Friday, July 9, 2010

எழுத்தாளர்கள் கருவேப்பிலைக்கொத்தா ?

இப்போதெல்லாம் தமிழ் நாவல்கள் சிறுகதைகளில் பி.ஹெச்.டி செய்யும் மாணவர்களிடமிருந்து தொலைபேசி வந்தாலே எரிச்சல் வருகிறது. ஒரு காலத்தில் மிகுந்த சந்தோஷமாக தகவல்கள் அளித்து வந்தேன். நாளாக ஆக கசப்பான அனுபவங்களே கிடைக்கின்றன. அவ்வளவு அனுபவங்கள். முதலில் தொலை பேசுவார்கள்.
"அம்மா நான் உங்கள் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்"
"சந்தோஷம். என்ன புத்தகம்? என்ன ஆய்வு?"

ஒரு குழப்பமான பதில் வரும். கூடவே உங்கள் பயோ டேட்டா வேண்டும் என்பார்கள். தொலைபேசி மூலமே சொல்லுவேன். பிறகு உங்கள் பேட்டியும் வேண்டும் எப்போது வரலாம் என்பார்கள். அதற்கென்ன விடுமுறை நாளில் போன் செய்து விட்டு வாருங்கள் என்பேன். அப்படி போன் எதுவும் வராது. சிலநேரம் ஞாயிற்றுக் கிழமை வருகிறேன் மேடம் என்பார்கள்.

எங்கேயும் வெளியில் போகாமல் என்னமோ நான்தான் Phd செய்வது போல் காத்திருப்பேன். வரவே மாட்டார்கள். நாலு நாள் கழித்து ஒரு தபால் அட்டை வரும். எனது உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. மன்னித்து விடுங்கள். இத்துடன் கேள்விகள் அனுப்பியிருக்கிறேன். அதற்கு பதில் அனுப்பி விடுங்கள் என்று பத்து கேள்விகளை நுணுக்கி நுணுக்கி எழுதி இருப்பார்கள். இவர்கள் முனைவர் பட்டம் வாங்க நான் எதற்கு வேலை எல்லாம் விட்டு விட்டு பதில் எழுத வேண்டும்? ஒரு எழுத்தாளரின் படைப்புகள் மற்றும் அவரைப் பற்றிய தகவல்களைக் கூட திரட்ட மாட்டார்கள். எல்லாவற்றையும் நம்மிடமே கேட்பார்கள்.

ஒரு சிலர் வீடு தேடி வருவார்கள். நான் சொல்வதை குறித்தும் கொள்வார்கள். பிறகு ரொம்ப பவ்யமாக பேசி என்னிடமே எனது புத்தகங்களை இரவல் வாங்கிக் கொள்ளுவார்கள்.(கண்டிப்பாகத் திருப்பி தந்து விடுகிறோம் என்ற உத்தரவாதத்தோடு) என் மனதுதான் வெகு இளகியதாயிற்றே! படிப்புக்குத்தானே கொடுக்கிறோம் என்று கொடுத்து விடுவேன். அதற்குப் பிறகு அவர்கள் வரவே மாட்டார்கள். அவர்கள் முனைவர் பட்டம் வாங்கிய விவரத்தை ஒரு மரியாதைக்காகக் கூட சொல்ல மாட்டார்கள். அதற்குப் பிறகு யாராவது புத்தகம் கேட்டால் சர்வ ஜாக்கிரதையாக கொடுக்க இயலாது என்று மறுத்து விடுவேன்.

