Saturday, February 26, 2011

வாழ்வென்பது (சிறுகதை.

வாழ்வென்பது........

கைபேசியில் சுபத்ராவின் முகத்தோடு, குழலிசையும் ஒலிக்க, அருண் அதை வெறித்துப் பார்த்தான். அது மீண்டும் மீண்டும் இசைத்தது. நேற்று வரை பாய்ந்து எடுத்து காதலோடு பேசியவன், இன்று மௌனமாயிருந்தான். நாலைந்து முறை அது அழைத்து விட்டு ஓய்ந்தது.

சற்று நேரத்தில் வீட்டு தொலைபேசி அடித்தது. அவளாகத்தான் இருக்கும். கீழே அம்மா எடுத்திருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அம்மா அவன் அறைக்கு வந்தாள். தூங்குவது போல் பாவனை செய்தான் அவன்.

“ஏண்டா அருண், தூங்கறயா? சுபத்ரா போன் பண்ணினாளாம். நீ எடுக்கலயாம்.! எடுத்து பேசுடா அவ லைன்ல இருக்கா பார்.”

“அப்பறம் பேசறேன்னு சொல்லு”

“என்னடா ஆச்சு? உங்க ரெண்டு பேர்க்கும் ஏதாவது பிரச்சனையா?

“அதெல்லாம் இல்ல நீ போ” அவன் திரும்பி படுத்தான்.

சற்று பொறுத்து மொபைலில் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் படித்தான்.

சிவில் சர்விஸ் ரிசல்ட் வந்திருக்கு அருண். நான் செலக்ட் ஆகிட்டேன்.

எவ்வளவு திமிர். நான் தோற்றது தெரியாமலா இருந்திருக்கும்.!

அது குறித்து கொஞ்சமும் வருத்தப் படாமல் தன வெற்றியைக் கொண்டாடுகிறாள்! அவன் வெறுப்போடு மொபைலை வைத்தான். பதில் அனுப்பவில்லை.

பள்ளிப் பருவத்துக் காதல் கல்லூரியிலும் தழைத்து வளர, இரு குடும்பமும் அவர்களது காதலை அங்கீகரித்து, மகிழ்ச்சியோடு மண நாள் நிச்சயித்திருந்தது. இருவருமே பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படிப்பில் நம்பர் ஒன்தான். ஆளுக்கு இரண்டு தங்க மெடல்கள் வாங்கியிருந்தார்கள். எம்பிஏ முடித்ததும் சிவில் சர்வீஸ் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

“ஒரு வீட்டுல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஐஏஎஸ். ஆகப போறோம். நம்ப மரியாதை எங்கயோ போய்டும் இல்ல?”

“அதுலயும் ஒரு கஷ்டம் இருக்கு. ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை பார்க்க முடியுமான்றது சந்தேகம்”

“கொஞ்ச நாள் கஷ்டப்பட்டுட்டா அப்பறம் ஒரே இடத்துல கூட இருக்கலாம்.”

“குழந்தைகள்னு பிறந்தா?”

“அது இல்லாமலா? உன்ன மாதிரி ஒரு பெண், என்ன மாதிரி ஒரு பையன். ரெண்டுத்தையும் உங்கம்மாவும் எங்கம்மாவும் பார்த்துப்பாங்க.”

“அதுகளையும் ஐஏஎஸ் ஆக்கிடணும். நல்லார்க்கும் இல்ல?”

இருவரும் நிறைய கனவு கண்டார்கள், ஆனால் அதில் ஒரு பகுதிதான் பலித்திருக்கிறது. பெண் ஜெயித்து ஆண் தோற்பது மிகவும் துக்கமானது. அவனால் இதை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவன் வென்று அவள் தோற்றிருந்தால் அவள் அலட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது. ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியாக இருப்பதும் மதிப்பிற்குரியதுதானே!

ஆனால் கணக்கு தவறி விட்டது. அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையையும் ஐஏஎஸ் கனவில் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த முறை முயன்றால் வெற்றி கிடைத்து விடும். ஆனால் பணியில் அவள் அவனை விட சீனியாராகி விடுவாள். ஒரு வேளை அடுத்த முறையும் தோற்று விட்டால். தலை நிமிர்ந்து நடக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே ஏளனப் பார்வைகள் எழும்பும். அவன் எழுதவே இல்லை என்றால் வேறு. எழுதி தோற்பது என்பது மதிப்பைக் குறைத்து விடும்.

ஒரு மிகப் பெரிய வாய்ப்பு தனக்குக் கை நழுவிப் போனதைவிட, அது அவளுக்குக் கிடைத்திருப்பது, அவனது மன உளைச்சலை அதிகரித்தது. வெளி உலகத்தைக் காணக் கூடப் பிடிக்காமல் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்தான் அவன்.

மாடிப் படியில் காலடி சப்தம் கேட்டது. அம்மா என நினைத்தவன் உள்ளே வந்த உருவத்தைக் கண்டதும் திகைத்தான். சுபத்ராதான். அவளை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவள் வெற்றிக்கு வாழ்த்து கூறவில்லை என்றால் பொறாமை என்றாகி விடும். “வாழ்த்துக்கள்.” அவன் மெல்லிய புன்னகையோடு சொன்னான்.

