Showing posts with label vidya subramaniam novelist. Show all posts
Showing posts with label vidya subramaniam novelist. Show all posts

Thursday, September 1, 2011

பாலின்றி அமையாது உலகு.

பாலுடனான நமது உறவு, தாய்ப் பாலிலிருந்தே துவங்கி விடுகிறது. தாய்ப் பாலுக்குப் பிறகு மனிதன் இறுதி வரை நாடுவது மாட்டுப் பாலைத்தான். மயிலையில் நாங்கள் இருப்பது பால் வியாபாரிகள் இருக்கும் ஒரு தெருதான்.


அந்தக் காலத்தில் பசு மாட்டை, வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து கட்டி காலிப் பாத்திரத்தை நம்மிடம் காட்டி விட்டு கண்ணெதிரில் பால் கறந்து அளந்து கொடுத்து விட்டுச் செல்வார்கள். ஆரம்பத்தில் ஆவின் பால் புட்டியில்தான் வரும். அலுமினிய தாளை எடுத்தால் மேலாக கெட்டியாக கொஞ்சம் வெண்ணை. அதன் சுவை அலாதியாக இருக்கும். பிறகுதான் பாக்கெட்டில் வர ஆரம்பித்தது.


நாற்பது வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டை அடுத்துள்ள பஜார் வீதியில் சண்முகம் பால் கடை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளிச் சொட்டு போல என்பார்களே அப்படி இருக்கும். காலை வேளையில் ஒரு பெரிய கியூவே காத்திருக்கும். சண்முகம் கடை பாலில் காப்பி குடிப்பதே தனி அனுபவம் என்பார்கள். என் துரதிருஷ்டம் திருமணத்திற்குப் பிறகுதான் நான் காப்பிச் சுவையே அறிந்தேன். எத்தனை பெரிய வரிசை இருந்தாலும் என் அம்மா போனால் சண்முகம் முதலில் பாலை அளந்து அம்மாவுக்கு கொடுத்து விடுவார். அவ்வளவு மரியாதை. என்னைத் தவிர வீட்டில் அவ்வளவு பெரும் காப்பிப் பிரியர்கள் என்பதால் காப்பிக் கடை காலையில் வீட்டில் களைகட்டும். எல்லோரும் அடுக்களையில் ஒன்றாய் அமர்ந்து சகல கதைகளையும் பேசிக் கொள்வோம். . காப்பி வாசனை ஊரைக் கூட்டும். துளித்துளியாய் சுவைத்துக் குடிப்பார்கள். பொன்னிற நுரையோடு அந்தக் காபியை சுவைக்காதது இன்று வரை வருத்தமாயிருக்கிறது.

என்னடா இப்படி பாலிஷ்டாக எதைப் பற்றி சொல்ல வருகிறேன் என்று தோன்றுகிறதா? நான் பால் காய்ச்சும் லட்சணத்தைப் பற்றி சொல்லத்தான் இத்தனை பீடிகை.


என்னை நம்பி அரசாங்க கஜானாவைக் கூட ஒப்படைக்கலாம். அரை லிட்டர் பாலை மட்டும் காய்ச்சுவதற்கு கொடுக்கக் கூடாது என்பது என்னைத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். பால் காய்ச்சும் விஷயத்தில் நான் படு ஜாக்கிரதைதான். பாலை அடுப்பில் வைத்து விட்டு அருகிலேயே நின்று விடுவேன் இன்றைக்கு எப்படி நீ பொங்குகிறாய் என்று பார்க்கிறேன் என்கிற வைராக்கியத்தோடு. ஆனால் பாருங்கள் அது பொங்குகிற நேரத்திற்கு கரெக்டாக என் கவனம் மாறிவிடும். ஒரு நொடிதான் ஓடி வருவதற்குள் அடுப்புக்கு பாலாபிஷேகம் ஆகியிருக்கும்.

பால் பொங்கி விட்டால் மட்டும் எனக்கு படு டென்ஷனாகி விடும். பின்னே என்னவாம்.? அடுப்பின் அடி வழியே வழிந்து மேடை முழுக்க ஆறாக ஓடி மேடை மீதிருக்கும் பொருட்களையெல்லாம் நனைத்து தரையெல்லாம் வழிந்து .........யப்பா அமர்க்களம்தான். சுத்தப் படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விடும்.


