Sunday, July 25, 2010

கயிலாயம் உள் பரிக்கிரமா

Kailash with Nandhi full view

kailash & Nandhi

Kailash with Aathmalingam. Right side Nandhi. Left side a lingam prayed by Ravana.

Beautiful view of Kailash & Nandhi

kailash & Nandhi with tail

View from Ashtapath

First view from Ashtapath


கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேரென ஒரடி உயரத்திற்கு பனி உறைந்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு ஆறு கி.மீ. தூரம் நீங்கள் இந்த பனிப்பொழிவில் நடக்க முடியாது இன்று இங்குதான் தங்கியாக வெண்டும் என்றார் ஒரு ஷெர்பா. நாங்கள்தான் எதையும் ஒரு கை பார்த்து விடுவது வழக்கமாயிற்றே. அதெல்லாம் முடியாது நாங்கள் நடக்கிறோம் என்று கிளம்பி விட்டோம். போகிற வழியில் நிறைய ஆபத்துகள் காத்திருந்தன. எது மேடு எது பள்ளம் என்று தெரியவில்லை. நீரோடைகள் உறைந்திருக்க, சிற்றருவிகள் கூட வழிகிற வாக்கிலேயே கம்பிச் சரங்களாய் உரைந்து போயிருந்தன. உதவியாளர் மிக ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றார்.
இந்த மூன்றாவது நாள் பரிக்கிரமா பாதை ஒரு சில இடங்களில் மண்ணாலான மலைகளில் ஒற்றையடி பாதையாக செல்கிறது. கீழே அதல பாதாளத்தில் உமா நதி ஒடிக்கொண்டிருக்கிறது. குதிரைகள் மற்றும் யாக்குகளின் கழுத்து மணி சப்தமும் காற்றில் மிதந்து வர மீண்டும் ஒரு நீண்ட நடைப் பயணம். ஒரு திருப்பத்தில் வெகு தூரத்தில் எங்கள் ஜீப்புகள் நின்று கொண்டிருக்க அதற்கும் பின்னால் நீல நிற மானசரோவரும் தெரிந்தது. எங்கள் பரிக்கிரமா இன்னும் சில மணித்துளிகளில் முடிந்து விடும் என அறிந்ததும் சந்தோஷமும் சொல்லத்தெரியாத சிலிர்ப்பும் ஒரு சேர எற்பட்டது.

பரிக்கிரமாவுக்கு வராத அன்பர்கள் டார்ச்சேனில் எங்களை ஆலிங்கனம் செய்து வரவேற்க, எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டோம். அடுத்த நாள் காலை பார்க்கையில் டார்ச்சேன் முழுவதும் பனி படர்ந்திருந்தது. எங்கள் வாகனங்கள் மீதெல்லாம் பனி மூடியிருந்தது. வானிலை சரியில்லாததால் அஷ்டபத் என்னும் ஒரு மலை உயரத்திற்குச் சென்று நந்தி மலையையும் கயிலை மலையையும் ஒரு சேர பார்க்க இயலவில்லை. மானசரோவரில் இறங்கி நீராட முடியவில்லை. என்ற மனக்குறைகளோடுதான் அங்கிருந்து புறப்பட்டேன்.

ஆனால் நம்புங்கள் அடுத்த ஆண்டே நான் மீண்டும் கயிலை யாத்திரைக்கு செல்வேன் என நான் கனவில் கூட நினைக்கவில்லை.
2007 ன் ஜுலை மாதம் மறுபடியும் நான் கயிலையைக் காணக் கிளம்பி விட்டேன். இம்முறை எங்களில் ஒரு ஏழு பேர் உள் பரிக்கிரமா
செல்வதாகத் திட்டம். அதாவது தென் முகமாக உள்ளே சென்று கயிலை மலையின் அருகில் சென்று நந்திமலையும் கயிலை மலையும் இணையும் இடத்தில் கயிலை மலையின் அடியில் உள்ள சப்தரிஷி குகையில் ஏறி கயிலாயபதியின் மடியில் அமர்ந்து விட்டு அப்படியே நந்தி மலையை பரிக்கிரமா (நந்தி கிரிவலம்) செய்ய வேண்டும். இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. முதலாவதாக கயிலையை 13 முறை வெளி பரிக்கிரமா செய்து முடிப்பவர்கள்தான் உள் பரிக்கிரமா செய்ய அனுமதிக்கப் படுவார்கள். அல்லது
13 ஆண்டுகளுக்கொரு முறை வரும் திபெத்தியர்களின் குதிரை ஆண்டில் எவர் வேண்டுமானாலும் உள் பரிக்கிரமா செல்லலாம்.

எங்கள் ஆர்கனைசர் எப்படியோ நாங்கள் உள்ளே செல்ல முறையான அனுமதி வாங்கி விட்டார். டார்ச்சேனிலிருந்து ஒரு குழு வெளிபரிக்கிரம்ா செய்ய கிளம்பிய மறு நாள் நாங்கள் உள் பரிக்கிரமாவிற்கு கிளம்ப ஆயத்தமானோம். இரவெல்லாம் நான் தூங்கவில்லை. என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளை நான் எதிர்பாத்துக் கொண்டிருந்தேன். விடியற்காலம் இரண்டு மணிக்கெல்லாம் நாங்கள் எங்களுக்காகக் காத்திருந்த ஜீப்பில் ஏறினோம். ஜீப் சர்வ சாதாரணமாக மலை மீது ஏறியது. பாதை என்று எதுவும் கிடையாது. நாங்கள் ஏற ஏற கீழே டார்ச்சேன் கேம்ப் ஒரு படம் போல் தெரிந்தது. கும்மிருட்டு. ஓரிடத்தில் ஜீப் எங்களை இறக்கி விட்டது.
அந்த இருட்டில் திக்கு திசை ஏதும் தெரியவில்லை. ஹெட் டார்ச் பொருத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். உதவியாளர் என்
கைகளைப் பிடித்துக் கொண்டார்.

