Wednesday, December 23, 2015

பாரம்பரியத்தை  நோக்கி.....

என்  பதின்ம  வயதில் வீட்டில் குமுட்டி அடுப்பில்தான்  சமையல். ரெண்டு   குமுட்டி  அடுப்பிருக்கும்.  ஒன்றில்  பாலை வைத்து  விட்டு  மற்றொன்றில்  பருப்பை  வேகப்போடுவாள் அம்மா.  காப்பி  சமாச்சாரங்கள்  முடிந்ததும், பாலை  இறக்கி  விட்டு,  இன்னும் கொஞ்சம்  கரியை   அள்ளிப்  போட்டு,  ஊது  குழலால்  ஊதி   எரிய விட்டு, வெங்கலப்  பானையில்  அரிசிக்கு   தண்ணீர்  விட்டு அந்த  குமுட்டியில்  வைத்து  அது  கொதித்ததும்  அரிசி  களைந்து  அதில்  போட்டு   தட்டால் பானையை   மூடி  வைப்பாள்.  முக்கால்  பதம்  வெந்ததும்  வெண்கலப் பானையை  இறக்கி  விடுவாள்.  அந்த  பானை சூட்டிலேயே  முக்காப் பதம் முழுதுமாய் நன்கு  வெந்து  விடும்.  அடுத்து இரும்புக்   கடாயில்  சாம்பார்  தயாரானதும்  அதை  எடுத்து  வெண்கல  உருளிக்கு  மாற்றி  விட்டு  அதே இரும்பு  வாணலியில் கோஸ் கறியோ,  உருளைக்கிழங்கு  ரோஸ்ட்டோ  ரெடியாகும்.   ஈயச்சொம்பில்  மணக்க  மணக்க  ரசமும்  ஒரு அ டுப்பில் கொதிக்கும். கச்சட்டி எனப்படும் மாக்கல் சட்டியில்  கீரை  மசியலோ   மிளகூட்டலோ  பண்ணுவாள்.   சாப்பிடும்  போது  அந்த  வெண்கலப்  பானை  சாதமும்,  அதன்  மீது  வீட்டில்  தயிர்  கடைந்து  எடுத்த  வெண்ணையில்  காய்ச்சின  பசு  நெய்யும், இரும்பு சத்து  கலந்த சாம்பாரும்,  இரும்புக்  கடாயில்   வதக்கிய காய் கறியும்  எட்டு  ஊருக்கு  மணக்க  இன்னும்  கொஞ்சம்  சாப்பிடேன்  என்று  நாக்கு  கெஞ்சக்  கெஞ்ச  சாப்பிட்ட  காலம் அது.

 நல்லெண்ணெய்  தேய்த்து  வீட்டில்  ஸ்பெஷலாக  அரைத்து வைத்திருக்கும்  சீயக்காயும்  உடம்புக்கு   வாசனைப்  பொடியும்  தேய்த்து  குளித்து  விட்டு  வந்தோமானால்   குமுட்டி  அடுப்புத்  தணல்  ஒரு  இரும்புக்  கரண்டியில்  ரெடியாக  இருக்கும்.  அதில்  ஒரு  கை மட்டிப்பால்    சாம்பிராணியை  போட்டு  அதன்  மீது  ஒரு மூங்கில்  கூடையை  கவிழ்த்து  எங்கள்  அத்தையோ  அல்லது  பெரியம்மாவோ  எங்களை அந்தக்  கூடை மீது  லேசாய் சாய்த்து  எங்கள்   தலைமுடியை  விரித்து  நீவி விட்டு  கேசம்  முழுவதும்  மணக்க  மணக்க  சாம்பிராணி புகையைப்  படர விட அந்த  சுகத்தில் தூங்கியே  போகும்  என்னை  புகையடங்கியதும்  எழுப்பி  விடுவார்கள். எங்கள் வீட்டில்  எல்லோருக்குமே  நீளமான  அடர்த்தியான  கூந்தல்தான்.  இப்படி  சுகமான  குளியலுக்குப்  பிறகு  மேற்படி  சமையலையும்   சாப்பிட்டோமானால்  அதற்குப்  பிறகு  உண்டமயக்கம் வரும் என்றாலும், மதியத்  தூக்கத்திற்கு  அனுமதியில்லை  அப்போதெல்லாம்.    "சாப்ட்டாச்சோன்னோ .....போ  போய்  இட்லிக்கு  ஊறப்  போட்ருக்கு பார்  அதை  வெண்ணையா   அரைச்சுத்  தருவயாம்"  என்று  ஆட்டுக்  கல்லின்  முன்  உட்கார  வைத்து  விடுவாள்  அம்மா.  இட்லிக்கு  அரைக்கும் பணி   இரண்டு நாளைக்கொரு  முறை எங்களில் ஒருவருக்கு  முறைப்பணி  மாதிரி  வந்து   விடும்.  முற்றத்தை  ஒட்டியுள்ள  வராண்டாவில்  ஆட்டுக்கல்  போட்டிருக்கும்.  உளுந்து  வாகிற்கு   மாவு  வெண்ணை  மாதிரிதான்  அரையும். உண்டதெல்லாம்  அந்த மாவாட்டலில்  ஜீரணித்து  விடும்.  ஊளைச்சதையாவது  மண்ணாவது!

