Monday, November 24, 2014

மூக்குத்தி பூ மேலே



நேற்று கோயிலுக்கருகில்  ஒரு வயதான பெண்மணியைப் பார்த்தேன்.  வட இந்தியர் போல் தெரிந்தது.  அவர் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்திதான் இந்தப் பதிவுக்குக்  காரணம்.   ஒரு குட்டி தோசைக்கல் மாதிரி வட்டமாக தட்டையாக  அவரது இடது மூக்கு துவாரத்தையே மறைப்பது மாதிரி இருந்தது. .   அவர் அப்படி அணிந்திருந்தது  எனக்கு சிரமமாயிருப்பது போல் தோன்றியது.  அவரைப் பார்த்த பிறகு எனக்கு மூக்குத்தி பற்றி நிறைய நினைவுகள்  ஏற்பட்டன.

கல்யாணத்திற்கு முன்புதான்  நான் மூக்கு குத்திக் கொண்டேன். ஒற்றையாய் ஒரு வெள்ளைக் கல்.     எதிர் வீட்டிலேயே  வெகு நாள் பழக்கமான ஆசாரி இருந்தார்.   முதல் நாள் போய் சொல்லி விட்டு வந்தேன்.  கூடவே வலிக்குமா என்றேன்.  

"எறும்பு கடிக்கறா  மாதிரி இருக்கும் அவ்ளோதாம்மா".

ஓ  அப்போ வலிக்கும்.  எனக்கு எறும்புக் கடியே தாங்காதே.  என நினைத்தபடி அடுத்த கேள்வியைக் கேட்டேன்.  "பேசாம மயக்க மருந்து குடுத்து குத்திடறீங்களா?" 
ஆசாரி   விழுந்து விழுந்து சிரித்தார்.

உனக்கு காதே நான்தான் குத்தினேன்.  அதே மாதிரி வலிக்காம  மூக்கும் குத்திடறேன் சரியா?

மூக்கு குத்துவதற்கு முன்னாடியே எனக்கு வலிப்பது போலிருந்தது.  ராத்திரியெல்லாம் பயம்.


மறுநாள்  என் பெரியம்மாவோடு  சென்று ஆசாரியின் முன்னால்  மூக்கு குத்துவதற்காக உட்கார்ந்திருந்த போது  தொடை நடுங்கியது.

கண்ணை மூடிக் கொண்டேன். அவர் குங்குமத்தில் பொட்டு வைத்து   கை கூப்பி சாமிக்கு பிரார்த்தித்து விட்டு கையை என் முகத்தருகே கொண்டு வரும் போது நான் பின்னால் சற்றே சாய்ந்தேன் பயத்தில்.  அவர் சிரித்தார். மீண்டும் முயற்சிக்க நான் மீண்டும் பின் வாங்க,  மூன்றாவது முறை என் பெரியம்மா என் தலையைப் பிடித்துக் கொள்ள  மூக்குத்தி கம்பி சர்ரென்று என் மூக்கில் இறங்க என் கண்களில் காவேரி பொங்கி வழிந்தது.  

 "நன்னார்க்கு  கேட்டயா?   லட்சணமார்க்கு"  என் பெரியம்மாவின்  முதல் விமர்சனம்.  ஆசாரி கண்ணாடி காட்ட  நல்ல காலம்  ஒரு வழியா முடிஞ்சுதே என்ற ஆஸ்வாசம்தான்  எனக்கு ஏற்பட்டது.

மறு நாள் கண்ணாடியை பார்த்த  போது பரவால்ல நன்னாத்தான் இருக்கு என்று தோன்றியது.

"ஏய் உஷா நன்னார்க்குடி"   என்றாள்  சினேகிதி ஒருத்தி

அழகா இருக்கேனா?

"நா மூக்குத்தியச் சொன்னேன்".  கலாய்க்கறாளாம் .  

கல்யாணத்திற்கு முதல் நாள் என் அப்பா ஒரு எட்டுக் கல் பேசரியைக் கொடுத்து போடச்சொன்னார்.   என் அழகே போய் விட்டாற்  போல் இருந்தது.  எட்டுக் கல் பேசரி போடும் அளவுக்கு எனக்கு அழகான எள்ளுப் பூ மூக்கா கொடுத்திருக்கிறான் கடவுள்?    வேறு வழி?  எதிர்த்துப் பேச பயம். கல்யாணமான பின்னும் ஒரு இரண்டு வருஷம் அந்த  எட்டுக் கல் பேசரியோடுதான் அலைந்தேன்.  

