லஸ் கார்னரில் சிக்னலுக்காகக் காத்திருந்த சமயத்தில் ரஞ்சனியின் அழைப்பு வந்தது. வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைலை இயக்கி அவளோடு பேசினான்
.
"உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சதீஷ். இந்த டிசம்பர்ல அகாடமில பாடற சான்ஸ் கிடைச்சிருக்கு எனக்கு"
"ஒ! வெரி குட! மத்தியான கச்சேரியா? சாயங்கால கச்சேரியா?"
"மத்தியானம்தான். அதுவே எவ்ளோ பெரிய சான்ஸ்!"
"சந்தோஷம். வாழ்த்த்துக்கள்"
இதோட உன் பொறுப்பு தீர்ந்துட்டதா நினைச்சுடாதே. என் கச்சேரிக்கான ரெவியுவை உன் பேனாவால நீதான் எழுதற சரியா? உன் விமர்சனம் என்னை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தணும் என்ன?
"எழுதிட்டா போச்சு. அது என் வேலைதானே. நீ சொல்லணுமா என்ன?"
"அடுத்த வாரம் போன் பண்றேன். ஏர்போர்ட்டுக்கு வந்துடு. சீசன் முடியற வரை உங்க வீட்லதான் இருக்கப் போறேன். கொஞ்ச நாள்தான் முகம் பார்த்து காதலிப்போமே. என் கச்சேரி அன்னிக்கு
அப்பா, அம்மா வரும் போது கல்யாண தேதியை முடிவு பண்ணிடலாம்னு இருக்காங்க."
"அப்பாடா ஒரு வழியா இறங்கி வந்தாயே சந்தோஷம்"
"நா என்ன செய்யட்டும் சதீஷ்? ஆறு வருஷப் பிரயத்தனத்துக்குப் பிறகு இப்பதான் கொல்கொத்தா ரஞ்சனின்னு என் பேர் பேசப்பட ஆரம்பிச்சிருக்கு. அகாடமில ஒரே ஒரு பாட்டாவது பாடின பிறகுதான் கல்யாணம்னு இருந்தேன். ஒரு முழு கச்சேரிக்கே வாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்பறம் என்ன?"
"சரி பார்க்கலாம்" சதீஷ் மொபைலை பாக்கெட்டில் வைத்தபடி வண்டியைக் கிளப்பினான்.
ரஞ்சனி மிக நல்ல குரல் வளம் உள்ளவள். சங்கீத உலகில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக உழைத்ததில் இந்த ஆறு வருடத்தில் ஓரளவு நல்ல பெயரை சம்பாதித்திருந்தாள். டிசம்பர் சீசனில் பல்வேறு சபாக்களில் அவள் பாடியிருந்தாலும் கூட, அவளது கச்சேரிகளை விமர்சிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்ததில்லை.
அவனது பத்திரிகை அலுவலகம் அவனை அகாடமிக்கு என்று ஒதுக்கி இருந்தது. அதுவும் பிரபலங்களின் கச்சேரி மட்டும்தான். இந்த முறை எப்படியாவது ஆசிரியரின் அனுமதி பெற்று, ரஞ்சனியின் மத்தியான கச்சேரிக்குப் போய் விட வேண்டும் என அவன் தீர்மானித்தான். அவனது விமர்சனம் அவன் பணி புரியும் பத்திரிகையும் சங்கீத விமர்சனத்திற்குப் பெயர்பெற்றது. எத்தனையோ அறிமுகங்களை தாரகைகளாக உயர்த்தியிருக்கிறது.
அடுத்த வாரம் ரஞ்சனி வந்து சேர்ந்தாள். முன்பை விட அழகும் செழுமையும் கூடியிருந்தது.
"என்னோட நீ நிறைய இடத்துக்கு வரணும் சதீஷ். கச்சேரிக்கு நா நிறைய தயார் செய்துக்கணும்." என்றவள் அன்று மாலையே அவனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
"இந்த சீசன்ல ஏழு கச்சேரி பாடப் போறேன்." என்றவள் முதலில் நுழைந்தது ஒரு பிரபல ஜவுளிக் கடைக்குள். கடையையே புரட்டிப் போட்டுப் பார்த்து வித விதமாய் ஏழு பட்டுப் புடவைகள் வாங்கினாள். அடுத்த நாள் பிரபலங்களுக்கு ரவிக்கை தைக்கும் ஒரு தையல் கடை வாசலில் அவன் காத்திருக்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அவள் ரவிக்கை டிசைன் தேர்ந்தெடுத்து எப்படி தைக்க வேண்டும் என விளக்கி, துணிகளைக் கொடுத்துவிட்டு வந்தாள்.
