Tuesday, April 12, 2011
பெண் எழுத்து (தொடர் பதிவு)
Tuesday, March 22, 2011
கணிப்பொறியும் நானும்
ஆங்கிலமும் நானும் என்ற கோபியின் பதிவு படித்ததன் வெளிப்பாடு இது.
கணிப்பொறி என்பது நான் படித்த காலத்தில் இல்லை. எழுபதுகளில் பள்ளி, கல்லூரிப் படிப்பு. அப்போதெல்லாம் எஸ் எஸ் எல்.சி படிக்கும் போதே டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் கண்டிப்பாக சேர்ந்து விட வேண்டும். என் வீட்டுக்கருகில் அருண்டேல் தெருவில் கன்னட ராவ் ஒருவர் நடத்திய காமக் கோட்டி டைப்பிங் இன்ஸ்டிடியுட்டில் நானும் என் சிநேகிதியும் நல்ல நாள் பார்த்து சேர்ந்தோம். டைப்பிங் அடிப்பதே அந்த காலத்தில் ஒரு பெருமைக்குரிய விஷயம். அந்த சப்தமும் வேகமும் காதுக்கு இனிமையாகவே இருக்கும். ஆறாம் மாதம் லோயர், அடுத்த ஆறாம் மாதம் ஹயர். சுருக்கெழுத்தின் மீது எனக்கு ஒரு காதலே உண்டு. ஷார்ட் ஹாண்ட் இன்டர் வரை பாஸ் பண்ணிய போது என் அப்பாவுக்கு என்னை விட சந்தோஷமும் பெருமையும் கூடியது எனலாம்.
டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் தகுதிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருமணத்திற்குப் பிறகு சர்வீஸ் கமிஷனை பாஸ் செய்த போது (அதுவும் முதல் அட்டம்ப்ட்டிலேயே) சத்தியமாக எனக்குத் தெரியாது. டைப்பிங்கும் ஷார்ட் ஹான்டும் என்னை விட்டு விலகப் போகிறதென்று. வெறும் எழுத்தராகப் பணியில் சேர்ந்த போது டைப்பிங் பிரிவிலிருந்து கேட்கும் தட்டச்சு ஒலி ஏக்கமாக இருக்கும். காலப் போக்கில் அது பழகி விட்டது.
கணிப்பொறி அறிமுகமான புதிதில் அலுவலகத்தில் ஒரே ஒரு கணிப்பொறிதான் இருந்தது. இரண்டே பேருக்குதான் அதனருகில் செல்லும் உரிமை. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு சென்ற புதிதில் ஆங்கிலத்தைக் கண்டு மிரண்டது மாதிரிதான் கணிப்பொறியும் மிரள வைத்தது. அயல் கிரகத்திலிருந்து எதோ வந்திருப்பது போல் மலங்க மலங்க பார்ப்பேன் . அந்த உபகரணம் ஒரு காலத்திலும் எனக்கு தேவைப் படாது என்றுதான் நினைத்திருந்தேன். ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும். எனவே கண்டு பிடிக்கப்படும் ஒவ்வொரு பொருளையும் கையாளத் தெரிந்து கொள்ளும் இயல்பு அவனுக்கு உண்டு என்றாலும், மின்சாரத்திளிருந்து, கணிப்பொறி வரை முதலில் ஒரு பயமும் தயக்கமும் அனைவருக்குமே இருந்திருக்கிறது.
ஆண்டுகள் உருள உருள தட்டச்சு இயந்திரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ஓரம் கட்டப்பட, அலுவலகம் மெல்ல மெல்ல கணிப்பொறி மயமாகிக் கொண்டு வந்த நிலையில் திடீரென நான் பட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அதனாலென்ன என்று கேட்கிறீர்களா? பட்டியல் பிரிவில் பணியாற்ற கணிப்பொறி பயிற்சி அவசியம். நானோ அது வரை அதை தொட்டது கூடக் கிடையாது. மொத்த ஊழியர்களுக்கும் சம்பள பட்டியல் தயாரிக்க அரசாங்கம் ஒரு மென் பொருளை அளித்திருந்தது. அதன் மூலம் பட்டியல் தயாரித்து ECS இல ஊதியம் பெற்றுத் தருவதற்கு அசாத்திய பயிற்சி வேண்டும். பட்டியல் பிரிவில் ஒரு தற்காலிக ஊழியர் ஒருவர் இதில் தேர்ந்தவர். அந்த வித்தையை அவரிடமிருந்து யாரும் கற்கவும் முயலவில்லை. அப்படியே கேட்டாலும் அவர் சொல்லித்தந்து விட மாட்டார்.