ஆட்டுக்கல்லில்  அரைத்த மாவில்  செய்யப்பட்ட  இட்லியின்  சுவைக்கு  இன்றைய  இட்டிலிகள்  எல்லாம்  கால்   தூசி  பெறுமோ?   சட்னியும்,  ஆட்டுக்கல்லில் அரைத்ததுதான்.  அதன்  வாசனையே  தனி.  அரைத்து  விட்ட  சாம்பாரா   அதுவும்  அம்மியில்  அரைப்பதுதான்.  ஆக மொத்தம்  கரி அடுப்பு முதற்கொண்டு   அன்றைக்கு  உபயோகித்த  அத்தனை  பொருட்களுமே   ஆபத்தை  ஏற்படுத்தாத,  ஆரோக்கியத்திற்கு  உத்தரவாதமானதாக  இருந்தவையே. அதற்குப்பிறகு  கரியின்  இடத்தை  பறித்துக் கொண்டது  மண்ணெண்ணெய்.  அதன்  இடத்தையும்  காஸ் அடுப்பு  ஆக்கிரமித்தது..

ஸ்டவ்  வெடித்தது,  காஸ் சிலிண்டர்  வெடித்தது  என்பதெல்லாம்  குமுட்டி அடுப்பு  வழக்கொழிந்து போன  பின்  வந்த  செய்திகள் .  அன்றைய நல்லவைகள்  எல்லாம்  நாகரிகம்  என்ற  போர்வையில் நம்மால்  மெல்ல  மெல்ல  புறக்கணிக்கப்பட,   நமக்கே  தெரியாத  பல  நோய்கள்  நம்மைத் தொற்றிக் கொள்ள  சுற்றி  சுற்றி  வருகின்றன.  இரும்புக்  கடாயுடன்   நாம் இழந்தது அதிலிருந்து  கிடைத்த  இரும்புச்  சத்தையும்தான்.  மிக்ஸி   கிரைண்டர்  என்ற   விஷயங்கள்  நம்  உடலுழைப்பை  நிறுத்தி  ஒபிசிடிக்கு  தள்ளி  விட்டன.  இன்டாலியம், நான் ஸ்டிக்பாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர்   என்ற   அல்ட்ரா மாடர்ன்  சமாச்சாரம்   எல்லாம்  நம் வேலையை சுலபமாக்கலாம். நேரத்தை  மிச்சப்படுத்தலாம்.   ஆனால் அது  உடல்  நலத்திற்கு  எந்த  அளவுக்கு  நல்லது  என்ற  கேள்வி  எழுகிறது.

