Friday, December 10, 2010

பொதிகை மலை உச்சியிலே (பகுதி-இரண்டு)

பொதிகை உச்சியில் அகத்தியரின்
திரு உருவம்.

சங்கு மித்ராவில் சற்று ஓய்வு.சங்கு மித்ரா

எவ்வளவு அடர்த்தியான காடு!அடர்ந்த காட்டில் திறந்த வெளியில், கண்ணிக்கட்டி ஆற்றின் கரை ஓரமாய்
பாறைகளின் மீது எங்கள் முதல் நாள் இரவைக கழித்தது மறக்க முடியாத அனுபவம்தான். பாரிஸ் கார்னரில் மூன்றுக்கு இரண்டு மீட்டர் அகலத்தில் வாங்கிய பிளாஸ்டிக் ஷீட்டின் அருமை அப்போதுதான் புரிந்தது. சென்னையில் சரியான மே மாத வெயில் கொளுத்தும்போது இது வேறு எதற்கு வீண் சுமை என்று நினைத்தபடிதான் அதைக் கொண்டு போனோம். உயரே செல்ல செல்ல அப்படி ஒரு குளிர். கீழே அதைவிரித்து, அதையே அப்படியே மடித்து நம் மீது போர்த்திக் கொண்டால் ஆஹா! சுகம்தான் போங்க.
நாங்கள் படுத்திருந்த பாறை சற்றே சரிவாக இருந்தது. பிளாஸ்டிக் விரிப்பு வேறு. வழுக்குவதற்கு கேட்க வேண்டுமா. படுத்த நிலையிலேயே சற்றே உடம்பு கீழே வழுக்குச் செல்லும். மீண்டும் உந்திக் கொண்டு மேல் நோக்கி நகர்ந்து சரியாய் படுப்போம். மீண்டும் வழுக்கிச் செல்லும். நேரமாக ஆக ஆட்களின் வருகை அதிகமாயிற்று. எங்கள் காலுக்கு கீழெல்லாம் படுத்திருந்தார்கள். வழுக்கிச் செல்லும் போது எங்கள் பாதம் அவர்களை சிரசில் பதிந்து ஆசிர்வதிக்கும். மேலும் மேலும் வழுக்காமலிருக்க அவர்களே தடையாகி விட்டதால் பிறகென்ன சூப்பர் தூக்கம்தான். எட்டுமணிநேரம் நடந்த நடைக்கு அடுத்த நாள் உடல் வலி தெரியாதிருக்க ஒரு குரோசின் போட்டு விட்டுப் படுப்பது நலம்.
அரைத்தூக்கத்திலும் பக் பக்கென்று எதற்கோ சிரித்துக் கொண்டே தூங்கிப் போனோம். மறுநாள் காலைதான் அந்த இடத்தின் ஆபத்து புரிந்தது. அது ஒரு அட்டைக் காடு. நல்ல காலம் மழையில்லாததால் மிக அதிக அளவில் அவை இல்லை. இருப்பினும் பலரது உடம்பில் அட்டை ரத்தம் உறிஞ்சி இருந்தது. நட்ட நடுக் காட்டில் ஆகாசமே கூரையாகஎந்த பயமும் இன்றி எல்லா ஆபத்தில் இருந்தும் அகத்தியர் காப்பாற்றி விடுவார் என்கிற பரி பூரண சரணாகதியில்தான் அனைவரும் அங்கே குறட்டை விட்டுத் தூங்கினோம்.
அங்கேயும் சிலர் புகை பிடித்தார்கள். புருஷோத்தமன் ஒரு சத்தம் போட்டாரே பார்க்கலாம். எவன்டா அவன் சிகரெட் பிடிக்கறது. வெட்டி பலி போட்டா என்ன உன்னை? ஆத்திரமாகத்தான் வந்தது. அடர்ந்த காடு. அக்கினி குஞ்சொன்றைக் கண்டால் வெந்து தணியாதா

மறு நாள் மீண்டும் மலையேற்றம் துவங்கியது. கன்னிக் கட்டி ஆற்றைக் கடந்து ஒரு குறுகல் வழியில் மிகவும் செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது.


