Thursday, April 14, 2011

அன்பென்ற மழையிலே (சிறுகதை)

நான் இருந்தது ஒரு இருட்டு அறை. என் பசிக்கு உணவு யார் தந்தார்கள், நான் சுவாசிக்க யார் உதவுகிறார்கள்? எதுவும் தெரியாது எனக்கு.

அந்த இருட்டறையில் அவ்வப்போது என்னோடு வந்து பேசிக் கொண்டிருந்தவன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டான்.

அவன் மட்டுமே என் உற்ற தோழன். நற்றுணையும் அவனே. கடவுள் என்றால் என்ன உறவு? ஒருநாள் நான் அவனிடம் கேட்டேன்.

“அதை நீ உணரும் போது மீண்டும் என்னைக் காண்பாய் என்றான் அவன்

“அது வரை உன்னைக் காண முடியாதா? ஏன் இப்படிச் சொல்கிறாய்? இனி எனக்குத் துணை யார்?

“கவலை வேண்டாம். உனக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள். நானும் உன்னோடுதான் இருப்பேன். நீ மனது வைத்தால் என்னைக் காண முடியும்.

அவன் சொன்னது எதுவும் எனக்கு விளங்கவில்லை. என் உடல் நழுவுவது போலிருந்தது. உடம்பெல்லாம் வலி. நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தேன். கண் கூசிற்று.

என் பத்து விரல்களிலும் பொம்மலாட்ட பொம்மையைப் போல ஏகப்பட்ட பாசக் கயிறுகள். ஒவ்வொன்றும் ஒரு உறவு. அம்மா, அப்பா, பாட்டி அக்காக்கள், மாமாக்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்கள் சகோதரர்கள், நான் பிறந்த பிறகும் கூட கயிறுகள் புதுசாய் சுற்றிக் கொண்டன. தம்பி, தங்கைகள் என்றார்கள். வளர வளர நட்புக் கயிறுகளும் என்னைச் சுற்றிக் கொள்ள, ஆஹா இந்த உலகம் எவ்வளவு அன்பாய் அழகாயிருக்கிறது என்று பூரித்துப் போனேன்.

எல்லா உறவுகளுக்கும் நான் செல்லம். என் கண்ணில் கண்ணீர் வந்ததில்லை. வேளைக்கொரு உடை போட்டு அழகு பார்த்தார்கள். என் பசிக்கு பல கரங்கள் சோறூட்டக் காத்திருந்தன. நான் கடவுளை மறந்தே போனேன்.

ஒருநாள் மொத்த உறவுகளும் என்னை எங்கோ அழைத்துச் சென்றது.

கோயில் என்றார்கள். அப்படி என்றால்? நான் கேட்டேன்.

“கடவுள் இருக்கும் இடம்.

நான் திகைத்தேன். எங்கே?

“உள்ளே கருவறையில்

நான் ஓடினேன். கருவறை இருட்டாயிருந்தது உற்றுப் பார்த்தேன்.

கருப்பாய் சிலையொன்று கண்டேன். இதுவா கடவுள்? நான் கண்ட கடவுள் வேறு. காணும் கடவுள் வேறு. அவன் எங்கே? எனக்கு குழப்பமாயிருந்தது.

நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளேனா அல்லது வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு வந்துள்ளேனா? எனக்குப் புரியவில்லை

ஆயினும் இதுதான் கடவுள் என்று எல்லோரும் சொல்ல நானும் ஏற்றுக் கொண்டேன். இது ஏன் பேசவில்லை? ஏன் சிலையாய் அசையாது நின்றிருக்கிறது? கடவுள் பற்றி ஆளுக்கொன்று சொன்னார்கள். சிலர் பயமுறுத்தினார்கள். தப்பு செய்தால் கண்ணைக் குத்தும் என்றார்கள். சிலர் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றார்கள்.

யாருமே கடவுளை சரியாய் அறியவில்லை. தினப்படி பூ போட்டு, விளக்கேற்றி வழிபடுவது, பண்டிகைகள் கொண்டாடுதல் இவைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் செய்யும் காரியமாயிருந்தது. நானும் அந்த ஜோதியில் கலந்தேன். கடவுளைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொரு பருவமாய் என்னை விட்டு வலியின்றி பிரிந்தது. நான் தினமும் புதிதாய்ப் பிறந்தேன். வளர்ந்தேன்.

என் கழுத்தில் புதிதாய் ஒரு பாசக் கயிறு சுற்றிக் கொண்டது. புருஷன் என்றார்கள். இனி எல்லாம் அவன்தான் உனக்கு என்றார்கள். புருஷன் மூலமும் புதுசு புதுசாய் உறவுகள்.

நான் பிறக்கும்போது என் அம்மாவும் இப்படித்தான் அலறினாளா? நேற்று வரை என் குழந்தைகளும் கடவுளோடு பேசியிருக்குமோ?. எனக்கே இன்னும் விளங்காத உண்மையை அவர்களுக்கு எப்படி விளங்க வைக்கப் போகிறேன்.

மகளாய் மட்டுமிருந்தபோது வராத கஷ்டங்கள் எல்லாம் தாயான பிறகு வரிசை கட்டி வந்து நின்று வாசற கதவை தட்டியபோது வாழ்க்கை என்பது துன்பமும் நிறைந்தவைதான் எனப் புரிந்தது. இப்படித்தான் என்னைப் பெற்றவர்களும் துன்பங்களை மறைத்து என்னை வளர்த்தார்களோ?

பணம் பொருள் இன்பம் என்று தேடுதல் வேட்டையில், காலம் முதலையைப் போல என்னைப் புரட்டிப் புரட்டிப் போட்டது. என் உறவுகளும் நட்புகளும் திசைக்கொன்றாய் கயிறை அறுத்துச் செல்ல, மிகச் சில கயிறுகளே என் விரல்களில் மிச்சமிருந்தன. ஒன்று அப்பா இன்னொன்று அம்மா, பின், தம்பி, தங்கை அக்கா இவ்வளவே உடனிருந்தன.

ஒரு மழைநாளில் அப்பாவின் கயிறும் இற்றுப் போய் அறுந்தது. இனி அப்பாவைக் காண முடியாது என்பது கொடுமையான உண்மை. கொஞ்சம் சக்தி என்னை விட்டு அகன்றாற்போல் தோன்றியது. அப்பாவை மரணம் பிரித்தது என்றால். மற்றதை கருத்து வேறுபாடுகள் அறுத்தெறிந்தன.

என் கையில் புருஷனும் பெண்களும் மட்டுமே ஒட்டியிருந்தார்கள். என் கையில் மட்டும் ஏன் கயிறுகள் இத்தனை சீக்கிரம் அறுந்து போகின்றன. ஏன் என் பாதையில் மட்டும் இத்தனை மேடு பள்ளங்கள்? அந்த இருட்டில் எத்தனை சந்தோஷமாயிருந்தேன்.! எங்கே போனான் கடவுள்? உன்னோடு இருப்பேன் என்றானே! இருக்கிறானா இல்லையா, அல்லது என் கண்ணுக்குத்தான் தெரியவில்லையா?