சென்ற ஆண்டு ஒரு ஆய்வு மாணவி வந்தாள். பார்வை இழந்த அந்த மாணவியை நான் மிகவும் அன்போடு வரவேற்று தேநீர் எல்லாம் கொடுத்து உபசரித்தேன் அவள் என்னிடம் என்னுடைய ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகம் கேட்ட போது நான் என்னுடைய அனுபவங்களைக் கூறினேன். என்னை நாடி வரும் ஆய்வு மாணவர்களுக்கெல்லாம் புத்தகம் கொடுத்து எனக்கு கட்டுப்படியாகுமா என்று கேட்டேன். "அவர்கள் எல்லாம் பார்வை உள்ளவர்கள். நான் அப்படி அல்ல நிச்சயம்மாக நானே நேரில் வந்து உங்கள் புத்தகத்தை திருப்பித் தருவேன் என்னை நம்புங்கள்" என்றாள். அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த எனது இறக்கம் பொங்கியது. சரி உன்னை நம்புகிறேன் என்று புத்தகத்தைக் கொடுத்தேன். என் எழுத்துக்கள் அவள் கண்களுக்கு ஒளி கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளலாம் மொத்தத்தில் என் புத்தகங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலே இப்போதெல்லாம் பெருமைக்கு பதில் பயமே ஏற்படுகிறது.

மேற்படி அனுபவங்களுக்குப் பிறகு இந்த Phd ஆய்வைப் பற்றி நான் ஒரு ஆய்வு செய்தேன். ஒவ்வொரு ஆய்வு மாணவருக்கும் அவர்களது ஆய்வுக்காக பத்தாயிரம் ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கப் படுகிறதாம். அந்த பணத்தில் புத்தகங்கள் வாங்கி கொள்ளாமல் ஏன் எழுத்தாளர்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள்? தவிர ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புத்தகத்தின் ஆசிரியரை நேர்முக பேட்டியே எடுக்காமல் தங்கள் ஆய்வை சமர்ப்பித்து விடுவதாகவும் கேள்விப் பட்டேன். இவர்கள் முனைவர் பட்டம் வாங்கினால் இவர்களுக்கு நான்கு ஊதிய உயர்வுகளாம். ஒரு ஊதிய உயர்வு ரூ. 225 புது ஊதிய கமிஷன் படி சுமார் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரை கூடுகிறது. அந்த அளவுக்கு இவர்களது ஆய்வில் தரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த ஒரு ஆய்வு வழிகாட்டி சொன்னார் சிலரது ஆய்வுகளில் ஒரு விஷயமும் இருக்காது. மிக மிக மேம்போக்காகவே இருக்கும். எப்படியோ இவர்களும் முனைவர் பட்டம் வாங்கி விடுகிறார்கள்.

பிற்காலத்தில் இவர்கள் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பார்கள் என்று நினைத்தால் கவலையாகவே உள்ளது என்றார். தமிழ் இலக்கியத்தில் மட்டும்தான் இந்த நிலை என்றும் நண்பர் கூறிய போது வேதனையாகவே இருந்தது. கல்வி என்பது அறிவு மேம்பாட்டிற்கா அல்லது வெறும் ஊதியத்திற்கா? சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டிலும் ஆய்வரங்கங்கள் சரி வர செயல்படவில்லை என பத்திரிகைகள் சுட்டிக் காட்டியிருந்தன.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த முனைவர் ஆய்வு படிப்பில் சில விஷயங்கள் கட்டாயமாக்கப் படவேண்டும் என்று தோன்றுகிறது.
1 சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் (அவர் உயோரோடு இருப்பவரானால்) முறையாக அறிவித்து அவர்களது ஒப்புதலைப் பெற வேண்டும்.

2 ஆய்வு மாணவர்கள் எழுத்தாளரை உண்மையாக பேட்டி எடுத்தார்கள என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளரிடம் அவரது கையொப்பத்தை பெற்று வரவேண்டும் என்பதை விதியில் சேர்க்க வேண்டும்.

3 Vaiva வின் போது சம்பந்தப்பட்ட எழுத்தாளரும் அழைக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் செய்தால்தான் மாணவர்கள் எழுத்தாளரை மதிப்பார்கள். அல்லது கருவேப்பிலைக் கொத்துதான். இதுபற்றி மற்ற எழுத்தாளர்களின் அனுபவங்களையும் அறிய விரும்புகிறேன்.

18 comments:

ராம்ஜி_யாஹூ said...

எழுத்தாளர்கள் கிள்ளு கீரைகள் இல்லை தான், ஆனால் எழுத்தாளார்கள் ஒன்றும் தேவ தூதர்களோ, சூப்பர் ஸ்டார்களோ இல்லை.

