Friday, December 26, 2014

சதயம் - திரைப்படம்

ரொம்ப நாள் கழித்து கிரண் டிவியில் "சதயம்"  பார்த்தேன்.  முதல் முதலில் இந்தப் படத்தை வித்யாவும், நானும் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பட,ம் முடிந்த கொஞ்ச நேரம் வீடு அமைதியாயிருந்தது.  இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. எதுவும் பேசிக் கொள்ளக் கூட தோன்றவில்லை.  கடைசி காட்சியில் ஒரு சொட்டு கண்ணீர் வெளிப்பட்டதே தவிர பிழியப் பிழிய அழவில்லை.  அப்படி ஒரு இறுக்கம் படம் முழுவதும்.

 மணற்  சிற்பம்  கலைக்கப் படும் போதே மனசுக்குள் அது எதற்கான ஆரம்பம் என்று ஒரு துணுக்குறல் ஏற்படும். மணற்  சிற்பம்தான் என்றாலும்,  அது கலையும்  போது நமக்கும் வலிக்கும்,

தூக்கு தண்டனை கைதி மோகன்லால். கருணை மனு அனுப்பி விட்டு வாழ்வா சாவா என்று காத்திருக்கிறார்.  இதனிடையே கதை நகரும்.  அவருக்குள்  ஒரு மாற்றம் நிகழும்.  தான் செய்தது சரியா என்ற உணர்வு ஏற்படும்? மிக நுட்பமான நடிப்பு அவருடையது.   அந்த முகத்தில் பரவும் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு.
இவரைத் தவிர வேறு யாராயிருந்தாலும் இப்படி ஒரு நடிப்பைத் தந்திருக்க முடியாது.

இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரைக் கொல்கிறான் சத்யன் (மோகன்லால்)  எதற்கு என அலசுவதுதான் சதயம்.  பொதுவாக ஒவ்வொரு கொலைக்கும் ஏதோ ஒரு மோட்டிவேஷன் இருக்கும். இதில் அந்த மோட்டிவேஷன என்னும் புதிர் மெல்ல மெல்ல அவிழும் போது  நமக்கு மனசு கனத்துப் போகும்.  இப்படி மனம் கனத்து போவதால்தான் சிறையில் அத்தனை பேரும் அவனிடம் கருணை காட்டுகிறார்கள். அவனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

சமூகத்தை தண்டிக்க முடியாத ஒரு சாதாரணன் எடுக்கும் முடிவுதான் கொலை. பயமுறுத்தும் இந்த உலகிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றி  இருக்கிறேன் நீங்கள் எந்த பயமுமின்றி  நிம்மதியாக இனி தூங்குங்கள் என்று கொன்று படுக்க வைத்திருக்கும் குழந்தைகளிடம் பேசும்  போது வெளிப்படும் மனப்பிறழ்ச்சி..... அற்புத நடிப்பு  அது ! .  ஆயிரம் ஆஸ்கார் அளிக்கலாம்.

எத்தனை நியாயம் சொல்லிக் கொண்டாலும் அடுத்தவர் வாழ்வையோ, மரணத்தையோ தீர்மானிக்க நாம் யார்  என்ற கேள்வி எழும்.  செய்த தவறுக்காக வருந்த வைக்கும்.  விபச்சாரியாய்  வாழ்ந்த தன் அம்மாவின் வாழ்வை  இறந்த காலத்திற்கு சென்று அழித்து மீண்டும் மாற்றி வடிவமைக்கும் சக்தி அவனுக்கில்லை.  ஆனால் கண்ணெதிரே சமூகம் சிதைக்கப் பார்த்த இவர்களது வாழ்வின் அவலத்தையாவது மாற்றி எழுத நினைத்தால்.அதிலும் தோல்விதான்.

பயமுறுத்துகிறவர்களைக் கொல்ல முடியாது. அது வெட்ட வெட்ட துளிர்க்கும் தலைகளைக் கொண்ட ராட்சஸனைப் போன்றது. வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். அதனால் நான்,  பயப்படும் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்வான் குழந்தைகளிடம்.  காப்பாற்றுதல் என்பது இங்கே கொல்லுதல். தான் செய்தது தன்  வரையில் நியாயம் என்ற உணர்வோடுதான் அவன் எவ்வித குற்ற உணர்வுமின்றி அமைதியாய் இருக்கிறான்.  

என் மகனை நீ கொன்று விட்டாய். உன்னைத்  தூக்கில் போட்ட பிறகு உன் மரணத்தை நான்தான் உறுதி செய்வேன் என்னும் திலகன் கூட பின்னர் மனம் மாறி அவன் மீது கருணை பொழிய,  சத்யன்  அத்தனை பேரும்  தன்னிடம் காட்டும் கருணையில் மீண்டும் வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் எங்கிருந்து கருணை கிடைக்க வேண்டுமோ அங்கே அது மறுக்கப் படுகிறது,   அவனது மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது.   அதற்குப் பிறகான காட்சிகள்  அந்த காட்சிகளின் ஒளி, ஒலியமைப்பு  .... அத்தனை நுணுக்கமான இயக்கம்.  Hats off to  Sibimalayil.. எம்.டி.வாசுதேவன் நாயரின் ஸ்கிரிப்ட் வேறு.  சொல்ல வேண்டுமா?