"போலாமா?"
"வீட்டுக்குத்தானே?"
"இல்ல தி.நகர் போகணும்"
அவன் வண்டியை கிளப்பினான். வழி முழுக்க அவள் விடாமல் மொபைலில் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டே வந்தாள்.
"ஆமாம். மத்தியானக் கச்சேரிதான். ஆடிட்டோரியம் நிரம்பி வழியணும். உங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுங்க. உங்க மூலமா ஒரு அம்பது நூறு பேராவது வரணும். "
பேசிய எல்லோரிடமும் இந்த வசனத்தை மீண்டும் மீண்டும் கூறினாள்
"ஏன் சதீஷ், உங்க பத்திரிகைல சங்கீத முன்னோட்டம்னு போடுவீங்களே. அதுல இந்த முறை என்னைப் பத்தி போடுவீங்களா?
"என்ன போடணும்?"
"இந்த முறை கொல்கொத்தா ரஞ்சனியோட புடவைகளும் புது மோஸ்தர் நகைகளும் நிச்சயம் பெண்களைக் கவரும்னு ஒரு துணுக்கு போடச் சொல்லேன்.
சதீஷ் அவளை உற்றுப் பார்த்தான்.எதுவும் பேசவில்லை .பிறகு கேட்டான்
"அகாடமில என்னல்லாம் கீர்த்தனம் பாடப் போற ரஞ்சனி."
"இன்னும் முடிவு செய்யல, அதுக்கென்ன இன்னும் இருபது நாள் இருக்கே. நிறுத்து, நிறுத்து. இந்த நகைக் கடைதான்."
அவன் காரை நிறுத்தினான்."நீ போயிட்டு வா. பர்ச்சேஸ் முடிஞ்சதும் மிஸ்டு கால் குடு. வந்து கூட்டிட்டு போறேன்." அவன் அவளை இறக்கி விட்டு விட்டுச் சென்றான்.
மாலை நான்கு மணிக்கு உள்ளே நுழைந்தவள், இரவு ஒன்பது மணிக்கு அவனை அழைத்தாள். அவள் முகம் தங்கத்தை விட அதிகமாய் மின்னியது. வீட்டுக்கு வந்து நகைகளைக் கடை பரத்தி அம்மாவுக்கும் அவனுக்கும் காட்டினாள்.ஒவ்வொரு நகையாய் அணிந்து அழகு பார்த்தாள் சதீஷ் கொட்டாவி விட்டான்.
"இது அகாடமி கச்சேரிக்குக் கட்டிக்கப் போற நீலப் பட்டுப் புடவைக்குப் போட்டுக்கப் போற மேட்சிங் செட். இது நாரதகான சபைக்கு. இது மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ். இது....
"எனக்கு தூக்கம் வருது படுக்கட்டா" சதீஷ் மற்றொரு கொட்டாவியோடு நகர்ந்தான்.ரஞ்சனி மீண்டும் செல் போன் எடுத்து பேச ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாய் நகர்ந்தது.
"நாளைக்கு பார்லர் போகணும் சதீஷ். பெடிக்யூர், மேனிகியூர், பேஷியல், அது இதுன்னு நிறைய வேலை இருக்கு. கச்சேரிக்கு இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு. தினமும் அலைஞ்சதுல ஸ்கின் டோன் மாறிடுத்து. எல்லாத்தையும் சரி பண்ணிக்கணும்.
மறுநாள் பார்லர் விஜயத்திற்குப் பிறகு, அவள் அழகு பல மடங்கு கூடியிருந்தது, அவளது முதல் கச்சேரியே அகடமி கச்சேரி என்பதால், மிகுந்த பரபரப்பாக இருந்தாள். தூங்கினாத்தான் முகம் ப்ரஷ்ஷா இருக்கும் என்றவள் இரவு ஏழுமணிக்கே படுத்து தூங்கினாள். மறுநாள் பார்லருக்கு மீண்டும் சென்று ஒப்பனை செய்து கொண்டு வந்தாள்.
