Sunday, November 28, 2010

தாய் மண்ணே வணக்கம்

சுற்றிலும் வெள்ளிப் பனி மலைகள்
சல சலவென ஓடும் நதிகள்
மனிதர்களில்லாத உயரத்தில்
பிராண வாயுவும் கூட குறைவாகவே
உள்ள இடத்தில் நான் மட்டும்
தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன்,
பசித்திருக்கிறேன், உங்களைப் பாதுகாக்க.


என் குடி நீர் வாயருகில் செல்வதற்கு முன்
உறைந்து விடும். என் உணவில் இரு சுவைதான்
ரொட்டியும் பருப்பும் மட்டுமே.
என்னை மகிழ்விக்க அங்கே எதுவுமில்லை
என் குடும்பம் புகைப் படமாய் என் பர்சில்.
என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீர்ந்து பல நாளாகிறது.
என் பொழுதுபோக்கு என் வீட்டிலிருந்து
எழுதப்பட்ட கடிதங்களே.
என் குழந்தையின் அசைவும் அழுகையும்
சிரிப்பும் எனக்குள் நான் சேமித்து
வைத்திருக்கும் சக்தி.

ஹோவென கூச்சலிடும் பேய்க் காற்றும்
சுள்ளென தசைச் சுடும் சூரியனும்
ஊசியாய் தரையிறங்கும் மழையுமாய்
சட்சட்டென பருவநிலை மாறினாலும்
என் பணி விழித்திருப்பதே எந்நேரமும்.
மாசற்ற வானில் கோடிகோடியாய்
மின்னும் நட்சத்திரங்களே உற்ற துணையாய்
என் இரவுகள் கரையும்.

எந்நேரமும் எமனை முதுகில் சுமந்து செல்லும்
நானும் இந்திய அரசு ஊழியன்தான்.
இந்தியாவைக் காக்கும் அரசு ஊழியன்.
எனது ஒவ்வொரு விடியலுமே நிச்சயமற்ற பிச்சைதான்
இருப்பினும் தினமும் நான் உற்சாகமாகவே
புதிதாய்ப் பிறக்கிறேன்.

எங்கள் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில்
வீர மரணம் அடைந்திருக்கிறார்கள்.
கார்கில் போரில் என்னுயிர்த் தோழனின் மரணம்
கண் முன்னே கண்டவன் நான்.

எங்கள் சாமி இந்தியத் தாய்தான்
எங்கள் மந்திரம் தாய் மண்ணே வணக்கம்தான்.

நா செத்துட்டா அழக்கூடாது
சல்யுட் அடித்து கர்வப்படனும் சரியா?
எனக்குப் பிறகு நீ அனாதையில்லை
என் சாமி உன்னை கை விட்டு விடாது

இது என் மனைவிக்கு இரு மாதம் முன்பு
நான் அனுப்பிய கடிதம்.

என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீருவதற்கு முன்
நான் கேட்ட கடைசி செய்தி கார்கில் வீட்டு
மனைகள் பற்றிய ஊழல்தான்.
செத்தவன் பேரைச் சொல்லி யாராரோ
அபகரித்திருக்கிறார்களே!
என்ன கொடுமை ஐயா இது?

நாளை என் குடும்பத்திற்கும்
இதே நிலைதானா? இதற்காகவா
இங்கே நான் தனித்திருக்கிறேன்,
விழித்திருக்கிறேன், பசித்திருக்கிறேன்?

பிள்ளைக்கறி தின்னும் இந்த
காட்டு மிராண்டிகளையுமா பெற்றிருக்கிறாள்
என் இந்திய அன்னை?

உண்மையில் யாரைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறேன் நான் ?

தேசத் துரோகிகள் உள்ளேயும் இருக்கிறார்கள்
என் துப்பாக்கி முனை உட்புறமாய் திரும்பி விடுமோ ?
என் கரம் நடுங்குகிறது, இன்னொரு விடுதலைப்போர்
வேண்டும் அவசியம், நம்மை நம்மிடமிருந்து
காப்பாற்றிக் கொள்ள.

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி- கிளியே
வாய் சொல்லில் வீரரடி!







Friday, November 26, 2010

சென்ற வாரம் காந்தி சிலையருகில்

சென்ற வாரம் கடற்கரை சாலையில் நடந்தது இது. காந்தி சிலையருகே
பாரீஸ் முனையிலிருந்து திருவான்மியூர் வழியே செல்லும் மாநகரப் பேருந்து ஒன்று சிக்னலுக்காக மெதுவே வந்து நிற்பதற்கு முன் அதிலிருந்து ஒருவர் சிக்னலில் அவசரமாக அப்படியே கீழே குதிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது.