பத்தடி ஏறுவதற்குள் மூச்சிரைத்தது. இரண்டு மணி நேர ஏற்றத்தில் பேயாரு குறுக்கிடுகிறது. நடந்த நடையில் உடம்பு வியர்வையில் நனைந்திருந்தது. அங்கே எல்லாரும் குளிக்கலாம் என்றார்கள். ஐஸ் தண்ணீர்தான். சுகமாகக் குளித்து விட்டு உடைமாற்றி, ஈரத் துணிகளை மரங்களில் காய வைத்து விட்டோம். திரும்பி வரும்போது எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். நல்ல ஐடியாதான்.


மீண்டும் மூச்சிரைக்க மலையேற்றம். மணிக்கணக்கில் தொடர்கிறது. கிட்டத்தட்ட 3100 அடி உயரத்தில் இருந்தோம். நடுவில் கல்லாறு குறுக்கிடுகிறது. அங்கே சற்று ஓய்வு. வழியில் மிக அடர்த்தியான மூங்கில் காடு வருகிறது. கோரைப்புற்கள் வேறு. நீல நீலம் மறைந்திருந்தாலும் தெரியாது.


கல்லாறு கடந்ததும் ஏற்றம் மிக மிக கடுமையாய் மாறுகிறது. நிறைய வழுக்குப் பாறைகளைக் கடக்க வேண்டியுள்ளது. வெகு நேர மலைஎற்றத்திற்குப் பிறகு நாங்கள் அடைந்த இடம் சங்குமித்ரா. அந்த இடத்தை அடைந்ததும் ஒரு வினாடி விழி விரிய நின்று விட்டோம். அப்படி ஒரு அழகு. சுற்றிலும் கிடு கிடு பள்ளத்தாக்குகள். கேரளா எல்லையும் தமிழக எல்லையும் இணையும் இடம்.


அப்படி ஒரு காற்று. எங்கள் பொருட்களை பிளாஸ்டிக் விரிப்பில் சிதறி பெரும் பாறைக் கற்களை அதன் மீது வைத்தோம். இல்லாவிட்டால் காற்று தூக்கி எறிந்து  விடும்.


