Sunday, June 19, 2011

முன்னுரை, முகவுரை

எந்த ஒரு புத்தகம் வாங்கினாலும் நான் முதலில் வாசிப்பது அந்த புத்தகத்தின் ஆசிரியர் எழுதிய முன்னுரை, மற்றொரு இலக்கியவாதி அதற்கு எழுதியிருக்கும் முகவுரை இவைகளைத்தான். எந்த ஒரு முன்னுரையோ முகவுரையோ அழுத்தமாக எழுதப் பட்டிருக்கிறதோ, வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ, அதுவே அந்த புத்தகத்திற்கு பெருமை சேர்த்து விடும்.

முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்பேன். , தெளிவு, தீர்க்கம், சுவாரசியம், இவற்றோடு சற்றே நகைச்சுவையும் சேர்ந்து விட்டால் முன்னுரையையே பலமுறை படிக்கலாம்.

லா.ச..ரா. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றிற்காக (அலைகள் ஓய்வதில்லை) இப்படி எழுதியிருப்பார்.

“எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப் பாவனையில் உரையாட முடியும்? எழுத்தின் வீச்சுக்கு காலவரையில்லை என்று தெரிகிறது. “ராசாத்தி கிணறு கரு நாற்பது வருடங்களுக்கு முன் தோன்றி விட்டது. ஆனால் இப்போதுதான் திடீரென பற்றிக்கொண்டு எழுதி முடித்தேன். ஒரு வித்து உள்ளே விழுந்து விட்டால் தேள் கொட்டிக் கொண்டேயிருக்கும், ஒரு எழுத்தின் விதைக்கும், அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை. எழுத்து இரக்கமற்ற எசமானி.

நல்ல புத்தகங்கள் என்பது சும்மா செல்லும் பொழுதுகளைக் கூட பயனுரச் செய்து விடும். எனலாம். இந்தப் பதிவில் என்னைக் கவர்ந்த முன்னுரைகள், முகவுரைகள், பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தனது “கிருஷ்ணன் வைத்த வீடு தொகுப்பிற்காக வண்ண தாசன் எழுதிய முன்னுரை என்னை நிறைய யோசிக்க வைத்தது.

“இந்த பலூன் விற்கிற முருகேசனை விட நான் என்ன வாழ்ந்து விட்டேன்? முருகேசனுக்கு தான் பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார் வேலையை விட்டு விட்டு பலூன் விற்க முடிகிறது. மயிலாப்பூர், பெசன்ட் நகர கோவில் திருவிழாக்களில் ராப்பூரா கண் விழிக்க முடிகிறது. தம்பிக்கு முதலில் கல்யாணம் நடக்க அனுமதிக்க முடிகிறது, மும்பையில் விற்கப்பட இருந்த அச்மாபீயை சரோஜா எனப் பெயரிட்டு திருமணம் செய்து கொண்டு வாழ முடிகிறது. குழந்தை பிறந்ததும் அவள் காணாமல் போய் எட்டு மாதம் கழித்து அது இறந்தபிறகு வரும்போது ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவள் மறுபடியும் காணாமல் போய் திரும்பி வந்தால் கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. பழைய சம்பவங்களை அடியோடு மறந்து நிம்மதியாக இருக்க முடிகிறது. அலுப்பில்லாமல் குழந்தைகளை தினம் தினம் பார்த்து பலூன் விற்பதில் சந்தோஷத்தை உணர முடிகிறது. உணர்ந்ததைச் சொல்ல முடிகிறது. என்னால் எழுத மட்டுமே முடிகிறது. பலூன் விற்க முடியவில்லை. நான் முருகேசனாக இல்லாமல் போனேன்.

இருந்த இடம் வாழ்ந்த இடமாகாது,. எல்லா இடத்திலும் வாழ விரும்பும் மனம் இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்கவும் விரும்புகிறது. பிடாரனின் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு கூடைக்கு திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில் பழக்கமற்ற தரையோரங்களில் சரசரத்து ஓடி புடை தேடுகிற நிஜம இது.

எழுத்து தொடர்ந்து பதிவுகளாகவே இருக்கிறது. பசுக்களின் குளம்படி பதிவுகளை சிமென்ட் தளங்களிலிருந்து அப்புறப் படுத்த முடியவில்லை. தூத்துக்குடி கடற்கரையில் எனக்கு முன்பு நடந்து போனவர் விட்டுச் சென்ற காலடிப் பதிவுகளை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
அப்புறப்படுத்த முடியாதவைக்கும் காப்பாற்ற முடியாதவைக்கும் மத்தியில் ஆயிரம் பாதங்கள். ஆயிரம் பதிவுகள். நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
என்ன ஒரு அற்புதமான முன்னுரை அல்லவா?

