Sunday, November 23, 2014

அரசூர் வம்சம்

ஒரு வழியாய்  இரா.முருகனின் "அரசூர் வம்சத்தை  இன்று  வாசித்து முடித்தேன்  . முழுமையான மேஜிகல் ரியலிசம்.    இதற்கு முன்  லா.சா.ரா. வின்  சில மாய யதார்த்தக் கதைகள் படித்திருக்கிறேன்.  லா.சா.ரா.வின் மொழி வளம் தீயைத்தீண்டுவது போலிருக்கும்.   புதுமைப் பித்தனின் கடவுளும் கந்த சாமிப் பிள்ளையும்   கூட இந்த வகைதான். அரசூர் வம்சத்தில் முருகனின் நடை அசைந்தாடும் படகில் அலைகடலில் முன்னும் பின்னும் நகர்வது போல் ஒரு இதமான எளிமையான பிரயாணமாக  இருந்தது.    இதற்கு முன் எத்தனையோ பேர் இது குறித்து எழுதியிருக்கக் கூடும்.  நான் மிகத்தாமதமாகப் படித்திருக்கிறேன்.   என்  பங்காக நானும் இது பற்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

தனக்கு விருப்பமான் ஒரு மாய உலகம் , மாய மனிதர்கள்  இவர்கள்  மூலம், ஒரு வம்சத்தின் வேரைத் தேடி அலையும் முயற்சியின் பலனாக  இது வெளிப்பட்டிருக்கிறது.   படகு  மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. சில நேரம்  அது ராஜாவாயிருக்கும்.  சில நேரம்  நித்ய சுமங்கலி சுப்பம்மா, சில நேரம் சாமிநாதன் எனும் சாமா,  கிட்டாவையன்,  சங்கரன்,  சாவக்காட்டு வேத பிராம்மணன்,  கொட்டக் குடி தாசி,  அந்தரத்தில் மிதந்து  கொடி மரத்தை அசுத்தம் செய்யும் வயசன்,    சிநேகாம்பாளின் கருவிலிருக்கும் சிசு, யந்திரத்தில் கொட்டமடிக்கும் தேவதைகள்   என்று இப்படி பல படகுகள் மூலம் பல புதிர்கள் அவிழ்கின்றன. 


ஒரு வரி கூட விடாமல் உன்னிப்பாகப் படிக்க வேண்டிய புதினம்.   வாசிப்பு சங்கிலியில் ஒரு கண்ணி  விடு பட்டாலும் மீண்டும் பக்கங்களை முன்னோக்கி புரட்ட வேண்டியிருக்கும்.  சில இடங்களில் மீள்வாசிப்பு என்பது இன்றியமையாததாகிறது. 

பனியன் சகோதரர்களின்  வடிமைப்பு  நுணுக்கமாய் புரிந்து கொள்ளப்பட வேண்டிய  ஒன்று.  எதிர்காலத்தின் அலங்கோலங்களும்,  இறந்த காலத்தின் அழகும், பெரு மூச்சுகளும்,  நிகழ்காலத்தின் நிதர்சனங்களும்  அவர்கள் மூலம் கட்டியம் கூறப்பட்டுள்ளன.   கதை நடக்கும் நூற்றாண்டில் இல்லாத  சில பல எதிர்கால கண்டு பிடிப்புகளில் அவர்கள் பயணிப்பது  அவர்களின் வடிவத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறது எனலாம்.  பழுக்காத்தட்டு,  புகைப்படக் கருவி,  ஆபாசப் புகைப்படங்கள்,  மோட்டார் வண்டி,  இந்த வரிசையில் கணிப்பொறியும் எட்டிப் பார்க்குமா என்று  நான் காத்திருந்தேன். 

அரசூர் வம்சத்து  மாந்தர்கள் எல்லாரது  மனசிலும் காமம் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.  இந்த அலை சமுத்திர அலைகளுக்கு நேர்மாறானது. வெளித்தோற்றத்தில் அமைதியும் உள்ளே எந்நேரமும் அலையடிக்கும் காமமுமாக   இவர்கள் அலைகிறார்கள்.   இதுதான் மனித இயல்பாக எல்லா காலத்திலும் இருக்கிறது  என்பதை மறுப்பதற்கில்லை.   யாராவது  சரியான கோணத்தில் யந்திரம் பதித்தால் இது கொஞ்சம் அடங்கி மனசு அமைதியாகுமோ என்னமோ. 