அதற்குப் பிறகு வேலைக்கு போய் முதல்  சம்பளம் வாங்கின பிறகு  நான் செய்த முதல் செலவு  மூக்குத்தி வாங்கினதுதான்.   அதுவும் அப்போது பிரபலமாக இருந்த ஸ்ரீதேவி மூக்குத்தி.  ஸ்ரீதேவியின் இடுப்பெல்லாம் நமக்கு  அமையா விட்டாலும் மூக்குத்தியாவது வங்கி விடுவது என்று வாங்கி விட்டேன்.   அதற்கும் ஒரு மூக்கழகு வேண்டாமா. என் மூஞ்சிக்கு அது சகிக்கவில்லை.    ஒரு வருஷம் கழித்து அதையும் மாற்றி வெறும் ஒற்றைக்கல்  வாங்கி அணிந்தேன். தேவலை என்றிருந்தது.

ஒரு நாள் ஆபீஸ் நண்பர் ஒருவர் என்னை உற்று உற்று பார்க்க என்ன என்றேன்.

உஷா உங்க மூக்குத்தி எங்க  காணும் என்றார்.  நான் அவசரமாய் மூக்கைத் தடவ அதன் கடுகு போன்ற மேற்புறம் உடைந்து எங்கேயோ விழுந்திருக்க,  உள்ளே தாண்டும் திருகும் பத்திரமாயிருந்தது. எப்போது எப்படி அது உடைந்தது என்று புரியவில்லை.   அன்று முழுக்க எல்லாரும் என்னையே பார்ப்பது போல் தோன்றியது.

இப்போது மிகச்சிறிய ஒற்றைக்  கல்  வைர மூக்குத்திதான் பத்து வருடமாய்
மூக்கோடு கிடக்கிறது.   போன வருஷம் எனக்கு உடல் நலம் குன்றி ஒரு பயாப்சி அறுவை சிகிச்சைக்கு அட்மிட் ஆனா போது டாக்டர் மூக்குத்தியைக் கழட்டச் சொல்லி விட்டார். அதோடு அனஸ்தீசியா  கொடுத்தால் அது கரிந்து போவதோடு உனக்கும்  ஆபத்து என்றார்.    அன்று முழுக்க நானும் வித்யாவும் பிரம்ம பிரயத்தனப் பட்டும்  அது அசைவேனா என்றது.  மூக்கு வலித்ததைத்தவிர வேறு பலனில்லை.    என்னைப் பிரிய அதற்கு இஷ்டமில்லை என்பது போல்  கல்லு மாதிரி இருந்தது.  எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  உடம்பில் இரத்தமில்லாததால் ரெண்டு பாட்டில் ரத்தம் வேறு எனக்கு  ஏற்ற ஆரம்பித்தார்கள்.  மூக்குத்தி கழட்ட என்ன வழி என்று புரியவில்லை எனக்கு.

மயக்க மருந்து அளிக்கும் மருத்துவர்  பரிசோதிப்பதற்காக   வந்த போது   நிலைமையைச் சொன்னோம்.   ஒரு நர்சும் வந்து முயன்று பார்க்க அது அவளுக்கும் பெப்பே என்றது. சரி நான் பார்த்த்துக்கறேன் என்றார்.   எனக்கோ கற்பனை கொடி கட்டி பறந்தது. மயக்க மருந்தில் மூக்குத்தியோடு மூக்கும் பற்றிக் கொள்வது போல்  நினைத்து பயந்து கொண்டிருந்தேன்.  நல்ல காலம் டாக்டர் மிக சாமர்த்தியமாய்   எனக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டார். என் மூக்கும் மூக்குத்தியும் பிழைத்தது.

மூக்குத்தி பற்றி நினைக்கும் போது   எனக்கு இன்னும் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.  என் ஆறேழு  வயதில் சாந்தி தியேட்டரில் நடந்தது அது. இப்போது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிப்பேன்.   அடுத்த பதிவில் அதை எழுதுகிறேன்.

Sunday, November 23, 2014

அரசூர் வம்சம்

ஒரு வழியாய்  இரா.முருகனின் "அரசூர் வம்சத்தை  இன்று  வாசித்து முடித்தேன்  . முழுமையான மேஜிகல் ரியலிசம்.    இதற்கு முன்  லா.சா.ரா. வின்  சில மாய யதார்த்தக் கதைகள் படித்திருக்கிறேன்.  லா.சா.ரா.வின் மொழி வளம் தீயைத்தீண்டுவது போலிருக்கும்.   புதுமைப் பித்தனின் கடவுளும் கந்த சாமிப் பிள்ளையும்   கூட இந்த வகைதான். அரசூர் வம்சத்தில் முருகனின் நடை அசைந்தாடும் படகில் அலைகடலில் முன்னும் பின்னும் நகர்வது போல் ஒரு இதமான எளிமையான பிரயாணமாக  இருந்தது.    இதற்கு முன் எத்தனையோ பேர் இது குறித்து எழுதியிருக்கக் கூடும்.  நான் மிகத்தாமதமாகப் படித்திருக்கிறேன்.   என்  பங்காக நானும் இது பற்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

