Wednesday, November 24, 2010

கண்ணாமூச்சி (பகுதி- இரண்டு)

எவ்வளவு முயற்சித்தாலும் மனம் எதிர்மறையாக கற்பனை செய்வதைத் தடுக்க இயலவில்லை. சாலையில் நடக்கும் போது மணி தடாலென விழுவது போலவும், எவனோ ஒருவன் குடித்து விட்டு விழுந்து கிடப்பதாக எண்ணி மனிதர்கள் அருவருப்போடு என்ன எது என்று பார்க்காமல் கடந்து செல்வது போலவும் காட்சி ஓடும்.

இன்னொரு காட்சியில் தொடர்ச்சியாய் அவர் சிகரெட் பிடித்து புகையை ஊதி விடுவார். பேருந்தில் செல்லும்போது ஸ்ட்ரோக் வந்து விழுவார்
நடுச் சாலையில் நெஞ்சடைத்து விழ பின்னால் வந்த வாகனம் அவர் மீது ஏறுவது போல் தோன்றும். ஒவ்வொரு காட்சிக்கும் ஐயோ என்று என் அடி வயிறு கதறும்.
காலோடு தலை தேகம் நடுங்கி வியர்க்கும். நல்லதை நினை மனமே என்று சொல்லிக் கொண்டாலும் மனம் ஒத்துழைக்காது.

ஒவ்வொரு வாரமும் ஊருக்கு வரும் புருஷனிடம் படிந்திருந்த புகை வாசனை மரண ஊதுபத்தியாக என்னை சுவாசம் திணற வைத்தது.

"சிகரெட் பிடிச்ச வாசனை வரதே "
"இல்லையே"
" ஏன் புளுகறீங்க?"
" இல்லம்மா"
'டோன்ட் டச் ..! புளுகர புருஷன் எனக்கு வேண்டாம்"

" டென்ஷன் மா ஜஸ்ட் ஒண்ணுதான்"

"எங்களுக்கு டென்ஷன் இல்லையா? இப்போ எனக்கேற்பட்டிருக்கற டென்ஷனுக்கு நானும் நாலு பாக்கெட் பிடிக்கவா?"

"வாங்கித் தரவா?

"ஜோக்கா? பளார்னு அறையலாம் போலருக்கு."

"இனிமே தொடமாட்டேன் போதுமா?"

"எதுக்கிந்த போய் சத்தியம்? எனக்கு நம்பிக்கையில்லபா.
நீங்க நல்லவரா இருந்தா மட்டும் போதாது. நல்ல பழக்க வழக்கமும் கொஞ்சம் வேணும். சந்தர்ப்பம் கிடைச்சாலும் சபலப் படக் கூடாது. சிகரெட்தான் முக்கியம்னு நினைக்கரவா எதுக்கு கல்யாணம் குழந்தைகள்னு பல்கிப் பெருகணும்? எல்லாரையும் கஷ்டப்படுத்தணும்?"

அந்த இரண்டு நாளும் பேசவே இல்லை. திங்கட் கிழமை காலை
சூட்கேசைத் தூக்கிக் கொண்டு என் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தார்.

"வழில எதுவும் சாப்ட வேண்டாம். இதுல இட்லி இருக்கு. ஜாக்ரதையா போயிட்டு வாங்கோ"

"கோவம் குறைஞ்சுதா?"

"இது கோவமில்ல வருத்தம். நான் சொன்னதெல்லாம் மறந்துட வேண்டாம்"

"வரட்டுமா" நழுவி நகர்ந்தார்.

ஊருக்குப் போய்ச் சேர்ந்து நாலு தினமாகிறது. இதுவரை ஒரு போன் பண்ணவில்லை. அப்படி என்ன வேலையோ. இன்றைக்காவது பேசுகிறாரா
பார்ப்போம்.

அலுவலகத்திலிருந்து கடற்கரை சாலையில் நடைப் பயணமாய் வீடு வந்து சேர்ந்த போது டெலிபோன் அடிப்பது கேட்டது. பெரிய பெண் எடுத்துப் பேச நான் உள்ளே சென்றேன்.

" யாருடி அப்பாவா?"

" இல்ல ஆனா அப்பா ஆபிஸ்லேர்ந்துதான் போன்"

"என்னவாம்?" கேட்கும்போதே என் குரல் லேசாய் நடுங்கிற்று.

"ஐ திங் அப்பா இஸ் நோ மோர்மா."