நள்ளிரவில் குளியல்,  விவரங்கள் சரிபார்த்தல்,  கைகளைப் பின்னால் கட்டி விலங்கிடல். தலையில் கருப்பு உறை  அணிவித்தல், தூக்கு மேடைக்கு அழைத்து வருதல்.....

எல்லோர் முகமும் இறுகிக் கிடக்கும்.   அவனோடு அத்தனை நாட்கள் பழகிய சிறை நண்பர்கள் மெல்லிய இருட்டில் மௌனமாய் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.   போலீஸ் அதிகாரி முரளியும், மருத்துவர் திலகனும், துக்கத்தை விழுங்கிக் கொண்டு கடமையைச்செய்ய  கடிகாரத்தைப் பார்த்தபடி காத்திருப்பார்கள்.

நம் மனம் பதை பதைக்கும். கடவுளே ஏதாவது அதிசயம் நடந்து இது நின்று விடாதா  நம் தமிழ்ப்படங்களைப் போல ?  என்று தவிக்கும்.

"ரெடி சத்யா?" முரளி குரல் உடைய  கேட்பார்.

"ரெடி சார்"  கறுப்புத்துணி மூடிய முகத்தின் உள்ளிருந்து பதில் வரும்.

அடுத்த வினாடி அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு  லீவர் இழுக்கப்படும் ஓசை கர்ண கொடூரமாக கேட்கும்.

பிறகு முழு திரையிலும் அந்த கயிறு மட்டுமே சில நொடிகள்!
 

இந்தப் படம் சொல்லும் விஷயம்தான் என்ன?  மனச் சிக்கல்தான்.  வாழ்வில் தோற்றுக் கொண்டே , அவமானப் பட்டுக்கொண்டே  இருக்கும் ஒரு சாதாரணன்,   சமூகத்தின் அவலங்களை முறியடிக்க முடியாத நிலையில்,  வல்லூறுகளிடமிருந்து இரண்டு கோழிக்குஞ்சுகளையாவது காப்போம்  என்று மனம் பிறழி முடிவெடுப்பது.   வெட்ட வெட்ட துளிர்ப்பது பயமுறுத்தும் ராட்சஸன் மட்டும் இல்லை.  பயப்படுகிறவர்களும் துளிர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.  எத்தனை பேரைக்  குத்திக் காப்பாற்ற முடியும்?. இதை யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.  தற்கொலை என்பதும், கொலை என்பதும் சில வினாடி உணர்ச்சிவசப்படலில் நிகழ்வதுதான்.

எத்தனை நியாயம் சொன்னாலும்  தவறு தவறுதான் என்று சட்டம் தண்டிக்கிறது. தூக்கு தண்டனை சரியா தவறா என்று வாதிடுவது இந்த படத்தின் நோக்கமல்ல.  ஆனால் அந்த பதை பதைப்பை நமக்கு ஏற்படுத்துகிறது.  இதைப் பார்த்தால் ஒரு வேளை  அடுத்தவர் வாழ்வை தீர்மானிக்கும் வேலையை இனி யாரும் கையில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள், குற்றங்கள் குறைந்து விடும்  என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம்.

இந்தப்படம் இப்படி என்றால் இதே மாதிரி ஒரு சாயலுள்ள படம்தான்  "கதாவிசேஷம்."  திலீப் நடித்தது.  இங்கே கொலை. அங்கே தற்கொலை.  இங்கே கொலைக்கான காரணம் தேடி கதை நகரும். அங்கே தற்கொலைக்கான காரணம்  தேடி பின்னோக்கி நகரும் காட்சிகள். அங்கேயும் சமூக அவலங்கள்தான் வில்லன்.   இறுதியில், அவன் மரணத்திற்கான காரணத்தை  அறியும் போது நம் மனசு அதிரும்.

"வாழ்வதை அவமானமாக நினைக்கிறேன்   ( for the shame of being alive)

ஆக சமூக அவலங்கள் எதையும் தடுத்து நிறுத்த இயலாத சாதாரண மனிதர்களின் கதைதான் இந்த இரண்டு படங்களும்.  ஒன்று  கொலை, மற்றது தற்கொலை. நாம் எல்லோரும் அந்நியன்கள்  அல்லவே.  சமூகம் என்பது எது?.  மனிதர்களைக் கொண்டதுதானே?  சமூகம் எதற்கும் வெட்கப்படாதா?

இன்று மீண்டும் என்னை ஒரு நீண்ட அமைதியில் தள்ளி விட்டது சதயம்.