Thursday, May 31, 2012

எழுத்து சித்தர்.


எண்பதுகளின்  மத்தியில் `அமுதசுரபி' மாத இதழில் எனது "அடைப்பு" என்ற சிறுகதை பரிசு பெற்றிருந்தது.  பரிசளிப்பு விழா ஸ்ரீராம் நிறுவனத்தால் மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடத்தப் பட்டது.  அதில் புதினம், கட்டுரைகள் என்று பல்வேறு தளத்தில் பரிசுகள் வழங்கப்பட இருந்தது.  புதினத்திற்காக பரிசு வாங்கியது திரு பாலகுமாரன்.  ஒரே மேடையில் அவரோடு நானும்  மேடையில் அமர்த்தப் பட்ட போது  ஒருவினாடி அது கனவா நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது எனக்கு.


பரிசளிப்பு விழா முடிந்து வெளியில் அவர் தன் குடும்பத்தாருடன் நின்று பேசிக்கொண்டிருக்க, என கணவர் என்னையும் அழைத்துக் கொண்டு நேராக அவரருகில் சென்றார்.  என மனைவி உங்கள் தீவீர வாசகி என்று என்னை அறிமுகப்படுத்த,  அவர் என்னை ஏறிட்டு பார்த்தார்.  "நீ சிறுகதைக்காக பரிசு வாங்கினாய் அல்லவா?" என்றார்.  ஆமாம் என்றேன்.
தன் மனைவிகளை எனக்கு அறிமுகப் படுத்தினார்.  பிறகு முடிந்தால் நீ வீட்டுக்கு வாயேன், நாம் நிறைய பேசுவோம் என்றார். என் கணவரிடம். விலாசமும் சொன்னார். வரும் முன் போன் பண்ணி விட்டு வா என்றார்.


அடுத்து வந்த விடுமுறை நாளில் போன் பண்ணி விட்டு கிளம்பினேன்.
என் கணவர் அவர் வீட்டின் காம்பசில் விட்டு விட்டு நீ போய் பேசி விட்டு வா.  நான் சற்று பொறுத்து வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.  கமலாவும் சாந்தாவும் புன்னகையோடு என்னை வரவேற்று அமர வைக்க,  சற்று பொறுத்து வந்தார் பாலா.  கூரை வேயப்பட்ட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்.    மெர்க்குரிப் பூக்களில் துவங்கி அதுவரை அவர் எழுதியிருந்தவை  அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எழுத்துலகில் பிரவேசித்திருந்த எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.


 மூன்று மணி நேரப் பொழுது மூன்று நிமிடம் போல் கரைந்திருந்தது.  நான் விடை பெற்று கிளம்பினேன்.  எப்படி போவாய்.?  இது அவர் கேள்வி.
என்னவர் காத்திருப்பார் - இது என் பதில்.  அவர் கண்கள் விரிந்தது. அவர் வந்திருக்கிறாரா?  சொல்லவே இல்லையே,. என்ன பெண் நீ.  அவரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே என்றார்.   இவ்வளவு நேரம் அவரால் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது.  என்றேன்.  நீளவாக்கில் செல்லும் காம்பவுண்டு அது. என்னோடு துணைக்கு வந்தார்.  கேட் அருகில் நின்றிருந்தார் என்னவர்.   ச்சே என்ன மாதிரி ஒரு ஆம்படையான் உனக்கு!   இப்டி ஒருத்தனை நா பார்த்ததே இல்லை என்று நெகிழ்ந்தார் என் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு.


அன்று துவங்கியது எங்கள் நட்பு.   ஒரு நாள்  காலை அவர் எங்கள் வீட்டிற்கு வந்தார்.  ஒரு பக்கம் சமையல், குழந்தைகளை ஸ்கூலுக்கு கிளப்பும் படலம், ஜன்னல் திட்டில் கிடைக்கும் கேப்பில் நான் எழுதிக்க் கொண்டிருந்த கதை பேப்பர்கள்,  என்று அமர்க்க்களமாக இருந்தது,   குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும் வரை பொறுமையாய் காத்திருந்தார்.  பிறகு அரைமணி நேரம்  தான் அடுத்து எழுதப் போகும் நாவல் குறித்து பேசி விட்டு கிளம்பினார்.

என் வீட்டு விசேஷங்களுக்கு நான் அவரை அழைப்பதும்,  அவர் வீட்டு விசேஷங்களுக்கு அவர் எங்களை அழைப்பதும் வாடிக்கையாயிற்று.  ஆரம்பத்தில் இருந்த பயமெல்லாம் போய்  இலக்கிய தர்க்கம் அதிகரித்தது. சிலநேரம் அது சண்டை போல் தோன்றும் மற்றவர்களுக்கு,  என் கதையில் நான் காப்பி தம்ளர்கள்  நிறைய அலம்புகிறேன் என்று கிண்டல் செய்வார்.  கோபமாக வரும்.  பிறகு என் கதையை படித்து பார்த்த போது அது உண்மைதான் என்று தோன்றியது.   மாற்றிக் கொண்டேன்.  பாலகுமாரன் கிண்டல் செய்யாத அளவுக்கு வெகு ஜாக்கிரதையாக எழுத ஆரம்பித்தேன்.


நட்பு என்பது வெறும் காப்பி சாப்பிட்டு விட்டு பேசி விட்டுப் போவது மட்டுமல்ல என்பதை அவர் பல முறை எனக்குப் புரிய வைத்திருக்கிறார்.
ஒருசமயம் என் அக்காவுக்கு நான் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.   என்னிடம் பணமில்லை.   நகையை ஏதாவது வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக வந்தார் பாலா.  என் முகத்தை பார்த்து விட்டு ஏதாவது பிரச்சனையா என்றார்.  ஒனறும்  இல்லை என்றேன்   முகத்தை பார்த்தா அப்டி தெரியலையே. . என்ன சுப்ரமணியம் நீங்கதான் சொல்றது என்றதும் வேறு வழியின்றி பணத்தேவை குறித்து சொன்னோம்.   அவ்ளோதானே எங்கிட்ட கேட்டா நா தர மாட்டேனா என்றார்.   எங்களுக்கு கடன் வாங்கி பழக்கமே இல்லை என்றார் என் கணவர்.   எனக்கும் உங்களுக்கும் நடூல எதுக்கு அவ்ளோ பெரிய வார்த்தை எல்லாம் என்றவர் உடனே கிளம்பினார் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு. 


அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு கவரில் பணத்தோடு வந்தார்.  இந்தா. இதை நான் எப்போ திருப்பி கேட்கிறேனோ அப்போது கொடுத்தால போதும் என்றார்.   இல்லை என் புராவிடன்ட் பண்டு லோன் போட்டு பத்து நாள்ல குடுத்துடறேன் என்றார் என் கணவர்.  அதேபோல் பணத்தை திருப்பி கொடுத்த போது, வேற ஏதாவது கடன் இருந்தா இதை வைத்து அதை அடை.  எனக்கு வேண்டும் என்கிற போது நானே கேட்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.   வேறு கடன் எதுவும் இல்லாத நிலையில் பணத்தை அப்படியே வங்கியில் போட்டு விட்டு வந்தார் என் கணவர்.  ஆறு மாதம் கழித்து பணம் குறித்து நான் நினைவு படுத்த, சரி சுமையா இருந்தா கொடுத்து விடு என்று சொல்லி வாங்கிச் சென்றார்.


மற்றொரு முறை சமூக நலத்துறைக்கு துறை மாற்றம் செய்யப்பட்ட எனக்கு சமூக நலத்துறையில் பணியிடம் வழங்கவேயில்லை.  லீவுல இருக்கயா நீ  என்றார் என்னிடம். நான் விஷயத்தைச் சொன்னேன். உங்க துறைக்கு யார் செயலர் என்றார். நான் சொன்னேன்.  அட இவரா. எனக்கு நல்லா தெரியுமே. அவரைப் போய்ப் பார்க்கலாம் நாளைக்கு என்றார்.  அவரே அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் போனில் பேசி நேரம் வாங்கி, மறுநாள் என்னை அழைத்துச் சென்றார். ஆறுமாதம் நான் அலையாய் அலைந்தபோதும் நடக்காத விஷயம் அரைமணியில் மேஜிக் மாதிரி நடந்தது,   அடுத்த நாள் நான் பணியில் சேர்ந்தேன்.  இப்படி சின்னதும் பெரிதுமாக கேட்டும் கேட்காமலும் செய்த உதவிகள் கணக்கற்றவை.


