Tuesday, December 23, 2014

புல்லாங்குழல் பட்ட பாடு

"நிவேத்யம்"  என்ற மலையாளப் படம்  வந்திருந்த  சமயம் அது.   "கோலக்குழல் விளி கேட்டோ?" பாட்டுதான் எங்கும்.    ஒன்றிரண்டு வருஷம் அதுதான் என்னுடைய காலர் டியூன் ஆக இருந்தது.   கல்பாத்தி தேருக்காக  நானும் கவிதாவும்  பாலக்காடு சென்றிருந்த சமயம் அக்ரஹாரம் முழுவதும்  புல்லாங்குழல் விற்றுக் கொண்டிருந்த பையன்கள் எல்லாம் கோலக்குழல் பாட்டை வாசித்துதான் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.   அவர்கள் வாசித்த  கோலக்குழல்தான்  காற்று  முழுவதும்  நிறைந்திருந்தது.  

"ஏம்ப்பா எனக்கு இதுல கோலக்குழல் வாசிக்க வருமா?"

அவன் நிச்சயம் வரும் என்றான்.  வராது என்று எனக்குத் தெரியாதாக்கும்..

"அம்மா வாங்கும்மா நா இதே மாதிரி வாசிச்சுக் காட்றேன் உனக்கு"  இது கவிதாவின்  கெஞ்சல். 

பேரக் குழந்தைகளுக்கும் இருக்கட்டும் என்று ஒன்றுக்கு இரண்டாய் வாங்கினேன்.   அதை எடுத்துக் கொண்டு  வீட்டுக்கு வந்து ஊஞ்சலில் சௌகர்யமாய் உட்கார்ந்து  வாசித்தால் வெறும் காற்றுதான் வந்தது. கொஞ்சம் force  கொடுத்தால் வெறும் பிகில் சப்தம்தான்  கேட்டது.  மனசுக்குள் இருந்த   கோலக்குழல்,   இந்த குழலில் வருவேனா என்று அடம் பிடித்தது.     "அது........   இந்த ஊஞ்சல் ஆடிண்டே  இருக்கா....  அதான் வாசிப்பு தப்பறது "

"போதும் போதும்  ஊஞ்சலை குறை சொல்றயாக்கும் குடு அதை"  கவிதா பிடுங்கிக் கொண்டாள்.

நா வாசிக்கிறேன்   நா வாசிக்கிறேன் என்று  வாசலில் இருந்தவர்கள் எல்லாம் கூட தேரை அம்போ என்று விட்டு விட்டு வந்து  ஆளாளுக்கு குழலூத ஆரம்பிக்க,   வராதவர்களிடம் நாங்களே சென்று  கொடுத்து வாசிக்க சொன்னோம்.  எல்லோரும் ப்பிப்பீ என்று  பஸ்ஸில் கண்டக்டர்  விசிலடிப்பது போல் அடித்தார்கள்.  .

கவிதாவும் என் நாத்தனார் Mythili Ganesh ம்  குழலை வாயில் வைத்து  தலையைத் தலையை ஆட்டி  ஏதேதோ ஒலியெழுப்பி குழலால் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இவள் பாட்டுக்கு,  அவள்  எசப்பாட்டு வாசிக்கறாளாம் .  

எம். ஜெயச்சந்திரன்  மட்டும் பார்த்திருந்தால் இனி சினிமா பாட்டில் குழல் சப்தமே வைக்க மாட்டேன் என்று ஓடிப்போயிருப்பார்

" பேசாம அந்த புல்லாங்குழல் விக்கறவன் கிட்ட  போய்  அசிஸ்டெண்ட்டா  சேர்ந்தா ஒரு வேளை  வாசிக்க வந்துடுமோ? "  இது என் நப்பாசை.   ஆக  மொத்தம் அந்த புல்லாங்குழல்கள்  அன்று  எங்களிடம் படாத பாடு பட்டன.  வாயிருந்தும்  அவை  அழவில்லை.   அழுதா  அந்த அழுகை சப்தம்  கூட குழலோசையாதானே வரும்.!  உடனே  நாங்க யாராவது ஹை   நா வாசிச்சுட்டேன் என்று பீற்றிக்கொண்டால்?   பாவம் அது கம்மென்று இருந்தது.

இதெல்லாம்  பொய்யில்லைங்க.   தேர்  பற்றி   நாங்க ஒரு வீடியோ பண்ணி இருக்கோம்னு சொன்னேனே. அதுல இந்த கொட்டமெல்லாம் கூட இருக்கு.

இப்போ எதுக்கு  சும்மா கிடந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்கறேன்னு  யோசிக்கறது  புரியறது.    பாலக்காடுலேர்ந்து திரும்பி சென்னைக்கு வந்த ரெண்டாம் நாள்  டிவில  சானல் மாத்தும் போது எதேச்சையா பொதிகைல என்.எஸ். கிருஷ்ணன் புல்லாங்குழலும் கையுமா நிக்கறார். நாங்களும்  ஆஹா அவர் குழல் வாசிப்பதைப் பார்ப்போமேன்னு பொதிகைலயே  நின்னுட்டோம்.   பி...........ப்பீ       பி.........பீ  

"அம்மா இத விட நா சூப்பரா வாசிச்சேனா இல்லையா மனசைத் தொட்டு சொல்லு?

"கண்டிப்பாடி செல்லம்  உன் வாசிப்பு பெட்டர்தான் போ."

என்.எஸ்.கிருஷ்ணன் வாசித்த நாராசம் கேட்டு  டி.ஏ.மதுரம் கோபமாக வந்து குழலைப் பிடுங்கி அடுப்பில் போடுவார்.  இவர் சோகமாக வெளியில் செல்வார்.

மறுநாள்  மற்றொரு புல்லாங்குழலோடு வந்து வாசிக்க பல்லை நற  நறவென்று கடித்தபடி டி .ஏ.மதுரம் வர,  அதுவும் அடுப்பில் போய்  விழும். இப்படி ஒவ்வொரு குழலாக  அடுப்பில் விழுந்து கரியாக இவர் அடுத்து கொண்டு வரும்  புல்லாங்குழல்  தூக்கவே முடியாத அளவுக்கு மெகா  சைஸில்  இருக்கும்.  இத எப்பிடி அடுப்பில வைப்ப என்பது போல் பார்ப்பார்.  மதுரம் அதையும் உடைத்து அடுப்பில் எறிவார்.  நீ வேணா பாரு நா போய்  புல்லாங்குழல் வாசிக்க கத்துக் கிட்டு வந்து உன் முன்னால வாசிச்சு காட்டல.........என்று சவால் விட்டு செல்வார்.

கிருஷ்ணனை நினைத்து கடும் தவம் இருப்பார்.  பாவம் என்று கிருஷ்ணனும் காட்சி தர இவர்   குழல் வாசிக்கும்  வரம் அருளக் கேட்பார்.   கிருஷ்ணனும்  இதோ தந்தேன் என்பார். பிறகு குழலோடு வீட்டுக்கு  வந்து  வாசிக்க, அந்த வாசிப்பில் மதுரம் மயங்கிப் போவார்.  அதே பெருமையோடு இவர் வெளியில் வந்து வாசிப்பார்.   கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக குழலை வாயிலிருந்து எடுப்பார்.    ஆனால் வாசிப்பு சத்தம்  அவர் வாசிக்காமலே தொடர்ந்து அதிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கும்.  அந்த சப்தத்தை நிறுத்தமுடியாமல் தவிப்பார். ஒரு கட்டத்தில் என்ன கொடுமைடா இது என்பது போல் கிருஷ்ணனை  அழைப்பார்.   நிறுத்து ..நிறுத்து.. இதை..நிறுத்து  ..என்று அலறுவார்.  இனி குழலைத் தொடுவ? என்பது போல் கண்ணன் சிரிப்பான்.  