தனக்கு விருப்பமான் ஒரு மாய உலகம் , மாய மனிதர்கள்  இவர்கள்  மூலம், ஒரு வம்சத்தின் வேரைத் தேடி அலையும் முயற்சியின் பலனாக  இது வெளிப்பட்டிருக்கிறது.   படகு  மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. சில நேரம்  அது ராஜாவாயிருக்கும்.  சில நேரம்  நித்ய சுமங்கலி சுப்பம்மா, சில நேரம் சாமிநாதன் எனும் சாமா,  கிட்டாவையன்,  சங்கரன்,  சாவக்காட்டு வேத பிராம்மணன்,  கொட்டக் குடி தாசி,  அந்தரத்தில் மிதந்து  கொடி மரத்தை அசுத்தம் செய்யும் வயசன்,    சிநேகாம்பாளின் கருவிலிருக்கும் சிசு, யந்திரத்தில் கொட்டமடிக்கும் தேவதைகள்   என்று இப்படி பல படகுகள் மூலம் பல புதிர்கள் அவிழ்கின்றன. 


ஒரு வரி கூட விடாமல் உன்னிப்பாகப் படிக்க வேண்டிய புதினம்.   வாசிப்பு சங்கிலியில் ஒரு கண்ணி  விடு பட்டாலும் மீண்டும் பக்கங்களை முன்னோக்கி புரட்ட வேண்டியிருக்கும்.  சில இடங்களில் மீள்வாசிப்பு என்பது இன்றியமையாததாகிறது. 

பனியன் சகோதரர்களின்  வடிமைப்பு  நுணுக்கமாய் புரிந்து கொள்ளப்பட வேண்டிய  ஒன்று.  எதிர்காலத்தின் அலங்கோலங்களும்,  இறந்த காலத்தின் அழகும், பெரு மூச்சுகளும்,  நிகழ்காலத்தின் நிதர்சனங்களும்  அவர்கள் மூலம் கட்டியம் கூறப்பட்டுள்ளன.   கதை நடக்கும் நூற்றாண்டில் இல்லாத  சில பல எதிர்கால கண்டு பிடிப்புகளில் அவர்கள் பயணிப்பது  அவர்களின் வடிவத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறது எனலாம்.  பழுக்காத்தட்டு,  புகைப்படக் கருவி,  ஆபாசப் புகைப்படங்கள்,  மோட்டார் வண்டி,  இந்த வரிசையில் கணிப்பொறியும் எட்டிப் பார்க்குமா என்று  நான் காத்திருந்தேன். 

அரசூர் வம்சத்து  மாந்தர்கள் எல்லாரது  மனசிலும் காமம் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.  இந்த அலை சமுத்திர அலைகளுக்கு நேர்மாறானது. வெளித்தோற்றத்தில் அமைதியும் உள்ளே எந்நேரமும் அலையடிக்கும் காமமுமாக   இவர்கள் அலைகிறார்கள்.   இதுதான் மனித இயல்பாக எல்லா காலத்திலும் இருக்கிறது  என்பதை மறுப்பதற்கில்லை.   யாராவது  சரியான கோணத்தில் யந்திரம் பதித்தால் இது கொஞ்சம் அடங்கி மனசு அமைதியாகுமோ என்னமோ. 

பைத்தியக்காரனாக சித்தரிக்கப் பட்டாலும்  சாமாவிடம்  இருக்கும் உண்மையும்,  அவன் அறிவு தீட்சண்யமும்  புரிந்து கொள்ளப் பட வேண்டிய ஒன்று.  அவனது சுய மைதுனமும் விந்துத்  தெறிப்பும்,  செத்துப் போன மூத்தகுடி பெண்ணுடனான  சம்போகமும்,  எவ்வித அருவறுப்பும் ஏற்படுத்தாமல் அவனை ரசிக்க வைத்திருக்கிறது. முருகனை இதற்காக  பாராட்டத் தோன்றுகிறது. 

இன்று தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யத்திற்கும் அன்றே வித்திடப்பட்டிருக்கிறது.   வாழ்தலுக்காக (survival )  மனிதன் தன்னை எதனோடும் சமன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.  பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, தேவைகளுக்காக வேதம் மாறும் கிட்டாவைய்யன், குரிசு சுமக்கும் அவன்  வாரிசுகள்,   துரைத்தனம் கொடுக்கும் மான்யம் போதாமல்  அரண்மனையின் பகுதிகளை புகையிலை அடைக்க  கொடுக்கும் ராஜா,  வியாபாரத்திற்காக  துருக்கரோடு  கூட்டு சேர்ந்து  கப்பலேறிச சென்று  வெள்ளைக்க்காரிகளிடம்  கற்பிழக்கும் சங்கரன்,   என்று எல்லோருமே இதற்கு சாட்சிகள். 

