Wednesday, February 10, 2016

அன்புடனே காதல்

அன்புடனே  காதல்

                                
காலங்காலையில்  அழைப்பு மணி அழுத்தப் பட்டதும் வியப்போடு வந்து கதவைத் திறந்த ராதிகாவின் முகத்தில் வியப்பின் அளவு கூடிற்று. கதவுக்கு வெளியே நின்றிருந்த பெண்ணை விழி விரியப் பார்த்தாள். இருபத்திரண்டு வயதிருக்கக் கூடும். துரு துருவென  ஒரு  முகம்.  கச்சிதமான  உடல்.  எளிமையான  அழகு.

"உள்ளே  வரலாமா?"  குரல்  இனிமையாயிருந்தது. 

"யாரும்மா?  விற்பனைப்  பெண்ணா?"

"உள்ளே  வந்து  சொல்லலாமா?"

ராதிகா  வியப்பு  மாறாது  அவளுக்கு  வழிவிட்டு  ஒதுங்கினாள்.

"வாவ்  வீடு  ரொம்ப  அழகார்க்கு.  உள்  அலங்காரமெல்லாம்  நீங்கதானா?  சூப்பர் ஆண்ட்டி.  அதுசரி  நீங்க  எப்டி  இவ்ளோ  இளமையா  இருக்கீங்க  இந்த  வயதுலயும்?   அந்த  ரகசியத்தை  எனக்கும்  சொல்லுங்களேன்?"

"நீ யாருன்னு  இன்னும்  சொல்லல"

என்  பேர்  ரம்யா.  எம்.ஏ. கம்யூனிகேஷன் முடிச்சு இப்பத்தான் தனியார்  டிவி  சானல்ல வேலைக்கு சேர்ந்திருக்கேன். இன்னிக்கு  காலைல  சிறப்பு  விருந்தினரா  வந்த உங்க  மகன்  அஸ்வினை  எங்க  சானல்ல இன்டர்வியூ  செய்தது  நான்தான். லைவ்  இண்டர்வியூ.  பார்த்திருப்பீங்களே"

ராதிகாவுக்கு  சட்டென  நினைவுக்கு  வந்தது.  ஆமாம்  அதே  முகம்தான்  என்ன  விஷயமா   இங்க?  அஸ்வின்  வீட்ல  இல்லையே"

"நா  உங்களைப்  பார்க்கத்தான்  வந்தேன்." 

"என்னையா?"

"உங்களையேதான்.  காலேல  இண்டர்வியூல அவர்கிட்ட  கல்யாணம்  எப்போ?  காதல் கல்யாணமான்னு   கேட்டேன்.  அதுக்கு  அவர்   என்  அம்மா  எந்தப்  பெண்ணை  சொல்றாங்களோ  அவதான்  என்  மனைவின்னு  சொன்னார்.  இந்தக்  காலத்துல இப்டியும்  ஒரு  பிள்ளையான்னு  ஆச்சர்யம்  ஏற்பட்டது.  உடனே  உங்களைப் பார்க்கணும்னு தோணிற்று.  அதான்  வந்திருக்கேன்."

"என்ன  சாப்பிடற?

என்  பேட்டி  எப்டியிருந்துச்சுன்னு  சொல்லவேல்லயே"

"உண்மையைச்  சொல்லணும்னா  சுமார்தான்.  என்  பையனைப்  பத்தி  இன்னும்  நிறைய  விஷயங்கள்  வெளிப்படற  அளவுக்கு  கேள்விகள்  இருந்திருக்கலாம்."

அதுக்கென்ன.  இன்னொரு  முறை  ஒரு  நிகழ்ச்சி  பண்ணிட்டா  போச்சு"

"சந்தோஷம்.  வேறென்ன?"

"உங்ககிட்ட  வேறொரு  விஷயமும்  கேட்டுடணும்னுதான்  வந்தேன்"

"என்ன?"

"என்னை  உங்களுக்கு  பிடிச்சிருக்கா"

"புரியலை.  எதுக்கு  கேக்கற?"

"உங்களுக்கு  என்னைப்  பிடிச்சிருந்தா  உங்க  பிள்ளைக்கும்  பிடிக்கும்  இல்லையா?  அதான்"

ராதிகா  திகைப்புடன்  அவளை  உற்றுப்  பார்த்தாள்.  என்ன  தைரியம்  இருந்தால்  இப்படி  நேருக்கு  நேர்  வந்து  கேட்பாள்!