“என்னாச்ச்சு அருண்? உடம்புக்கென்ன?” அவள் கவலையோடு தொட்டுப் பார்த்தாள்

“ஒண்ணுமில்ல”

“பொய். நீ அப்செட் ஆயிருக்க. அதனால் என்ன அருண். அடுத்த முறை நிச்சயம் ஜெயிக்கப் போற.”

“அதுவரை உனக்கு டவாலி உத்தியோகம் பார்க்கச் சொல்றயா?”அவன் வெடுக்கெனக் கேட்க அந்த வார்த்தைகளில் வெளிப்பட்ட அனலில் அவள் ஒரு விநாடி திகைத்துப் போனாள்.

“:என்னாச்சு அருண்? ஏன் இவ்ளோ நெகடிவா பேசற?”

“வேற எப்டி பேசச் சொல்ற. இந்த கடவுளுக்கு கண்ணே கிடையாது. உன்னைவிட நா எந்த விதத்துல அறிவுல குறைஞ்சவன்? எங்கயோ ஏதோ தப்பு நடந்திருக்கு. அதான் நா செலக்ட் ஆகல.”

“இதுக்கு எதுக்கு கடவுள இழுக்கற அருண்?

“ஏதோ ஒரு முட்டாளைக் கொண்டு என பேரை ரிஜக்ட் பண்ண

வெச்சிருக்கானே அதான் அப்டி சொன்னேன்.”

“கமான் அருண். உன் புத்திக்கு நீ கோடி கோடியா சம்பாதிக்கலாம். நமக்கு முன்னாடி ஏகப்பட்ட பாதைகள் இருக்கு.”

“உனக்கென்ன பாஸ் பண்ணிட்ட சந்தோஷத்துல உபதேசத்தை அள்ளி விடுவ.”

சுபத்ரா அவனை உற்றுப் பார்த்தாள். இது தாழ்வு மன நிலையில் வரும் வார்த்தையா. அல்லது பொறாமையில் பொங்கும் குதர்க்கமா? அவன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான் அவள் மன ஓட்டம புரிந்தது போல்.

ச்சே! அப்படி பேசியிருக்க வேண்டாமோ? என்ன நினைத்துக் கொள்வாள் அவள்! வெற்றி தோல்வி என்பது வாழ்ககையில் சகஜம்தானே. தான் தோற்றதற்கு இவளா காரணம்? எதற்கு இவளிடம் வெறுப்பைக் காட்டுகிறேன்? நான் இவ்வளவு மோசமா? ஒரு தோல்வி வந்ததும் உள்ளே இருக்கும் மிருகம் மேலே வந்து விடுமா? அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

தொண்டையில் எதோ அடைத்தது.

சுபத்ரா அவனை இரக்கத்தோடு பார்த்தாள். பாவம் தோல்வி கொடுத்த அதிர்ச்சியில் பேசுகிறான். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

“நாம் வெளில போயிட்டு வரலாம் வாயேன் அருண்.”

“நா வரல. என்னைக் கொஞ்சம் தனியா விட்டுட்டு கிளம்பு சுபத்ரா.”

“தன்னிரக்கம் தப்பு அருண்.”

“அறிவுரைக்கு நன்றி. கிளம்பு.”

“இதோட எல்லாம் முடிஞ்சுட்டதா ஏன் சோர்ந்து போற.? நீ இப்டி டல்லா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு. நா பாஸ் பண்ணினது எப்டி எதிர்பாராததோ அதே மாதிரி நீ செலெக்ட் ஆகாததும் எதிர்பாராததுதான். இதனால் நா ரொம்ப புத்திசாலின்னோ நீ முட்டாள்னோ அர்த்தமில்ல.”

“நா பச்சக் குழந்தையில்ல சமாதானம் சொல்ல. மேல மேல பேசி என்னை எரிச்சல் படுத்தாதே.”

சுபத்ரா சற்றே வேதனையோடு வேறு வழியின்றி கிளம்பினாள்.

மனிதன் போடும் சில கணக்குகள் பிழையாகும்போது சந்தோஷம் எப்படி வடிந்து விடுகிறது! இருவரும் தேர்வாகியிருந்தால் இந்நேரம் எவ்வளவு உற்சாகமாகி இருப்பான். ஏன்

தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்ளவில்லை அவன்? ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படி என்று எடுத்துக் கொண்டால் ஏன் துக்கமும் தன்னிரக்கமும் மன உளைச்சலும் ஏற்படப் போகிறது. போகட்டும், இந்த வரைக்கும் உள்ளொன்று, புறமொன்று என்றில்லாமல் தன் குமுறல்களை வெளிப்படையாய் கொட்டினானே. நான்கைந்து நாளில் எல்லாம் சரியாகி விடும, யோசிக்க யோசிக்க மனசு தெளியும். தெளியும் போது அவனே பேசுவான்.. கீழே இறங்கி வந்தாள் அவள்.

