சில நாட்களுக்கு முன் "ஆஹா " என்ற படம் பார்த்தேன். சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. இதுவும் அப்படித்தான். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சி என் மனதை உறுத்தியது. கதாநாயகன் பிறருக்காக பழி ஏற்கும் அளவுக்கு நல்லவன். அண்ணன் இறந்து விட்டதாக தகவல் வரும்போது தங்கையின் திருமணத்தில் வீடு உற்சாகமாக இருக்கிறது. யாருக்கும் சொல்லாமல் அவன் மட்டுமே அந்த துக்கத்தை அனுபவிக்கிறான்.
முகூர்த்த நேரம். அம்மா அனைவருக்கும் மலர் தூவி வாழ்த்த கொடுப்பதற்காக மலர் தட்டோடு வந்து மருமகளிடம் கொடுக்க, கதாநாயகன் அவசரமாக வந்து மலர்த்தட்டை அண்ணியிடமிருந்து வற்புறுத்தி பெற்றுக்கொண்டு தானே அனைவருக்கும் விநியோகிக்கிறான். அதன் உள்ளர்த்தம் அண்ணிக்கு இனி அந்த தகுதியில்லை என்பதுதான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் சினிமா பெண்களை பூவோடும் பொட்டோடும் சம்பந்தப் படுத்திக் கொண்டிருக்கப் போகிறது.
ஒருபக்கம் தமிழ் சினிமா தாலி சென்டிமென்ட்டில் நனைந்து கொண்டிருக்க மறுபுறம் நிஜத்திலோ நாகரிகம் என்ற பெயரில் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். விதவைகள் என்ற வார்த்தையே அநாகரிகமாக இருக்கிறது. மரணம் என்பது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவான ஒன்றுதான். எந்தப் பெண்ணும் விரும்பி கணவனை இழப்பதில்லை. தவிர நமது பகவத் கீதையின் படி மரணம் என்பது உடலுக்குத்தான். ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிறது. படிப்பது பகவத் கீதை. இடிப்பது கணவனை இழந்த பெண்களையா?
கணவனை இழந்து விட்டால் அவர்கள் மங்கள காரியங்களுக்குத் தகுதியில்லாதவர்கள் என்ற விதியை யார் எழுதியது? அவளது புருஷனின் ஆன்மா அழிவற்று இருக்கும்போது அவள் எப்படி அவனை இழந்தவள் அவாள்? மறு விவாகம் செய்து கொள்வதும் கொள்ளாததும் அவளது தனிப்பட்ட விருப்பம். மறுவிவாகம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு சுமங்கலி அங்கீகாரத்தைத் திரும்பக் கொடுக்கும் சமூகம், அதற்கு விருப்பமின்றி தன் புருஷனோடு மனதளவில் வாழும் பெண்ணை எப்படி எதற்கும் தகுதியில்லாதவள் என்று முடிவு கட்டுகிறது எனப் புரியவில்லை.
சுமங்கலிகள் வாழ்த்தினால் மட்டுமே தம்பதிகள் நன்றாக இருப்பார்கள் என்றால் கணவனை இழந்த அந்த பெண்ணின் திருமணத்தன்று அவளை வாழ்த்தியதும் சுமங்கலிகள் தானே? அத்தனை சுமங்கலிகள் வாழ்த்தியும் ஏன் அவள் கணவன் இறந்து போனான்? அவர்கள் சரியாய் வாழ்த்தவில்லையா?
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் வாழ்த்துவதற்கு மனம் நிறைய அன்பு இருந்தால் மட்டும் போதும். அருகில் புருஷன் உயிரோடு நின்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சிறுகதையில் அமரர் திரு சுஜாதா விதவைப் பெண்கள் அலுமினிய கூடைகளில் பால் கவர் அடுக்கிகொண்டிருந்தார்கள் என்று ஒரு வர்ணனை செய்திருந்தார். எனக்கு இது உறுத்தலாக இருந்தது. தினமும் நான் அவரை கடற்கரை சாலையில் நடைப் பயிற்சியில் பார்ப்பது வழக்கம். வழக்கமாக எதுவும் பேசாது கடந்து போய்விடுவேன். அன்று அவரிடம் இது குறித்து கேட்டேன். ஏழைப்பெண்கள் பால் கவர்கள் அடுக்கிக் கொண்டிருந்தார்கள் என்று எழுதியிருக்கலாமே. எதற்கு விதவைகள் என்ற வார்த்தை? விதவைகள் எல்லோரும் பால் கவரா போட்டுக்கொண்டிருக்கிறார்கள்? இந்திராகாந்தி நாட்டையே ஆளவில்லையா என்று கேட்டேன். அவர் ஒரு வினாடி திகைத்தார்.
