மழலைகள் உலகம் மகத்தானது நான் இப்போது மகத்தான உலகின் நடுவில்தான் நிற்கிறேன். என் இரட்டைப் பேரக் குழந்தைகளின் குறும்புகளையும், கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும் ஒவ்வொரு நொடியும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் நம்மை விட அறிவுக் கூர்மை மிகுந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே.
இந்த அர்த்தம் பொதிந்த வரிகளில் முதலிரண்டு வரிகள் முற்றிலும் உண்மைதான். ஆனால் அன்னையின் வளர்ப்பு மட்டும்தான் ஒரு குழந்தையை நல்லவராகவோ தீயவராகவோ ஆக்கும் என்பதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது, பிறந்தவுடன் தாயை இழந்து, தந்தையாலும், நெருங்கிய உறவுகளாலும் நல்லவனாக வளர்க்கப் பட்ட எத்தனையோ குழந்தைகள் உண்டு. அன்னை என்பவள் ஒரு உன்னதமான உறவு. தாள முடியாத வலியை சகித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதால் அவள் அந்தக் குழந்தையின் வளர்ப்பில் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறாள். அது இயற்கை.
ஒரு குழந்தையை யார் வளர்க்கிறாரோ அவர் நல்ல சிந்தனைகளுடன் நற்குணங்கள் பொருந்தியவராக இருத்தல் வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். யாரைப் பார்த்து குழந்தைகள் வளர்கின்றனவோ அவர்களது பாதிப்புடன்தான் அவை வளரும்.
என் அப்பா மிக மிக நேர்மையானவர். உழைப்பாளி. கண்ணியம் மிகுந்தவர். கண்டிப்பானவர். அவரிடம் புகைக்கும் பழக்கம் இருந்தது. என் தம்பி புகைக்கப் பழகிய போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவனை கண்டிக்க முடியவில்லை அவரால். அதேபோல் என் கணவருக்குப் புகைப்பழக்கம் இருப்பது தெரிந்தும் அவர் அதை தவறாகக் கருதவில்லை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் விஷம் கொல்லத்தானே செய்யும். இது தவறு என்று பக்குவமாய் என் அப்பாவுக்கு எடுத்துச் சொல்ல யாருக்கும் தெரியவில்லை. எனவேதான் என் தம்பி விஷயத்தில் அவர் வாய் மூடிக்க் கொள்ளும் நிலை. இது ஒரு உதாரணம்தான். நம்மைத்தான் குழந்தைகள் பிரதிபலிப்பார்கள் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
என்னை மிக மிக பாதித்த, யோசிக்க வைத்த ஒரு குழந்தை உண்டு. அதன் தகப்பன் ஒரு பெரிய அரசன். அவன் ஒரு நாள் ஒரு யாகம் செய்கிறான். தந்தை யாகம் செய்வதை அருகில் இருந்து பார்க்கிறான் அந்த பால் மணம் மாறாத சிறுவன். யாகத்தின் முடிவில் தனக்கு உதவாத தன்னிடம் வீணான பொருட்களையெல்லாம் தானம் செய்கிறான் அரசன். தந்தை செய்வது தவறு எனப் புரிகிறது சிறுவனுக்கு. ஆயினும் தந்தையை எல்லோர் முன்னிலையிலும் குற்றம் சொல்வது சரியாகாதே, இருப்பினும் பூடகமாக தந்தைக்கு சிறந்தவற்றைத்தான் தானமாக அளிக்க வேண்டும் என உணர்த்த நினைக்கிறான் அவன் அப்பாவைப் பார்த்து கேட்கிறான்.
“அப்பா என்னை யாருக்கு தானமாக அளிக்கப் போகிறீர்கள்.?”
ஒரு தகப்பனுக்கு தன் குழந்தையைவிட சிறந்த ஒன்று இருக்க முடியுமா? அதனால்தான் அப்படிக்கேட்டான். தந்தைக்குப் புரியவில்லை. குழந்தை ஏதோ கேட்கிறது என்று விட்டு விட்டான். சிறுவன் மீண்டும் மீண்டும் கேட்டதும் தந்தைக்கு எரிச்சலேற்பட்டது. அந்த எரிச்சலோடு பதில் சொன்னான்.
“உன்னை எமனுக்கு தானமாய் அளிக்கிறேன்”
சிறுவன் சற்றே யோசித்தான். பல விஷயங்களில் முதல் நிலையிலும் பலவற்றில் இடை நிலையிலும் இருக்கும் என்னை எமனுக்கு அளிப்பதன் மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? இருப்பினும் தந்தை சொன்ன சொல் பொய்யாகி விடக்கூடாது என முடிவெடுத்தான் அவன். எமனைத் தேடிக் கிளம்பினான்.