“என்ன ஆச்சு சுபா அவனுக்கு.? ஏன் இப்டி மூட் அவுட் ஆகி இருக்கான்?”

அவள் சிவில் சர்வீஸ் முடிவுகளைச் சொன்னாள். அவன் தாயின் முகமும் சற்றே மாறியது. அப்டியா என்றாள் சுரத்தில்லாமல்.

“அவனுக்கு எப்பவும் அதிர்ஷ்டம் கொஞ்சம் கம்மிதான். இந்த காலத்துல மூளைக்கு எங்கே மதிப்பிருக்கு? அதான் இப்டி வாடிப் போயிருக்கானா? இவன் புத்திசாலித்தனத்தை சோதிக்க அங்க சரியான ஆள் இல்லையோ என்னமோ!”

சுபத்ரா என்ன சொல்வதென புரியாது திகைத்தாள். தன் வெற்றிக்கு மகிழக் கூட முடியாமல் வீட்டுக்கு வந்தாள். ஆண் தோற்று, பெண் ஜெயிப்பதை பெண்ணே விரும்ப மாட்டாளா?

அவளுக்குப் புரியவில்லை.

வீடு உற்சாகமாயிருந்தது. அவள் பயிற்சிக்கு செல்வதற்கு முன் திருமணத்தை முடித்து விட்டால் நல்லது என நினைத்தது.

“அப்பா இப்போ கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்.”

“ஏம்மா?”

“அருண் செலக்ட் ஆகலப்பா. இப்போ போய் பேசினா அவங்க எப்டி எடுத்துப்பாங்கன்னு தெரியல.”

“இதுல என்னம்மா இருக்கு. நீ பாஸ் ஆனதுல அவனை விட யார் சந்தோஷப் படப போறாங்க. தவிர அடுத்த வாட்டி எழுதி அவனும் செலக்ட் ஆகிடப் போறான். நா பொய் நாளைக்கு பேசிட்டு வரேன்.”

அன்றிரவு அருண் அவளுக்கு போன் செய்தான்.

“உங்கப்பா நாளைக்கு வராத சொன்னாராம்?”

“ஆமா.”

“வேண்டாம்னு சொல்லு சுபி. கல்யாணம் செய்துக்கற மனநிலையில் நா இப்போ இல்ல.”

“அதையும் இதையும் ஏன் முடிச்சு போடற அருண்? கண்டிப்பா நீ அடுத்த வருஷம் செலக்ட் ஆகத்தான் போற. எனக்கு நம்பிக்கை இருக்கு.”

“அப்போ அது வரை காத்திரு. ஒரு வேளை மறுபடியும் ரிசல்ட் எனக்கு சரியா வரலன்னா நீ வேற ஒரு ஐஏஎஸ் மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் செய்துக்கோ.”

“பைத்தியம் மாதிரி பேசாதே அருண். இதுக்கா நாம இவ்ளோ காலம் காதலிச்சோம்? உன்னைத்தவிர வேற யாரும் எனக்குப் புருஷனாக முடியாது”

“ஒருவேளை நா மறுபடியும் தோத்துட்டேன்னு வையி. என்னால ஒரு ஐஏஎஸ் க்கு புருஷனா இருக்க முடியாது.”

“எதையுமே பாஸிடிவா யோசிக்க மாட்டயா நீ?”

‘இது நாள் வரை பாசிடிவாதான் இருந்தேன். எப்போ புத்திக்கு மதிப்பில்லாம போச்சோ அப்பறம் வேற எப்டி யோசிக்கறது?.”

“சரி உன் வழிக்கே நானும் வரேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதையும் மீறி நீ சொல்றபடி நடந்துச்சுன்னா நா என வேலையை ராஜினாமா பண்ணிடறேன். போதுமா? உன்னைவிட எனக்கு அது முக்கியமில்ல.” அவள் சொல்ல,

அருண் போனை வைத்தான். பின்னால் நிழலாடத் திரும்பினான்.

அவனையே பார்த்தபடி கதவருகில் நின்றிருந்தார் அப்பா.

“என்னடா பேசிட்டயா? நா உன்னை புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா சிவில் சர்வீஸ்ல மட்டுமில்ல, வாழ்க்கைலயும் தோற்கப் போற அடி முட்டாள் நீன்னு இப்போதான் புரியுது.”

