Friday, December 19, 2014

விகடன் கடவுள்

ஒரு டஜன் சிறுகதைகள் வரை எழுதியிருப்பேன் ஆனந்த விகடனில்.  விகடனுக்கென்று பிரத்யேகமாக  எழுதி,  நம்பிக்கையுடன் தபாலில்தான் அனுப்பி வைப்பேன்.   ஒன்றிரண்டைத் தவிர  அத்தனையும் பிரசுரமாகி இருக்கிறது.   அனுப்பி விட்டு காத்திருக்க வேண்டும். சில நேரம் ஏழெட்டு மாதம் கூட ஆகும் முடிவு தெரிய.  " உங்கள்  சிறுகதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இக்கதையை வேறு எந்த பத்திரிகைக்கும் அனுப்பவில்லை என்பதை உடன் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" .  இப்படி ஒரு கடிதம் வரும்  போது அன்று முழுக்க என் கால்கள் தரையில் இருக்காது. 

உறுதி மொழி கடிதம் அனுப்பிய பிறகு வாரா வாரம் விகடன் வந்ததும் ஆவலுடன் பிரித்துப் பார்ப்பேன்.  சில வாரங்கள் கழித்து விகடனில் என் கதையும் பெயரும்  மிகச்சிறந்த ஓவியத்தோடு தெரியும் போது, கண்ணீர் அதை மறைக்கும்.  விகடனைத்  தடவித்தடவி பார்த்துக் கொண்டிருப்பேன். என் கதையை நானே மீண்டும் மீண்டும் படிப்பேன்.  தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் கதை பற்றி பாராட்டும் போதும்,  நானும் மீண்டும்   ஒரு முறை படிப்பேன்.  

அப்போதுதான் எழுத்தாளராய்  துளிர் விட்டிருந்த  எனக்கு விகடன்  கொடுத்த ஊக்கம்  மிகப்பெரிய விஷயம்.  அது எனது எழுத்தை மேலும் மேலும் செதுக்கியது.  இத்தனைக்கும் நான் நேரில் ஒரு முறை கூட அங்கு சென்றதில்லை. யாரையும் தெரியவும் தெரியாது.  கண்ணால் காணவில்லை என்றாலும் விகடன் ஆசிரியரும் எனக்கு  ஒரு  கடவுளைப் போலத்தான்.   கடவுள்களுக்கு மரணமில்லை.  அவர் ஒவ்வொரு விகடனிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். 

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இப்படியான நிகழ்வுகளை வாழ்நாளில் கூட மறக்கமுடியாது... நன்றாக சொல்லியுள்ளீர்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

இயல்பான நிகழ்வுகள் என்றுமே நினைவில் நின்று சந்தோசத்தைக் கொடுப்பவை.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Huntsville Home Builders said...

Hi great reaading your blog