“இருக்கிறேன், காணும் முயற்சியை நீதான் எடுக்கவில்லை,

நான் திகைத்தேன். எங்கே இருந்து வந்தது இந்தக் குரல்.?

“உனக்குள்ளிருந்துதான்.

உள்ளேயா?

“ஆம் உன் பார்வையை உள்ளே திருப்பு.

நான் முயற்சித்தேன். நிறைய யோசித்தேன். வாசித்தேன்.

நிறைய பேர் கடவுளைக் கண்டிருக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள். அறியும் முயற்ச்சியில் இருக்கிறார்கள். மிக மெல்லிய திரைதான் அவனுக்கும் எனக்கும் நடுவில். அதை நீக்கி அவனைக் காண்பது என் கையில்தான் உள்ளது.. மும்மலமும் என்னிலிருந்து வெளியேறினால்தான் திரை நீங்கும. எப்படி நீக்குவது? அது அவ்வளவு சுலபமாயில்லை. நான் தவித்த நேரம் படீரென்று அறுந்தது மற்றொரு கயிறு. என் கழுத்து விடுபட்டது. என் உடலின் பாதி எரிந்து சாம்பலாயிற்று. மரணம் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஜீவன் உடலை விட்டு எங்கே செல்கிறது? இனி நான் என் காதலை எப்படி யாரிடம் காட்டுவேன்?

“ஏன் என்னிடம் காட்டேன்.

நான் உள்ளே பார்த்தேன். சற்றே வெளிச்சம் தெரிந்தது. இருட்டில் நான் கண்ட அதே கண்கள்!

வந்து விட்டாயா நீ?

“எப்போதும் இங்குதான் இருக்கிறேன். நீதான் கவனிக்கவில்லை.

ஆமாம் என்னைச் சுற்றி இருந்த உறவுகள் உன்னை மறைத்துக் கொண்டிருந்தன. அவர்கள்தாம் எல்லாம் என்ற அகந்தையில் நீ இருப்பதை கவனிக்கவில்லை. ஆனால் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருந்தேன் நம்பு.

அந்தக் கயிறுகள் நிலையற்றவை. என்னைப் பற்றிக் கொள். உன்னை என்றும் விட மாட்டேன். உன் துன்பங்கள் எல்லாம் நீயாகத் தேடிக்கொண்டவை. பாசம் எப்போதும் வழுக்கும். அதில் உழலாதே.

அப்படியானால் உன்னிடமும் பாசம் வைக்கலாகாதா?

“ என் கேள்விக்கு பதில் சொல். உன்னை நீ நேசிக்கிறாயா? “

“ஆம்.

“அதே போல் என்னையும் நேசி. நீ வேறு நான் வேறு அல்ல. உண்மையான அன்பை மனிதர்கள் அறிய மாட்டார்கள். நான் அறிவேன். உன் பாசக் கயிறால் என்னை கட்டிப் போட்டுப் பார். அது என்றும் அறுந்து போகாது. நான் உனக்குள் கட்டுண்டு கிடப்பேன்.

எனக்கு அழுகை வந்தது. “ஏன் மனிதர்களுக்கு அன்பு உணர முடியவில்லை.?

“அதனால்தான் அவர்கள் மனிதர்களாகவும், நான் கடவுளாகவும் இருக்கிறேன்.

என் இருள் சற்றே அகல, நான் அவனைப் பற்றிக் கொள்ளத் தயாரானேன். மனதில் பயமில்லை. பொய்யில்லை. அன்பு மட்டுமே இருந்தது.

நான் அவனைத் தொட்ட வினாடி மொத்த உலகத்தின் மீதும் என் அன்பு பொங்கி வழியத் துவங்கியது


பின் குறிப்பு.:

இந்த கதை, சிறுகதை இலக்கணம் மீறியது. காலம் பல உள்ளடக்கியது, இதை இப்படித்தான் எழுத முடியும் என்பதால் இலக்கணம் மீறியிருக்கிறேன்.

Tuesday, April 12, 2011

பெண் எழுத்து (தொடர் பதிவு)