குமுட்டி  அடுப்பைத்தவிர  மற்ற  விஷயங்களை  எல்லாம்  வித்யாவும்   அவள் சின்ன  வயதில்  அனுபவித்திருக்கிறாள்.   அந்த  ஞாபகங்களின்  சுவையில்  அவளுக்கு இன்றைக்கு  அவள்  உபயோகித்து  வரும்  அல்ட்ரா  மாடர்ன்  சமையல்  பாத்திரங்களின்  மீது  சலிப்பு  ஏற்பட,  மீண்டும்  பாரம்பரியத்திற்கே செல்ல  விரும்பினாள்.  இந்த  நாலு   நாளில்  மயிலை,  தி.நகர்   என்று  அலைந்தோம். இரும்பு ஐட்டங்களில்   தோசைக்கல்  தவிர  வேறெதுவும்  இங்கு  கிடைக்கவில்லை.  என்னடா  இரும்பு  இப்படி  அரிதான  பொருளாகி  விட்டதா  என்று  விக்கிரமாதித்தன்  கணக்கில்  விடாமுயற்சியோடு  இன்று  பாரீஸ்  கார்னரில்  கந்த  கோட்டம்  அருகே சென்றால்.........யப்பா    அங்கே   அத்தனை  வகையறாக்களும்  கொட்டிக் கிடக்கின்றன.  வார்ப்பிரும்பில்  தோசைக்கல்,  வாணலி   முதல், அப்பக் காரல்,  ஆப்பச்சட்டி,  என்று  அனைத்தும்  கிடைத்தது.  பிளாஸ்டிக்  பிளேட்டுகளை  இனி  எதற்கும்  உபயோகிப்பதில்லை  என்று  தீர்மானித்தாயிற்று.

 எத்தனை  தேடியும்  சென்னையில்  எங்கும்  மாக்கல்   சட்டி  மட்டும் கிடைக்கவேயில்லை.  பாலக்காட்டில்  பார்த்திருக்கிறேன்.  அடுத்த முறைபோகும்போது  வாங்கி விட  வேண்டியதுதான்.   அடுத்தாற்போல்  சின்னதாக  ஆட்டுக்கல்   ஒன்றும்  வாங்கி  விட்டால்  வேலை  முடிந்தது.  சென்னை  மழையில்  ஒரு  வாரம்  மின்சாரம்  இல்லாத  நிலையில்  ஆட்டுக்கல்லின்  அவசியம்  புரிந்தது.  வல்லபா  வேறு கரண்ட் இல்லாமல்  ஆட்டுக்கல்லும்  இல்லாமல், கிரைண்டரில்  கையால்  இட்லிக்கு  மாவரைத்து  மறுநாள்  அதில்  சட்டினியும்  கையால்  ஜிம்  ஜிக்  என்று  அரைத்த  கதையைப்  படித்ததும்   ஆட்டுக்கல்  மீது  காதல்  அதிகரித்து விட்டது  வித்யாவுக்கு.

பேத்தி  சான்விக்கு  ரபுன்சல் மாதிரி  நீ..........ள   கூந்தல்வேண்டும்  என்ற ஆசை.  எனவே  மீண்டும்,  நல்லெண்ணைக்   குளியல்,  சீயக்காய்,  என்பது  அடுத்த தீர்மானம்.  நான்  அன்றும்  இன்றும்  வாசனைப்  பொடியை  மாட்டும் விடவில்லை. இபோதும்  டப்பா   செட்டிக் கடையில்  வாசனைப்  பொடிக்கான சாமான்கள்  வாங்கி,  பூஜைக்கு  உபயோகித்த  ரோஜா,  மரு , தவனம், துளசி,  என்று  எல்லாவற்றையும்காய வைத்து அதனோடு  சேர்த்து  அரைத்து அந்தப் பொடியைத்தான்  குளிப்பதற்கு  உபயோகிக்கிறேன்.  அந்தப்  பொடியில் குளிப்பாட்டி விட்டால்  சான்வியின்  முகம் மலரும்.  சூப்பர்  வாசனை  என்று  நாசியை  இழுத்து  சுவாசிக்கும்.

