வெளிச்சம்.
கதை கேட்டபடி
என் மடியிலேயே
தூங்கிப் போயிருந்த
மகளை, அவள் உறக்கம்
கலைந்து விடாமல்
படுக்கைக்கு மாற்றி, போர்த்தி
விட்டு அவள் முகத்தைச் சற்று நேரம் அன்போடு பார்த்தேன். ஆறு வயசுக்கு
அதி புத்திசாலி. அடேயப்பா எத்தனை கேள்விகள்! பதில் சொல்லி மாளாது.
சில கேள்விகள் திணறடிக்கும். அவள்
கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகாகவே நான்
நிறைய புத்தகம் புரட்ட வேண்டியிருந்தது.
"சாமி ஏம்பா கண்ணுக்கு
தெரியறதில்ல?" கோகுலத்து கிருஷ்ணனின்
லீலைகளைப் பற்றி சொல்லிக்
கொண்டிருந்த போது அவள் கேட்ட கேள்வி இது.
"ஏன் தெரியாம? எத்தனையோ
பேர் சாமியப் பாத்திருக்காங்களே"
"நீ பாத்திருக்கயா?"
"இல்லையே"
"ஏன்?"
அதுக்கெல்லாம் நிறைய
தவம் பண்ணனும்.
பரிசுத்தமான பக்தியோட எப்பவும் கடவுள்
நினைப்புலயே இருக்கணும்"
"நல்லவங்க கூப்ட்டா
கடவுள் ஓடி
வருவார்னு சொன்னயே.
அப்போ நாம
நல்லவங்க இல்லையா?"
“இது கலியுகம்டா
செல்லம். சாமி நேரா வர மாட்டார். மனுஷங்க
மூலமா வந்துதான் நல்லது செய்வார். "
"அப்போ மனுஷங்கதான்
சாமியாப்பா?"
"அப்டித்தான்.'
"அப்போ ஏன்
நிறைய பாம்
பிளாஸ்ட் எல்லாம்
நடக்குது?"
"நான் ஒரு வினாடி என்ன சொல்வதெனப்
புரியாமல் திணறினேன். பிறகு சுதாரித்துக்க்குக் கொண்டு சொன்னேன்.
“தேவர்களுக்கு எதிரா
அசுரர்கள் இருக்கறதில்லையா? தெய்வம் மட்டும்
மனுஷ ரூபம்
இல்லடா செல்லம். அசுரரும் மனுஷ ரூபம்தான்
கலியுகத்துல".
பெண்ணின் புத்திசாலித்தனம்
கண்டு ஒரு
தந்தையாய் பெருமிதம்
கொண்ட அதே நேரம் மனசின்
மூலையில் மெலிதாய் ஒரு
வலி. இரண்டு நாட்களுக்கு முன் நான் கண்ட
குழந்தைகள் என் நினைவுக்கு வர என் அடி வயிறு கனத்துப் போனது.
குழந்தைத் தொழிலாளர்கள்
குறித்த ஆவணப் படமொன்று எடுப்பதற்காகத் தென்கோடியிலிருந்த
ஒரு கிராமத்திற்குச் சென்று ஒரு வாரம்
தங்கியிருக்க நேரிட்டது. இதுநாள் வரை கேள்வி மட்டுமே
பட்டிருந்த விஷயங்கள் கண்முன்னே காட்சிகளாய்க் கண்ட போது மனம்
சொல்லவொண்ணா துயரத்திலாழ்ந்தது.
**********
விடியல் இருளில்
பேருந்து ஒலிப்பானின்
சப்தம் அந்த ஊரின் நிசப்தத்தைக் கலைத்த சில நிமிடங்களில் ஒவ்வொரு வீட்டுக் கதவும்
திறந்தது. பல குழந்தைகள் உறக்கம் கலையாமல் வெளிப்பட்டனர். கேமரா மூலம்
அந்த சிறுவர்களின் முகங்களை நெருக்கத்தில் கண்ட போது மனசு அதிர்ந்தது. பால்
வடியும் முகங்கள். தமக்கையின் கை பிடித்து
தூக்கக் கலக்கத்தோடு நடந்தான் ஒரு பாலகன், விரல் சூப்பலைக் கூட
நிறுத்தாத ஒரு ஐந்தாறு வயது சிறுமி வாயில் விரலோடு பேருந்தை
நோக்கி நடந்ததைப் பார்த்ததும் என்
உள்ளம் அதிர்ந்தது.
சொகுசான பேருந்து
பயணம் என்ற தூண்டிலில் பிடிக்கப் பட்ட சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள். கந்தக
வாசத்துடன் களங்கமில்லாமல் சிரித்த மலர்கள்.
"உம் பேரென்னம்மா
?"
"தாமர"
"அட ....அழகார்க்கே
பேரு. ஆமா
படிக்க இஷ்டமில்லையா
உங்களுக்கெல்லாம்? இந்த வயசுல
வேலைக்குப் போறீங்க?"
என் கேள்வி
புரியாதது போல
அவள் சிரித்தாள்.
"ஒரு நாளைக்கு எவ்ளோ
சம்பாதிப்ப?