“என்ன சொல்றீங்க?” அவன் புருவம் சுருங்கக் கேட்டான்

“உன் இடத்துல நா இருந்தா இந்நேரம் என்ன செய்திருப்பேன் தெரியுமா? நா செலக்ட் ஆகாட்டி என்ன. சுபத்ரா ஐஏஎஸ் ஆனதுல எனக்கு அளவு கடந்த சந்தோஷம்னு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருப்பேன். தன் தோல்வியை நினைச்சு துவண்டு போறதைவிட மத்தவங்க வெற்றியில் சந்தோஷப்படறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்டா அருண். உன்னை நான் சரியா வளர்க்கலயோன்னு தோணுது. உன்னைத் தெரியாமலே உனக்குள்ள ஒரு மேல் ஷாவனிஸ்ட் இருக்கான். அதான் உன் காதலியின் வெற்றியை உன்னால ஏற்றுக்க முடியல. இது ஒரு சின்ன சறுக்கல்தான். உன் வெற்றி தோல்வி உன் நம்பிக்கைலதான் இருக்கு. அவ தன் ஐஏஎஸ் பதவியை

உனக்காகத் தூக்கி எறிஞ்சா, அது அவ மதிப்பை இன்னும் கூட்டும். ஆனா உன் மதிப்பு பாதாளத்துக்குப் போய்டும். அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன் மனசு குத்தும். அவ உன்னைவிட உசத்தியா உன் கண்ணுக்கே தெரிய ஆரம்பிச்சுடுவா. உணமையில் அப்போதான் நீ அவளோட வாழ ரொம்ப கஷ்டப் படுவ. நீ ஐஏஎஸ் ஆனாலும் ஆகாட்டியும் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமும் உன்கிட்டதான் இருக்கு. பரந்த மனசு இருக்கறவனுக்கு உலகமே உள்ளுக்குள்ள இருக்கும். இல்லாதவனுக்கு பூமியே சின்ன புள்ளியில் சுருங்கிப் போய்டும். நீ சுருங்கிப் போகப் போறயா? இல்ல விஸ்வரூபம் எடுக்கப் போறயா? நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. “

அப்பா போய் விட்டார். அவன் துவண்டு அமர்ந்தான். இரவு கனமாய் நகர்ந்தது.

மறுநாள் அவன் இரண்டு பை நிறைய இனிப்பு வகைகளுடன் சுபத்ராவின் வீட்டுக்கு கிளம்பினான், அப்பாவையும் அழைத்துக் கொண்டு. குழந்தை பருவத்தில் அவன் தடுமாறிக் கீழே விழும் போதெல்லாம் கை கொடுத்து அவன் எழுவதற்கு உதவி செய்த அப்பா இப்போதும் அவன் நிமிர்ந்து எழ உதவியதற்கு அவன் அவருக்கு போகும் வழியில் நன்றி சொன்னான்.

Sunday, February 6, 2011

இரட்டை தேவதைகள்

எங்கள் வீட்டில் புதிதாய் மலர்ந்திருக்கும் இரட்டை தேவதைகள் இவர்கள். வாழ்த்துங்கள் அவர்கள் மேன்மையாய் வாழ





blue angel is Vidan (Boy) pink is Sanvi (Girl)





வாழ.

Tuesday, February 1, 2011

பாட்டியாகி விட்டேன்

என் மகளுக்கு 25-1-2011 அன்று இரட்டை குழந்தைகள் (ஆண் ஒன்று பெண் ஒன்று) பிறந்தது. அடுத்த நாள் பிறந்திருந்தால் பள்ளி செல்லும் போது குழந்தைகள் வருத்தப்பட்டிருக்கும். சாக்லேட் கொண்டு போய் கொடுத்து கொண்டாட முடியாதே. எனவே பாட்டியாகிய நான் மிகவும் பிசியாக இருப்பதால் பதிவுப் பக்கம் வர இயலாத நிலையில் உள்ளேன். மறந்துறாதீங்கப்பா.

Sunday, January 2, 2011

சதாசிவக் கோனே (பயணம்)

சென்ற ஆண்டு சதாசிவ கோனே ஏறி விட்டு வந்தோம் ஆந்திராவில் புத்தூர் வழியாகச் சென்று நாகலாபுரத்தில் இரவு தங்கிவிட்டு மறு நாள் காலை சதாசிவ கோனே சென்றது அற்புதமான அனுபவம். அழகிய இயற்கை எழில் கொஞ்சிய மலையின் மீது நாங்கள் சென்று வந்ததை புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு முறை சென்று வாருங்கள். மலை மீது இரண்டு அருவிகள் உள்ளது. மலை மீதிருந்து இறங்கும்போது குறுக்கு வழி ஒன்றில் இறங்கினோம். அது மிகுந்த சாகசத்திற்குரியதாய் இருந்தது. மலை மீது சிவலிங்கத்திற்கு நாங்களே அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்தோம்




சாகசப் பயணம்
வழுக்குப் பாறைகள்
காட்டு வழியில்




விபூதி அபிஷேகத்தில் சிவன்

அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழி



அம்மன் சந்நிதி
அம்மன் சந்நிதிக்கருகில் ஒரு அருவி
.