பெண் எழுத்து எனும் தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்த மனோ சாமிநாதனுக்கு நன்றி. தனது பதிவில் மனோ எழுதியதெல்லாம் ஒப்புக் கொள்ளக் கூடியவைதான், ஆண் எழுத்து பெண் எழுத்து என்றெல்லாம் கிடையாது என்றாலும் எல்லை மீறி காமமும் வர்ணனையும் எழுத பெண்ணால் முடியாது. பெண் எழுத்தின் அழகும் அதுதான். அப்படியே விதி மீறலாக ஒரு பெண் கவிஞர் சுய வர்ணனை செய்து எழுதிய கவிதையும் அந்த கவிதாயினியும் பட்ட பாடும், அவரும் மிகத் துணிச்சலாக அதை எதிர் கொண்டதும் அனைவரும் அறிந்ததுதான். விரசமில்லாமல் கண்ணியமாய் எழுதுகிற ஆண் எழுத்தாளர்களையும் நான் அறிவேன். பெண்ணை மட்டம் தட்ட சுஜாதாவின் கதாநாயகன் ஒருவன் கேட்பான். என்னால் முடிவதெல்லாம் உன்னால் முடியுமா என்று. அவளும் முடியும் என்பாள். எங்கே இதைச் செய் என்று சுவற்றில் சிறுநீர் கழிப்பான். பெண்ணை மட்டம் தட்ட இதுவா வழி? எனக்கு சுஜாதாவை மிகவும் பிடிக்கும் என்றாலும் இது படித்த போது கோபம் வந்து சற்றே மரியாதையும் குறைந்தது. இனவிருத்திக்காக கடவுள் ஆண் உடலுக்கு ஒரு அமைப்பையும் பெண் உடலுக்கு வேறொரு அமைப்பையும்அளித்தது ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொள்வதற்கு அல்ல. சங்க காலத்திலேயே பெண் எழுத்துக்கு பெருமை சேர்த்தவர் அவ்வையார். அவரது கவிகளில் சொல்லப் பட்ட விஷயத்தின் வீரியமும், கண்ணியமும் இன்றளவும் பிரம்மிக்க வைக்கும். ஆண் பெண் நட்பு என்பது அவர் காலத்திலேயே அற்புதமாக இருந்திருக்கிறது. அதியமானோடு அவர் கொண்டிருந்த உன்னதமான நட்பு பெண்ணுக்கு பெருமை சேர்த்தது எனலாம். சாண்டில்யனின் எழுத்துக்களில் காமம் சற்று தூக்கலாகவே இருப்பதற்கு காரணம் அவர் ஆண் என்பதுதான் என்றாலும், கல்கியின் கதைகளில் அவர் ஒரு ஆணாக இருந்தாலும் எல்லை மீறாமல் எழுதியதற்கு எது காரணம்? எழுதுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம். வாழ்வின் நிஜத்தை ஓட்டி கதை எழுவதையே நான் விரும்புகிறேன். தனக்கும் ஒரு ராஜகுமாரன் கிடைப்பான் என்று இளம் பெண்களை கற்பனை சுகத்தில் மிதக்க வைக்க என்னால் நிச்சயம் முடியாது. அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும். அன்பெனும் அச்சாணியில்தான் இவ்வுலகம் சுழல்வதாக நான் நம்புகிறேன். அன்பின்றி செய்யப்படும் அனைத்துமே போலியானவை என நினைப்பவள் நான். என் வீட்டில் மிகச்சில பத்திரிகைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. கண்ணியமான எழுத்துக்களைப் படித்து வளர்ந்தவள் நான். அம்மா வந்தாள் நாவலில், ஒழுக்கம் கெடும் அம்மாவைக் கூட கம்பீரமாக கண்ணியமாக சித்தரித்துக் காட்டியிருப்பார் தி.ஜா. இரண்டு பேர் என்று ஒரு தொடர். இரண்டு பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியது. கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. காரணம் அதில் வெளிப்பட்ட எல்லை மீறிய வர்ணனைகளும் ஒழுக்க மீறல் சொல்லப் பட்ட விதமும்தான். கண்ணியம் என்பது ஒருவர் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் எல்லை. ஆணோ பெண்ணோ கண்ணியம் காப்பதென்பது அவரவர் விருப்பம். ஆபாசமாக எழுத ஆணுக்குதான் உரிமை இருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். ஆண் செய்யும் தவறுகளைச் செய்வதுதான் பெண்ணுரிமையா? நம் இலையில் விருந்தேன்கிற பேரில் பல்வேறு பதார்த்தங்களும் இனிப்புகளும் வந்து விழும். நமக்கு தீங்கு செய்யாதவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுவது நமது பொறுப்பு. வாசகர்களுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. கண்ணியமானவற்றைத் தேடிப் பிடித்துப் படிப்பது. என்னை பாதித்த கண்ணியம் மிகு எழுத்துக்களுக்கு சொந்தமானவர்கள் இவர்கள். தி.ஜா, கல்கி, தேவன், நா.பா. உமா சந்திரன், லஷ்மி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், லஷ்மி ராஜரத்தினம், வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி, லா.ச.ரா. சுபா, அனுராதா ரமணன், எஸ்.ரா. தமிழருவி மணியன், இறையன்பு, சுஜாதா (சிறுகதைகள், கட்டுரைகளுக்கு மட்டும்) இந்த தொடர் பதிவுக்கு பல்வேறு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசிக்கும் கோபி ராம மூர்த்தியையும், நான் அழைக்க விரும்புகிறேன். அவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன். படிச்சுட்டு சும்மா போகாம ஒட்டு போட்டுட்டு போங்களேன். ஓட்டுக்கு பணமெல்லாம் கிடையாது சொல்லிட்டேன்.

Tuesday, March 22, 2011

கணிப்பொறியும் நானும்

ஆங்கிலமும் நானும் என்ற கோபியின் பதிவு படித்ததன் வெளிப்பாடு இது.

கணிப்பொறி என்பது நான் படித்த காலத்தில் இல்லை. எழுபதுகளில் பள்ளி, கல்லூரிப் படிப்பு. அப்போதெல்லாம் எஸ் எஸ் எல்.சி படிக்கும் போதே டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் கண்டிப்பாக சேர்ந்து விட வேண்டும். என் வீட்டுக்கருகில் அருண்டேல் தெருவில் கன்னட ராவ் ஒருவர் நடத்திய காமக் கோட்டி டைப்பிங் இன்ஸ்டிடியுட்டில் நானும் என் சிநேகிதியும் நல்ல நாள் பார்த்து சேர்ந்தோம். டைப்பிங் அடிப்பதே அந்த காலத்தில் ஒரு பெருமைக்குரிய விஷயம். அந்த சப்தமும் வேகமும் காதுக்கு இனிமையாகவே இருக்கும். ஆறாம் மாதம் லோயர், அடுத்த ஆறாம் மாதம் ஹயர். சுருக்கெழுத்தின் மீது எனக்கு ஒரு காதலே உண்டு. ஷார்ட் ஹாண்ட் இன்டர் வரை பாஸ் பண்ணிய போது என் அப்பாவுக்கு என்னை விட சந்தோஷமும் பெருமையும் கூடியது எனலாம்.

டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் தகுதிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருமணத்திற்குப் பிறகு சர்வீஸ் கமிஷனை பாஸ் செய்த போது (அதுவும் முதல் அட்டம்ப்ட்டிலேயே) சத்தியமாக எனக்குத் தெரியாது. டைப்பிங்கும் ஷார்ட் ஹான்டும் என்னை விட்டு விலகப் போகிறதென்று. வெறும் எழுத்தராகப் பணியில் சேர்ந்த போது டைப்பிங் பிரிவிலிருந்து கேட்கும் தட்டச்சு ஒலி ஏக்கமாக இருக்கும். காலப் போக்கில் அது பழகி விட்டது.

கணிப்பொறி அறிமுகமான புதிதில் அலுவலகத்தில் ஒரே ஒரு கணிப்பொறிதான் இருந்தது. இரண்டே பேருக்குதான் அதனருகில் செல்லும் உரிமை. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு சென்ற புதிதில் ஆங்கிலத்தைக் கண்டு மிரண்டது மாதிரிதான் கணிப்பொறியும் மிரள வைத்தது. அயல் கிரகத்திலிருந்து எதோ வந்திருப்பது போல் மலங்க மலங்க பார்ப்பேன் . அந்த உபகரணம் ஒரு காலத்திலும் எனக்கு தேவைப் படாது என்றுதான் நினைத்திருந்தேன். ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும். எனவே கண்டு பிடிக்கப்படும் ஒவ்வொரு பொருளையும் கையாளத் தெரிந்து கொள்ளும் இயல்பு அவனுக்கு உண்டு என்றாலும், மின்சாரத்திளிருந்து, கணிப்பொறி வரை முதலில் ஒரு பயமும் தயக்கமும் அனைவருக்குமே இருந்திருக்கிறது.

ஆண்டுகள் உருள உருள தட்டச்சு இயந்திரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ஓரம் கட்டப்பட, அலுவலகம் மெல்ல மெல்ல கணிப்பொறி மயமாகிக் கொண்டு வந்த நிலையில் திடீரென நான் பட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அதனாலென்ன என்று கேட்கிறீர்களா? பட்டியல் பிரிவில் பணியாற்ற கணிப்பொறி பயிற்சி அவசியம். நானோ அது வரை அதை தொட்டது கூடக் கிடையாது. மொத்த ஊழியர்களுக்கும் சம்பள பட்டியல் தயாரிக்க அரசாங்கம் ஒரு மென் பொருளை அளித்திருந்தது. அதன் மூலம் பட்டியல் தயாரித்து ECS இல ஊதியம் பெற்றுத் தருவதற்கு அசாத்திய பயிற்சி வேண்டும். பட்டியல் பிரிவில் ஒரு தற்காலிக ஊழியர் ஒருவர் இதில் தேர்ந்தவர். அந்த வித்தையை அவரிடமிருந்து யாரும் கற்கவும் முயலவில்லை. அப்படியே கேட்டாலும் அவர் சொல்லித்தந்து விட மாட்டார்.