கற்றுத்தந்துவிட்டால் தன மவுஸ் (mouse) பறிக்கப் பட்டு விடும், பிறகு யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தார். பட்டியல் பிரிவே அவர் இல்லாவிட்டால் ஸ்தம்பித்து நின்று விட வேண்டும் என்பது அவர் ஆசை.
இது வரை அவரைச் சார்ந்தே இருந்து விட்ட மற்றவர்களை போலவே நானும் இருப்பேன், அவருக்கு எடுபிடி ஊழியம் செய்வேன் என்று எதிர்பார்த்தார். நானாவது விடுவதாவது. பட்டியல் போட கற்றுத்தருமாறு கேட்டேன். முடியாது என்றார். கூடவே அதெல்லாம் உங்களால கற்றுக்கவே முடியாது. கம்முனு மத்த வேலையப் பாருங்க என்றார். கணிப்பொறியை பாஸ்வோர்ட் போட்டு திறக்க முடியாமல் வைத்து விடுவார். அது என்னமோ யாராலும் கற்க முடியாத பிரம்ம வித்தை என்பதொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அவரது திமிரும் கர்வமும் அலட்சியமும் என் வெறியை அதிகரித்தது. தலையைக் கொடுத்தாவது அந்த வித்தையை அறிவது என உறுதி கொண்டேன். இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும். என் வீட்டில் என் பெண்களுக்காக கணிப்பொறி ஒன்று வாங்கி பல வருடங்களாகி இருந்தது. அம்மா கம்ப்யுட்டர் கத்துக்கோ என்று பெண்களும் சொல்லி சொல்லி பார்த்தார்கள். நான் கேட்பதாயில்லை. முதல் காரணம் நேரமில்லை. இரண்டாவது எனக்கு எலி என்றால் பயம். அதனால் மௌஸை பிடிக்க பயம் என்று என் பெண்கள் கேலி செய்வார்கள்.
ஆக மொத்தம் நான் கணிப்பொறி கற்க வேண்டிய அவசியம் வந்தே விட்டது. ஆன்னா ஆவன்னா தெரியாது. அடிப்படை பயிற்சியே இனிமேல்தான். கூச்சப்படாமல் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி பெண்களிடமும் சக ஊழிய நண்பர்களிடமும் சரி கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு என் பயிற்சியைத் துவங்கினேன். முக்கியமாக எக்ஸ்செல்லில பணியாற்ற பழகிக் கொண்டேன். எது பிரம்ம வித்தை என்று அந்த உதவியாளர் நினைத்தாரோ, அந்த பட்டியல் தயாரிக்கும் வித்தையை நான் ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டேன். மறு மாதம் நம்புங்கள் அத்தனை ஊழியர்களுக்கும் ஊதிய பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்தேன்.
பிறகுதான் சோதனையே. நான் அந்த வித்தை கற்ற பிறகு அந்த உதவியாளருக்கு மிக சாதாரண பணிகள் அளிக்கப் பட, அவர் அந்த ஆத்திரத்தை வேறு விதமாய் காட்டினார். நான் இல்லாத நேரத்தில் நான் தயாரிக்கும் பட்டியல்களில் தன கைவரிசையைக் காட்டுவார். அதாவது ஒரு ஊழியரின் ஊதிய பிடித்தம் ஆறாயிரம் என்றால் அதில் ஒரு பூஜ்யத்தைக் கூட்டி விடுவார். அறுபதாயிரம் என்றாகி விடும். அவர் செய்து வைத்த மாற்றங்களுக்கெல்லாம் பழி எனக்கு. என்னை பட்டியல் பிரிவிலிருந்து ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்தார். அவர் விருப்பப் பட நான் தூக்கியும் அடிக்கப் பட்டேன்.