அவர் கீழே குதித்த அதே நேரத்தில் பேருந்தை ஓட்டி வந்து கொண்டிருந்த ஒரு பைக் ஓட்டுனர் மீது அவர் மோத, அந்த பைக் ஓட்டுனர் மட்டும் எகிறிச் சென்று நடைபாதையில் நிலைகுலைந்து விழ, அவரது பைக்
ஆளில்லாமல் அதுபாட்டுக்கு சற்று தூரம் ஓடி பேருந்து ஒன்றில் இடித்து கீழே விழுந்தது. ஆபத்து எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள். அந்த பைக் ஓட்டி எந்த சாலை விதியையும் மீறவில்லை. ஆயினும் சாலை விதியை மீறி ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் சடாரென கீழே குதித்ததால் ஒரு தவறும் செய்யாத அந்த பைக் ஒட்டிக்கு சரியான அடி.

இதை விதி என்று சொல்ல நான் தயாரில்லை. இந்தியாவில் யாரும் சட்டங்களையும் சரி சாலை விதிகளையும் சரி மதிப்பதில்லை. சிறிய தவறுகளோ பெரிய தவறுகளோ தண்டனை என்று ஒன்று இருந்தால்தான், தனி மனித ஒழுக்கம் மேம்படும். அமெரிக்காவில் அதிபரின் மகனோ மகளோ சாலை விதியை மீறினாலும் தண்டனை உண்டு. இங்கோ சாதாரண அடியாளுக்கு கூட ராஜ மரியாதை.

டிராபிக் போலீசுக்கு பணம் கொடுத்து விட்டால் குற்றவாளி கூட நிரபராதி. அந்த பைக் ஒட்டிக்கு நேற்று நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? எல்லா பேருந்துகளிலும் அவசியம் தானியங்கி கதவுகள் இருக்க வேண்டும். அவைகள் பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே திறக்க வேண்டும். பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து யாரும் ஏறவும் முடியாது. ஓடும் பேருந்திலிருந்து இறங்கவும் முடியாது. இனி ஒரு விதியை இனியாவது செய்யுமா நம் அரசு? ஸ்பெக்ட்ரம் எழுப்பும் சப்தத்தில் நம் கூப்பாடு யாருக்கு கேட்கப் போகிறது? இருப்பினும் ஊதும் சங்கை ஊதுவது நம் கடமை. ஊதியாயிற்று.

Wednesday, November 24, 2010

கண்ணாமூச்சி (பகுதி- இரண்டு)

எவ்வளவு முயற்சித்தாலும் மனம் எதிர்மறையாக கற்பனை செய்வதைத் தடுக்க இயலவில்லை. சாலையில் நடக்கும் போது மணி தடாலென விழுவது போலவும், எவனோ ஒருவன் குடித்து விட்டு விழுந்து கிடப்பதாக எண்ணி மனிதர்கள் அருவருப்போடு என்ன எது என்று பார்க்காமல் கடந்து செல்வது போலவும் காட்சி ஓடும்.

இன்னொரு காட்சியில் தொடர்ச்சியாய் அவர் சிகரெட் பிடித்து புகையை ஊதி விடுவார். பேருந்தில் செல்லும்போது ஸ்ட்ரோக் வந்து விழுவார்
நடுச் சாலையில் நெஞ்சடைத்து விழ பின்னால் வந்த வாகனம் அவர் மீது ஏறுவது போல் தோன்றும். ஒவ்வொரு காட்சிக்கும் ஐயோ என்று என் அடி வயிறு கதறும்.
காலோடு தலை தேகம் நடுங்கி வியர்க்கும். நல்லதை நினை மனமே என்று சொல்லிக் கொண்டாலும் மனம் ஒத்துழைக்காது.

ஒவ்வொரு வாரமும் ஊருக்கு வரும் புருஷனிடம் படிந்திருந்த புகை வாசனை மரண ஊதுபத்தியாக என்னை சுவாசம் திணற வைத்தது.

"சிகரெட் பிடிச்ச வாசனை வரதே "
"இல்லையே"
" ஏன் புளுகறீங்க?"
" இல்லம்மா"
'டோன்ட் டச் ..! புளுகர புருஷன் எனக்கு வேண்டாம்"

" டென்ஷன் மா ஜஸ்ட் ஒண்ணுதான்"

"எங்களுக்கு டென்ஷன் இல்லையா? இப்போ எனக்கேற்பட்டிருக்கற டென்ஷனுக்கு நானும் நாலு பாக்கெட் பிடிக்கவா?"

"வாங்கித் தரவா?

"ஜோக்கா? பளார்னு அறையலாம் போலருக்கு."

"இனிமே தொடமாட்டேன் போதுமா?"

"எதுக்கிந்த போய் சத்தியம்? எனக்கு நம்பிக்கையில்லபா.
நீங்க நல்லவரா இருந்தா மட்டும் போதாது. நல்ல பழக்க வழக்கமும் கொஞ்சம் வேணும். சந்தர்ப்பம் கிடைச்சாலும் சபலப் படக் கூடாது. சிகரெட்தான் முக்கியம்னு நினைக்கரவா எதுக்கு கல்யாணம் குழந்தைகள்னு பல்கிப் பெருகணும்? எல்லாரையும் கஷ்டப்படுத்தணும்?"