இந்த நகைச்சுவை கலாட்டாவைப் பார்த்து விட்டு  பாலக்காட்டில் நாங்கள் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு அடித்த  கொட்டத்தையும் நினைத்துக் கொண்டு நாங்கள்  இருவரும் வயிறு வலிக்க சிரித்தோம் அன்று.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "பாரிஜாதம்" என்ற திரைப்படத்தில்தான் இந்த காட்சி. இது போல் நகைச்சுவை காட்சிகள் எல்லாம்  இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  யாரையாவது அடிப்பதும் உதைப்பதும், சுத்தியலைத் தலை மீது விழ வைப்பதும்,  சுடும் தோசைக்கல்லில் உடகாரவைத்து  அவரை அலறிக்கொண்டு ஓட வைப்பதும்தான்  நகைச்சுவை என்று ஆகி விட்டது.

இந்த புல்லாங்குழல் நகைச் சுவை காட்சிகளை யூ டியூபில் தேடித் தேடித் பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை.  யாருக்காவது இது பற்றி தெரியுமா? இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

கீழே கோலக்குழல் பாடலின் இணைப்பு.

https://www.youtube.com/watch?v=XqEwWwgr6rU

  

Monday, December 22, 2014

நம்பிக்கையே அமிர்தம்.

ஒவ்வொரு டிசம்பர் சீசன் வரும்போதும் எனக்கு என் சின்னக்காவுடைய   மாப்பிள்ளையின் நினைவு வரும்.  அவர் ஒரு கடம் மற்றும் மிருதங்க வித்வான்.  இந்த வாத்தியங்களை வாசிப்பவருக்கு விரல்கள் எவ்வளவு முக்கியம் என்று சொல்லத் தேவையில்லை.  சும்மார் பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பு என் அக்கா பெண்,   தன பிறந்த குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார இவர் வாகனம் ஒட்டி இருக்கிறார்.  லஸ்  சர்ச் சாலையில் எதிரில் வந்த டெம்போ டிராவலர் இவர் மீது  லேசாய் மோதிய வேகத்தில்  வண்டியின் handle bar ஐ பிடித்திருந்த இவரது இரு கைகளின் எட்டு விரல்களிலும்  அவை மடங்கும் இடத்திலுள்ள மூட்டுகள் நொறுங்கிப் போயிற்று.    நல்ல காலம் குழந்தைக்கும் என் அக்க பெண்ணுக்கும் ஒன்றும் இல்லை. விரல்களால்தான் வாழ்வே என்ற நிலையில் இரண்டு கைகளிலும் விரல்கள்  இப்படி ஆகிவிட  என் அக்காவும் அவள்   பெண்ணும் மனம் நொறுங்கிப் போனார்கள்.   ஆனால் என் அக்காவின்  மாப்பிள்ளை மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்.

டாக்டர் சுப்பிரமணியம் மட்டும் சளைக்காமல்,  உன்னை சரிப்படுத்தி காட்டுகிறேன் என்று  விரல் மூட்டுகளில் மிகச் சிறிய அளவில் அவை அசையும் வண்ணம்  அதற்குத் தகுந்தார்போன்ற பிளேட் பொருத்தினார்.  வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை. எட்டு விரல்களிலும் அறுவை சிகிச்சை நடந்தது.    அடுத்தவர் உதவியின்றி எதுவும் முடியாது.  ஆபரேஷன் ஆனதும்  அடுத்த நிமிடம் சரியாகி விடுமா ஏன்ன?  அதற்குப் பிறகு அந்த விரல்கள் அசைய வேண்டுமே. physiotherapy  ஆரம்பித்தது.   ஆரம்பத்தில் ஒரு விரலும் அசையவில்லை.  அனால் இவர் விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையை இழக்காமல்  ஒரு ரப்பர் பந்தை கையில் வைத்து மெல்ல பிசைந்து பிசைந்து  அவைகளில் அசைவைக் கொண்டு வந்தார்.    அப்போதும் அவரால் கடம் வாசிக்க முடியுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அவராவது விடுவதாவது.  தன்னம்பிக்கையோடு மிகுந்த இறை பக்தியும் கொண்டவர் அவர்.    கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் கடுமையான  முயற்சி செய்து ஒரு வழியாக  மீண்டும் கடம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்.  இந்த சீசனிலும் கூட அவரது பங்களிப்பு இருக்கிறது.    இருங்கள், இதோடு முடிந்து விடவில்லை விஷயம்.


அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து அதற்கு அதற்கு ஒரு வயசாகும் போது அவர்  குழந்தையின் ஆயுஷோமத்திற்கு அழைப்பதற்காக  என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போதுதான் நான்  கைலாஷ் மானசரோவர் யாத்திரை முடித்து திரும்பியிருந்தேன்.  அவருக்கு மானசரோவர் தீர்த்தமும் அங்கு நடத்திய ஹோம பிரசாதங்களும் கொடுத்து  பேசிக்கொண்டிருந்தேன்.

ஆயுஷோமத்திற்கு இரண்டு நாள் முன்பு என் அக்கா  எனக்கு போன்  பண்ணினாள்.   ஆயுஷ் ஹோமம் கேன்சல்  ஆகியிருப்பதாக சொன்னவளின் குரலில் துக்கம் தெரிய நான் என்ன ஏதென்று விசாரித்தேன். அவள் உடைந்து அழுதாள்.   மாப்பிள்ளைக்கு உடம்பு சரியில்ல.  அட்மிட் பண்ணி இருக்கு. ஆபரேஷன் பண்ணப் போறா என்றாள்   என்னடி பிரச்சனை நன்னாத்தானே இருந்தார் என்றேன்.   "அவருக்கு...    "   அவள் மேலும் அழுதாள். அழுகையினூடே திக்கித் திக்கி அவருக்கு கேன்ஸராம்   என்றாள். அவ்ளோதானே  சரியாப் போய்டப் போறது. எவ்ளவோ ட்ரீட்மென்ட் வந்தாச்சு இதுக்கு இப்போ என்றேன்.

என் நினைப்பு பூராவும் அங்குதான் இருந்தது. மிருத்யஞ்ச மந்திரத்தை இடை விடாமல் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என் வீட்டு கிருஷ்ணனிடம் சண்டை போட்டேன்.  போன வாரம் இதோ உன் முன்னால்  இங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த மனுஷனோடு இப்படி நீ விளையாடலாமா?   நீ என்ன செய்வாயோ தெரியாது  அவர் நல்லபடியாக குணமடைந்து இங்கே வந்து இதே இடத்தில்  உன் முன்னால் மீண்டும்  உட்கார்ந்து என்னோடு பேச வேண்டும். இது வேண்டுதல் எல்லாம் இல்லை. என் அன்புக் கட்டளை என்று கெஞ்சினேன்.   கிட்டத்தட்ட பதிமூன்று  மணிநேரம்  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து  முடிந்தது.     நான் தொலைபேசியில்  அடிக்கடி பேசி தகவல் கேட்டு ஆறுதலும் தைரியமும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அடுத்தநாள்  போஸ்ட் ஆபரேஷன் தியேட்டரில் மீண்டும் பதட்டம்.  சற்றே நினைவு வந்தவர்  வலி தாங்காமலோ என்னவோ தன்மீது சிலந்தி வலை மாதிரி  அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த  மூக்கிலும், கைகளிலும் பொருத்தப்பட்டிருந்த அத்தனை குழாய்களையும்   அரை மயக்க நிலையில் பிடுங்கிப் போட்டிருக்கிறார்.   டாக்டர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளாத  குறையாய்  மீண்டும் அவற்றைப் பொருத்தி விட்டு 24 மணிநேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று  சொல்லி இருக்கிறார்கள்.   என் அத்திம்பேர் சௌந்தர்யலஹரியிலிருந்து  அத்தனை  சுலோகங்களையும் அவர் அருகிலமர்ந்து சொல்லிக் கொண்டிருக்க  24 மணி நேரத்தில் ஒரு முறை கண் விழித்தவர்,   நா வர மாட்டேன் எனக்கு நிறைய வேலையிருக்கு என்று மட்டும்  குழறலாய் சொல்லி இருக்கிறார்.  அவர் யாரிடம் அதைச்சொல்லியிருக்கக் கூடும்?   நிச்சயம் அவருக்கும் எமனுக்கும் இடையேயான வாக்குவாதத்தின் கடைசி வரியாகத்தான் இருக்கக் கூடும்.

