அல்லயன்ஸ் பதிப்பகம்:
மேற்கு மாடவீதியில் நேற்று சில புத்தகங்கள் வாங்க அல்லயன்ஸ் பதிப்பகத்திற்குள் நுழைந்தோம் நானும் ரேவதி, வல்லபாவும். என் மனசு 1977 க்கு பின்னோக்கி சென்றது. இலை தழை எல்லாம் குறுக்கும் நெடுக்குமாய் வெட்டி மைக்ரோஸ்கோப்பில் பார்த்து வரைந்து, எழுதி என்று எனது B.Sc பாட்டனியின் கடைசி பரீட்சையை எழுதி விட்டு ரிசல்ட்டுக்கு காத்திருந்த நேரம் அது. பி.யு.சி.யோடு சேர்த்து நான்கு வருட கல்லூரி காலங்கள் முடிந்து விட்ட சோகம் ஒரு பக்கம், அடுத்து என்ன என்ற கவலை ஒரு பக்கம், ரிசல்ட் வரும் வரை ஏதாவது வேலை தேடலாம் என்றால் provisional certificate ஆவது வேண்டுமே. வீட்டில் யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும், வெறுமே புத்தகங்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்த போது மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்படவே செய்தது.
அந்த நிலையில்தான் என் கல்லூரித் தோழி ஒருத்தி, அவள் கெமிஸ்ட்ரி மேஜர். ஒரே துறை கூட கிடையாது என்றாலும் கல்லூரியில் அடிக்கடி பார்த்து பேசி பழக்கம். மயிலையில்தான் அப்போது இருந்தாள். அவள்தான் என்னிடம் ஒருநாள், ஒரு வேலை இருக்கு வரயா என்று கேட்டாள். என்ன வேலை certificate எல்லாம் வேண்டாமா என்றேன். வேண்டாம், நம்மளை மாதிரி ஒரு இருபது பேர்கிட்ட அங்க வேலை செய்யறா. ஆள் தேவைப்படறது. எல்லாரும் பட்டதாரிகள்தான். சீஸனல் வேலைதான். ஆனா இண்டரஸ்ட்டா இருக்கும் என்றாள். மேற்கொண்டு அது பற்றி விசாரித்தேன். அவள் சொன்னது திருப்தியாக இருக்க, வீட்டிலும் சொல்லி சம்மதம் வாங்கிய பிறகு நானும் வேலைக்கு போகப்போறேன்ற சந்தோஷத்தோட மறுநாள் நான் சென்ற இடம், அல்லயன்ஸ் பதிப்பகம் இருந்த வீட்டுக்குள்தான்.
அப்போது அது அழகான பழங்கால ஒட்டு வீடு. அல்லயன்ஸின் பெருமை எல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. அந்த வீட்டில் குப்புஸ்வாமி ஐயரின் இரண்டு பிள்ளைகளும், அவர்களது குடும்பங்களும் இருந்தன. நாங்கள் வேலை பார்த்தது ஸ்ரீனிவாசனின் சித்தப்பா பாலு என்பவரிடம். அப்போது ஸ்ரீனிவாசனும் இளைஞர்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் வழிநடைக்கு வலப்பக்கம் முன்புறமாகவே ஒரு பெரிய அறை இருந்தது. அதுதான் பதிப்பகம். உள்ளே நிறைய மர அலமாரிகள், அதில் நிறைய புத்தகங்கள். புத்தகங்கள் மீது தீராக்காதல் கொண்டிருந்த என் மனம் அதனுள் நுழைந்து புத்தகங்களைப் பார்க்கத் துடிக்கும். கால்கள் தயங்கும். தவிர பாலு சார் வேலைக்கு வந்தாயா புத்தகம் பார்க்க வந்தாயா என்று கேட்டு விட்டால்?