Thursday, December 30, 2010

என்னைக் கவர்ந்த பதிவுகள்

பதிவுலகில் நான் அடியெடுத்து வைத்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆரம்பத்தில் பதிவெழுதி போஸ்ட் செய்தபின் அதோடு கடமை தீர்ந்தாற்போல் இருந்து விடுவேன். அத்திப் பூத்தாற்போல் பின்னூட்டங்கள் வரும். பிறகு இன்டலி, தமிழ்மணம் என்று எனது தளத்தை இணைத்த பிறகுதான் எனக்கு பதிவுலகம் பற்றி புரிய ஆரம்பித்தது. பல பேரை நான் பின் தொடர, என்னைப் பலர் பின்தொடர எனது நட்புகளும் எல்லைகளும் மெல்ல மெல்ல விரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஒன்றரை ஆண்டில் நூற்றுக் கணக்கான பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில பதிவுகள் என்னை வியக்க வைத்தன. சில சிரிக்க வைத்தன. சில பதிவுகள் நெகிழ வைத்தன. சில பதிவர்களின் எழுத்தாளுமை என்னை அட போட வைத்திருக்கிறது.

பதிவுகளில் சிலர் எழுதும் திரை விமர்சனங்கள் பிரபல பத்திரிகை எழுதும் விமர்சனத்தை விட தரமாகவும், அழுத்தமாகவும் நடுநிலையாகவும் (என்ன கொஞ்சம் நீளம்தான் கூடி விடும்) இருப்பது உண்மை.

2010 இன் இறுதியில் இருக்கிறோம். இந்த வருடம் நான் வாசித்தவற்றில் என்னைக் கவர்ந்த, சிந்திக்க வைத்த சில பதிவுகளை இங்கு பட்டியலிட விரும்புகிறேன்.


ரவி ஆதித்யா

இணையத்தில் நான் முதன் முதலில் எதேச்சையாய் வாசித்த பதிவு, ரவி ஆதித்யாவுடையது. ரிமோட் என்ற அந்தப் பதிவு நகைச்சுவையுடன் வித்யாசமாக எழுதப் பட்டிருந்தது. ரிமோட் என்கிற தம்மாத்தூண்டு பொருள் படுத்தும் பாட்டில் டிவியில் தெரியும் தொடர்பற்ற காட்சிகளையும் வசனங்களையும் நச்சென்று நயம்பட எழுதியிருந்தார். மற்றொரு பதிவில், தான் டைப்ரைட்டிங் கற்ற காலத்து நினைவுகளை மிகுந்த சுவாரசியாமாக சொல்லியிருந்தார். அநேகமாக எழுபதுகளில் இந்த அனுபவம் அன்றைய இளைஞர்கள் எல்லோருக்கும் இருந்திருக்கும். டைப்பிங் ஷார்ட் ஹேண்ட் கற்ற காலத்தின் மலரும் நினைவுகளில் நானும் ஆழ்ந்து போனேன்.

http://raviaditya.blogspot.com/2010/07/pack-my-box-with.html

http://raviaditya.blogspot.com/2010/05/blog-post_5367.html

அது ஒரு கனாக் காலம்.

தன இளவயது அனுபவங்களை அந்தக் கால வாசத்தோடும், மெல்லிய நகைச் சுவையுடனும், பசுமையான நினைவுகளுடனும் இதில் பகிர்ந்திருக்கிறார் பதிவர். மாப்பிள்ளைத் தோழனும் திரட்டிப் பாலும் என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். புரியும்.

வித்தியாசமான வியாதி-பெங்களூரு நினைவுகள் என்ற பதிவில் தனக்கு வந்த நோயைப் பற்றியும் மருத்துவ மனை அனுபவங்களையும் கூட நகைச்சுவையோடு இவர் சொல்லியிருந்த விதமும், பதிவை முடித்திருந்த விதமும் என்னைக் கவர்ந்தது.

http://trichisundar.blogspot.com/2010/05/blog-post_30.html


ரிஷபன்

பத்திரிகை மூலம் ஏற்கனவே நான் அறிந்தவர்தான் ரிஷபன். சிறுகதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணம் இவர் கதைகளில் பளிச்செனத் தெரியும். உணர்வு பூர்வமான இவரது எழுத்து எவரையும் ஆட்கொள்ளும். ஸ்ரீரங்கத்து மண் வாசம் கலந்த எழுத்து வேறு. கேட்கவா வேண்டும். இவரது கண்ணாடி என்ற சிறுகதையும் ரிக்ஷா நண்பர் என்ற கதையும் உன்னதமானது.

http://rishaban57.blogspot.com/2010/07/blog-post_18.html


சோத்துமூட்டை

அர. பார்த்தசாரதியின் பதிவில் ரயிலில் கிடைத்த ஆப்பு என்ற ஒரு சிறுகதை என்னை திகைக்க வைத்தது எனலாம். சிறுகதை இலக்கணத்தோடு, மிக மிக வித்தியாசமான ஒரு தொழிலைக் குறித்து எழுதியிருந்தார். படித்து விட்டு சில நிமிடம் அயர்ந்து அமர்ந்து விட்டேன். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்கிற வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

http://parthasarathyrengaraj.blogspot.com/2010/12/3.html


கோபி ராமமூர்த்தி.