எண்ணங்களை குவித்து  அதன் அலைகளை வேறொருவருக்கு கடத்துவதன் மூலம் இருந்த இடத்திலிருந்தே செய்ய வேண்டியவற்றை செய்யலாம்   என்ற 
விஷயமும் சரியான சமயத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.   

ஓரிடத்தில் ராஜாவின்  நினைப்பாக இரண்டு வரிகள்  இருக்கும். 

" சீக்கிரம் இதெல்லாம் முடிந்து விடும் என்றது அவருடைய மனம் 
   இது முடிந்து இன்னொண்ணு  ஆரம்பிக்கும் என்றது புத்தி" 

மிக முக்கியமான வரிகள் இவை.   அரசூர் வம்சம் முடிந்து விடுவதில்லை. அதன் மாந்தர்கள்  எல்லா காலத்திலும் வேறு சட்டை அணிந்து,  இருந்து கொண்டே இருப்பார்கள்.  பிறன் மனை குளிப்பதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்..  புதிது புதிதாய் வியாபாரம் செய்வார்கள்.  தாசியின் நினைப்பிலிருப்பார்கள்.  சுய மைதுனம் செய்வார்கள்.  தேவைக்காக வேதம் மாறுவார்கள்.   பனியன்  சகோதரர்கள் அவர்களை எதிர்காலத்துக்கும் நிகழ் காலத்திற்கும்  இறந்தகாலத்திற்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பார்கள்.  

இந்நாவலில்  சம்பவங்களோடு,  மிக மெல்லிய இழையாய் காமமும் புணர்ச்சியும்  நாவல் நெடுக நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால்  கிஞ்சித்தும் முகம் சுளிக்க வைக்காமல்  தன மொழி வளத்தால் நம்மை வியக்க வைக்கிறார் முருகன்.   நிறைய புது வார்த்தைகளை  நான் கற்றுக் கொண்டேன்.  மலையாளம் அறிந்தவர்களுக்கு இன்னும் கூட கூடுதல் சுவாரசியமும் புரிதலும் ஏற்படும்.  ஆனால்  நிச்சயம் அது ஒரு தடையாக இருக்காது. 

குறை என்று ஒன்றுமேயில்லையா?  இருக்கிறது அது  இரா.முருகனுக்கு மட்டும் சொல்லப்படும்.  பலர் காண பாராட்டு,  குறையை தனியே சொல் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் என் மூத்த குடி மக்கள் .

புத்தகம் கிடைக்குமிடம்
கிழக்கு பதிப்பகம்,
ராயபேட்டை,  சென்னை-14






Thursday, November 13, 2014

சுகந்தா காளமேகம்



சுகந்தா காளமேகம்.  தேனும் வெண்ணையும் கலந்து வழுக்கிக் கொண்டு வழியும் அற்புத குரலுக்கு சொந்தக் காரர்.  படாடோபம் கிடையாது. அலட்டிக் கொள்ளத் தெரியாது.   சுத்த சங்கீதம் மட்டுமே பாடத்தெரிந்தவர்.  2006 ல் ஒன்றாக நாங்கள் கயிலாய யாத்திரை செய்தோம் அன்று முதல் ஒரு extended  familiy  போல் ஆகி விட்டவர்.

2008 ல் ஆதி கயிலாய யாத்திரை   சென்று வந்த பிறகு நானும் கவிதாவும் பக்காவாக அந்த யாத்திரையை  ஒரு வீடியோவாக தயாரித்தோம் வீட்டிலேயே.   தமிழில் நானும், ஆங்கிலத்தில் சுகந்தாவும் voice over கொடுத்தோம். அதற்காக வீட்டுக்கு வந்த போது  காலா என்னுமிடத்திலிருந்து புத்தி என்னுமிடத்திற்கு செல்வதற்கான விவரிப்பை அதன் அழகான வர்ணனைக்கு பொருத்தமாகத்  தோன்றுவதாக சொல்லி  சட்டென  மோகன ராகத்தில் அவர் பாடிய அழகு..... hats off  to  Sugandha Kalamegham.   யாம் பெற்ற இன்பம் சங்கீதம் பிடிக்கும் அனைவரும் பெரும் பொருட்டு இங்கே ப்கிர்ந்திருக்கிறேன். 