"அதிர்ச்சியா  இருக்கா  ஆண்ட்டி?  என்ன  பொண்ணு  இவன்னு  யோசிக்கறீங்களா?  ஆனா  நா  இப்டித்தான்.  எதையும்  வெளிப்படையா  பளிச்சுன்னு  பேசத்தான்  எனக்குப்  பிடிக்கும்.  எனக்கு  உங்க  பிள்ளையைப்  பிடிச்சிருக்கு.  அவருடைய  அழகு  அறிவு,  கொள்கைகள்  எல்லாமே  பிடிச்சிருக்கு.  உங்களுக்கு  என்னைப்  பிடிச்சிருந்தா  என்  காதலை  அவர்கிட்ட  நா  சொல்லிடுவேன்"

ராதிகா  மௌனமாக  அவளைப்   பார்த்தாள்.

"நா  யாருன்னு  தெரியாது.  என்  குடும்பம்  எப்டிப் பட்டதுன்னு  தெரியாது. எதுவுமே  தெரியாம  என்னை  எப்டி  பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியும்?  அப்டித்தானே?  சொல்றேன். எங்கப்பா  எக்ஸ்  மினிஸ்டர். ஏகப்பட்ட  ஊழல். ஊரைக்  கொள்ளையடிச்சு  ஏகப்பட்ட  சொத்து  இருக்கு.  சுவிஸ்  பாங்க்ல  எத்தனை  கோடி  இருக்குன்னு அவருக்கே கணக்கு  தெரியாது. அவரை  அப்பான்னு  சொல்லிக்க  எனக்கு  பிடிக்கல. அப்பா  பெண்  உறவை  ரத்து  பண்ணி  சட்டபூர்வமா அவர்கிட்டேர்ந்து  விடுதலை  வாங்கித்தரும்படி கோர்ட்ல வழக்கு போட்ருக்கேன். மனப்பூர்வமா  அவர்கிட்டேர்ந்து உறவை அறுத்துண்டாச்சு. அம்மா  ஒரு  அப்பிராணி.  புருஷன்தான் எல்லாம்  அவளுக்கு. அதனால  அவளையும்  வேண்டாம்னு  முடிவு  பண்ணி  வெளில வந்துட்டேன்.  

அண்ணன்  ஒருத்தன்  அமெரிக்கால  இருக்கான், கூடிய  சீக்கிரம்  இந்தியா  வந்து அப்பாவோட  அரசியல்  வாரிசா  ஆய்டுவான்னு  நினைக்கறேன். நா இப்போ ஒரு அபார்ட்மென்ட்ல  தனியா  இருக்கேன். சுய சம்பாத்தியம். ஓரளவு  சமையல் தெரியும். வேலை முடிஞ்சா  வீடு.  கரஸ்ல  எம்.பி.ஏ  படிக்கறேன். இதுலயே  நேரம்  ஓடிடும். நோ  பார்ட்டி,  நோ  ஊர்  சுற்றல்,  எந்த  கெட்ட  பழக்கமும்  கிடையாது.  எனக்கு  இப்போ  உடனடியா  தேவை   கலப்படமில்லாத  அன்பு  மட்டுமே.  உங்க  பிள்ளையைப்  பேட்டி  எடுக்கற  வரை  காதல்ங்கற  வார்த்தையைப்  பற்றி  எல்லாம்  நா  பெரிசா  யோசிச்சதில்ல.   ஆனா  இப்போ  அது  மட்டும்தான்  உள்ள  இருக்கு.  கண்டதும்  காதலா  சுத்த அபத்தம்னு   சினேகிதிகள் கிட்ட கிண்டலடிச்சிருக்கேன். இப்போ  அது  சரிதான்னு  ஒத்துக்கறேன்.   இனி  என்  சந்தோஷம் உங்க  ஒரு  வார்த்தையில்தான்  இருக்கு."

ராதிகா  அவளையே  பார்த்தாள்.

"ஒரு  வேளை  எனக்கு  உன்னைப்  பிடிக்கலைன்னு  சொன்னா?"

"உங்களுக்கு  எதனால  என்னைப்  பிடிக்கலன்னு  தெரிஞ்சுப்பேன்.  அப்டி  பிடிக்காம  போனதுக்கு காரணமா எங்கிட்ட இருக்கற  குறையை  மாத்திக்க முயற்சி  செய்வேன்,  உங்களுக்கு  பிடிக்கிற  வரை  என்னை  மாத்திக்கிட்டே  இருப்பேன். ஏதோ ஒரு வினாடியில் உங்களுக்கு  நிச்சயம்  என்னைப்  பிடிச்சுடும்"

"அவசியமில்லை.  யாருக்காகவும்  நீ  உன்னை  மாற்றிக்  கொள்ளத்  தேவையில்லை. அஸ்வின்  தன்  திருமணம்  பற்றி  சொன்னதை  மறந்துடு.  அவனுக்கு  கல்யாணம்  செய்துக்கற  ஐடியாவே  கிடையாது.  அதைச்  சொல்லாம  அம்மா  சொல்ற  பெண்ணைப்  பண்ணிப்பேன்னு  கப்ஸா  விட்ருக்கான்."