என் வாழ்க்கையில் நான் பிசாசு மாதிரி ஒரு புத்தகத்தை தேடி அலைந்திருக்கிறேன். யாரைப் பார்த்தாலும் அந்த புத்தகத்திற்கு சொல்லி வைப்பேன். ஒவ்வொரு புத்தக விழாவிலும் ஐந்திணை பதிப்பகத்தில் இந்த புத்தகம் எப்போது வரும் என்று விசாரிப்பேன். கிட்டத்தட்ட இருபதாண்டு தேடலுக்குப் பிறகு நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது,. காலச்சுவடு பதிப்பகம் அதை மறுபதிப்பு செய்திருக்கிறதென்று. அந்த புத்தகம் பயணக்கட்டுரை நூல்களில் ஒரு கிளாசிக் என்று சொல்லப் பட்ட தி.ஜானகிராமனின் “நடந்தாய் வாழி காவேரி

அந்த புத்தகத்தின் முன்னுரையில் தி.ஜா எழுதியிருப்பார்.
“காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என்ற உண்மை தெளியத் தெளிய நாங்கள் மேற்கொண்ட பொறுப்பு சாதாரணமானதல்ல என்ற உணர்வு சிறிது தயக்கத்தையும் அளித்தது. காவேரிக்குப் பல உருவங்கள், பல நிலைகள் உண்டு. அதைக் காணும் நிலைகளும் பல. மொண்டு குடிப்பதிலிருந்து கரையிலமர்ந்து தவமியற்றி மனம் இழப்பது வரை இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும் ஒரொரு கணவீதம் அடைவதே ஒரு திளைப்புதான். .

ஆதவனின் என் பெயர் ராமசேஷனில் லா.ச.ரா எழுதியிருப்பார்.
“என்னத்தையோ எழுதி, எழுதியதைப படித்து படித்ததை நினைத்து, படித்ததை வாழ்ந்து, வாழ்ந்ததைப் படித்து அனுபவத்தை நினைத்து, நினைத்ததையே நினைத்து, நினைவை அவ்வப்போது காயப் படுத்தி காயத்திலிருந்து சொரியும் ரத்தம் உணர்ந்து, அர்த்தங்கள் பிரயத்தனங்கள் கொள்கிறோம். நினைவின் ரணமே உயிரின் தைரியம். உயிரோவியத்தின் பல வர்ணங்கள்

தனது “துணையெழுத்து புத்தகத்தில், எஸ்,ரா. எழுதிய வரிகள் இவை.

“ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான். அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதுக்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்தபடிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில்,`மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது என்று ஒரு வரி இருக்கிறது. அதுதான் வாழ்வின் அரூபமான பயணம்.

எஸ்.ரா. தனது “உப பாண்டவத்தில் தான் மகாபாரதம் வாசிக்க விரும்பியதையும் அது மெல்ல மெல்ல தன்னில் ஊறிப்ப் போனதையும் சொல்லியிருப்பார்.
“ஜனவரி மாத குளிர் நாளொன்றில் டெல்லியில் அதிகாலையில் நடந்து கொண்டிருந்த போது பனி மூட்டத்தின் நடுவே தொலைவில் குதிரைகள் நடந்து வரும் சப்தம் கேட்டது. நெருங்கி வரும் குதிரைகளில் பாண்டவர்கள்தான் வருகிறார்கள் என ஒரு நிமிஷம் எழுந்த யோசனை விரிய ஆசையும் படபடப்பும் பெருகியது. மிலிட்டரி குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். கடந்த காலத்தின் ஓசை மட்டுமே கேட்க முடிகிறது எனத் தனியே பேசியபடி திரும்பிய நான் எதோ ஒரு முனையில் மகாபாரதத்தில் பிரவேசித்து எங்கோ விலகி விட்டேன்.

தமிழக அரசின் பரிசு பெற்ற எனது “வனத்தில் ஒரு மான் சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றதில் அதற்கு முகவுரை எழுதிய பாலகுமாரனின் எழுத்துக்களுக்கும் பங்கிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். பாலகுமாரனின் முகவுரை கடித வடிவிலேயே இருக்கும். அவர் எழுதியதில் கொஞ்சம் இங்கே.

