசிட்டு போ.  - இதுதான்.  


அதன் பிறகு இன்று வரை அவர் என் வீட்டுக்கு வரவில்லை,. வந்தாலும் வாசலோடு பேசி விட்டுப் போவார்.  நாளாக ஆக  நாங்கள் பேசிக்கொள்வது கூட குறைந்து போயிற்று. சிலநேரம் அது வருடக் கணக்கில் கூட இருக்கும்.  ஆனால் எப்போது பேசினாலும் என்னமோ நேற்று விட்ட இடத்திலிருந்து பேசுவது போல் படு இயல்பாய் பேசிக் கொள்வோம். சண்டையிட்டுக் கொள்வோம்.  கிண்டலடித்துக் கொள்வோம்.   பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு  என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்.


எதற்கு திடீரென்று பாலாவைப பற்றி எழுதுகிறேன் என்று தோன்றும்.  இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்.   எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே அவர் புகைப்பதை நிறுத்தி விட்டாலும், எப்போதோ புகைத்ததன் பாதிப்பு இன்று அவரது நுரையீரலில் கோளாறை ஏற்படுத்தி இருக்கிறது     

வீட்டிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜன் சிலிண்டரோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்.   எது என் கணவரை என்னிடமிருந்து பறித்துச் சென்றதோ, எது என் நண்பரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறதோ, அதை இனியாவது இந்த உலகம் தூக்கி எறிய வேண்டும். என்ற தவிப்பில்தான் இன்று இந்த பதிவை எழுதி இருக்கிறேன்.  நீங்கள் புகைப்பவர் ஆனாலும் சரி, அல்லது புகைக்க விரும்புகிறவர் ஆனாலும் சரி, உங்களுக்கு நாள் சொல்ல விரும்புவது,

"உங்கள் உதட்டில் உட்காரும் அந்த சிறு நெருப்பு ஒரு நாள் உங்களையே சுட்டெரிக்கும் என்பதை நினைவில் கொண்டு  அதை ஒதுக்கித் தள்ளுங்கள் என்பதே"