Sunday, June 8, 2014

முகநூலில் (Facebook )  எல்லாரும்   ஏதோ பத்து பேர் லிஸ்ட் போடறாங்களாமே.  (அவங்கதான் சிறந்த இலக்கிய படைப்பாளியாம்)  நானும் போடப்  போறேன்  ஓடி வாங்க.   அந்த பத்து பேர் யாருன்னா, .... அடடா  முதலாவது   ஆள  அறிமுகப்படுத்தலாம்னு பார்த்தா  தண்ணிய விட்டு வெளிய வந்தாத்தானே?    சரி அதுக்குள்ளே ரெண்டாவதைத்  தேடினா, இவர் நடந்து வர வேகத்துக்கு கலியுகமே  முடிஞ்சுடும் போல இருக்கே!
மூணாவது மனுஷனைக் கூப்ட்டா  சாக்கடைய விட்டு வர மாட்டாராம்.  நாறுதுன்னு  சொன் னா  முறைக்கறார்.     நாலாவது ஆளு கிட்ட போனா, அ டப்பாவி  நேரங்கெட்ட நேரத்துல நர மாமிசமா?  சாவகாசமா ஒரு ஆளோட (மஞ்சா  சோறாம்) எடுத்துட்ருக்கார்.    போங்கடான்னு அஞ்சாவது ஆளப் பார்த்தா,  நின்னு  பேசினாத்தானே? தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு  யார் தலைல கால வெக்கலாம்னு ஓடிட்ருக்கார்.      சரி நீயாவது வாப்பான்னு ஆறாவது மனுஷனைக் கூப்ட்டேன்.  அப்பா சொன்னாத்தான் வருவாராம், அப்பாட்ட உத்தரவு கேளுங்கன்றார்.  படுத்தறயேன்னு  எப்டியாவது ஏழாவதைக் காட்டிடலாம்னு பார்த்தா அவர் பயங்கர பிசி.   பொண்டாட்டியக் காணும்னு    ஊர் ஊரா தேடி அலஞ்சு ட்ருக்கார்.  எ ட்டாவது ஆளு  தம்பிக்காரனுக்கு பாதுகாப்பா கைய கட்டிக்கிட்டு போயிட்டாராம்
தம்பிக்காரன் அப்டி என்ன கிழிக்கறான்னு பாத்தா  சாமி...! அவனப் புரிஞ்சு க்கவே முடியலப்பா.    சுத்தி பொம்பளைங்க.  டான்ஸோ  டான்சு.  ஒரு நேரம் என்னடான்னா   பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறான். இன்னோரு  நேரம்  வாயத்தொறந்தா பொய்யி.  ம்ஹும் இவன் சரிப்பட மாட்டான்.  சரி பத்தாவதையாவது காட்டுன்னு நீங்க கெஞ்சறது  எனக்கு கேக்குது.   அவனைத்தான் நானும் தேடிட் ருக்கேன்,    ஹலோ  மிஸ்டர் நாராயணன்  காதுல விழுந்துதா?  பத்தாவது எப்போ?   ஆச்சா?  இல்ல  இனிமேத்தானா?    பதில சொல்லுப்பா கேக்கறாங்க இல்ல?   ம்ஹும்  சரி  கொறட்ட ! பாம்பணைலயே இந்த தூக்கம்னா, கர்லான்  வாங்கிக் குடுத்தா நாங்க காலி போல்ருக்கே.   அட எங்கயோ குளம்புச் சத்தம் கேக்கறா மாதிரி இல்ல? அஹா  வந்துட்டான் யா வந்துட்டான்! எனக்கு த் தெரிஞ்சு போச்சு. அவனேதான்.  வா ராசா  உனக்காகத்தான் காத்து ட்ருக்கோம்  எம்புட்டு வேல இருக்கு.இங்க?   மொத வேல என்ன தெரியுமா?  தன்னுதுதான்   சூப்பர்   இலக்கியம்னு சொல்லிக்கிட்டு திறியாராங்க பாரு அவிங்ககிட்டேர்ந்து எங்களைக் காப்பாத்துடா சாமி!  மீசைய முறுக்கிட்டு நிக்காம போய்  சொன்னத செய் பார்ப்போம்.  என்னாது?... குதிரை காய்ஞ்சு கிடக்கா?  கொள்ளு வேணுமா? அதுக்கு நா எங்க போவேன்?  இங்க நாங்க திங்கவே அரிசியைக் காணுமாம். நெல்லு வெளஞ்ச நிலத்துலல்லாம்   வீடு மொளச்சிருக்கே பாக்கல?  கொள்ளு கிள்ளு எல்லாம் கேக்கப்படாது. சொன்ன  வேலைய கவனி சொல்லிப்புட்டேன்!  