“அவர்  பொய்  சொன்னா  மாதிரி  தெரியல.  அம்மா சொன்னா  அவர்  கேக்க  மாட்டார்னா  சொல்றீங்க?” 

"அம்மான்னு  ஒருத்தி  இருந்தாத்தானே?"

ரம்யா  அதிர்ந்தாள். 

"அப்போ  நீங்க?"

நா  அவனோட  சின்னம்மா.  இதுக்கு  மேல  நீ எதுவும்  தெரிஞ்சுக்க  வேண்டாம். உன்  ஆசையெல்லாம்  கிள்ளிப்  போட்டுட்டு  கிளம்பு.  

சின்னம்மாவானா  என்ன?  அம்மாதானே   நீங்களும்.  நீங்க  சொன்னா  அவர்  கேக்க  மாட்டாரா  என்ன?

"மாட்டான்.  நீ  கிளம்பு"

ரம்யா  ஏமாற்றமும்  யோசனையுமாய்  கிளம்பினாள்

                           **************************

செல்போன்  இசைத்ததும்,  அஸ்வின்  அழைப்பது  யாரென்று   திரையைப்  பார்த்து  விட்டு  எடுத்து  பேசினான். 

"சொல்லுங்க  ரம்யா.  நா  என்ன  செய்யணும்?"

கார்த்தால  லைவா  போன  உங்க  இன்டர்வியூக்கு  நல்ல  ரெஸ்பான்ஸ் மிஸ்டர்  அஸ்வின்.  நிறைய  பாராட்டுக்கள்  வந்துக்கிட்டே  இருக்கு.  ஆனா  அதுல  ஒருத்தர்  சொன்ன  விஷயம்  வியப்பா  இருந்துது.  அதை  உறுதி  செய்துக்கத்தான்  கூப்ட்டேன்."

"என்ன  விஷயம்?"

"உங்கம்மா  உயிரோட   இல்லைன்னு சொன்னார். நிஜமா?  அப்பறம் ஏன்  அம்மா  சொல்லும் பெண்ணைக்  கட்டிப்பேன்னு சொன்னீங்க. எது  பொய்  எது  நிஜம்?

ஒரு  பேட்டில  சில  நேரம்  தர்ம  சங்கடமான  கேள்விகளை  எதிர்கொள்ள  நேரிடும்  போது  வேற  வழியில்லாம  ஒரு பதில்  சொல்ல  வேண்டியுள்ளது.  பெர்சனல்  கேள்விகளை  இனியாவது  உங்கள்  பேட்டிகளில்  தவிர்ப்பதே  நல்லது."  என்னைப்  பொறுத்த  வரை  நா  பொய்  சொல்லலைஆத்மாவுக்கு  அழிவேது?   என்  அம்மாவின்  ஆத்மா  எனக்கான  பெண்ணை  நிச்சயம்  அடையாளம்  காட்டும்னு  நா  நம்பறேன்."

"நானும்  நம்பறேன்  மிஸ்டர்  அஸ்வின்.   உங்கம்மா  இன்னிக்கு  ராத்திரிக்குள்ள  உங்க  வாழ்க்கைத்  துணை  யாருன்னு  உங்களுக்கு  நிச்சயம்  அடையாளம்  காட்டிடுவாங்க  பாருங்க."

அஸ்வின்  வியப்போடு  செல்போனை  பாக்கெட்டில்  வைத்தான்.  

அப்பாவின்   துரோகம்தான்  அம்மாவின்  உயிரை  எடுத்திருந்தது.  இன்னொரு  பெண்ணோடு  அவருக்குத்  தொடர்பிருப்பதை  பலவிதத்திலும்  அவர்  நியாயப்படுத்தியும்  கூட,  அம்மாவால்  அந்த  அதிர்ச்சியிலிருந்து  மீள  முடியவில்லை.  மனம்  நோயுற,  உடலும்  நோயுற்றது.  அவளை  கவனித்துக்  கொள்ள  சின்னம்மாவை  வீட்டுக்கே  அழைத்து  வந்தார்.  அவள்  நன்றாகத்தான்  அம்மாவை  கவனித்துக்  கொண்டாள்.  அம்மா  முகம்  திருப்பிக்  கொண்ட  போதும்  அவள்  முகம்  சுளிக்காது  அவளுக்கு  பெட்பேன்  வைத்து  எடுத்து  சுத்தம்  செய்யும்  பணியைக்  கூட  பொறுமையாக  செய்தாள். 

