
பாதை என்று எதுவும் கிடையாது. எத்தனை மலைகள் ஏறி இறங்கினோம் என்று தெரியாது. கிட்டத்தட்ட பத்தொன்பதாயிரம் அடி உயரத்திலிருந்தோம் . நந்திமலையின் பக்கவாட்டுத் தோற்றம் திகைக்க வைத்தது. அதன் நீளம் ஐந்து கிலோமீட்டர். கயிலையின் விஸ்வரூபத்திற்கு ஈடாக நந்தியும் விஸ்வரூபமெடுத்து அதற்கு முன் அமர்ந்திருப்பது போல் தோன்றியது. ஆத்மலிங்கத்தின் முதல் தரிசனம் அழவைத்து விட்டது. இதற்குத்தானே இத்தனை சரீர கஷ்டமும் தாங்கி வந்திருக்கிறோம். நன்றி பகவானே நன்றி.
கண் கலங்க மேலும் நடந்தோம். ஆக்சிஜன் குறைவை நன்கு உணர முடிந்தது. ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சை இழுத்து விட வேண்டி இருந்தது. கயிலையிலிருந்து சிவனின் முகம் எங்களை தீர்க்கமாகபார்ப்பதைக் கண்டதும் உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு. வாருங்கள் குழந்தைகளே வாருங்கள் என்று சிவசக்தி சொரூபம் எங்களை அழைப்பதைப் போல் தோன்ற, உடம்பு மெல்ல ஆடியது கடவுளின் அருகாமையைத் தாங்க முடியாமல்.
பல மணி நேர மலையேற்றத்திற்கு பின் ஆத்மலிங்கத்தை நெருங்கினோம். கயிலையின் உச்சியிலிருந்து புகை மாதிரி பனித்துகள்கள் கீழே விழுந்து விழுந்து குவிந்து கொண்டிருந்தது. இதுவே ஆத்ம லிங்கமாக பூஜிக்கப் படுகிறது. கயிலையின் உச்சி கண்ணுக்கு மறைந்திருந்தது. அதற்கு நேராக நின்று கிழக்கு பக்கமாய் திரும்பினால் கயிலையும் நந்தி மலையும் இணையும் அற்புத காட்சி.
கயிலை மலைக்கு வெகு அருகாமையில் சென்றால் மட்டுமே இந்த அற்புதக் காட்சியைக் காண முடியும். முன்னால் கயிலாயத்துடன் ஓட்டி சரிந்து கிடக்கும் வெண்ணிற ஆத்ம லிங்கம். வலப்புறம் நந்தியும் கைலாஷும் ஒன்றோடொன்று இணையும் காட்சி. நாயினும் கடையேன் நான். சுந்தரரும் சேரமானும் அவ்வையும் கண்ட காட்சி எனக்கும் அளித்தாயே.
நான் சரிந்து அமர்ந்தேன். மனசு நிர்மலமாயிருந்து பிறந்த குழந்தை மாதிரி. மலங்க மலங்க பார்த்தபடி சற்று நேரம் அமர்ந்திருக்க எண்ணங்கள் ஏதுமில்லை. உறக்கம் கண்களை சொருகியது. இதுவே போதும் என்று தோன்றி விட்டது. உதவியாளர் தன் மேல் கோட்டைக் கழற்றி கீழே விரித்துக் கொடுக்க அந்த உயரத்தில் அப்படி ஒரு அமைதியான தூக்கம். எவ்வளவு நேரம் தூங்கினேனோ தூரத்தில் டப்புடப்பென எதோ வெடிப்பது போல் சப்தம்.
நந்தி மலையிலிருந்தும் கயிலாயத்தின் மீதிருந்தும் கற்கள் வெடித்துச் சிதறும் என்று முன்பே நான் படித்திருக்கிறேன். அந்த சப்தத்தையும் கேட்டாயிற்று. வேறென்ன வேண்டும். ஆத்ம லிங்கத்திற்க்கருகில் எனக்கு இரண்டு மூர்த்தங்கள் கிடைத்தன. ஒன்று சுயம்பு விநாயகர். மற்றது ஒரு வேலின் வடிவம்.
மீண்டும் வந்த வழியே நடக்க ஆரம்பித்தோம். கயிலாயத்திலிருந்து உருகி வழியும் நீரால் நிறைய நீரோடைகள். அதில் ஒன்றைக் கடக்கும் போது சட்டென நீரிலேயே இறங்கி விட என் இரண்டு கால் ஷூவிலும் ஐஸ் தண்ணீர் நிரம்பியது. புனித நீர் எனக்கு சக்தியைத்தருவது போல் உணர்ந்தேன். காலை மூன்று மணிக்கு கிளம்பிய நாங்கள் மீண்டும் எங்கள் ஜீப்பை அடையும் போது இரவு ஒன்பது மணி.
அடித்து போட்டாற்போல் தூங்கிப் போனோம். மறுநாள் கயிலை மலையை பார்த்த போது அது போதுமா என்று கேட்டது. எப்படி போதும்? மீண்டும் எப்போது? இந்த ஏக்கத்தோடு அனைவரும் திரும்பி வருவதுதான் கயிலாய யாத்திரை. இதுவரை ஆர்வமாய் உடன் வந்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் வருவேன் ஆதி கயிலாயம் அழைத்துச் செல்ல. காத்திருங்கள்.