இந்த நிலையில் அவருக்கு பணி நிரந்தரமாகி வேறு ஒரு துறைக்கு மாற்றப்ப்பட்டார். எந்த பட்டியல் பிரிவு தன தலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்தாரோ அந்த பிரிவு இப்போதும் யார் தலையிலோ ஓடிக கொண்டுதான் இருக்கிறது.
அந்த ஒரு வருடத்தில் நான் புலியானேனோ இல்லையோ எலி (மௌஸ்) பிடிக்க நன்றாகவே கற்றுத் தேர்ந்தேன். முதலில் அலுவலக வேலை, பிறகு மெல்ல மெல்ல மின்னஞ்சலனுப்புவது, வலைத்தளங்களில் தேடுவது, என்று இன்டர்நெட்டிலும் இயங்கத் தெரிந்து கொண்டேன். இன்று பதிவு எழுதும் அளவுக்கு முன்னேறி உள்ளேன் என்றால் காரணம் அன்று பட்ட அவமானம்தான். அது ஏற்படுத்திய வலி தான். அனைத்தும் நன்மைக்கே என்று நம்புகிறவள் நான். அந்த உதவியாளர் உண்மையில் எனக்கு உதவிதான் செய்திருக்கிறார். அவர் மட்டம் தட்ட தட்ட நான் அதிகம் கற்றேன். அதற்கு நான் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
எட்டு மாதம் முன்பு அந்த உதவியாளர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்த போது எல்லோரையும் விட அதிகம் அதிர்ந்ததும், வருத்தப்பட்டதும் நான்தான். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தது. உயர உயர பணிவு வர வேண்டும். இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்.
பதிவுலகம் வந்த பிறகுதான் எவ்வாவு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இங்கிருக்கிரார்கள் என்பது புரிந்தது. நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது. எந்தரோ மகானுபாவலு...........!
Tuesday, March 8, 2011
மகளிர் தின வாழ்த்துக்கள் (ஆண்களுக்கும்தான்)
மீராவின் பார்வையில், கண்ணன் ஒருவனே புருஷோத்தமன். மற்றபடி அனைவரும் பெண்கள்தான். எனவே அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.
Monday, March 7, 2011
பெயர்க் காரணம்
பெயர்க் காரணத்தை ஆரம்பித்து வைத்த ராஜிக்கும், தொடர் பதிவு எழுத அழைத்த கோபிக்கும், நன்றி.
எக்மோர் ஹாஸ்பிடலில் அன்று ஒரு குழந்தை சிரித்துக் கொண்டே பிறந்ததாம். (இந்தக் கதைதானே வேணான்றதுன்னு யார் முணுமுணுப்பது?)
சூரியன் சுட்டுப் பொசுக்கும் நட்ட நடு மே மாதம். ஒரு பெண் பிரசவ வேதனையும் பிரார்த்தனயுமாய் தவிக்கிறாள். என்ன பிரார்த்தனை என்கிறீர்களா? இருக்கிறதே. வரிசையாய் நான்கு பெண்கள் (மூன்றாவது தவறி விட்டது.) இது நான்காவது முயற்சி. இதுவாவது பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கட்டுமே என்கிற பிரார்த்தனைதான்.. தாயின் பிரார்த்தனை கேட்டு வயிற்றுக்குள் பிறப்புக்குக் காத்திருந்த எனக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு பெண்ணாக முழுவதும் உருவாகி விட்ட பிறகு காதில் விழுந்த பிரார்த்தனை கேட்டு சிரிக்காமல் என்னசெய்ய?
அம்மா: கடவுளே இதுவானம் பிள்ளையா பொறக்கணும்
கடவுள்: இதுவும் பிள்ளை மாதிரிதான். உருவத்தில் என்ன இருக்கிறது? நிறைய சாதிப்பாள் உன் பெண்
அம்மா: அதெல்லாம் வேண்டாம். கொள்ளி போட ஒரு பிள்ளை போதும்.
நான் (உள்ளேயிருந்து): கொள்ளி வைக்க என்னாலும் முடியும் அம்மா. நான் வைத்தாலும் நீ ஜோராக எரிவாய். ::
அம்மா: கடவுளே பிள்ளை வேண்டும்
கடவுள்: நீ மீண்டும் முயற்சி செய். இம்முறை என் விருப்பப்படி பெண்தான்.