"சாரி  நா  உங்களுக்கு   பெரிய  துரோகம்  செய்து  விட்டேன்.  தப்புதான். எனக்கு  இங்கே  எந்த  உரிமையும்  வேண்டாம்.   உங்க  உடம்பு  குணமானதும்  நா  இங்கேர்ந்து போயிடறேன். என்னை  நம்புங்க.  நீங்க ஒத்துழைப்பு  கொடுத்தாத்தான் உங்க உடம்பு குணமாகும். வாழணும்னு  நினைங்க. வாழ்வோம்னு  நம்புங்க. சத்தியமா உங்க  நிம்மதிக்கு  நா இடைஞ்சலா  இருக்க  மாட்டேன்."

அவள்  தன்  அம்மாவிடம்  பேசியதை  ஒரு  முறை  அவன் கேட்க  நேரிட்டது.  அதன்  பிறகுதான்  அந்த  எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்ந்தது.  வியாபார  எதிரி  ஒருவன் அப்பாவை  ஆள்  வைத்துக்  கொன்றான்.  அந்த அதிர்ச்சியில் அம்மா  பிரமை  பிடித்தாற்போல் உத்திரத்தை  வெறித்தபடி நாலு  நாள்  கிடந்தாள். பத்து  வயது  அஸ்வினை  சின்னம்மா  ராதிகாவிடம்  ஒப்படைத்து  விட்டு  ஐந்தாம்  நாள்  உயிரை  விட்டாள்.  அன்றிலிருந்து  அவனை  வளர்த்தது  ராதிகாதான்.  என்னதான்  அவள்  அன்பைப்  பொழிந்தாலும்  அவனால்  அவளுடன்  இயல்பாக  இருக்க  முடியவில்லை.  ஒதுங்கியே  இருந்தான்.  அவனது  வளர்ச்சியில்  அவளது  பங்கு  அதிகம்தான்  என்றாலும்  அவன்  அவளிடம் அதிகம்  பேசுவதில்லை. அவசியம்  என்றால்  மட்டுமே  பேசுவான்.  அவனது  அந்த  விட்டேற்றியான  போக்கு  அவளை  வருத்தப்  படுத்துமோ  என்று  கூட  அவன்  யோசித்ததில்லை.  

அம்மாவின் நிலையும் அப்பாவின்  மரணமும்  கண்டபின்  அவனுக்கு திருமணம்  என்ற  விஷயத்தில்  பெரிதாக  ஈடுபாடு  ஏற்படவில்லை.  அது தேவை  என்ற  எண்ணமும்  எண்ணமும்  ஏற்பட்டதில்லை.  திடீரென  ரம்யா  காலையில்  அதுபற்றி  கேட்டதும்  ஒரு  வினாடி  அவன்  திகைத்துத்தான்   போனான்.   அம்மா  சொல்லும்  பெண்ணை  மணப்பேன்  என்று  சொன்னது  கூட  எவ்வித  திட்டமிடலும்  இல்லாது  அவன்  வாயிலிருந்து  வந்த  பதில்தான்.   ஆனால்  இன்று  இரவுக்குள்  உங்கள்  அம்மா  ஒரு  பெண்ணை  அடையாளம்  காட்டுவாள்  என்று ரம்யா  சொன்னதுதான்  மிகவும்  ஆச்சர்யமாக  இருந்தது.  அந்த  ஆச்சர்யம் மாறாமலே  அவன்  வீட்டுக்கு  வந்தான். 

களைப்பு  தீரக்  குளித்து  உடை  மாற்றி  வரும்  போது  டைனிங்  டேபிளில்  இரவு  உணவு  தயாராக  இருந்தது. 

"பேட்டி  நல்லார்ந்துது"  சப்பாத்தியை  வைத்தபடி  சொன்னாள்  சின்னம்மா. 

"தேங்க்ஸ்"  தலைகுனிந்தபடி  சாப்பிட்டான்.  

"தேங்க்ஸ் நான்தான்  சொல்லணும்"    அவள்  சொல்ல,  புரியவில்லையே  என்பது  போல்  நிமிர்ந்து  பார்த்தான்.  

"உன்  கல்யாணம்  பற்றி  நீ  சொன்ன  பதில்தான்.  நீ  என்னை  அம்மாவா  நினைக்கறயான்னு  தெரியாது. ஆனா  நா  உன்னை என்  பிள்ளையாத்தான் நினைக்கறேன்.  தப்போ  சரியோ உங்கப்பா  மேல எனக்கிருக்கும்  காதல்  நிஜம். அது  காமத்தை  உள்ளடக்கியதல்ல.  இந்த  அசம்பாவிதம்  எல்லாம்   நடக்காதிருந்தால நா  உங்க  குடும்பத்தை  விட்டு  விலகி  ஏதோ  ஒரு  மூலையில்  உங்க  எல்லாரோட நன்மைக்கும்  பிரார்த்தித்துக்  கொண்டு,  உங்கப்பாவை  காதலித்தபடி வாழ்ந்திருப்பேன். ஆனா  நாமே  நினைக்காத  சில திருப்பங்கள்  ஏற்பட்டு  விட்டது. உங்கப்பாகிட்ட நா கொண்ட காதல்  அணுவளவு  கூட  இன்னும்  மாறலை.  நீ அவரோட  பிள்ளை  மட்டுமல்ல.  என்  மனதார  நா  ஏற்றுக்  கொண்ட  என்  பிள்ளையும்  கூட.  உனக்கான  அன்பு  என்  மனசு  முழுக்க  நிறைஞ்சிருக்கு.    நீ  சரின்னு  சொன்னா  உனக்கான  பெண்ணை  நா  அடையாளம்  காட்டத்  தயாரா  இருக்கேன். 