"தெரியாது. அம்மா
கிட்டதான் தருவாங்க"
"கை வலிக்கலையா உனக்கு?"
"வலிக்கும்"
அம்மா கிட்ட சொன்னயா
வலிக்குதுன்னு?"
"அம்மா அடிச்சா
இத விட வலிக்குமே"
"இது படிக்கற வயசு
தெரியுமா"
"அப்டின்னா?"
அங்கே இருந்த
பல குழந்தைகளுக்கு படிப்பு பற்றி, பள்ளிக்கூடம் பற்றி தெரியவில்லை. எது கேட்டாலும்
சிரித்தார்கள். பசை, குச்சி, கந்தகம், தீப்பெட்டி, இதைத் தாண்டி
வேறெதுவும் தெரியவில்லை. இருட்டோடு உறக்கம் கலையாத விழிகளுடன் கிளம்பும் இவர்கள்
இருட்டிய பிறகு பேருந்திலேயே தூங்கிக்
கொண்டு வீடு திரும்பிய கொடுமையைப் படம் பிடித்துக் கொண்டு
ஊருக்குக் கிளம்பிய போது மனசு கனத்துப் போயிற்று. கிளம்புவதற்கு முன் தாமரையின்
தாயாரைப் பார்த்தேன்.
"என்ன கொடுமைங்க
இது? இப்டி குழந்தைகளை
வேலைக்கு அனுப்பினா, ஓடி விளையாட
வேண்டிய அவங்க
குழந்தைப் பருவத்தை
இழந்துட மாட்டாங்களா?"
"அதுக்கென்னய்யா செய்ய? பாவப்பட்ட
ஜன்மம் நாங்க. இதான் எங்க தலையெழுத்து."
“அதுக்காக குழந்தைகளை
வேலைக்கு அனுப்பலாமா?
“என்ன செய்ய
சொல்றீங்க? வறுமை!. அதுங்க
வயத்துக்கு அதுங்க சம்பாதிச்சாதான் சோறு. எங்க நிலைமை
அதான். பழகிப் போச்சுங்க."
நான் தாமரையை
அருகில் அழைத்தேன்.
சாக்லேட் டப்பா
ஒன்றை நீட்டினேன்.
"பஸ்சுல
எல்லார்க்கும் கொடுத்துட்டு நீயும்
சாப்டு."
"என்ன இது?"
"இனிப்பு"
"அப்டின்னா?"
"சாப்ட்டுப் பாரு. நான்
வரட்டுமா? இன்னிக்கு
ஊருக்குக் கிளம்பறோம்"
"மறுபடியும் வருவீங்களா?"
"ஏதாவது வேலையிருந்தா
வருவேன்"
"உங்களுக்கு குழந்தை
இருக்கா?"
"ஒரு பொண்ணு இருக்கு.
ஆறு வயசாகுது
"
"உங்க பொண்ணு எந்த பட்டாசு கம்பெனில வேலை
பாக்கது?" தாமரை கேட்டதும்
அதிர்ந்தேன். அவளைப் பொறுத்தவரை எல்லா
குழந்தைகளும் பட்டாசு கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.
அவளுக்கு அதுதான் தெரியும். நான் கனத்த மனதோடு
அவள் முதுகில் தட்டிக்
கொடுத்து விட்டு
கிளம்பினேன்.
தீபாவளி நெருங்கிக்
கொண்டிருந்தது. அந்தக் குழந்தைகளுக்கு வேலையும் கூடியிருந்தது. கைகளில் கந்தகம், கண்களில்
சோர்வு, இதழ்களில்
புன்னகை. தாயின் மடிசுகம் தெரியாது. தந்தையின் அரவணைப்பு கிடையாது.
தாயின் தாலாட்டு, உணவுக்கு
பதார்த்தமாய் பழந்தமிழ்க் கதைகள், காலைத் தூக்கம், மாலை விளையாட்டு, கல்வி, நல்ல உணவு எதுவும் இவர்கள் வாழ்க்கையில் கிடையாது.
நான் பெருமூச்சு
விட்டேன்.
*********************************
"ஊர்லேர்ந்து வந்ததுலேர்ந்து
என்ன யோசனை?" திவ்யா நின்று
போயிருந்த கடிகாரத்திற்கு பேட்டரி
மாற்றியபடி என் சிந்தனையைக் கலைத்தாள்.
"ஒண்ணுமில்லை"
"போன காரியம் நல்லபடி
முடிஞ்சுதா? ஆவணப் படம்
சரியா வந்திருக்கா?"
"ம்"
"நாலு நாளில் தீபாவளி.
அப்பா வேணும்னு
உங்க பொண்ணு ஒரே ரகளை. நீங்கதான் டிரெஸ் எடுக்கணுமாம். நா எடுத்தா போட்டுக்க
மாட்டாளாம். நாளைக்கு முதல் வேலையா அவளுக்கு டிரெஸ் வாங்கப் போறோம் சொல்லிட்டேன்”.
"ம்" நான்
திரும்பிப் படுத்தேன். ஏனோ தாமரையின் முகம் கண்ணுக்குள் வந்து போயிற்று.