கற்றுத்தந்துவிட்டால் தன மவுஸ் (mouse) பறிக்கப் பட்டு விடும், பிறகு யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தார். பட்டியல் பிரிவே அவர் இல்லாவிட்டால் ஸ்தம்பித்து நின்று விட வேண்டும் என்பது அவர் ஆசை.

இது வரை அவரைச் சார்ந்தே இருந்து விட்ட மற்றவர்களை போலவே நானும் இருப்பேன், அவருக்கு எடுபிடி ஊழியம் செய்வேன் என்று எதிர்பார்த்தார். நானாவது விடுவதாவது. பட்டியல் போட கற்றுத்தருமாறு கேட்டேன். முடியாது என்றார். கூடவே அதெல்லாம் உங்களால கற்றுக்கவே முடியாது. கம்முனு மத்த வேலையப் பாருங்க என்றார். கணிப்பொறியை பாஸ்வோர்ட் போட்டு திறக்க முடியாமல் வைத்து விடுவார். அது என்னமோ யாராலும் கற்க முடியாத பிரம்ம வித்தை என்பதொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.

அவரது திமிரும் கர்வமும் அலட்சியமும் என் வெறியை அதிகரித்தது. தலையைக் கொடுத்தாவது அந்த வித்தையை அறிவது என உறுதி கொண்டேன். இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும். என் வீட்டில் என் பெண்களுக்காக கணிப்பொறி ஒன்று வாங்கி பல வருடங்களாகி இருந்தது. அம்மா கம்ப்யுட்டர் கத்துக்கோ என்று பெண்களும் சொல்லி சொல்லி பார்த்தார்கள். நான் கேட்பதாயில்லை. முதல் காரணம் நேரமில்லை. இரண்டாவது எனக்கு எலி என்றால் பயம். அதனால் மௌஸை பிடிக்க பயம் என்று என் பெண்கள் கேலி செய்வார்கள்.

ஆக மொத்தம் நான் கணிப்பொறி கற்க வேண்டிய அவசியம் வந்தே விட்டது. ஆன்னா ஆவன்னா தெரியாது. அடிப்படை பயிற்சியே இனிமேல்தான். கூச்சப்படாமல் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி பெண்களிடமும் சக ஊழிய நண்பர்களிடமும் சரி கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு என் பயிற்சியைத் துவங்கினேன். முக்கியமாக எக்ஸ்செல்லில பணியாற்ற பழகிக் கொண்டேன். எது பிரம்ம வித்தை என்று அந்த உதவியாளர் நினைத்தாரோ, அந்த பட்டியல் தயாரிக்கும் வித்தையை நான் ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டேன். மறு மாதம் நம்புங்கள் அத்தனை ஊழியர்களுக்கும் ஊதிய பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்தேன்.

பிறகுதான் சோதனையே. நான் அந்த வித்தை கற்ற பிறகு அந்த உதவியாளருக்கு மிக சாதாரண பணிகள் அளிக்கப் பட, அவர் அந்த ஆத்திரத்தை வேறு விதமாய் காட்டினார். நான் இல்லாத நேரத்தில் நான் தயாரிக்கும் பட்டியல்களில் தன கைவரிசையைக் காட்டுவார். அதாவது ஒரு ஊழியரின் ஊதிய பிடித்தம் ஆறாயிரம் என்றால் அதில் ஒரு பூஜ்யத்தைக் கூட்டி விடுவார். அறுபதாயிரம் என்றாகி விடும். அவர் செய்து வைத்த மாற்றங்களுக்கெல்லாம் பழி எனக்கு. என்னை பட்டியல் பிரிவிலிருந்து ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்தார். அவர் விருப்பப் பட நான் தூக்கியும் அடிக்கப் பட்டேன்.

இந்த நிலையில் அவருக்கு பணி நிரந்தரமாகி வேறு ஒரு துறைக்கு மாற்றப்ப்பட்டார். எந்த பட்டியல் பிரிவு தன தலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்தாரோ அந்த பிரிவு இப்போதும் யார் தலையிலோ ஓடிக கொண்டுதான் இருக்கிறது.

அந்த ஒரு வருடத்தில் நான் புலியானேனோ இல்லையோ எலி (மௌஸ்) பிடிக்க நன்றாகவே கற்றுத் தேர்ந்தேன். முதலில் அலுவலக வேலை, பிறகு மெல்ல மெல்ல மின்னஞ்சலனுப்புவது, வலைத்தளங்களில் தேடுவது, என்று இன்டர்நெட்டிலும் இயங்கத் தெரிந்து கொண்டேன். இன்று பதிவு எழுதும் அளவுக்கு முன்னேறி உள்ளேன் என்றால் காரணம் அன்று பட்ட அவமானம்தான். அது ஏற்படுத்திய வலி தான். அனைத்தும் நன்மைக்கே என்று நம்புகிறவள் நான். அந்த உதவியாளர் உண்மையில் எனக்கு உதவிதான் செய்திருக்கிறார். அவர் மட்டம் தட்ட தட்ட நான் அதிகம் கற்றேன். அதற்கு நான் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

எட்டு மாதம் முன்பு அந்த உதவியாளர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்த போது எல்லோரையும் விட அதிகம் அதிர்ந்ததும், வருத்தப்பட்டதும் நான்தான். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தது. உயர உயர பணிவு வர வேண்டும். இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்.

பதிவுலகம் வந்த பிறகுதான் எவ்வாவு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இங்கிருக்கிரார்கள் என்பது புரிந்தது. நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது. எந்தரோ மகானுபாவலு...........!

Tuesday, March 8, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள் (ஆண்களுக்கும்தான்)

தலைப்பைப் பார்த்ததும் உள்ளே வருவீர்கள் என்று தெரியும். ஆண்களுக்கு எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று யோசிக்கிறீர்களா?
மீராவின் பார்வையில், கண்ணன் ஒருவனே புருஷோத்தமன். மற்றபடி அனைவரும் பெண்கள்தான். எனவே அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.

Monday, March 7, 2011

பெயர்க் காரணம்

பெயர்க் காரணத்தை ஆரம்பித்து வைத்த ராஜிக்கும், தொடர் பதிவு எழுத அழைத்த கோபிக்கும், நன்றி.

எனக்கு பல பெயர்கள் (அம்பாள் மாதிரி?) எல்லாவற்றிற்கும் காரணம் சொல்ல வேண்டாமா?