சுமார் இரண்டு மணி நேரம் கடுமையான மலையேற்றம். பலமாக மூச்சிறைத்தது. ஒவ்வொரு அடிக்கும் உடம்பு ஓய்வு கேட்டது. அங்கெல்லாம் நான்கு மணிக்கெல்லாம் வெளிச்சம் படர்ந்து விடுகிறது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் நான் என் முன்னே கண்ட காட்சி ...! அந்த அழகை எப்படி விவரிக்க? கருத்த பிரும்மாண்டமான நந்தி மலையின் பின் புறமும். நந்திக்கு முன்னால் வெண்ணிற கயிலை மலையும் ஒரு சேரஎங்களை வரவேற்றன. நாங்கள் அனைவரும் சில வினாடிகள் செயலற்று நின்று விட்டோம்.
மீண்டும் வருகிறேன். என்னோடு வரத் தயாராக இருங்கள்

Tuesday, July 20, 2010

கயிலாய கிரிவலம் (இரண்டாம் நாள்)

snow fall on our helpers and yalks
heavy snow fall around our tents
Crossing the frozen river




Climbing down from dolmaalaa



Tibetians namaskaara parikrama



Dwajasthambam of kailash





gowri kund



Towards Dolmala pass

திராபுக் இதுதான் கயிலையின் வடக்கு முகத்தை நாம் பார்க்கும் இடத்தின்பெயர். அந்த இடத்தின் உயரம் பதினாறாயிரம் அடி. குளிர் பின்னி பெடல் எடுக்கிறது. அதிக உயரத்தில் பசி இருக்காது. நாம் தங்குவதற்கு அங்கு விடுதிகள் உண்டு. எங்கள் அறையின் கண்ணாடி ஜன்னல் வழியே கம்பீரமாய்த் தெரிகிறது கயிலையின் வடக்கு முகம் வெகு அருகில். உண்மையில் அது தொலைவில்தான் உள்ளது. மு. மேத்தாவின் கவிதைதான் என் நினைவுக்கு வந்தது. கண்கள் நட்சத்திரங்களை உரசினாலும் கைகள் ஜன்னல் கம்பிகளோடுதான் உறவாடும். அடுத்த நாள் மிக முக்கியமான நாள். உடலளவிலும், உணர்வுபூர்வமாகவும் நாம் மிக உயரத்திற்கு செல்லப் போகும் நாள். டிராபுக்கிலிருந்துநள்ளிரவு இரண்டு மணிக்கே புறப்பட்டு விட வேண்டும் டோல்மாலா பாஸ் இதுதான் அடுத்து நாம் கடக்க வேண்டிய மிக உயரமான கணவாய். இதன் உயரம் பதினெட்டாயிரத்து ஐநூறு அடி. இங்கே ஏறும்போது குதிரைகளுக்கே மூச்சு இறைக்கிறது. சொல்ல மறந்து விட்டேனே. முதல் நாள் முழுவதும் (பதினாறு கிலோமீட்டர் ) நடந்ததால் உடல் அசதி தீரவில்லை. டோல்மாலா ஏறுவதர்க்காவது குதிரை கிடைக்குமா என்று வழிகாட்டியிடம் விசாரித்தோம். எப்படியோ மூன்று குதிரைகள் தேற்றினார். அந்த எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு முழு பணமும் கொடுக்க வேண்டி வந்தது. (எட்டாயிரம் ரூபாய்) என் குதிரை ஏற்றம் முதன் முறையாக அரங்கேறியது. அதுவும் செங்குத்தான மலைப்பாதையில். உள்ளே உதறினாலும் வெளியே ஜான்சி ராணி கணக்கில்தான் உட்கார்ந்திருந்தேன். குதிரை செல்வதற்கு ஏற்ப முன்னும் பின்னும் சாய்ந்து நாம் அட்ஜஸ்ட் ஆக வேண்டும். இதெல்லாம் தானாக வந்து விடும். பாறைகளுக்கிடையில் அது செல்லும்போது முட்டி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சும்மா ஜாலியாகத்தான் இருந்தது. ஒரு இடத்தில் எனக்கு முன்னே சென்ற குதிரை திடீரென்று என்ன சந்தோஷமோ அல்லது கோபமோ முன்னங்கால்களைத் தூக்கி சிலுப்பிகொண்டதே பார்க்கலாம். அதில் அமர்ந்திருந்த ஒரு இளம் சன்யாசினி கீழே விழுந்து கிடுகிடுவென்று உருண்டோட அடுத்த குதிரை என்னுடையது. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. என் குதிரைக்காரி லாவகமாய் என் குதிரையை அழைத்துச் சென்று விட்டாள். அந்த சண் யாசிநியைப் பற்றிய கவலையோடு சென்றேன். ஒரு மணி நேரம் கடந்திருப்போம் பார்த்தால் முன்னால் சென்ற குதிரையில் அந்த சன்யாசினி ஜம்மென்று போய்க்கொண்டிருந்தாரே பார்க்கலாம். கனத்த உடைகளும் குளிர்த்தொப்பியும் அணிந்திருந்ததால் காயமின்றி பிழைத்து விட்டார். திபெத்தியர்களுக்கும் நமக்குமான பாஷை சர்வதேச பாஷைதான். உடல் மொழி மட்டும்தான். அவர்கள் பாஷை நமக்குத்தெரியாது. ஆங்கிலம் அவர்களுக்குத்தேரியாது. என்குதிரைக்காரியிடம் செய்கையில் கேட்டேன், டோல்மாலா எங்கே என்று. கண்ணுக்குத் தெரியாத எதோ ஒரு உச்சியைக்காட்டினார் அடேயப்பா இன்னும் அவ்வளவு உயரத்திர்க்கா ஏற வேண்டும் என பிரம்மிப்ப்பாயிருன்ததுஒருவழியாய் முச்சிரைக்க குதிரை என்னை டோல்மாலா பாசில் இறக்கிவிட்டது. பிறந்த குழந்தை மாதிரி மலங்க மலங்க நின்றேன். சுத்தமாய் எண்ணங்கள் இல்லாததால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அதிக உயரம் காரணமாக மூளைக்கு இரத்தம் குறைவாக செல்வதால்தான் இந்த நிலை. அந்த உயரத்தில் ஆக்சிஜன் வெகு குறைவாகவே இருக்கிறது. மேடிடேஷனில் எண்ணங்களற்ற நிலைக்குச் செல்ல மிகுந்த பிரயத்தனப் பட வேண்டும். அனால் இங்கு அது சுலபமாய் நிகழ்ந்து விடுகிறது. என் நினைவே எனக்கு இல்லை. என் பெண்களின் நினைவு கூட வரவில்லை. டோல்மாலாவில் ஒரு பெரிய பாறை இருக்கிறது. இது தாரா தேவிக்குரியது. திபெத்தியர்களுக்கு இது மிக முக்கியமான இடம். நாம் நடந்து செல்லவே சிரமப்படும் இந்த பரிக்கிரமாவை அவர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடி சுற்றுகிறார்கள். ஒரு முறை பரிக்கிரமா செய்து முடிக்க இருபத்தி இரண்டு நாட்களாகுமாம். கையில் ஆகாரம் கூடக் கிடையாது. நம்மைப் போன்றவர்கள் ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார்கள். அசுர பக்தி என்பது இதுதானோ? யாராக இருந்தாலும் சரி டோல்மாலாவில் இருந்து நடந்துதான் கீழே இறங்க வேண்டும். கடுமையான பாறைகள். இறங்கும் வழியில் வலது புறமாக அதல பாதாளத்தில் பச்சையாகத் தெரிகிறது கவுரி குண்டம். பார்வதி தேவி நீராடிய இடம் இயற்கையாகவே பச்சையாக இருப்பது அதிசயம். அதை தரிசித்தபடி மெதுவே இறங்கி மீண்டும் மலைத்தொடர்களில் ஏறுவதும் இறங்குவதுமாய் நடை நடை நடை மட்டும்தான். வெகு தூர நடைக்குப்பிறகு ஒரு சமவெளியில் எங்களுக்கு டெண்ட்டுகள் அமைத்தார்கள். உள்ளே போய் படுத்ததுதான் தெரியும். என் தோழி கீதா என்னை ஒரு ஸ்லீப்பிங் பையில் போட்டு ஒரு ஓரமாக உருட்டி விட்டது கூட அரை நினைவுதான். நல்ல அசதி. நல்ல தூக்கம் மறுநாள் எழுந்து டெண்ட்டை விட்டு வெளியே வந்தால் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வெள்ளை வெளேரென பனிப்பொழிவு. கூடாரத்திற்கு வெளியே படுத்துக் கிடந்த யாககுகள் உதவியாளர்கள் மீதெல்லாம் ஐஸ் படர்ந்திருந்தது. பார்க்க கண் கொள்ளா காட்சி அது. ஆனால் மூன்றாம் நாள் பரிக்கிரமாவைத் தொடர முடியுமா? காத்திருங்கள், வருவேன்

Wednesday, July 14, 2010

கயிலாய பரிக்கிரமா (கிரிவலம்)

Sowth west face
West face

Yamadhwar


North face



North west face




We have started kailash parikkirama





kailash close view with siva s face






kailash peak from tarchen (Base Camp)







