Tuesday, April 12, 2011

பெண் எழுத்து (தொடர் பதிவு)

பெண் எழுத்து எனும் தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்த மனோ சாமிநாதனுக்கு நன்றி. தனது பதிவில் மனோ எழுதியதெல்லாம் ஒப்புக் கொள்ளக் கூடியவைதான், ஆண் எழுத்து பெண் எழுத்து என்றெல்லாம் கிடையாது என்றாலும் எல்லை மீறி காமமும் வர்ணனையும் எழுத பெண்ணால் முடியாது. பெண் எழுத்தின் அழகும் அதுதான். அப்படியே விதி மீறலாக ஒரு பெண் கவிஞர் சுய வர்ணனை செய்து எழுதிய கவிதையும் அந்த கவிதாயினியும் பட்ட பாடும், அவரும் மிகத் துணிச்சலாக அதை எதிர் கொண்டதும் அனைவரும் அறிந்ததுதான். விரசமில்லாமல் கண்ணியமாய் எழுதுகிற ஆண் எழுத்தாளர்களையும் நான் அறிவேன். பெண்ணை மட்டம் தட்ட சுஜாதாவின் கதாநாயகன் ஒருவன் கேட்பான். என்னால் முடிவதெல்லாம் உன்னால் முடியுமா என்று. அவளும் முடியும் என்பாள். எங்கே இதைச் செய் என்று சுவற்றில் சிறுநீர் கழிப்பான். பெண்ணை மட்டம் தட்ட இதுவா வழி? எனக்கு சுஜாதாவை மிகவும் பிடிக்கும் என்றாலும் இது படித்த போது கோபம் வந்து சற்றே மரியாதையும் குறைந்தது. இனவிருத்திக்காக கடவுள் ஆண் உடலுக்கு ஒரு அமைப்பையும் பெண் உடலுக்கு வேறொரு அமைப்பையும்அளித்தது ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொள்வதற்கு அல்ல. சங்க காலத்திலேயே பெண் எழுத்துக்கு பெருமை சேர்த்தவர் அவ்வையார். அவரது கவிகளில் சொல்லப் பட்ட விஷயத்தின் வீரியமும், கண்ணியமும் இன்றளவும் பிரம்மிக்க வைக்கும். ஆண் பெண் நட்பு என்பது அவர் காலத்திலேயே அற்புதமாக இருந்திருக்கிறது. அதியமானோடு அவர் கொண்டிருந்த உன்னதமான நட்பு பெண்ணுக்கு பெருமை சேர்த்தது எனலாம். சாண்டில்யனின் எழுத்துக்களில் காமம் சற்று தூக்கலாகவே இருப்பதற்கு காரணம் அவர் ஆண் என்பதுதான் என்றாலும், கல்கியின் கதைகளில் அவர் ஒரு ஆணாக இருந்தாலும் எல்லை மீறாமல் எழுதியதற்கு எது காரணம்? எழுதுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம். வாழ்வின் நிஜத்தை ஓட்டி கதை எழுவதையே நான் விரும்புகிறேன். தனக்கும் ஒரு ராஜகுமாரன் கிடைப்பான் என்று இளம் பெண்களை கற்பனை சுகத்தில் மிதக்க வைக்க என்னால் நிச்சயம் முடியாது. அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும். அன்பெனும் அச்சாணியில்தான் இவ்வுலகம் சுழல்வதாக நான் நம்புகிறேன். அன்பின்றி செய்யப்படும் அனைத்துமே போலியானவை என நினைப்பவள் நான். என் வீட்டில் மிகச்சில பத்திரிகைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. கண்ணியமான எழுத்துக்களைப் படித்து வளர்ந்தவள் நான். அம்மா வந்தாள் நாவலில், ஒழுக்கம் கெடும் அம்மாவைக் கூட கம்பீரமாக கண்ணியமாக சித்தரித்துக் காட்டியிருப்பார் தி.ஜா. இரண்டு பேர் என்று ஒரு தொடர். இரண்டு பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியது. கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. காரணம் அதில் வெளிப்பட்ட எல்லை மீறிய வர்ணனைகளும் ஒழுக்க மீறல் சொல்லப் பட்ட விதமும்தான். கண்ணியம் என்பது ஒருவர் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் எல்லை. ஆணோ பெண்ணோ கண்ணியம் காப்பதென்பது அவரவர் விருப்பம். ஆபாசமாக எழுத ஆணுக்குதான் உரிமை இருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். ஆண் செய்யும் தவறுகளைச் செய்வதுதான் பெண்ணுரிமையா? நம் இலையில் விருந்தேன்கிற பேரில் பல்வேறு பதார்த்தங்களும் இனிப்புகளும் வந்து விழும். நமக்கு தீங்கு செய்யாதவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுவது நமது பொறுப்பு. வாசகர்களுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. கண்ணியமானவற்றைத் தேடிப் பிடித்துப் படிப்பது. என்னை பாதித்த கண்ணியம் மிகு எழுத்துக்களுக்கு சொந்தமானவர்கள் இவர்கள். தி.ஜா, கல்கி, தேவன், நா.பா. உமா சந்திரன், லஷ்மி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், லஷ்மி ராஜரத்தினம், வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி, லா.ச.ரா. சுபா, அனுராதா ரமணன், எஸ்.ரா. தமிழருவி மணியன், இறையன்பு, சுஜாதா (சிறுகதைகள், கட்டுரைகளுக்கு மட்டும்) இந்த தொடர் பதிவுக்கு பல்வேறு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசிக்கும் கோபி ராம மூர்த்தியையும், நான் அழைக்க விரும்புகிறேன். அவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன். படிச்சுட்டு சும்மா போகாம ஒட்டு போட்டுட்டு போங்களேன். ஓட்டுக்கு பணமெல்லாம் கிடையாது சொல்லிட்டேன்.

32 comments:

raji said...

நீங்கள் எழுதி இருப்பது முழுக்க முழுக்க உண்மையே.
நானும் சுஜாதா அவர்களின் ரசிகைதான் என்றாலும் நீங்கள் குறிப்பட்ட வரிகள்
என்னை மிகுந்த வருத்ததிற்கு உள்ளாக்கியது.

"இரண்டு பேர்" பற்றி எனது கருத்தை அறிய இது பற்றி நான் தொடர்பதிவு
எழுதும்பொழுது படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்னு சொல்றாப்பல
என்னையும் மணக்க செய்ய மனோ மேடம் அழைத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அளவும் உங்கள் அளவும் மணம் இருக்காது.என்ன
இருந்தாலும் நார் நார்தானே)

Chitra said...

உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் கண்ணியமாகவும் இருக்கின்றன. எழுத்து நடையும் அபாரம். பதிவுலகம் மூலமாக உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

உதாரணங்களுடன் மிகத் தெளிவாக
சுருக்கமாக பெண்ணெழுத்து குறித்து
எழுதியிருக்கும் உங்களுக்கு என்
மனம் கனிந்த வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எழுதுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம். வாழ்வின் நிஜத்தை ஓட்டி கதை எழுவதையே நான் விரும்புகிறேன்//

//நம் இலையில் விருந்தென்கிற பேரில் பல்வேறு பதார்த்தங்களும் இனிப்புகளும் வந்து விழும். நமக்கு தீங்கு செய்யாதவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுவது நமது பொறுப்பு. வாசகர்களுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. கண்ணியமானவற்றைத் தேடிப் பிடித்துப் படிப்பது.//

எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், மிகச்சிறந்த எழுத்தாளராகிய தாங்கள் கூறியுள்ள இந்த விஷயங்கள்/அறிவுரைகள் மிகவும் பயனுள்ளவைகளாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மிக்க நன்றியுடன் என் பாராட்டுக்கள்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும்.//
-கண்ணியமான எழுத்து என்பது நாகரிகத்தின் உரைகல். நாகரிகத்தை அடுத்த தலைமுறைக்கும் நகர்த்தும் பொறுப்பு உங்களின் எழுத்துகளில் மிளிர்கிறது. Hats off, madame!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எழுத்துக்களில் என்ன இருக்கிறது பேதம்?
எண்ணங்களில் தான் இருக்கிறது?
மன விகாரம் களைந்து, சமுதாயப் பொறுப்புடன் எழுதப் படும் எந்த படைப்புமே,கால வெள்ளத்தை மீறி நிற்கும்..
நான் எழுதும் எழுத்துக்களுக்கு நான் ஜவாப் சொல்லியாக வேண்டும்! எழுதும் போது என் பெண்டு பிள்ளைகளும் படிக்கிறார்கள் என்கிற பொறுப்பு எழுதுபவருக்கு வேண்டும்..
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?

சாந்தி மாரியப்பன் said...

//எழுதுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம்//

சரியா சொன்னீங்க.. மொத்தத்தில் பிறரை புண்படுத்தாம, நல்ல நோக்கில் எழுதப்படும் எல்லா எழுத்துக்களுமே சிறந்தவைதான்..

ஜோதிஜி said...

சித்ரா உணர்ந்து அளித்த (?) விமர்சனத்திற்கு நன்றி.

அடுத்த முறை எழுதும் போது பத்தி பிரிக்க மறக்காதீங்க.

இராஜராஜேஸ்வரி said...

அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும். அன்பெனும் அச்சாணியில்தான் இவ்வுலகம் சுழல்வதாக நான் நம்புகிறேன். //
மிகச்சரியான கருத்து.

RVS said...

மிகவும் கண்ணியமான எழுத்துக்கு சொந்தக்காரர் அமரர் சுஜாதா. அவருடைய "எப்போதும் பெண்" படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரே ஒரு கதை மாந்தர் சொன்ன ஒற்றை வரியை எடுத்துக்கொண்டு ஒரு எழுத்தாளர்க்கு ஒட்டு மொத்தமாக பச்சை குத்துவதில் எனக்கு ஒப்புமை இல்லை மேடம். மீதமுள்ளக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். நன்றி. ;-))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ராஜி உங்கள் தொடர் பதிவிற்கு காத்திருக்கிறேன்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சித்ரா உங்கள் நட்பு கிடைத்ததற்கு நானும் பெருமைப் படுகிறேன். உங்கள் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ரமணி சார், வை.கோ சார், லஷ்மி நாராயணன் சார், ராமமூர்த்தி சார், அமைதிச்சாரல், அனைவருக்கும் நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஆர்.வீ.எஸ் நான் சுஜாதாவுக்கு ஒட்டு மொத்தமாய் பச்சை குத்தவில்லை. அவருமே ஆரம்ப காலத்தில் சற்று ஆபாசம் கலந்துதான் எழுதிக கொண்டிருந்தார். அவர் விஷய ஞானி என்பதிலும், மிச் சிறந்த படைப்புக்களுக்கு சொந்தக் காரர் என்பதையும் நான் மறுக்கவில்லை. கொஞ்சம் கூட பெண்ணை மட்டம் தட்டாமலும், ஆபாசமில்லாமலும் எழுதுவது குறித்த பதிவு இது என்பதால் அதைக் குறிப்பிட்டேன். மற்ற படி நானும் சுஜாதாவின் பரம ரசிகைதான்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஜோதிஜி சார், பத்தி பிரித்துதான் எழுதினேன். ஆனால் போஸ்ட் செய்யும்போது பத்தி போய் விடுகிறது. ஏன் என்று தெரியவில்லை. உங்கள் வருகைக்கு நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ராஜராஜேஸ்வரி மேடம் நன்றி.

HVL said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! நானும் சுஜாதாவின் ரசிகை. நீங்கள் குறிப்பிட்டது போன்ற, என் கருத்துக்களுடன் ஒவ்வாத, சில வரிகளை ஒதுக்கிவிடுகிறேன். அவ்வளவே!

HVL said...

//
ஜோதிஜி சார், பத்தி பிரித்துதான் எழுதினேன். ஆனால் போஸ்ட் செய்யும்போது பத்தி போய் விடுகிறது. ஏன் என்று தெரியவில்லை.//

எனக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டது. Internet Explorerல் மட்டும் Blogகிற்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஃபயர் ஃபாக்ஸ் போன்ற மற்ற ப்ரௌசர்களில் முயற்சி செய்யுங்கள்.

சரியில்ல....... said...

அட... மேடம்... சுஜாதா பற்றி உங்களுக்கு தெரியாதா? அவர் பாத்திரத்துக்கு வேவைப்பட்டால் கெட்டவார்த்தை கூட பயன்படுத்துவார்... அதுபோல இந்த பாத்திரத்துக்கு (அவனது அறிவு படி..) அப்படி எழுதியிருக்கிறார்... சுஜாதா பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்... உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.. (என்னடா இது முதல் பின்னுட்டமே இப்பிடி போயிடுச்சேன்னு ரொம்ப கவலையா இருக்கு... மத்தபடி நான் ரொம்ம கூல்...)

அன்புடன் மலிக்கா said...

முதல் முறையாக வருகிறேன்.
மிக அருமையாக தெளிவாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்..

மார்ச் 17 லில் இத்தலைப்பில் நானும் எழுத ஒரு வாய்ப்புக்கிட்டியது நேரமிருக்கும்போது இதையும் பார்க்கவும்..

http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

ரிஷபன் said...

எழுத்தில் ஆண் பெண் என்கிற பேதம் இருக்கிறதா.. என்ன..
அருமையான எழுத்துக்கு யார் சொந்தக்காரர் ஆனாலும் தேடிப் படித்து பாராட்டுகிற நமக்கு எழுத்து மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது..

Asiya Omar said...

இந்த பெண் எழுத்து பகிர்வை வாசித்த பின்பு உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் ஆவல் இன்னும் அதிகமாகிறது.ஊர் சென்றால் நீங்கள் குறிப்பிட்ட கண்ணியமான எழுத்துக்களை வாங்கி வாசிக்க வேண்டும்..

கே. பி. ஜனா... said...

மிக தெளிவாகவும் மிகுந்த கண்ணியத்தோடும் எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.

கே. பி. ஜனா... said...

மிக தெளிவாகவும் மிகுந்த கண்ணியத்தோடும் எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.

கே. பி. ஜனா... said...

மிக தெளிவாகவும் மிகுந்த கண்ணியத்தோடும் எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.

கே. பி. ஜனா... said...

மிக தெளிவாகவும் மிகுந்த கண்ணியத்தோடும் எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.

கே. பி. ஜனா... said...

மிக தெளிவாகவும் மிகுந்த கண்ணியத்தோடும் எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.

ஹுஸைனம்மா said...

//ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம்//

கரெக்ட் மேடம். நம்ம எழுத்துகளை நம்ம குடும்பத்தினரும் படிப்பாங்களேன்னு உணர்ந்து எழுதினாலே போதும்.

மனோ சாமிநாதன் said...

மறுபடியும் முக்கிய வேலையாக தஞ்சை வந்து விட்டதால் இப்போது தான் உங்களின் 'பெண் எழுத்தை' படிக்க நேர்ந்தது.

"அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும். அன்பெனும் அச்சாணியில்தான் இவ்வுலகம் சுழல்வதாக நான் நம்புகிறேன். அன்பின்றி செய்யப்படும் அனைத்துமே போலியானவை என நினைப்பவள் நான்"

நான் உங்களைப்பற்றி எனது 'பெண் எழுத்தில்' என்ன எழுதியிருந்தேனோ, அதையே இந்த வரிகளில் நீங்கள் நிரூபித்துக்காட்டியிருக்கிறீர்கள்!

சுஜாதா பற்றிய ‍கருத்து உண்மைதான். நானும் அதைப்படித்த போது மிகவும் சீற்றமடைந்திருக்கிறேன். ஏன், அதற்குப்பின் அவரது எழுத்துக்கள் சிலவற்றைப் படிக்காமல் தவிர்த்துமிருக்கிறேன். இந்த லிஸ்டில் இன்னும் சிலர் கூட இருக்கிறார்கள். காட்சிக்குப்பொருத்தமானதோ அல்லது கதைக்கு அந்தந்த இடத்தில் தேவை என்ற காரணங்களோ எதுவாக இருந்தாலும் தன்னுடனேயே பிற‌ப்பிலிருந்து ஒன்றியே இருக்கும் பெண்ணினத்தை விரசமாக இது போல எழுதும்போது அந்த எழுத்தே தரம் குறைந்து நீர்த்துப் போய் விடுகிறதல்லவா?

அனைத்துமே அருமையான கருத்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம்.

எஸ்.. கரெக்ட் தான் மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

சுஜாதா ரசிகனாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட தருணம் சங்கடமானாதுதான். தங்க மகன் படத்தில் கூட நடனப்போட்டியில் நாயகன் சட்டையை கழட்டுவார். நாயகியால் முடியாது.உடனே அவர் நடனத்தில் வெற்றி பெற்றாராம். கேனத்தனமான காட்சி..

சி.பி.செந்தில்குமார் said...

NOT FOR PUBLISH MADAM

>>. படிச்சுட்டு சும்மா போகாம ஒட்டு போட்டுட்டு போங்களேன்

மேடம்.. நீங்கள் வழக்கமா ஓட்டு கேட்க மாட்டீங்களே? ஏன் இந்த மாற்றம்?எப்படி இருந்தாலும் ஓட்டு போடுபவர்கள் போடுவார்கள். ஒரு பிரபல எழுத்தாளர் ஓட்டு கேட்பது சங்கடமாக உள்ளது.

(நான் கூறியது அதிகப்பிரசிங்கித்தனமாய் தோன்றினால் மன்னிக்கவும் மேடம்)