இந்த  விளம்பர  யுகம்  நமது  நல்ல  விஷயங்களை  எல்லாம்  மெல்ல  மெல்ல  பறித்துக்  கொண்டு  வருகிறது.  அதன் மாயையில் நாமும் மயங்கித்தான் போகிறோம். நாம்  ஆரோக்கியம்  தரும் பழக்க  வழக்கங்களை  விட்டு  மொத்தமாக விலகி வருவதால்  இந்த அவசர  உலகத்தில்  அவசரமாகவே  மரணமும்  வந்து  சேருகிறது   ஆனால்  வேகம்  குறைத்து  கொஞ்சம் நிதானமாக  யோசித்துப்   பார்த்தால்   அன்றைய  வாழ்க்கை  முறையின்  அருமை நமக்குப்  புரியும்.   நம்முன்னோர்களின்  அறிவுஜீவித்தனம்  விளங்கும்.  மீண்டும்  அவற்றை  வெளிக்கொணர்வது  அவசியம்  என்பதும்  புரியும்.  ஜிம்மிற்கு  செலவழிக்கும்  காசை,  நம் வீட்டு  சமையலறையில்  உடலுழைப்பாக   செலவழிப்பதன்  மூலம்  மிச்சப்படுத்தலாம்.  தவிரமின்சாரக் கட்டணமும் கணிசமாய்க் குறையும். சமீபத்தில்  ஒரு  விளம்பரம்  பார்த்தேன்,  உங்கள் பழைய  இரும்பு  வாணலிகள்,  பாத்திரங்களைக்  கொடுத்து  விட்டு  புதிதைப்  பெற்றுச்  செல்லுங்கள்  என்று  புதியவை  லிஸ்ட்டில் நான் ஸ்டிக் வகையறாக்களின்  படம் போட்டிருந்தார்கள்.   நாங்கள்  அந்த  புதிய வகையறாக்களை  கொடுத்து  விட்டு  பழைய  வகையறாக்களைத்  தேடித்  தேடி  வாங்கி  வந்தோம்.  

கந்தகோட்டம்  பக்கம்  போகிறவர்களுக்கு  ஒரு ஆலோசனை.  கனம் தாங்கும்   நல்லதொரு கட்டைப் பையும் ஒன்றோ இரண்டோ  எடுத்துச்  செல்லுங்கள்.. வார்ப்பிரும்பு  பொருட்களை  உபயோகிப்பதற்கு  முன்  எப்படி  அவற்றைத் தயார் படுத்த வேண்டுமென்பதையும் கடைக்காரர்களே   அழகாகச்  சொல்லிக் கொடுக்கிறார்கள்.  

பொதுவாக  வாழ்வில்  முன்னேறுவது  நல்லது  என்பார்கள்   ஆனால்  ஆரோக்கிய விஷயத்தில் மட்டும்   கொஞ்சம்   பின்னோக்கிச்  பழைமையை தேடிச் செல்வதுதான்   நல்லது  என்ற  வித்யாவின்  முடிவில்  எனக்கும்  சந்தோஷம்தான்.

Monday, November 30, 2015

தாரமா டாலியா - நாடகம்

மீண்டும்  ஒரு   நாடகம்.   தாரமா  டாலியா.   ஃபாத்திமா   பாபு அவர்கள் இயக்கி  நடித்த  நாடகம்.   நானும்   வல்லபாவும்   ஞாயிற்றுக்  கிழமை போவதென முடிவு  செய்திருந்தோம்.   மாலை   சரியாய்   ஐந்து   மணிக்கு   மழை   துவங்கியது.   மழை   வலுக்குமோ   என்று  கவலையும்  ஏற்பட்டது.   போகலாமா   வேண்டாமா  என்று  இங்கி பிங்கி  பாங்கி   போடுவதற்குள்   மழை  நிற்க  போயே    தீருவதென  தீர்மானித்தோம்.   சி.பி.ராமசாமி  ரோடிலிருந்து  நடக்கிற  தூரம்தான்  என்றாலும், லேசாய்   மழை   தூறிக்  கொண்டிருந்ததால் ஹரிகிச்சு  எங்களை  சமத்தாக  காரில்  கொண்டு  வந்து  இறக்கி  விட்டான். ஆறேகாலுக்கே  போயாகி  விட்டது.   அரங்கிற்கு   வெளியில்  இருபது   ரூபாய்க்கு   சுமாரான  டீ  ஒன்றைக்  குடித்து   விட்டுக்   காத்திருந்தோம்.  