எமன் தற்காலிகமாக  பின்வாங்கி நகர அவர் நல்லபடியாய் கண்விழித்தார்.  ராகவேந்திரன் என்னை கைவிட மாட்டான்னு நம்பினேன், கைவிடல  என்றிருக்கிறார் மனைவியிடம்.   மிகப் பெரிய அறுவை சிகிச்சை அதைத் தொடர்ந்த கீமோ என்று படாத பாடு பட்டது அந்தக் குடும்பம்.   இதற்கு நடுவில் அடுத்த செக்கப்பில் மேலும் சில பகுதிகளில் நோயின் தாக்கம் இருப்பதாக டாக்டர்கள் சொன்னதோடு மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள்   மிஞ்சிப்போனால் இன்னும் நாற்பது நாட்கள்  அவர்  உயிருடன் இருப்பார் என்று  சொல்லி கிட்டத்தட்ட கை விட்டு விட்டார்கள்.

 என் அக்கா என் வீட்டுக்கு வந்த  போது  அன்றிரவு  என் வீட்டு  மொட்டை மாடியில்  வைத்து   இதைச் சொல்லி  குழந்தை மாதிரி அழுதாள். நான் உடனே சொன்னேன்,  இதை  யார் சொன்னது டாக்டர்தானே? கடவுள் இல்லையே?  டாக்டர் என்பவர் தனது பரிசோதனையின் முடிவில் தான் ஊகித்ததைச் சொல்கிறார் அவ்வளவே.   ஆனால் கடவுள் அம்முடிவுகளை மாற்றக் கூடிய சர்வ  வல்லமை கொண்டவர்.    நாம் திரௌபதியைப் போல் கை தூக்கி வேண்டுவோம்.  நீதான் கதி என்று அவனை கெட்டியாய்ப் பிடித்துக்கொள்வோம்.    தவிர உன் மாப்பிள்ளைக்கு இருக்கும் தன்னம்பிக்கைக்கு அவருக்கு ஒன்றும் ஆகாது.  அவரை அவ்வளவு சீக்கிரம் எமனால் நெருங்க முடியாது என்று  தைரியம் சொன்னேன்.

என் அக்கா கிளம்பிப் போனதும்  மீண்டும் கிருஷ்ணனோடு சண்டை.  உன்னை விட மாட்டேன் என்றேன்.   என் அக்கா மாப்பிள்ளைக்காக,  கோவில் கோவிலாக ஏறி இறங்கினேன்.  தன்வந்திரிக்கு எண் ணெய்  அபிஷேகம் செய்து செய்து கொடுத்தனுப்பினேன்.  உச்சக் கட்டமாக அவருக்காக பொதிகை மலை ஏறி வருவதாக வேண்டிக் கொண்டேன்.  அது மிகவும் கடினமான ஒரு மலை ஏற்றம்.  இரத்தம் குடிக்கும் அட்டைக்காடுகளின் வழியே மூன்று நாள் கடும் காட்டில் மலையேறி,   6200 அடி உயரத்தில் உள்ள அகத்தியரை தரிசிப்பது அவ்வளவு சுலபமல்ல.   அதுவும் கடைசி STRETCH  மிக மிக கடினம். சங்கிலியைப் பிடித்து தொற்றிக்கொண்டு தான்  குழவிக்கல் போல் நேராக நின்ருக்கும் ஐம்பதடி பாறையை ஏற வேண்டும்.  கடும் குளிர்க் காற்று  வீசி நிலை குலைய வைக்கும்.  நான் எதையும் சட்டை செய்யவில்லை. எனக்கேற்பட்ட நிலை என் அக்கா பெண்ணுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே ஒரு பிரார்த்தனையோடு   அகத்தியர் அருளால் ஒரு வழியாய் ஏறினேன்.  அவரருளால் அவரை தரிசித்தேன்.   என்னுடன் வந்தவர்கள் எல்லோரும் அங்கே அவருக்காக வேண்டிக் கொண்டனர்.

அதன் பிறகு நெல்லையப்பர் கோயிலில் வேறொரு விஷயம் எனக்கு சொல்லப்பட்டது.  அங்கே  காந்திமதியம்மன் சந்நிதிக்கு முன்  ஒரு குழி உள்ளது. ஸ்ரீ சக்கர குழி என்றார்கள். அதில்  நம் மூலாதாரத்தை  நடுவில் வைத்து அமர்ந்து அம்மனிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேற்றப் படும் என்றார்கள்.  நான் உடனே அதில் அமர்ந்து என் அக்கா மாப்பிள்ளையைக் காப்பாற்றக் கோரி வேண்டிக் கொண்டேன்.  பிறகு சந்நிதி சுற்றி வரும்போது இன்னொரு அதிசயம் நடந்தது.

பிரகாரத்தில்  ஒரு மரம் இருந்தது. அதனை சுற்றி தொட்டி மாதிரி மேடை கட்டி இருந்தது. அதிலிருந்து எல்லோரும் ஏதோ  எடுத்துச் சென்று கொண்டிருக்க நான் ஒருவரிடம் என்னவென்று  விசாரித்தேன்.  இது புற்று மண் அம்மா.  எவ்வளவு எடுத்தாலும் குறையாது வந்து கொண்டே இருக்கும்.  இதை நீரில் ஒரு சிட்டிகை போட்டு குடித்தாலும் போதும் புற்று நோய்  போய் விடும் என்று நம்பப் படுகிறது.  என்றார்.  எனக்கு கண் கலங்கி விட்டது.  என் தேவைக்கேற்ப அங்கங்கே வழிகள் தெரிய நான் ஒரு பிளாஸ்டிக் கவரில் நிறையவே புற்று மண்ணை எடுத்துக் கொண்டேன். ஊருக்கு வந்து அதையும் கொடுத்தனுப்பினேன்.   அவருக்காக எனது கயிலாய நண்பர்கள் பல சமயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

எந்த ஒரு நோய்க்கும்  வெளியிலிருந்து  கொடுக்கப் படும் மருந்தை விட மிகப் பெரிய மருந்து நமக்குள் இருக்கும் நம்பிக்கைதான். நம்பிக்கையின்றி மருந்தைக் குடித்தாலும் அது செயல்படாது போய்விடும்.  நம்பிக்கையுடம் விஷத்தையே குடித்தாலும் அது மருந்தை மாறிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  என் அக்கா மாப்பிள்ளையிடம் நம்பிக்கை என்பது வற்றாத கங்கையைப் போல்  பெருகிக் கொண்டிருந்தது.  நான் இப்போது மரணிக்க விரும்பவில்லை என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  அவரது பிடிவாதத்திற்கும், நம்பிக்கைக்கும், அவருக்காக எல்லோரும  செய்து கொண்டிருந்த  பிரார்த்தனைக்கும் மனமிரங்கி தெய்வம் மார்க்கண்டேயனுக்கு உதவினாற் போல் இவருக்கும் உதவியது.    இது வெறும் பிரார்த்தனையால் மட்டுமேநிகழ்ந்த அதிசயம் அல்ல.  நோயாளிக்கு நம்பிக்கையில்லாத இடத்தில் பிரார்த்தனைகளுக்கு பயனிருக்காது.

தனக்கு இன்னும்  நாற்பதே நாள்தான் என்ற நிலையை  அவர் தனது  தன்னம்பிக்கையால்தான்   மாற்றிகே கொண்டார்.  இதோ இன்று வரை அதே  தன்னம்பிக்கையோடு வளைய வந்து கொண்டிருக்கிறார்.   எனக்கு என்ன ஒரு கஷ்டம் வந்தாலும் இவரை நினைத்துக் கொள்வேன். என் மனம் வலுப்பெற்று விடும்.