எக்மோர் ஹாஸ்பிடலில் அன்று ஒரு குழந்தை சிரித்துக் கொண்டே பிறந்ததாம். (இந்தக் கதைதானே வேணான்றதுன்னு யார் முணுமுணுப்பது?)

சூரியன் சுட்டுப் பொசுக்கும் நட்ட நடு மே மாதம். ஒரு பெண் பிரசவ வேதனையும் பிரார்த்தனயுமாய் தவிக்கிறாள். என்ன பிரார்த்தனை என்கிறீர்களா? இருக்கிறதே. வரிசையாய் நான்கு பெண்கள் (மூன்றாவது தவறி விட்டது.) இது நான்காவது முயற்சி. இதுவாவது பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கட்டுமே என்கிற பிரார்த்தனைதான்.. தாயின் பிரார்த்தனை கேட்டு வயிற்றுக்குள் பிறப்புக்குக் காத்திருந்த எனக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு பெண்ணாக முழுவதும் உருவாகி விட்ட பிறகு காதில் விழுந்த பிரார்த்தனை கேட்டு சிரிக்காமல் என்னசெய்ய?

அம்மா: கடவுளே இதுவானம் பிள்ளையா பொறக்கணும்

கடவுள்: இதுவும் பிள்ளை மாதிரிதான். உருவத்தில் என்ன இருக்கிறது? நிறைய சாதிப்பாள் உன் பெண்

அம்மா: அதெல்லாம் வேண்டாம். கொள்ளி போட ஒரு பிள்ளை போதும்.

நான் (உள்ளேயிருந்து): கொள்ளி வைக்க என்னாலும் முடியும் அம்மா. நான் வைத்தாலும் நீ ஜோராக எரிவாய். ::

அம்மா: கடவுளே பிள்ளை வேண்டும்

கடவுள்: நீ மீண்டும் முயற்சி செய். இம்முறை என் விருப்பப்படி பெண்தான்.

நான்: நன்றி கடவுளே. உன்னை இறுதி வரை நினைத்துக் கொண்டிருப்பேன். நீ எந்த மலை மீது இருந்தாலும் ஏறி வந்து பார்ப்பேன். (கயிலாயம், பொதிகை,முக்திநாத், சதுரகிரி என்றுமலை மலையாய் ஏறி இறங்கின காரணம் புரிந்திருக்குமே) என்னைப் படைத்த உன்னை நானும் படைத்துக்கொண்டேயிருப்பேன்

(நான்தெய்வ திரு உருவங்களை ஓவியமாகப் போடுவதன் காரணமும் புரிந்திருக்குமே

இப்படித்தான் நான் சிரித்துக் கொண்டே பிறந்தேன்)

பெண்ணா? அம்மா முகம் சுருங்கி விட்டது. கவலைபடாதே அம்மா. நான் நன்கு படிப்பேன். வேலைக்குப் போவேன். இதர கலைகளையும் கற்பேன். பின்னாளில் BLOG எல்லாம் எழுதுவேன் அம்மா.

அம்மா காதில் விழுந்ததா எனத் தெரியவில்லை. எங்கே என் அப்பாவைக் காணவில்லை. பெண் என்பதால் அவருக்கும் ஏமாற்றமா?

“பெண் கொழந்த அழகா இருக்குடா பார்த்தா விட மாட்ட(அது சரி. நெனப்ஸ் தான் பொளப்ச கெடுக்கும்ன்னு சித்ரா முனகுவது கேட்குது.) என் அத்தை அப்பாவிடம் சொல்ல அப்பா ஆஸ்பத்திரி வந்து என்னைப் பார்த்தவர்தான். சாகும் வரை என் மீது தனி அன்பு அவருக்கு.

இனி பெயர்க் காரணம் பார்ப்போம். மயிலாப்பூரில்தான் அப்போது வாசம்.(இப்போதும்தான்) கோயிலில் வேறு எதோ விசேஷம். எனவே கற்பகவல்லி என்று பத்தாம் நாள் நெல்லில் பெயரெழுதி காதில் மூன்று முறை சொன்னதோடு சரி. அதன் பின் அந்தப் பெயரை கல்யாணப் பத்திரிகையில்தான் மீண்டும் பார்த்தேன். (கற்பகவல்லி என்கிற உஷா.) (நானும் கப்பிதான் ராஜி) இந்த உஷா என்கிற பெயர் என் பெரியக்கா வைத்ததாம் கற்பகவல்லி கர்நாடகப் பெயர். மாடர்னா வைக்கணும் என்று வைத்ததாக அறிந்தேன்.

ஆக கற்பகவல்லி அலைஸ் உஷாவானேன். அந்த உஷாவும் செல்லமாக உஷிக் குட்டியாகி விட்டது. எனக்கு நகை நட்டு எதுவும் பிடிக்காது. சின்ன வயதில் ஒரு பாசி மாலை கூட அணிந்ததில்லை. ஆனாலும் என் அத்தை மகன் என்னை குருவிக்காரி என்று அழைத்ததன் காரணத்தை அவனிடம்தான் கேட்க வேண்டும்.

சின்ன வயதில் சலசலவென்று பேசிக்கொண்டேயிருப்பேன். வாயாடி என்பது டீச்சர் வைத்த பெயர்.

தெருவில் ஆம்பளைப் பசங்க விளையாடும் அத்தனை விளையாட்டையும் விளையாடி இருக்கிறேன். கில்லி, கோலி, முந்திரிக்கொட்டை வைத்து கோலி மாதிரி ஆடுவது, பம்பரம் விடுவது, மாஞ்சா போட்டு காற்றாடி விடுவது என்று ஒன்றையும் விட்டு வைத்ததில்லை. எங்கள் வீட்டு மாடிக்கு செல்ல ஒரு போதும் படிகளை உபயோகித்தது கிடையாது. தண்ணீர்க் குழாய் மூலம்தான் ஏறிப் போயிருக்கிறேன். அதனால் ரவுடி ராக்கம்மா என்று ஒரு பெயரும் உண்டு. யார் வைத்தது என நினைவில்லை.

எனக்கு மறதி அதிகம். மிளகாய் வாங்கி வரச் சொன்னால் சீயக்காய் வாங்கி வரும் ரகம். அதனால் அரணை என்றும் ஒரு பெயருண்டு. என் மறதி குறித்து ஒரு பதிவு எழுத மறந்து விட்டது.

ஏழெட்டு வயசில் அம்புலிமாமா வாசிக்க அர்ரம்பித்த பிறகு ஒரூ சுப முகூர்த்தத்தில் முழு நிலா என்னும் நாவலை படித்தேன். பிறகு தொடர்ந்து வாசிப்புதான். கல்கியும், சாண்டில்யனும், தேவனும், தி.ஜா. வும் ஒரு கட்டத்தில் என்னை மிகவும் பாடாய்ப் படுத்த உங்க கெட்ட நேரம், நான் எழுத்தாளினி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன பெயரில் எழுதலாம் என்ற கேள்வி குடைந்தது. சொந்தப் பெயரில் எழுதுவதில் சுவாரசியமில்லை. நான் சுஜாதாவின் சிறுகதைகளுக்கு அடிமை. எனது துரோணாச்சாரியாரும் அவர்தான்.(கட்டை விரல் கேட்காத) .