"தேவதை மாதிரி இருக்க" அம்மா அவளைப் பாராட்ட, அவன் புன்னகைத்தான்.
அகாடமியில் கணிசமாகக் கூட்டம் நிரம்பியிருந்தது. அவள் பட்டுப் புடவையும் நகைகளும் ஜொலிக்க அழகு தேவதையாக இறங்கினாள்.
"அடேயப்பா! என்ன அழகா இருக்கா! மாமிகள் வியந்தார்கள். தங்கள் வைர பேசரியை துடைத்துக் கொண்டு அட்டிகையை சரி செய்து கொண்டார்கள். தப்புத் தப்பாக தாளம் போட்டு தலையாட்டினார்கள்.
கேண்டீனில் ஒரு கூட்டம் கோதுமை அல்வாவை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தது. ராகம் கண்டுபிடிக்க ஒரு கூட்டம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது. நல்ல சங்கீதம் அறிந்த சிலரோ புருவம் சுருங்க எதோ முணுமுணுத்தார்கள். சங்கீத இலையில் சம்பந்தா சம்பந்தமில்லாத உணவுகள் வந்து விழ இது என்ன மெனு என்று புரியாமல் விழித்தனர் சிலர்.
இரண்டு மணி நேரக் கச்சேரி முடிந்ததும் பெண்கள் கூட்டம் ரஞ்சனியைச் சூழ்ந்து கொண்டது. அவள் புடவையையும் புது மோஸ்தர் நகைகளையும் பற்றி விசாரிக்க, ரஞ்சனியின் முகத்தில் பெருமையோ பெருமை.
வீட்டுக்கு வந்ததும் அம்மா சுற்றிப் போட்டு அவள் நெற்றி வழித்து சுடக்கு போட்டாள்.
"என்ன சதீஷ், நீ ஒண்ணுமே சொல்லலையே. உனக்குப் பிடிச்சிருந்துதா?"
"எது?"
"கொழுப்பைப் பார்"
சதீஷ் ஒரு மாதிரி சிரித்தபடி நகர்ந்தான்.
"ஒண்ணுமே சொல்லாம போனா எப்டி?"
"என் பேனா சொல்லும் ரெண்டு நாள் பொறு"
புதன் கிழமை அதிகாலையிலேயே அவள் எழுந்து விட்டாள். வாசலில் கிடந்த பேப்பரை எடுத்து ஆசையாகப் புரட்டினாள். சிறப்புப் பகுதியில் பளிச்சென அவள் படம் வண்ணத்தில் கால் பக்கத்திற்கு வெகு அழகாகப் போட்டிருந்தது. அவள் தன் அழகை வெகு நேரம் ரசித்துப் பார்த்தாள். பிறகுதான் விமர்சனத்திற்கு வந்தாள். 'அகாடமியில் அழகிய ரஞ்சனி' என்று தலைப்பிட்டிருந்த விமர்சனத்தை முக மலர்ச்சியுடன் படிக்கத் துவங்கினாள்.
வெள்ளிக் கிழமை மதியம் அகாடமி கேன்டீன் கோதுமை அல்வாவை விட பளபளப்பாக இருந்த கொல்கொத்தா ரஞ்சனியின் கச்சேரிக்கு வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ரஞ்சனியின் ஒவ்வொரு அசைவுக்கும் கை தட்டினார்கள். ரஞ்சனி மூன்றாம் பிறை ஸ்ரீதேவியைப் போல் வெகு அழகாக இருந்தார். அவர் பாடிய தோடியை விட அவரது நீல நிறப் பட்டுப் புடவை பாரம்பரிய நேர்த்தியோடு படு அழகாயிருந்தது. இந்தப் புடவைக்காக அவர் எத்தனை கடைகள் ஏறி இறங்கினாரோ என்று வியக்க வைத்தது. எனக்கு முன் வரிசையிலிருந்த சில பெண்மணிகள் ரஞ்சனி அணிந்திருந்த ரவிக்கை மாடலை வியந்து வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
மூன்றாவதாக ரஞ்சனி பாடிய கல்யாணி, அவரது நீலக்கல் அட்டிகையின் அழகிலும், காது ஜிமிக்கியின் குலுக்கலிலும் கை வளையல்களின் உரசலுக்கும் முன்பு நிற்க குடியாமல் தள்ளாடித் தரையிறங்கி லதாங்கியாய் மாறியது, வெகு சிலரே அறிந்த சிதம்பர ரகசியம். அந்த அளவுக்கு அவரது முக ஒப்பனையும் அழகும் அனைவரையும் மதி மயங்க வைத்திருந்தது.