எமலோகத்தில் எமன் இல்லை. சிறுவன் காத்திருந்தான். மூன்று நாட்களுக்குப் பின் எமன் வந்தான். தன் இருப்பிடத்தில் ஒரு சிறுவன் மூன்று நாட்களாய் அன்ன ஆகாரமின்றி இருந்திருப்பதை அறிந்ததும் துடித்துப் போனான். விருந்தோம்பல் என்ற பண்பிலிருந்து தான் தவறி விட்டதாக வேதனைப் பட்டான். சிறுவனை உபசரித்தவன் தன் தவறுக்கு பிராயச்சித்தமாய் அவனுக்கு மூன்று வரங்கள் தர முன் வந்தான். எமனின் வற்புறுத்தலை ஏற்று சிறுவன் மூன்று வரங்கள் பெற சம்மதித்தான்.
முதல் வரமாக அவன் கேட்டது.
“நான் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது என் தந்தை என் மீது கோபப் படாமல் என்னை புரிந்து கொள்ள வேண்டும் அவர் மனக் கவலை அற்றவராக தெளிந்த மனதுடன் என்னோடு பேச வேண்டும.”
எமன் அதனை ஏற்று முதல் வரத்தை அளித்தான்.
இரண்டாவது வரம் கேட்டான் சிறுவன்.
“சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி சொல். இதுவே எனது இரண்டாவது வரம்.”
வேதகாலத்தில் தான் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தையே நாடினான் மனிதன். சொர்க்கத்திற்குச் செல்லவும் யாகம் உண்டு.
எமன் அது பற்றி சொன்னான். “விழிப்புடன் கேள் குழந்தாய் சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி உன் இதயக் குகையில் உள்ளது. உன் புத்தியை விழிப்புறச் செய்யும் வித்யை உன்னிடம் இருந்தாலொழிய நீ அதனை உணர முடியாது, அந்த அகப்பயிற்சியோடு நீ புறத்திலும் அந்த யாகத்தை செய்யலாம்.
எமன் அந்த யாக குண்டம் எப்படி அமைய வேண்டும் என்னென்ன பொருட்கள் வேண்டும் எப்படி யாகம் செய்ய வேண்டும் என்று விளக்கினான், இனி இந்த யாகம் உன் பெயராலேயே அழைக்கப்படும் என்று உபரியாய் ஒரு வரமும்
.
மூன்றாவது வரமாக சிறுவன் கேட்டது எமனையே திகைக்க வைத்தது.
“மரணத்திற்குப் பிறகு மனித நிலை என்ன என அறியவிரும்புகிறேன். மூன்றாவது வரமாக இந்த உண்மையைச் சொல்”
சிறுவன் கேட்டதும் எமன் திகைத்தான். குழந்தாய் இது மிகப் பெரிய உண்மை. நீயோ சிறுவன். இதைப் பற்றி அறியும் வயதல்ல. தேவர்களுக்கே இன்னும் இது குறித்து தெளிவு ஏற்படவில்லை வேறு ஏதாவது கேள்.
“இல்லை இதுகுறித்து அறியவே விரும்புகிறேன்.”
எமன் தயங்கினான். சிறுவனின் மனம் மாற்ற முயன்றான்.
“உனக்கு சகல செல்வங்களைத் தருகிறேன். அழகிய தேவலோகப் பெண்களைத் தருகிறேன். மானிட உலகின் அடையமுடியாத அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கிறேன் சந்தோஷமாயிரு. இதை மட்டும் கேட்காதே சரியா.?”
“நீ சொல்லும் எல்லா சுகங்களும் நிலையற்றவை. நான் அறிய விரும்புவது நிலையான ஒரு ஒப்பற்ற உண்மையை. அதனை எனக்கு சொல்ல வில்லை எனில் நீஅளித்த மற்ற இரு வரங்களையும் நீயே திரும்பப் பெற்றுக் கொண்டு விடு.”
சிறுவன் பிடிவாதமாக இருந்தான். அவனது உறுதியும் தெளிவும் விவேகமும் கண்டு எமன் மூன்றாவது வரத்தையும் தர முன்வந்தான். மரணத்திற்குப் பிறகு மனித நிலையை உபதேசித்தான்.
இந்தச் சிறுவன் யாரென அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
கட உபநிஷதத்த்கின் நாயகன் இவன்தான். நசிகேதஸ் என்பது அவன் பெயர். இவன் பெயரால் அழைக்கப் படும் யாகமே நசிகேத யாகம். இவனது மூன்றாவது வரமாக எமன் சொன்ன உண்மைகளே எம கீதை என்றழைக்கப் படுகிறது.