எனவே, எழுதுவதற்கு முதலில் . நான் தேர்ந்தெடுத்த பெயர் சுஜாதாப்ரியா

ம்ஹும்.. க்ளிக்காகவில்லை.. (சுஜாதா தப்பித்தார்.) பிறகு உஷா என்றே எழுதினேன். அப்போது இன்னொரு உஷாவும் இருந்தார். சரி வேண்டாம் என நினைத்தபோது, ஒரு சுப முஹூர்த்தத்தில் திருமதி சுப்ரமணியம் ஆனேன். ஆஹா உஷா சுப்ரமணியம் என்றே எழுதலாம் என சந்தோஷப் பட இயலவில்லை. ஏனெனில் என்னைவிட சீனியர் எழுத்தாளர் உஷா சுப்ரமணியம் அபோது பிரபலமாக இருந்தார். (ஆமா...! ஏதோ என் கதைக்காக பத்திரிகைகள் எல்லாம் வரிசையில் காத்திருக்கிறார் போல் நான் பெயர் தேடிக் கொண்டிருந்தேன்.)

ஒருவழியாய் என் பெண் பிறந்ததும் பெயர்ப் பிரச்சனை தீர்ந்தது. நான் வித்யா சுப்ரமணியம் ஆனேன். என் பெண் மாஸ் கம்யூனிகேஷன் முடித்து தூர்தர்ஷனில் செய்தியாளராகப் பணியாற்றிய போது அவளது பெயரும் வித்யா சுப்ரமணியம்தான். போன் வந்தால் கூத்துதான்.

இட்ட பெயர் கற்பகவல்லி, அழைக்கப்பட்டது உஷா, நானே எனக்கு வைத்துக் கொண்டு பிரபலமாகி பெயர் பெற்றது வித்யா சுப்ரமணியமாக. இதற்கு நடுவில் பட்டப் பெயர்கள் வேறு. பெண்கள் என்னை அழைப்பது அம்மா என்று. சக பதிவர்களுக்கு சகோதரி. இப்போது பாட்டி என்று அழைக்கவும் இரண்டு குழந்தைகள் வந்தாயிற்று.

எந்த பெயருக்குள்ளும் நான் நானாக மட்டுமே இருக்கிறேன். எனக்குள் இருக்கும் குழந்தை மனம் அவ்வப்போது மேலே வந்து எட்டிப் பார்க்கும். அது என்னோடு இறுதி வரை இருக்கும்.

ஆக மொத்தம் பெயர் என்பது ஒரு அடையாளம். பிறந்த நிமிடம் குழந்தை என்பார்கள். இறந்த நிமிடம் பாடி என்பார்கள். இறப்புக்குப் பின்னும் என் பெயர் சொல்கிராற்போல் எனது சில படைப்புகளாவது இருக்கும் என நம்புகிறேன். வாழும்போது புகழ் பெற்று மரணத்திற்குப் பின்னும் அவன் பெயர் போற்றப் படுவதே உண்மையான வாழ்வு. பாரதியார், விவேகானந்தர், காந்தி, ரமணர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதுவே உண்மையில் சாகா வரம். (ரொம்ப அறுத்துட்டேனோ?)

Saturday, February 26, 2011

வாழ்வென்பது (சிறுகதை.

வாழ்வென்பது........

கைபேசியில் சுபத்ராவின் முகத்தோடு, குழலிசையும் ஒலிக்க, அருண் அதை வெறித்துப் பார்த்தான். அது மீண்டும் மீண்டும் இசைத்தது. நேற்று வரை பாய்ந்து எடுத்து காதலோடு பேசியவன், இன்று மௌனமாயிருந்தான். நாலைந்து முறை அது அழைத்து விட்டு ஓய்ந்தது.

சற்று நேரத்தில் வீட்டு தொலைபேசி அடித்தது. அவளாகத்தான் இருக்கும். கீழே அம்மா எடுத்திருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அம்மா அவன் அறைக்கு வந்தாள். தூங்குவது போல் பாவனை செய்தான் அவன்.

ஏண்டா அருண், தூங்கறயா? சுபத்ரா போன் பண்ணினாளாம். நீ எடுக்கலயாம்.! எடுத்து பேசுடா அவ லைன்ல இருக்கா பார்.

அப்பறம் பேசறேன்னு சொல்லு

என்னடா ஆச்சு? உங்க ரெண்டு பேர்க்கும் ஏதாவது பிரச்சனையா?

அதெல்லாம் இல்ல நீ போ அவன் திரும்பி படுத்தான்.

சற்று பொறுத்து மொபைலில் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் படித்தான்.

சிவில் சர்விஸ் ரிசல்ட் வந்திருக்கு அருண். நான் செலக்ட் ஆகிட்டேன்.

எவ்வளவு திமிர். நான் தோற்றது தெரியாமலா இருந்திருக்கும்.!

அது குறித்து கொஞ்சமும் வருத்தப் படாமல் தன வெற்றியைக் கொண்டாடுகிறாள்! அவன் வெறுப்போடு மொபைலை வைத்தான். பதில் அனுப்பவில்லை.

பள்ளிப் பருவத்துக் காதல் கல்லூரியிலும் தழைத்து வளர, இரு குடும்பமும் அவர்களது காதலை அங்கீகரித்து, மகிழ்ச்சியோடு மண நாள் நிச்சயித்திருந்தது. இருவருமே பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படிப்பில் நம்பர் ஒன்தான். ஆளுக்கு இரண்டு தங்க மெடல்கள் வாங்கியிருந்தார்கள். எம்பிஏ முடித்ததும் சிவில் சர்வீஸ் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஒரு வீட்டுல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஐஏஎஸ். ஆகப போறோம். நம்ப மரியாதை எங்கயோ போய்டும் இல்ல?

அதுலயும் ஒரு கஷ்டம் இருக்கு. ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை பார்க்க முடியுமான்றது சந்தேகம்

கொஞ்ச நாள் கஷ்டப்பட்டுட்டா அப்பறம் ஒரே இடத்துல கூட இருக்கலாம்.

குழந்தைகள்னு பிறந்தா?

அது இல்லாமலா? உன்ன மாதிரி ஒரு பெண், என்ன மாதிரி ஒரு பையன். ரெண்டுத்தையும் உங்கம்மாவும் எங்கம்மாவும் பார்த்துப்பாங்க.

அதுகளையும் ஐஏஎஸ் ஆக்கிடணும். நல்லார்க்கும் இல்ல?