எனது முதல் நாவல் பதிப்பகம் மூலம் புத்தக வடிவில் வெளி வந்தது அவர் தயவால்தான். அந்தப் புத்தகத்திற்கு அவரே முன்னுரையும் எழுதிக் கொடுத்தார்.  அவருடைய மிகச் சிறந்த சில புத்தகங்களுக்கு என்னை முன்னுரை எழுதவைத்ததார். முன்னுரை என்பது எப்படி எழுதப் பட வேண்டும் என்பதை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.


இதையெல்லாம் விட மிகப் பெரிய உதவியை ஒரு நண்பராக எனக்கு செய்திருக்கிறார். என் கணவருக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. கழுத்து வழியே மூளைக்கு செல்லும் தமனியில் கொழுப்பு அடைத்துக் கொண்டதால் பக்கவாதம் வந்திருந்தது.   மிக சிக்கலான அறுவை சிகிச்சை.  அறுவை சிகிச்சை நடக்கும்போதே ஸ்ட்ரோக் ஏற்பட நிறைய வாய்ப்பு இருந்தது.   அப்படி ஏற்பட்டால்   பிழைப்பதே கஷ்டம்தான்.

தமிழ்நாடு மருத்துவமனையில் என் கணவரோடு நான் மட்டுமே இருந்தேன்.  அதிகாலை அவரை அறுவை சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் சென்றதும், இனி உன்னை நல்ல படியாய் பார்ப்பேனா மாட்டேனா என்கிற பயமும் பதற்றமுமாய் நான் மட்டும் தனியே வெளியில் அமர்ந்திருந்த நிலையில் என் தோளைத் தொட்டது ஒரு கரம. திரும்பினால் பாலா.   என் கண்கள் உடைந்தது.    அவர் எதுவும் பேசாமல் என்னருகில் அமர்ந்தார்.  கிட்டத்தட்ட நான்கு மணிநேரம்.   இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.   சிலையாய் அமர்ந்திருந்தோம்.   டாக்டர் வெளியில் வர நான் எழுந்து ஓடினேன்.  டாக்டர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.   போஸ்ட் ஆபரேஷன் அறையில் இருக்கிறார். போய்ப் பாருங்கள் என்றார். நானும் பாலாவும் உள்ளே போனோம். டாக்டர் என்னைக் காட்டி யார் தெரிகிறதா என்றார்.  தெரிகிறது என்றார்.  பாலாவைக் காட்டி இது யார் சொல்லுங்கள் என்றார்.   பா   லா ...மிக மெலிதாக சொன்னதும் பாலகுமாரனின் கண்களில் கண்ணீர்.       பிறகு என் கணவர் டிஸ்சார்ஜ் ஆன போது,   அவரை தன் காரில் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டதும் அவர்தான்.


அங்கிருந்து சற்று நேரத்தில் கிளம்பியவர் நேராக என் வீட்டிற்கு சென்று என் அம்மாவிடம் சற்று கோபமாகவே பேசி இருக்கிறார். இப்டி அவளை தனியா விட்ருக்கப் படாது நீங்க.   ஏதோ ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா  தாங்கிப் பிடிச்சுக்கக் கூட யாருமில்லாம தன்னந்தனியா அவ உட்கார்ந்திருந்தது  வயத்தைக் கலக்கிடுத்து.  உங்களால முடியலைன்னா எங்கிட்ட சொல்லியிருந்தா நா சாந்தா கமலா ரெண்டு போரையும் அனுப்பி இருப்பேனே.  என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்.  பாவம் என் அம்மா  என் குழந்தைகளுக்கு காவலாய் தான் வீட்டிலிருந்ததை சொல்லி இருக்கிறாள்.


எப்படியோ காப்பாற்றியும் கூட என் கணவருக்கு தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை.   மறுபடியும் புகைப் பழக்கம் தொற்றிக் கொள்ள ஒரு நாள் அது அவரை முழுவதுமாய் எரித்து விட்டது.
பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த பாலா என் பெண்ணிடம் என் கணவரின் புகைப் படத்தை வாங்கிக் கொண்டு சென்று பத்திரிகைகளுக்கு செய்தி சொன்ன கையேடு அந்த படத்தை பெரிதாக்கி லாமினேட்டும் செய்து கொடுத்தார்.  அந்தப் படம் இன்று வரை பீரோவில்தான் இருக்கிறது. வெறும் புகைப்படமாய் என்னவரை பார்க்க எனக்கு விருப்பமில்லாததுதான்   வெளியில் வைக்காத காரணம்.


அதற்கு பிறகு பால குமாரன் என் வீட்டுப் பக்கமே வரவில்லை. நான் போன்  செய்து பேசி ஏம்ப்பா அப்பறம் இங்க வரவில்ல என்றபோது அவர் சொன்ன பதில்.   சுப்பிரமணியம் இல்லாத வீட்டுக்கு வர எனக்கு கஷ்டமார்க்கு. பிடிக்கல. உனக்கு தோணும போது நீ என் வீட்டுக்கு வந்து பேசிட்டு போ.  - இதுதான்.  


அதன் பிறகு இன்று வரை அவர் என் வீட்டுக்கு வரவில்லை,. வந்தாலும் வாசலோடு பேசி விட்டுப் போவார்.  நாளாக ஆக  நாங்கள் பேசிக்கொள்வது கூட குறைந்து போயிற்று. சிலநேரம் அது வருடக் கணக்கில் கூட இருக்கும்.  ஆனால் எப்போது பேசினாலும் என்னமோ நேற்று விட்ட இடத்திலிருந்து பேசுவது போல் படு இயல்பாய் பேசிக் கொள்வோம். சண்டையிட்டுக் கொள்வோம்.  கிண்டலடித்துக் கொள்வோம்.   பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு  என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்.


எதற்கு திடீரென்று பாலாவைப பற்றி எழுதுகிறேன் என்று தோன்றும்.  இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்.   எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே அவர் புகைப்பதை நிறுத்தி விட்டாலும், எப்போதோ புகைத்ததன் பாதிப்பு இன்று அவரது நுரையீரலில் கோளாறை ஏற்படுத்தி இருக்கிறது     

வீட்டிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜன் சிலிண்டரோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்.   எது என் கணவரை என்னிடமிருந்து பறித்துச் சென்றதோ, எது என் நண்பரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறதோ, அதை இனியாவது இந்த உலகம் தூக்கி எறிய வேண்டும். என்ற தவிப்பில்தான் இன்று இந்த பதிவை எழுதி இருக்கிறேன்.  நீங்கள் புகைப்பவர் ஆனாலும் சரி, அல்லது புகைக்க விரும்புகிறவர் ஆனாலும் சரி, உங்களுக்கு நாள் சொல்ல விரும்புவது,

"உங்கள் உதட்டில் உட்காரும் அந்த சிறு நெருப்பு ஒரு நாள் உங்களையே சுட்டெரிக்கும் என்பதை நினைவில் கொண்டு  அதை ஒதுக்கித் தள்ளுங்கள் என்பதே"





  


Thursday, April 5, 2012

தையல்காரர்

அந்த வரிசை மிக நீண்டிருந்தது. ஏன் எதற்கு இப்படி வரிசையில் நின்றிருக்கிறார்கள் என்று புரியவில்லை. பிறந்த குழந்தைகளோடு கூட சிலர் நின்றிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. ஒரு சிலரது முகம் மட்டும் சற்றே வாடியிருந்தது.

என்ன வரிசை இது? நான் ஒரு இளைஞனிடம் கேட்டேன். முன்னால் போய்ப் பாரும்.

