Showing posts with label sigarette. Show all posts
Showing posts with label sigarette. Show all posts

Tuesday, November 23, 2010

கண்ணாமூச்சி (பகுதி ஒன்று)

இது கதையல்ல நிஜம். எனக்கு நடந்தது. இனியாருக்கும் நடக்க வேண்டாம் என்பதற்காக நான் எழுதிய என் கதையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணாமூச்சி (பகுதி ஒன்று)

ஒரு ஒட்டுண்ணித் தாவரம் போல பயம் எனக்குள் படர்ந்திருந்தது. அதை உதறவும்முடியாமல் அதனின்று நான் விடுபடவும் இயலாதவாறு அது ஒரு அமுக்குப் பிசாசு போல் என் மீது கவிழ்ந்திருந்தது. பயம் ஊறிய விழிகளால் நான் கண்டவர்களும், கண்டவைகளும் கூட பயத்தோடு அலைவதாகத் தோன்றியது. கடற்கரை சாலையில் பயம் அப்பியிருந்தது. சாலையில் சென்ற வாகனங்கள், பாதையில் நடந்து கொண்டிருந்த மனிதர்கள், நின்று கொண்டிருந்த மரங்கள், நுரைத்து கரை தொட்ட அலைகள் எல்லாவற்றிலும் பயம் பூஞ்சையாய் ஒட்டியிருந்தது.

மணி விழுப்புரத்திற்குச் சென்றதிலிருந்துதான் இந்த பயம். போகாதே என்று எத்தனை புலம்பியும் கேட்கவில்லை. பெண்ணின் வேதனையும் பயமும் புரியாத ஆண் வர்க்கம்.

"இந்த உடம்போட ஊர் விட்டு ஊர் போய்த்தான் ஆகணுமா? மெடிக்கல் லீவ் போட்டாத்தான் என்ன"

பதிலில்லை. கேஷுவல் லீவே போடுவதற்கு யோசிக்கும் மனிதனாவது மெடிக்கல் லீவ் போட்டு விட்டு வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதாவது! ஆபரேஷனுக்காக இரண்டு மாதம் போட்டதே பெரிய விஷயம். வேறு வழியில்லை. உயிருக்கே அபயம் என்கிற நிலையில் போட்டுத்தானே தீர வேண்டும்.

இப்போது நினைத்தாலும் அன்றைய சூழல் கதிகலங்க வைத்தது. ஒரு திங்கட்கிழமை எனக்கு விடியல் சரியாக இல்லை. பாத்ரூமில் தாடல் என்று ஒரு சப்தம். பல் தேய்த்துக் கொண்டிருந்த மணி சரிந்து விழுந்திருந்தார். வீட்டில் யாருமில்லை.
"என்ன என்னாச்சுப்பா? " பதறினேன். எங்கிருந்துதான் அத்தனை சக்தி வந்ததோ. ஒற்றை ஆளாய் தூக்கியிழுத்துக் கொண்டு வந்து ஹாலில் கிடத்தினேன். மின் விசிறியை சுற்ற விட்டேன். இரண்டே நிமிடம்தான். சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். ஒண்ணுல்ல என்றார்.
"என்ன பண்ணித்து?"

"ஒண்ணுல்ல விடு" எழுந்து போனார். அடுத்த அரை மணி கழித்து மீண்டும் விழ நான் அலறினேன்.
பேராலிடிக் ஸ்ட்ரோக் " டாக்டர் சொல்லியபடி இரத்த அழுத்தம் பார்த்தார். எங்கோ எகிறியது. அவசரத்திற்கு மாத்திரை கொடுத்து உடனடியாய் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக் கூறினார்.