அந்த இரண்டு நாளும் பேசவே இல்லை. திங்கட் கிழமை காலை
சூட்கேசைத் தூக்கிக் கொண்டு என் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தார்.

"வழில எதுவும் சாப்ட வேண்டாம். இதுல இட்லி இருக்கு. ஜாக்ரதையா போயிட்டு வாங்கோ"

"கோவம் குறைஞ்சுதா?"

"இது கோவமில்ல வருத்தம். நான் சொன்னதெல்லாம் மறந்துட வேண்டாம்"

"வரட்டுமா" நழுவி நகர்ந்தார்.

ஊருக்குப் போய்ச் சேர்ந்து நாலு தினமாகிறது. இதுவரை ஒரு போன் பண்ணவில்லை. அப்படி என்ன வேலையோ. இன்றைக்காவது பேசுகிறாரா
பார்ப்போம்.

அலுவலகத்திலிருந்து கடற்கரை சாலையில் நடைப் பயணமாய் வீடு வந்து சேர்ந்த போது டெலிபோன் அடிப்பது கேட்டது. பெரிய பெண் எடுத்துப் பேச நான் உள்ளே சென்றேன்.

" யாருடி அப்பாவா?"

" இல்ல ஆனா அப்பா ஆபிஸ்லேர்ந்துதான் போன்"

"என்னவாம்?" கேட்கும்போதே என் குரல் லேசாய் நடுங்கிற்று.

"ஐ திங் அப்பா இஸ் நோ மோர்மா."

சுருண்டு மூலையில் அமர்ந்தேன். தேகம் முழுக்க மின்சாரம் தாக்கினாற்போல் சுண்டியிழுத்த வலி. அடி வயிறு கழன்று தனியே விழுந்து விட்டாற்போல் இருந்தது. அதிர்ச்சியில் கண்ணீர் அடைபட்டுப் போயிற்று.

"நிஜமா? நிஜம்தானா இது!..... ஏதாவது ராங் காலாக இருக்குமோ?

இல்லை என்றன தொடர்ந்த தொலை பேசி அழைப்புகள். என்னக்குள் எதோ நழுவியது.

" ஹலோ அங்கிள் சௌக்கியமா? நா சௌக்கியம்தான். உங்களுக்கு ஒரு வருத்தமான சேதி. கொஞ்சம் முன்னால அப்பா தவறிட்டார்.
ஹார்ட் அட்டாக் ."

இருபது வயதுப் பெண் தன் துக்கம்மறைத்து கேட்பவருக்கு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படாமல் பக்குவமாக நலம் விசாரித்து செய்தி சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தாள்
நான்கைந்து முறை விழுப்புரத்திர்க்குப் பேசி நிலவரங்களைக் கேட்டு அறிந்தாள்.
மாற்றி மாற்றி வந்த தொலை பேசி அழைப்புகளுக்கு அமைதியாக பதில்
அளித்தாள் அழுதபடி வந்த உறவுகளை ஆறுதல் சொல்லி அமர வைத்தாள்

அடுத்த நாள் எல்லாமே முடிந்து போயிற்று. உதட்டில் உட்கார்ந்து
கொண்டிருந்த நெருப்பு முழு உடம்பையும் சுவீகரித்துக் கொண்டது.

"ஆர் யு ஒகே மா?" பெண் என்னருகில் அமர்ந்து பரிவோடு கேட்க மெலிதாய் புன்னகைத்தேன்.

"இது நாள் வரை உள்ள இருந்து ஹிம்சை பண்ணிண்டிருந்த
பயமும் செத்துப் போய்டுத்து. நல்ல காலம் நா பயந்தாப் போலல்லாம் இல்லாம
நல்லபடியாத்தான்...."

அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டேன். யோசிக்க யோசிக்க ஒரு உண்மை விளங்கியது. மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை.
அந்த மரணம் நல்லபடி நிகழ வேண்டுமே என்ற பயம்தான் என்னைக் குடைந்திருக்கிறது. இணைவதற்கு ஒரு முகூர்த்தம் எனில், பிரிவதற்கும் ஒரு முகூர்த்தம் நிச்சயம் இருக்கும். அதற்கு சம்மதிக்கிற மனசு இதற்கும் நிச்சலனமாய் சம்மதித்துத் தானே ஆக வேண்டும். வாழ்க்கை ஒரு ரயில் பிரயாணம் என்று சும்மாவா சொன்னார்கள்! பிரிவுக்கு அஞ்சுபவர்களுக்கு பயண
சுகமும் அனுபவமும் கிட்டுவதில்லை. அந்த அனுபவங்கள் என் எண்ணங்களில்
இனிமையாக படர்ந்திருக்கும். மரணம் விடுதலை எனில் எதற்கு துக்கப் பட வேண்டும்? எல்லாத் துன்பமும் உடல் இருக்கும் வரைதானே. இனி அது உடலற்றது. அதற்கினி எந்த துன்பமும் இல்லை. வெய்யிலில் வாடாது. மழையில் நனையாது. பசியிருக்காது. தாகமிருக்காது. பி.பி. கிடையாது. அடைப்பு ஏற்படாது. அறுவை சிகிச்சைகள் கிடையாது. எவ்வளவு பெரிய விடுதலை. இருக்கட்டும். அது அப்படியே உடலற்று இருக்கட்டும். காமத்திற்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும்தான் உடல் வேண்டும். காதலுக்குத் தேவையில்லை.
உடலற்றதொடும் காதல் தொடரலாம்.