நான் போனேன். அங்கே ஒரு மிகப் பெரிய வாசல். அதன் முகப்பில் ஒரு பெரிய பலகை. அதில் ``இவ்விடம் உங்கள் பழைய சட்டையைக் கொடுத்து புதிய சட்டை வாங்கிச் செல்லுங்கள். என்று எழுதியிருந்தது. ஆஹா மிக்சி கிரைண்டர், டிவி க்கு தான் இப்படி ஒரு சலுகை கிடைக்கும். சட்டைக்குமா? சரிதான் நாமும் வாங்கி விட வேண்டியதுதான். நான் வரிசையில் நிற்கும் எண்ணத்தோடு மெல்ல நடந்தேன்.

வயது வித்தியாசமின்றி எல்லோரும் வரிசையில் புது சட்டைக்காக நின்றிருந்தது வியப்பாயிருந்தது.

``ஏங்க பெரியவரே என்ன வயசு உங்களுக்கு?

யாருக்குத் தெரியும்? எனக்கு ஆறு புள்ளைங்க பொறந்த பொறவுதான் நாட்டுக்கு சொதந்தரம் கெடச்சுது.

``இந்த வயசுல புது சட்டை போட ஆசையா?

``ஏன்? எவனோ தருமராசன் கொடுக்கறான். உனக்கென்ன போச்சுதாம்?

நான் யாரந்த தருமராசன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அவன் தன் கையில் அளவெடுக்கும் நாடா ஒன்று வைத்திருந்தான். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கொடுப்பதை ஒரு சிரிப்போடு கொடுத்தால்தான் என்ன என்று கேட்கத் தோன்றியது. அதற்கு மேலிருந்தான் அவனது உதவியாளன். வரிசையின் ஒழுங்கை கவனித்துக் கொண்டிருந்தான் அவன். நீ பின்னால போ, நீ முன்னால வா, நீ இன்னும் பின்னால போ என்று தன் விருப்பத்திற்கு வரிசையை மாற்றிக் கொண்டிருந்தான்.

ஏங்க தையல்காரரே உங்க ஆள் என்ன இப்டி செய்யறார்? ஒரு நியாயம் வேண்டாம்? “ பின்னால் விரட்டப் பட்ட யாரோ ஒரு முதியவர் கத்தினார். வயசானவன்னு ஒரு இரக்கம் வேணாம்?

தையல்காரர் காது கொடுத்தாற்போல் தெரியவில்லை.

வேறென்ன? சின்ன பசங்க கிட்ட லஞ்சம வாங்கியிருப்பான். அதான் நைசா முன்னாடி தள்ளி விட்டுட்டான்.

அவன் எந்த புலம்பலுக்கும் விடை பகரவில்லை.

தையல்காரர் அளவு நாடாவை சுழற்றி அடுத்த ஆளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றார்.

இத்தனை பேருக்கும் இவரிடம் புது சட்டை இருக்குமா?. சும்மா சொல்கிறாரோ?

``ஏங்க ஒரு ஆள் கூட புது சட்டையோடு வெளிய வரக காணுமே.

``இது உள்ள போற வழி தம்பி. புது சட்டை வாங்கிட்ட பெறகு வேற வழியா வெளிய போவணுமாம்

``எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க நல்ல சட்டைய வாங்கிட்டு பொத்தல் சட்டயத் தந்து எமாத்திடப் போறாங்க.

``அட யார்யா இவன் சும்மா தொண தொணத்துக்கிட்டு போய்யா அப்பால

நான் பின் வழியைத் தேடி நடந்தேன். பின்னால் பல வாசல்கள் தெரிந்தன. சற்று நேரம் அங்கே நின்றேன். கூட்டம் கூட்டமாய் பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. குட்டி யானை ஒன்று அசைந்து வந்தது வெளியில். ராஜகுமரன் போல் ஒரு சிறுவன் அதன் மீது கம்பீரமாய் அமர்ந்திருந்தான். அவனைத் தொடர்ந்து அழகிய பெண்கள், பஞ்சத்தில் அடிப்ட்டாற்போல் எலும்பு துருத்தும் குழந்தைகள் என்று பின் வாசலும் ஜே ஜே என்றிருந்தது.

நீங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா?

நாங்கள் புது சட்டை வாங்கியாயிற்று.

``எங்கே.... பிடித்திருக்கிறதா?..

``எனக்குப் பிடித்திருக்கிறது. பழைய சட்டையில் நிறைய குறைகள் இருந்தன. இறுக்கிப் பிடித்துக்கொண்டு மூச்சே விட முடியாது. இந்த தையல்காரர் எமகாதகன்தான். நிமிடத்தில் கச்சிதமாய் ஒரு சட்டை தைத்துக் கொடுத்து விட்டார். ஆனால் அந்த நாடாவால் இழுப்பதுதான் பிடிக்கவில்லை. பயமாயிருக்கிறது. கொஞ்சம் அன்பாக அழைத்துச் சென்றால் என்னவாம்.

``இலவசமாய் தருகிறார் அல்லவா அதான் அந்த திமிர்.

``எனக்கும் என் சட்டை பிடித்திருக்கிறது. பழைய சட்டை மிகவும் நைந்திருந்தது இந்தப் புது சட்டை என்னை எப்படி இளமையாய் காட்டுகிறது பார்.

என்னோடு வந்த என் தாத்தாவைக் காணவில்லையே ஒரு பெண் பெரிதாய் அழுததும் பதறினேன் உதவியாளனிடம் ஓடிச்சென்று கேட்டேன்

``அவருக்கு சட்டை கிடையாது

``எங்கே அவர்?

நிர்வாணமாய் நிற்கிறார். வெளியில் வர மாட்டார்.

``அதெப்படி இத்தனை பேரை வெளியில் அனுப்பிவிட்டு அவரை மட்டும் எப்படி நிர்வாணமாய் நிற்க வைப்பீர்கள்? இது சரியாய்த் தெரியவில்லையே

``அது அப்படித்தான் இங்கு யாரும் கேள்வி கேட்கக் கூடாது புரிந்ததா?

``என்ன சர்வாதிகாரம் இது? நீங்கள் பாட்டுக்கு ஒரு ஆளை காணாமலடித்து விடுவீர்கள். நாங்கள் கேளிவியும் கேட்கக் கூடாது என்கிறீர்கள். இது அக்கிரமம்

அவன் பதில் சொல்லாது நகர்ந்தான்.

``நீ கவலைப் படாதே பெண்ணே. நான் உள்ளே சென்று உன் தாத்தாவை அழைத்து வருகிறேன்

நான் அவனை அழைத்தேன். ``இந்த வரிசையில் எங்கு நான் நிற்பது?“

``ஏற்கனவே நீ வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறாய். உன் நேரம் வரும் போது உள்ளே வா

நான் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். இத்தனை பழைய சட்டைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இந்த தையல்காரர்? இவர் எலோருக்கும் நன்மை செய்கிறாரா? அல்லது ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரா?

``இரண்டும் இல்லை. எனக்கு சொல்லப் பட்ட பணியைச் செய்கிறேன்.

தையல்காரர் அளவு நாடாவால் என்னை உள்ளே இழுத்தார்.

``யோவ் யோவ் பார்த்து பயத்தில் நான் பதறினேன். கொஞ்சம் மூத்திரம் வந்து விட்டது.

உள்ளே வெளிச்சமாயிருந்தது. அங்கே கோடிக்கணக்கில் புது சட்டைகள் குவித்து வைக்கப் பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு அங்கே விடை கிடைத்தன. பல புதிர்கள் அவிழ்ந்தன.

``சட்டையைக் கழற்று

நான் கழற்றினேன். புது சட்டை தருவதற்காக காத்திருந்தேன்.

``அப்படி போய் நில்

``என் புது சட்டை எங்கே?

``இல்லை

அவன் அடுத்த ஆளை உள்ளே இழுத்தான்.

என்னை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

நான் நிர்வாணமாய் நின்றேன். அடுத்த ஆள் புது சட்டையோடு வெளியே சென்றதைப பார்த்துக் கொண்டிருந்தேன்.