பாலை அடுப்பில் வைத்த பிறகுதான் என் கற்பனையும் பொங்கோ பொங்ககென்று பொங்கும் . அடுப்பின் எதிரில் பாலைப் பார்த்தபடி நான் நின்றிருக்க பால் பாட்டுக்குப் பொங்கிக்கொண்டிருக்கும். அதென்னடி பாலைப் பொங்க விட்டுண்டு பா(லா)ழாப் போன யோசனை? என்று அம்மாவின் கத்தல் கேட்டபிறகுதான் கற்பனை கலையும். பழி வாங்கி விட்டாயே என்று பாலை முறைத்துப் பார்ப்பேன். பாதி நாள் இந்தக் கதைதான்.

பக்கத்தில் நின்றிருந்தால் நம் பொறுமையை சோதிக்கும் பால், வேறு வேலை செய்யப்போனால் மட்டும் வினாடியில் காய்ந்து பொங்கும். ஒருமுறை பாலை அடுப்பில் வைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். அடுப்பை சிம்மில்தான் வைத்திருந்தேன். சற்றுப் பொறுத்து என் பெரிய பெண் அம்மா யாராத்துலயோ வெண்ணை காச்சற வாசனை வரத்து என்றாள். ஆமாம் என்றேன். சற்றுப் பொறுத்து என் சின்ன பெண், குலாப்ஜாமுன் பண்ற வாசனை வரதும்மா என்றாள். இல்லம்மா வேர்க்கடல வேக வைக்கற வாசன மாதிரி இருக்கு என்றாள் என் பெரிய பெண். நானும் அந்த வாசனை என்ன வென்று மூக்கை உறிஞ்சி ஆராய்ந்தேன். தீஞ்சு போன வாசனை மாதிரி தோன்ற, சுரீரென்று உறைக்க எழுந்து அடுக்களை நோக்கி ஓடிப் போனால், கரிக்கட்டையாய் பாத்திரம் மட்டுமே மிஞ்சியிருந்தது. ஏண்டி பெண்களா வித விதமா வாசனை வரதுன்னு சொன்னதுக்கு, பால் பொங்கற வாசனைன்னு தோணவேல்லையா என்று எரிந்து விழுந்தேன். நீ பால் வெச்ச விஷயத்தை எங்க கிட்ட சொன்னயா? பெண்கள் திருப்பிக் கேட்க அசடு வழிந்தேன்.


ஒரு முறை பாலை அடுப்பில் வைத்து விட்டு என் சின்ன பெண்ணிடம் அடுப்புல பால் வெச்சிருக்கேன் பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு காய்கறி வாங்கப் போனேன். நான் வரும்போது பால் பொங்கி வழிந்திருக்க அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி இது என்றால், நீதானம்மா பார்த்துக்கோன்னு சொன்ன அதான் பார்த்துண்டிருந்தேன் என்றாளே பார்க்கலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று முதல் காரியமாய் ஒரு பால் குக்கர் வாங்கி வந்தார் என் கணவர். ஒரு வாரம் ஒழுங்காயப் போயிற்று. ஒரு நாள் குக்கரில் நீர் விடாமல் வைத்து விட்டேன் போலிருக்கிறது. சத்தமே வரவில்லை. விசில் கெட்டுப் போய், குக்கர் தீய்ந்து பாலிலும் தீய்ந்த வாசனை. இது மாதிரி பலமுறை. பால் குக்கரும் சரிப்படாது என்றானது. பால் பொங்கி வழியாமலிருக்க பேசாமல் பெரிய பாத்திரத்தில் வைத்தால் என்ன என்று தோன்றியது. மிகப் பெரிய பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி வைத்தேன். பொங்கினாலும் வழியாதல்லவா. ரெண்டு நாள் வொர்க் அவுட் ஆயிற்று. மூன்றாம் நாள் பால் வற்றி அடியில் ஒட்டிக கொண்டிருந்தது.