மலையாளிகள் இந்த இடத்தை  பொங்காலப்  பாறை என்கிறார்கள். சமைக்கும் இடம் என்று அர்த்தமாம். ஒரு யானைக் கூட்டம் அப்போதுதான் அங்கே இருந்து விட்டுப் போயிருக்கிறது. அதன் கழிவுகள் சற்று கத கதப்பாகவே இருந்ததால் அப்போதுதான் அவை இடம் பெயர்ந்திருக்க வேண்டும். எதற்கு வம்பு என்று நாங்கள் இடத்தை மாற்றி பொருட்களைக் கொண்டு வைத்தோம்.
சங்கு மித்ராவில் இருந்து பொதிகை மலையின் உச்சியை அடையப் போகும் இந்த கடைசி சில மணித்துளிகள் இந்த யாத்திரையின் உச்சக்கட்ட த்ரில்லிங்கான அனுபவம் எனலாம். ஒரு பிரும்மாண்டமான் வழுக்குப் பாறை வருகிறது. இதன் மீது நிமிர்ந்து நடக்க பெரும் பயிற்சி வேண்டும். கிட்டத்தட்ட நம் முன்னோர்களின் அவதாரத்தை அந்த இடத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியதுதான். புரியலையா? அட கைகளையும் ஊன்றிக் கொண்டு தவழ்ந்து ஏற வேண்டியதுதான். கீழே பார்க்காமல் ஏறுவது உத்தமம்.
பொதிகை உச்சியை எப்போது அடைவோம்? அருகில் வந்தவரிடம் கேட்டேன்.அதோ ஓஒ அந்த ஒரு வழுக்குப் பாறையையும் ஏறி விட்டால் உச்சிதான் என்றார். அவர் காட்டிய இடத்தை பார்த்ததும் அயர்ந்தே போனேன். கிட்டத்தட்ட ஒரு மெகா சைஸ் குழவிக்கல் ஒன்று செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. இதன் மீது எப்படி ஏற முடியும்? அப்பாவியாகக் கேட்டேன். அவர் சிரித்தார்.
பாறையின் அருகில் சென்றதும் சூட்சுமம் புரிந்தது. அந்தப் பாறையில் சங்கிலிகளும் கயிறும் நூலேணி மாதிரி கட்டியிருந்தது. அதைப் பிடித்தபடி பாறையில் அனுபவஸ்தர்கள் இருபுறமும் அமர்ந்து கொண்டு நமக்கு கை கொடுக்கிறார்கள். அந்த கயிறாய் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவர்கள் உதவியோடு ஒரு வழியாக மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏறினோம்.
யப்பா ஆ ஆ ! நான் பொதிகை உச்சியில் நின்றிருந்தேன். சந்தோஷத்தில் அழுகை வந்தது. காற்று நம்மை தள்ளியது. பொதிகைத் தென்றலா அது! அப்படி ஒரு சூறைக் காற்று. விட்டால் நம்மை ஒரே வீச்சில் மதுரை கோபுரத்தில் கொண்டு போய் ஓட்ட வைத்து விடும் போலிருந்தது.
6500 அடி உயரம். அகத்திய மகரிஷி கால் பதித்து பூமியை சமன் செய்த இடம்.
எத்தனையே தேவாதி தேவர்கள் புடை சூழ இன்னமும் அவர் வாழும் இடம். அந்த இடத்தில் நான் நிற்பது கனவா? நனவா? சுற்றிலும் அப்படி ஒரு மூடுபனி. மேகங்கள் உரசிச் செல்கின்றன.
பொதிகையின் உச்சியில் ஒரு அகத்தியர் திரு உருவம் இருக்கிறது. இதற்கு அபிஷேகம் ஆராதனை பாடல்கள் என்று அமர்க்களப் படுகிறது. குழு குழுவாக வந்து அவரை ஆராதிக்கிறார்கள். நாங்கள் கீழே இருந்து குடம் குடமாகக் கொண்டு சென்ற அபிஷேகப் பால் இரண்டு நாட்களாகியும் கெடவில்லை. என்ன அதிசயம்!
பூஜைக்குப் பிறகு மழை பெய்யும் என்றார்கள். அதன்படி சாரல் மழையும் பெய்தது. சற்று நேரம் தான். நின்று விட்டது. ஆராதனைகள் முடிந்து வழுக்குப் பாறைகளில் அதி ஜாக்கிரதையாக இறங்கி சங்கு மித்ராவை அடைந்தோம். அன்றிரவு அங்குதான் படுக்கை. வானத்தில் அடை அடையாய் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள் மின்னின. காற்றான காடு. குளிரில் கைகள் விறைத்துப் போயிற்று. பற்கள் கிடு கிடுத்தன. எனக்கு கயிலாயக் குளிர்தான் நினைவுக்கு வந்தது, அங்கு ஐந்தடுக்கு உடைகளையும் மீறி குளிர் ஊசியாய்த் துளைக்கும். இங்கோ ஒரு ஸ்வெட்டர் கூட உடம்பில் இல்லை. கேட்கவா வேண்டும்?

வாழ்க்கையில் எத்தனையோ இரவுகள் . ஆனால் பொதிகை மலையில் வெட்ட வெளியில் இரண்டு இரவுகள் படுத்துறங்கிய அந்த உறக்கம் இனி கிடைக்குமா என்பது சந்தேகமே.

மீண்டும் இறக்கம். ஏறிய மலை அத்தனையும் ஒரே நாளில் இறங்க வேண்டும். காரையார் அணையில் படகில் திரும்பும் போது, தூரத்தில் தெரிந்த பொதிகை உச்சியும், பஞ்ச பொதிகையும், நாக பொதிகையும் எங்களைவழியனுப்புவதுபோல் தோன்ற என்மனதில் ஞானசம்பந்தனின் பாடல்தான்ஓடியது
.
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி
நல்வினைப் பயனிடை......

நன்றி பொறுமையாய் உடன் வந்ததற்கு.17 comments:

Chitra said...

யப்பா ஆ ஆ ! நான் பொதிகை உச்சியில் நின்றிருந்தேன். சந்தோஷத்தில் அழுகை வந்தது. காற்று நம்மை தள்ளியது. பொதிகைத் தென்றலா அது! அப்படி ஒரு சூறைக் காற்று. விட்டாள் நம்மை ஒரே வீச்சில் மதுரை கோபுரத்தில் கொண்டு போய் ஓட்ட வைத்து விடும் போலிருந்தது.


.....உங்களின் அருமையான எழுத்து நடையில், எளிமையாக, நிகழ்வுகளை பகிர்ந்து - எங்களை ரசிக்க வைத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

R. Gopi said...

அடுத்த வாட்டி போகும்போது என்னையும் கூடிக் கொண்டு செல்லுங்கள்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

தெளிவான விவரங்களுடன் கூடிய அற்ப்புதமான அனுபவப்பதிவு.படிக்கும் போதே மூச்சிறைக்கிறதே,எப்படி உங்களுக்கு உடம்பு ஒத்துழைக்கிறது.

venkat said...