குரு வணக்கத்திற்குப்  பின் சரியாய்   ஆறு ஐம்பதிற்கு  திரை  உயர,   அழகான ஒரு  வீட்டின்  பெரிய   கூடம்.   இடப்பக்க ஓரமாய்   விளக்குகள்  ஏற்றப்பட்ட   கண்ணைக்கவரும்   பூஜையறை.   வலப்பக்கம்,   ஆஹா   என்று  வியக்க வைத்த   ஒரு  நிஜ   ஊஞ்சல். (என்  வீட்டிலும்  ஊஞ்சல்  இருந்தது. அது பற்றி பிறகு   எழுதுகிறேன்)

முதல்   காட்சியின்  முதல்   வசனத்தில்   ஆரம்பித்த   கலகலப்பு  இறுதிக் காட்சி   வரை   வஞ்சனையின்றி  நிறைந்திருந்தது.  எல்லா  பிரச்சனைகளையும்   மறந்து  ரெண்டு  மணி  நேரம்  ஒவ்வொரு   வசனத்திற்கும்   கைதட்டி   வாய்  விட்டு   சிரிக்க   வைத்து   மனதை   லேசாக்கி  அனுப்புவது  கூட   ஒரு   வகை  வைத்தியம்தான்.   அதை  பக்காவாக   செய்திருக்கிறார்   ஃ பாத்திமா   பாபு. 


நாடகத்தில்   நகைச்சுவை  என்பது  துணுக்குத்  தோரணமாக   இல்லாதிருப்பதற்கு  தனியாக ஒரு  முறை  கை  தட்டலாம்.  கதைக்கேற்ற   வசனங்கள், அந்த  ஸ்டோரி லைனிற்குள்ளேய  நகைச்சுவை மிளிர  சுற்றி  வந்ததற்கு,   சித்ராலயா  ஸ்ரீராம்க்கு  ஒரு  ஓ  போடலாம்.  

வேலைக்காரி   மல்லிகாவின்   ஃபேஸ்புக்  புரொபைல்  மற்றும்   ஸ்டேட்டஸ் என்று   ஆரம்பமே  கல  கல.   ஃபாத்திமா   என்ன   அழகு!  ஐயங்கார்  பாஷை அட்டகாசம்.   போறாததற்கு  மெட்ராஸ்   பாஷையும்  வெளுத்துக்  கட்டுகிறார்.  நடித்தவர்கள்   அத்தனை பேருமே தன்  பாத்திரத்தை  வெளுத்து   வாங்கியிருப்பதற்கு   ஒரு  சபாஷ்.  

ஒரு  காட்சி  முடிந்து  மேடை  இருளாகி   அடுத்த  காட்சிக்கு  செல்லும்   வரை  அந்த பூஜையறையும்   விளக்குகளும்  மட்டும்  இருளில்  ஒளிர்ந்து  கொண்டிருப்பது   கொள்ளையழகு. 

கஜினி  பாட்டியும்   நேரு  மாமாவும்  வயிறு  வலிக்க   வைத்து  விட்டார்கள். அந்த  ஒல்லி  உடம்பை  வைத்துக்  கொண்டு  அந்த  நேரு  மாமா  பண்ணும்   அலப்பறை  அட்டகாசம். 