``நீ கொடுத்து வைத்தவன். இனி உனக்கு வரிசை கிடையாது

எனக்குப் புரிந்தது, நானறிந்த ரகசியங்களை வெளியில் சொல்ல எனக்கு அனுமதியில்லை.

Saturday, February 18, 2012

விருது வாங்கலையோ விருது.!


நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு கற்றலும் கேட்டாலும் ராஜி என் கைபேசிக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை இன்று காலை எட்டு மணிக்குதான் பார்த்தேன். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி மேற்படி விருதுகளை எனக்கு அளித்திருப்பதாக ராஜி செல் போனிலும் அழைத்து சொல்ல ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுப் பக்கம வந்திருக்கிறேன். இரண்டு மாதமாய் நான் பதிவு எழுதாத கரணம் குறித்து ஒரு பதிவே எழுதி விடுகிறேன். என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.


இனி எனக்குப் பிடித்த விஷயங்கள்.

இசை மழை எந்நேரமும் வேண்டும். (கர்நாடக இசை, மலையாள திரை இசை, பழைய தமிழ் திரைப் பாடல்கள்)

நிஜ மழையும் பிடிக்கும். கொட்டும் மழை, மெலிதாய் குழலிசை, கையில் தி.ஜா.வின் புத்தகம் வேறென்ன சுகம் வேண்டும்?

குழந்தைகள். இந்த விஷயத்தில் நான் நேருவுக்கு அக்கா. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எனக்குள் ரோஜாக்கள் மலரும். என் வீட்டின் இரட்டை ரோஜாக்கள்தான் இப்போது என் சொர்க்கம்.

நல்ல திரைப் படங்கள் - மொழி பேதமின்றி நல்ல படங்களை தேடித் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த படம் "Pursuit of Happiness"

நட்பு - நான் மிகவும் மதிப்பளிக்கும் விஷயம் நட்பு. நான் மிக உண்மையான நட்பை கொடுப்பவள். எதிர்பார்க்கிறவள். என் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பாகவே இருக்கும். என்னுடைய ஒவ்வொரு நட்பும் நண்பர்களும் உயர்ந்தவை. என் குழந்தைப் பருவத்து தோழியோடு இன்றளவும் இறுக்கமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து உறவுகளுக்குள்ளும் உறவு மீறிய நட்பிருத்தல் அவசியம் என எண்ணுபவள்.


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் படி இந்த விருதுத் திருவிழா பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இதுவும் ஒரு சந்தோஷம்தான். காக்கைக் கூட்டமாய் பகிர்ந்து கொள்வோமே.

நான் விருதளிக்கவிழைவது.


கோபி ராமமூர்த்தி. http://ramamoorthygopi.blogspot.in/2012/02/2.html





இவர்கள் எல்லோரும் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களா எனத் தெரியாது.
இருந்தாலும் நானும் அளிக்கிறேன்.

இந்த விருதுத் திருவிழாவில் அதிகபட்ச விருதுகள் பெறுபவருக்கு இப்பவே எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

மீண்டும என்னை ஒரு அவசர பதிவெழுத வைத்த ஆரண்ய நிவாசிற்கு எனது நன்றி.

Friday, December 9, 2011

ஆஹா, மெல்ல நட மெல்ல நட ...

சென்ற சனிக்கிழமைக்கும் முந்தைய சனிக்கிழமை காலை ஒரு ஒன்பதரை மணி இருக்கும். மைலாப்பூர் வடக்கு மாடவீதியில் சரவணபவன் அருகில் சாலையைக் கடக்கலாம் என எண்ணி இரண்டடி எடுத்து வைத்திருப்பேன். ஒரு வினாடி கும்மிருட்டு. ஒரு ஸ்கூட்டர் என்னை இடித்த வேகத்தில் நான் அப்படியே உட்கார்ந்த வாக்கில் கீழே விழுந்திருப்பது அடுத்த வினாடியில்தான் எனக்குப்புரிந்தது. என் தவறா ஸ்கூட்டர் ஒட்டி வந்த இளைஞனின் தவறா தெரியவில்லை. நான் தடுமாறி எழுந்து நின்றேன். பார்த்து வர வேணாமா? இது அந்த இளைஞனின் கேள்வி. நான் நடக்கலாம் என எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தால் இடது காலை ஊன்றவே முடியவில்லை. வலி என்னைப் பிளந்தது. “பார்த்துப் போங்க என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். நான் நடக்க முடியாமல் திகைத்து நின்றேன். ஒரு பெண் உதவிக்கு வர, ஆட்டோ ஒன்று பிடித்து மிகுந்த சிரமத்தோடு எப்படியோ ஏறிக் கொண்டேன். உடனே என் பெரிய பெண் வித்யாவுடன் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

அவள் கீழேயே காத்திருந்தாள. ஆட்டோவிலிருந்து இறங்குவது அதை விட சவாலாயிருந்தது. என் பெண் பயந்து விட்டாள் என்னை காம்பவுண்டுக்குள் ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு மாடிக்குப் போனாள். குழந்தைகள் இருவரையும் சர்வன்ட்டின் பொறுப்பில் விட்டு விட்டு பெண்ணும் மருமகனும் கீழே வந்தார்கள். மறுபடியும் கார் ஏறும படலம். மலர் மருத்துவமனையில் எனக்காக ஒரு சக்கர நாற்காலி காத்திருந்தது. எக்ஸ்ரே பெஞ்ச்சில் ஏறிப் படுப்பதற்குள் வலி பிராணன் போயிற்று.

மனசு குருவாயூரப்பனுடன் தர்க்கம் செய்தது. “இடிச்சு கீழ தள்ளியாச்சு. சந்தோஷம்தானே? அதோட நிறுத்திக்கோ சொல்லிட்டேன். எலும்பு கிலும்பு ஏதாவது முறிஞ்சிருந்துதோ படவா உன்னை சும்மா விட மாட்டேன். அப்டி எதாவது இருந்தா பாவம் என் பொண்ணு கைக்குழந்தைகளோட என்னையும் எப்டி பார்த்துப்பா? அவளை நீ கஷ்டப் படுத்தப்படாது சொல்லிட்டேன்.

சற்று நேரத்தில் என் பெண் வந்தாள். “அம்மா பிராக்ச்சர் இல்ல. லிகமென்ட் டேர் ஆகியிருக்கு. பெல்விக் போன்ல லேசா கிராக் விட்ருக்கு. தானா சரியாய்டும்னார் டாக்டர் என்றாள் அந்த வரை தலைப்பாகையோடு போயிற்று என்றாலும் வலி பெரும் பிரச்சனையாக இருந்தது. இடது காலை ஊனவே முடியவில்லை என்றால் எப்படி நடப்பது? வாக்கரில் கூட நடப்பது சிரமமாகவே இருந்தது. வலி தெரியாமலிருக்க ஊசியும் மாத்திரைகளும் கொடுத்தார்கள். வீடு வந்தால் அங்கே மாற்றொரு சோதனை. லிப்ட் இயங்கவில்லை. மழை வேறு கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய ஆலோசனையே நடந்தது. இறுதியில் சேரில் உட்கார வைத்து தூக்கிச் சென்று விடுவதென்று முடிவாயிற்று.

கார் டிரைவரும் வாச்மேனும் மாடிப்படி வரை தூக்கி வந்து சற்று மூச்சு வாங்குவதற்கு நிற்க என் வில் பவர் விழித்துக் கொண்டது.

“நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிரித்தார்கள். முடிந்தால் ஏறு என்றாள் பெண். கீழ்ப் படியில் உட்கார்ந்தேன். அப்படியே மெது மெதுவாக பின்பக்கமாகவே ஒவ்வொரு படியாக உட்கார்ந்தபடியே ஏறினேன். இனி படிகள் திரும்பும். மறுபடியும் சேர் பயணம். இதுவே அந்தக் காலத்து ராஜ ராணி கதைகளில் வரும் பல்லாக்காக இருந்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். (குசும்புதான்)

இந்த லிகமென்ட் டேர் எப்போது சரியாகும் எப்போது நான் நன்றாக நடப்பேன் என்கிற விக்ரமாதித்யன் கேள்வியோடு படுக்கையில் அமர்ந்தேன். “கழுத அது நடக்கறப்போ நடந்துட்டு போகட்டும். அது வரை இந்த அனுபவத்தையும் என்ஜாய் பண்ணி விட்டு போவோமே. மனம் குதூகலத்திற்கு தயாராயிற்று.