ஒரு முறை என் ரசிகர் ஒருவர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார். அடுப்பில் பாலை வைத்து விட்டு அவரோடு பெசிக்கொண்டிருந்ததில் பாலை வைத்ததையே மறந்து விட்டேன். நான் கிளம்பறேன் மேடம் இன்னும் ஒரு மணி நேரத்துல பஸ்ஸை ப் பிடிக்கணும் என்றார். அடடா காப்பி தரேன் இருங்க என்றபடி பால் பொங்கி வற்றியிருக்குமே என்கிற கவலை யோடு உள்ளே வந்தால்.......... ஐயோடா என்ன சமத்து ! அடுப்பை பற்ற வைக்கவேயில்லை. நான் பால் காய்ச்சி காப்பி கலப்பதற்குள் பஸ் போய் விடும் என்று பயந்து விட்டார் வந்தவர். பரவால்ல மேடம், அடுத்த முறை (!) உங்க கையால் சாப்பாடே சாப்பிடறேன் என்றபடி கிளம்பி விட்டார் வந்தவர். சரி நாமாவது சாப்பிடுவோம் என்றபடி அடுப்பை பற்றவைத்து விட்டு கதை எழுத உட்கார்ந்தேன். சற்று நேரத்தில் தொலை பேசி அடித்தது. என் ரசிகர்தான். மேடம் நல்லபடியா பாண்டிச்சேரி வந்து சேர்ந்துட்டேன் என்றார். பக்கென்றது. பால்? வழக்கம்போல்தான். பொங்கின வேகத்தில் அடுப்பு அணைந்திருந்தது. கேஸ் வாசனை கிட்டே போன பிறகுதான் தெரிந்தது. உடனே அடுப்பை அணைத்தேன்.

இன்று பிள்ளையார் சதுர்த்தி. காலையில் குளித்து விட்டு பாலை அடுப்பில் வைத்தேன் டிவியில் அழகழகாய் விநாயகர் காட்சியில் மெய்மறக்க, உள்ளே பாலாறு தான். இந்த பால் படுத்தும்பாட்டை பதிவெழுதியே தீருவது என்று உட்கார்ந்து விட்டேன். பொங்காமல் பால் காய்ச்சுவது எப்படி என்று ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்களேன். ஒரு நிமிஷம்...... அடராமா! அடுப்பில் பால்ல்ல்ல்ல்ல்ல்ல் ! போச்! போயே போச்!








Tuesday, November 23, 2010

கண்ணாமூச்சி (பகுதி ஒன்று)

இது கதையல்ல நிஜம். எனக்கு நடந்தது. இனியாருக்கும் நடக்க வேண்டாம் என்பதற்காக நான் எழுதிய என் கதையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணாமூச்சி (பகுதி ஒன்று)

ஒரு ஒட்டுண்ணித் தாவரம் போல பயம் எனக்குள் படர்ந்திருந்தது. அதை உதறவும்முடியாமல் அதனின்று நான் விடுபடவும் இயலாதவாறு அது ஒரு அமுக்குப் பிசாசு போல் என் மீது கவிழ்ந்திருந்தது. பயம் ஊறிய விழிகளால் நான் கண்டவர்களும், கண்டவைகளும் கூட பயத்தோடு அலைவதாகத் தோன்றியது. கடற்கரை சாலையில் பயம் அப்பியிருந்தது. சாலையில் சென்ற வாகனங்கள், பாதையில் நடந்து கொண்டிருந்த மனிதர்கள், நின்று கொண்டிருந்த மரங்கள், நுரைத்து கரை தொட்ட அலைகள் எல்லாவற்றிலும் பயம் பூஞ்சையாய் ஒட்டியிருந்தது.

மணி விழுப்புரத்திற்குச் சென்றதிலிருந்துதான் இந்த பயம். போகாதே என்று எத்தனை புலம்பியும் கேட்கவில்லை. பெண்ணின் வேதனையும் பயமும் புரியாத ஆண் வர்க்கம்.

"இந்த உடம்போட ஊர் விட்டு ஊர் போய்த்தான் ஆகணுமா? மெடிக்கல் லீவ் போட்டாத்தான் என்ன"

பதிலில்லை. கேஷுவல் லீவே போடுவதற்கு யோசிக்கும் மனிதனாவது மெடிக்கல் லீவ் போட்டு விட்டு வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதாவது! ஆபரேஷனுக்காக இரண்டு மாதம் போட்டதே பெரிய விஷயம். வேறு வழியில்லை. உயிருக்கே அபயம் என்கிற நிலையில் போட்டுத்தானே தீர வேண்டும்.