இப்போதும்  கூட நான்  முகமறியாத புற்றுநோயாளிகளுக்காக வேண்டிக் கொண்டு,  மானசீகமாய் ஒரு முறை பொதிகை ஏறி அகத்தியரிடம் அவர்களுக்காக பிரார்த்தித்து வருகிறேன்.  தவிர அந்த ஸ்ரீ சக்ர குழியிலும் மானசீகமாய் அமர்ந்து யாராக இருந்தாலும் இந்நோயிலிருந்து காத்து விடு தாயே என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.   உங்களாலும் இது முடியும் நண்பர்களே.   இந்த நிமிடம் எத்தனையோ பேர் தவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக   தினமும் பிரார்த்திப்போம்.  நம் பிரார்த்தனையின் சக்தி கேன்சர் எனும் கொடிய நோயை  இந்த உலகை விட்டே ஒழித்து, இல்லாது ஆக்க வேண்டும்.   அதே நேரம் நோயாளிகளும் நம்பிக்கையோடு இருப்பது அவசியம்

நம்பிக்கை.....நம்பிக்கை....  நம்பிக்கைதான் அமிர்தம். அருமருந்து! .  கற்பக விருக்ஷம் வேறெங்கும் இல்லை. அது  நமக்குள்தான் இருக்கிறது  நாம் கேட்டதை அளிப்பதற்கு.  .எத்தகைய இடர் வரினும் நம்பிக்கையை மட்டும் இழக்காதிருப்போம்.     நம் நம்பிக்கை,  கடவுளைக் கூட தன்  முடிவைக் மாற்றிக்  கொள்ளச்  செய்து விடும் சர்வ சக்தி கொண்டது.  

Friday, December 19, 2014

விகடன் கடவுள்

ஒரு டஜன் சிறுகதைகள் வரை எழுதியிருப்பேன் ஆனந்த விகடனில்.  விகடனுக்கென்று பிரத்யேகமாக  எழுதி,  நம்பிக்கையுடன் தபாலில்தான் அனுப்பி வைப்பேன்.   ஒன்றிரண்டைத் தவிர  அத்தனையும் பிரசுரமாகி இருக்கிறது.   அனுப்பி விட்டு காத்திருக்க வேண்டும். சில நேரம் ஏழெட்டு மாதம் கூட ஆகும் முடிவு தெரிய.  " உங்கள்  சிறுகதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இக்கதையை வேறு எந்த பத்திரிகைக்கும் அனுப்பவில்லை என்பதை உடன் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" .  இப்படி ஒரு கடிதம் வரும்  போது அன்று முழுக்க என் கால்கள் தரையில் இருக்காது. 

உறுதி மொழி கடிதம் அனுப்பிய பிறகு வாரா வாரம் விகடன் வந்ததும் ஆவலுடன் பிரித்துப் பார்ப்பேன்.  சில வாரங்கள் கழித்து விகடனில் என் கதையும் பெயரும்  மிகச்சிறந்த ஓவியத்தோடு தெரியும் போது, கண்ணீர் அதை மறைக்கும்.  விகடனைத்  தடவித்தடவி பார்த்துக் கொண்டிருப்பேன். என் கதையை நானே மீண்டும் மீண்டும் படிப்பேன்.  தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் கதை பற்றி பாராட்டும் போதும்,  நானும் மீண்டும்   ஒரு முறை படிப்பேன்.  

அப்போதுதான் எழுத்தாளராய்  துளிர் விட்டிருந்த  எனக்கு விகடன்  கொடுத்த ஊக்கம்  மிகப்பெரிய விஷயம்.  அது எனது எழுத்தை மேலும் மேலும் செதுக்கியது.  இத்தனைக்கும் நான் நேரில் ஒரு முறை கூட அங்கு சென்றதில்லை. யாரையும் தெரியவும் தெரியாது.  கண்ணால் காணவில்லை என்றாலும் விகடன் ஆசிரியரும் எனக்கு  ஒரு  கடவுளைப் போலத்தான்.   கடவுள்களுக்கு மரணமில்லை.  அவர் ஒவ்வொரு விகடனிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். 

Wednesday, December 17, 2014

குசேல தினம்

இன்று  தனுர் மாதத்தின் முதல் புதன் கிழமை.  இது குசேல தினம்.  குசேலன் ஒரு பிடி அவலோடு  தன பால்ய தோழன் கிருஷ்ணனை  சந்திப்பதற்கு துவாரகைக்கு சென்ற தினம்.   குருவாயூரில் இன்று மிகவும் விசேஷமான நாள்.   கிருஷ்ணனுக்கு அவல்  நெய்வேத்தியம்  சிறப்பாக நடக்கும்.  அவல்  சமர்ப்பணமும்  செய்யப்படும்.   ஒரு பிடி அவலோடு  என் மனசும்  அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது .  என் கர்ம வினைகளை எல்லாம்  ஒரு பிடி அவலாக்கி,   கட்டி எடுத்துக் கொண்டு அவன் காலடியில் சமர்ப்பிக்க அலைந்து கொண்டிருக்கிறேன்.

இந்த சமர்ப்பணம் பொன்னும் பொருளும், மாட மாளிகையும்  யாசித்தல்ல.   அவன்  திருமுடி பீலியில் ஒரு இழையாய், பாதத்தில் ஒரு பூவிதழாய்,  அபிஷேக நீரில் ஒரு துளியாய்,  அந்த மதிலக சுற்று விளக்குகளில் ஒரு விளக்காய்,  கொட்டிக் கிடக்கும் மஞ்சாடி மணிகளில் ஒரு மணியாய்,  பால் பாயசத்தில்  துளி இனிப்பாய்,  ஏற்றுக் கொள்ளக் கோரும் யாசகம். எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதற்கெல்லாம்.!  செய்திருக்கிறேனா?  இன்னும் எத்தனை ஜென்மம் காத்திருக்க வேண்டும் இதற்கு!

வறுமையில் வாடும் குசேலன்

  பால்ய தோழர்கள்


துவாரகைக்கு அவல்  பொதியோடு செல்லும் குசேலன்


 குசேலனை வரவேற்கும் கிருஷ்ணன்

     நண்பனைக்  கட்டி அணைக்கும் கண்ணன்

 
 அவல்  பொதியைத தானே எடுத்துக் கொள்ளும் கிருஷ்ணன்



கால் அலம்பி மரியாதை செய்யும் மாயவன்

   மஞ்சாடி கண்ணன்


  ஹரே கிருஷ்ணா.  குருவாயூரப்பா!

Thursday, November 27, 2014

லூர்து மேரி - பகுதி 2

மீண்டும் லூர்து மேரி.      முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும் லூர்து மேரிக்கு.   அவள் புத்திசாலிதான். தான்  புரிந்து கொண்டதை அவளுக்கு சரியாய் விளக்க மொழியறிவு போதுமானதாக இல்லை என்பதுதான் அவளது ஆரம்பகால பிரச்சனையாக இருந்தது.   ஆங்கிலம்  தமிழ் தவிர  இதர பாடங்களில் அவள்  எழுத்துப் பிழையுடனோ இலக்கணப் பிழையுடனோ எழுதினாலும் கூட, அவளது விடை, அவளது புரிதலை வெளிப்படுத்துவதாக இருந்தால்  அவளுக்கு மதிப்பெண் அளிக்க தயங்க மாட்டார் ஆசிரியை. போகப் போக தமிழ் மொழி வந்து விடும் என்பதால் அவளை ஊக்குவிக்க மதிப்பெண்களை அளித்து விடுவார்.

ஆனால் தமிழ் பாடத்தில் அப்படி மதிப்பெண் அளிப்பது சரியாகாது என்பதால் அவள் ஒற்றை இலக்கத்தில்தான் மதிப்பெண் பெறுவாள்.  நீ விரைவில் தமிழ் மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் கற்க வேண்டும்  என்று லேசாய் மிரட்டுவது போல் சொல்லுவார்.