முதல் நாள் நான் சென்ற போது உள்ளே ஆண்களும் பெண்களுமாய் நிறைய பட்டதாரி இளைஞர்கள். ஜாலியாய் பேசி சிரித்தபடி தரையிலமர்ந்து மடி நிறைய அச்சடித்த தாள்களை கற்றை கற்றையாய் வைத்துக் கொண்டு அவற்றைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். பாலு சார் வந்தார். வாம்மா உஷா என்றார் ரொம்ப நாள் பழகினாற்போல். அங்கே என்னென்ன வேலைகள் நடக்கிறது என்று விளக்கி விட்டு என்னை ஓரிடத்தில் உட்காரச் சொல்லி விட்டு என் கையிலும் கற்றைக் காகிதங்களைக் கொடுத்தார்.
அவை கேள்வித்தாள்கள். ஏழாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை ஆங்கிலம், கணக்கு, தமிழ், விஞ்ஞானம், சரித்திரம் தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள், இவை தவிர அவரவர் விருப்பப் பாடத்திற்கான கேள்வித்தாள்கள் என்று ஏகப்பட்ட கேள்வித்தாள்கள். தென் மாவட்டங்களில், மாவட்ட வாரியாக பல ஊர்களிலும் உள்ள, அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பு வாரியாக, குழந்தைகளின் எண்ணிக்கை வாரியாக பிரித்து தனித்தனியாக பெரிய கவர்களில் போட வேண்டும். சின்ன தப்பு நடந்தால் கூட, ஒரு பள்ளியில் கேள்வித்தாள் குறையும், ஒன்றில் கூடி விடும். எனவே கவனமாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாவட்டம், அங்குள்ள, பள்ளிகளின் எண்ணிக்கை, வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் எல்லாம் தனியாக கொடுத்து விடுவார். அதன் படி கவனமாக கேள்வித்தாளைப் பிரிக்க வேண்டும்.
ஒரு முறை பாலு சார் என்னை எல்லார் முன்பும் சத்தமாக அழைத்தார். உஷா மத்தியானம் என்ன சாதம்? என்றார். வீட்டுக்கு போனாதான் சார் தெரியும் என்றேன்.
இன்னிக்கு வீட்டுக்கு போய் நீ சாதம் சாப்டக் கூடாது அதுக்கு பதிலா ஒரு கிளாக்ஸோ டின் வாங்கிண்டு போய் கலந்து பாட்டில்ல விட்டு குடிக்கணும் சரியா என்றார். நான் பேந்த பேந்த விழித்தேன். எல்லாரும் சிரித்தார்கள்.
ஏன் சார்? என் குரல் மெலிந்தது.
பின்ன என்னம்மா ஏழாம் கிளாஸ் குழந்தைக்கு பதினோராம் கிளாஸ் கொஸ்டின் பேப்பரை வெச்சா? நீயும் சாப்பாட்டுக்கு பதிலா கிளாக்ஸோதான் குடிக்கணும். அதான் பனிஷ்மெண்ட். மீண்டும் கொல்லென்ற சிரிப்பலை எழும்பியது நான் அசடு வழிய சிரித்தேன். அதிலிருந்து நண்பர்கள் சிலர் அங்கு எனக்கு கிளாக்ஸோ பேபி என்ற செல்லப் பெயரும் இட்டனர். (பெயர்க்காரணம் எழுதும் போது இதை மறந்துட்டேனே)
அதற்குப் பிறகு படு கவனமாக கேள்வித்தாள்களைப் பிரித்து பாலு சாரிடம் சபாஷ் வாங்கி விட்டேன் அது வேறு விஷயம். அரைப் பரீட்சை, முழுப் பரீட்சை என்று அவ்வப்போது சில மாதங்களுக்கு முன்பே இந்த பணி துவங்கி விடும். எல்லா கேள்வித்தாள்களும், பிரிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக அனுப்பி முடிப்பதற்குள் மண்டை காய்ந்து விடும். கவரில் விலாசம் சரியாய் எழுத வேண்டும். ஒரு தோழி செய்யாறுக்கு பதில் "செய்யறது" என்று எழுதி நாங்கள் எல்லாம் அவளை கேலி செய்து சிரித்தது நினைவிருக்கிறது. "என்ன செய்யறதுன்னு சொல்லு" என்று கலாய்ப்போம். இதனால் கஷ்டம் தெரியாமல் நாங்கள் படு ஜாலியாய் எங்கள் வேலையைச் செய்தோம். காரணம் எல்லாருமே டிகிரி படித்த இளைஞர்கள்.