இப்போது உள்ள பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்கள் சுய விளம்பரம், புகழ் மட்டுமே விரும்புவதால் தான் வாசகர்களுக்கு நகுலன், சுஜாதா போன்று இப்போது உள்ள எழுத்தாளர்களை பாராட்ட மதிக்க மனம் வருவது இல்லை.

பல எழுத்தாளர்கள் கர்வமும் அகங்காரமும் சந்தர்ப்ப வாதமும் கொண்டு இருப்பதால் தான், இப்போது உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை முழுதாக படிக்க ஆர்வம் வருவது இல்லை.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ராம்ஜி. உடனடியாய் பின்னூட்டம் அளித்ததற்கு. எழுத்தாளர்களது படைப்புகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். எழுத்தாளர்களைப் பிடிக்கவில்லைஎனிலும் ஆய்வுக்காக எடுக்கும் போது அவற்றை ஆழமாகப் படிக்க வேண்டாமா? தயவு செய்து கர்வ எழுத்தாளர் பட்டியலில் எல்லாரையும் சேர்த்து விட வேண்டாம். கர்வமுள்ளவர்கள் எந்தத் துறையில்தான் இல்லை? எழுத ஆரம்பித்த காலத்தில் எனது சில சீனியர் எழுத்தாளர்களிடம் நான் அவமானப் பட்டதுண்டு. அதை அவர்களது கர்வம் என்று நான் நினைத்ததில்லை. பிற்பாடு அவர்கள் என்னை மதித்துப் பேசும் அளவுக்கு உயர்வதற்கு அந்த அவமானம் உதவி செய்தது.

Anonymous said...

:எழுத ஆரம்பித்த காலத்தில் எனது சில சீனியர் எழுத்தாளர்களிடம் நான் அவமானப் பட்டதுண்டு. அதை அவர்களது கர்வம் என்று நான் நினைத்ததில்லை. பிற்பாடு அவர்கள் என்னை மதித்துப் பேசும் அளவுக்கு உயர்வதற்கு அந்த அவமானம் உதவி செய்தது.---nandru

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you kumar

Vidya Pinto said...

நம் நாட்டில் மட்டும்தான் முனைவர் பட்டம் என்பது தலை கிரீடம் என்று எண்ணம். அயல் நாடுகளில் ஐந்தில் மூன்று பேர் முனைவர் பட்டம் வாங்குகிறார்கள். ஆனால் யாரும் அங்கே டாக்டர் என்று தன பெயர் முன்பு போட்டுக்கொள்வதில்லை. இதை தான் நிறை குடம் தழும்பாது என்று சொல்வார்கள். உன் மகள் ஒரு விதி விளக்காக இருப்பாள் என்று நம்பு.

கோவை குமரன் said...

//சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் முறையாக அறிவித்து அவர்களது ஒப்புதலைப் பெற வேண்டும்//

உண்மை...
நியாயமன கோரிக்கை

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி குமரன். தனிமையில் இனிமையை(வாசிப்பை) அனுபவியுங்கள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அன்பு வித்யா, எனக்கு உன்னைத் தெரியாதா? மாஸ்காம் படிக்கும்போதே உனது ஆய்வுக்காக எஸ். ராமகிருஷ்ணனை பலமுறை நேரில் சென்று சந்தித்தவள் நீ. இப்போது ஐ. ஐ.டி. யில் பி.ஹெச்.டி என்றாள் சும்மாவா? ஒரு நல்ல ஆசிரியராக இருப்பவர்களால்தான் நல்ல ஆய்வு மாணவியாகவும் இருக்க முடியும். உன்னிடம் படித்த மாணவிகளுக்காக நீ கணிப்பொறியில் எவ்வளவு தேடுதல் செய்து ஊடகங்களைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் ஒரு தாயாக நான் கர்வப்படுகிறேன்.

கோவை குமரன் said...

/நன்றி குமரன். தனிமையில் இனிமையை(வாசிப்பை) அனுபவியுங்கள்//

துன்பத்திலும் ஓர் இன்பம்
நன்றி!!!!

geethappriyan said...