லூர்து மேரிக்கு தமிழ் மொழி கற்க இந்த மிரட்டு என்றால் எனக்கு ஆங்கிலப் பாடத்திற்கு மிரட்டல் இலவசம்.  அவள்  ஆங்கில பரீட்சையின்   திருத்திய விடைத்தாள் வாங்கும் போது  நெஞ்சு நிமிர்த்தி  நடந்து செல்வாள்.  நான் தமிழ் விடைத்தாள் பெறும் போது  ரொம்ப பெருமையாக செல்வேன்.

ஒரு முறை டீச்சர்  என் ஆங்கில மதிப்பெண்ணுக்கு எல்லோர் முன்னாலும் என்னை திட்ட நான் லஞ்ச்  சாப்பிடக் கூட செல்லாமல் உர்ரென்று உட்கார்ந்திருந்தேன். .  "எல்லா காளியும் வாங்க   என் நாக்குல எழுதுங்க. நான் சூப்பரா எல்லா பாஷையும் பிளந்து கட்டணும்.  அப்டி செய்தா எல்லா பாஷைகளிலும்  உம்மேல கவிதையா பாடறேன்  சரியா?  காளியோடு பேரம் பேசினேன்.  காளி  இடத்தை காலி செய்து கொண்டு ஓடிப் போயிருப்பாள். அதற்கு பதில்  லூர்து மேரி என்னிடம் வந்தாள் .  ஐ வில் டீச் யு இங்க்லீஷ்  என்றாள்.   இந்த நாலு வார்த்தைக்கே நான்,  என்னமா பேசறா இவ என்று  வாய் பிளந்தேன்.  நான் உடனே இ வில் டீச்  யு  தமிழ்  என்றேன் அவள் வார்த்தைகளிலேயே தமிழை மட்டும் சேர்த்து.  ஆஹா  நானும் என்னமாய் இங்கிலீஷ் பேசறேன்!

அடுத்த நாள் அவள் மத்தியானம் அரைமணி எனக்கு ஆங்கிலமும் நான் சாயங்காலம் அரைமணி அவளுக்கு தமிழும் கற்றுக் கொடுத்தோம். அவள் உடைத்த தமிழில் பேசக் கற்றாள் . என்னை கலாய்க்க வேண்டுமென்றால் வேகமாக மலாயில் பேசிக் கொல்லுவாள். .

அரைப்பரீட்சைக்குள் லூர்து மேரி நன்றாகவே தமிழில் உரையாடத் தொடங்கி விட்டாள்  எனலாம்.   வேறு வழி.  சுற்றிலும் தமிழாறு ஓடிக் கொண்டிருந்தால் அவளென்ன செய்வாள்?   கற்க வேண்டிய கட்டாயம்.  வட  இந்திய சினிமா  நடிகை மாதிரி  திக்கி திக்கி பேசுவாள்.  அதுவும் இனிமையாகவே இருக்கும்.  போறாததற்கு தமிழ் பாடத்தில் நான் வேறு அவளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அரைப் பரீட்சை வந்தது.   தமிழ் பரீட்சையன்று  லூர்து மேரி படு சீரியசாகவும் வேகமாகவும் எழுதுவதை வியப்புடன் பார்த்தேன்.  பரீட்சை முடிந்து என் விடைத்தாள்களை குண்டூசியால்  இணைத்து குத்தி  மடித்து என் பெயரெழுதி டீச்சரிடம் கொடுத்து விட்டு வேகமாக வகுப்புக்கு வெளியில்வந்து விட்டேன். அரை நாள் அதுவும் கடைசி பரீட்சை என்பதால் ஹாலிடே மூடில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

லீவு முடிந்து மறுபடியும் ஸ்கூல் துடங்கியது. ஒவ்வொரு பேப்பராக மதிப்பெண்களோடு கொடுக்கப் பட்டது.  நல்ல காலம் என் ஆங்கில மதிப்பெண் 45. சந்தி  சிரிக்கவில்லை.    லூர்து மேரிக்கு நன்றி சொன்னேன்.  அடுத்து தமிழ் பேப்பர்.  லூர்து மேரி  எண்பதுக்கு மேல் வாங்கியிருந்ததாலள்.  டீச்சர்  கை தட்ட சொன்ன போது   லூர்து மேரியின் முகம் சூரியனை விழுங்கினாற்போல் ஜொலித்தது. எனக்கு சந்தோஷமாகவே இருந்தது.  . அந்த சந்தோஷம் என் மார்க்கை பார்க்கும் வரைதான்.  நான் 60 க்கும் கீழ் வாங்கியிருந்தேன். என் முகம்  சந்திரனை தொலைத்த வானம் போல் இருண்டு விட்டது.  சத்தியமாக நான் எதிர்பார்த்ததை விட இது மிகவும் குறைவு.  எப்படி குறைந்தது டீச்சரிடம் கேட்கும் தைரியமில்லை.  அன்று முழுக்க நான் அசோகா வனத்து சீதை போல் துயரத்திலாழ்ந்திருந்தேன்.

விடைத்தாள்களில் அப்பாவின் கையெழுத்து வாங்க வேண்டும்.  எல்லாவற்றிலும் பாஸ் என்பதால் என் அப்பா கையெழுத்து போட்டு விட்டார். அடுத்த நாள் ஸ்கூலுக்கு வந்த லூர்து மேரி பிரேயருக்கு முன்பே என்னை அழைத்துக் கொண்டு தமிழ் டீச்சரிடம் போனாள்.  என் விடைத்தாள்ள கடைசி நாலு பக்கம் என்னுதில்ல. உஷாவுது. அது பறந்து கீழ விழுந்திருக்கு.  அது என்னுதுன்னு நினைச்சு நா  எடுத்து என் பேப்பரோட குண்டூசி குத்தி கொடுத்திட்டேன்.  என்று டீச்சரிடம் காட்ட நான் திகைத்துப் போனேன். நாலு பக்கங்கள் குறைத்திருப்பதை நான் எப்படி கண்டு பிடிக்காமல் போனேன்  என வெட்கமாக இருந்தது.  டீச்சர் வெகுவாக லூர்து மேரியை பாராட்டி அந்த நாலு பக்கத்து மதிப்பெண்களை அவளுடையதிலிருந்து கழித்து  என்னுடையதோடு கூட்டி எனக்கு மதிப்பெண் போட்டு விட்டு  எங்கள் இருவரையும் பார்த்தால்.

இனிதான் கிளைமாக்ஸ்.  உஷா நீ உன் பேப்பரை சரிபார்க்காம பறக்க விட்டுட்டு  குண்டூசி  குத்தினது தப்பு.  இதனால் உனக்கு அஞ்சு மார்க் மைனஸ். லூர்து நீ இதை கண்டு பிடிச்சு உன் மார்க் குறைஞ்சாலும் பரவால்லன்னு எங்கிட்ட வந்து இதைச் சொன்ன பார் அதனால உனக்கு  அஞ்சு மார்க் போனஸ். என்றாள். அது நியாயமாகவே பட்டாலும்,  கையெழுத்து வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல்  நீங்கள் எப்படி பேப்பர் திருத்தினீர்கள் என்ற என் கேளிவி, தைரியமில்லாத காரணத்தால் எனக்குள்ளேயே செத்துப் போயிற்று.

லூர்து மேரியும் நானும் ரொம்ப சிநேகமாகி விட்டோம்.  அனால் முழு பரீட்சை முடித்த கையேடு அவளை  அவள் அப்பா  டிசி  வாங்கி அழைத்துச் சென்று விட்டார்.    வகுப்பில் எல்லாருமே அவள் போவதற்காக வருத்தப் பட்டார்கள். நான் நிறைய.  ஆனால் அவள் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக கிளம்பி விட்டாள் . சொந்த பந்தங்களோடு இருக்கப் போகும் சந்தோஷமாயிருக்கக் கூடும்.