மறுநாள் துணிக்கடைக்குப்
போய் பெண்ணுக்கு விலை உயர்ந்த கவுன்
வாங்கினோம். அவள் கேட்ட மற்ற பொருட்களையும் வாங்கிக் கொடுத்தேன்.
"பட்டாசுப்பா?"
"வாங்கலாம்"
"நிறைய வாங்கணும்பா"
"சரி"
பட்டாசுக் கடையில்
கூட்டம் அலைமோதியது.
திவ்யாவும் பெண்ணும்
பட்டாசு தேர்ந்தெடுப்பதில் மும்மூரமாக, எனக்கோ ஒவ்வொரு
பட்டாசிலும் தூக்கக் கலக்கத்தோடு ஒரு குழந்தையின் முகம் தெரிந்தது. சட்டென கடையை
விட்டு வெளியில் வந்து நின்றேன்..
***********************
தீபாவளிக்கு முதல் நாள்
நான் திடுதிப்பென்று அந்த கிராமத்திற்கு கிளம்பினேன்.
'அப்பா என்னப்பா தீபாவளிக்கு இருக்க மாட்டீங்களா"
பெண் என்னை ஏமாற்றத்துடன் கேட்டாள்.
"முக்கியமான வேலைடா
செல்லம். நீ என்ஜாய் பண்ணு சரியா?" நான் கிளம்ப
அவர்கள் முகத்தில் ஏமாற்றம். ஏனோ இந்த தீபாவளியை அந்தக்
குழந்தைகளோடு கழிக்க வேண்டும் போலிருந்தது. அந்த குழந்தைகள் தங்கள் தீபாவளியை
எப்படி கொண்டாடுகிறார்கள் என்று
பார்க்க வேண்டும் போலிருந்தது. அந்த கிராமத்தில் ஒரு என்பது குழந்தைகள்
இருப்பார்களா? அத்தனை பேருக்கும்
இனிப்புகளும் மத்தாப்பும், புஸ்வான பெட்டிகளும், ஊசி வெடிகளும்
வாங்கிக் கொண்டேன். நான்
போய்ச் சேரந்த நேரம் இருட்டிப் போயிருந்தது. தீபாவளியின் உற்சாகம் எங்கும்
தென்படவில்லை. பட்டாசுக் கம்பெனி பேருந்து ஒலிப்பானை அலற
விட்டபடி வந்து நின்று, தூக்கக் கலக்கத்துடன் இருந்த சிறுவர்களை
உதிர்த்து விட்டுச் சென்றது.
என்னைப் பார்த்ததும்
படம் பிடிக்கத்தான் வந்திருப்பதாக எண்ணி
சற்றே நின்றார்கள்.
"இனிப்பு வாங்கிக்குங்க"
நான் அவர்களிடம் இனிப்பு பெட்டிகளை நீட்ட எவர் முகத்திலும் ஆர்வமில்லை.
நாளைக்கு தீபாவளியில்ல....உங்களுக்காக
பட்டாசு வாங்கிட்டு
வந்திருக்கேன். கொண்டு போய் வெடிங்க.
இந்த மத்தாப்பு புஸ்வாணமெல்லாம் நல்லா
வெளிச்சமா கலர் கலரா இருக்கும்""
குழந்தைகள் அதிலும்
ஆர்வம் காட்டாது அசட்டு சிரிப்பு சிரித்தார்கள்.
"தாமர...இந்தா வாங்கிக்
கொடு எல்லாருக்கும்"
நான் தாமரையைத் துணைக்கழைத்தேன்.
"வேணாம்"
"ஏம்மா"
"எங்களுக்கு இந்த
வெளிச்சம் வேணாம்"
நான் திகைத்து
நின்றிருந்த போதே, குழந்தைகள் என்னைத்
தாண்டி அரைத் தூக்கத்தோடு நடந்து சென்றார்கள்.
தாமரை எந்த அர்த்தத்தில் இதைச் சொன்னாளோ தெரியாது. அதில்
வேறொரு அர்த்தமுமிருந்தது எனக்கு உரைத்தது. நான் கையாலாகாதவனாக அடுத்த பேருந்தைப் பிடித்தேன்.
****************************************
2 comments:
நெஞ்சை நெகிழ்விக்கும் மிகவும் அருமையான படைப்பு.
கண்களில் கண்ணீருடன் படித்தேன்.
தீபாவளி நெருங்கும் நேரம் இதனை வெளியிட்டுள்ளது ஓர் தனிச்சிறப்பு.
பிறருக்கு வெளிச்சமும் மகிழ்ச்சியும் தரும் இவர்கள் வாழ்க்கை இப்படி இருட்டு ஆக உள்ளதே என நினைக்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது. :(
இன்றுவரை யாராலும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாமல இருப்பதை நினைக்க வேதனைப் படுவதைத்தவிர வேறு வழியில்லாமல் உள்ளதே இதில் உள்ள கொடுமை. :((
பொருத்தமான தலைப்புக்கும் பகிர்வுக்கு என் நன்றிகள், மேடம்.
நெகிழ வைக்கும் நிதர்சன கதை!!
Post a Comment