ஆறு வருடம் முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது உபயோகித்த வாக்கர் புத்தம் புது பெயின்ட் வாசத்தோடு வந்து சேர்ந்தது. பத்து மாத இரட்டைப் பேரக்குழந்தைகள் வாக்கரில் நான் நடப்பதை கண்ணகலப் பார்த்தார்கள். நடக்க முடியவில்லையே தவிர உட்கார்ந்தபடி என்னால் என்னென்ன செய்ய முடியுமோ செய்து கொடுத்தேன்.

என் உலகம் என் பேரக்குழந்தைகளிடம் ஒடுங்கியது. அவர்களும் இப்போதுதான் எதையாவது பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பேரக் குழந்தைகளோடுநானும் நடை பயின்று கொண்டிருக்கிறேன். எப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது! நான் வாக்கர் பிடித்து நடக்கத் துவங்கினால் போதும் ஆளுக்கொரு திசையிலிருந்து தவழ்ந்தோடி வந்து வாக்கரின் இரு பக்கத்தையும் பிடித்துக் கொண்டு நின்று விடுவார்கள்.

வாக்கரில் அழுத்தம் கொடுத்து நடக்கும் போது விலாப் பக்கம் வலிப்பதால் நேற்று வாக்கர் இல்லாமல் சுவற்றைப் பிடித்தபடி கால்களைத் தரையில் இப்படியும் அப்படியுமாய் திருப்பியபடி நான் நடந்தது என் பேரக் குழந்தைகளுக்கு நாட்டியமாடுவது போல் தோன்றியது போலும் அப்படி ஒரு சிரிப்பு இருவருக்கும். அந்த சிரிப்பில் வலி போயே போச் என்பது போலிருந்தது. .

இந்த பதினைந்து நாளில் நானுமே பாதி குழந்தையாகி விட்டேன் எனலாம்.

குழந்தைகள் கேட்பதற்க்காக போடப்படும் நர்சரி ரைம்ஸ் எல்லாம் இப்போது மனப்பாடம். படிக்கிற காலத்தில் ஒன்று கூட உருப்படியாய் சொன்னதில்லை. எங்கே அந்த என் ஒன்றாம் கிளாஸ் மிஸ்? இப்போது வந்து கேட்கட்டும். பஸ்ட் மார்க் எனக்குத்தான் நிச்சயம்..

இதோ பதினைந்து நாட்கள் ஓடியே போய் விட்டது. இன்டர்நெட்டில் லிகமென்ட் டேர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இதில் மூன்று நிலை உண்டாம். முதல்நிலை சாதாரணமானது. நான்கைந்து நாளில் சரியாகி விடும். இரண்டாம் நிலை ஒன்றிலிருந்து இரண்டு மாதம் வரை ஆகலாம். மூன்றாம் நிலைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. ஆக என்னுடையது இரண்டாம் நிலை என்று தெரிந்து கொண்டேன்.

இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் கட்டாய தற்காலிக ஓய்வு. அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும்தான் நடக்கவில்லையே தவிர மற்றபடி எனக்கு எல்லாம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. வேளா வேளைக்கு என் பெண் சுடச் சுட சாப்பிடக் கையில் கொண்டு வந்து கொடுக்கிறாள். அனுபவி ராணி அனுபவி! கால் சரியானதும் எந்த மலை ஏறலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் மலை ஏறும் நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என் பாலிசி நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும். எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.

இது வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே. சாலையில் நடக்கும்போது கவனத்துடன் நடக்க வேண்டும் என்று சொல்லவே எழுதியுள்ளேன்.

தினமும் என் நலம் விசாரிக்கும் “கற்றலும் கேட்டலும் ராஜிக்கும், ராஜி மூலம் விஷயம் தெரிந்து என்னோடு பேசிய கோபி ராமமூர்த்திக்கும் என் நன்றி.

Friday, November 25, 2011

மழலைகள் உலகம் மகத்தானது. (தொடர் பதிவு)




மழலைகள் உலகம் மகத்தானது  நான் இப்போது மகத்தான உலகின் நடுவில்தான் நிற்கிறேன். என் இரட்டைப் பேரக் குழந்தைகளின் குறும்புகளையும், கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும் ஒவ்வொரு நொடியும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் நம்மை விட அறிவுக் கூர்மை மிகுந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே.

இந்த அர்த்தம் பொதிந்த வரிகளில் முதலிரண்டு வரிகள் முற்றிலும் உண்மைதான். ஆனால் அன்னையின் வளர்ப்பு மட்டும்தான் ஒரு குழந்தையை நல்லவராகவோ தீயவராகவோ ஆக்கும் என்பதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது, பிறந்தவுடன் தாயை இழந்து, தந்தையாலும், நெருங்கிய உறவுகளாலும் நல்லவனாக வளர்க்கப் பட்ட எத்தனையோ குழந்தைகள் உண்டு. அன்னை என்பவள் ஒரு உன்னதமான உறவு. தாள முடியாத வலியை சகித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதால் அவள் அந்தக் குழந்தையின் வளர்ப்பில் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறாள். அது இயற்கை.

ஒரு குழந்தையை யார் வளர்க்கிறாரோ அவர் நல்ல சிந்தனைகளுடன் நற்குணங்கள் பொருந்தியவராக இருத்தல் வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். யாரைப் பார்த்து குழந்தைகள் வளர்கின்றனவோ அவர்களது பாதிப்புடன்தான் அவை வளரும்.

என் அப்பா மிக மிக நேர்மையானவர். உழைப்பாளி. கண்ணியம் மிகுந்தவர். கண்டிப்பானவர். அவரிடம் புகைக்கும் பழக்கம் இருந்தது. என் தம்பி புகைக்கப் பழகிய போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவனை கண்டிக்க முடியவில்லை அவரால். அதேபோல் என் கணவருக்குப் புகைப்பழக்கம் இருப்பது தெரிந்தும் அவர் அதை தவறாகக் கருதவில்லை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் விஷம் கொல்லத்தானே செய்யும். இது தவறு என்று பக்குவமாய் என் அப்பாவுக்கு எடுத்துச் சொல்ல யாருக்கும் தெரியவில்லை. எனவேதான் என் தம்பி விஷயத்தில் அவர் வாய் மூடிக்க் கொள்ளும் நிலை. இது ஒரு உதாரணம்தான். நம்மைத்தான் குழந்தைகள் பிரதிபலிப்பார்கள் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

என்னை மிக மிக பாதித்த, யோசிக்க வைத்த ஒரு குழந்தை உண்டு. அதன் தகப்பன் ஒரு பெரிய அரசன். அவன் ஒரு நாள் ஒரு யாகம் செய்கிறான். தந்தை யாகம் செய்வதை அருகில் இருந்து பார்க்கிறான் அந்த பால் மணம் மாறாத சிறுவன். யாகத்தின் முடிவில் தனக்கு உதவாத தன்னிடம் வீணான பொருட்களையெல்லாம் தானம் செய்கிறான் அரசன். தந்தை செய்வது தவறு எனப் புரிகிறது சிறுவனுக்கு. ஆயினும் தந்தையை எல்லோர் முன்னிலையிலும் குற்றம் சொல்வது சரியாகாதே, இருப்பினும் பூடகமாக தந்தைக்கு சிறந்தவற்றைத்தான் தானமாக அளிக்க வேண்டும் என உணர்த்த நினைக்கிறான் அவன் அப்பாவைப் பார்த்து கேட்கிறான்.

“அப்பா என்னை யாருக்கு தானமாக அளிக்கப் போகிறீர்கள்.?