அஸ்வின்  திகைப்போடு  அவளைப்  பார்த்தான்.  

"இது  எனக்கொரு  சந்தர்ப்பம்  அஸ்வின்.  நீ  என்னை  அம்மாவா  நினைக்கறயா  இல்லையான்னு  தெரிஞ்சுக்க  எனக்கும்  ஆசையா  இருக்கு.  உன்  முடிவு  எதுவா  இருந்தாலும்  ஏத்துக்கற  மனப்பக்குவமும்  எனக்கிருக்கு.  உன்னால  என்னை  அம்மாவா  ஏத்துக்க  முடியலைன்னா  இங்கேர்ந்து  போய்டவும்  நா  ரெடியார்க்கேன். ஏன்னா  இப்போ  நீ  குழந்தை  இல்ல.  என்  உதவியும்  துணையும்  உனக்கு இனி  தேவையும் படாது.  எதுவா இருந்தாலும்  உன்கிட்டேர்ந்து  ஒரு உண்மையான  பதிலைதான்  நா  எதிர்பார்க்கிறேன்."  

அவன்  தன்  அறைக்கு  வந்தான்.  தூக்கம்  வரவில்லை.  நள்ளிரவில் வெளியில்  வந்தான்.  சின்னம்மா  தூங்காமல்  புத்தகம்  படித்துக் கொண்டிருந்தது  ஆச்சர்யமாக  இருந்தது.  அவள்  எதிரில்  வந்து  அமர்ந்தான்.  

"யாரந்த  பொண்ணு?"

"ராதிகாவின்  முகம்  மலர்ச்சியில்  அவளது  மொத்த  தாயன்பும்  வெளிப்பட்டது.  அவளது  விழிகளில்  படர்ந்த  நீரில்  ஆயிரம்  உணர்ச்சிகள். 

"நாளைக்கு  சாயந்திரம்  காட்டறேன்"  சந்தோஷமாகச்  சொன்னாள்.

மறுநாள்  அவன்  அலுவலக  வேளையில்  மூழ்கியிருந்த  போது  கதவு தட்டி  அனுமதி  பெற்று  உள்ளே  வந்தாள்  ரம்யா.  

"என்ன  திடீர்னு  இங்க?"

உங்க  பேட்டியோட  டிவிடி  காப்பி  கொடுக்கலாம்னு  வந்தேன்.  அப்டியே  உங்ககிட்ட இன்னொரு  முக்கியமான  விஷயமும்  சொல்லிட்டுப்  போகலாம்னு....."

"என்ன  விஷயம்?"

கல்யாண  விஷயம்தான்.  என்  கல்யாண  விஷயமா  நா  யாரோட  அனுமதியையும்  கேட்க வேண்டிய  அவசியமில்லை.  நா  முடிவு  செய்தால்  போதும்.'

"சரி  இதை  எதுக்கு  என்கிட்டே  சொல்றீங்க?"

"எனக்கு  உங்களைப்  பிடிச்சிருக்கு.  கொஞ்ச  நாள்  காதலிச்சுட்டு  நாம  கல்யாணம்  செய்துப்போமா?"

அவன்  திகைத்தான்.  நான்தான்  சொன்னேனே.  என்னோட  அம்மா  காட்டற ..."  அவன் முடிப்பதற்குள்  தொலைபேசி  அடித்தது.  

அஸ்வின்  நான்தான்  அம்மா  பேசறேன்.  நா  சொல்லல  உனக்குப்  பொருத்தமான  ஒரு  பெண்ணைப  பார்த்திருக்கேன்னு?.  அவ  இப்போ  உன்  எதிரில்தான்  உட்கார்ந்திருக்கா.  அவ  காதலை  சந்தோஷமா  ஏத்துக்கோ.  நான்தான்  அவளை அங்கே  அனுப்பி  வெச்சேன்."

அஸ்வின்  போனை  வைத்து  விட்டு  அவளைப்  பார்த்தான்.  

"போலாமா?"

"எங்கே?"

காதலிக்கத்தான்.  

"ஆச்சர்யமா  இருக்கு  உங்க  அம்மாவா  போன்  பண்ணி   காதலிக்கச் சொன்னாங்க?"

