கயிலாயம் தென்முகம்
சீன எல்லைக்கு போகிற வழியில்
நியாலத்திற்குப் போகும் பாதை
சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்
சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்
மானசரோவர் ஏரி அதன் மேற்புறம் கயிலாயம் முதல் தோற்றம்
அடுத்த மூன்றும் மானசரோவரின் அழகிய தோற்றங்கள்
சீன எல்லைக்கு போகிற வழியில்
நியாலத்திற்குப் போகும் பாதை
சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்
சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்
மானசரோவர் ஏரி அதன் மேற்புறம் கயிலாயம் முதல் தோற்றம்
அடுத்த மூன்றும் மானசரோவரின் அழகிய தோற்றங்கள்
தெய்வம் எல்லா இடத்திலும் இருக்கிறதே எதற்கு இத்தனை அபாயமான யாத்திரை? என்று பல பேர் என்னிடம் கேட்டார்கள். ஆனாலும் என் ஹிமாலயக் காதல் எதற்கும் அஞ்சவில்லை. 2006 ல் முதன் முறையாக கயிலை தரிசனத்திற்காகக் கிளம்பி விட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ லட்சங்கள் சம்பாதிக்கிறோம், செலவழிக்கிறோம். அதில் ஒரு லட்சத்தை கயிலை தரிசனத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு செலவழிக்கலாம். அப்படி ஒரு புனித அதிர்வும், அமைதியும் அழகும் நிரம்பிய இடம் அது. நாங்கள் சென்றது நேபாளம் வழியாக. இந்திய வழி மிகவும் அபாயமான, மிகுந்த உடல் சக்தி தேவைப்படும் வழி. இந்திய அரசு மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே இந்திய வழியில் கயிலை யாத்திரை செல்லமுடியும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கொலஸ்ட்ரால் இதெல்லாம் இருந்தால் நீங்கள் அவ்வழியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். ஒவ்வொரு கேம்ப்பிலும் உடற் பரிசோதனை நடக்கும். நீங்கள் பாசாவதும் பெயில் ஆவதும் உங்கள் உடற் தகுதியை வைத்துதான். பாதி வழியில் கூட திருப்பி அனுப்பப் படலாம். எனக்கு இரத்த அழுத்தம் சர்க்கரை இரண்டும் உண்டு. எதற்கு வீண் ஆசை என்றுதான் நேபாளம் மூலம் செல்லத் தீர்மானித்தேன். ஆனாலும் இந்திய வழியில் செல்ல முடியாததில் உள்ளூர ஒரு வருத்தமும் இருந்தது. இந்திய வழியில் கயிலாயம் சென்று வந்தேன் என்று சொல்லும்போது கிடைக்கும் மரியாதையே தனி. அவ்வளவு கடினமான வழி அது. கிட்டத்தட்ட மலை விளிம்பில்தான் நமது குதிரைப் பயணம் நாட்கணக்கில் தொடரும். நேபாளம் வழியில் மிக சொகுசான பயணம்தான். இங்கிருந்து டெல்லி நேபாளம் விமானப் பயணம். கடவுளின் தேசமாகிய நேபாளம் அவ்வளவு பசுமையாயிருக்கிறது. கோவில்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக கட்டப்பட்டிருக்கிறது. பசுபதிநாதர் கோயில் மிகப் பெரியது. நந்தி நம் ஊர் நந்தி மாதிரி இருக்காது. ஒரு பெரிய காளையின் முகத்தோற்றத்தோடு தங்க நிறத்தில் மிகப்பெரியதாய் இருக்கிறது. பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில் நேபாளவாசிகளுக்கு காசி மாதிரிதான். நதிக்கரையில்தான் பிண தகனம் நடக்கிறது.