ஒரு தகப்பனுக்கு தன் குழந்தையைவிட சிறந்த ஒன்று இருக்க முடியுமா? அதனால்தான் அப்படிக்கேட்டான். தந்தைக்குப் புரியவில்லை. குழந்தை ஏதோ கேட்கிறது என்று விட்டு விட்டான். சிறுவன் மீண்டும் மீண்டும் கேட்டதும் தந்தைக்கு எரிச்சலேற்பட்டது. அந்த எரிச்சலோடு பதில் சொன்னான்.

“உன்னை எமனுக்கு தானமாய் அளிக்கிறேன்

சிறுவன் சற்றே யோசித்தான். பல விஷயங்களில் முதல் நிலையிலும் பலவற்றில் இடை நிலையிலும் இருக்கும் என்னை எமனுக்கு அளிப்பதன் மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? இருப்பினும் தந்தை சொன்ன சொல் பொய்யாகி விடக்கூடாது என முடிவெடுத்தான் அவன். எமனைத் தேடிக் கிளம்பினான்.

எமலோகத்தில் எமன் இல்லை. சிறுவன் காத்திருந்தான். மூன்று நாட்களுக்குப் பின் எமன் வந்தான். தன் இருப்பிடத்தில் ஒரு சிறுவன் மூன்று நாட்களாய் அன்ன ஆகாரமின்றி இருந்திருப்பதை அறிந்ததும் துடித்துப் போனான். விருந்தோம்பல் என்ற பண்பிலிருந்து தான் தவறி விட்டதாக வேதனைப் பட்டான். சிறுவனை உபசரித்தவன் தன் தவறுக்கு பிராயச்சித்தமாய் அவனுக்கு மூன்று வரங்கள் தர முன் வந்தான். எமனின் வற்புறுத்தலை ஏற்று சிறுவன் மூன்று வரங்கள் பெற சம்மதித்தான்.

முதல் வரமாக அவன் கேட்டது.
“நான் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது என் தந்தை என் மீது கோபப் படாமல் என்னை புரிந்து கொள்ள வேண்டும் அவர் மனக் கவலை அற்றவராக தெளிந்த மனதுடன் என்னோடு பேச வேண்டும.
எமன் அதனை ஏற்று முதல் வரத்தை அளித்தான்.

இரண்டாவது வரம் கேட்டான் சிறுவன்.
“சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி சொல். இதுவே எனது இரண்டாவது வரம்.
வேதகாலத்தில் தான் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தையே நாடினான் மனிதன். சொர்க்கத்திற்குச் செல்லவும் யாகம் உண்டு.

எமன் அது பற்றி சொன்னான். “விழிப்புடன் கேள் குழந்தாய் சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி உன் இதயக் குகையில் உள்ளது. உன் புத்தியை விழிப்புறச் செய்யும் வித்யை உன்னிடம் இருந்தாலொழிய நீ அதனை உணர முடியாது, அந்த அகப்பயிற்சியோடு நீ புறத்திலும் அந்த யாகத்தை செய்யலாம்.

எமன் அந்த யாக குண்டம் எப்படி அமைய வேண்டும் என்னென்ன பொருட்கள் வேண்டும் எப்படி யாகம் செய்ய வேண்டும் என்று விளக்கினான், இனி இந்த யாகம் உன் பெயராலேயே அழைக்கப்படும் என்று உபரியாய் ஒரு வரமும்
.
மூன்றாவது வரமாக சிறுவன் கேட்டது எமனையே திகைக்க வைத்தது.

“மரணத்திற்குப் பிறகு மனித நிலை என்ன என அறியவிரும்புகிறேன். மூன்றாவது வரமாக இந்த உண்மையைச் சொல்

சிறுவன் கேட்டதும் எமன் திகைத்தான். குழந்தாய் இது மிகப் பெரிய உண்மை. நீயோ சிறுவன். இதைப் பற்றி அறியும் வயதல்ல. தேவர்களுக்கே இன்னும் இது குறித்து தெளிவு ஏற்படவில்லை வேறு ஏதாவது கேள்.

“இல்லை இதுகுறித்து அறியவே விரும்புகிறேன்.
எமன் தயங்கினான். சிறுவனின் மனம் மாற்ற முயன்றான்.

“உனக்கு சகல செல்வங்களைத் தருகிறேன். அழகிய தேவலோகப் பெண்களைத் தருகிறேன். மானிட உலகின் அடையமுடியாத அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கிறேன் சந்தோஷமாயிரு. இதை மட்டும் கேட்காதே சரியா.?

“நீ சொல்லும் எல்லா சுகங்களும் நிலையற்றவை. நான் அறிய விரும்புவது நிலையான ஒரு ஒப்பற்ற உண்மையை. அதனை எனக்கு சொல்ல வில்லை எனில் நீஅளித்த மற்ற இரு வரங்களையும் நீயே திரும்பப் பெற்றுக் கொண்டு விடு.

சிறுவன் பிடிவாதமாக இருந்தான். அவனது உறுதியும் தெளிவும் விவேகமும் கண்டு எமன் மூன்றாவது வரத்தையும் தர முன்வந்தான். மரணத்திற்குப் பிறகு மனித நிலையை உபதேசித்தான்.

இந்தச் சிறுவன் யாரென அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

கட உபநிஷதத்த்கின் நாயகன் இவன்தான். நசிகேதஸ் என்பது அவன் பெயர். இவன் பெயரால் அழைக்கப் படும் யாகமே நசிகேத யாகம். இவனது மூன்றாவது வரமாக எமன் சொன்ன உண்மைகளே எம கீதை என்றழைக்கப் படுகிறது.

இந்தக் கதையை இந்தப் பதிவில் சொல்வதற்குக் காரணமிருக்கிறது.
நசிகேதன் கதையிலிருந்து நாம் தெரிந்து கொண்டு நம் குழந்தைகளுக்கு சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.
அ) சிரத்தை.

நசிகேதன் தன் தந்தை செய்த யகத்தையும் தானப் பொருட்களையும் சிரத்தையுடன் கவனித்ததால்தான் அவனுக்கு
அவரது தவறு புரிந்தது.


ஆ) சுய மதிப்பீடு
.
தன்னிடம் இருந்த குறைகளும் நிறைகளையும் பற்றி யோசிக்கும் அவன், தன்னை தானமாய் அளிப்பதால் தந்தைக்கு என்ன பலன் கிடைக்கும் என நினைக்கிறான். சுய மதிப்பீட்டை சிலர் கர்வம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. தமது நிறை குறைகளை மதிப்பீடு செய்து அடுத்த அடியை எடுத்து வைக்கிறவன், வாழ்வில் உயர்வான் என்பதற்கு நசிகேதன் ஒரு முன்னுதாரணம்.


இ) உண்மைகளை ஏற்கும் தெளிவு.

அப்பா தன்னை எமனுக்கு அளிப்பதாகக் கூறியதும் அவன் கலங்கவில்லை. மறுக்கவில்லை. அதை ஏற்கிறான். ராமாயணத்தில் ராமனுக்கும் இந்த குணம் இருந்தது. அதனால்தான் தந்தை இட்ட கட்டளை ஏற்று மறு கேள்வியின்றி கானகம் கிளம்பினான். இந்தக் காலத்தில் இதற்கு வாய்ப்பிருக்கிறதா தெரியவில்லை. குழந்தைகள் நிறைய கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு நாம்தான் தெளிவான உண்மையான பதிலைக் கூறி அவர்கள் அதை ஏற்கச் செய்ய வேண்டும்.


ஈ) துணிவு.

எமனையே நேருக்கு நேராக சந்திக்கும் துணிவு இருந்தது அவனிடம். எம லோகத்தில் மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி காத்திருக்கும் உறுதியும் இருந்தது. தன் முயற்சியில் வெற்றியடைய துணிவுடன் காத்திருக்த் தெரிய வேண்டும்.


உ) ஆசையின்மை.