நீண்ட நாள் கழித்து நான் பயமின்றி உறங்கினேன்,

தொலைபேசி நீளமாய் அடித்தது. எழுந்து சென்று எடுத்துப் பேசினேன்.

"ஹலோ"

"நாந்தாம்மா எப்டியிருக்க? " அவர் குரல்தான்.

"நல்லார்க்கேன்"

"அப்பறம் என்ன விசேஷம்?"

"விசேஷம்தானே. உண்டு. நீங்கள் செத்துப் போய் விட்டீர்கள். ஞாயிற்றுக் கிழமை உங்களுக்கு பத்து. வந்து விடுங்கள்"

"கண்டிப்பா வரேன் படையல் மெனு என்ன?"

"உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் உண்டு. உப்பில்லாமல்."

"சிகரெட் உண்டா?"

"உண்டு. நிக்கோட்டின் இல்லாமல்."
*****************
பி.கு.
இந்த சுய கதை அமுதசுரபியில் வந்தது. கான்க்ரீட் மனசுகள் என்ற தொகுப்பிலும் சேர்க்கப் பட்டுள்ளது, அதே அமுதசுரபியிலும், குமுதம் ஹெல்த்திலும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வுக்காக இதைக் கட்டுரையாக எழுதிக்கொடுத்தேன். இதனைப் படிப்பவர்களில் உடனடியாய் சிலராவதும், போகப் போக பலரும் புகைப்பதை விட்டு விடுவார்கள் என்கிற ஆசையோடுதான் இங்கே இதனைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.




Tuesday, November 23, 2010

கண்ணாமூச்சி (பகுதி ஒன்று)

இது கதையல்ல நிஜம். எனக்கு நடந்தது. இனியாருக்கும் நடக்க வேண்டாம் என்பதற்காக நான் எழுதிய என் கதையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணாமூச்சி (பகுதி ஒன்று)

ஒரு ஒட்டுண்ணித் தாவரம் போல பயம் எனக்குள் படர்ந்திருந்தது. அதை உதறவும்முடியாமல் அதனின்று நான் விடுபடவும் இயலாதவாறு அது ஒரு அமுக்குப் பிசாசு போல் என் மீது கவிழ்ந்திருந்தது. பயம் ஊறிய விழிகளால் நான் கண்டவர்களும், கண்டவைகளும் கூட பயத்தோடு அலைவதாகத் தோன்றியது. கடற்கரை சாலையில் பயம் அப்பியிருந்தது. சாலையில் சென்ற வாகனங்கள், பாதையில் நடந்து கொண்டிருந்த மனிதர்கள், நின்று கொண்டிருந்த மரங்கள், நுரைத்து கரை தொட்ட அலைகள் எல்லாவற்றிலும் பயம் பூஞ்சையாய் ஒட்டியிருந்தது.

மணி விழுப்புரத்திற்குச் சென்றதிலிருந்துதான் இந்த பயம். போகாதே என்று எத்தனை புலம்பியும் கேட்கவில்லை. பெண்ணின் வேதனையும் பயமும் புரியாத ஆண் வர்க்கம்.

"இந்த உடம்போட ஊர் விட்டு ஊர் போய்த்தான் ஆகணுமா? மெடிக்கல் லீவ் போட்டாத்தான் என்ன"

பதிலில்லை. கேஷுவல் லீவே போடுவதற்கு யோசிக்கும் மனிதனாவது மெடிக்கல் லீவ் போட்டு விட்டு வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதாவது! ஆபரேஷனுக்காக இரண்டு மாதம் போட்டதே பெரிய விஷயம். வேறு வழியில்லை. உயிருக்கே அபயம் என்கிற நிலையில் போட்டுத்தானே தீர வேண்டும்.

இப்போது நினைத்தாலும் அன்றைய சூழல் கதிகலங்க வைத்தது. ஒரு திங்கட்கிழமை எனக்கு விடியல் சரியாக இல்லை. பாத்ரூமில் தாடல் என்று ஒரு சப்தம். பல் தேய்த்துக் கொண்டிருந்த மணி சரிந்து விழுந்திருந்தார். வீட்டில் யாருமில்லை.
"என்ன என்னாச்சுப்பா? " பதறினேன். எங்கிருந்துதான் அத்தனை சக்தி வந்ததோ. ஒற்றை ஆளாய் தூக்கியிழுத்துக் கொண்டு வந்து ஹாலில் கிடத்தினேன். மின் விசிறியை சுற்ற விட்டேன். இரண்டே நிமிடம்தான். சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். ஒண்ணுல்ல என்றார்.
"என்ன பண்ணித்து?"