இருவரும் நிறைய கனவு கண்டார்கள், ஆனால் அதில் ஒரு பகுதிதான் பலித்திருக்கிறது. பெண் ஜெயித்து ஆண் தோற்பது மிகவும் துக்கமானது. அவனால் இதை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவன் வென்று அவள் தோற்றிருந்தால் அவள் அலட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது. ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியாக இருப்பதும் மதிப்பிற்குரியதுதானே!

ஆனால் கணக்கு தவறி விட்டது. அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையையும் ஐஏஎஸ் கனவில் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த முறை முயன்றால் வெற்றி கிடைத்து விடும். ஆனால் பணியில் அவள் அவனை விட சீனியாராகி விடுவாள். ஒரு வேளை அடுத்த முறையும் தோற்று விட்டால். தலை நிமிர்ந்து நடக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே ஏளனப் பார்வைகள் எழும்பும். அவன் எழுதவே இல்லை என்றால் வேறு. எழுதி தோற்பது என்பது மதிப்பைக் குறைத்து விடும்.

ஒரு மிகப் பெரிய வாய்ப்பு தனக்குக் கை நழுவிப் போனதைவிட, அது அவளுக்குக் கிடைத்திருப்பது, அவனது மன உளைச்சலை அதிகரித்தது. வெளி உலகத்தைக் காணக் கூடப் பிடிக்காமல் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்தான் அவன்.

மாடிப் படியில் காலடி சப்தம் கேட்டது. அம்மா என நினைத்தவன் உள்ளே வந்த உருவத்தைக் கண்டதும் திகைத்தான். சுபத்ராதான். அவளை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவள் வெற்றிக்கு வாழ்த்து கூறவில்லை என்றால் பொறாமை என்றாகி விடும். வாழ்த்துக்கள். அவன் மெல்லிய புன்னகையோடு சொன்னான்.

என்னாச்ச்சு அருண்? உடம்புக்கென்ன? அவள் கவலையோடு தொட்டுப் பார்த்தாள்

ஒண்ணுமில்ல

பொய். நீ அப்செட் ஆயிருக்க. அதனால் என்ன அருண். அடுத்த முறை நிச்சயம் ஜெயிக்கப் போற.

அதுவரை உனக்கு டவாலி உத்தியோகம் பார்க்கச் சொல்றயா?அவன் வெடுக்கெனக் கேட்க அந்த வார்த்தைகளில் வெளிப்பட்ட அனலில் அவள் ஒரு விநாடி திகைத்துப் போனாள்.

:என்னாச்சு அருண்? ஏன் இவ்ளோ நெகடிவா பேசற?

வேற எப்டி பேசச் சொல்ற. இந்த கடவுளுக்கு கண்ணே கிடையாது. உன்னைவிட நா எந்த விதத்துல அறிவுல குறைஞ்சவன்? எங்கயோ ஏதோ தப்பு நடந்திருக்கு. அதான் நா செலக்ட் ஆகல.

இதுக்கு எதுக்கு கடவுள இழுக்கற அருண்?

ஏதோ ஒரு முட்டாளைக் கொண்டு என பேரை ரிஜக்ட் பண்ண

வெச்சிருக்கானே அதான் அப்டி சொன்னேன்.

கமான் அருண். உன் புத்திக்கு நீ கோடி கோடியா சம்பாதிக்கலாம். நமக்கு முன்னாடி ஏகப்பட்ட பாதைகள் இருக்கு.

உனக்கென்ன பாஸ் பண்ணிட்ட சந்தோஷத்துல உபதேசத்தை அள்ளி விடுவ.

சுபத்ரா அவனை உற்றுப் பார்த்தாள். இது தாழ்வு மன நிலையில் வரும் வார்த்தையா. அல்லது பொறாமையில் பொங்கும் குதர்க்கமா? அவன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான் அவள் மன ஓட்டம புரிந்தது போல்.

ச்சே! அப்படி பேசியிருக்க வேண்டாமோ? என்ன நினைத்துக் கொள்வாள் அவள்! வெற்றி தோல்வி என்பது வாழ்ககையில் சகஜம்தானே. தான் தோற்றதற்கு இவளா காரணம்? எதற்கு இவளிடம் வெறுப்பைக் காட்டுகிறேன்? நான் இவ்வளவு மோசமா? ஒரு தோல்வி வந்ததும் உள்ளே இருக்கும் மிருகம் மேலே வந்து விடுமா? அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

தொண்டையில் எதோ அடைத்தது.

சுபத்ரா அவனை இரக்கத்தோடு பார்த்தாள். பாவம் தோல்வி கொடுத்த அதிர்ச்சியில் பேசுகிறான். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

நாம் வெளில போயிட்டு வரலாம் வாயேன் அருண்.

நா வரல. என்னைக் கொஞ்சம் தனியா விட்டுட்டு கிளம்பு சுபத்ரா.

தன்னிரக்கம் தப்பு அருண்.

அறிவுரைக்கு நன்றி. கிளம்பு.

இதோட எல்லாம் முடிஞ்சுட்டதா ஏன் சோர்ந்து போற.? நீ இப்டி டல்லா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு. நா பாஸ் பண்ணினது எப்டி எதிர்பாராததோ அதே மாதிரி நீ செலெக்ட் ஆகாததும் எதிர்பாராததுதான். இதனால் நா ரொம்ப புத்திசாலின்னோ நீ முட்டாள்னோ அர்த்தமில்ல.

நா பச்சக் குழந்தையில்ல சமாதானம் சொல்ல. மேல மேல பேசி என்னை எரிச்சல் படுத்தாதே.

சுபத்ரா சற்றே வேதனையோடு வேறு வழியின்றி கிளம்பினாள்.

மனிதன் போடும் சில கணக்குகள் பிழையாகும்போது சந்தோஷம் எப்படி வடிந்து விடுகிறது! இருவரும் தேர்வாகியிருந்தால் இந்நேரம் எவ்வளவு உற்சாகமாகி இருப்பான். ஏன்

தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்ளவில்லை அவன்? ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படி என்று எடுத்துக் கொண்டால் ஏன் துக்கமும் தன்னிரக்கமும் மன உளைச்சலும் ஏற்படப் போகிறது. போகட்டும், இந்த வரைக்கும் உள்ளொன்று, புறமொன்று என்றில்லாமல் தன் குமுறல்களை வெளிப்படையாய் கொட்டினானே. நான்கைந்து நாளில் எல்லாம் சரியாகி விடும, யோசிக்க யோசிக்க மனசு தெளியும். தெளியும் போது அவனே பேசுவான்.. கீழே இறங்கி வந்தாள் அவள்.

என்ன ஆச்சு சுபா அவனுக்கு.? ஏன் இப்டி மூட் அவுட் ஆகி இருக்கான்?

அவள் சிவில் சர்வீஸ் முடிவுகளைச் சொன்னாள். அவன் தாயின் முகமும் சற்றே மாறியது. அப்டியா என்றாள் சுரத்தில்லாமல்.