“உங்கள் வாலிபம் என்பது சிறுகதை படித்தேன். இதுவரை பல எழுத்தாளர்களுக்குத் தீனியாக இருந்த மன்னன் யயாதியே உங்கள் கதைக்கும் கருவாக இருந்தான். மூப்பைக் கொடுத்து இளமையை வாங்கிக் கொள்ளும் பண்டமாற்றே உங்கள் கதையிலும் முக்கியமாக அலசப்பட்டது. அப்பாவின் இளமையை வாங்கிக் கொள்ள மறுக்கும் மூத்த மகனைக் கண்டிப்பதுதான் மூலக் கதையின் நோக்கம். கடைசி மகன் புரு வாங்கிக் கொண்டான் என்பதுதான் இதுவரை எல்லா எழுத்தாளர்களும் பாராட்டிய விஷயம்.ஆனால் எல்லோரும் பாராட்டிய புருவின் மீது நீங்கள் இலக்கு தப்பாமல் ஒரு அம்பு எய்திருக்கிறீர்கள். யயாதியின் கதையைப் புது விதமாக அணுகி இருக்கிறீர்கள். எதுசரி எது தவறு என்பதுதான் ஆதி நாள் முதல் மனிதருடைய கேள்வியாக இருக்கிறது. அதற்கு இறுதியான விடை காண முடியாமல் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சமாதானம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு எழுத்தாளனுடைய கதைகளும் இவ்விதமே. வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை நடந்தவை பற்றிய அலசலை அவன் கதைகள் உரக்கப் பேசி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும். எழுதத் தூண்டுவதே இந்த ஆராய்ச்சி மனப்பான்மைதான். எல்லோரும் சொன்ன ஒரு பழங்கதையைப் புது விதமாகப் பார்ப்பதுதான். ஆனால் இது எளிதல்ல. அனுபவமும் தெளிவுமுள்ளவர்கள்தான் ஆராய்ச்சியில் ஒரு நியாயமான முடிவைக் கொண்டு வர முடியும். இதை எழுத்தாக மாற்றுகிற செய்திறனும் முக்கியம். இந்தக் கதையின் மொழி நடை வசனமாக இருப்பது ஒரு சிறப்பு. வர்ணனைகளில்லாது மனிதருடைய கேள்வி பதில்கள் மோதிக் கொண்டு நிமிர்வது ஒரு அழகு.


பாலகுமாரனின் செப்புப் பட்டயம் நாவலுக்கு நான் எழுதிய முகவுரையின் ஒரு பகுதி கீழே.
“இந்தக் கதை வாசித்து முடித்தபிறகு நான் தேவதாசிப் பெண்களைப் பற்றி நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். இறைமையைப் பரப்புவதே தொழிலாகிப் போன நிலையில் சுகப்படுத்துவதும் சுகிப்பதும் கூட அவர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. எப்போதுமே தன்னை நிரூபிக்க பெண்தான் அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டியிருக்கிறது தேவரடியவள் என்ற நெற்றிப் பட்டத்தை எடுத்து, குலமகள் என்ற பட்டம் பெற்றுக் கொடுத்து விட்டுக் குளிர்ந்து போயிற்றா அந்த அக்னி? தேவதாசிகளின் பிரும்மாண்டத்தை ஒப்பிட உலகில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. கடல்! எல்லோருக்கும் சுகமளிப்பது கடல். பனையளவு உயரம எழும்பினாலும் சரி, சிற்றலைகளாய் வந்து பாதம் தொட்டு பின்னோக்கிச் சென்றாலும் சரி, கடல் என்பது சந்தோஷத்தின் ரூபம். சந்தோஷம் தேடி எத்தனைகோடி பேர் மணலில் கால் புதைத்து வந்தாலும் அது சந்தோஷப் படுத்தும். அந்தக் காலடிகள் யாருடையதென்று எவரும் ஆராய்வதுமில்லை. குழப்பிக் கொள்வதுமில்லை. எத்தனை பேர் பாதம் தொடுகிறாய் என்று கடலை நோக்கி முகம் சுளிப்பதுமில்லை. அன்றைய காலத்தில் அவர்கள் சமுத்திரமாகத்தான் அலையடித்தபடி இறைத்தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

திரு இறையன்பு அவர்கள் எனது நான்கு புத்தகங்களுக்கு முகவுரை எழுதியுள்ளார். அதில் இரண்டு புத்தகங்கள் பரிசு பெற்றுள்ளது.