"ஒண்ணுல்ல விடு" எழுந்து போனார். அடுத்த அரை மணி கழித்து மீண்டும் விழ நான் அலறினேன்.
பேராலிடிக் ஸ்ட்ரோக் " டாக்டர் சொல்லியபடி இரத்த அழுத்தம் பார்த்தார். எங்கோ எகிறியது. அவசரத்திற்கு மாத்திரை கொடுத்து உடனடியாய் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக் கூறினார்.

அடுத்தது ஆஸ்பத்திரிப் படலம். மருந்து வாசனை பினாயில் நறுமணம். சூழ்ந்திருந்த டாக்டர்களுக்கு நடுவே மணி.
"சிகரெட் பழக்கம் உண்டா?"
" உண்டு "
"ஒரு நாளைக்கு எவ்ளோ?"
"நாலஞ்சு"
"நாலஞ்சு சிகரெட்ட? பாக்கெட்டா?
"...................."
"டிரிங்க்ஸ் உண்டா?"
"எப்போதாவது"
"எத்தனை குழந்தைகள்?"
"ரெண்டு பெண்கள்"
"என்ன பண்றாங்க?"
"படிக்கறாங்க"
"உங்க வயசென்ன?"
"நாப்பத்தியாறு "
"வாழற ஆசை அதுக்குள்ளே போயடுச்சான்ன? பெண்டாட்டி
குழந்தைகள் மேல அன்பிருக்கா இல்லையா?"
"........................"
"உங்களுக்கு என்ன பிரச்சனை தெரியுமா?"
"சொல்லுங்க"
"உங்க மூளைக்கு போகற சுத்த ரத்தக் குழாய்ல கழுத்துப் பகுதியில் அடைப்பு இருக்கு. அதனால் மூளைக்கு ரத்தம் சரியாப் போகல. அதான் ஒரு பக்கம் விழுந்துடுச்சு."
"சரியாகிடுமா?"
"ஆபரேஷன் பண்ணனும், ஆஞ்சியோகிராம் பண்ணி அதுல சரியாகல. மூணு நாளைக்குள்ள ஆபரேஷன் பணியாகனும். கழுத்துப் பகுதியை கீறி ரத்தக் குழாயைத் திறந்து கெட்ட கொழுப்பைச் சுரண்டி எடுப்போம். ஆபரேஷன்ல நல்லாகிடுவீங்க. ஆனா இனி சிகரெட், மதுவைத் தொடரதில்லன்னு உறுதி எடுத்துக்கோங்க. நல்லார்க்கற உடம்பைக் கெட்ட பழக்கங்களால கெடுத்துக் கொள்வது கூட தற்கொலை மாதிரிதான். புரிஞ்சுதா?"

டாக்டர் மிகுந்த திறமைசாலி மட்டுமல்ல. மிகுந்த நல்லவராகவும் இருந்தார். மணியைக் காப்பாற்றி விட்டார். டிஸ்சார்ஜ் செய்வதற்கு முதல் நாள் என்னைத் தனியே அழைத்துப் பேசினார்.

"உங்ககிட்ட சில விஷயங்களை வெளிப்படையாவே நான் சொல்லியாகனும். இந்த ஒரு வாரமா உங்களை கவனித்த வகையில் ஐ ஹோப் யு ஆர் நாட் அன் ஆர்டினரி உமன். சிரமங்களை அமைதியா எதிர்கொள்ளும் பக்குவம் உங்க கிட்ட இருக்கு. அதனாலதான் ஒப்பனா சொல்லிடலாம்னு இருக்கேன். மிஸ்டர் மணி இந்த ஆபரேஷன்ல பிழைச்சிருக்கலாம். ஆனாலும் இதோட எல்லாம் சரியாகி விட்டதா எடுத்துக்க முடியாது."

"புரியும்படியா சொல்லுங்க டாக்டர்"