இவரது ஜடையும் , சொம்பு புராணமும் என்னை மிகவும் கவர்ந்த சுவாரசியமான பதிவுகள். தான் எழுத எடுத்துக் கொள்ளும் பொருளை, அது புத்தக விமர்சனமாகட்டும், விழா நிகழ்வுகளாகட்டும் பயணமாகட்டும் , சொம்பு உருவாக்கமாகட்டும் அதுகுறித்த ஆழ்ந்த தகவல்களுடன் தெளிவான ஞானத்தோடு இவர் எழுதும் விதம அசத்துகிறது. சடையை நான் மிகவும் ரசித்தேன். இறுதியில் அது சிவனாரின் சடையில் ஆன்மீகத்துடன் இணைத்த விதம அற்புதம். இவரது எழுத்தாளுமையும், நுணுக்கமும் கொஞ்சம் சுஜாதா, கொஞ்சம் பாலகுமாரனை. நினைவுபடுத்துகிறது

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_19.html


ஆர்.வெங்கடசுப்ரமணியன் (தீராத விளையாட்டுப் பிள்ளை)

இவரது சங்கீதப் பதிவுகள் சுவாரசியமானவை. கலகலப்பாக பின்னி எடுக்கிறார். காசு கொடுத்து சங்கீதம் கேட்ட முதல் ஆள் யாரென்று ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார். தன்னைப் பற்றிய தகவல்களையும் கலகலப்பாக தந்திருக்கிறார். கண்டிப்பாக இவரது காது கர்னாடிக் காதுதான்

http://mannairvs.blogspot.com/2010/12/blog-post_30.html

.

ஜோதிஜி (தேவியர் இல்லம் திருப்பூர்)

திருப்பூர் சாயப் பட்டறைகளில் சாயக் கழிவுகளின் மூலம் நகரில் ஏற்படும் மாசும் அதுசார்பாக இடப்பட்ட அரசாணைகளும் , அதற்குப் பின் நடந்தவைகளையும் டெக்னிக்கலாக ஏராளமான தகவல்களோடு எழுதியிருக்கிறார். இறையன்புவின் நேர்மை கூடபிரச்சனைக்கு ஒரு காரணம் என்கிறார். சாயப் பட்டறைகள் குறித்து நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது.

http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_27.html


தங்கத்தமிழ்

எனக்கு காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு, இவரது பதிவு முழுக்க அவரது பாடல்களின் அலசல்கள்தான். தங்கத்தமிழ் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்

http://thangathamizh.blogspot.com

.

முத்துச் சிதறல்

மனோ சாமிநாதனை எண்பதுகளிலேயே எனக்குப் பழக்கம். இணைய எழுத்தாளராக அவர் அசத்திவருவது சமீபத்தில் தான் தெரியும். இவரது பாலைவன வாழ்க்கை வெகு சுவாரசியம். பெண்களுக்காக இவர் எழுதும் விஷயங்களும் பயனுள்ளவை.

http://muthusidharal.blogspot.com/2010/07/blog-post_10.html


திரை விமர்சனங்கள்

சினிமா விமர்சனங்கள் என்று எடுத்துக் கொண்டால் கேபிள் சங்கர், குடந்தை கீதப்பிரியன், சி.பி செந்தில் குமார், ஜாக்கிசேகர் என்று சொல்லிக் கொண்டு போகலாம். குடந்தை கீதப்ரியனின் தூங்கா நகரம் மதுரை, மதுரையை கண்முன் நிறுத்தியது. சி.பி.செந்தில்குமாரின் ஈரோடு வங்கி காசோலை மோசடி விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவு. (தலைப்பை நான் மாற்றி விட்டேன்)

http://geethappriyan.blogspot.com/2010/10/blog-post_17.html

http://adrasaka.blogspot.com/2010/12/blog-post_10.html


கவிதைகள்

என்னைக் கவர்ந்த சில எளிமையான மென்மையான கவிதைகள்.

உணர்ந்தேன். (ராஜியின் கற்றலும் கேட்டாலும்)

http://suharaji.blogspot.com/

உள் காயம் (கே.பி.ஜனா)

இனி ஒரு விதி செய்வோம் (ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி)

http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/12/blog-post_22.html

இடமும் வலமும் (உழவன்)

http://tamiluzhavan.blogspot.com/2010/11/blog-post.html

(பனித்துளி சங்கரின் கவிதைகளை படிக்க முயல்கிறேன். அவரது வலைப பக்கம் எனக்கு திறந்து பார்க்கவே முடியவில்லை. ஏன் எனத் தெரியவில்லை)


கொஞ்சம் வெட்டிப் பேச்சு (சித்ரா)

கடைசியாக, இந்த ஆண்டின் மிகச் சிறந்த பதிவாக எனக்குத் தோன்றியது சித்ராவின் “விருந்திலே ஒரு இதயம் முளைக்குதோ” என்ற பதிவுதான். வாழ்வின் மிகப்பெரிய உண்மையை ஒரு விருந்தின் மூலம் அனுபவபூர்வமாய் விருந்துண்டவர்களுக்கு உணர்த்தி, வாவ்! அற்புதம். அதை சித்ரா சற்றே நகைச்சுவையோடு எழுதி இருந்த விதமும் முடித்திருந்த விதமும் நெஞ்சை நெகிழ்த்தியது. இவரது பதிவுகள் படிக்கும்போது ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்கிறது

http://konjamvettipechu.blogspot.com/2010/12/blog-post_19.htm

.