சுருண்டு மூலையில் அமர்ந்தேன். தேகம் முழுக்க மின்சாரம் தாக்கினாற்போல் சுண்டியிழுத்த வலி. அடி வயிறு கழன்று தனியே விழுந்து விட்டாற்போல் இருந்தது. அதிர்ச்சியில் கண்ணீர் அடைபட்டுப் போயிற்று.

"நிஜமா? நிஜம்தானா இது!..... ஏதாவது ராங் காலாக இருக்குமோ?

இல்லை என்றன தொடர்ந்த தொலை பேசி அழைப்புகள். என்னக்குள் எதோ நழுவியது.

" ஹலோ அங்கிள் சௌக்கியமா? நா சௌக்கியம்தான். உங்களுக்கு ஒரு வருத்தமான சேதி. கொஞ்சம் முன்னால அப்பா தவறிட்டார்.
ஹார்ட் அட்டாக் ."

இருபது வயதுப் பெண் தன் துக்கம்மறைத்து கேட்பவருக்கு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படாமல் பக்குவமாக நலம் விசாரித்து செய்தி சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தாள்
நான்கைந்து முறை விழுப்புரத்திர்க்குப் பேசி நிலவரங்களைக் கேட்டு அறிந்தாள்.
மாற்றி மாற்றி வந்த தொலை பேசி அழைப்புகளுக்கு அமைதியாக பதில்
அளித்தாள் அழுதபடி வந்த உறவுகளை ஆறுதல் சொல்லி அமர வைத்தாள்

அடுத்த நாள் எல்லாமே முடிந்து போயிற்று. உதட்டில் உட்கார்ந்து
கொண்டிருந்த நெருப்பு முழு உடம்பையும் சுவீகரித்துக் கொண்டது.

"ஆர் யு ஒகே மா?" பெண் என்னருகில் அமர்ந்து பரிவோடு கேட்க மெலிதாய் புன்னகைத்தேன்.

"இது நாள் வரை உள்ள இருந்து ஹிம்சை பண்ணிண்டிருந்த
பயமும் செத்துப் போய்டுத்து. நல்ல காலம் நா பயந்தாப் போலல்லாம் இல்லாம
நல்லபடியாத்தான்...."

அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டேன். யோசிக்க யோசிக்க ஒரு உண்மை விளங்கியது. மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை.
அந்த மரணம் நல்லபடி நிகழ வேண்டுமே என்ற பயம்தான் என்னைக் குடைந்திருக்கிறது. இணைவதற்கு ஒரு முகூர்த்தம் எனில், பிரிவதற்கும் ஒரு முகூர்த்தம் நிச்சயம் இருக்கும். அதற்கு சம்மதிக்கிற மனசு இதற்கும் நிச்சலனமாய் சம்மதித்துத் தானே ஆக வேண்டும். வாழ்க்கை ஒரு ரயில் பிரயாணம் என்று சும்மாவா சொன்னார்கள்! பிரிவுக்கு அஞ்சுபவர்களுக்கு பயண
சுகமும் அனுபவமும் கிட்டுவதில்லை. அந்த அனுபவங்கள் என் எண்ணங்களில்
இனிமையாக படர்ந்திருக்கும். மரணம் விடுதலை எனில் எதற்கு துக்கப் பட வேண்டும்? எல்லாத் துன்பமும் உடல் இருக்கும் வரைதானே. இனி அது உடலற்றது. அதற்கினி எந்த துன்பமும் இல்லை. வெய்யிலில் வாடாது. மழையில் நனையாது. பசியிருக்காது. தாகமிருக்காது. பி.பி. கிடையாது. அடைப்பு ஏற்படாது. அறுவை சிகிச்சைகள் கிடையாது. எவ்வளவு பெரிய விடுதலை. இருக்கட்டும். அது அப்படியே உடலற்று இருக்கட்டும். காமத்திற்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும்தான் உடல் வேண்டும். காதலுக்குத் தேவையில்லை.
உடலற்றதொடும் காதல் தொடரலாம்.

நீண்ட நாள் கழித்து நான் பயமின்றி உறங்கினேன்,

தொலைபேசி நீளமாய் அடித்தது. எழுந்து சென்று எடுத்துப் பேசினேன்.

"ஹலோ"

"நாந்தாம்மா எப்டியிருக்க? " அவர் குரல்தான்.

