Monday, May 18, 2015

இன்று புதிதாய்ப் பிறந்தேன்.

ஏன் பிறந்தோம் என்று இன்று வரை எதற்கும் சலித்துக் கொண்டதில்லை. அப்படி ஒன்றும் வாழ்க்கை சுகமான நீரோட்டமாய் இருந்ததுமில்லை. மேடும், பள்ளமும், கும்மிருட்டுப் பிரயாணமுமாகவே இருந்திருக்கிறது. அடுத்தடுத்து ஆழிப் பேரலைகள் வீசியிருக்கிறது.  ஆயினும் எந்தச் சுழலிலும் என் சிரிப்பையும், எழுதுகோலையும் நழுவ விட்டதில்லை.   அப்பா அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது உழைப்பு, அதீத நேர்மை. போராடி ஜெயிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.   என் வெற்றி எல்லாமே அப்படி கிடைத்தவைதான்.  நான் தனிமை விரும்பி.  மிகச்சிறிய என் வீடே என் சொர்க்கம்.   புத்தகங்களும்,  நல்ல சங்கீதமும் ஓவியமும், கிருஷ்ணஸ்மரணையுமாய்  எவ்வித குழப்பமுமின்றி  அமைதியாய்ச் செல்கிறது வாழ்க்கை.  கற்றுக் கொடுப்பவர் எல்லோரும் என் குருவே.  கொஞ்சூண்டு அன்பு காட்டினால் கூட நெகிழ்ந்து விடுவேன். என்னைப் பிடிக்கவில்லையா....மௌனமாய் ஒதுங்கி விடுவேன்.   நேர்மறைச் சிந்தனைகளால் வாழ்க்கைப் படகை ஒட்டிக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி  ஓடிக் கொண்டிருக்கும் நதி நல்லவர்களால் நிரம்பியது.  முகநூல், மற்றும் பதிவுலகம்  மற்றுமொரு சாளரமாய்  எனக்கு உலகம் காணச் செய்திருக்கிறது.  நல்ல நட்புக்கள் இதன் மூலம் கிடைத்திருக்கிறது.  கெட்ட குணம் இருக்கிறதா?  ஈகோ கெட்ட  குணம் எனில் என்னிடம் அது உண்டு.  அதையும் விரைவில் விரட்ட  வேண்டும்.  முன்பு முன் கோபம் இருந்தது. இப்போது அது அறவே இல்லை.  ஒரு காலத்தில் இருந்த  சின்னச் சின்ன  ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விட்டது.  கூடிப் பிறப்பதுமில்லை,  கூடி மரிப்பதுமில்லை. இதில் எதற்கு அர்த்தமற்ற துவேஷங்கள் ?   இத்தனை வருட வாழ்க்கையில் கற்றதும், பெற்றதும், இழந்ததும் நிறைய.  என்னைப் பெற்ற தாய்  இருக்கிறாள் ஆசீர்வதிக்க.  இந்தப் பிறந்த நாளில் நான் பெற்ற முதல் ஆசி அவளிடமிருந்துதான்.   

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனமார்ந்த வாழ்த்துகள்...

middleclassmadhavi said...

Happy birthday! God bless

Anuprem said...

வாழ்த்துகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று புதிதாய்ப் பிறந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

//என்னைப் பெற்ற தாய் இருக்கிறாள் ஆசீர்வதிக்க. இந்தப் பிறந்த நாளில் நான் பெற்ற முதல் ஆசி அவளிடமிருந்துதான். //

இதைவிட வேறென்ன பெரிய சந்தோஷம் இருக்க முடியும்? மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நீங்களும் அவர்களும்! :)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது தளம் கண்டேன். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/