மானசரோவரை நடந்து வலம் வருபவர்களும் உண்டு. நாங்கள் ஜீப்பில்தான் வலம் வந்தோம். அதன் ஒவ்வொரு இடத்திலிருந்தும் கயிலை மலை ஒவ்வொரு விதமாக தரிசனம் தருகிறது. கடல் மட்டத்திலிருந்து பதினாலாயிரம் அடி உயரத்தில் கடல் மாதிரி ஒரு ஏரி. தேவர்கள் தினமும் நீராடிசெல்வதாக நம்பப்படுகிறது. மனிதனால் குழைக்கமுடியாத அந்த நீலமும் பச்சையும் இன்ன பிற வர்ணங்களும் அந்த இடத்தை தேவலோகம் போல்தான் நினைக்க வைத்தன.
சிற்றலைகள் மெல்ல வந்து கரையை முத்தமிட்டு செல்லும் அழகை நாள் முழுவதும் பார்த்தபடி அமர்ந்திருக்கலாம். உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமான நீரைக் கொண்டது. பல மீட்டர் ஆழத்திலிருக்கும் கூழாங்கற்கள் கூடத் தெரியும் அளவுக்கு கண்ணாடி மாதிரி தெளிந்த நீர். கர்னாலி சிந்து, சட்லெட்ஜ் , பிரம்மபுத்ரா, என்று நான்கு ஜீவ நதிகளின் பிறப்பிடம். சூர்யோதய காலத்தில் இதன் அழகு பலமடங்கு கூடுகிறது. சூர்ய நீரில் பட்டு மொத்த ஏரியிலும் வைரங்கள் நீராடுவது போல் ஜொலிக்கிறது.
அங்கிருந்து அடுத்து செல்வது டார்ச்சேன். கயிலாயத்தின் பேஸ் கேம்ப். மலைகளுக்கு மேலே கயிலையின் சிகரம் நம்மை எட்டிப் பார்க்கிறது. முகத்தோடு ஒரு மலை உலகத்தில் உள்ளதா? கயிலை மலையில் மட்டும்தான் நாம் இந்த அதிசயத்தைக் காண முடியும். (பார்க்க புகைப்படம்) சில நேரம் சிவனின் முகம் மூன்றாகவும் சில நேரம் ஐந்தாகவும் தெரியும். சிகரத்தின் தென்முகத்தில் சரி பாதியில் ஒரு பிளவும் , சிவனின் முகத்திற்கு இடப்புறமாக பக்க வாட்டுத் தோற்றத்தில் தெரிவது பார்வதியின் முகம்.
எங்கள் வழிகாட்டி மொத்தமே பத்தொன்பது குதிரைகள் மட்டுமே இருப்பதாகக் கூறினார். மொத்தம் ஐம்பத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். கிரிவலம் முடிய மூன்று நாள் ஆகும். சில பேர் நடப்பது முடியாத காரியம் என்று பின் வாங்கி விட்டனர். ஆனால் எங்களில் ஒரு நாற்பது பேர் உருண்டு புரண்டாவது கயிலாய பரிக்கிரமாவை முடித்தே தீருவது என்ற வைராக்கியத்தோடு புறப்பட்டு விட்டோம். எங்களை பரிபூரணமாக ஈசனிடம் ஒப்படைத்து விட்டு அவன் நாமத்தை மனதுக்குள் உச்சரித்தபடி முதல் அடியை எடுத்து வைத்தோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திபெத்திய உதவியாளர் உடன் வருவார். தேவைப்படும் சமயத்தில் யாத்ரியை தன் முதுகில் சுமக்கக் கூடத் தயங்க மாட்டார்கள். பொதுவாகவே உலகத்தின் கூரை எனப்படும் திபெத்தில் பிறந்து வளர்வதால் திபெத்தியர்களுக்கு நம்மை விட சுவாசப்பை அளவில் பெரிதாக இருக்கும் எனக் கூறினார்கள். நமக்குதான் அந்த உயரத்தில் மூச்சு முட்டுகிறது. நடை நடை, நடை, நடையைத்தவிர வேறு ஒரு வேலையும் நமக்கு இல்லை.
முதல் நாள் முழுக்க கயிலாயம் நமக்கு வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறது. சிதம்பரம் தங்க கோபுர வடிவில் ஒரு தோற்றம்.(தென் கிழக்கு முகம்) யாளியைப்ப் போல் மேற்கு முகம். மனிதன் அங்கு எதையும் செதுக்கவில்லை. அனால் இயற்கை அற்புதமான சிற்பங்களை அங்கே செதுக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தால் ஒவ்வொரு வடிவம். மெல்ல மெல்ல நாங்கள் வடக்கு முகத்தை நெருங்கினோம்.
அதுவரை எங்கோ ஒரு உயரத்தில் நமக்குத் தெரியும் கயிலை மலை தன் வடக்கு முகத்தை நமக்கு வெகு அருகில் பெரியதாக காட்டி நம்ம வரவேற்கிறது. அதன் பிரும்மாண்டத்தில் கண் விரிந்து பேச்சற்று நின்று விடுவோம். லிங்க வடிவில் தலைக்கு மேல் படம் எடுக்கும் நாகத்தோடு கயிலாயம் சிவனே என்று சொல்லாமல் சொல்கிறது. மீண்டும் வந்து அழைத்துச் செல்வேன் , காத்திருங்கள்.

Sunday, July 11, 2010

இமயத்தின் விளிம்பில் இறைமையை நாடி

கயிலாயம் தென்முகம்


சீன எல்லைக்கு போகிற வழியில்

நியாலத்திற்குப் போகும் பாதை

சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்

சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்

மானசரோவர் ஏரி அதன் மேற்புறம் கயிலாயம் முதல் தோற்றம்

அடுத்த மூன்றும் மானசரோவரின் அழகிய தோற்றங்கள்







தெய்வம் எல்லா இடத்திலும் இருக்கிறதே எதற்கு இத்தனை அபாயமான யாத்திரை? என்று பல பேர் என்னிடம் கேட்டார்கள். ஆனாலும் என் ஹிமாலயக் காதல் எதற்கும் அஞ்சவில்லை. 2006 ல் முதன் முறையாக கயிலை தரிசனத்திற்காகக் கிளம்பி விட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ லட்சங்கள் சம்பாதிக்கிறோம், செலவழிக்கிறோம். அதில் ஒரு லட்சத்தை கயிலை தரிசனத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு செலவழிக்கலாம். அப்படி ஒரு புனித அதிர்வும், அமைதியும் அழகும் நிரம்பிய இடம் அது. நாங்கள் சென்றது நேபாளம் வழியாக. இந்திய வழி மிகவும் அபாயமான, மிகுந்த உடல் சக்தி தேவைப்படும் வழி. இந்திய அரசு மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே இந்திய வழியில் கயிலை யாத்திரை செல்லமுடியும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கொலஸ்ட்ரால் இதெல்லாம் இருந்தால் நீங்கள் அவ்வழியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். ஒவ்வொரு கேம்ப்பிலும் உடற் பரிசோதனை நடக்கும். நீங்கள் பாசாவதும் பெயில் ஆவதும் உங்கள் உடற் தகுதியை வைத்துதான். பாதி வழியில் கூட திருப்பி அனுப்பப் படலாம். எனக்கு இரத்த அழுத்தம் சர்க்கரை இரண்டும் உண்டு. எதற்கு வீண் ஆசை என்றுதான் நேபாளம் மூலம் செல்லத் தீர்மானித்தேன். ஆனாலும் இந்திய வழியில் செல்ல முடியாததில் உள்ளூர ஒரு வருத்தமும் இருந்தது. இந்திய வழியில் கயிலாயம் சென்று வந்தேன் என்று சொல்லும்போது கிடைக்கும் மரியாதையே தனி. அவ்வளவு கடினமான வழி அது. கிட்டத்தட்ட மலை விளிம்பில்தான் நமது குதிரைப் பயணம் நாட்கணக்கில் தொடரும். நேபாளம் வழியில் மிக சொகுசான பயணம்தான். இங்கிருந்து டெல்லி நேபாளம் விமானப் பயணம். கடவுளின் தேசமாகிய நேபாளம் அவ்வளவு பசுமையாயிருக்கிறது. கோவில்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக கட்டப்பட்டிருக்கிறது. பசுபதிநாதர் கோயில் மிகப் பெரியது. நந்தி நம் ஊர் நந்தி மாதிரி இருக்காது. ஒரு பெரிய காளையின் முகத்தோற்றத்தோடு தங்க நிறத்தில் மிகப்பெரியதாய் இருக்கிறது. பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில் நேபாளவாசிகளுக்கு காசி மாதிரிதான். நதிக்கரையில்தான் பிண தகனம் நடக்கிறது.
நேபாளத்திலிருந்து சீன எல்லை வரை பேருந்து பயணம். எத்தனை நதிகள்! நூற்றுக்கணக்கில் அருவிகள். காணக் கண் கோடி வேண்டும். அதே நேரம் பாதை பல இடங்களில் களிமண் சகதியும் குண்டும் குழியுமாய் ஆபத்தாகவே இருக்கிறது. கவலை வேண்டாம் அந்த ஊர் ஓட்டுனர்கள் மிக மிக திறமையானவர்கள். மலைகளில் வாகனம் ஓட்டி பழக்கப்பட்டவர்கள். சீன எல்லையில் நண்பர்கள் பாலம் கடந்து சீனாவுக்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பிறகு ஆயிரம் கிலோமீட்டர்கள் பிரயாணமும் லேண்ட்க்ருயிசர்கள் எனப்படும் ஜீப்பில்தான். மலைகளில் இந்த வாகனம் சர்வ சாதாரணமாக ஏறும் இறங்கும். சீனாவின் சாங்மு நகரம் மலைகளில் தொங்கிக்கொடிருப்பது போல் அமைந்திருக்கிறது. இரவு நேரங்களில் இது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
சாங்க்மு வரைதான் பசுமை. பிறகு பழுப்பு மலைகள்தான். போகப்போக பனிச் சிகரங்கள். இறைவன் எப்பேற்பட்ட சிற்பியும் ஓவியனுமாக இருக்கிறான் என்பதை இங்கு அறியலாம். உலகத்தின் எல்லா வர்ணங்களும் இங்கு கலந்து குழைந்திருக்கிறது. நியாலம் என்பது அடுத்த தங்குமிடம். இங்கேயே சிலருக்கு இறைக்க ஆரம்பித்து விடும். குளிர் உடலைக் குத்தும். நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது ஊர் சுற்றக் கிளம்பி விட்டோம். இங்கு flask தரமாக கிடைக்கும்.
இங்கிருந்து கயிலாயம் வரை சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் என்பதால் திபெத்தியர்களின் வாழ்க்கை பரிதாபமாகவே உள்ளது. மூக்கு ஒழுகாத திபேத்தியக் குழந்தைகளைக் காண்பது அரிது. அடுத்தாற்போல் சாகா, பர்யாங் என்று இரண்டு தங்குமிடங்கள். அதன் பிறகு மானசரோவரில்தான் நமது ஜீப் நிற்கிறது. ஆஹா ஆஹா எப்படி வர்ணிக்க அந்த அழகை! நான் புகைப்படங்கள் தந்திருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நீலம், பச்சை, சாம்பல் என்று அந்த ஏரியில்தான் எத்தனை வர்ணங்கள்! காற்று காதைக்கிழிக்கிறது. மற்றபடி அந்த அமைதி மெல்ல மெல்ல நமக்குள்ளும் பரவுகிறது. கயிலையின் முதல் தரிசனத்தில் மனது சிலிர்த்துப் போகிறது. ஒரு ரிஷி கண்மூடி தவத்தில் அமர்ந்திருப்பதைப்போல வெண்ணிற கயிலை மலை!. எனக்கு கண்ணீர் பீறிட்டது. அவசர அவசரமாக அதைத்துடைத்துக் கொண்டேன். அது கயிலையை மறைக்கிறது என்பதால். அடுத்து வரும் பதிவில் கயிலாய பரிக்கிரமா அனுபவம் பற்றி எழுதுகிறேன் காத்திருங்கள்.