நான்: நன்றி கடவுளே. உன்னை இறுதி வரை நினைத்துக் கொண்டிருப்பேன். நீ எந்த மலை மீது இருந்தாலும் ஏறி வந்து பார்ப்பேன். (கயிலாயம், பொதிகை,முக்திநாத், சதுரகிரி என்றுமலை மலையாய் ஏறி இறங்கின காரணம் புரிந்திருக்குமே) என்னைப் படைத்த உன்னை நானும் படைத்துக்கொண்டேயிருப்பேன்
(நான்தெய்வ திரு உருவங்களை ஓவியமாகப் போடுவதன் காரணமும் புரிந்திருக்குமே
இப்படித்தான் நான் சிரித்துக் கொண்டே பிறந்தேன்)
பெண்ணா? அம்மா முகம் சுருங்கி விட்டது. கவலைபடாதே அம்மா. நான் நன்கு படிப்பேன். வேலைக்குப் போவேன். இதர கலைகளையும் கற்பேன். பின்னாளில் BLOG எல்லாம் எழுதுவேன் அம்மா.
அம்மா காதில் விழுந்ததா எனத் தெரியவில்லை. எங்கே என் அப்பாவைக் காணவில்லை. பெண் என்பதால் அவருக்கும் ஏமாற்றமா?
“பெண் கொழந்த அழகா இருக்குடா பார்த்தா விட மாட்ட” (அது சரி. நெனப்ஸ் தான் பொளப்ச கெடுக்கும்ன்னு சித்ரா முனகுவது கேட்குது.) என் அத்தை அப்பாவிடம் சொல்ல அப்பா ஆஸ்பத்திரி வந்து என்னைப் பார்த்தவர்தான். சாகும் வரை என் மீது தனி அன்பு அவருக்கு.
இனி பெயர்க் காரணம் பார்ப்போம். மயிலாப்பூரில்தான் அப்போது வாசம்.(இப்போதும்தான்) கோயிலில் வேறு எதோ விசேஷம். எனவே கற்பகவல்லி என்று பத்தாம் நாள் நெல்லில் பெயரெழுதி காதில் மூன்று முறை சொன்னதோடு சரி. அதன் பின் அந்தப் பெயரை கல்யாணப் பத்திரிகையில்தான் மீண்டும் பார்த்தேன். (கற்பகவல்லி என்கிற உஷா.) (நானும் கப்பிதான் ராஜி) இந்த உஷா என்கிற பெயர் என் பெரியக்கா வைத்ததாம் கற்பகவல்லி கர்நாடகப் பெயர். மாடர்னா வைக்கணும் என்று வைத்ததாக அறிந்தேன்.
ஆக கற்பகவல்லி அலைஸ் உஷாவானேன். அந்த உஷாவும் செல்லமாக உஷிக் குட்டியாகி விட்டது. எனக்கு நகை நட்டு எதுவும் பிடிக்காது. சின்ன வயதில் ஒரு பாசி மாலை கூட அணிந்ததில்லை. ஆனாலும் என் அத்தை மகன் என்னை குருவிக்காரி என்று அழைத்ததன் காரணத்தை அவனிடம்தான் கேட்க வேண்டும்.
சின்ன வயதில் சலசலவென்று பேசிக்கொண்டேயிருப்பேன். வாயாடி என்பது டீச்சர் வைத்த பெயர்.
தெருவில் ஆம்பளைப் பசங்க விளையாடும் அத்தனை விளையாட்டையும் விளையாடி இருக்கிறேன். கில்லி, கோலி, முந்திரிக்கொட்டை வைத்து கோலி மாதிரி ஆடுவது, பம்பரம் விடுவது, மாஞ்சா போட்டு காற்றாடி விடுவது என்று ஒன்றையும் விட்டு வைத்ததில்லை. எங்கள் வீட்டு மாடிக்கு செல்ல ஒரு போதும் படிகளை உபயோகித்தது கிடையாது. தண்ணீர்க் குழாய் மூலம்தான் ஏறிப் போயிருக்கிறேன். அதனால் ரவுடி ராக்கம்மா என்று ஒரு பெயரும் உண்டு. யார் வைத்தது என நினைவில்லை.