அடுத்தது ஆஸ்பத்திரிப் படலம். மருந்து வாசனை பினாயில் நறுமணம். சூழ்ந்திருந்த டாக்டர்களுக்கு நடுவே மணி.
"சிகரெட் பழக்கம் உண்டா?"
" உண்டு "
"ஒரு நாளைக்கு எவ்ளோ?"
"நாலஞ்சு"
"நாலஞ்சு சிகரெட்ட? பாக்கெட்டா?
"...................."
"டிரிங்க்ஸ் உண்டா?"
"எப்போதாவது"
"எத்தனை குழந்தைகள்?"
"ரெண்டு பெண்கள்"
"என்ன பண்றாங்க?"
"படிக்கறாங்க"
"உங்க வயசென்ன?"
"நாப்பத்தியாறு "
"வாழற ஆசை அதுக்குள்ளே போயடுச்சான்ன? பெண்டாட்டி
குழந்தைகள் மேல அன்பிருக்கா இல்லையா?"
"........................"
"உங்களுக்கு என்ன பிரச்சனை தெரியுமா?"
"சொல்லுங்க"
"உங்க மூளைக்கு போகற சுத்த ரத்தக் குழாய்ல கழுத்துப் பகுதியில் அடைப்பு இருக்கு. அதனால் மூளைக்கு ரத்தம் சரியாப் போகல. அதான் ஒரு பக்கம் விழுந்துடுச்சு."
"சரியாகிடுமா?"
"ஆபரேஷன் பண்ணனும், ஆஞ்சியோகிராம் பண்ணி அதுல சரியாகல. மூணு நாளைக்குள்ள ஆபரேஷன் பணியாகனும். கழுத்துப் பகுதியை கீறி ரத்தக் குழாயைத் திறந்து கெட்ட கொழுப்பைச் சுரண்டி எடுப்போம். ஆபரேஷன்ல நல்லாகிடுவீங்க. ஆனா இனி சிகரெட், மதுவைத் தொடரதில்லன்னு உறுதி எடுத்துக்கோங்க. நல்லார்க்கற உடம்பைக் கெட்ட பழக்கங்களால கெடுத்துக் கொள்வது கூட தற்கொலை மாதிரிதான். புரிஞ்சுதா?"

டாக்டர் மிகுந்த திறமைசாலி மட்டுமல்ல. மிகுந்த நல்லவராகவும் இருந்தார். மணியைக் காப்பாற்றி விட்டார். டிஸ்சார்ஜ் செய்வதற்கு முதல் நாள் என்னைத் தனியே அழைத்துப் பேசினார்.

"உங்ககிட்ட சில விஷயங்களை வெளிப்படையாவே நான் சொல்லியாகனும். இந்த ஒரு வாரமா உங்களை கவனித்த வகையில் ஐ ஹோப் யு ஆர் நாட் அன் ஆர்டினரி உமன். சிரமங்களை அமைதியா எதிர்கொள்ளும் பக்குவம் உங்க கிட்ட இருக்கு. அதனாலதான் ஒப்பனா சொல்லிடலாம்னு இருக்கேன். மிஸ்டர் மணி இந்த ஆபரேஷன்ல பிழைச்சிருக்கலாம். ஆனாலும் இதோட எல்லாம் சரியாகி விட்டதா எடுத்துக்க முடியாது."

"புரியும்படியா சொல்லுங்க டாக்டர்"

"பொதுவா வயசாக ஆக மனுஷங்களுக்கு மூளை சுருங்க ஆரம்பிக்கும். வயசானவங்களுக்கு ஞாபக மறதி ஏற்படறது அதனாலதான். கெட்ட பழக்கங்களால துரதிருஷ்டவசமா உங்க கணவரோட மூளை இந்த நாற்பத்தியாறு வயசுலேயே அறுபது வயசுக்குரிய சுருக்கங்களை அடைஞ்சிருக்கு. இன்னும் தெளிவா சொல்லனும்னா அவருடைய மூளையோட இயற்கையான ஆயுள் என்பதுன்னா இப்பவே அது அறுபது வயதைக் கடந்து விட்டதுன்னு அர்த்தம். இது கவலைக்குரிய விஷயம். இதனால கோபம் அதிகம் வரும். மறதி அதிகரிக்கும். ஒரு நடுக்கம் கூடும். இந்த நிலையில் அவர் மீண்டும் சிகரெட்டைக் கையிலெடுத்தால் அவர் மூளை இன்னும் பத்து வருட ஆயுளை ஒரு சில மாதங்களில் கடந்து விடும். கட்டுப் பாடாக இருந்தால் இன்னும் இருபது வருடங்கள் கூட வாழலாம். ஆயுள் என்பது இறைவன் அறிவது. இறைவனளிப்பது. ஆனால் ஆரோக்கியம் என்பது நம் கையில் உள்ளது. விதியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள நினைப்பது அறிவீனம். இதையெல்லாம் பயமுறுத்தாமல் பக்குவமாக அவருக்குப் புரிய வைத்து அவரது கெட்ட பழக்கங்களை நிறுத்த முயற்சி செய்யுங்கள். எந்தப்பழக்கமும் சட்டென நிறுத்துவது கடினம்தான். கோபமோ ஆத்திரமோ அடைய வேண்டாம். அவரது ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நான் சொல்வதெல்லாம் புரிகிறதா?"

"புரிகிறது டாக்டர். முயற்சி செய்கிறேன்"

"ஐ விஷ் யு ஆல் தி பெஸ்ட்" டாக்டர் நட்புடன் விடை கொடுத்தனுப்பினார்.
அன்றுதான் இந்த பயம் என்னைப் பற்றிக் கொண்டது. வேதாளம் மாதிரி என் முதுகின் மீது பாரமாய் அமர்ந்து சவாரி செய்யத் தொடங்கியது.

" உன் கணவன் புகைப்பதை மறப்பானா? தன் ஆயுள் நீட்டித்துக் கொள்வானா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்திருந்தும் கூறா விட்டால் உன் தலை வெடித்துச் சிதறும்." வேதாளம் பயமுறுத்தியது.

"கண்டிப்பாக நிறுத்துவார்"
"எப்படிக் கூறுகிறாய்?"
"நல்லவர், குடும்பத்தை நேசிப்பவர்"
"அது மட்டும் போதுமா?"
"நிறைய கூறலாம். என் மீது அவருக்கிருப்பது தூய்மையான அன்பு.
நான் கருக்கொண்டிருந்த காலத்தில் எனக்குப் பிடிக்காத உணவுகளைத் தானும்தவிர்த்தவர். நாள் முழுக்க நான் சோர்ந்து தூங்க, சமையல் பொறுப்பை ஏற்றவர். என் துணிகள் துவைத்தவர். என் தலையும் காலும் பிடித்து விட்டவர். பத்தொன்பது வருட தாம்பத்யத்தில் துளியும் காதல் குறையாதவர். அப்படிப்பட்டவர் எனக்காக புகைப்பதை இனி நிச்சயம் நிறுத்துவார். இன்னும் இருபது வருடங்கள் நாங்கள் சேர்ந்திருப்போம். பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போம். பேரக் குழந்தைகள் காண்போம். கைகோர்த்து கடற்கரை சாலையில் நடப்போம். "

"பார்ப்போம்" வேதாளம் சிரித்தது. இன்னும் பலமாய் என்னைப் பற்றிக் கொண்டு எண் நம்பிக்கைகளை நொறுக்கப் பார்த்தது.
மூன்று மாதம் எல்லாம் சரியாகவே இருந்த நிலையில்தான் மணிக்கு பணியிட மாற்றம் வந்து வயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்தது.
யாரிடமும் கெஞ்ச மாட்டேன், விடுப்பும் எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாகப் புறப்பட்டவரை வழியனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.
உடன் செல்ல முடியாத குடும்ப சூழல். உடல் பலவீனமானவரை நோய் தாக்கும். மனம் பலவீனமாகும் போது பயம் தாக்குகிறது. புருஷன் பிரிந்து செல்ல பயம் புருஷனாயிற்று. என்னோடு கலந்து, உறங்கி, விழித்தது. விபரீதக் கற்பனைகளுக்கு வித்திட்டது. ஒவ்வொரு நிமிடமும் என்னவாகுமோ என்று மனம் நடுங்கியது. உள்ளே ஏதேதோ காட்சிகள் விரியும்.

(என் கதை தொடர நாளை மீண்டும் வருவேன்.)