"ஆமா"

"அவங்க  இறந்துட்டாங்கன்னு.....!"

"உயிரோடதான்  இருக்காங்க.  வேற  ரூபத்துல" 

"ம்ஹும்?"

"ஆமா ஒரே  நேரத்துல  தாயும்,   காதலியும்  கிடைக்கப் பெற்றவன்  நான்"


                                                 *********   End    ********

Friday, January 29, 2016

அஹோபிலம் - 2

அஹோபிலம் - 2

கிழக்குத்  தொடர்ச்சி  மலையை  ஆதிசேஷனாக  கொண்டால், அதன்  தலைப்பகுதியில்,  திருப்பதியும்,  நடுப்பகுதியில், நல்லமல்லா  மலைத்தொடரில்  அஹோபிலமும்,  வால்பகுதியில்  ஸ்ரீ சைலமும்  இருக்கிறது. ஜ்வாலா நரசிம்மர்  இருப்பது   2800  அடி  உயரத்தில்.

மறுநாள்  காலை ஆறுமணிக்கு  காப்பி  மட்டும்  குடித்து  விட்டு   மலையேற்றத்திற்குத்  தயாராகக்  கிளம்பினோம்.  கீழ்  அஹோபிலத்தில்  எங்களை  இறக்கி  விட்டது  எங்கள்  பேருந்து.   இயற்கையான  ஒரு  குகையில்தான்  இங்கே  சுயம்புவான அஹோபில நரசிம்மர்  இருக்கிறார்.  ஹிரண்யனை  வதம்  செய்யும்  கோலத்தில்  உக்கிரமூர்த்தியாய்.  கீழே  பிரஹலாதனும் உள்ளான்.   நரசிம்மரை  தரிசிப்பதற்கு  முன்  ஆதிசங்கரர்  பிரதிஷ்டை  செய்த  சிவலிங்கமும்,  சுதர்சன,  ஸ்ரீ  சக்ரங்களும்   இருக்கிறது.   இஸ்லாமிய  படையெடுப்பின் போது  இங்குள்ள  குகை  ஒன்றில்  உள்ளே  நுழைந்த  ஜீயர்  ஒருவர்  பின்னர்  வெளியில்  வரவில்லை  என்றார்  வழிகாட்டி.  அந்த  குகை  இப்போது  மூடப்பட்டுள்ளது.  கருடனும்,  ராமரும்  வழிபட்ட  மூர்த்தி  இவர். தாயார்  சந்நிதி   தனியே  உள்ளது.





இந்தக்  கோயிலின்  வாசலில்  மலையேறுவதற்கு  உதவியாக  மூங்கில்  கழி  கிடைக்கும்.   இங்கிருந்து  ஒளவையார்  கோலம்தான்.   நெல்லிக்கனியும்  விற்கிறார்கள்.  கொஞ்சம் வாங்கிக்  கொண்டால்  நல்லது.  வாயில்  அடக்கிக்  கொண்டால்  அதிக  தாகம்  எடுக்காது.  சிறிய  தண்ணீர்  பாட்டிலும்,  கொஞ்சம்  சாக்லேட்களும்  வைத்திருக்கலாம்.  பையில்  அதிக  சுமை  வைத்திருக்க  வேண்டாம்.

அடுத்து  நாங்கள்  சென்றது  ஜ்வாலா  நரசிம்மரை  நோக்கி.   பாதை  எல்லாம்  கிடையாது.  பவநாசினி  நதியை ஒட்டி,  குட்டியானை  சைஸிலிருந்து,  குட்டிக்  குரங்கு  சைஸ்  வரை  பாறைக்  கற்கள்  கொட்டிக்  கிடக்கிறது.  இதில்  ஏறியும்,  புகுந்தும்,  புறப்பட்டு  செல்ல  வேண்டியதுதான்.  புகைப்படங்களைப்  பார்த்தால்  உங்களுக்கே  புரியும்.  ஜெய்  நரசிம்மா  என்று  கூறியபடி  முதலடியை  வைத்தோம்.  எனக்கு  இது  மாதிரி  டிரெக்கிங்  என்றால்  அல்வாதான்.  செம  குஷியாகி  விடுவேன்.   நடு  நடுவே  மரப்பலகைகள்    அடிக்கப்பட்ட  பாலங்களும்  இருக்கிறது.  பலகைகளில்  நிறைய  பிளவுகளும்  உடைந்து  போய் ஓட்டைகளும்  இருக்கிறது.  ஜாக்கிரதையாக  நடக்க  வேண்டும்.