நான் படித்தவற்றில் என்னை பாதித்தவைகளைத்தான் இங்கே பகிர்ந்து கொண்டேன். நான் படிக்க வேண்டியது இன்னும் கடலளவு இருக்கிறது.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 27, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2011 பிறக்கப் போகிறது. ஒருவருடமும், ஒரு வயதும் கழியப்போகிறது. இந்த ஒரு வருடத்தில் ஏதாவது உருப்படியாய் செய்தேனா? ஒரு டைரி குறிப்பை வாசிக்க மனசு சற்று பின்னோக்கிச் செல்கிறது.

ஜனவரி மாதம் எனது “உப்புக் கணக்கு” புதினம் வெளியானது. இந்த புத்தகம் எனது மூன்றாண்டு உழைப்பு. இந்த புத்தகத்தின் மூலம் என் வீட்டிற்கருகில் உள்ள விருபாக்ஷீஸ்வரர் கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.. இந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து நேரிடையாக வாங்கும்போது எனக்குக் கிடைக்கும் எழுத்தாளருக்கான கழிவை சிவனுக்கு அளித்து விடுவது என்பதே என் முடிவு. எனது முடிவைக் கேட்டு பல நண்பர்கள் என்னிடமே புத்தகம் வாங்க, கோயிலுக்கு பணம் போய்ச சேர்ந்தது. மனசுக்கு விலை மதிப்பற்ற ஒரு மகிழ்ச்சி கிடைத்தது.


இதுவரை எத்தனையோ வாசர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்றாலும், உப்புக் கணக்கு மூலம் இன்னும் பல நல்ல வாசகர்கள் கிடைத்தார்கள். எனது மின்னஞ்சல் முகவரிக்கு இந்த கதைக்காக வந்த மின்னஞ்சல்கள் நிறைய.


இந்த உப்புக் கணக்கு குறித்து முதலில் மைலாப்பூர் டைம்ஸ் விமர்சித்தது. பிறகு ஹிந்து நாளிதழ் தனது விமர்சனத்தை இந்த புதினத்திற்கு எழுதியது. பிறகு, தொடர்ந்து, கலைமகள், தினமணி, அமுதசுரபி என வரிசையாய் புத்தக மதிப்புரை எழுத, மொத்தத்தில் இந்த மண்ணில் நான் பிறந்ததற்கு இந்த படைப்பு மூலம் நான் இந்த தேசத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்திருப்பதாகவே நினைக்கிறேன்.


மே பதினெட்டு என் பிறந்த நாள் அன்று நான் இருந்தது திருவண்ணாமலையில். என் தங்கை பெண்ணின் கல்யாணம் வேறு. ஜானவாசத்தன்று எல்லோரும் சாப்பிடும்போது ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க, இன்று என் பிறந்த நாள் என்று அறிவிப்பு செய்து ஓசியில் விருந்து கொடுத்தேன்.(தங்கை செலவில்) அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி உறவினர்கள் பத்து பேருடன் கிரிவலம் செய்தது மறக்க முடியாதது. அது போல் ஒரு பிறந்த நாள் இது வரை கொண்டாடியதில்லை. அடி அண்ணா மலையிலிருந்து ஒரு பைரவர் எங்களோடு கிரிவலம் வந்து நாங்கள் சத்திரத்தை அடையும் வரை கூடவே வந்து எங்கள் கையால் உணவு சாப்பிட்டுச் சென்றது அதிசயமாக இருந்தது.


ஆகஸ்ட் மாசம் குருவாயூர், பாலக்காடு என்று ஒரு வார யாத்திரை. குருவாயூரில் பதினைந்து முறை சுவாமி தரிசனம். அங்கிருந்து திருநாவாய் என்ற ஷேத்திரத்திற்கு சென்றோம். சிவன், விஷ்ணு, பிரும்மா மூவரும் ஒரு சேர இருக்கும் இடம். நதிக்கு ஒரு கரையில் நவா முகுந்தனின் சந்நிதி. மறுகரையில் சிவனும் பிரும்மாவும். நாங்கள் போகும் போது நேரமாகி விட்ட படியால் முகுந்தனை மட்டுமே தரிசிக்க முடிந்தது. சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த முறை சிவனையும் பிரும்மாவையும் தரிசித்து விடுவது என்ற முடிவோடு பாலக்காட்டுக்கு பயணமானோம்.


பாலக்காட்டில் பஜனோத்சவம் நடந்துகொண்டிருந்தது. மகா கணபதியான் கோயில் மண்டபத்தில் ஐந்து நாள் விடிய விடிய பஜனைகள் நடக்கும். பல பிரபலங்கள் தங்கள் குழுவோடு வந்து பஜன்ஸ் பாடுவது வழக்கம். காலைக் காப்பியில் ஆரம்பித்து இரவு சாப்பாடு வரை கோயிலில்தான். கோயிலை ஒட்டி என் சின்ன மாமியார் வீடு. எந்நேரமும் நாமாவளி கேட்டுக் கொண்டேயிருந்தது. இடையில் ஒருநாள் காவசேரியில் உள்ள எங்கள் குலதெய்வ கோயிலுக்கும் (பரக்காட்டு பகவதி) சென்று வந்தேன். மற்றுமொரு நாள் பதினெட்டு ஆக்ராஹாரங்களில் உள்ள கோயில்களுக்கும் ஒரு விசிட். இந்த பயணம் நிச்சயம் ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீப்தான்.


