தன்னை சந்திக்காமலே இறந்து போன ஒரு வாசகி குறித்து எழுத்தாளர் இரா.முருகன் தனது முக சுவரில் எழுதியுள்ளது படித்த போது எனக்கும் சற்றே வலித்தது. காரணம் பல வருடங்களுக்கு முன் எனக்கும் இது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு, இன்று வரை அது ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. எனது ஒவ்வொரு நாவல் வெளியாகும் போதும் எனது எழுத்தாள நண்பர் பாலகுமாரன் அவர்களுக்கு கொடுப்பது வழக்கம். அவரும் தனது புத்தகங்களை கொடுப்பார். அப்படித்தான் எனது "ஆகாச தூது" புதினம் வெளியான போதும் அவர் இல்லத்திற்கு சென்று கொடுத்து விட்டு எல்லோரிடமும் சற்று நேரம் பேசி விட்டு வந்தேன். அவர் அம்மாவும் அங்கு இருந்தார். மகா மேதை அற்புதமான மனுஷி அவர். எப்போது போனாலும் அன்போடு பேசுவார் என் புத்தகங்கள் குறித்து விசாரிப்பார். அவரை நமஸ்காரம் செய்து கொண்டு கிளம்பினேன். ஒரு மாதம் கழிந்திருக்கும் ஒருநாள் பாலகுமாரனிடமிருந்து போன். "உஷா எங்க வீட்டுக்கு வர முடியுமா? என்றார் என்னப்பா விஷயம்? என்று கேட்டதற்கு "அம்மா உன்னைப் பார்க்கணுமாம். உன்னோட "ஆகாசத் தூதை " படிச்சுட்டு உன்னைப் பார்த்தே ஆகணுமாம் அதைப் பத்தி பேசணுமாம். வரச் சொல்லுன்ரா. வந்துட்டு போயேன்" என்றார். கண்டிப்பா வரேன் பாலா என்றேன். அனால் தொடர்ந்து மாற்றி மாற்றி எதோ ஒரு வேலை. ஒரு ஆட்டோ பிடித்தால் பததே நிமிட தூரம்தான். ஆனாலும் நான் அங்கு செல்ல முடியாதபடி தடைகள். இந்த சனி ஞாயிறில் கண்டிப்பாக போய் விட வேண்டும் என்று நான் நினைத்த நேரம் ஒரு இரவு சாந்தாவிடமிருந்து போன்."உஷா பாலாவோட அம்மா தவறிட்டாங்க" நான் துடித்துப் போனேன் அது போல் வலி எப்போதும் ஏற்பட்டதில்லை. அடுத்த நிமிடம் என் கணவரோடு ஓடினேன் அவர் வீட்டுக்கு. என் கண்ணிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர். " உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டா" பாலா சொன்ன போது குற்ற உணர்ச்சியில் தவித்தேன். என்னிடம் என்ன பேச நினைத்தாய் தாயே ? இன்று வரை இந்த கேள்வி எனக்குள் பதிலின்றி உறைந்து போயிருக்கிறது. .
Monday, February 11, 2013
Subscribe to:
Posts (Atom)