ஸ்டேட் பேங்க் விருது பெற்ற “ஆகாயம் அருகில் வரும் என்ற புதினத்திற்கு அவர் எழுதிய முன்னுரை அழகானது. ஆழமானது.

“கதை என்று தனியாய் எதுவுமில்லை. வாழ்க்கை நம், விழிகளின் முன்பாக நம் அனுபவ ஆழத்திற்கேற்ப விரித்து வைத்திருக்கும் அசாதாரணமான நிகழ்வுகள் எல்லாமே கதைக்கான கருவை உள்ளே ஒளித்து வைத்திருக்கிறது. இதை எழுதலாமே என்பதைவிட இதை எழுதித்தான் தீரவேண்டும் என்கிற தீர்மானத்தோடு எழுதும்போது நாமே காகிதத்தில் கரைந்து போன ஒரு திருப்தி தென்படுகிறது. நமக்கு திருப்தி தராத படைப்பு யாரால் பாராட்டப் பட்டாலும் நமக்கு அது மகிழ்ச்சியை அளிக்காமலேயே ஒதுங்கி நின்று விடுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் என்பது பொதுப் பிரச்சனையல்ல தனிப்பட்ட பிரச்சனை என்பதை ஆழ்ந்து கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இருக்கிற வேலைகளுக்கு ஏற்ப நம்மை நாம் செதுக்கிக் கொள்ளாத வரை இந்தப் புலம்பல் நம் செவிப்பறைகளை சேதப்படுத்தக் கூடும். தன்னை முழுவதுமாய் இழக்க சம்மதிக்கிற போதுதான் பனித்துளி பாற்கடலில் கலக்க முடியும்.

எனது “கான்க்ரீட் மனசுகள் தொகுப்பில் திரு இறையன்புவின் முகவுரையிலிருந்து சில பகுதிகள்.
"மானுடத்தின் அசிங்கமான பக்கங்களைக் காட்டி இப்படித்தான் நாம் இருக்கிறோம் என சுட்டிக் காட்டுவது ஒரு வகை வெளிப்பாடு. இல்லையில்லை ...நாம் மேன்மையானவர்கள்தான் என்று `வீடு என்பது கழிவறை மட்டுமல்ல கமகமக்கும் வரவேற்பறையும்தான்` என வெளிச்சம் போடுவது இன்னொரு வகை. நல்ல மனிதர்களைப் பற்றியும் மானுடம் பற்றியும் தொடர்ந்து படித்தால் நம்மையும் அறியாமல் “நாம் இன்னும் மேம்பட்டவர்களாக, கூடுதல் கருணையுடன் அதிக அன்புடன் இருப்போமே, நம்மிடம் இருக்கும் சிலவற்றைத் தொலைக்க முற்படுவோமே என்கிற எண்ணம ஆழ்மனத்தில் விழுந்து விடும். உயர்ந்தவற்றைச் சொல்வதற்குத்தான் இலக்கியம். உயர்ந்தவனை இன்னும் உயர்த்த வல்லவைதான் உண்மையான கதைகள். இதைத்தான் வித்யா சுப்ரமணியம் செய்ய முயன்றிருக்கிறார். இதில் அவர் பெறுகிற வெற்றியின் விஸ்தீரணம் நம்முடைய கைகளில். மனித மனங்களில் அமுங்கி எழுந்த அடையாளம் தத்துவக் கீற்றுகளாகத் தெறித்து விழுந்திருக்கின்றன. உயரப் பறக்க சொல்லித் தருகின்றன".

ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் என்ற தனது புத்தகத்தில் இரா.முருகன் எழுதிய முன்னுரை.
தமிஷ் இலக்கியம் பழைய சிவகங்கை - மதுரை ஜெயவிலாஸ் பஸ்ஸில் பக்கவாட்டு 
இருக்காய் மாதிரி - எத்தனை படைப்புகள் வந்தாலும் இன்னும் உட்கார இடம் 
இருக்கிறது. பீடியை வார்செருப்பால் தேய்த்து அனைத்து விட்டு பூவந்தி டீக்கடை
 வாசலில் கைகாட்டி நிறுத்தி ஐம்வ்பது பைசா ஷேக்ஸ்பியரும் ஏறி உள்ளே வருகிறார்.
இரா முருகன் தனது சிலிக்கன் வாசலில், காக்கையை யாரும் முஷுசாக பார்த்து 
முடிக்கவில்லை என்று கவிதை சொன்னார் ஞானக் கூத்தன். இந்த சிறுகதைக்
காக்கையை இன்னும் நான் முழுசாகப் பார்த்து முடிக்கவில்லை. யார் கண்டது? அது 
முடிந்தால் சிறுகதையே அப்புறம் இல்லாமல் போகுமோ என்னவோ........

