Friday, December 9, 2011

ஆஹா, மெல்ல நட மெல்ல நட ...

சென்ற சனிக்கிழமைக்கும் முந்தைய சனிக்கிழமை காலை ஒரு ஒன்பதரை மணி இருக்கும். மைலாப்பூர் வடக்கு மாடவீதியில் சரவணபவன் அருகில் சாலையைக் கடக்கலாம் என எண்ணி இரண்டடி எடுத்து வைத்திருப்பேன். ஒரு வினாடி கும்மிருட்டு. ஒரு ஸ்கூட்டர் என்னை இடித்த வேகத்தில் நான் அப்படியே உட்கார்ந்த வாக்கில் கீழே விழுந்திருப்பது அடுத்த வினாடியில்தான் எனக்குப்புரிந்தது. என் தவறா ஸ்கூட்டர் ஒட்டி வந்த இளைஞனின் தவறா தெரியவில்லை. நான் தடுமாறி எழுந்து நின்றேன். பார்த்து வர வேணாமா? இது அந்த இளைஞனின் கேள்வி. நான் நடக்கலாம் என எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தால் இடது காலை ஊன்றவே முடியவில்லை. வலி என்னைப் பிளந்தது. “பார்த்துப் போங்க என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். நான் நடக்க முடியாமல் திகைத்து நின்றேன். ஒரு பெண் உதவிக்கு வர, ஆட்டோ ஒன்று பிடித்து மிகுந்த சிரமத்தோடு எப்படியோ ஏறிக் கொண்டேன். உடனே என் பெரிய பெண் வித்யாவுடன் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

அவள் கீழேயே காத்திருந்தாள. ஆட்டோவிலிருந்து இறங்குவது அதை விட சவாலாயிருந்தது. என் பெண் பயந்து விட்டாள் என்னை காம்பவுண்டுக்குள் ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு மாடிக்குப் போனாள். குழந்தைகள் இருவரையும் சர்வன்ட்டின் பொறுப்பில் விட்டு விட்டு பெண்ணும் மருமகனும் கீழே வந்தார்கள். மறுபடியும் கார் ஏறும படலம். மலர் மருத்துவமனையில் எனக்காக ஒரு சக்கர நாற்காலி காத்திருந்தது. எக்ஸ்ரே பெஞ்ச்சில் ஏறிப் படுப்பதற்குள் வலி பிராணன் போயிற்று.

மனசு குருவாயூரப்பனுடன் தர்க்கம் செய்தது. “இடிச்சு கீழ தள்ளியாச்சு. சந்தோஷம்தானே? அதோட நிறுத்திக்கோ சொல்லிட்டேன். எலும்பு கிலும்பு ஏதாவது முறிஞ்சிருந்துதோ படவா உன்னை சும்மா விட மாட்டேன். அப்டி எதாவது இருந்தா பாவம் என் பொண்ணு கைக்குழந்தைகளோட என்னையும் எப்டி பார்த்துப்பா? அவளை நீ கஷ்டப் படுத்தப்படாது சொல்லிட்டேன்.

சற்று நேரத்தில் என் பெண் வந்தாள். “அம்மா பிராக்ச்சர் இல்ல. லிகமென்ட் டேர் ஆகியிருக்கு. பெல்விக் போன்ல லேசா கிராக் விட்ருக்கு. தானா சரியாய்டும்னார் டாக்டர் என்றாள் அந்த வரை தலைப்பாகையோடு போயிற்று என்றாலும் வலி பெரும் பிரச்சனையாக இருந்தது. இடது காலை ஊனவே முடியவில்லை என்றால் எப்படி நடப்பது? வாக்கரில் கூட நடப்பது சிரமமாகவே இருந்தது. வலி தெரியாமலிருக்க ஊசியும் மாத்திரைகளும் கொடுத்தார்கள். வீடு வந்தால் அங்கே மாற்றொரு சோதனை. லிப்ட் இயங்கவில்லை. மழை வேறு கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய ஆலோசனையே நடந்தது. இறுதியில் சேரில் உட்கார வைத்து தூக்கிச் சென்று விடுவதென்று முடிவாயிற்று.

கார் டிரைவரும் வாச்மேனும் மாடிப்படி வரை தூக்கி வந்து சற்று மூச்சு வாங்குவதற்கு நிற்க என் வில் பவர் விழித்துக் கொண்டது.

“நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிரித்தார்கள். முடிந்தால் ஏறு என்றாள் பெண். கீழ்ப் படியில் உட்கார்ந்தேன். அப்படியே மெது மெதுவாக பின்பக்கமாகவே ஒவ்வொரு படியாக உட்கார்ந்தபடியே ஏறினேன். இனி படிகள் திரும்பும். மறுபடியும் சேர் பயணம். இதுவே அந்தக் காலத்து ராஜ ராணி கதைகளில் வரும் பல்லாக்காக இருந்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். (குசும்புதான்)

இந்த லிகமென்ட் டேர் எப்போது சரியாகும் எப்போது நான் நன்றாக நடப்பேன் என்கிற விக்ரமாதித்யன் கேள்வியோடு படுக்கையில் அமர்ந்தேன். “கழுத அது நடக்கறப்போ நடந்துட்டு போகட்டும். அது வரை இந்த அனுபவத்தையும் என்ஜாய் பண்ணி விட்டு போவோமே. மனம் குதூகலத்திற்கு தயாராயிற்று.

ஆறு வருடம் முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது உபயோகித்த வாக்கர் புத்தம் புது பெயின்ட் வாசத்தோடு வந்து சேர்ந்தது. பத்து மாத இரட்டைப் பேரக்குழந்தைகள் வாக்கரில் நான் நடப்பதை கண்ணகலப் பார்த்தார்கள். நடக்க முடியவில்லையே தவிர உட்கார்ந்தபடி என்னால் என்னென்ன செய்ய முடியுமோ செய்து கொடுத்தேன்.

என் உலகம் என் பேரக்குழந்தைகளிடம் ஒடுங்கியது. அவர்களும் இப்போதுதான் எதையாவது பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பேரக் குழந்தைகளோடுநானும் நடை பயின்று கொண்டிருக்கிறேன். எப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது! நான் வாக்கர் பிடித்து நடக்கத் துவங்கினால் போதும் ஆளுக்கொரு திசையிலிருந்து தவழ்ந்தோடி வந்து வாக்கரின் இரு பக்கத்தையும் பிடித்துக் கொண்டு நின்று விடுவார்கள்.

வாக்கரில் அழுத்தம் கொடுத்து நடக்கும் போது விலாப் பக்கம் வலிப்பதால் நேற்று வாக்கர் இல்லாமல் சுவற்றைப் பிடித்தபடி கால்களைத் தரையில் இப்படியும் அப்படியுமாய் திருப்பியபடி நான் நடந்தது என் பேரக் குழந்தைகளுக்கு நாட்டியமாடுவது போல் தோன்றியது போலும் அப்படி ஒரு சிரிப்பு இருவருக்கும். அந்த சிரிப்பில் வலி போயே போச் என்பது போலிருந்தது. .

இந்த பதினைந்து நாளில் நானுமே பாதி குழந்தையாகி விட்டேன் எனலாம்.

குழந்தைகள் கேட்பதற்க்காக போடப்படும் நர்சரி ரைம்ஸ் எல்லாம் இப்போது மனப்பாடம். படிக்கிற காலத்தில் ஒன்று கூட உருப்படியாய் சொன்னதில்லை. எங்கே அந்த என் ஒன்றாம் கிளாஸ் மிஸ்? இப்போது வந்து கேட்கட்டும். பஸ்ட் மார்க் எனக்குத்தான் நிச்சயம்..

இதோ பதினைந்து நாட்கள் ஓடியே போய் விட்டது. இன்டர்நெட்டில் லிகமென்ட் டேர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இதில் மூன்று நிலை உண்டாம். முதல்நிலை சாதாரணமானது. நான்கைந்து நாளில் சரியாகி விடும். இரண்டாம் நிலை ஒன்றிலிருந்து இரண்டு மாதம் வரை ஆகலாம். மூன்றாம் நிலைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. ஆக என்னுடையது இரண்டாம் நிலை என்று தெரிந்து கொண்டேன்.

இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் கட்டாய தற்காலிக ஓய்வு. அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும்தான் நடக்கவில்லையே தவிர மற்றபடி எனக்கு எல்லாம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. வேளா வேளைக்கு என் பெண் சுடச் சுட சாப்பிடக் கையில் கொண்டு வந்து கொடுக்கிறாள். அனுபவி ராணி அனுபவி! கால் சரியானதும் எந்த மலை ஏறலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் மலை ஏறும் நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என் பாலிசி நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும். எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.

இது வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே. சாலையில் நடக்கும்போது கவனத்துடன் நடக்க வேண்டும் என்று சொல்லவே எழுதியுள்ளேன்.

தினமும் என் நலம் விசாரிக்கும் “கற்றலும் கேட்டலும் ராஜிக்கும், ராஜி மூலம் விஷயம் தெரிந்து என்னோடு பேசிய கோபி ராமமூர்த்திக்கும் என் நன்றி.