பைத்தியக்காரனாக சித்தரிக்கப் பட்டாலும்  சாமாவிடம்  இருக்கும் உண்மையும்,  அவன் அறிவு தீட்சண்யமும்  புரிந்து கொள்ளப் பட வேண்டிய ஒன்று.  அவனது சுய மைதுனமும் விந்துத்  தெறிப்பும்,  செத்துப் போன மூத்தகுடி பெண்ணுடனான  சம்போகமும்,  எவ்வித அருவறுப்பும் ஏற்படுத்தாமல் அவனை ரசிக்க வைத்திருக்கிறது. முருகனை இதற்காக  பாராட்டத் தோன்றுகிறது. 

இன்று தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யத்திற்கும் அன்றே வித்திடப்பட்டிருக்கிறது.   வாழ்தலுக்காக (survival )  மனிதன் தன்னை எதனோடும் சமன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.  பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, தேவைகளுக்காக வேதம் மாறும் கிட்டாவைய்யன், குரிசு சுமக்கும் அவன்  வாரிசுகள்,   துரைத்தனம் கொடுக்கும் மான்யம் போதாமல்  அரண்மனையின் பகுதிகளை புகையிலை அடைக்க  கொடுக்கும் ராஜா,  வியாபாரத்திற்காக  துருக்கரோடு  கூட்டு சேர்ந்து  கப்பலேறிச சென்று  வெள்ளைக்க்காரிகளிடம்  கற்பிழக்கும் சங்கரன்,   என்று எல்லோருமே இதற்கு சாட்சிகள். 

எண்ணங்களை குவித்து  அதன் அலைகளை வேறொருவருக்கு கடத்துவதன் மூலம் இருந்த இடத்திலிருந்தே செய்ய வேண்டியவற்றை செய்யலாம்   என்ற 
விஷயமும் சரியான சமயத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.   

ஓரிடத்தில் ராஜாவின்  நினைப்பாக இரண்டு வரிகள்  இருக்கும். 

" சீக்கிரம் இதெல்லாம் முடிந்து விடும் என்றது அவருடைய மனம் 
   இது முடிந்து இன்னொண்ணு  ஆரம்பிக்கும் என்றது புத்தி" 

மிக முக்கியமான வரிகள் இவை.   அரசூர் வம்சம் முடிந்து விடுவதில்லை. அதன் மாந்தர்கள்  எல்லா காலத்திலும் வேறு சட்டை அணிந்து,  இருந்து கொண்டே இருப்பார்கள்.  பிறன் மனை குளிப்பதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்..  புதிது புதிதாய் வியாபாரம் செய்வார்கள்.  தாசியின் நினைப்பிலிருப்பார்கள்.  சுய மைதுனம் செய்வார்கள்.  தேவைக்காக வேதம் மாறுவார்கள்.   பனியன்  சகோதரர்கள் அவர்களை எதிர்காலத்துக்கும் நிகழ் காலத்திற்கும்  இறந்தகாலத்திற்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பார்கள்.  

இந்நாவலில்  சம்பவங்களோடு,  மிக மெல்லிய இழையாய் காமமும் புணர்ச்சியும்  நாவல் நெடுக நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால்  கிஞ்சித்தும் முகம் சுளிக்க வைக்காமல்  தன மொழி வளத்தால் நம்மை வியக்க வைக்கிறார் முருகன்.   நிறைய புது வார்த்தைகளை  நான் கற்றுக் கொண்டேன்.  மலையாளம் அறிந்தவர்களுக்கு இன்னும் கூட கூடுதல் சுவாரசியமும் புரிதலும் ஏற்படும்.  ஆனால்  நிச்சயம் அது ஒரு தடையாக இருக்காது. 

குறை என்று ஒன்றுமேயில்லையா?  இருக்கிறது அது  இரா.முருகனுக்கு மட்டும் சொல்லப்படும்.  பலர் காண பாராட்டு,  குறையை தனியே சொல் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் என் மூத்த குடி மக்கள் .

புத்தகம் கிடைக்குமிடம்
கிழக்கு பதிப்பகம்,
ராயபேட்டை,  சென்னை-14