எனக்கு மறதி அதிகம். மிளகாய் வாங்கி வரச் சொன்னால் சீயக்காய் வாங்கி வரும் ரகம். அதனால் அரணை என்றும் ஒரு பெயருண்டு. என் மறதி குறித்து ஒரு பதிவு எழுத மறந்து விட்டது.
ஏழெட்டு வயசில் அம்புலிமாமா வாசிக்க அர்ரம்பித்த பிறகு ஒரூ சுப முகூர்த்தத்தில் முழு நிலா என்னும் நாவலை படித்தேன். பிறகு தொடர்ந்து வாசிப்புதான். கல்கியும், சாண்டில்யனும், தேவனும், தி.ஜா. வும் ஒரு கட்டத்தில் என்னை மிகவும் பாடாய்ப் படுத்த உங்க கெட்ட நேரம், நான் எழுத்தாளினி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன பெயரில் எழுதலாம் என்ற கேள்வி குடைந்தது. சொந்தப் பெயரில் எழுதுவதில் சுவாரசியமில்லை. நான் சுஜாதாவின் சிறுகதைகளுக்கு அடிமை. எனது துரோணாச்சாரியாரும் அவர்தான்.(கட்டை விரல் கேட்காத) .
எனவே, எழுதுவதற்கு முதலில் . நான் தேர்ந்தெடுத்த பெயர் சுஜாதாப்ரியா
ம்ஹும்.. க்ளிக்காகவில்லை.. (சுஜாதா தப்பித்தார்.) பிறகு உஷா என்றே எழுதினேன். அப்போது இன்னொரு உஷாவும் இருந்தார். சரி வேண்டாம் என நினைத்தபோது, ஒரு சுப முஹூர்த்தத்தில் திருமதி சுப்ரமணியம் ஆனேன். ஆஹா உஷா சுப்ரமணியம் என்றே எழுதலாம் என சந்தோஷப் பட இயலவில்லை. ஏனெனில் என்னைவிட சீனியர் எழுத்தாளர் உஷா சுப்ரமணியம் அபோது பிரபலமாக இருந்தார். (ஆமா...! ஏதோ என் கதைக்காக பத்திரிகைகள் எல்லாம் வரிசையில் காத்திருக்கிறார் போல் நான் பெயர் தேடிக் கொண்டிருந்தேன்.)
ஒருவழியாய் என் பெண் பிறந்ததும் பெயர்ப் பிரச்சனை தீர்ந்தது. நான் வித்யா சுப்ரமணியம் ஆனேன். என் பெண் மாஸ் கம்யூனிகேஷன் முடித்து தூர்தர்ஷனில் செய்தியாளராகப் பணியாற்றிய போது அவளது பெயரும் வித்யா சுப்ரமணியம்தான். போன் வந்தால் கூத்துதான்.
இட்ட பெயர் கற்பகவல்லி, அழைக்கப்பட்டது உஷா, நானே எனக்கு வைத்துக் கொண்டு பிரபலமாகி பெயர் பெற்றது வித்யா சுப்ரமணியமாக. இதற்கு நடுவில் பட்டப் பெயர்கள் வேறு. பெண்கள் என்னை அழைப்பது அம்மா என்று. சக பதிவர்களுக்கு சகோதரி. இப்போது பாட்டி என்று அழைக்கவும் இரண்டு குழந்தைகள் வந்தாயிற்று.
எந்த பெயருக்குள்ளும் நான் நானாக மட்டுமே இருக்கிறேன். எனக்குள் இருக்கும் குழந்தை மனம் அவ்வப்போது மேலே வந்து எட்டிப் பார்க்கும். அது என்னோடு இறுதி வரை இருக்கும்.
ஆக மொத்தம் பெயர் என்பது ஒரு அடையாளம். பிறந்த நிமிடம் குழந்தை என்பார்கள். இறந்த நிமிடம் பாடி என்பார்கள். இறப்புக்குப் பின்னும் என் பெயர் சொல்கிராற்போல் எனது சில படைப்புகளாவது இருக்கும் என நம்புகிறேன். வாழும்போது புகழ் பெற்று மரணத்திற்குப் பின்னும் அவன் பெயர் போற்றப் படுவதே உண்மையான வாழ்வு. பாரதியார், விவேகானந்தர், காந்தி, ரமணர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதுவே உண்மையில் சாகா வரம். (ரொம்ப அறுத்துட்டேனோ?)