இந்த உலகில் எது நிலையான சுகம், எது அல்ப சுகம் என்று பிரித்துப் பார்க்க அவனுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் எமனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் உறுதியாக இருந்தான். இன்றைய தேதியில் ஆசையற்று, சன்யாசிகள் கூட இருப்பதில்லை. சாதாரணர்கள் எந்த மூலைக்கு? ஆசை தவறில்லை. அனால் நாம் சுகிப்பவை எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து பற்று அதிகம் வைக்காதிருக்க பழகிக்கொள்ள வேண்டும். நமது ஆசைகள் நியாயமானவைகளாக இருக்க வேண்டும். நாம் இறந்த பிறகும் நம்மைப் பின் தொடர்பவை எவை என்பதை அறிந்து அவற்றின் மீது ஆசை கொள்ள வேண்டும்.


நசிகேதன் கேட்ட முதல் வரம் தன் தந்தை தன்னுடன் அன்பாயிருக்க வேண்டும் என்று. இதன் மூலம் குடும்பத்தில் நல்லுறவு அவசியம் எனத் தெரிந்து கொள்ளலாம்.


இரண்டாவது வரம் யாகம் பற்றியது. யாகத்தின் மூலம் இயற்கையுடன் தொடர்பு கொள்ளலாம். அதனால்தான் அதனை இரண்டாவது வரமாகக் கேட்டிருக்கிறான். இயற்கையோடு இசைந்து வாழ்வதும் அவசியமே.
மூன்றாவது வரம் மிகப் பெரிய உண்மையை பற்றியது. .
குடும்பத்துடனும், இயற்கையுடனும் நல்ல தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பவருக்கு மிகப் பெரிய உண்மைகள் புலப்பட ஆரம்பித்து விடும்

.
கட உபநிஷதம் மிக அழுத்தமாய் சொல்கிறது. ஒரு குழந்தை உயர்வானவனாக உருவாக மூன்று தொடர்புகள் தேவை என்று. அந்த மூவர் மாதா, பிதா, குரு.. இந்த மூவரும் சரியான வழியைக் காட்டினால்தான் உயர்ந்த உணமைகளை குழந்தைகள் அறியமுடியும். இதில் ஒன்று தவறாக இருந்தாலும் அது அந்தக் குழந்தையின் பாதையில் பெரிய தடைக்கல்லாக நின்று விடும்.

Friday, November 18, 2011

குருவாயூருக்கு வாருங்கள்




ஆண்டுக்கு ஒரு முறையாவது குருவாயூருக்கு சென்று உண்ணிக் கண்ணனை தரிசிக்கா விட்டால் என் சக்தி எல்லாம் வடிந்து விட்டாற்போல் தோன்றும். அந்த அளவுக்கு அவன் என் இஷ்ட தெய்வம். என் கைபேசியில் தினமும் காலை மூன்று மணிக்கு நாராயணாய நமோ என்று பி.லீலாவின் பாடல் அலாரமாய் ஒலிக்கும். சரியான பிரம்மமுஹுர்த்த்ம். என் மனம் குருவாயயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று நிர்மால்ய தரிசனம் செய்யும். தொடர்ந்து வாகச்சார்த்து சங்காபிஷேகம் என்று ஒவ்வொன்றாய்க் காணும். இப்போதெல்லாம் கயிலாயத்திற்கும் தினமும் ஒரு முறை சென்று வருகிறேன்.


என்னதான் இருந்தாலும் நேரில் தரிசிக்கப் புறப்படும் போது ஏற்படும் சந்தோஷம் இருக்கிறதே. சொல்லி மாளாது. நவம்பர் பதினான்கு ஒவ்வொரு வருடமும் பாலக்காட்டில் ரதோல்சவம் (தேர் திருவிழா) நடக்கும். அதற்கும் செல்கிறார் போல புறப்படுவது வழக்கம். வழக்கமாய் குருவாயூரில் இரண்டு நாட்கள், பாலக்காட்டில் மூன்று நாட்கள் இருப்போம். இம்முறை விடுப்பு பிரச்சனை. எனவே மொத்தமே மூன்று நாட்கள்தான். பனிரெண்டாம் தேதி திருவனந்தபுரம் மெயிலில் கிளம்பினேன் என் நாத்தனாருடன். என் சின்னப் பெண் கவிதா பெங்களுரிலிருந்து வருவதாக ஏற்பாடு.


எங்கள் பெட்டியில் எல்லோரும் பெண்களே. நடுவில் பளிச்சென்று ஒரு பையன். பதினாறு வயதிருக்கும். நல்ல நிறம். நல்ல உயரம. டீக்காக பேன்ட் ஷர்ட் அணிந்து நவீன கைக் கடிகாரம் கட்டிக் கொண்டு ஐடி மாணவன் போல தோற்றம். அந்த பையனுக்கு எஸ் ஒன்பதில் இருக்கை. அவனது அம்மாவிற்கு எங்கள் பெட்டியில் இருக்கை. சற்று உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது. பையன் மன நலம் குன்றிய்வ்ன் என்பது. கடவுளின் மீது கோபமாக வந்தது.


அந்தப் பையனுக்கு இடம் கொடுப்பதற்காக ஒருவர் எஸ் ஒன்பது பெட்டிக்கு செல்ல சம்மதித்தார். நானும் என் நாத்தநாரும் எங்களது லோவர் பர்த்தை அவர்கள் இருவருக்கும் அளித்து விட்டு மிடில் பர்த்தில் படுத்துக் கொண்டோம் ஆளாளுக்கு காட்டிய அன்பில் நெகிழ்ந்து விட்டார் அந்தத் தாய்..


மிடில் பர்த்தில் இருந்த வலைப் பையில் என் மூக்கு கண்ணாடியை கழட்டிப் போட்டு விட்டு படுத்தேன் நான். மறுநாள் காலை மூன்று மணிக்கு என் கை பேசி நாராயணா எனப் பாடி எழுப்பியது. மூன்று நாற்பதுக்கு பாலக்காடு ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னமோ எல்லாம் சற்று மங்கலாகவே தெரிய ஒரு வேளை கண்ணாடி மாற்ற வேண்டுமோ என நினைத்தபடி ஆட்டோ ஏறி வீட்டுக்கு வந்தோம். உறவுகளோடு பேசியபடி கண்ணாடியைத் துடைப்பதர்காகக் கழற்றிய போதுதான் தெரிந்தது, இரண்டு பக்க லென்சுமே அதில் இல்லை என்பது. நான் புரண்டு படுத்த போது இடித்து அந்த வலைப் பையிலேயே அவை விழுந்திருக்கிறது, வெறும் பிரேமை மட்டும் மாட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.


என் முதல் கவலை கண்ணாடி இல்லாமல் குருவாயூரப்பனை எப்படி தரிசிக்கப் போகிறோம் என்பதுதான். அதற்குள் என் சித்தி தனது உபரி கண்ணாடி ஒன்றைக் கொடுத்து சரியாகுமா எனப் பார்க்கச் சொன்னார். என் நல்ல நேரம், ஓரளவுக்கு சமாளித்து விடலாம் போலிருந்தது.


நாங்கள் குளித்து விட்டு குருவாயூருக்குப் புறப்படத் தாயாரானோம். ஏன் பெண் வரவேண்டிய பெங்களூர் வண்டி ஒரு மணி நேரம் தாமதம் என்றாள் தொலைபேசியில். ஒரு வழியாய் அவள் வந்து சேர்ந்த பிறகு கிளம்புவதற்குள் தாமதமாகிவிட்டது. உச்சிக்கால பூஜை முடிந்து நடை சார்த்துவதற்குள் தரிசிக்க முடியாவிட்டால் நான்கு மணிக்கு மேல் தரிசித்து விட்டு பாலக்காடு திரும்ப இரவு வெகு நேரமாகி விடும். “ஹல்லோ நான் வந்து கொண்டிருக்கிறேன். ஏமாற்றி விடாமல் தரிசனம் கொடுத்து விட வேண்டும் சரியா? உள்ளுக்குள் கொஞ்சலும் கெஞ்சலுமாய் சம்பாஷணைகள். பயணம் முழுவதும் குருவாயூரப்பன் நினைவுதான்.


