Wednesday, December 1, 2010

மதம் பிடித்தவர்கள்

காட்டிலிருந்து வழி தவறி நாட்டுப்புறம்,
நுழைந்து விட்டன ஜோடி யானை

கூக்குரலோடு பின்னால் ஓடினார்கள்
குழந்தைகள்

தம் வீரம் காட்ட அதன் மீதேற
முயற்ச்சித்தனர் இளைஞர்கள்

விநாயகா! கும்பிட்டனர்
ஒரு சிலர்

யானைகள் ஆடி அசைந்து
அமைதியாய் நின்றிருந்தன

"என்ன செய்யலாம்?" ஒருவர் கேட்டார்
"காவல் துறைக்கு சொல்வோம்"
என்றார் ஓருவர்

நமக்கே இருக்கட்டுமே, கோவிலில்
கட்டி வைப்போம்

"எந்தக் கோவிலில்?"

"இதென்ன கேள்வி? பெருமாள் கோவிலில்தான்"

"ஏன் சிவன் கோயிலில் கட்டினால் ஆகாதோ?"

"எதற்கு தர்க்கம்? இரண்டு யானைகள்
இருக்கையில்?"

"ஒன்று சிவனுக்கு, மற்றது பெருமாளுக்கு!"
தீர்ப்பு சொல்லிற்று ஒரு தலை

மனிதர்களின் மதம் யானைக்குப்
புரியவில்லை
அவை அமைதியாய் அவர்கள்
பின்னே சென்றன

திருநீற்றுப் பட்டையோடு
சிவன் கோயிலில் நின்றது ஒன்று

பெருமாள் கோயிலில் மீண்டும்
ஒரு தர்க்கம்

வடகலையா? தென்கலையா?
இன்னொரு யானை கிடைக்கும் வரை
தர்க்கம் தொடரும்

நாமம், பட்டை எதற்கும் அர்த்தம் புரியாத
யானைகள் ஒன்று மற்றதைத்
தேடிக் கொண்டிருக்கிறது

எந்தக் குறி சுமந்தாலும் யானை யானைதான்
என்பது எப்போது புரியும் மனிதருக்கு

நெற்றியில் குறி சுமக்கும் நாலாம் படியிலிருந்து
எப்போது முதல் படியை நோக்கி ஏறுவார்கள்
இந்த மனிதர்கள் என்பது போல் யானைகள்
அசைந்து கொண்டிருந்தன.



18 comments:

raji said...

மனிதர்களின் மதம் யானைக்கு புரியவில்லை'- அருமையான வரிகள்.

hats off to

R. Gopi said...

நல்ல கவிதை

சிவராம்குமார் said...

அருமையான சமூக சிந்தனை! நல்லா இருக்கு...

Unknown said...

very nice kavithai. great

மனோ சாமிநாதன் said...

ஜாதி, மத தீவிரங்கள் எப்போதுமே மனித நேயத்தை மறக்கச் செய்கின்றன! இதை அருமையாக பிரதிபலிக்கிறது உங்கள் எழுத்து!!

Anonymous said...

really a beautiful story... does anybody realise the face.. hmm.. lets see how

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி மனோ. உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

கதையில் கலக்கும் நீங்கள் கவிதைஉரைநடையிலும் சூப்பரா பண்ணி இருக்கீங்க

சி.பி.செந்தில்குமார் said...

மனிதர்களை விட விலங்குகளிடம் அன்பு அதிகம்

Rekha raghavan said...

அர்த்தமுள்ள அழகான கவிதை.

ஹரிஸ் Harish said...

நல்ல கவிதை..

மனிதர்களின் மதம் யானைக்குப்
புரியவில்லை//
சூப்பர்..

எப்போது முதல் படியை நோக்கி ஏறுவார்கள்
இந்த மனிதர்கள் //
இப்போதைக்கு வாய்ப்பு இல்ல...

நன்றிகள்...

ஹரிஸ் Harish said...

எச்சூஸ்மி..என்ன இண்ட்லில ரெண்டு ஓட்டுபட்டை வச்சிருக்கீங்க..ஒண்ணு கள்ள ஓட்டா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான வரிகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஹரிஸ் எதோ குளறுபடியாகி இரண்டு பட்டை விழுந்து விட்டது. சரி செய்யத் தெரியவில்லை. நம்புங்க கள்ள வோட்டெல்லாம் வாங்குற அளவுக்கு நா என்ன பெரிய ஆளா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த மனிதர்களுக்குள் தான் எவ்வளவு பேதம்?
எப்போதோ படித்த கண்ணதாசன் ஞாபகம் வருகிறது.
அது ஒரு இடுகாடு.
இரண்டு பிணங்கள் கல்லறையிலிருந்து
எழுந்து வந்து சண்டை போட்டு கொள்கின்றன.
அந்த பக்கமாக வந்த ஒருவர் கேட்கிறார்;
“இறந்த பின்னுமா உங்கள் சண்டை ஓயவில்லை?
பிணங்கள்:அது எப்படி அப்பா ஓயும்?
நான் இடது சாரி..அவர் வலது சாரி..புதைப்பவர்கள் மாற்றி புதைத்து விட்டார்கள்,எங்களை!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ராமமூர்த்தி சார். உங்கள் கவிதையும் பிரமாதம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனிதனின் மதம் யானைக்குப் புரிவதில்லை.

யானையின் மதம் மனிதனை விடுவதில்லை.

அதனதன் இடத்தில் அதனது இருந்தால் நிம்மதிதான்.

நல்ல சிந்தனையைத் தூண்டியது வித்யா.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி சுந்தர்ஜி.