ஜ்வாலா  போகும்  வழியிலேயே  குரோட  (வராஹ)  நரசிம்மர்  இருக்கிறார்.  ஒரு  காலத்தில் குகைக்குள்   தவழ்ந்து  சென்று  போய்த்தான்  இவரைப்  பார்க்க  முடியுமாம்.  இப்போது  குகையை  செதுக்கி  முன்  மண்டபம்  எழுப்பி  வசதி  செய்திருக்கிறார்கள்.  இவரை  வராஹ  மூர்த்தியாய்  மூக்கின்  மீது  பூதேவியை  சுமந்த  சுயம்பு வடிவம்.   ஒவ்வொரு  நரசிம்மர்  கோயிலிலுமே  சுயம்பு  வடிவத்தோடு  அதே  போன்ற  பிரதிஷ்டா  வடிவமும்  இருக்கிறது.  எங்கள்  யாத்திரை  மலை மேல் நோக்கி  தொடர்ந்தது.

கடுமையான  காட்டு  வழி  என்பதால்  தனியே  செல்வதைத்  தவிர்க்கலாம்.  ஆனாலும்  நான்  மொபைலில்  நின்று  நிதானமாக  படம்  எடுத்துக்  கொண்டுதான்  நடந்தேன்.   இருந்தாலும்  வேகத்தைக்  கூட்டி  என்னோடு  வந்தவர்களுடன்  இணைந்து  விடுவேன். நம்மைக்  கடந்து  டோலிகளில்  செல்பவர்களையும்  காணலாம். வழியில்  ஓரிடத்தில்  வழிகாட்டி  இங்கே  வந்து  பாருங்க  என்று  எதையோ  காட்டினார்.  அவர்  காட்டிய  இடத்தில்  தெரிந்தது  உக்கிரஸ்தம்பம்.     நரசிம்ம்மர்  வெளிப்பட்ட  தூண்.  அதன்  உச்சியில்  செந்நிறக்  கொடிகள்.

ஏறமுடியுமா?  நான்  கேட்டேன்.  கொஞ்சம்  கஷ்டம்மா. என்றார்

எவ்ளோ  நேரமாகும்?

ரெண்டு  மணி  நேரமாவது  ஆகும்.

கவிதாவின்  மைத்துனன்  மிதுன்  நா  போயிட்டு  வரட்டுமா  என்றான்  தன்   தாயிடம்.  எனக்கும்  போக வேண்டும்  என்ற  ஆசை.   ஆனால்  சம்மந்தியிடமிருந்து  அனுமதி  கிடைக்கவில்லை.  மற்ற  நரசிம்மரை  எல்லாம்  பார்த்துட்டு  நாலு  மணிக்கானம்  புறப்பட்டாதான்  ஊர்  போய்ச்  சேர  முடியும்  என்று  மறுத்து  விட்டார்.  தவிர  நாங்கள்  ரிஸ்க்  எடுத்து  அந்தக்  குறுகிய  செங்குத்தான  ஸ்தம்பத்தில்  ஏறுவதையும்  அவர்  விரும்பவில்லை. மிதுனிற்கு  இதில்  நிறைய  வருத்தம்.  பாவம்  சின்ன  பையன்.  சுலபமாக  ஏறி   விடக்  கூடியவன்தான்.  என்ன  செய்ய?

ஸ்தம்பத்தை  ஏக்கத்தோடு  பார்த்தபடி  தொடர்ந்து  நடந்தேன்.   பாறைக்  கற்களைக்  கடந்து  நடந்த  பிறகு  படிகள்  மூலம்தான்  ஏற  வேண்டும்.  உண்மையில்  படிகளில்  ஏறிச் செல்வதுதான்  கடினம்.  கிட்டத்தட்ட  எழுநூறு  எண்ணூறு  படிகள்  இருக்கும்.  ஆனால்  நம்புங்கள்.  நெல்லிக்கனி  உபயத்தில்  நான்  அதிகம்  நீர்  அருந்தவில்லை.  உடனடி  சக்திக்கு  சாக்லெட்டும் .   தேவைப்படவில்லை.  சர்க்கரை அளவு   குறைந்து  விடக்  கூடாதே  என்பதற்காக  நானாக  நடுவில்  ஒரே  ஒரு  சாக்லேட்  எடுத்து  சாப்பிட்டேன்.  ஒரு  வழியாக  படிகள்  முடிந்து  சற்று  தூரத்தில்  நமக்கு  இடப்புறம்  கோயில்  தெரிந்தது.  ஒற்றையடிப்பாதை.  வேதாத்திரி  மலைக்கும்,  கருடாத்ரி  மலைக்கும்  இடையே  ஒரு  சிறிய  குகைக்  கோயில்.  குகைக்கு  வெளியே  கம்பிக் கதவு.