அக்டோபர் மாசம் எனது சிறுகதை தொகுப்பு “தகப்பன் சாமி” வெளியாயிற்று. சிறுகதை என்பது தன்னுள் மிகப் பெரிய விருட்சத்தை ஒளித்து வைத்திருக்கும் வீரிய விதை. எனக்கு சிறுகதை மீது அதீத காதல் உண்டு.


17-12-2010 அன்று வெளி வந்த குமுதம் பக்தி இதழில் இதோ எந்தன் தெய்வம் என்ற பகுதியில் எனது ஆன்மீக கட்டுரை வெளிவந்துள்ளது.


இந்த ஆண்டு எனது இரண்டு பதிவுகள் வாசகர்களால் பிரபலப்படுத்தப் பட்டது, பத்திரிகையில் எழுதினால் காசு கிடைக்கும் என்றாலும் என்னமோ எனக்கு இப்போது பதிவு எழுதவே பிடித்திருக்கிறது, காரணம் இங்கே என்னை விட நன்கு எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். எனவே என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனது மனக் குமுறல்களையும் சமூகச் சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கிறேன்.


ஆக மொத்தம் இந்த வருடம் நன்றாகவே கழிந்திருக்கிறது. யாருக்கும், தெரியாமல் கூட எந்த தீமையும் செய்யவில்லை.


புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வித்யா சுப்ரமணியம்

Friday, December 24, 2010

என் பார்வையில் மன்மதன் அம்பு.

வெளியான முதல் நாளே மன்மதன் அம்பு பார்த்தது சந்தோஷமாக இருந்தது.
விமர்சனம் என்கிற பெயரில் ஒட்டு மொத்த கதையையும் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கமலின் தீவீர ரசிகை. அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் சர்ச்சைகள் வருத்தப் பட வைக்கிறது. ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை இது நிச்சயம் பாதிக்கும். நிற்க, மன்மதன் அம்புக்கு வருவோம்.

டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சண்டைக் காட்சிகள் இல்லை. நகைச் சுவைக்கு என்று தனி டிராக் கிடையாது. குத்துப் பாடல்கள் இல்லை. கட்டிப்பிடி நடனங்கள் இல்லை. குறைந்த பட்சம் தொட்டுப் பேசும் காட்சிகள் கூட இல்லை. திரிஷாவின் அறிமுகப் பாடல் மட்டும், அது கூட கதைக்கு தேவையானதால். தமிழ் சினிமாவின் பார்முலாவை அனாயாசமாக மாற்றி இருக்கிறார் கமல். ஒரு சிம்பிளான கதையை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கிறார். படத்திற்கு பலம், அவரது திரைக்கதையும் வசனமும். நடிகர் கமலஹாசனுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் கமல்ஹாசன் சளைத்தவர் இல்லை. ஒரு படி மேலேயே இருக்கிறார்.

பிரான்ஸ், வெனிஸ் என்று கேமரா அசத்துகிறது. அதற்காகவே பலமுறை படத்தைப் பார்க்கலாம். நகைச்சுவை, கதையோடு கலந்து அழகாக வெளிப் பட்டிருக்கிறது. கடைசி அரைமணி நேரத்தில் எப்பேர்ப் பட்ட சிடு மூஞ்சியும் சிரிக்கும் என்பது உறுதி. மாதவன் சங்கீதா திடீர் காதல்தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

கமல் மட்டும் எப்படி வயது குறைந்து கொண்டு வருகிறார் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். த்ரிஷா மிக கியூட்டாக இருக்கிறார். சொந்தக் குரலில் பேசி இருக்கிறார். தொடர்ந்து பேசலாம்.

சங்கீதாவுக்கு ஒரு ஓ போடலாம். சூப்பரா செய்திருக்கிறார். நகைச்சுவையில் நல்ல டைமிங் மிக முக்கியம். அத்தனை பெரும் அதை உணர்ந்து மிக இயல்பாக செய்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் அந்த குட்டி (சோடா புட்டி) பையன் வாவ்! எங்கேர்ந்து புடிச்சாங்கன்னு தெரியல. இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரலாம் போல இருக்கு. கமல் மாதவன் காம்பினேஷன் அன்பே சிவத்திற்குப் பிறகு மறுபடியும் நல்லதொரு படத்தை தந்திருக்கு.

மொத்தத்தில் மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டாக எல்லா கவலையும் (வெங்காயம் உட்பட) மறந்து விட்டு குழந்தைகளோடு அமர்ந்து பார்க்கலாம்.
மிக டீசன்ட்டான படம்.