அகாடமி வாய்ப்பு என்பது வளரும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிகப் பெரிய கனவு. தன் கனவு நனவான மகிழ்ச்சியில் ரஞ்சனி மிக "அழகாக" அந்த வாய்ப்பை சரிவர பயன் படுத்திக் கொள்ளாமல்நழுவ விட்டு விட்டார். இருந்தாலும் அவரது புடவைக்கும் நகைகளுக்கும் ஒப்பனைக்கும் பாராட்டு. புடவை நிறத்திலாவது எம்.எஸ்ஸை பார்க்க முடிந்ததே.
ரஞ்சனியின் முகம் சிவந்து அஷ்டகோணலாயிற்று. கோபத்தில் அழகு அலங்கோலமாயிற்று. பேப்பரை சதீஷின் மீது வீசி எறிந்தால்.
" இப்டி காலை வாரிட்டயே!" எரித்து விடுவது போல் பார்த்தாள் அவனை.
"கோவப்படாதே ரஞ்சனி. என் தொழில் எழுதுவது. அதுவும் உண்மைகளை. நான் உண்மையைத்தான் எழுதி இருக்கிறேன். நீ எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தாயோ அதையெல்லாம் பாராட்டித்தானே எழுதியிருக்கிறேன்.
"சரி, நா சரியாவே பாடலன்னாலும் ஒரு வார்த்தை நல்லார்ந்துதுன்னு பொய் சொன்னா குறைஞ்சா போய்டுவ?"
"அது முடியாது ரஞ்சனி. என் தொழிலுக்கு ஒரு தர்மம் இருக்கு. தர்மபுத்திரன் தேர் தரையைத் தொட்டது ஒரு பொய்யாலதான். என் தேர் என் பேனாதான். அது தரையைத் தொடாம பாத்துக்கறது என் தர்மம். நா உன்னை மனசார பாராட்டணும்னுதான் ஆசைப் படறேன். அழகுணர்வு தப்புன்னு சொல்லல. நீ உன் ராகங்களையும் அழகு படுத்த முயற்சி செய். உன்னைப் பாராட்ட இந்த பேனாவுக்கு வாய்ப்புகளைக் கொடு"
ரஞ்சனி யோசிக்க ஆரம்பித்தாள்.
(இது சங்கீத சீசன் அல்லவா? அதற்காகத்தான் இந்த சிறுகதை. அமுதசுரபி இதழில் வெளிவந்த கதை இது. )
26 comments:
அருமை . இன்றைக்கு பல கச்சேரிகளில் இதுதான் நடக்கிறது .
Unmaithan.thozhilukenru oru dharmam ullathu.indraya kacherigalil nadapadhudhan ithu.
Unmaithan.thozhilukenru oru dharmam ullathu.indraya kacherigalil nadapadhudhan ithu.
ஒரு கர்நாடகபாடகியின் அருகிலே இருந்து பார்த்த உணர்வு..அத்தனை யதார்த்தமாக யதிர்ஷ்ட்ரம் சிறுகதையை எழுதி இருக்கின்றீர்கள்.அருமை.வாவ்.. போட வைக்கின்றது.
அருமையான கதைங்க. அமுதசுரபியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து அசத்துங்க!
Good!
good story.. U have published the real face of today's singers
Thank you LK, thank you Raji, Thank you Chithra, sathika, ananymous
பார்த்துக் கொண்டே இருங்கள்..நமது பாரம்பர்யமிக்க ஸபாக்களை NRI கள்
ஆக்ரமிக்கப் போகிறார்கள்..ஸபாக் காண்டீன் கூரை விழுந்து அங்கு ஒரு
MCDONALDS முளைக்கப் போகிறது..