பட்டிமன்ற   பார்த்தாவின்  நடிப்பு   தனி  முத்திரை.   இறுதி  காட்சியில்  அவர் தொபுகடீரென்று  மாட்டுப்  பெண்ணை   சாஷ்டாங்க   நமஸ்காரம்  செய்து   ஒரு  கணம்  நம்மை திகைக்க  வைத்தாலும்,  லேசாய்   கண்ணில்   ஈரம் படர்கிறது.   அனிருத்   சி.ஏ  பாஸ்   செய்த  போ து   நாமே   பாஸ்   செய்து  விட்ட  மகிழ்ச்சி.  அதே  நேரம்  அந்த  சீனில்   பார்த்தாவுக்கும்   ராதாவுக்கும்   மட்டுமல்ல,  நமக்குமே  சவாலில்  அவர்கள்   தோற்று  விட்டது   மறந்து போகிறது. 

"டிவி  சீரியல்கள்  எல்லாமே   அழுது வடியறது.   அழுது  வடியாத  நிகழ்ச்சி செய்தி  ஒன்றுதான்", 

"கஜினி  பாட்டிக்கு  எப்டி  போன எபிசோடு  கதை  நினைவுல  இருக்கும்?"  

"அது  நமக்கே   எங்க  நினைவுல  இருக்கு?"

இப்படி  நிறைய   டிவி  கலாட்டா. 

நாடகம்  முழுவதுமே எங்கள்  பின்   வரிசைகளிலிருந்து  சிரிப்பு  சத்தமும்,  கை தட்டும்   ஓசையும்   கேட்டுக்  கொண்டே  இருந்தது.  அந்த  அளவுக்கு   ரசித்தார்கள்.  

  
சின்ன   கதைதான்,   அதில்   ஒரு  நல்ல  மெசேஜ்,  ஒரு  சில   சந்தேகங்கள்  நடு நடுவே   எழுந்தாலும்.  இரண்டு  மணி  நேர  நகைச்சுவை   நாடகத்தில்  அதை  பெரிதாக  நினைக்கத்  தோன்றவில்லை.  நாடகத்தின்  முடிவில்  இந்த  நாடகம்  பிடித்திருக்கிறதா  நூறு   ஷோ  போகுமா  என்றார்.  நிச்சயம்  போகும்.  மழை,  காய்கறி  விலையேற்றம்,   உச்சாணியில்  உட்கார்ந்திருக்கும் துவரம்  பருப்பு,  மழையில்  பல்லை இளிக்கும்   சாலைகள்,   மோசமான  டிராஃபிக்  என்று  பல்வேறு  மன  அழுத்தத்திலும்  எரிச்சலிலும்  இருக்கும்  மக்கள்   ரெண்டு  மணிநேரம்  எல்லாவற்றையும்  மறந்து  சிரிக்க  இது  ஒரு  ஸ்ட்ரெஸ்  பஸ்டர்  நாடகம்தான்.   சந்தேகமேயில்லை. 


மொத்தத்தில்  மழை நேர  மாலையை  இனிதாக்கியதற்கு   ஃ பாத்திமா  பாபுவுக்கு  ஒரு  ஸ்பெஷல்  தேங்க்ஸ். 

Tuesday, October 6, 2015

பார்வைகள் கோணங்கள்

லெக்கின்ஸ்  பற்றிய பல ஆண்களுடைய பதிவுகளைப் பார்த்தேன்.  கிண்டல் கேலி,  ஆபாசம் என்கிற ரீதியில் பல் வேறு கருத்துக்கள்.  ஒரு பெண்ணை அவளறியாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்களும்  அதில் போடப்பட்டிருந்தன. ஒரு பத்திரிகைதான் புத்தி  கெட்டு இதைப்பற்றி எழுதியதென்றால், முகநூலில்  எத்தனையோ பெண்களைத்  தன்  நட்புப் பட்டியலில் வைத்திருக்கும் ஆண்களும் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து ஏதோ தாங்கள்தான் ஒழுக்கத்தின் காவலர்கள் போல  லெக்கின்ஸ்  அணிவது ஆபாசம் என்கிற ரீதியில் பதிவுகள் போடுவதும், அதில் சில ஆண்கள் வந்து கமெண்ட் என்கிற பெயரில் கிண்டலும் கேலியும் செய்வதும்,  நீங்கள் ஆபாசம் என்று சொல்லும் லெக்கின்சை  விட ஆபாசமாயிருக்கிறது என்பதே நிஜம்.  இது சரி இது தவறு  என்று  எதையும் சொல்லிவிடமுடியாது.  சரி தவறு என்பதெல்லாம்  நம் பார்வைகளின் கோணம்தான்.