இப்போது நினைத்தாலும் அன்றைய சூழல் கதிகலங்க வைத்தது. ஒரு திங்கட்கிழமை எனக்கு விடியல் சரியாக இல்லை. பாத்ரூமில் தாடல் என்று ஒரு சப்தம். பல் தேய்த்துக் கொண்டிருந்த மணி சரிந்து விழுந்திருந்தார். வீட்டில் யாருமில்லை.
"என்ன என்னாச்சுப்பா? " பதறினேன். எங்கிருந்துதான் அத்தனை சக்தி வந்ததோ. ஒற்றை ஆளாய் தூக்கியிழுத்துக் கொண்டு வந்து ஹாலில் கிடத்தினேன். மின் விசிறியை சுற்ற விட்டேன். இரண்டே நிமிடம்தான். சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். ஒண்ணுல்ல என்றார்.
"என்ன பண்ணித்து?"

"ஒண்ணுல்ல விடு" எழுந்து போனார். அடுத்த அரை மணி கழித்து மீண்டும் விழ நான் அலறினேன்.
பேராலிடிக் ஸ்ட்ரோக் " டாக்டர் சொல்லியபடி இரத்த அழுத்தம் பார்த்தார். எங்கோ எகிறியது. அவசரத்திற்கு மாத்திரை கொடுத்து உடனடியாய் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக் கூறினார்.

அடுத்தது ஆஸ்பத்திரிப் படலம். மருந்து வாசனை பினாயில் நறுமணம். சூழ்ந்திருந்த டாக்டர்களுக்கு நடுவே மணி.
"சிகரெட் பழக்கம் உண்டா?"
" உண்டு "
"ஒரு நாளைக்கு எவ்ளோ?"
"நாலஞ்சு"
"நாலஞ்சு சிகரெட்ட? பாக்கெட்டா?
"...................."
"டிரிங்க்ஸ் உண்டா?"
"எப்போதாவது"
"எத்தனை குழந்தைகள்?"
"ரெண்டு பெண்கள்"
"என்ன பண்றாங்க?"
"படிக்கறாங்க"
"உங்க வயசென்ன?"
"நாப்பத்தியாறு "
"வாழற ஆசை அதுக்குள்ளே போயடுச்சான்ன? பெண்டாட்டி
குழந்தைகள் மேல அன்பிருக்கா இல்லையா?"
"........................"
"உங்களுக்கு என்ன பிரச்சனை தெரியுமா?"
"சொல்லுங்க"
"உங்க மூளைக்கு போகற சுத்த ரத்தக் குழாய்ல கழுத்துப் பகுதியில் அடைப்பு இருக்கு. அதனால் மூளைக்கு ரத்தம் சரியாப் போகல. அதான் ஒரு பக்கம் விழுந்துடுச்சு."
"சரியாகிடுமா?"
"ஆபரேஷன் பண்ணனும், ஆஞ்சியோகிராம் பண்ணி அதுல சரியாகல. மூணு நாளைக்குள்ள ஆபரேஷன் பணியாகனும். கழுத்துப் பகுதியை கீறி ரத்தக் குழாயைத் திறந்து கெட்ட கொழுப்பைச் சுரண்டி எடுப்போம். ஆபரேஷன்ல நல்லாகிடுவீங்க. ஆனா இனி சிகரெட், மதுவைத் தொடரதில்லன்னு உறுதி எடுத்துக்கோங்க. நல்லார்க்கற உடம்பைக் கெட்ட பழக்கங்களால கெடுத்துக் கொள்வது கூட தற்கொலை மாதிரிதான். புரிஞ்சுதா?"

டாக்டர் மிகுந்த திறமைசாலி மட்டுமல்ல. மிகுந்த நல்லவராகவும் இருந்தார். மணியைக் காப்பாற்றி விட்டார். டிஸ்சார்ஜ் செய்வதற்கு முதல் நாள் என்னைத் தனியே அழைத்துப் பேசினார்.

"உங்ககிட்ட சில விஷயங்களை வெளிப்படையாவே நான் சொல்லியாகனும். இந்த ஒரு வாரமா உங்களை கவனித்த வகையில் ஐ ஹோப் யு ஆர் நாட் அன் ஆர்டினரி உமன். சிரமங்களை அமைதியா எதிர்கொள்ளும் பக்குவம் உங்க கிட்ட இருக்கு. அதனாலதான் ஒப்பனா சொல்லிடலாம்னு இருக்கேன். மிஸ்டர் மணி இந்த ஆபரேஷன்ல பிழைச்சிருக்கலாம். ஆனாலும் இதோட எல்லாம் சரியாகி விட்டதா எடுத்துக்க முடியாது."