Saturday, March 22, 2014

கடவுள் விளம்பரம்

நான் ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கிற காலத்தில் எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. ஏதோ ஒரு கடவுளைப் (நினைவில்லை) புகழ்ந்து எழுதி இதை இருபது பேருக்கு நகல் எடுத்து அனுப்பவேண்டும், அப்படிச் செய்தால் ஒரு வாரத்திற்குள் நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தவறினால் இன்றிரவுக்குள் நீ ரத்தம் கக்கி சாவாய் என்று எழுதப் பட்டிருந்தது. அப்படி ஒரு பயம் எனக்கு. என் உண்டியலில் இருந்த காசை மறைத்து எடுத்துச் சென்று போஸ்ட் கார்ட் வாங்கி மாங்கு மாங்கென்று இம்பொசிஷன் போல் அதை எழுதி எனது பள்ளித் தோழிகள் சொந்தங்கள் எல்லோருக்கும் அனுப்பி விட்டு வந்து விட்டேன்.

அன்றிரவு நான் என்னென்ன நினைத்து அவை நடக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் கற்பனை வேறு. எனக்கு நேந்திரங்காய் சிப்ஸ் மிகவும் பிடிக்கும். ஒரு அரை கிலோ எனக்கு வீட்டில் வாங்கித் தர வேண்டும், அதற்கு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது. நான் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெரிய ரப்பர் பந்து காணாமல் போயிருந்தது, அது கிடைத்து விடவேண்டும். கணக்கில் நான் வீக். எனக்கு கணக்கு நன்றாய் வந்து 100க்கு 100 வாங்க வேண்டும். மஹா கவி காளிதாஸின் நாக்கில் காளி எழுதி அவர் கவியாய் மாறியது போல் விடிந்தால் நானும் சரளமாக, ஆங்கிலேயனே வெட்கப்படும் அளவுக்கு ஆங்கிலத்தில் பேசித்தள்ள வேண்டும், என்னோடு டூ விட்டிருந்த என் தோழி என்னிடம் மீண்டும் பேசி விட வேண்டும், நான் கிளாஸ் லீடராக வேண்டும் இப்படி நிறைய விஷயங்கள், நான் 20 பேருக்கு கார்ட் அனுப்பி விட்ட காரணத்தால் ஒரு வாரத்தில் எனக்கு லபித்து விடும் என்ற சந்தோஷத்தோடு தூங்கிப்போனேன்.

அதில் ஒரு தோழி அவளது வகையாக எனக்கே ஒரு கார்ட் எழுதி அனுப்ப, மீண்டும் நான் பயத்தில் உறைந்து போனேன். என் உண்டியலிலும் காசில்லை. அம்மாவிடம் கேட்டால் நிச்சயம் தர மாட்டாள். அவளுக்கு என் கஷ்டமெல்லாம் புரியாது. கடவுளே நான் என்ன செய்வேன் என்று பயத்தில் உறைந்து போனேன். கையாலாகாதவாலாக படுத்துக் கொண்டேன். பாதி ராத்திரி திடுக்கிட்டு எழுவேன். வாயெல்லாம் தொட்டு பார்ப்பேன் ரத்தம் வடிகிறதா என்று. சந்தேகத்திற்கு உள்ளறைக்கு சென்று பீரோ கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும், விடிவதற்குள் நான் ரத்தம் கக்கி செத்து விடுவேன் என்று தூங்காமல் தவித்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அந்த குழந்தைத்தனம் தொலைந்து விட்டதற்காக லேசான வருத்தமும் ஏற்படுகிறது.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் முன்பு போஸ்ட் கார்டில் வந்து பயமுறுத்திய விஷயம் இப்போது முக நூலிலும் தொடர்கிறது. ஒரு புகைப்படத்தை போட்டு அதனை ஷேர் செய்தால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். மனிதர்கள் மாறவே இல்லை. கம்ப்யூட்டர் காலத்திலும் மூட நம்பிக்கை குறையவில்லை.தெய்வத்தை உணர்ந்தவர்களிடம் அதன் மீது அன்பும் பக்தியும் மட்டுமே இருக்கும். பயமிருக்காது.