"பொதுவா வயசாக ஆக மனுஷங்களுக்கு மூளை சுருங்க ஆரம்பிக்கும். வயசானவங்களுக்கு ஞாபக மறதி ஏற்படறது அதனாலதான். கெட்ட பழக்கங்களால துரதிருஷ்டவசமா உங்க கணவரோட மூளை இந்த நாற்பத்தியாறு வயசுலேயே அறுபது வயசுக்குரிய சுருக்கங்களை அடைஞ்சிருக்கு. இன்னும் தெளிவா சொல்லனும்னா அவருடைய மூளையோட இயற்கையான ஆயுள் என்பதுன்னா இப்பவே அது அறுபது வயதைக் கடந்து விட்டதுன்னு அர்த்தம். இது கவலைக்குரிய விஷயம். இதனால கோபம் அதிகம் வரும். மறதி அதிகரிக்கும். ஒரு நடுக்கம் கூடும். இந்த நிலையில் அவர் மீண்டும் சிகரெட்டைக் கையிலெடுத்தால் அவர் மூளை இன்னும் பத்து வருட ஆயுளை ஒரு சில மாதங்களில் கடந்து விடும். கட்டுப் பாடாக இருந்தால் இன்னும் இருபது வருடங்கள் கூட வாழலாம். ஆயுள் என்பது இறைவன் அறிவது. இறைவனளிப்பது. ஆனால் ஆரோக்கியம் என்பது நம் கையில் உள்ளது. விதியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள நினைப்பது அறிவீனம். இதையெல்லாம் பயமுறுத்தாமல் பக்குவமாக அவருக்குப் புரிய வைத்து அவரது கெட்ட பழக்கங்களை நிறுத்த முயற்சி செய்யுங்கள். எந்தப்பழக்கமும் சட்டென நிறுத்துவது கடினம்தான். கோபமோ ஆத்திரமோ அடைய வேண்டாம். அவரது ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நான் சொல்வதெல்லாம் புரிகிறதா?"

"புரிகிறது டாக்டர். முயற்சி செய்கிறேன்"

"ஐ விஷ் யு ஆல் தி பெஸ்ட்" டாக்டர் நட்புடன் விடை கொடுத்தனுப்பினார்.
அன்றுதான் இந்த பயம் என்னைப் பற்றிக் கொண்டது. வேதாளம் மாதிரி என் முதுகின் மீது பாரமாய் அமர்ந்து சவாரி செய்யத் தொடங்கியது.

" உன் கணவன் புகைப்பதை மறப்பானா? தன் ஆயுள் நீட்டித்துக் கொள்வானா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்திருந்தும் கூறா விட்டால் உன் தலை வெடித்துச் சிதறும்." வேதாளம் பயமுறுத்தியது.

"கண்டிப்பாக நிறுத்துவார்"
"எப்படிக் கூறுகிறாய்?"
"நல்லவர், குடும்பத்தை நேசிப்பவர்"
"அது மட்டும் போதுமா?"
"நிறைய கூறலாம். என் மீது அவருக்கிருப்பது தூய்மையான அன்பு.
நான் கருக்கொண்டிருந்த காலத்தில் எனக்குப் பிடிக்காத உணவுகளைத் தானும்தவிர்த்தவர். நாள் முழுக்க நான் சோர்ந்து தூங்க, சமையல் பொறுப்பை ஏற்றவர். என் துணிகள் துவைத்தவர். என் தலையும் காலும் பிடித்து விட்டவர். பத்தொன்பது வருட தாம்பத்யத்தில் துளியும் காதல் குறையாதவர். அப்படிப்பட்டவர் எனக்காக புகைப்பதை இனி நிச்சயம் நிறுத்துவார். இன்னும் இருபது வருடங்கள் நாங்கள் சேர்ந்திருப்போம். பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போம். பேரக் குழந்தைகள் காண்போம். கைகோர்த்து கடற்கரை சாலையில் நடப்போம். "

"பார்ப்போம்" வேதாளம் சிரித்தது. இன்னும் பலமாய் என்னைப் பற்றிக் கொண்டு எண் நம்பிக்கைகளை நொறுக்கப் பார்த்தது.
மூன்று மாதம் எல்லாம் சரியாகவே இருந்த நிலையில்தான் மணிக்கு பணியிட மாற்றம் வந்து வயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்தது.
யாரிடமும் கெஞ்ச மாட்டேன், விடுப்பும் எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாகப் புறப்பட்டவரை வழியனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.
உடன் செல்ல முடியாத குடும்ப சூழல். உடல் பலவீனமானவரை நோய் தாக்கும். மனம் பலவீனமாகும் போது பயம் தாக்குகிறது. புருஷன் பிரிந்து செல்ல பயம் புருஷனாயிற்று. என்னோடு கலந்து, உறங்கி, விழித்தது. விபரீதக் கற்பனைகளுக்கு வித்திட்டது. ஒவ்வொரு நிமிடமும் என்னவாகுமோ என்று மனம் நடுங்கியது. உள்ளே ஏதேதோ காட்சிகள் விரியும்.

(என் கதை தொடர நாளை மீண்டும் வருவேன்.)

Sunday, November 21, 2010

நடைபாதையும் பாதசாரியும்

இரண்டு நாள் முன்பு மயிலை வடக்கு மாடவீதியில் சரவண பவன் அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன். மாடவீதி சந்தைக்கடையாக இருக்கிறது. நடுவீதியில் வாகனங்களோடுதான் பாதசாரிகளும் நடக்க வேண்டியிருக்கிறது. பின்னால் வாகனம், முன்னால் வாகனம், பக்கவாட்டில் ரிவர்ஸ் எடுக்கும் வாகனங்கள் என்று தடுமாறிப் போகிறோம். யாரிடமும் எந்த ஒழுங்கு முறையும் இல்லை. எனக்கு எதிரே ஒரு முதியவர் எதிர் திசையில் நாடு ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை மோதுவது போல் ஒரு கார் அவரது பின்னால் வந்து நிற்கிறது.