இத்தனை காலம் கழித்து   ஏதோ ஒரு குழந்தையால் லூர்து மேரியின் நினைவு வந்தது வியப்பாயிருக்கிறது.   லூர்து மேரி எங்கிருக்கிறாய் நீ.?  என்னை உனக்கு நினைவிருக்கிறதா?  தமிழ் பேசிக் கொண்டிருக்கிறாயா  இல்லை மறந்து விட்டாயா தமிழையும்?

lலூர்து மேரி - பகுதி 1

நேற்று அபிராமபுரத்திலிருந்து  நடந்து வரும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. அந்த நேரம் எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது. அந்த காட்சி என்ன என்பதை  கடைசியில் சொல்கிறேன். முதலில் லூர்து மேரியைப் பற்றி.

நான்  ஏழாவது வகுப்பில் படிக்கும்போது.  அவள் புது அட்மிஷனாக வந்து சேர்ந்தாள்.    நான் கடைசி பெஞ்ச்.   லூர்து மேரியை  எனக்கு துணையாக என் பக்கத்தில் உட்காரச்சொல்லி அனுப்பினார் டீச்சர்.  இந்திராகாந்தி மாதிரி நீண்டு கூர்மையான மூக்கு, சின்ன கண்கள், மெலிந்த தேகம்,   குச்சி குச்சியாய் ரெட்டை சடை.  டக் டக்கென்று  செருப்புகள் சப்திக்க என்னருகில் வந்து உட்கார்ந்தாள்.   ஆரம்பத்தில் சட்டென்று பேச ஒரு தயக்கம்.   அவளும் பேசவில்லை. நானும் பேசவில்லை.    பிறகு மெதுவாக பேரென்ன என்றேன். என்னை முறைத்து பார்த்து விட்டு லூர்து மேரி என்றாள்.  என் பேர் உஷா என்றேன் அவள் கேட்காமலே.   இதுக்கு முன்னாடி எங்க படிச்ச? எனது அடுத்த கேள்வி இது.   அதற்கு அவள் சொன்ன பதில் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. என்ன சொன்ன?    மறுபடியும் கேட்டேன். அவள்  மீண்டும் அதைத் திரும்பச் சொன்ன போது அது நிச்சயமாகத் தமிழ் மொழி இல்லை என்பது புரிந்தது.  இது என்ன மொழி என்று கேட்டாலும் அவள் சொல்லப் போகும் பதில் எனக்கு புரியுமா என்பது சந்தேகம்.

ஏற்கனவே என் நெருங்கின சிநேகிதியையும் என்னையும்  சேர்ந்து உட்கார விடாத வருத்தத்தில் இருந்த எனக்கு இப்படி பாஷை தெரியாத பெண் வேறு பக்கத்தில் வந்து  படுத்த வேண்டுமா என்ற வருத்தம் கூடியது.   லஞ்ச் நேரம்  எல்லாரும் சாப்பிடப் போன போது எங்கள் பேச்சு முழுக்க லூர்து மேரியைப் பற்றிதான்.   சில சி.ஐ.டி. சிங்கங்கள் அவளைப் பற்றி அத்தனை  தகவல்களையும் எப்படியோ கண்டு பிடித்திருந்தனர்.

அவ வெளியூராம்.  மலாயா  பக்கமாம்.   தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியுமாம். அவ நல்லா  தமிழ் கத்துக்கணும்னுதான் இங்க வந்து தமிழ் மீடியத்துல சேர்த்து விட்டுட்டாராம் அவங்கப்பா. ஹாஸ்டல்லதான் இருப்பாளாம்.  இங்கிலீஷ் ஓரளவுக்கு பேசுவாளாம்.

சரிதான். என் நேரம் சரியில்லைதான் போலருக்கு என்று நான் நொந்து போனேன். அவளுக்கு தமிழ் வராது என்பதை விட அவள் ஆங்கிலம் தெரிந்தவள் என்பதுதான் என் கவலைக்கு காரணம்.  நமக்கு  ஆங்கில அட்சராப்பியாசம் ஆரம்பித்ததே  ஐந்தாம் வகுப்பில்தான்.  அதனால் அவள் என்னிடம் ஆங்கிலத்தில் ஏதாவது பேசி விடப் போகிறாளோ என்று எனக்கு தொடை நடுங்கியது. இனி அவள் பக்கம் திரும்பவே கூடாது என்ற முடிவோடு லஞ்ச் முடித்து வந்து அமர்ந்தேன்.

வகுப்பு ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் லூர்து மேரி திடீரென்று  எழுந்து "பண்ணா  பண்ணா  என்று அலறினாள். டீச்சர் தூக்கி வாரிப்போட போர்டிலிருந்து தலையைத்திருப்பிப் பார்த்தாள். "பண்ணா பண்ணா"  அவள் மீண்டும் கத்த டீ ச்சர் என்னைப் பார்த்தாள் . "

"ஏய் உஷா என்ன பண்ண அவள? "

"அய்யோ நா ஒண்ணும்  பண்ணல டீச்சர்! "

டீச்சர் லூர்து மேரியைப் பார்த்து என்ன என்பது போல்  செய்கையால் கேட்டாள்

லூர்து மே ரிக்கு முகம் சிவந்தது. கீழே குனிந்தவள் என்  காலிலிருந்த செருப்பைக் கழட்டி  கண்ணகி சிலம்பைப் பிடித்திருப்பது மாதிரி  தூக்கி வைத்துக்  கொள்ள  மொத்த வகுப்பும் அவள் என்னை அடிக்கப் போகிறாளா அல்லது டீச்சரையா  என்று மிரண்டு   போ ய் பார்த்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  நானோ பயத்தில் சர்வ நாடியும் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தேன்.

லூர்து மேரி அடுத்த கணம் என் செருப்பை கீழே போட்டு விட்டு வேகமாய் நடந்தாள் . டீச்சரிடம் ஏதோ செய்கை செய்து விட்டு  வகுப்புக்கு வெளியில் ஓடினாள்  அவள் திரும்பி வந்த போது அவள் கையில் அவளது செருப்புகள். அதை டீச்சரிடம் காட்டி " பண்ணா" என்ற படி தன்  காலில் அணிந்து கொண்டு சிரித்த படி வந்து உட்கார்ந்தாள் . அப்புறம்தான் புரிந்தது செருப்புக்கு அவளது பாஷையில் பண்ணா என்று பெயர் என்பது.  சாப்பிட்டு வரும்போது  செருப்பை அணிய மறந்து வந்திருக்கிறாள். அதற்குதான் இத்தனை அமர்க்களம்.

அதற்குப்பிறகு எங்கள் செருப்புகளும் பண்ணா என்றே  பெயர் பெற்றன

அபிராமபுரத்தில் என்ன பார்த்தேன் என்று சொல்லி விடுகிறேன். ஒரு பெண்மணி குழந்தையோடு சென்று கொண்டிருக்க அவள் இடுப்பிலிருந்த ஒரு ரெண்டு வயது குழந்தை திடீரென்று அழுதது. இவள் ஏன்  அழறடி செல்லம் அது இது என்று கேட்க அந்த குழந்தை மழலையில் இப்பல்  இப்பல் என்று சொல்ல அந்த பெண்மணிக்கு அது என்ன சொல்கிறதென்று புரியவேயில்லை. நான் தயங்கி தயங்கி அவர்களருகில் கைப்பையில் எதையோ எடுப்பது  போல் நின்று கவனித்தேன்.

குழந்தை அவள் இடுப்பை விட்டு இறங்கி தன காலை தூக்கி தூக்கி காட்டியது. அப்போதும் புரியவில்லை. அதற்கு வந்ததே கோபம், அந்த  பெண்ணின் செருப்பை பிடித்து இழுத்து "இப்பல்ல்ல் .." என்று கத்தியது.