Thursday, December 5, 2013

மொட்டை மாடி தோட்டம்

நேற்று  கிருஷ்ணமுர்த்தி  மாமா வீட்டிற்கு  அவர் வீட்டு மொட்டை  மாடி தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே  போயிருந்தேன்.    CSK  மாமா  மாமியுடன் 2006 ல் இருந்து  3 முறை  கயிலாயமும்,  ஆதி  கயிலாயமும்  சென்று வந்திருக்கிறேன்.   அவர் வயது 73.   சிறந்த சிவபக்தர்.  விங் கமாண்டர் அக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  முதுமையை எப்படி பயனுள்ளதாய் கழிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

நமது பாரம்பரிய மூலிகைகளின் மீது மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்.    தோட்டக் கலையில் அபார ஈடுபாடு உள்ளவர். மொட்டைமாடியில்  அபூர்வ மூலிகைச் செடிகளையும் இதர செடிகொடிகளையும்  வளர்த்து வருகிறார்.  பார்க்கவே பிரம்மிப்பாய் இருக்கிறது.   நம் ஆரோக்கியத்தை எப்படி  எல்லாம் பேணலாம் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார்.   காலை மாலை நேரங்களில் அந்த செடி கொடிகளுடன் அளவளாவியவாறு  நடை பழகுவது  கூட  தியானத்தின் ஒரு பகுதியாகவே எனக்குத் தோன்றியது.    

ஒவ்வொரு செடியையும்  தன குழந்தை மாதிரி பெருமையுடன் அறிமுகப் படுத்தினார்.  அவரது அன்பில் செழித்து வளர்ந்திருக்கின்றன அந்த குழந்தைகள். மொட்டைமாடியே பசுமையாக இருக்கிறது.  தக்காளி, கத்திரி, அகத்திக் கீரை,  லெமன் கிராஸ்,  அன்னாசி,  சித்தரத்தை,    வில்வம்,   திருநீற்று பச்சை என்று   பல்வேறு மூலிகைகளுமாய்  மொட்டை மாடியே மணம் வீசிக் கொண்டிருக்கிறது.  பெப்பர்மென்ட் செடியின் ஒரு இலையைக் கொடுத்து உண்ணச் சொன்னார். வாயெல்லாம் பெப்பர்மென்ட் வாசம்.

இன்சுலின் செடியின் இலை மெலிதான புளிப்புடன் இருக்கிறது.  சர்க்கரை நோய்க்கு அருமையான மருந்தாம் அது. தினம் ஒரு இலை சாப்பிட்டால் கணையத்தை வலுப்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யுமாம். இன்சுலின் செடியை பல பேருக்கு இலவசமாகவே கொடுப்பதாகக் கூறி எனக்கும் ஒன்று கொடுத்தார்.  கூடவே பெப்பர்மென்ட் செடியும் ஒன்று கொடுத்தார்.   கற்றாழை போல்  அடுத்தடுத்து பெருகி வளரக் கூடியவை என்றும் சொன்னார்.   என் வீட்டில் இரண்டு செடியையும் வைத்து தண்ணீர் ஊற்றி  பேசத் தொடங்கி விட்டேன்.  

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?  என்ற வைர வரிகள் நினைவுக்கு வருகிறது.   நாம் நமது  பாரம்பரிய உணவுகளையும் மருத்துவ மூலிகைகளையும்  மறந்து  விட்டு  நம் கலாச்சாரங்களை மாற்றிக் கொண்டதால்தான்  தமிழகம்  சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி  விட்டது. கேன்சர்  போன்ற உயிர்க் கொல்லி நோய்கள்  நமக்கிடையே பெருகி வருகிறது.  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? . விழித்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே.

                                                                                                                                                            

 எலுமிச்சை 




திருநீற்று பச்சை 

 அகத்திக் கீரை 

செத்தி 

 இன்சுலின் 

கொடி  எலுமிச்சை 

லெமன் கிராஸ் 

மயில் மாணிக்கம் 

நித்ய கல்யாணி 

நித்ய கல்யாணி 

சித்தரத்தை 

அன்னாசி 

தக்காளி 

வாஸ்து செடி 

வில்வம் 



Thursday, October 31, 2013

ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க

மனசுக்குள் ஒரு பெரிய வட்ட மேஜை மாநாடு நடத்தி (எல்லா இருக்கைகளிலும் நானே அமர்ந்து)  ஒரு வழியாய் தீபாவளிக்கு செவன் கேக் செய்வது என்று தீர்மானமாயிற்று.   பிறந்தது முதல் இரண்டே இரண்டு முறை தான் நான் ஸ்வீட்  செய்திருக்கிறேன். (குலாப்ஜாமூனைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை.)    அந்த இரண்டில் ஒன்று தேவி வார இதழில்  வி.ஐ.பி. கிச்சன்  பகுதிக்காக செய்தது.   அப்போதும் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டு செவன் கேக்தான் செய்தேன்.