சாரி சார் உங்களைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் எனக்கில்லை. என்மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன். என் உறவினர் ஒருவரின் மூத்த மகள் காதல் திருமணம் செய்தவள் வேற்று சாதிக்காரரை. அடுத்த பெண்ணுக்கு ஒரே சாதியில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. சுமங்கலி பூஜைக்கு மூத்த பெண்ணுக்கு அனுமதியில்லை. வேற்று சாதிக்காரனைத் திருமணம் செய்து கொண்டவள் ஆயிற்றே.
அந்த சுமங்கலி பூஜையில் மனையில் அமர்ந்த ஒரு பெண்மணியின் புருஷன் மொடாக்குடியன். ஸ்திரீலோலன். அனாலும் அவளுக்கு சுமங்கலி மரியாதை கிடைத்தது. மனம் நிறைய அன்பிருந்தாலும் இவளுக்கு அனுமதியில்லை. அத்தனை சுமங்கலிகள் சேர்ந்து பூஜை செய்தும் இன்று அந்த தங்கை கணவனை இழந்து விட்டாள் என்பதுதான் வேதனையின் உச்சம்.
எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் இனியாவது இந்த அபத்தத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனித்தன்மையும் ஒளியும் இருக்கிறது. புருஷனின் மரணம் காரணமாக ஒரு போதும் அது குறைந்து போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக பெண்கள்தான் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
Thursday, November 18, 2010
பெண்ணின் ஒளி
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்ல கேள்வி கேட்டீர்கள்,காலம் மாறிக்கொண்டே இருக்கிறது அம்மா
தமிழ்மணத்தில் தலைப்பை பார்த்து வந்தேன். பகவத் கீதை பற்றியெல்லாம் எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. ஆனால், தங்கள் கட்டுரையின் மையக்கருத்தோடு உடன்படுகிறேன். பத்திகளாக பிரித்து எழுதினால் வாசிக்க வசதியாக இருக்கும். நன்றி
தமிழ்மணத்தில் தங்கள் பெயரைப் பார்த்துவிட்டு
வந்தேன். சினிமாவை தாலி சென்டிமென்ட் என்று
குறிப்பிட்டிருந்தீர்கள். தொலைக்காட்சித்
தொடர்களையும் சேர்த்திருக்கலாம். (தனியாக
அதற்கும் ஒரு இடுகை போடுவீர்களோ?)
திரு.சுஜாதா அவர்களிடம்
கேள்வி கேட்டீர்கள்.
பதில் வாங்காமல் வந்து
விட்டீர்களே? (அவர்தான்
பல இதழ்களில் கேள்விகளுக்கு பதில் சொல்வாரே!)
'ஆஹா' என்று திரைப்படத்தின்
பெயரைக் குறிப்பிட்டது
போல சுஜாதாவின் சிறுகதை
பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.
(பத்தி பிரித்துப் போடுங்கள்!)
நன்று! கணவனுக்கு உரிய கடமைகளை அவர்கள் செய்து குடும்பத்தை வாழ வைத்தும் இருக்கிறார்கள். கணவனை இழந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக யாரையும் மரியாதை குறைவாக நடத்துவது தவறு தான்!
நன்றாக இருக்கிறது.ஒரு விஷயம் யோசித்துப் பார்த்தீர்களா? நன்றாக குழந்தை, குட்டிகள் உள்ள ஒரு குடும்பத்தில் கணவனை இழந்த மனைவி,(அதாவது அந்த குடும்பத்தின் ஆணி வேர்) வாழும் வாழ்க்கையை விட, மனைவியை இழந்த அந்த கிழம் வாழும் வாழ்க்கை கொஞ்சம் அவலம் தான்! அவர் கொஞ்சம் சிடுமூஞ்சியாவோ (அ) முன்கோபியாவோ இருந்தால்..அந்த கடைசி நாட்கள் அவர் கதி அதோ கதி தான்!
எதற்கு சொல்கிறேன் என்றால், பதியை இழந்த அந்த சஹிக்கு மனவலிமை ஜாஸ்தி! ஆனால், அவரோ, தன்னைச் சுற்றி ஒரு தீவை உருவாக்கிக் கொண்டு,
மன அழுத்த்த்தோடு வாழும் வாழ்க்கை இருக்கிறதே அப்பப்பா...எந்த ஒரு ஆணுக்குமே சஹியை இழந்த வாழ்வு சஹிக்க முடியாது தான்!
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
Post a Comment