வணக்கம் அம்மா,
இன்றைய நவீன யுகத்தில் செல்போன் எல்லோரிடமும் உள்ளது,குறைந்த பட்ச நன்றி விசுவாசத்துடன்,எனக்கு முனைவர் பட்டம் கிடைத்துவிட்டது என்றாவது சொல்லலாம், எழுத்தாளர் உதவியால் உதவித்தொகையை பெறும் குறுகுறுப்பு கூட இல்லையே!!

உங்கள் வருத்தம் நியாயமானது.எங்கள் ஆர்கிடெக்சர் துறையில் 3றாம் வருட முடிவில் ஆர்கிடெக்ட் ஆஃபீஸில் 91நாட்கள் அவசியம் ட்ரெய்னிங் செய்யவேண்டும், அதற்கு எத்தனை டாகுமெண்ட்டுகள்,கையொப்பங்கள்,
ஸ்டாம்புகள்,ட்ரெயினிங்குக்கு வரும் மாணவர்கள் எத்தனை பணமிருந்தாலும் ஆஃபீஸ் பாயை கூட சார் என்றே பணிவுடன் அழைப்பர்.பவ்யமாய் நடப்பர்.ஏனென்றால் அவரின் தேர்ச்சிக்கு ட்ரெய்னிங் செர்டிஃபிகேட் முக்கிய அங்கம் வகிக்கிறது.

அடுத்தமுறை பிரதி எடுத்துகொண்டோ அல்லது ஸ்கான் செய்து விட்டோ திரும்ப தரச்சொல்லுங்கள்,

பார்வையற்ற மாணவர்களுக்கு அவசியம் உதவுங்கள்,அவர்களுக்கு இந்த முனைவர் பட்டம் மிகவும் அவசியம்.அந்த மாணவி நிச்சயம் உங்கள் புத்தகத்தை திருப்பி கொடுபபர்,அவர்களுக்கு தன்னம்பிக்கையும் கொடுத்த வாக்கும் முக்கியம்.தொடர்ந்து படிக்கிறேன்,சிலசமயம் படிக்க பின்னூட்டபெட்டி வேலைசெய்யாது.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி கீதப்ரியன். ஒரு எழுத்தாளருக்கு அவருடைய புத்தக நகல்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது நீங்கள் அறியாததல்ல. முன்பெல்லாம் கேட்பவருக்கெல்லாம் கொடுத்து கொடுத்து, எனது சில புத்தகங்களின் ஒரு நகல் கூட என்னிடம் இல்லாமல் போய், பதிப்பாளரிடமும் புத்தகம் தீர்ந்து போய், கடைசியில் வாடகை நூலகங்களிலிருந்து அஷ்ட கிழிசலான எனது புத்தகத்தை, முழு விலை கொடுத்து (ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டார்கள்) வாங்கிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு. அதென்னமோ புத்தகம் இரவல் வாங்கிக் கொண்டால் மட்டும் எவரும் திருப்பித் தருவதில்லை. அவர்களுக்கு அது அல்ப விஷயம். பதிப்பாளர், எழுத்தாளருக்கு தரும் பத்து புத்தக நகல்களுக்கு மேல் தேவைப்பட்டால் நாங்களும் எங்கள் புத்தகத்தை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். நான் காசு கொடுத்து வாங்கிய புத்தகத்தை சுலபத்தில் இரவல் பெற்றுக்கொண்டு அதைத் திருப்பித் தரவும் நாகரீகமில்லாதவர்களை என்னவென்று சொல்ல. என் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் நல்ல மனமோ என்னமோ, உங்கள் பின்னூட்டம் படித்துக் கொண்டிருக்கும் போதே அந்த பார்வையிழந்த பெண்ணிடமிருந்து தொலைபேசி வந்தது. சனிக்கிழமை நேர்முகப் பேட்டிக்காக வருவதாக. சந்தோஷமாக இருக்கிறது. அந்த பெண் புத்தகம் கொண்டு வந்தாலும் கூட அதை என் அன்பளிப்பாக கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன்.