நேபாளத்திலிருந்து சீன எல்லை வரை பேருந்து பயணம். எத்தனை நதிகள்! நூற்றுக்கணக்கில் அருவிகள். காணக் கண் கோடி வேண்டும். அதே நேரம் பாதை பல இடங்களில் களிமண் சகதியும் குண்டும் குழியுமாய் ஆபத்தாகவே இருக்கிறது. கவலை வேண்டாம் அந்த ஊர் ஓட்டுனர்கள் மிக மிக திறமையானவர்கள். மலைகளில் வாகனம் ஓட்டி பழக்கப்பட்டவர்கள். சீன எல்லையில் நண்பர்கள் பாலம் கடந்து சீனாவுக்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பிறகு ஆயிரம் கிலோமீட்டர்கள் பிரயாணமும் லேண்ட்க்ருயிசர்கள் எனப்படும் ஜீப்பில்தான். மலைகளில் இந்த வாகனம் சர்வ சாதாரணமாக ஏறும் இறங்கும். சீனாவின் சாங்மு நகரம் மலைகளில் தொங்கிக்கொடிருப்பது போல் அமைந்திருக்கிறது. இரவு நேரங்களில் இது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
சாங்க்மு வரைதான் பசுமை. பிறகு பழுப்பு மலைகள்தான். போகப்போக பனிச் சிகரங்கள். இறைவன் எப்பேற்பட்ட சிற்பியும் ஓவியனுமாக இருக்கிறான் என்பதை இங்கு அறியலாம். உலகத்தின் எல்லா வர்ணங்களும் இங்கு கலந்து குழைந்திருக்கிறது. நியாலம் என்பது அடுத்த தங்குமிடம். இங்கேயே சிலருக்கு இறைக்க ஆரம்பித்து விடும். குளிர் உடலைக் குத்தும். நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது ஊர் சுற்றக் கிளம்பி விட்டோம். இங்கு flask தரமாக கிடைக்கும்.
இங்கிருந்து கயிலாயம் வரை சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் என்பதால் திபெத்தியர்களின் வாழ்க்கை பரிதாபமாகவே உள்ளது. மூக்கு ஒழுகாத திபேத்தியக் குழந்தைகளைக் காண்பது அரிது. அடுத்தாற்போல் சாகா, பர்யாங் என்று இரண்டு தங்குமிடங்கள். அதன் பிறகு மானசரோவரில்தான் நமது ஜீப் நிற்கிறது. ஆஹா ஆஹா எப்படி வர்ணிக்க அந்த அழகை! நான் புகைப்படங்கள் தந்திருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நீலம், பச்சை, சாம்பல் என்று அந்த ஏரியில்தான் எத்தனை வர்ணங்கள்! காற்று காதைக்கிழிக்கிறது. மற்றபடி அந்த அமைதி மெல்ல மெல்ல நமக்குள்ளும் பரவுகிறது. கயிலையின் முதல் தரிசனத்தில் மனது சிலிர்த்துப் போகிறது. ஒரு ரிஷி கண்மூடி தவத்தில் அமர்ந்திருப்பதைப்போல வெண்ணிற கயிலை மலை!. எனக்கு கண்ணீர் பீறிட்டது. அவசர அவசரமாக அதைத்துடைத்துக் கொண்டேன். அது கயிலையை மறைக்கிறது என்பதால். அடுத்து வரும் பதிவில் கயிலாய பரிக்கிரமா அனுபவம் பற்றி எழுதுகிறேன் காத்திருங்கள்.
5 comments:
படங்கள் மிக அருமை...அனுபவமும் நன்றாக இருக்கு, எழுதுங்கள் ...தொடர்ந்து வருகிறேன்
நன்றி சுந்தரராமன், உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன். தெரட்டிப்பால் சுவையாக இருந்தது. ஆர்.கே யின் மல்குடியை நினைவு படுத்தியது.
படங்களுக்கு caption கொடுத்தால் அருமையாக இருக்கும். ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கதை கண்டிப்பாக இருக்குமே.
படங்கள் மிக அருமை...
நாங்களும் சென்ற வருடம் செப்டம்பரில் நேபாளம் வழியாக வாழ்க்கையில் என்றென்றும் மறக்க இயலா திருக்கயிலாயம் தரிசிக்கும் பேறு பெற்றோம். பௌர்ணமி நாள் அன்று மானசரோவர் தங்கியிருந்தோம்.
Post a Comment