அவனுக்கு எப்பவும் அதிர்ஷ்டம் கொஞ்சம் கம்மிதான். இந்த காலத்துல மூளைக்கு எங்கே மதிப்பிருக்கு? அதான் இப்டி வாடிப் போயிருக்கானா? இவன் புத்திசாலித்தனத்தை சோதிக்க அங்க சரியான ஆள் இல்லையோ என்னமோ!

சுபத்ரா என்ன சொல்வதென புரியாது திகைத்தாள். தன் வெற்றிக்கு மகிழக் கூட முடியாமல் வீட்டுக்கு வந்தாள். ஆண் தோற்று, பெண் ஜெயிப்பதை பெண்ணே விரும்ப மாட்டாளா?

அவளுக்குப் புரியவில்லை.

வீடு உற்சாகமாயிருந்தது. அவள் பயிற்சிக்கு செல்வதற்கு முன் திருமணத்தை முடித்து விட்டால் நல்லது என நினைத்தது.

அப்பா இப்போ கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்.

ஏம்மா?

அருண் செலக்ட் ஆகலப்பா. இப்போ போய் பேசினா அவங்க எப்டி எடுத்துப்பாங்கன்னு தெரியல.

இதுல என்னம்மா இருக்கு. நீ பாஸ் ஆனதுல அவனை விட யார் சந்தோஷப் படப போறாங்க. தவிர அடுத்த வாட்டி எழுதி அவனும் செலக்ட் ஆகிடப் போறான். நா பொய் நாளைக்கு பேசிட்டு வரேன்.

அன்றிரவு அருண் அவளுக்கு போன் செய்தான்.

உங்கப்பா நாளைக்கு வராத சொன்னாராம்?

ஆமா.

வேண்டாம்னு சொல்லு சுபி. கல்யாணம் செய்துக்கற மனநிலையில் நா இப்போ இல்ல.

அதையும் இதையும் ஏன் முடிச்சு போடற அருண்? கண்டிப்பா நீ அடுத்த வருஷம் செலக்ட் ஆகத்தான் போற. எனக்கு நம்பிக்கை இருக்கு.

அப்போ அது வரை காத்திரு. ஒரு வேளை மறுபடியும் ரிசல்ட் எனக்கு சரியா வரலன்னா நீ வேற ஒரு ஐஏஎஸ் மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் செய்துக்கோ.

பைத்தியம் மாதிரி பேசாதே அருண். இதுக்கா நாம இவ்ளோ காலம் காதலிச்சோம்? உன்னைத்தவிர வேற யாரும் எனக்குப் புருஷனாக முடியாது

ஒருவேளை நா மறுபடியும் தோத்துட்டேன்னு வையி. என்னால ஒரு ஐஏஎஸ் க்கு புருஷனா இருக்க முடியாது.

எதையுமே பாஸிடிவா யோசிக்க மாட்டயா நீ?

இது நாள் வரை பாசிடிவாதான் இருந்தேன். எப்போ புத்திக்கு மதிப்பில்லாம போச்சோ அப்பறம் வேற எப்டி யோசிக்கறது?.

சரி உன் வழிக்கே நானும் வரேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதையும் மீறி நீ சொல்றபடி நடந்துச்சுன்னா நா என வேலையை ராஜினாமா பண்ணிடறேன். போதுமா? உன்னைவிட எனக்கு அது முக்கியமில்ல. அவள் சொல்ல,

அருண் போனை வைத்தான். பின்னால் நிழலாடத் திரும்பினான்.

அவனையே பார்த்தபடி கதவருகில் நின்றிருந்தார் அப்பா.

என்னடா பேசிட்டயா? நா உன்னை புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா சிவில் சர்வீஸ்ல மட்டுமில்ல, வாழ்க்கைலயும் தோற்கப் போற அடி முட்டாள் நீன்னு இப்போதான் புரியுது.

என்ன சொல்றீங்க? அவன் புருவம் சுருங்கக் கேட்டான்

உன் இடத்துல நா இருந்தா இந்நேரம் என்ன செய்திருப்பேன் தெரியுமா? நா செலக்ட் ஆகாட்டி என்ன. சுபத்ரா ஐஏஎஸ் ஆனதுல எனக்கு அளவு கடந்த சந்தோஷம்னு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருப்பேன். தன் தோல்வியை நினைச்சு துவண்டு போறதைவிட மத்தவங்க வெற்றியில் சந்தோஷப்படறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்டா அருண். உன்னை நான் சரியா வளர்க்கலயோன்னு தோணுது. உன்னைத் தெரியாமலே உனக்குள்ள ஒரு மேல் ஷாவனிஸ்ட் இருக்கான். அதான் உன் காதலியின் வெற்றியை உன்னால ஏற்றுக்க முடியல. இது ஒரு சின்ன சறுக்கல்தான். உன் வெற்றி தோல்வி உன் நம்பிக்கைலதான் இருக்கு. அவ தன் ஐஏஎஸ் பதவியை

உனக்காகத் தூக்கி எறிஞ்சா, அது அவ மதிப்பை இன்னும் கூட்டும். ஆனா உன் மதிப்பு பாதாளத்துக்குப் போய்டும். அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன் மனசு குத்தும். அவ உன்னைவிட உசத்தியா உன் கண்ணுக்கே தெரிய ஆரம்பிச்சுடுவா. உணமையில் அப்போதான் நீ அவளோட வாழ ரொம்ப கஷ்டப் படுவ. நீ ஐஏஎஸ் ஆனாலும் ஆகாட்டியும் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமும் உன்கிட்டதான் இருக்கு. பரந்த மனசு இருக்கறவனுக்கு உலகமே உள்ளுக்குள்ள இருக்கும். இல்லாதவனுக்கு பூமியே சின்ன புள்ளியில் சுருங்கிப் போய்டும். நீ சுருங்கிப் போகப் போறயா? இல்ல விஸ்வரூபம் எடுக்கப் போறயா? நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா.

அப்பா போய் விட்டார். அவன் துவண்டு அமர்ந்தான். இரவு கனமாய் நகர்ந்தது.

மறுநாள் அவன் இரண்டு பை நிறைய இனிப்பு வகைகளுடன் சுபத்ராவின் வீட்டுக்கு கிளம்பினான், அப்பாவையும் அழைத்துக் கொண்டு. குழந்தை பருவத்தில் அவன் தடுமாறிக் கீழே விழும் போதெல்லாம் கை கொடுத்து அவன் எழுவதற்கு உதவி செய்த அப்பா இப்போதும் அவன் நிமிர்ந்து எழ உதவியதற்கு அவன் அவருக்கு போகும் வழியில் நன்றி சொன்னான்.

Sunday, February 6, 2011

இரட்டை தேவதைகள்

எங்கள் வீட்டில் புதிதாய் மலர்ந்திருக்கும் இரட்டை தேவதைகள் இவர்கள். வாழ்த்துங்கள் அவர்கள் மேன்மையாய் வாழ





blue angel is Vidan (Boy) pink is Sanvi (Girl)





வாழ.