ரகசியம் என்னவென்றால்  நிருபர் வருவதற்கு முன்பே என் அம்மா கேக்கை செய்து முடித்து விட்டார்.  செய்முறை மட்டும் நான் எழுதிக் கொடுத்து விட்டு கேக்கோடு நின்று ஸ்டைலாக  குடும்பத்துடன் போஸ்  கொடுத்து விட்டேன்.   அதன் பிறகு என் வாழ் நாளில் நான் தீபாவளிக்கு இனிப்பு செய்ததில்லை. என் கணவரோ அம்மாவோதான் செய்திருக்கிறார்கள். நான் கை முறுக்கு மட்டும் அழகாய் செய்து விடுவேன்.   இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த தீபாவளிக்கு  செவன் கேக் செய்யும் ஆசை எதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை.  ஒரு வேளை  என் சின்ன பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் சந்தோஷமோ என்னமோ?   (எல்லோரும் வாழ்த்துங்கப்பா)  செவன் கேக் செய்யப் புறப்பட்டே விட்டேன்.

அடுப்படியில் வேண்டிய சாமான்கள் எல்லாம் ரெடி.  சர்வ லோகங்களிலும் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் அடுப்படிக்கு அழைத்து  கேக் நன்றாக வர ஆசீர்வதிக்க கட்டளை இட்டாயிற்று.  முப்பத்து முக்கோடி தேவர்களையும் விட்டு வைக்காமல் தெய்வங்களுக்கு துணையாய் நிறுத்தி வைத்தாயிற்று.  மனசுக்குள் என் அப்பா, கணவர்   இருவரையும் வணங்கிக் கொண்டு அடுப்பை பற்ற வைத்தேன்.  ஒரு டம்ளர்  கடலை மாவு, ஒரு டம்ளர் பால்,  ஒரு டம்ளர் தேங்காய்த் துருவல், 3 டம்ளர் சர்க்கரை,  ஒரு டம்ளர் நெய்  என அனைத்து (செவன் வந்து விட்டது சரியா?)   சமாச்சாரங்களையும்  ஒன்றாய் கடாயில் விட்டு கலக்கி அடுப்பில் வைத்தேன். 9 என் லக்கி நம்பர் என்பதால் கொஞ்சம் முந்திரியும் ஏலக்கா யும் உடன் சேர்த்துக் கொண்டேன்.

மிதமான தீயில் வைத்துக் கிளறும்போது தோழி ஒருத்தியிடமிருந்து தொலை பேசி என் ஞாபக மறதிதான் ஊரறிந்ததாயிற்றே. அடுப்பை சமர்த்தாக அணைத்து விட்டு   தொலை பேசி விட்டு மீண்டும் பற்ற வைத்தேன்.    பத்து நிமிடத்திற்குள் மற்றொரு போன்.   விகடனிலிருந்து ராம்ஜி அழைத்தார்.  கிரகப்பிரவேச அழபிதழ் கொடுக்க வரலாமா வீட்டில் இருக்கிறீர்களா என்றார்.  இருக்கிறேன் என்றதும் உடனே வருவதாகச் சொன்னார். மறுபடியும் சமர்த்தாக அடுப்பை அனைத்து விட்டு ராம்ஜிக்காக காத்திருந்தேன்.  அவர் வருவதற்குள் அருகிலிருந்த கடைக்கு சென்று இன்னொரு நெய் பாட்டில் வாங்கி வருவதற்குள் ராம்ஜியும் ரகோத்தமனும் வந்து விட்டார்கள்.  அவர்களோடு பல விஷயங்களும் பேசிவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் மீண்டும் அடுப்பை பற்ற வைத்த சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. டெலிபோன் ரிப்பேர் செய்ய  லைன்  மேன்  வந்திருந்தார். உடனே அடுப்பை அணை.

அவர் வேலை முடித்து  செல்ல அரை மணி யாகியது.  மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு கிளற ஆரம்பித்தேன். 15 நிமிடங்களுக்குப்  பிறகும் கொதி வரவில்லை என்னாயிற்று என்று பார்த்தால்  புஸ்ஸ்ஸ்!    கேஸ் தீர்ந்து போயிருந்தது. அட ராமா என்ற படி கேசை மாற்றி மீண்டும் கிளறத் துடங்குவதற்கு  முன் செல்லை சைலன்சில் போட்டேன்.    வாசற்கதவில் பூட்டை தொங்க விட்டேன். ( நான் இல்லையாம் வீட்டில்)   பிறகு முக்கால்  மணியில் அப்பாடா ஒரு வழியாய் செவன் கேக் பக்குவத்திற்கு வர நெய் தடவின தட்டில்  கொட்டி ஆற விட்டு வில்லைகள் போட்டு முடித்த போது நம்ப முடியவில்லை. அட நான்தானா  செய்தேன்?   நன்றி தெய்வங்களே, தேவர்களே, பித்ருக்களே.   இந்த ஸ்டேட்டசை  நம்பாதவர்கள்  புகைப்படத்தைப் பாருங்கள் நம்புவீர்கள்.   ஒரு பெரிய போராட்டமே தெரியும்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள்