மானசரோவரை நடந்து வலம் வருபவர்களும் உண்டு. நாங்கள் ஜீப்பில்தான் வலம் வந்தோம். அதன் ஒவ்வொரு இடத்திலிருந்தும் கயிலை மலை ஒவ்வொரு விதமாக தரிசனம் தருகிறது. கடல் மட்டத்திலிருந்து பதினாலாயிரம் அடி உயரத்தில் கடல் மாதிரி ஒரு ஏரி. தேவர்கள் தினமும் நீராடிசெல்வதாக நம்பப்படுகிறது. மனிதனால் குழைக்கமுடியாத அந்த நீலமும் பச்சையும் இன்ன பிற வர்ணங்களும் அந்த இடத்தை தேவலோகம் போல்தான் நினைக்க வைத்தன.
சிற்றலைகள் மெல்ல வந்து கரையை முத்தமிட்டு செல்லும் அழகை நாள் முழுவதும் பார்த்தபடி அமர்ந்திருக்கலாம். உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமான நீரைக் கொண்டது. பல மீட்டர் ஆழத்திலிருக்கும் கூழாங்கற்கள் கூடத் தெரியும் அளவுக்கு கண்ணாடி மாதிரி தெளிந்த நீர். கர்னாலி சிந்து, சட்லெட்ஜ் , பிரம்மபுத்ரா, என்று நான்கு ஜீவ நதிகளின் பிறப்பிடம். சூர்யோதய காலத்தில் இதன் அழகு பலமடங்கு கூடுகிறது. சூர்ய நீரில் பட்டு மொத்த ஏரியிலும் வைரங்கள் நீராடுவது போல் ஜொலிக்கிறது.
அங்கிருந்து அடுத்து செல்வது டார்ச்சேன். கயிலாயத்தின் பேஸ் கேம்ப். மலைகளுக்கு மேலே கயிலையின் சிகரம் நம்மை எட்டிப் பார்க்கிறது. முகத்தோடு ஒரு மலை உலகத்தில் உள்ளதா? கயிலை மலையில் மட்டும்தான் நாம் இந்த அதிசயத்தைக் காண முடியும். (பார்க்க புகைப்படம்) சில நேரம் சிவனின் முகம் மூன்றாகவும் சில நேரம் ஐந்தாகவும் தெரியும். சிகரத்தின் தென்முகத்தில் சரி பாதியில் ஒரு பிளவும் , சிவனின் முகத்திற்கு இடப்புறமாக பக்க வாட்டுத் தோற்றத்தில் தெரிவது பார்வதியின் முகம்.
எங்கள் வழிகாட்டி மொத்தமே பத்தொன்பது குதிரைகள் மட்டுமே இருப்பதாகக் கூறினார். மொத்தம் ஐம்பத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். கிரிவலம் முடிய மூன்று நாள் ஆகும். சில பேர் நடப்பது முடியாத காரியம் என்று பின் வாங்கி விட்டனர். ஆனால் எங்களில் ஒரு நாற்பது பேர் உருண்டு புரண்டாவது கயிலாய பரிக்கிரமாவை முடித்தே தீருவது என்ற வைராக்கியத்தோடு புறப்பட்டு விட்டோம். எங்களை பரிபூரணமாக ஈசனிடம் ஒப்படைத்து விட்டு அவன் நாமத்தை மனதுக்குள் உச்சரித்தபடி முதல் அடியை எடுத்து வைத்தோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திபெத்திய உதவியாளர் உடன் வருவார். தேவைப்படும் சமயத்தில் யாத்ரியை தன் முதுகில் சுமக்கக் கூடத் தயங்க மாட்டார்கள். பொதுவாகவே உலகத்தின் கூரை எனப்படும் திபெத்தில் பிறந்து வளர்வதால் திபெத்தியர்களுக்கு நம்மை விட சுவாசப்பை அளவில் பெரிதாக இருக்கும் எனக் கூறினார்கள். நமக்குதான் அந்த உயரத்தில் மூச்சு முட்டுகிறது. நடை நடை, நடை, நடையைத்தவிர வேறு ஒரு வேலையும் நமக்கு இல்லை.
முதல் நாள் முழுக்க கயிலாயம் நமக்கு வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறது. சிதம்பரம் தங்க கோபுர வடிவில் ஒரு தோற்றம்.(தென் கிழக்கு முகம்) யாளியைப்ப் போல் மேற்கு முகம். மனிதன் அங்கு எதையும் செதுக்கவில்லை. அனால் இயற்கை அற்புதமான சிற்பங்களை அங்கே செதுக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தால் ஒவ்வொரு வடிவம். மெல்ல மெல்ல நாங்கள் வடக்கு முகத்தை நெருங்கினோம்.
அதுவரை எங்கோ ஒரு உயரத்தில் நமக்குத் தெரியும் கயிலை மலை தன் வடக்கு முகத்தை நமக்கு வெகு அருகில் பெரியதாக காட்டி நம்ம வரவேற்கிறது. அதன் பிரும்மாண்டத்தில் கண் விரிந்து பேச்சற்று நின்று விடுவோம். லிங்க வடிவில் தலைக்கு மேல் படம் எடுக்கும் நாகத்தோடு கயிலாயம் சிவனே என்று சொல்லாமல் சொல்கிறது. மீண்டும் வந்து அழைத்துச் செல்வேன் , காத்திருங்கள்.
8 comments:
மிக அருமையான படங்களும் பயணக்கட்டுரையும்,நிச்சயம் போக வேண்டும்.பகிர்வுக்கு நன்றி
Thank you Geethapriyan
பகிர்வுக்கு நன்றி..
படங்கள் இப்படி மெய் சிலிர்க்க வைக்கிறதே... நேரில் பார்த்தால்.....
நல்ல அனுபவப் பகிர்வு.நேரில் சென்று வந்தது போல ஒரு பிரமை.வாழ்த்துக்கள்.
என்னுடைய ஆதர்சமே மானசரோவர் ஏரி! வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்த்துவிடத் தவிப்பு. உங்கள் பதிவு படிக்கும் போது மீண்டும் அந்த ஆவல் பீரிட்டு எழுகிறது.
பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி. நிச்சயம் போய் விட்டு வாருங்கள். இது தொடர்பாக என்ன சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம்.
ஊருக்கு போய் இப்ப தான் திரும்பி வந்தேன் ... ஆஹா ... கொடுத்து வச்சவங்க நீங்க , என்ன அனுபவம் ...அருமையான படங்கள் ....
Post a Comment