இந்தக் கதையை இந்தப் பதிவில் சொல்வதற்குக் காரணமிருக்கிறது.
நசிகேதன் கதையிலிருந்து நாம் தெரிந்து கொண்டு நம் குழந்தைகளுக்கு சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.
அ) சிரத்தை.
நசிகேதன் தன் தந்தை செய்த யகத்தையும் தானப் பொருட்களையும் சிரத்தையுடன் கவனித்ததால்தான் அவனுக்கு
அவரது தவறு புரிந்தது.
ஆ) சுய மதிப்பீடு
.
தன்னிடம் இருந்த குறைகளும் நிறைகளையும் பற்றி யோசிக்கும் அவன், தன்னை தானமாய் அளிப்பதால் தந்தைக்கு என்ன பலன் கிடைக்கும் என நினைக்கிறான். சுய மதிப்பீட்டை சிலர் கர்வம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. தமது நிறை குறைகளை மதிப்பீடு செய்து அடுத்த அடியை எடுத்து வைக்கிறவன், வாழ்வில் உயர்வான் என்பதற்கு நசிகேதன் ஒரு முன்னுதாரணம்.
இ) உண்மைகளை ஏற்கும் தெளிவு.
அப்பா தன்னை எமனுக்கு அளிப்பதாகக் கூறியதும் அவன் கலங்கவில்லை. மறுக்கவில்லை. அதை ஏற்கிறான். ராமாயணத்தில் ராமனுக்கும் இந்த குணம் இருந்தது. அதனால்தான் தந்தை இட்ட கட்டளை ஏற்று மறு கேள்வியின்றி கானகம் கிளம்பினான். இந்தக் காலத்தில் இதற்கு வாய்ப்பிருக்கிறதா தெரியவில்லை. குழந்தைகள் நிறைய கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு நாம்தான் தெளிவான உண்மையான பதிலைக் கூறி அவர்கள் அதை ஏற்கச் செய்ய வேண்டும்.
ஈ) துணிவு.
எமனையே நேருக்கு நேராக சந்திக்கும் துணிவு இருந்தது அவனிடம். எம லோகத்தில் மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி காத்திருக்கும் உறுதியும் இருந்தது. தன் முயற்சியில் வெற்றியடைய துணிவுடன் காத்திருக்த் தெரிய வேண்டும்.
உ) ஆசையின்மை.
இந்த உலகில் எது நிலையான சுகம், எது அல்ப சுகம் என்று பிரித்துப் பார்க்க அவனுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் எமனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் உறுதியாக இருந்தான். இன்றைய தேதியில் ஆசையற்று, சன்யாசிகள் கூட இருப்பதில்லை. சாதாரணர்கள் எந்த மூலைக்கு? ஆசை தவறில்லை. அனால் நாம் சுகிப்பவை எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து பற்று அதிகம் வைக்காதிருக்க பழகிக்கொள்ள வேண்டும். நமது ஆசைகள் நியாயமானவைகளாக இருக்க வேண்டும். நாம் இறந்த பிறகும் நம்மைப் பின் தொடர்பவை எவை என்பதை அறிந்து அவற்றின் மீது ஆசை கொள்ள வேண்டும்.
நசிகேதன் கேட்ட முதல் வரம் தன் தந்தை தன்னுடன் அன்பாயிருக்க வேண்டும் என்று. இதன் மூலம் குடும்பத்தில் நல்லுறவு அவசியம் எனத் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது வரம் யாகம் பற்றியது. யாகத்தின் மூலம் இயற்கையுடன் தொடர்பு கொள்ளலாம். அதனால்தான் அதனை இரண்டாவது வரமாகக் கேட்டிருக்கிறான். இயற்கையோடு இசைந்து வாழ்வதும் அவசியமே.
மூன்றாவது வரம் மிகப் பெரிய உண்மையை பற்றியது. .
குடும்பத்துடனும், இயற்கையுடனும் நல்ல தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பவருக்கு மிகப் பெரிய உண்மைகள் புலப்பட ஆரம்பித்து விடும்
.
கட உபநிஷதம் மிக அழுத்தமாய் சொல்கிறது. ஒரு குழந்தை உயர்வானவனாக உருவாக மூன்று தொடர்புகள் தேவை என்று. அந்த மூவர் மாதா, பிதா, குரு.. இந்த மூவரும் சரியான வழியைக் காட்டினால்தான் உயர்ந்த உணமைகளை குழந்தைகள் அறியமுடியும். இதில் ஒன்று தவறாக இருந்தாலும் அது அந்தக் குழந்தையின் பாதையில் பெரிய தடைக்கல்லாக நின்று விடும்.