பீ.லீலாவின் ஒரு பாடல் உண்டு. அந்த பாடலின் ஒலி நாடா இணைத்திருக்கிறேன். அதில் ஒரு வரி. நிர்மால்ய தரிசனத்திற்கு நடை திறப்பதற்கு முன்பே மேல்சாந்தி எனப்படும் தலைமை பூசாரி குளத்தில் குளித்து வந்தாயிற்று என்றிருக்கும். பிறகு பகவானின் எண்ணைக் காப்பு, வாகப் பொடி சார்த்து,, நவகாபிஷேகம், சங்காபிஷேகம், அலங்காரம் என்று ஒவ்வொன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கும். அந்த மேல்சாந்தி குளித்து வருவதை யாரும் பார்க்க முடியாது. சிறப்பு நிர்மால்ய தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தாலலொழிய. அப்படி ஒரு நிர்மால்ய தரிசனம் நீ என்று எனக்கு அளிக்கப் போகிறாய்? அந்தப் பாடலில் வரும் அத்தனை விஷயங்களையும் நான் பார்க்க வேண்டாமா? அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் இந்தக் கேள்வி எழும். கூடவே பாடலின் அர்த்தத்தில் கண்கள் கலங்கிக் கொட்டும்.


Vagacharthu1 by vidyasubramaniam


இரண்டு வருடம் முன்பு என் சினேகிதி மைதிலி மற்றும் லலிதா என்பவர்களுடன் குருவாயுருக்குப் போனபோது மைதிலி, “உஷா ஸ்பெஷல் நிர்மால்யம் பார்க்கப் போகிறோம் என்றாள். அவளது உறவினர் ஒருவர் மூலம் அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. இரவெல்லாம் தூங்கவில்லை. உடலும் மனமும் பரபரத்தது. விடியற்காலை ஒரு மணிக்கு எழுந்து குளித்து விட்டு மேற்கு கலவரா வாதிலுக்கு (கதவு) அருகில் வந்தோம். இரண்டேகால் மணிக்கு அந்தக் கதவு வழியாக உள்ளே அனுமதிக்கப் பட்டோம். எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோவிலுக்குள் நாங்கள் ஒரு பத்து பேர் மட்டுமே கொடிமரத்திர்க்கருகில் நின்றிருந்த போது எனக்கு அது கனவா நனவா என்றே புரியவில்லை. நாங்கள் நின்றிருக்க்கையில் இன்னும் இருவர் வந்தனர். அதில் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டாரில் ஒருவரான சுரேஷ் கோபி.


மனசுக்குள் நாம ஜெபத்துடன் நின்றிருக்கையில் அந்தக் காட்சி....! குளித்து ஈர முண்டுடன் சற்றே உடல் உதர வேகமாக வந்து கொண்டிருந்தார் கோவிலின் மேல்சாந்தி. (மேல்சாந்தி ஸ்நானம் கழிஞ்சு வன்னு) பாடல்வரி என் மனசுக்குள் ஓடிற்று. அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே அழைக்கப்பட, மூடிய சந்நிதிக் கதவுகளுக்கு வெளியே நாங்கள். நின்றோம். உடம்பு நடுங்கியது எனக்கு. எதிர்பாராமல் கிடைக்கும் சிறப்பு நிர்மால்ய தரிசனமல்லவா? கோவிலுக்கு வெளியில் இதைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கையில் நாங்கள் சன்னிதி முன் அதை முதலில் காண நின்றிருக்கிறோம் என்பது எத்தகைய பேறு.


சடாரென நடை திறக்கப் பட்டது. முந்தைய இரவு அலங்காரங்களோடு நிர்மால்ய தரிசனம் தந்தான் அவன். அவசரமாய் விழி நீரை துடைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தேன். அதேநேரம் கோவில் வெளிக் கதவு திறக்கப்பட பக்தர்கள் கூட்டமும் முண்டியடித்து வந்தது. நான் சட்டென சுரேஷ் கோபியின் அருகில் ஒதுங்கி நிற்க அவரது பிராபல்யத்தால் எங்களுக்கும் அங்கே நிற்க சற்று நேரம் அனுமதி கிடைத்தது. அலங்கராம் கலைக்கப் பட்டு முழு விக்கிரகமும் பளிச்சென எண்ணைக் காப்பில் மின்னியது. அடுத்து வாகப் பொடி சார்த்து.


(கேசவனுண்ணி கண்ணன்டே மேனி கேஸாதி பாதம் எண்ண தேச்சு. வாசன வாகப் பொடிசார்த்தி, வாசுதேவன் மேனி நீராட்டி) உள்ளே பாடல் ஒலித்தது. போதும்டாப்பா போதும். இந்த ஜென்மம் நற்பயனடைந்தது.

தொடர்ந்து சங்காபிஷேகமும் பார்த்து விட்டு கண்ணீரோடு வெளியில் வந்து விட்டேன். இப்போதும் என் மனசுக்குள் அந்தக் காட்சிகள் பத்திரமாக இருக்கிறது. தினமும் விடியல் மூன்று மணிக்கு அதைத்தான் பார்க்கிறேன்.


குருவாயூரில் பஸ் நின்றது. பின் வாசல் வழியே உள்ளே நுழைந்தோம். நல்ல காலம் நேரமிருந்தது. பெண்கள் வரிசையில் நின்று கொண்டோம். உச்சிக்கால அலங்காரத்திற்கு நடை சார்த்தப் பட கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்தோம். குருவாயூர் கோவிலில் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் சலிப்பு ஏற்படவே படாது. பொழுது போய்விடும்.


ஒரு வழியாய் வரிசை நகர்ந்து. என் கண்களிடம் கெஞ்சினேன். கலங்கி விடாதீர்கள். எனக்கு காட்சி மறைந்து விடும். கலங்காமல் ஒத்துழையுங்கள் ப்ளீஸ். சன்னதிக்கு முன் இருந்த சிறிய மண்டபம வரைதான் அனுமதி. அங்கேயே அனைவரும் தரிசனம் முடிந்து அனுப்பப் பட்டோம். ஒரு சில வினாடிகள்தான். கருடன் மீது அமர்ந்த கோலம்.! நீ பறந்து வந்தற்கு நானும் பறந்தபடி காட்சி தருகிறேன் என்கிறார் போலிருந்தது. ஒரு சில வினாடிகளே என்றாலும் மனசு திருப்தியடைந்தது. என் பெண்ணுக்கு துலாபாரப் பிரார்த்தனையும் நிறைவேற்றிய பிறகுதான் வயிற்றுப் பசி தெரிந்தது.


கேரளா டூரிசம் ஹோட்டல் ஒன்றிருந்தது. சாப்பாடு வெறும் நாற்பத்தி ஐந்து ரூபாய்தான். வாசனையான புழுங்கலரிசி சோறுடன் படு சுவையாக இருந்து. பால் பாயசத்தோடு. ஒரு வழியாய் இந்தவருட குருவாயூர் தரிசனம் முடிந்து உடம்பு நிறைய புது சக்தியோடு பாலக்காட்டிற்குத் திரும்பினோம். அடுத்த நாள் காலை எங்கள் அடிமைக் காவு எனப்படும் குலதெய்வக் கோவிலான காவசேரியில் இருக்கும் பறக்காட்டு பகவதி கோவிலுக்கு ஆட்டோ ஒன்றில் போய் விட்டு திரும்பிய பொது கல்பாத்தி சிவன் கோவில் தேர் முழு அலங்காரத்தோடு சிவா பெருமான் ரத ஆரோகணம் செய்வதற்குக் காத்திருந்தது.


இந்தபதிவில் பீ.லீலாவின் பாடலை அப்லோட் செய்வதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே, கற்றலும் கேட்டலும் ராஜிக்குதான் வெளிச்சம். மொபைலின் ராஜி சொல்ல சொல்ல நானும் ஏதேதோ செய்து ஒருவழியாய் அப்லோட் ஆயிற்று. குருதட்சினையாக ராஜிக்கே இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.