எங்களுக்கு வரும் கேள்வித்தாள்களைப் படித்து திடீர் திடீரென்று மற்றவர்களிடம் அந்த கேள்விக்கான பதிலைக் கேட்போம். பதிலை முந்திக் கொண்டு செல்வதில் ஒரு போட்டியே நடக்கும். பள்ளிப் பாடங்களை எல்லாம் வீட்டுக்குச் சென்று மறுபடியும் மேயும் பழக்கம் ஏற்பட்டது எனக்கு. ஒரு நாளைக்கு யார் அதிக பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு பாலு சாரின் சபாஷ் கிடைக்கும். அதைப் பெறுவதில் ஒரு தனி சுகம். மொத்தத்தில் அறிவைத் தூண்டும் ஒரு சுவாரசியமான பணி. நேரம் போவதே தெரியாது. சிரிப்பும், கிண்டலும், கேலியுமாய் நாட்கள் ஓடும். ஒரு சீசன் வேலை முடியும் போது அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்ற ஏக்கம் வரும். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்களோ?
இந்த வேலைக்கு ஒரு நாள் ஊதியம் ஐந்து ரூபாய். வாரா வாரம் அந்த வாரத்திற்கான ஊதியம் கிடைக்கும். ஞாயிற்றுக் கிழமை வேலை செய்தால் அதற்கும் கணக்கிட்டு கொடுத்து விடுவார்.
ஒரு முறை கடைசி நாள் வேலை முடிந்து கிளம்பும் போது பதிப்பகத்தின் அருகில் என் கால்கள் தயங்கி நின்றது. பிறகு உள்ளே மெல்ல சென்றேன். சீனிவாசனின் அப்பா உள்ளே அமர்ந்து மேஜையில் வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.
என்னம்மா?
புத்தகம் பார்க்கலாமா?
பாரேன்.
அவர் தன வேலையைத் தொடர, நான் அலமாரிகளுக்கு அருகே சென்றேன். ஒரு புத்தகமாவது வாங்கி விட வேண்டும் என்பது என் ஆசை. தேவனின் CID சந்துரு என்னை இழுத்தது. ஏற்கனவே துப்பறியும் சாம்பு பலமுறை லைப்ரரியிலிருந்து படித்திருந்ததால் துப்பறியும் கதையே படிக்கும் ஆவலில் அதை கையில் எடுத்தேன். இதை வாங்கிக்கறேன் என்றேன். அந்த புத்தகம் என்ன விலை என்று இப்போது நினைவில்லை. என் கையிலிருந்த சம்பள பணத்தில் என்னிடம் மீந்திருந்தது ஐந்து ரூபாய் மட்டுமே. என் உழைப்பில் நான் வாங்கிய முதல் புத்தகமும் அதுதான். நான் படித்ததோடு எல்லோருக்கும் படிக்கக் கொடுத்தேன். பல கை மாறிய புத்தகம் ஒரு நாள் பக்கங்கள் எல்லாம் நைந்து போய் வந்து சேர்ந்தது. ஏழெட்டு வருடத்திற்கு முன்புதான் மற்றொரு நகல் வாங்கினேன்.
அப்போது அல்லயன்ஸில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு புத்தகத்தில் மகாத்மா காந்தி அங்கு வந்து சென்ற விஷயமும், இன்னும் பல தலைவர்கள் அதைப் பாராட்டி எழுதிய விஷயங்களும் தெரிய வந்தது.
ஆஹா நானும் காந்தி வந்து சென்ற வீட்டிற்கு சென்று வேலை பார்த்து விட்டேன் என்ற பெருமிதம் ஏற்பட்டது.
மூன்றாம் தலைமுறை இருபதடி பாய்ந்து அல்லயன்சை வானுயரத்திற்கு எழுப்பியிருப்பதைக் கண்டு நேற்று மனது மகிழ்ந்தது. நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்,
1. கி.வா.ஜ வின் கவி பாடலாம்,
2. வேத காலத்தில் பெண்கள் நிலை
3. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்.
கீழே அல்லையன்ஸ் இன்று.