"புரியும்படியா சொல்லுங்க டாக்டர்"

"பொதுவா வயசாக ஆக மனுஷங்களுக்கு மூளை சுருங்க ஆரம்பிக்கும். வயசானவங்களுக்கு ஞாபக மறதி ஏற்படறது அதனாலதான். கெட்ட பழக்கங்களால துரதிருஷ்டவசமா உங்க கணவரோட மூளை இந்த நாற்பத்தியாறு வயசுலேயே அறுபது வயசுக்குரிய சுருக்கங்களை அடைஞ்சிருக்கு. இன்னும் தெளிவா சொல்லனும்னா அவருடைய மூளையோட இயற்கையான ஆயுள் என்பதுன்னா இப்பவே அது அறுபது வயதைக் கடந்து விட்டதுன்னு அர்த்தம். இது கவலைக்குரிய விஷயம். இதனால கோபம் அதிகம் வரும். மறதி அதிகரிக்கும். ஒரு நடுக்கம் கூடும். இந்த நிலையில் அவர் மீண்டும் சிகரெட்டைக் கையிலெடுத்தால் அவர் மூளை இன்னும் பத்து வருட ஆயுளை ஒரு சில மாதங்களில் கடந்து விடும். கட்டுப் பாடாக இருந்தால் இன்னும் இருபது வருடங்கள் கூட வாழலாம். ஆயுள் என்பது இறைவன் அறிவது. இறைவனளிப்பது. ஆனால் ஆரோக்கியம் என்பது நம் கையில் உள்ளது. விதியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள நினைப்பது அறிவீனம். இதையெல்லாம் பயமுறுத்தாமல் பக்குவமாக அவருக்குப் புரிய வைத்து அவரது கெட்ட பழக்கங்களை நிறுத்த முயற்சி செய்யுங்கள். எந்தப்பழக்கமும் சட்டென நிறுத்துவது கடினம்தான். கோபமோ ஆத்திரமோ அடைய வேண்டாம். அவரது ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நான் சொல்வதெல்லாம் புரிகிறதா?"

"புரிகிறது டாக்டர். முயற்சி செய்கிறேன்"

"ஐ விஷ் யு ஆல் தி பெஸ்ட்" டாக்டர் நட்புடன் விடை கொடுத்தனுப்பினார்.
அன்றுதான் இந்த பயம் என்னைப் பற்றிக் கொண்டது. வேதாளம் மாதிரி என் முதுகின் மீது பாரமாய் அமர்ந்து சவாரி செய்யத் தொடங்கியது.

" உன் கணவன் புகைப்பதை மறப்பானா? தன் ஆயுள் நீட்டித்துக் கொள்வானா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்திருந்தும் கூறா விட்டால் உன் தலை வெடித்துச் சிதறும்." வேதாளம் பயமுறுத்தியது.

"கண்டிப்பாக நிறுத்துவார்"
"எப்படிக் கூறுகிறாய்?"
"நல்லவர், குடும்பத்தை நேசிப்பவர்"
"அது மட்டும் போதுமா?"
"நிறைய கூறலாம். என் மீது அவருக்கிருப்பது தூய்மையான அன்பு.
நான் கருக்கொண்டிருந்த காலத்தில் எனக்குப் பிடிக்காத உணவுகளைத் தானும்தவிர்த்தவர். நாள் முழுக்க நான் சோர்ந்து தூங்க, சமையல் பொறுப்பை ஏற்றவர். என் துணிகள் துவைத்தவர். என் தலையும் காலும் பிடித்து விட்டவர். பத்தொன்பது வருட தாம்பத்யத்தில் துளியும் காதல் குறையாதவர். அப்படிப்பட்டவர் எனக்காக புகைப்பதை இனி நிச்சயம் நிறுத்துவார். இன்னும் இருபது வருடங்கள் நாங்கள் சேர்ந்திருப்போம். பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போம். பேரக் குழந்தைகள் காண்போம். கைகோர்த்து கடற்கரை சாலையில் நடப்போம். "