எனது சமீபத்திய வரலாற்றுப் புதினம் “உப்புக் கணக்கு புத்தகத்திற்கு முகவுரை எழுதியது என் மூத்த பெண் வித்யாதான், அவள் தமிழ் வழியில் பயின்றவள் அல்ல. ஆயினும் அவள் எழுதிய முகவுரை ஒரு தமிழ் எழுத்தாளராக, ஒரு அன்னையாய் என்னை பெருமிதம் அடையச் செய்தது. அதிலிருந்து சில துளிகளை உங்களோடு பகிர விழைகிறேன்,


“இது ஒரு யாத்திரை. இதில் பயணிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் நெடும் பயணம் செய்த அசதியும் தானே வெற்றி பெற்று விட்டாற்போல் எண்ணமும் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு Virtual Travel Experience ஐ படிக்கும் அனைவரும் உணர்வீர்கள்.

இதன் வெற்றி, Blurred Boundaries என்று அதனைக் குறிப்பிடலாம். கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் நிஜ கதாபாத்திரங்களுக்குமிடையே தெரியாத வித்யாசம். “நீங்கள்ளாம் என்பது தொண்ணுறும் மார்க் வாங்கரதுக்காகவா சரித்திரங்கள் நடக்கின்றது? என்று கொள்ளு தாத்தா கேட்கும்போது பளாரென அறைகிராற்போல் இருக்கிறது. இவ்விடம் சட்ட விரோதக் கூட்டத்திற்கு மட்டும்தான் இளநீர் வெட்டிக் கொடுக்கப்படும் எனக் கூறும் பெயரற்ற ஒரு வியாபாரி, அஹிம்சையால் வெள்ளையர்களை சுதந்திரம் தர சம்மதிக்க வைத்த காந்தியால் ஜின்னாவை என்ன செய்ய முடிந்தது? என்று கேட்கும் கோபால், கல்கண்டு போல் சிரிக்கும் கலியுக சபரி, கண்கலங்கச் செய்யும் குழந்தை விதவை காமு என்று நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஏராளம். உப்புக்கு மனிதப் பாதுகாப்பு வளையம் கொடுத்து தடியடி வாங்கிய சத்யாக்கிரகிகளின் தேசப் பற்று, லாகூரை இரத்த நகரமாகிய மதக கலவரம் என்று இந்த தேசம் பட்ட கஷ்டத்தைத் தெரிந்து கொள்ள இந்த உப்புக்கணக்கைப் படித்தேயாக வேண்டும். நான் கற்றது உப்பளவு... கல்லாதது?

இது நீண்டு கொண்டே போகும் இறுதியில் மீண்டும் லா.ச.ரா விற்கே வருகிறேன். “கங்காவில் அவர் எழுதியிருப்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொருந்தும். வாசகனுக்கும் பொருந்தும்.

யாருக்காக எழுதுகிறேன்?
யாருக்காக கருவுற்றேன்?

இரண்டும் ஒரே கேள்விதான். ஒரே பதில்தான்.

“நானா இதை எழுதினேன்?, என்னிடமிருந்தா இது வெளிப்பட்டது? இந்த பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது? இது எழுத்தாளனின் வியப்பு.

வாசகனின் வியப்பு “ எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது? எனக்கே தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின? இவை என் எண்ணங்கள், வேதனைகள் என் வேட்கைகள், என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்ததெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின் உண்மையில் அவை என் ஆத்மதாபம் என்று இப்போதுதான் விளங்குகிறது. எழுத்து ஊமைச் சிரிப்பு சிரிக்கின்றது. அதற்குத் தெரியும் இருவர் கதையும் ஒரு கதைதான். உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று. அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான். சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று. உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாசத்தையும் தன் சிமிழில் அடக்கிக் கொண்டு இன்னும் இடம் கிடைக்கும் சொல் அது.


முன்னுரைகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால்
நானே எழுதுவதைவிட தொடர்பதிவாக நீங்களும் எழுதலாமே. இத்தொடர் பதிவுக்கு நான் முதலில் அழைப்பது நிறைய புத்தகங்கள் வாசிக்கும் திரு கோபி ராமமூர்த்தியையும், எழுத்தாளர் ரிஷபனையும் மனோசாமினாதனையும்.. யார் எழுதினாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். பொறுமையாய் வாசித்தமைக்கு என் நன்றி.