"நல்லார்க்கேன்"

"அப்பறம் என்ன விசேஷம்?"

"விசேஷம்தானே. உண்டு. நீங்கள் செத்துப் போய் விட்டீர்கள். ஞாயிற்றுக் கிழமை உங்களுக்கு பத்து. வந்து விடுங்கள்"

"கண்டிப்பா வரேன் படையல் மெனு என்ன?"

"உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் உண்டு. உப்பில்லாமல்."

"சிகரெட் உண்டா?"

"உண்டு. நிக்கோட்டின் இல்லாமல்."
*****************
பி.கு.
இந்த சுய கதை அமுதசுரபியில் வந்தது. கான்க்ரீட் மனசுகள் என்ற தொகுப்பிலும் சேர்க்கப் பட்டுள்ளது, அதே அமுதசுரபியிலும், குமுதம் ஹெல்த்திலும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வுக்காக இதைக் கட்டுரையாக எழுதிக்கொடுத்தேன். இதனைப் படிப்பவர்களில் உடனடியாய் சிலராவதும், போகப் போக பலரும் புகைப்பதை விட்டு விடுவார்கள் என்கிற ஆசையோடுதான் இங்கே இதனைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.




15 comments:

R. Gopi said...

ரொம்பக் கஷ்டமாக உள்ளது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:(((

Krishnakumar Sathiyawageeswaran said...

your 'kannam Poochi' is an eye opener for many. Even I do my bit of warning many unknown strangers on my way. These are all the experiences. Many people want to experience themselves without learning from others. Same with talking on mobile while driving, careless driving- many many more can be listed.

"Ungalakku Nalaikku patthu" this statement shows phenomenal maturity of yours. a good example of handling a adverse situation.

Anonymous said...

eventhough i expect this is what going to happen... no words to say... except this... "SORRY"

எண்ணங்கள் 13189034291840215795 said...

நம்பவே முடியலீங்க..:((

பிரிவுக்கு அஞ்சுபவர்களுக்கு பயண
சுகமும் அனுபவமும் கிட்டுவதில்லை. அந்த அனுபவங்கள் என் எண்ணங்களில்
இனிமையாக படர்ந்திருக்கும். மரணம் விடுதலை எனில் எதற்கு துக்கப் பட வேண்டும்? எல்லாத் துன்பமும் உடல் இருக்கும் வரைதானே. இனி அது உடலற்றது. காமத்திற்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும்தான் உடல் வேண்டும். காதலுக்குத் தேவையில்லை.
உடலற்றதொடும் காதல் தொடரலாம்.//


எவ்வளவு தெளிவா சொன்னீங்க...

வார்த்தையில்லை பகிர..

பிள்ளைகளுக்கு எம் அன்புகள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அனுபவித்துப் படித்தேன்!

"உழவன்" "Uzhavan" said...

மிகச் சிறந்ததொரு படைப்பு இது. ஆனால் உண்மைச் சம்பவம் என்கிறபோது மனசு வலிக்கிறது.

கே. பி. ஜனா... said...

இதயத்தை உலுக்கியது!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கண்களை நிறைத்தது. ஒரு பெண்ணாய் மன உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது... என்ன சொல்லியும் ஆற்ற முடியாத துக்கம் உற்ற துணையின் இழப்பு... காலம் மட்டுமே ஆற்றும் புண்...

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப கஷ்டமாருந்தது வித்யா..

R. Gopi said...

இந்தக் கதை பற்றி வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_12.html

Asiya Omar said...

பக்குவப்பட்ட எழுத்து,மனது பிசைந்தாலும் இது தான் நிதர்சனம்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளதால்
வலைச்சரம் இன்று [12.11.2011] ஜொலிக்கிறது.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். அன்புடன் vgk

Dhanalakshmi said...

nandru.....

radhakrishnan said...

இதைப பதிவாக்க கொடுத்தமைக்கு நன்றி
அமுதசுரபியில் படித்தபோதே மிகவும்
பாதிக்கப பட்டேன்.அந்த இதழைப பாதுகாத்து வைக்க நினைத்தேன் முடியவில்லை(நணபர்களுக்குப் பயன்படுமே என்று)இணையத்தில் கொடுத்துவிட்டீர்கள்.அதறகு அழிவில்லை இனி. உங்கள் மனதிடம்
எல்லாருக்கும் வழிகாட்டியாக இருக்கும்
நன்றி அம்மா