"பார்ப்போம்" வேதாளம் சிரித்தது. இன்னும் பலமாய் என்னைப் பற்றிக் கொண்டு எண் நம்பிக்கைகளை நொறுக்கப் பார்த்தது.
மூன்று மாதம் எல்லாம் சரியாகவே இருந்த நிலையில்தான் மணிக்கு பணியிட மாற்றம் வந்து வயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்தது.
யாரிடமும் கெஞ்ச மாட்டேன், விடுப்பும் எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாகப் புறப்பட்டவரை வழியனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.
உடன் செல்ல முடியாத குடும்ப சூழல். உடல் பலவீனமானவரை நோய் தாக்கும். மனம் பலவீனமாகும் போது பயம் தாக்குகிறது. புருஷன் பிரிந்து செல்ல பயம் புருஷனாயிற்று. என்னோடு கலந்து, உறங்கி, விழித்தது. விபரீதக் கற்பனைகளுக்கு வித்திட்டது. ஒவ்வொரு நிமிடமும் என்னவாகுமோ என்று மனம் நடுங்கியது. உள்ளே ஏதேதோ காட்சிகள் விரியும்.

(என் கதை தொடர நாளை மீண்டும் வருவேன்.)

Friday, July 2, 2010

எல்லாம் அன்பு மயம்

எழுத ஆரம்பித்து 27 வருடங்கள் முடிந்து விட்டது. இதுவரை நூற்றுக் கணக்கில் சிறுகதைகள், தொடர் கதைகள், புதினங்கள், மாத நாவல்கள், ஆன்மீக கட்டுரைகள், என்று எழுதியாயிற்று எழுத்துக்களின் மூலம் நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். வாசகர்களாக அறிமுகமாகி பின்னர் நெருங்கிய நண்பர்களாக மாறியவர்கள் அநேகம் பேர். ஒரு தவம் போல் உங்கள் கதைகளைப் படிக்கிறோம் என்று சிலர் கூறும் போது பயமாகவே இருக்கிறது.

என்னுடைய சில நெருங்கிய வாசக சிநேகங்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். இவர்கள் எல்லோருமே எனக்கு மிக முக்கியமானவர்கள்தான். முதல் சினேகிதி திருச்சி பிச்சாண்டார் கோயிலில் வசிக்கும் திருமதி காமகோட்டி முத்துகிருஷ்ணன். இந்தக் குடும்பமே மிக உயர்ந்த உள்ளங்களுக்கு சொந்தம் கொண்டது. விருந்தோம்பலில் இவர்களை விஞ்ச எவருமில்லை.

அன்பு அன்பு அன்பு என எல்லாம் அன்பு மயம். மன நலம் குன்றிய ஒரு மகனை வைத்துக் கொண்டு மலர்ந்த முகத்தோடு குறையொன்றுமில்லை என வளைய வரும் பண்பு எளிதில் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு தெய்வ விக்கிரகத்தைப் போல அந்த மகனை அனைவரும் அங்கு அன்போடு ஆராதித்து வருகிறார்கள். இவரிடம் பிறருக்குக் கொடுப்பதற்கு அன்பைத்தவிர வேறெதுவும் இல்லை.

இறைமையின் மீது திடீர் திடீரென இவரது வாயிலிருந்து பாடல்கள் வெள்ளமாய்ப் பெருகிவரும். இவரது கணவர் அமைதியானவர். தீமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத நல்லவர். இவரது மற்றொரு மகன் கார்த்திக் பொறியியல் மாணவர். மைக்ரோசாப்ட் நடத்திய ஒரு போட்டியில் பரிசு வென்ற புத்திசாலி. இவர்களுடைய விருந்தாளியாக இரண்டு முறை சில நாள் திருச்சியில் எனது சில நண்பர்களோடு சென்று தங்கியிருக்கிறேன். அப்போது இவர்களது விருந்தோம்பல் இப்போது நினைத்தாலும் என் கண்ணில் கண்ணீர் மல்குகிறது.

ஒவ்வொரு தீபாவளிக்கும் இவரிடமிருந்து கண்டிப்பாக ஒரு பரிசு வந்து விடும். இப்பேர்ப்பட்ட மனிதர்களை நண்பர்களாகப் பெற்றது என் எழுத்துக்களால் அல்லவா? என்னை எழுத்தாளியாக்கிய இறைமைக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல!