ஒ உன் செப்பல் போட்டுக்கலையா என்று அந்த பெண்மணிக்கு அப்போதுதான் புரிய  அவள் மீண்டும் வீடு நோக்கி திரும்பிச் செல்ல எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது.

அவளைப்பற்றி இன்னொரு சுவாரசியமான சம்பவமும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். லூர்து மேரியை நினைவு படுத்தின குழந்தைக்கு நன்றி.


    

Wednesday, November 26, 2014

மூக்குத்தி - பகுதி - 2

மூக்குத்தி  - II

எனக்கு அப்போது ஆறேழு வயசிருக்கும்.  பூம்புகார் என்னும் படம்  வெளியான நேரம்.  என் அத்தை பெண்கள்,  என் பெரியக்கா எல்லோரும் கிளம்பும் போது   நானும் வருவேன் என்று உடும்புப் பிடியாய் சுகுணாவின் காலைக் கட்டிக் கொண்டேன்.  

நீ தூங்குவ அங்க வந்து  

மாட்டேன் நா வருவேன். 

சமத்தோல்யோ   நா வரச்சே நோக்கு முட்டாய்  வாங்கிண்டு வரேன்.  

வேண்டாம் நா வருவேன்.  நா அழுது ஆர்ப்பாட்டம் பண்ண,   வேறு வழியின்றி என்னை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.  இல்லா விட்டால் அவர்கள்  போவதும் கேட்டு விடுமே என்ற பயம்தான். 

சாந்தி தியேட்டர் என நினைக்கிறேன்,.  நான் சுகுணாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். சொன்னாற்போல் பாதிப் படத்தில் தூங்க ஆரம்பித்து விட்டேன். 

எவ்வளவு நேரம் தூங்கினேனோ   திடீரென்று ஏதோ பெரும் சப்தம் கேட்க  நான்  திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் என்ன நடந்ததோ   திரையில்  விரித்த கூந்தலும் விழித்த கண்களுமாய்   கையில் சிலம்போடு விஜயகுமாரி நின்றிருக்க,  இங்கே சுகுணா  மூக்கைப் பொத்தியபடி  என்னை முறைத்து பார்த்தபடி கண் கலங்க நின்றிருந்தாள்

விஜயகுமாரி ஆவேசமாக பேசிய பேச்சில் பயந்து போய்   நான் அலறிக் கொண்டு எழுந்த வேகத்தில் என் கை சுகுணாவின் மூக்கில்  வேகமாய் மோத   அவளது முக்குட்டி டைப் மூக்குத்தி  சதையைப் பிய்த்துக் கொண்டு தொங்க மூக்கிலிருந்து ரத்தமாய் வழிய  சுகுணா இன்னொரு கண்ணகியாய்  நின்றிருந்தால்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.   

கடங்காரி   என்னடி பண்ணின?  என் அக்கா கத்த   அக்கம் பக்கம் பரபரக்க பிறகென்ன கர்ச்சீப்பை மூக்கில் அழுத்தி வைத்துக் கொண்டு   படம் முடிவதற்கு முன் என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.   வழி முழுக்க அவர்கள் திட்ட,  நான் அழ,   போனாப் போட்டும் விடுடி என்று சுகுணாவே சொல்ல,  நல்ல காலம் பெரிய ஆபத்தொன்றுமில்லை என்று மூக்கில் பாலை வார்த்தார் டாக்டர்.  

 கொஞ்ச நாளில் மூக்கு சரியாகி விட்டது.  அதற்குப் பிறகும் என்னைப்  பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொள்வாள் சுகுணா. இனிமே உன்னைக் கூட்டிண்டு சினிமா போறேனா பார் என்பாள். அதற்குப் பிறகு  அவளோடு  கபாலி தியேட்டரில் நான் பார்த்த படம் சிவந்த மண்.   நான்  நன்கு வளர்ந்து விட்டாலும் கூட,  நீ இந்த பக்கமவே  உக்கந்துக்கோடி தாயே என்று மூக்குத்தி இல்லாத,  தனது  இடப்பக்கம்தான் என்னை அமர்த்திக் கொண்டாள். 

இன்று வரை என்னால் மறக்க முடியாத சம்பவம் இது.  இப்போதும் பூம்புகார் படப்  பாட்டு கேட்டால் கூட அதை நினைத்து சிரிப்பேன். 
                                         ******************************
என் பத்து வயதில் நடந்த சம்பவம் இது.,   எண்ணை  தேய்த்து குளிப்பதற்காக  என் பெரியக்கா  தன மூக்குத்தியை  கழட்டி கூடத்தில் இருந்த சின்ன மர  ஷெல்பில்  வைக்க, அவள் அந்தப் பக்கம் போனதும் நான் அதை எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு விஷமத்தனம் பண்ணுவதாக நினைத்து அதை  ஒரு சின்ன டப்பியில் போட்டு வேறொரு இடத்தில் மறைத்து வைத்தேன்.   நான் ஸ்கூலுக்கும் போயாகி விட்டது.


சாயங்காலம் வரும் போது வீடு களேபாரமாக இருந்தது.   என்னாச்சு?   நான் மெதுவாக என் சின்னக்காவிடம் கேட்க   நீ பாத்தயாடி அவ மூக்குத்திய என்றாள்.   எனக்கு சுரீரென்றிருந்தது.   என் அப்பா என் அம்மாவை உச்சஸ்தாயியில்  திட்டிக் கொண்டிருந்தார்.  சவத்தெழவுகள்!, கொரங்கெழவுகள்  கொஞ்சமானும் பொறுப்பிருக்கா பாரு !   எனக்கு பயத்தில் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது.  நான்தான் எடுத்து வைத்தேன் என்று எப்படி சொல்ல? அதே சமயம் இன்னொரு பிரச்சனையும் கூட.  நான் அதை ஒரு டப்பியில் போட்டது மட்டும் நினைவிருக்கிறது. எங்கே வைத்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை. தவிர மொத்த வீடும்  கலைந்து கிடந்தது.   எனக்குத் தெரியாது  நான் அவசரமாய் தலையாட்டினேன். 

 நானும் எல்லோரோடும் சேர்ந்து மூக்குத்தியைத் தேடினேன்.   டாய்லெட் குழியில்கூட கொட்டாங்குச்சி கரண்டி கொண்டு தேடினாள்  வேலைக்காரி. அன்று முழுக்க என் அம்மாவும் அக்காவும் சாப்பிடாமல் அழுது சிவந்த மூக்கோடு   அசோக வனத்து சீதை மாதிரி அடுக்களையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தார்கள்.   

எனக்கு மட்டும் குறுகுறுப்பு.  மூக்குத்திய   எடுத்தேன்....... டப்பில போட்டேன்.   டப்பிய   எங்க வெச்சேன்?   நடுவுல கொஞ்சம் என் பக்கங்கள் காணாமல் போனது அக்காவின் துரதிருஷ்டம்.     அப்படி ஒரு ஞாபக மறதி  உண்டு எனக்கு.  (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்?)   ஒரு வாரம் என் அப்பாவின் கோவத்தோடு நகர்ந்தது. வீட்டில் யாரும் யாரோடும் பேசுவதற்கே பயந்தார்கள்.     துணி மடித்து வைக்கும்  ஷெல்பில்  நான்சட்டை ஒன்று தேடுவதற்காக  முனைந்த போது என் கையில் தட்டுப் பட்டது மூக்குத்தி டப்பி. 
சந்தோஷத்தோடு பயமும் ஏற்பட்டது. நான்தான் வைத்தேன் என்பது தெரிந்தால்  முதுகு பழுத்து விடும்.  