"யோவ் பெரிசு என்ன இப்டி நாடு ரோட்ல நடக்கற ஓரமா நடக்க மாட்டியா?" கார் ஓட்டுனர் எட்டிப் பார்த்து கேட்க நான் ஒரு வினாடி திகைத்தேன். அடுத்த நிமிடம்தான் அது நடந்தது. அந்த பெரியவர் அந்த ஓட்டுனரை எரித்து விடுவது போல் பார்த்தார். ஓரமா நடக்கணுமா? நடக்கறேனே. ஆனா எங்க நடககறதுன்னு நீ நடந்து காட்டு முதல்ல என்றாரே பார்க்கலாம். அந்த ஓட்டுனர் மேற்கொண்டு ஏன் பேசுகிறான். " நல்லா கேட்டீங்க "நான் பெரியவரை பாராட்டிவிட்டு நடந்தேன்.

வடக்கு மாடவீதியின் ஒருபக்கம் தெப்பக் குளத்தை ஒட்டியபடி ஒரு நடைபாதை உண்டு. ஆனால் அதை பாதசாரிகள் உபயோகப்படுத்த முடியாதபடி நடைபாதைக் கடைகள் ஆக்ரமித்திருக்கிறது. அதற்கு எதிர்ப்புரமும் நடைபாதை உண்டு. அதையும் அந்தந்த கடைக்காரர்களே ஆக்ரமித்திருக்கிரார்கள். நகைக்கடைக்காரர்களும் ஓட்டல்காரர்களும் நடைபாதைக்கும் வெளியே சாலையில் அவர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனம் பார்க் செய்ய வசதியாக சங்கிலி போட்ட ஸ்டான்டுகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆக சாலையின் ஒரு பகுதியும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது, ஒருபக்கம் முழுக்க நடைபாதைக்கடைகள். மறுபக்கம் முழுக்க கோடீஸ்வர முதலாளிகளின் ஆக்ரமிப்பு. அணிவகுத்து நிற்கும் கார்கள், சாலையின் இப்புறமும் அப்புறமும் செல்லும் நாற்சக்கர இருசக்கர வாகனங்கள், பழ வண்டிகள், , காய்கறி வியாபாரிகள்.

இந்த நெரிசலில் பாதசாரிகள் நடக்க எங்கே இடம் இருக்கிறது? எனவே நடுவீதியில் நடப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலைதான் அங்கு பாதசாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாதசாரிகளுக்கு எந்த உரிமையும் இல்லையா? வெளிநாட்டில் எல்லாம் பாதசாரிகளுக்குதான் முதல் மரியாதை என்று சொல்கிறார்கள். அந்த மரியாதை இங்கு எப்போது நடைமுறைக்கு வரும்?

நடைபாதைக் கடைக்காரர்களுக்கு பாதிப்பும் வராமல், அதே நேரம் பாதசாரிகள் நடப்பதற்கும் உதவும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி முடிவெடுத்தால் இலவசமாக ஒரு ஆலோசனை தரத் தயாராக இருக்கிறேன். மெட்ரோ ரயில் நிலையங்கள் எல்லாம் ஆளில்லாமல் காலியாக சிலநேரம் பயமாகக் கூட உள்ளது. ரயிலில் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலாக இருக்கும் இடங்களில் உள்ள நடைபாதை கடைகளுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய அரசோடு பேசி இடம் ஒதுக்கித்தரலாமே. இதன் மூலம் மயிலையில், luz carner
மற்றும் மாடவீதி ஆகிய இடங்களில் பாதசாரிகள் நடந்து செல்ல இடம் கிடைக்கும். யோசிக்குமா நம் அரசும் மாநகராட்சியும்?

Thursday, November 18, 2010

பெண்ணின் ஒளி

சில நாட்களுக்கு முன் "ஆஹா " என்ற படம் பார்த்தேன். சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. இதுவும் அப்படித்தான். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சி என் மனதை உறுத்தியது. கதாநாயகன் பிறருக்காக பழி ஏற்கும் அளவுக்கு நல்லவன். அண்ணன் இறந்து விட்டதாக தகவல் வரும்போது தங்கையின் திருமணத்தில் வீடு உற்சாகமாக இருக்கிறது. யாருக்கும் சொல்லாமல் அவன் மட்டுமே அந்த துக்கத்தை அனுபவிக்கிறான்.

முகூர்த்த நேரம். அம்மா அனைவருக்கும் மலர் தூவி வாழ்த்த கொடுப்பதற்காக மலர் தட்டோடு வந்து மருமகளிடம் கொடுக்க, கதாநாயகன் அவசரமாக வந்து மலர்த்தட்டை அண்ணியிடமிருந்து வற்புறுத்தி பெற்றுக்கொண்டு தானே அனைவருக்கும் விநியோகிக்கிறான். அதன் உள்ளர்த்தம் அண்ணிக்கு இனி அந்த தகுதியில்லை என்பதுதான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் சினிமா பெண்களை பூவோடும் பொட்டோடும் சம்பந்தப் படுத்திக் கொண்டிருக்கப் போகிறது.