அடுத்தது, திருமதி சுசிலா அரவிந்தன். இவரும் திருச்சிதான் காமகோட்டியின் தோழி. என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட கருப்பழகி. என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைபோல அன்பானவர். நல்ல கவிதாயினி. விழுந்து விழுந்து இவர் எனக்கு வரைந்து அனுப்பும் வாழ்த்து மடல்கள் அனைத்தும் என்னை வியக்க வைக்கும். கடிதங்களில் நிறைய பேசுபவர், நேரில் வெறுமனே என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

நான் கிருஷ்ண பக்தை என்பதைத் தெரிந்து கொண்டு சென்ற முறை திருச்சிக்கு வந்த போது இவர் வாங்கிக்கொடுத்த குட்டி கிருஷ்ணன் என் பூஜை அறையிலிருந்து தினமும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.


ஒவ்வொரு முறை திருச்சிக்கு வரும்போதும் எனக்கு வாசகர்கள் கூடிக்கொண்டு போவது போல் தோன்றுகிறது. திருச்சி எனது தாய் வீடு மாதிரி ஆகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்கள் அன்பைக் காட்டும்போது மனம் நெகிழ்ந்து போகிறது. மொத்த திருச்சியுமே அன்பு மயமாய்த் தெரிகிறது.

காவேரி கூட மழைக் காலத்தில்தான் நிரம்பும். இவர்களது அன்பு என்றும் வற்றாத ஜீவநதி. ஸ்ரீரங்கம் கோவிலில் இரண்டு மணி நேரம் எனக்காக காத்திருந்து ஒரு ரங்கநாதர் படத்தை பரிசளித்து விட்டுப் போனார் ஒரு வாசகி. மற்றொரு வாசகிக்கு வயது எழுபதுக்கு மேல். இவர் எனக்காக வாசனைப் பொடி அரைத்து எடுத்துக் கொண்டு வந்து நீ குளிக்கும்போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற போது அழுகை வந்தது.

ஒரு பெண்மணி எனக்குக் கொடுத்த அன்பளிப்பு வியப்பானது. தனது பழைய புடவையில் மிக அழகாக வட்ட வடிவில் ஒரு மிதியடியை தானே பின்னி கொண்டு வந்திருந்தார். அந்த அன்பைக் காலால் மிதிக்க முடியாமல் எனதுகணிப்பொறி அமர்வானில் போட்டு உபயோகிக்கிறேன்.

எனது அம்மா பிள்ளை நாவலைப் படித்து விட்டு எனது வாசக சிநேகிதியாய் மாறியவர் விஜயலஷ்மி. தானும் தனது மகனும் அந்த அம்மா பிள்ளையைப் போலதான் பேசிக் கொள்வோம் என்று வியந்தார். என்னுடைய அத்தனை புத்தகங்களும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதில் இவருக்கு அலாதி ஆனந்தம். மிகுந்த புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டவர்.

இவரது ஒரே மகன் சத்யா கடற்படையில் உயரதிகரியாய் இருக்கிறார். சத்யா என்ற பெயருக்கு ஏற்றாற்போல் சத்தியமும் நேர்மையும் தேச பக்தியும் நிறைந்தவர். பகத்சிங்கை உதாரண புருஷனாய் நேசிப்பவர். முதலில் அந்தமானில் பணி புரிந்து விட்டு தற்போது மும்பையில் பணியில் உள்ளார். சத்யாவின் திருமணத்திற்குப் போயிருந்த எனக்கு விஜயலஷ்மி ஒரு புடவை அளித்த போது ஆச்சர்யப்பட்டேன். எதற்கு என்றேன். என் குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் நான் உன்னை நினைக்கிறேன் என்றார். எழுத்தளாராக மலர்ந்ததற்காக நான் கொஞ்சம் கர்வமும் நெகிழ்ச்சியும் அடைந்த தருணம் அது.

இவரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் நான் இவரிடம் பேசுகையில் நான் எழுதிய " முதல் கோணல் " என்ற எனது முதல் சிறுகதை என்னிடமே இல்லை என்று சொன்னேன். அதற்கென்ன கொடுத்தால் போயிற்று என்றார். அடுத்த இரண்டாவது நாள் தபாலில் வந்து சேர்ந்தது என் முதல் கோணல். பொக்கிஷமாக பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டேன். இந்த அன்புக்கெல்லாம் என் எழுத்துக்களை சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன நான் செய்ய? ஒன்று புரிகிறது. ஒரு எழுத்தாளரின் ஆன்மா நல்ல வாசகர்கள்தான். ஆன்மாவுக்கு அழிவில்லை. அதுவே உயர்ந்தது.