Friday, July 9, 2010

எழுத்தாளர்கள் கருவேப்பிலைக்கொத்தா ?

இப்போதெல்லாம் தமிழ் நாவல்கள் சிறுகதைகளில் பி.ஹெச்.டி செய்யும் மாணவர்களிடமிருந்து தொலைபேசி வந்தாலே எரிச்சல் வருகிறது. ஒரு காலத்தில் மிகுந்த சந்தோஷமாக தகவல்கள் அளித்து வந்தேன். நாளாக ஆக கசப்பான அனுபவங்களே கிடைக்கின்றன. அவ்வளவு அனுபவங்கள். முதலில் தொலை பேசுவார்கள்.
"அம்மா நான் உங்கள் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்"
"சந்தோஷம். என்ன புத்தகம்? என்ன ஆய்வு?"

ஒரு குழப்பமான பதில் வரும். கூடவே உங்கள் பயோ டேட்டா வேண்டும் என்பார்கள். தொலைபேசி மூலமே சொல்லுவேன். பிறகு உங்கள் பேட்டியும் வேண்டும் எப்போது வரலாம் என்பார்கள். அதற்கென்ன விடுமுறை நாளில் போன் செய்து விட்டு வாருங்கள் என்பேன். அப்படி போன் எதுவும் வராது. சிலநேரம் ஞாயிற்றுக் கிழமை வருகிறேன் மேடம் என்பார்கள்.

எங்கேயும் வெளியில் போகாமல் என்னமோ நான்தான் Phd செய்வது போல் காத்திருப்பேன். வரவே மாட்டார்கள். நாலு நாள் கழித்து ஒரு தபால் அட்டை வரும். எனது உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. மன்னித்து விடுங்கள். இத்துடன் கேள்விகள் அனுப்பியிருக்கிறேன். அதற்கு பதில் அனுப்பி விடுங்கள் என்று பத்து கேள்விகளை நுணுக்கி நுணுக்கி எழுதி இருப்பார்கள். இவர்கள் முனைவர் பட்டம் வாங்க நான் எதற்கு வேலை எல்லாம் விட்டு விட்டு பதில் எழுத வேண்டும்? ஒரு எழுத்தாளரின் படைப்புகள் மற்றும் அவரைப் பற்றிய தகவல்களைக் கூட திரட்ட மாட்டார்கள். எல்லாவற்றையும் நம்மிடமே கேட்பார்கள்.

ஒரு சிலர் வீடு தேடி வருவார்கள். நான் சொல்வதை குறித்தும் கொள்வார்கள். பிறகு ரொம்ப பவ்யமாக பேசி என்னிடமே எனது புத்தகங்களை இரவல் வாங்கிக் கொள்ளுவார்கள்.(கண்டிப்பாகத் திருப்பி தந்து விடுகிறோம் என்ற உத்தரவாதத்தோடு) என் மனதுதான் வெகு இளகியதாயிற்றே! படிப்புக்குத்தானே கொடுக்கிறோம் என்று கொடுத்து விடுவேன். அதற்குப் பிறகு அவர்கள் வரவே மாட்டார்கள். அவர்கள் முனைவர் பட்டம் வாங்கிய விவரத்தை ஒரு மரியாதைக்காகக் கூட சொல்ல மாட்டார்கள். அதற்குப் பிறகு யாராவது புத்தகம் கேட்டால் சர்வ ஜாக்கிரதையாக கொடுக்க இயலாது என்று மறுத்து விடுவேன்.

சென்ற ஆண்டு ஒரு ஆய்வு மாணவி வந்தாள். பார்வை இழந்த அந்த மாணவியை நான் மிகவும் அன்போடு வரவேற்று தேநீர் எல்லாம் கொடுத்து உபசரித்தேன் அவள் என்னிடம் என்னுடைய ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகம் கேட்ட போது நான் என்னுடைய அனுபவங்களைக் கூறினேன். என்னை நாடி வரும் ஆய்வு மாணவர்களுக்கெல்லாம் புத்தகம் கொடுத்து எனக்கு கட்டுப்படியாகுமா என்று கேட்டேன். "அவர்கள் எல்லாம் பார்வை உள்ளவர்கள். நான் அப்படி அல்ல நிச்சயம்மாக நானே நேரில் வந்து உங்கள் புத்தகத்தை திருப்பித் தருவேன் என்னை நம்புங்கள்" என்றாள். அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த எனது இறக்கம் பொங்கியது. சரி உன்னை நம்புகிறேன் என்று புத்தகத்தைக் கொடுத்தேன். என் எழுத்துக்கள் அவள் கண்களுக்கு ஒளி கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளலாம் மொத்தத்தில் என் புத்தகங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலே இப்போதெல்லாம் பெருமைக்கு பதில் பயமே ஏற்படுகிறது.

மேற்படி அனுபவங்களுக்குப் பிறகு இந்த Phd ஆய்வைப் பற்றி நான் ஒரு ஆய்வு செய்தேன். ஒவ்வொரு ஆய்வு மாணவருக்கும் அவர்களது ஆய்வுக்காக பத்தாயிரம் ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கப் படுகிறதாம். அந்த பணத்தில் புத்தகங்கள் வாங்கி கொள்ளாமல் ஏன் எழுத்தாளர்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள்? தவிர ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புத்தகத்தின் ஆசிரியரை நேர்முக பேட்டியே எடுக்காமல் தங்கள் ஆய்வை சமர்ப்பித்து விடுவதாகவும் கேள்விப் பட்டேன். இவர்கள் முனைவர் பட்டம் வாங்கினால் இவர்களுக்கு நான்கு ஊதிய உயர்வுகளாம். ஒரு ஊதிய உயர்வு ரூ. 225 புது ஊதிய கமிஷன் படி சுமார் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரை கூடுகிறது. அந்த அளவுக்கு இவர்களது ஆய்வில் தரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த ஒரு ஆய்வு வழிகாட்டி சொன்னார் சிலரது ஆய்வுகளில் ஒரு விஷயமும் இருக்காது. மிக மிக மேம்போக்காகவே இருக்கும். எப்படியோ இவர்களும் முனைவர் பட்டம் வாங்கி விடுகிறார்கள்.

பிற்காலத்தில் இவர்கள் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பார்கள் என்று நினைத்தால் கவலையாகவே உள்ளது என்றார். தமிழ் இலக்கியத்தில் மட்டும்தான் இந்த நிலை என்றும் நண்பர் கூறிய போது வேதனையாகவே இருந்தது. கல்வி என்பது அறிவு மேம்பாட்டிற்கா அல்லது வெறும் ஊதியத்திற்கா? சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டிலும் ஆய்வரங்கங்கள் சரி வர செயல்படவில்லை என பத்திரிகைகள் சுட்டிக் காட்டியிருந்தன.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த முனைவர் ஆய்வு படிப்பில் சில விஷயங்கள் கட்டாயமாக்கப் படவேண்டும் என்று தோன்றுகிறது.
1 சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் (அவர் உயோரோடு இருப்பவரானால்) முறையாக அறிவித்து அவர்களது ஒப்புதலைப் பெற வேண்டும்.

2 ஆய்வு மாணவர்கள் எழுத்தாளரை உண்மையாக பேட்டி எடுத்தார்கள என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளரிடம் அவரது கையொப்பத்தை பெற்று வரவேண்டும் என்பதை விதியில் சேர்க்க வேண்டும்.

3 Vaiva வின் போது சம்பந்தப்பட்ட எழுத்தாளரும் அழைக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் செய்தால்தான் மாணவர்கள் எழுத்தாளரை மதிப்பார்கள். அல்லது கருவேப்பிலைக் கொத்துதான். இதுபற்றி மற்ற எழுத்தாளர்களின் அனுபவங்களையும் அறிய விரும்புகிறேன்.

Friday, July 2, 2010

எல்லாம் அன்பு மயம்

எழுத ஆரம்பித்து 27 வருடங்கள் முடிந்து விட்டது. இதுவரை நூற்றுக் கணக்கில் சிறுகதைகள், தொடர் கதைகள், புதினங்கள், மாத நாவல்கள், ஆன்மீக கட்டுரைகள், என்று எழுதியாயிற்று எழுத்துக்களின் மூலம் நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். வாசகர்களாக அறிமுகமாகி பின்னர் நெருங்கிய நண்பர்களாக மாறியவர்கள் அநேகம் பேர். ஒரு தவம் போல் உங்கள் கதைகளைப் படிக்கிறோம் என்று சிலர் கூறும் போது பயமாகவே இருக்கிறது.

என்னுடைய சில நெருங்கிய வாசக சிநேகங்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். இவர்கள் எல்லோருமே எனக்கு மிக முக்கியமானவர்கள்தான். முதல் சினேகிதி திருச்சி பிச்சாண்டார் கோயிலில் வசிக்கும் திருமதி காமகோட்டி முத்துகிருஷ்ணன். இந்தக் குடும்பமே மிக உயர்ந்த உள்ளங்களுக்கு சொந்தம் கொண்டது. விருந்தோம்பலில் இவர்களை விஞ்ச எவருமில்லை.

அன்பு அன்பு அன்பு என எல்லாம் அன்பு மயம். மன நலம் குன்றிய ஒரு மகனை வைத்துக் கொண்டு மலர்ந்த முகத்தோடு குறையொன்றுமில்லை என வளைய வரும் பண்பு எளிதில் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு தெய்வ விக்கிரகத்தைப் போல அந்த மகனை அனைவரும் அங்கு அன்போடு ஆராதித்து வருகிறார்கள். இவரிடம் பிறருக்குக் கொடுப்பதற்கு அன்பைத்தவிர வேறெதுவும் இல்லை.

இறைமையின் மீது திடீர் திடீரென இவரது வாயிலிருந்து பாடல்கள் வெள்ளமாய்ப் பெருகிவரும். இவரது கணவர் அமைதியானவர். தீமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத நல்லவர். இவரது மற்றொரு மகன் கார்த்திக் பொறியியல் மாணவர். மைக்ரோசாப்ட் நடத்திய ஒரு போட்டியில் பரிசு வென்ற புத்திசாலி. இவர்களுடைய விருந்தாளியாக இரண்டு முறை சில நாள் திருச்சியில் எனது சில நண்பர்களோடு சென்று தங்கியிருக்கிறேன். அப்போது இவர்களது விருந்தோம்பல் இப்போது நினைத்தாலும் என் கண்ணில் கண்ணீர் மல்குகிறது.

ஒவ்வொரு தீபாவளிக்கும் இவரிடமிருந்து கண்டிப்பாக ஒரு பரிசு வந்து விடும். இப்பேர்ப்பட்ட மனிதர்களை நண்பர்களாகப் பெற்றது என் எழுத்துக்களால் அல்லவா? என்னை எழுத்தாளியாக்கிய இறைமைக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல!


அடுத்தது, திருமதி சுசிலா அரவிந்தன். இவரும் திருச்சிதான் காமகோட்டியின் தோழி. என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட கருப்பழகி. என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைபோல அன்பானவர். நல்ல கவிதாயினி. விழுந்து விழுந்து இவர் எனக்கு வரைந்து அனுப்பும் வாழ்த்து மடல்கள் அனைத்தும் என்னை வியக்க வைக்கும். கடிதங்களில் நிறைய பேசுபவர், நேரில் வெறுமனே என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

நான் கிருஷ்ண பக்தை என்பதைத் தெரிந்து கொண்டு சென்ற முறை திருச்சிக்கு வந்த போது இவர் வாங்கிக்கொடுத்த குட்டி கிருஷ்ணன் என் பூஜை அறையிலிருந்து தினமும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.


ஒவ்வொரு முறை திருச்சிக்கு வரும்போதும் எனக்கு வாசகர்கள் கூடிக்கொண்டு போவது போல் தோன்றுகிறது. திருச்சி எனது தாய் வீடு மாதிரி ஆகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்கள் அன்பைக் காட்டும்போது மனம் நெகிழ்ந்து போகிறது. மொத்த திருச்சியுமே அன்பு மயமாய்த் தெரிகிறது.

காவேரி கூட மழைக் காலத்தில்தான் நிரம்பும். இவர்களது அன்பு என்றும் வற்றாத ஜீவநதி. ஸ்ரீரங்கம் கோவிலில் இரண்டு மணி நேரம் எனக்காக காத்திருந்து ஒரு ரங்கநாதர் படத்தை பரிசளித்து விட்டுப் போனார் ஒரு வாசகி. மற்றொரு வாசகிக்கு வயது எழுபதுக்கு மேல். இவர் எனக்காக வாசனைப் பொடி அரைத்து எடுத்துக் கொண்டு வந்து நீ குளிக்கும்போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற போது அழுகை வந்தது.

ஒரு பெண்மணி எனக்குக் கொடுத்த அன்பளிப்பு வியப்பானது. தனது பழைய புடவையில் மிக அழகாக வட்ட வடிவில் ஒரு மிதியடியை தானே பின்னி கொண்டு வந்திருந்தார். அந்த அன்பைக் காலால் மிதிக்க முடியாமல் எனதுகணிப்பொறி அமர்வானில் போட்டு உபயோகிக்கிறேன்.

எனது அம்மா பிள்ளை நாவலைப் படித்து விட்டு எனது வாசக சிநேகிதியாய் மாறியவர் விஜயலஷ்மி. தானும் தனது மகனும் அந்த அம்மா பிள்ளையைப் போலதான் பேசிக் கொள்வோம் என்று வியந்தார். என்னுடைய அத்தனை புத்தகங்களும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதில் இவருக்கு அலாதி ஆனந்தம். மிகுந்த புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டவர்.

இவரது ஒரே மகன் சத்யா கடற்படையில் உயரதிகரியாய் இருக்கிறார். சத்யா என்ற பெயருக்கு ஏற்றாற்போல் சத்தியமும் நேர்மையும் தேச பக்தியும் நிறைந்தவர். பகத்சிங்கை உதாரண புருஷனாய் நேசிப்பவர். முதலில் அந்தமானில் பணி புரிந்து விட்டு தற்போது மும்பையில் பணியில் உள்ளார். சத்யாவின் திருமணத்திற்குப் போயிருந்த எனக்கு விஜயலஷ்மி ஒரு புடவை அளித்த போது ஆச்சர்யப்பட்டேன். எதற்கு என்றேன். என் குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் நான் உன்னை நினைக்கிறேன் என்றார். எழுத்தளாராக மலர்ந்ததற்காக நான் கொஞ்சம் கர்வமும் நெகிழ்ச்சியும் அடைந்த தருணம் அது.

இவரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் நான் இவரிடம் பேசுகையில் நான் எழுதிய " முதல் கோணல் " என்ற எனது முதல் சிறுகதை என்னிடமே இல்லை என்று சொன்னேன். அதற்கென்ன கொடுத்தால் போயிற்று என்றார். அடுத்த இரண்டாவது நாள் தபாலில் வந்து சேர்ந்தது என் முதல் கோணல். பொக்கிஷமாக பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டேன். இந்த அன்புக்கெல்லாம் என் எழுத்துக்களை சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன நான் செய்ய? ஒன்று புரிகிறது. ஒரு எழுத்தாளரின் ஆன்மா நல்ல வாசகர்கள்தான். ஆன்மாவுக்கு அழிவில்லை. அதுவே உயர்ந்தது.