Saturday, February 26, 2011
வாழ்வென்பது (சிறுகதை.
வாழ்வென்பது........
சற்று பொறுத்து மொபைலில் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் படித்தான்.
சிவில் சர்விஸ் ரிசல்ட் வந்திருக்கு அருண். நான் செலக்ட் ஆகிட்டேன்.
எவ்வளவு திமிர். நான் தோற்றது தெரியாமலா இருந்திருக்கும்.!
அது குறித்து கொஞ்சமும் வருத்தப் படாமல் தன வெற்றியைக் கொண்டாடுகிறாள்! அவன் வெறுப்போடு மொபைலை வைத்தான். பதில் அனுப்பவில்லை.
பள்ளிப் பருவத்துக் காதல் கல்லூரியிலும் தழைத்து வளர, இரு குடும்பமும் அவர்களது காதலை அங்கீகரித்து, மகிழ்ச்சியோடு மண நாள் நிச்சயித்திருந்தது. இருவருமே பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படிப்பில் நம்பர் ஒன்தான். ஆளுக்கு இரண்டு தங்க மெடல்கள் வாங்கியிருந்தார்கள். எம்பிஏ முடித்ததும் சிவில் சர்வீஸ் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
“ஒரு வீட்டுல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஐஏஎஸ். ஆகப போறோம். நம்ப மரியாதை எங்கயோ போய்டும் இல்ல?”
அவள் வெற்றிக்கு வாழ்த்து கூறவில்லை என்றால் பொறாமை என்றாகி விடும். “வாழ்த்துக்கள்.” அவன் மெல்லிய புன்னகையோடு சொன்னான்.
வெச்சிருக்கானே அதான் அப்டி சொன்னேன்.”
“உனக்கென்ன பாஸ் பண்ணிட்ட சந்தோஷத்துல உபதேசத்தை அள்ளி விடுவ.”
சுபத்ரா அவனை உற்றுப் பார்த்தாள். இது தாழ்வு மன நிலையில் வரும் வார்த்தையா. அல்லது பொறாமையில் பொங்கும் குதர்க்கமா? அவன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான் அவள் மன ஓட்டம புரிந்தது போல்.
ச்சே! அப்படி பேசியிருக்க வேண்டாமோ? என்ன நினைத்துக் கொள்வாள் அவள்! வெற்றி தோல்வி என்பது வாழ்ககையில் சகஜம்தானே. தான் தோற்றதற்கு இவளா காரணம்? எதற்கு இவளிடம் வெறுப்பைக் காட்டுகிறேன்? நான் இவ்வளவு மோசமா? ஒரு தோல்வி வந்ததும் உள்ளே இருக்கும் மிருகம் மேலே வந்து விடுமா? அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.
தொண்டையில் எதோ அடைத்தது.
“நா வரல. என்னைக் கொஞ்சம் தனியா விட்டுட்டு கிளம்பு சுபத்ரா.”
தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்ளவில்லை அவன்? ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படி என்று எடுத்துக் கொண்டால் ஏன் துக்கமும் தன்னிரக்கமும் மன உளைச்சலும் ஏற்படப் போகிறது. போகட்டும், இந்த வரைக்கும் உள்ளொன்று, புறமொன்று என்றில்லாமல் தன் குமுறல்களை வெளிப்படையாய் கொட்டினானே. நான்கைந்து நாளில் எல்லாம் சரியாகி விடும, யோசிக்க யோசிக்க மனசு தெளியும். தெளியும் போது அவனே பேசுவான்.. கீழே இறங்கி வந்தாள் அவள்.
அவள் சிவில் சர்வீஸ் முடிவுகளைச் சொன்னாள். அவன் தாயின் முகமும் சற்றே மாறியது. அப்டியா என்றாள் சுரத்தில்லாமல்.
“அவனுக்கு எப்பவும் அதிர்ஷ்டம் கொஞ்சம் கம்மிதான். இந்த காலத்துல மூளைக்கு எங்கே மதிப்பிருக்கு? அதான் இப்டி வாடிப் போயிருக்கானா? இவன் புத்திசாலித்தனத்தை சோதிக்க அங்க சரியான ஆள் இல்லையோ என்னமோ!”
