

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேரென ஒரடி உயரத்திற்கு பனி உறைந்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு ஆறு கி.மீ. தூரம் நீங்கள் இந்த பனிப்பொழிவில் நடக்க முடியாது இன்று இங்குதான் தங்கியாக வெண்டும் என்றார் ஒரு ஷெர்பா. நாங்கள்தான் எதையும் ஒரு கை பார்த்து விடுவது வழக்கமாயிற்றே. அதெல்லாம் முடியாது நாங்கள் நடக்கிறோம் என்று கிளம்பி விட்டோம். போகிற வழியில் நிறைய ஆபத்துகள் காத்திருந்தன. எது மேடு எது பள்ளம் என்று தெரியவில்லை. நீரோடைகள் உறைந்திருக்க, சிற்றருவிகள் கூட வழிகிற வாக்கிலேயே கம்பிச் சரங்களாய் உரைந்து போயிருந்தன. உதவியாளர் மிக ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றார்.
இந்த மூன்றாவது நாள் பரிக்கிரமா பாதை ஒரு சில இடங்களில் மண்ணாலான மலைகளில் ஒற்றையடி பாதையாக செல்கிறது. கீழே அதல பாதாளத்தில் உமா நதி ஒடிக்கொண்டிருக்கிறது. குதிரைகள் மற்றும் யாக்குகளின் கழுத்து மணி சப்தமும் காற்றில் மிதந்து வர மீண்டும் ஒரு நீண்ட நடைப் பயணம். ஒரு திருப்பத்தில் வெகு தூரத்தில் எங்கள் ஜீப்புகள் நின்று கொண்டிருக்க அதற்கும் பின்னால் நீல நிற மானசரோவரும் தெரிந்தது. எங்கள் பரிக்கிரமா இன்னும் சில மணித்துளிகளில் முடிந்து விடும் என அறிந்ததும் சந்தோஷமும் சொல்லத்தெரியாத சிலிர்ப்பும் ஒரு சேர எற்பட்டது.
பரிக்கிரமாவுக்கு வராத அன்பர்கள் டார்ச்சேனில் எங்களை ஆலிங்கனம் செய்து வரவேற்க, எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டோம். அடுத்த நாள் காலை பார்க்கையில் டார்ச்சேன் முழுவதும் பனி படர்ந்திருந்தது. எங்கள் வாகனங்கள் மீதெல்லாம் பனி மூடியிருந்தது. வானிலை சரியில்லாததால் அஷ்டபத் என்னும் ஒரு மலை உயரத்திற்குச் சென்று நந்தி மலையையும் கயிலை மலையையும் ஒரு சேர பார்க்க இயலவில்லை. மானசரோவரில் இறங்கி நீராட முடியவில்லை. என்ற மனக்குறைகளோடுதான் அங்கிருந்து புறப்பட்டேன்.
ஆனால் நம்புங்கள் அடுத்த ஆண்டே நான் மீண்டும் கயிலை யாத்திரைக்கு செல்வேன் என நான் கனவில் கூட நினைக்கவில்லை.
2007 ன் ஜுலை மாதம் மறுபடியும் நான் கயிலையைக் காணக் கிளம்பி விட்டேன். இம்முறை எங்களில் ஒரு ஏழு பேர் உள் பரிக்கிரமா
செல்வதாகத் திட்டம். அதாவது தென் முகமாக உள்ளே சென்று கயிலை மலையின் அருகில் சென்று நந்திமலையும் கயிலை மலையும் இணையும் இடத்தில் கயிலை மலையின் அடியில் உள்ள சப்தரிஷி குகையில் ஏறி கயிலாயபதியின் மடியில் அமர்ந்து விட்டு அப்படியே நந்தி மலையை பரிக்கிரமா (நந்தி கிரிவலம்) செய்ய வேண்டும். இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. முதலாவதாக கயிலையை 13 முறை வெளி பரிக்கிரமா செய்து முடிப்பவர்கள்தான் உள் பரிக்கிரமா செய்ய அனுமதிக்கப் படுவார்கள். அல்லது
13 ஆண்டுகளுக்கொரு முறை வரும் திபெத்தியர்களின் குதிரை ஆண்டில் எவர் வேண்டுமானாலும் உள் பரிக்கிரமா செல்லலாம்.
எங்கள் ஆர்கனைசர் எப்படியோ நாங்கள் உள்ளே செல்ல முறையான அனுமதி வாங்கி விட்டார். டார்ச்சேனிலிருந்து ஒரு குழு வெளிபரிக்கிரம்ா செய்ய கிளம்பிய மறு நாள் நாங்கள் உள் பரிக்கிரமாவிற்கு கிளம்ப ஆயத்தமானோம். இரவெல்லாம் நான் தூங்கவில்லை. என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளை நான் எதிர்பாத்துக் கொண்டிருந்தேன். விடியற்காலம் இரண்டு மணிக்கெல்லாம் நாங்கள் எங்களுக்காகக் காத்திருந்த ஜீப்பில் ஏறினோம். ஜீப் சர்வ சாதாரணமாக மலை மீது ஏறியது. பாதை என்று எதுவும் கிடையாது. நாங்கள் ஏற ஏற கீழே டார்ச்சேன் கேம்ப் ஒரு படம் போல் தெரிந்தது. கும்மிருட்டு. ஓரிடத்தில் ஜீப் எங்களை இறக்கி விட்டது.
அந்த இருட்டில் திக்கு திசை ஏதும் தெரியவில்லை. ஹெட் டார்ச் பொருத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். உதவியாளர் என்
கைகளைப் பிடித்துக் கொண்டார்.
சுமார் இரண்டு மணி நேரம் கடுமையான மலையேற்றம். பலமாக மூச்சிறைத்தது. ஒவ்வொரு அடிக்கும் உடம்பு ஓய்வு கேட்டது. அங்கெல்லாம் நான்கு மணிக்கெல்லாம் வெளிச்சம் படர்ந்து விடுகிறது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் நான் என் முன்னே கண்ட காட்சி ...! அந்த அழகை எப்படி விவரிக்க? கருத்த பிரும்மாண்டமான நந்தி மலையின் பின் புறமும். நந்திக்கு முன்னால் வெண்ணிற கயிலை மலையும் ஒரு சேரஎங்களை வரவேற்றன. நாங்கள் அனைவரும் சில வினாடிகள் செயலற்று நின்று விட்டோம்.
மீண்டும் வருகிறேன். என்னோடு வரத் தயாராக இருங்கள்