ஒருபக்கம் தமிழ் சினிமா தாலி சென்டிமென்ட்டில் நனைந்து கொண்டிருக்க மறுபுறம் நிஜத்திலோ நாகரிகம் என்ற பெயரில் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். விதவைகள் என்ற வார்த்தையே அநாகரிகமாக இருக்கிறது. மரணம் என்பது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவான ஒன்றுதான். எந்தப் பெண்ணும் விரும்பி கணவனை இழப்பதில்லை. தவிர நமது பகவத் கீதையின் படி மரணம் என்பது உடலுக்குத்தான். ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிறது. படிப்பது பகவத் கீதை. இடிப்பது கணவனை இழந்த பெண்களையா?

கணவனை இழந்து விட்டால் அவர்கள் மங்கள காரியங்களுக்குத் தகுதியில்லாதவர்கள் என்ற விதியை யார் எழுதியது? அவளது புருஷனின் ஆன்மா அழிவற்று இருக்கும்போது அவள் எப்படி அவனை இழந்தவள் அவாள்? மறு விவாகம் செய்து கொள்வதும் கொள்ளாததும் அவளது தனிப்பட்ட விருப்பம். மறுவிவாகம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு சுமங்கலி அங்கீகாரத்தைத் திரும்பக் கொடுக்கும் சமூகம், அதற்கு விருப்பமின்றி தன் புருஷனோடு மனதளவில் வாழும் பெண்ணை எப்படி எதற்கும் தகுதியில்லாதவள் என்று முடிவு கட்டுகிறது எனப் புரியவில்லை.


சுமங்கலிகள் வாழ்த்தினால் மட்டுமே தம்பதிகள் நன்றாக இருப்பார்கள் என்றால் கணவனை இழந்த அந்த பெண்ணின் திருமணத்தன்று அவளை வாழ்த்தியதும் சுமங்கலிகள் தானே? அத்தனை சுமங்கலிகள் வாழ்த்தியும் ஏன் அவள் கணவன் இறந்து போனான்? அவர்கள் சரியாய் வாழ்த்தவில்லையா?


தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் வாழ்த்துவதற்கு மனம் நிறைய அன்பு இருந்தால் மட்டும் போதும். அருகில் புருஷன் உயிரோடு நின்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சிறுகதையில் அமரர் திரு சுஜாதா விதவைப் பெண்கள் அலுமினிய கூடைகளில் பால் கவர் அடுக்கிகொண்டிருந்தார்கள் என்று ஒரு வர்ணனை செய்திருந்தார். எனக்கு இது உறுத்தலாக இருந்தது. தினமும் நான் அவரை கடற்கரை சாலையில் நடைப் பயிற்சியில் பார்ப்பது வழக்கம். வழக்கமாக எதுவும் பேசாது கடந்து போய்விடுவேன். அன்று அவரிடம் இது குறித்து கேட்டேன். ஏழைப்பெண்கள் பால் கவர்கள் அடுக்கிக் கொண்டிருந்தார்கள் என்று எழுதியிருக்கலாமே. எதற்கு விதவைகள் என்ற வார்த்தை? விதவைகள் எல்லோரும் பால் கவரா போட்டுக்கொண்டிருக்கிறார்கள்? இந்திராகாந்தி நாட்டையே ஆளவில்லையா என்று கேட்டேன். அவர் ஒரு வினாடி திகைத்தார்.

சாரி சார் உங்களைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் எனக்கில்லை. என்மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன். என் உறவினர் ஒருவரின் மூத்த மகள் காதல் திருமணம் செய்தவள் வேற்று சாதிக்காரரை. அடுத்த பெண்ணுக்கு ஒரே சாதியில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. சுமங்கலி பூஜைக்கு மூத்த பெண்ணுக்கு அனுமதியில்லை. வேற்று சாதிக்காரனைத் திருமணம் செய்து கொண்டவள் ஆயிற்றே.

அந்த சுமங்கலி பூஜையில் மனையில் அமர்ந்த ஒரு பெண்மணியின் புருஷன் மொடாக்குடியன். ஸ்திரீலோலன். அனாலும் அவளுக்கு சுமங்கலி மரியாதை கிடைத்தது. மனம் நிறைய அன்பிருந்தாலும் இவளுக்கு அனுமதியில்லை. அத்தனை சுமங்கலிகள் சேர்ந்து பூஜை செய்தும் இன்று அந்த தங்கை கணவனை இழந்து விட்டாள் என்பதுதான் வேதனையின் உச்சம்.

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் இனியாவது இந்த அபத்தத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனித்தன்மையும் ஒளியும் இருக்கிறது. புருஷனின் மரணம் காரணமாக ஒரு போதும் அது குறைந்து போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக பெண்கள்தான் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.