சுபத்ரா என்ன சொல்வதென புரியாது திகைத்தாள். தன் வெற்றிக்கு மகிழக் கூட முடியாமல் வீட்டுக்கு வந்தாள். ஆண் தோற்று, பெண் ஜெயிப்பதை பெண்ணே விரும்ப மாட்டாளா?
அவளுக்குப் புரியவில்லை.
“அப்பா இப்போ கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்.”
“இதுல என்னம்மா இருக்கு. நீ பாஸ் ஆனதுல அவனை விட யார் சந்தோஷப் படப போறாங்க. தவிர அடுத்த வாட்டி எழுதி அவனும் செலக்ட் ஆகிடப் போறான். நா பொய் நாளைக்கு பேசிட்டு வரேன்.”
அவனையே பார்த்தபடி கதவருகில் நின்றிருந்தார் அப்பா.
“என்னடா பேசிட்டயா? நா உன்னை புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா சிவில் சர்வீஸ்ல மட்டுமில்ல, வாழ்க்கைலயும் தோற்கப் போற அடி முட்டாள் நீன்னு இப்போதான் புரியுது.”
“என்ன சொல்றீங்க?” அவன் புருவம் சுருங்கக் கேட்டான்
“உன் இடத்துல நா இருந்தா இந்நேரம் என்ன செய்திருப்பேன் தெரியுமா? நா செலக்ட் ஆகாட்டி என்ன. சுபத்ரா ஐஏஎஸ் ஆனதுல எனக்கு அளவு கடந்த சந்தோஷம்னு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருப்பேன். தன் தோல்வியை நினைச்சு துவண்டு போறதைவிட மத்தவங்க வெற்றியில் சந்தோஷப்படறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்டா அருண். உன்னை நான் சரியா வளர்க்கலயோன்னு தோணுது. உன்னைத் தெரியாமலே உனக்குள்ள ஒரு மேல் ஷாவனிஸ்ட் இருக்கான். அதான் உன் காதலியின் வெற்றியை உன்னால ஏற்றுக்க முடியல. இது ஒரு சின்ன சறுக்கல்தான். உன் வெற்றி தோல்வி உன் நம்பிக்கைலதான் இருக்கு. அவ தன் ஐஏஎஸ் பதவியை
உனக்காகத் தூக்கி எறிஞ்சா, அது அவ மதிப்பை இன்னும் கூட்டும். ஆனா உன் மதிப்பு பாதாளத்துக்குப் போய்டும். அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன் மனசு குத்தும். அவ உன்னைவிட உசத்தியா உன் கண்ணுக்கே தெரிய ஆரம்பிச்சுடுவா. உணமையில் அப்போதான் நீ அவளோட வாழ ரொம்ப கஷ்டப் படுவ. நீ ஐஏஎஸ் ஆனாலும் ஆகாட்டியும் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமும் உன்கிட்டதான் இருக்கு. பரந்த மனசு இருக்கறவனுக்கு உலகமே உள்ளுக்குள்ள இருக்கும். இல்லாதவனுக்கு பூமியே சின்ன புள்ளியில் சுருங்கிப் போய்டும். நீ சுருங்கிப் போகப் போறயா? இல்ல விஸ்வரூபம் எடுக்கப் போறயா? நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. “
அப்பா போய் விட்டார். அவன் துவண்டு அமர்ந்தான். இரவு கனமாய் நகர்ந்தது.
மறுநாள் அவன் இரண்டு பை நிறைய இனிப்பு வகைகளுடன் சுபத்ராவின் வீட்டுக்கு கிளம்பினான், அப்பாவையும் அழைத்துக் கொண்டு. குழந்தை பருவத்தில் அவன் தடுமாறிக் கீழே விழும் போதெல்லாம் கை கொடுத்து அவன் எழுவதற்கு உதவி செய்த அப்பா இப்போதும் அவன் நிமிர்ந்து எழ உதவியதற்கு அவன் அவருக்கு போகும் வழியில் நன்றி சொன்னான்.
Sunday, February 6, 2011
இரட்டை தேவதைகள்

blue angel is Vidan (Boy) pink is Sanvi (Girl)