அந்த  ஒற்றையடிப்  பாதையில்  வேதாத்திரி  மலையைத்  தொட்டபடி  நடக்கையில்  மலையிலிருந்து  நம் மீது  நீர்  சொறிகிறது.  மழையற்ற  போதே  நீர்  சொரிகிறது  என்றால்  மழையின்  போது?     குற்றாலம்  மாதிரி  கொட்டுமாம்.  இணையத்தில்  அருவி  கொட்டும்  ஒரு  புகைப்படமும்  கிடைத்தது.  ஜ்வாலாவுக்கு  செல்லும்  வழியிலேயே  வலப்புறமாய்  உக்கிரஸ்தம்பத்திற்கு  ஏறும்  வழி  உள்ளது.  வழியா?  வானரம்  போல்  ஏற  முடிந்தால்  அதுதான்  வழி.  உடலால்  செல்ல வாய்ப்பு  கிடைக்கா விட்டால்  என்ன?.  நமக்குதான்  மானசீகமாகவும்  செல்ல  முடியுமே.  கிடு கிடுவென்று  மனசால்  ஏறிசென்று, அங்கு  வீசும்  பேய்க் காற்றை  அனுபவித்து  விட்டு,  நரசிம்ம  பாதங்களை,  கொடியையும்  பார்த்தாயிற்று, முழுவதும்  ஏறா  விட்டாலும்  மிதுன்  ஆசைக்கு  கொஞ்ச  தூரம்  ஏறி  விட்டுத்  திரும்பினான்.  இருவரும்  அந்த  வழியில்  நின்று  புகைப்படம்  மட்டும்  எடுத்துக்  கொண்டோம்.



வேதாத்திரி  மலையை  ஒட்டி இன்னும்  இரண்டடி  நடந்தால்  மலையை  ஒட்டி  கீழே  ஒரு  குண்டம்.  அதற்கு  மலையே  குடை  பிடித்தாற்போல்  இருக்கிறது. மூங்கில்  கழிகளால்  தடுப்பு  கட்டியிருக்கிறார்கள்.   உள்ளே  இளம்  சிவப்பு  நிறத்தில்  நீர்.  அதுதான்  ரக்த  குண்டமாம்.  ஹிரண்ய  வதம்  முடிந்த  பின்  நரசிம்மர்    இரத்தம்  படிந்த  தன  கரங்களைக்  கழுவிய  இடம்.    தண்ணீர்  கல்கண்டு  போல்  இனித்தது.  என்  தண்ணீர்  பாட்டிலை  காலி  செய்து  விட்டு  தடுப்புக்கு  உள்ளே  சென்று  நீர்  எடுத்துக்  கொண்டிருந்த  ஒரு  மனிதரிடம்  கேட்டு  பாட்டிலில்  நீர்  சேகரித்துக்  கொண்டேன்.

ரக்த  குண்டத்தை  ஒட்டி  ஜ்வாலா  நரசிம்மர்.  மிஞ்சிப்போனால் உள்ளே  பத்து  பேர்  நிற்கலாம்.  அவ்வளவுதான்  இடம்.  சுயம்பு  நரசிம்ம  மூர்த்தியைப்  பார்த்து  பக்தியோடு  ஆச்சரியமும்  ஏற்பட்டது.  மடியில்  ஹிரண்யன்,  இரு கைகள்  அவன்  தலையையும்,  தொடையையும்  அழுத்திப்  பிடிக்க,  இரு  கைகள்  வயிற்றைக்  கிழிக்க,  இரு  கைகள்  குடலை  உருவி,  மாலையாக  அணிய, உக்கிரமூர்த்தியாக  சிலையாக  வடிக்கப்  பட்டாற்போல்  ஒரு  சுயம்பு மூர்த்தியா  என்று  வியக்காமல்  இருக்க  முடியவில்லை.  அவ்வளவு  துல்லியம்.

ரக்த  குண்டத்திலிருந்து  காணும்  போது  எதிர்புறம்  தெரிந்த   கருடாத்ரி  மலை  சிறகு  விரித்த  கருடன்  போலவே  தெரிகிறது.  உற்று  கவனித்தால்  மூக்கு  கூடத்  தெரியும்.  நரசிம்ம  அவதாரத்தை  காண  விரும்பிய  கருடனை  மகா  விஷ்ணு  இம்மலைக்குச்  சென்று  தவம்  செய்யுமாறு  கூறியனுப்ப,   அவரும்  இங்கே  வந்து  தவக்கோலத்தில்  இருந்திருக்கிறார்.  கிருத  யுகத்தில்  இம்மலை  ஹிரண்யனின்  அரண்மனையாக  இருந்திருக்கிறது.  ஹிரண்ய  வதத்திற்காக   தூண்  பிளந்து  வந்த  நரசிம்மமூர்த்தியை  கருடனும், பிரஹலாதனும்   சேவித்திருக்கிறார்கள்.

(காத்திருங்கள்  தொடர்ந்து  தரிசிப்போம்)