கே. பி. ஜனா... said...

நியாயமான ஆதங்கம்! எனக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதுண்டு. உங்கள் யோசனைகள் அருமை!

ரிஷபன் said...

இத்தனை தகவல்கள் இப்போதுதான் தெரியும். என்னிடம் தபாலில் தொடர்பு கொண்டு பின் யாரேனும் ஒரு எழுத்தாளர் மூலம் தொலை பேசித் தொடர்பும்.. என் செலவில் நூல்களை அனுப்புவேன். முனைவர் பட்டம் வாங்கியதும் ஒரு சின்ன தகவல் கூட வராது. அட.. என் கதைகளைப் பற்றி என்னதான் எழுதினார்கள் என்று அறிய நினைத்தாலும் விடை பூஜ்யம்தான்.
யாரோ முகம் தெரியாத ஒருவர் என்னால் பயன் அடைந்தார் என்று சந்தோஷப்படுவது மட்டுமே என் வேலை!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ரிஷபன். நல்லவர்களுக்கு மற்றொரு பெயர் ஏமாளிகள். நம் நூல்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற பெருமையைக் கொடுத்து நம்மை எமாளிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர். நாம் இதை ஒரு ஒழுங்கிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். உதவுவதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரம் நம் எழுத்துக்களுக்கு அவர்கள் பெரிதாய் மரியாதை கொடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பள்ளியில் படிக்கும்போது தனக்கு பிடிக்காத பாடத்தை மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்து விட்டு தூக்கிப்போடுவது போல்தான் இதுவும். ஆய்வுப் பட்டம் என்பதும் நல்ல பதவிக்கும் பணத்திற்கும் செய்கிற விஷயமாகப் போய் விட்டது. உண்மையான ஆய்வல்ல இது என்பதே உண்மை. உண்மையான அறிவு தாகத்திற்காக ஆய்வு செய்கிறவர்கள் ஒரு சதவிகிதம் இருக்கலாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்பவும் நியாயமானதே! இங்கு தான் இத்தனை அவலமும்! பக்கத்தில் உள்ள கேரளாவில் போய் பாருங்கள்! எழுத்தாளனுக்கு உள்ள மதிப்பே தனி!!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கேரளத்தில் எழுத்தளர்களுக்கு மற்றொரு பெயர் எழுத்தச்சன். சரஸ்வதி பூஜையன்று அங்கு முதல் மரியாதை எழுத்தாளர்களுக்குதான். நல்ல நாவல்கள் அனைத்தும் அங்கு நல்ல திரைப்படங்களாக்கப் பட்டிருக்கின்றன. இங்கோ கதைத் திருட்டு சர்வ சாதாரணம். கோடியில் செலவழித்து திரைப்படம் எடுப்பார்கள். டிவி தொடர்கள் எடுப்பார்கள். அனால் அதன் கதாசிரியர்களுக்கு பணம் தரத்தான் யாருக்கும் மனம் வருவதில்லை. புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களிலும் இதே நிலைதான். பிரின்ட்டிங், அட்டை, பேப்பர், பைண்டிங் என்று எல்லா இடத்திலும் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுப்பார்கள். ஆனால் உள்ளே இருக்கும் எழுத்துக்களை எழுதிய எழுதிய எழுத்தாளருக்கு மட்டும் பணம் தர மனம் வராது. வெறும் வெள்ளைத்தாளை bind பண்ணி விற்றால் யார் வாங்குவார்கள்? எழுத்தாளர்களுக்குரிய மரியாதை இனியாவது கிடைக்குமா?

R. Gopi said...

மிகவும் தாமதமாக எழுதும் பின்னூட்டம்.
உங்கள் கோரிக்கைகள் நியாயமானதாகவே படுகிறது.
கைலாஷ் பரிக்ரமா பதிவுகளையும் பார்த்தேன். நல்ல புகைப்படங்கள். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி. உங்களது வலைத்தளமும் அருமையாக இருக்கிறது. எவ்வளவு பேர் பின் தொடர்கிறார்கள்! அம்மாடியோவ் !