எப்படி நம்ம இட்லியை தூக்கிப் போட்டு மிதித்த பீட்ஸாவைப் போல்!
மற்ற படி, கதை அருமை!
சங்கீத சீஸனில் என் கதை ஒன்று கூட கல்கியில் வந்தது. நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
http://aaranyanivasrramamurthy.blogspot.com/2009/11/blog-post_11.html
தலைப்பில் ஈர்க்கப்பட்டு உள்ளே வந்தேன். ஏமாற்றிவிடவில்லை.ஆழமான தலைப்பில் அழகான கதை.
அருமையான கதை - யுதிஷ்டிரர் தவறு செய்தாலும் கதாநாயகன் தவறு செய்யவில்லை. முடிவையும் பாஸிடிவாகவே முடித்தது சூப்பர்
உங்கள் கதை நல்லாருக்கு. சீசனுக்கு தகுந்த மாதிரி கதை போடறீங்க ம் ம் கல்க்குங்க
சீஸனுக்கு ஏற்ற கதை. ரொம்பவும் ரசித்தேன்.
யாராயிருந்தாலும் ரூலுன்னா ரூலுதான்ன்னு நக்கீரன் ( புராண பாத்திரம்) மாதிரி இருக்கணும்.
அருமை. கச்சேரிக்கு மட்டுமல்லாது இது எல்லாவற்றிற்குமே பொருந்தும்.
என் தொழில் எழுதுவது. அதுவும் உண்மைகளை. நான் உண்மையைத்தான் எழுதி இருக்கிறேன்//
எழுத்துலகிற்கென்று ஒரு தர்மம் இருந்ததாக அறிகிறோம்.இப்போ அது எங்கே போயிற்றோ ?
வழக்கம்போல ஜெட் வேகத்தில் சுவாரஸ்யமாய் கதை பயணித்து
" என் தேர் என் பேனாதான். அது தரையைத் தொடாம பாத்துக்கறது என் தர்மம்"
என்ற அருமையான வரிகளுடன் முடிந்திருக்கிறது! உங்கள் கதைகளும் இப்படித்தான்! அவை என்றுமே
தரையைத் தொடுவதில்லை!!
நன்றி ராமமூர்த்தி சார், நன்றி விந்தை மனிதன், நன்றி மாதவி, நன்றி செந்தில்குமார், நன்றி இனியவன், நன்றி துளசிகோபால், நன்றி இனியவன். நன்றி மனோ. உங்கள் கருத்து இன்னும் கவனமாக எழுத வேண்டும் என்கிற கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆள் பாதி, ஆடை பாதி:)
ஆனால் ரஞ்சனி ஆடையே முழுதும் என்று இருந்துவிட்டது தவறுதான்.
//(இது சங்கீத சீசன் அல்லவா? அதற்காகத்தான் இந்த சிறுகதை. அமுதசுரபி இதழில் வெளிவந்த கதை இது. )//
சரியான நேரத்துக்குதான் பதிவு செய்துள்ளீர்கள் அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடருங்கள்....
எப்போதுமே உங்கள் கதை என்னை மிகவும் கவரும். இதை படித்தவுடன் அதில் இருந்த நகைச்சுவை புன்னகைக்க வைத்தது. ஆனால் பணம் தந்து சபா கச்சேரி சான்ஸ் பிடிக்கும் இன்றைய காலகட்டத்தில் நிலைத்து நிற்க இதுவும் அவசியம்தானோ?
அருமையான கதை.
அருமையான கதை... இன்னிக்கி நிலைமை இப்படி தான் இருக்கு...
nalla irukkunga
அன்று குரல் வளத்திற்காகவும் அசாத்திய திறமைக்காகவும், சங்கீத சபாக்களில் கூடிய கூட்டம்....இன்று ஜிகினா மினுக்கல்களில் மனதைப் பறி கொடுக்கிறது...புது மோஸ்தர் நகைகளையும் ,புது டிசைன் புடவைகளையும் ரசிக்க வருகிற மேல் தட்டு 'மாமி'களின் ரசனை மாறுகையில் நல்ல சங்கீதம் கேட்கக் கிடைக்குமோ ,என்னமோ
அருமையான, யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் கதை..
மிக அருமையான எதார்த்தக் கதை.
Post a Comment