 நான் மெல்ல டப்பியிலிருந்து மூக்குத்தியை எடுத்து டப்பியை மறைத்து விட்டேன்.  மூக்குத்தியைக் கீழே நழுவ விட்டேன். பிறகு கண்கள் பளிச்சிட அய்   மூக்குத்தி என்று குரல் கொடுத்தேன். மொத்த வீடும் பரபரப்பாய்  வந்தது. என் அக்காவின் முகத்தில் சந்தோஷம்.    இருந்தாலும் இதெப்டி இங்க வந்தது என்றாள்.  என்னைக் கேட்டா?    நான் சமாளித்தேன்.  எப்படியோ மூக்குத்தி கிடைத்து விட்ட நிம்மதியில் என் அப்பாவின் கோபமும் குறைந்தது. இதெல்லாம் அறியாத வயதில் செய்யும் குறும்புகள்.  இந்த பதிவைப் படித்தால் என் அக்காவுக்கும் அம்மாவுக்கும் மூக்குத்தி மர்மம் விளங்கும்.  சிரிப்பார்கள் என நம்புகிறேன். . 

                                                      ***********************

இப்போதெல்லாம்  இளசுகள் மூக்கு குத்திக் கொள்ள விரும்புவதில்லை.  என் பெண்கள் மூக்கு குத்திக் கொள்ளவில்லை.   என் பக்கத்து வீட்டு  சாஸ்திரிகள் வீட்டு பெண் வித்யாவிடம் ஒரு நாள் கேட்டது. அதற்கு நாலு வயசிலேயே மூக்கு குத்தியாகி விட்டது. 

"வித்யாக்கா  நீ ஏன் மூக்கு குத்திக்கல?"

"எதுக்குடி குத்திக்கணும்?" 

"அப்பறம் உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா?" 

                                                           ***********************

கவிதாவின்  மூக்கு புரொபைலில் அழகாக இருக்கும்.    அவளுக்கு மூக்கு குத்தினால்  அழகாயிருக்கும்.   அவள் நா குத்திக்க மாட்டேன் எனறாள். ஆனால் கல்யாணத்தின் போது அவள் மூக்கில் ஒற்றை கல் வைத்த ஒட்டும் பொட்டு ஒன்று ஒட்டி விட்ட போது அவளுக்கு அது வெகு அழகாயிருந்தது.   போட்டோவில் மூக்கு குத்தினாற்  போலவே இருக்கும்.  

மூக்குத்தி பற்றி ஆராய்ந்தால் நிறைய தகவல்கள்  இருக்கிறது.  அது நரம்பைத் தூண்டி விடும்.    தங்க மூக்குத்தி உடலில் உள்ள வெப்பத்தையும் நரம்பு மண்டலத்தில் உள்ள  கெட்ட வாயுவையும்  வெளியேற்றும். விஞ்ஞான  ரீதியாய் நிறைய நன்மைகளை நமக்கு தருகிறது. மூக்கு குத்தின பெண்களை யாராலும் மெஸ்மரைஸ்  பண்ண முடியாதாம்.   பொதுவாக வயதுக்கு வந்த பின் தான் மூக்கு குத்த வேண்டுமாம். ஏனெனில் பருவமடைந்த பெண்களுக்கு கபாலத்தில்  ஒரு வித வாயு சேருமாம்.  மூக்கில் ஒரு துளை  போட்டு மூக்குத்தி அணிந்தால்  அந்த வாயு வெளியேறுமாம்.

தவிர ஒற்றைத் தலைவலி, மனத்தடுமாற்றம் இதையும் குறைக்கிறதாம் மூக்குத்தி அணிவது. மூக்குத்தியை வலது மூக்கில் அணிவதை விட இடது பக்கம் அணிவதுதான் நல்லதாம். பெண்களுக்கு இடப்பக்கமும் ஆண்களுக்கு வலப்பக்கமும் இயற்கையிலேயே பலம் மிகுந்ததாக இருப்பதுதான் இதற்கு காரணம். அர்த்தநாரீஸ்வர  தோற்றத்தில் உமைக்கு இடப்பாகம்தான் தந்திருக்கிறான் ஈசன் என்பதில் நிறைய அர்த்தம் இருக்கிறது.

மூக்குத்தி என்பதே 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அணிகலன் என்கிறது விக்கிபீடியா. அதற்கு முந்தைய நூற்றாண்டு சிற்பங்களில் மூக்குத்தி கிடையாதாம்.   தமிழர் அணிகலன்களிலும்  காதணி, கழுத்தணி, இடுப்பணி, காலணி,  தலையணி  என்று  உள்ளதே தவிர மூக்கணி  பற்றி சொல்லப் படவில்லை.   எனவே அது பிற்பாடு   அதன் நன்மை கண்டறியப்பட்ட பின் தோன்றிய நாகரிகமாக இருக்கலாம்.    

வட இந்தியாவில் மூக்குத்தியை "நத்"  என்கிறார்கள் பொதுவாக.  ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது மூக்குத்திக்கு.   விதம் விதமாய் நிறைய வகை மூக்குத்திகள் இருக்கின்றன.  "எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு"  என்று  எதிர் நீச்சலில் சௌகார் பாடுவது  போல் நிறைய பேருக்கு அது அழகுதான்.  ஒரு கல் மேலேயும்  இரண்டு முதல் மூன்று கற்கள் அதற்கு கீழேயும் வைத்த முக்குட்டி,  நாலு கல் மூக்குத்தி   என்றும் உண்டு. வட்டமாய் வைத்த கற்களும் உண்டு.   மூக்கு வளையமும்  இப்போது நாகரீகம்.  வட இந்தியாவில் வளையத்திலிருந்து காது வரை ஒரு செயின் கோர்க்கப் பட்டு நெற்றிப் பட்டை நகையோடு இணைந்திருக்கும்.    பழங்குடி மக்களின் மூக்குத்தி  அவர்களைப் போலவே  பழமையின் சின்னமாக இருக்கும்.

ஆண்  குழந்தைகளுக்குக் கூட மூக்கு குத்தும் வழக்கம் நிறைய ஊர்களில் இருந்திருக்கிறது.  நரிக்குறவ ஆண்கள் மூக்கில் வளையம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் நான்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் போட்டி நடனத்தில் பத்மினியின் அந்த அழகு மூக்குத்தி அவர் முகத்தில் அத்தனை அழகாயிருக்கும்.  தில்லானா  மோகனாம்பாளில் மூக்குத்தி வளயமும், புல்லாக்குமாய்  அழகு சொட்டுவார். 

சங்கராபரணம்  படத்தில் மஞ்சு பார்கவி  அணிந்திருந்த பெரிய முக்கோணம் போன்ற கல் வைத்த மூக்குத்தியில் அவர் வெகு அழகாய்த் தெரிவார்.   "வேதம் புதிது"  படத்தில் அமலாவின் அழகு மூக்கில் அந்த பேசரி அவாளவு அழகாய் இருக்கும்.  ஸ்ரீதேவி மூக்குத்தி பற்றி சொல்லவே வேண்டாம்.   அந்த மூக்குத்திக்கே அவர் பேர் வைக்கப் பட்ட அளவுக்கு பிரபலமாயிற்று.

சிகப்பு கல்லு மூக்குத்தி,    மாணிக்க மூக்குத்தி,  மூக்குத்தி பூ மேலே என்று   சினிமா பாடல்களும் மூக்குத்தி பற்றி இருக்கின்றன.

கீழே உள்ள படங்களை நிதானமாக ரசித்துப் பாருங்கள்.  எத்தனை வகை மூக்குத்திகள்!.  இன்னும் கூட இருக்கின்றன.   கடைசி படம் "பொ ட்டு" மூக் குத்தியோடு  கவிதா 

இருந்தாலும்  மூக்குத்தி என்றால் உடனே மனக்கண்ணில் தோன்றுவது தெய்வீகமான இரண்டு முகங்கள்தான்.  ஒன்று கன்யாகுமரி  பகவதி அம்மன், மற்றொருவர்   எம்.எஸ். சுப்புலட்சுமி.  அந்த முகங்களின் தெய்வீகத்தால்  அந்த மூக்குத்திகள்  ஜொலிக்கிறதா அல்லது அந்த மூக்குத்தியின் அபூர்வ வைரங்களால் அவர்கள் முகம் ஜொலிக்கிறதா என்பது புரியாத புதிர்.