சிறுது காலம் நெல்லை -இல் இருந்தேன். அப்பொழுது காரையாறு மேல் படகில் சென்று அந்த சிறிய நீர் விழ்ச்சியில் ஆசை தீர குளித்தோம். வந்த படகு அதிக நேரம் காத்திருந்து விட்டு அக்கறைக்கு சென்று விட்டது. பிறகு நாங்கள் மறு கறைக்கு வந்தது , ஒரு பெரிய இத்ரிலான அனுபவமாக இருந்தது. உங்களுடைய பதிவு என்னை பின்னோக்கி அசைபோடவைத்துவிட்டது. மற்றும் பொதிகை மலை உச்சிக்கு செல்லாமல் வந்துவிட்டோமே , என்று நினைகவைத்துவிட்டது.

அற்புதமான பயணப்பதிவு.
நன்றி

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கைலாஷ் யாத்திரை குறித்து நான்கு பதிவுகள் வந்திருக்கிறது கோபி. பார்க்கவும்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

தற்போது பாபநாசம் வழியாகச் செல்ல அனுமதிப்பதில்லை. நாங்கள்தான் கடைசியாக அந்த வழியில் சென்றிருப்போம் என எண்ணுகிறேன். ஆனால்
திருவனந்தபுரம் வழியாக ஒரு நாளைக்கு நூறு பேர் என்று அனுமதிப்பதாக அறிந்தேன். அங்கே போய் வனைலகாவிடம் பதிவு செய்து அவர்கள் சொல்லும் நாளில் செல்வதற்கு தயாராயிருக்க வேண்டும் அந்த வழியாகப் பெண்களுக்கு அனுமதியில்லை. அடுத்த முறை வேறு ஏதாவது மலை ஏறும்போது தகவல் சொல்கிறேன்.

raji said...

//பொதிகை உச்சியும், பஞ்ச பொதிகையும், நாக பொதிகையும் எங்களைவழியனுப்புவதுபோல் தோன்ற என்மனதில் ஞானசம்பந்தனின் பாடல்தான்ஓடியது//

அருமையானதொரு பயணக்கட்டுரை முடிந்து விட்டதே

சிவராம்குமார் said...

அருமையான கட்டுரை! இப்போது பொதிகை உச்சிக்கு செல்ல தடை விதித்து விட்டார்கள் என்றாலும் இன்னும் மக்கள் அனுமதியின்றி செல்கிறார்கள் என்றே கேள்வி!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி சிவகுமார். சட்டம் என்று போடப்பட்டாலே அதை மீறுபவர்களும் இருப்பார்கள்

a said...

தங்களோடு பயணித்ததுபோல் உள்ளது......

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சூப்பர்.லேபிளில் அனுபவம்,வாழ்க்கை,நிகழ்வுகள் இந்த 3ல் ஒரு லேபிளை போடவும்.அப்ப்டி செய்தால் தமிழ்மனம் முகப்பில் உங்கள் படைப்புக்கான் லின்க் தோன்றும்.அதிக பேர் பார்ப்பார்கள்.உங்கள் பதிவுக்கான குவாலிட்டீக்கு விழும் ஓட்டும் கமெண்ட்டும் ரொம்ப குறைவு ,என்ன மேட்டர் என பார்த்ததில் நான் கண்டு பிடித்த குறை இது தான்

சி.பி.செந்தில்குமார் said...

அதே போல் உங்கள் பத்திரிக்கை உலக அனுபவம்,நாவல் எழுத தோன்றிய ஐடியா எப்படி கிடைத்தது,எடிட்டர்களுடன் ஏற்பட்ட சம்பஷனைகள் போன்றவற்றை எழுதவும்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி செந்தில்குமார். தங்கள் அறிவுரை பயனுள்ளது. அதன்படியே செய்கிறேன்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வேமன், மனம் ஒத்துழைத்தால், உடல் ஒத்துழைக்கும்.

Subramaniyan D said...

Mikka Nanri

Subramaniyan D said...

I like to join next time. Please inform me in advance. I am in chennai.

-Subramaniyan D

Anonymous said...

பொதிகை அடி இல்லம் திரு புருஷோத்தமன் அவர்களை தொடர்பு கொள்வது எப்படி.