மனிதன் ஆதி காலத்தில் ஆடையின்றிதான் உலவினான்.  உண்ணுதல், உறங்குதலோடு வெறும் இனப்பெருக்கம் மட்டுமே அப்போது நடந்திருக்கிறது. அப்போது கூட  அவன் கண்களில் இத்தனை ஆபாசம் இருந்திருக்காது.  பின்னர் இலைகளையும் தழைகளையும் ஆடையாக அணிந்தான்.  மெல்ல மெல்ல அனைத்து அறிவும் பெற்றான். முனிவர்கள்  மரவுரி தரித்திருந்தார்கள்.  ராமாயணத்தில் வனவாசம் கிளம்பும் ராமன் மரவுரி தரித்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து  ஆடைகளின் வடிவமைப்பும் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் ராணிகளின் உடை கூட இரு கால்களையும் தனித்தனியே இறுக்கமாக காட்டும் அலங்கார உடைதான். மேலே வெறும்  மார்க்கச்சை மட்டுமே அணிந்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஆபாசம் என்று அப்போதும் சரி இப்போதும் சரி யாரும் முழக்கமிடல்லை.  அதை ஒரு கால கட்டத்தின் நாகரிகமாகவே பார்கிறோம். 

கோவில் சிற்பங்களில் காமக் காட்சிகளை செதுக்கியதை அந்த காலக் கட்டத்தில் யாரும் எதிர்த்தாற்போல் தெரியவில்லை.  கலையாகப் பார்த்தால் கலை. காமக் கண் கொண்டோருக்கு கற்தூணுக்கு புடவை கட்டினால் கூட ஆபாசமாய்த்தான் காணத் தோன்றும்.  நாகரிகம் வளர்ந்த பிறகுதான்  பார்வைகளில் ஆபாசமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  எந்தப் பெண்ணும்  ஒரு ஆணை ஆபாசமாக புகைப்படம்  எடுத்து  இங்கு பகிர்வதில்லை. சாலையோரம்  இயற்கைக் கடன் கழிக்கும்  எத்தனையோ நவநாகரிக ஆண்கள்  இன்றும்  உண்டு. அவர்களை எந்தப் பெண்ணாவது மறைந்திருந்து புகைப்படம் எடுத்து  முகநூலில்  பகிர்ந்திருப்பதை  சுட்டிக் காட்ட முடியுமா?


ஆண்கள்  உடை மாற்றும் போது  ரகசிய கேமரா மூலம் பார்க்கும் பெண்கள் எவரும் இல்லை. ஆனால் பெண்கள் உடை மாற்றும் அறையில்தான் அதிகம் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றால் இது பெண்ணின் தவறா அல்லது ஆணின் வக்கிரத்தனத்தை காசாக்குவதற்காக வைக்கப்பட்டதா?  மனதைத்தொட்டு சிந்தியுங்கள்.  நீங்கள் ரகசியமாய் அவள் அங்கங்களைப் பார்ப்பீர்கள். பொதுவெளியில் அவள் லெக்கின்ஸ் அணிந்து தொடை வடிவம் தெரிய வந்தால்  ஆபாசம் என்பீர்களா?

மொபைல் கேமரா கொண்டு பெண் அறியாது பெண்ணை பல நிலைகளில் புகைப்படம் எடுக்கும் வக்கிர ஆண்கள் பெருகி விட்ட நிலையில், அதைப்பற்றி எந்த ஆணும் குமுறி வெடித்து, அவனை கண்டித்து இங்கே எதுவும் எழுதுவதில்லை. ஆனால் ஒரு பெண் உடல் நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்து சென்றதை அவளறியாது ஆபாசமாய் படம் எடுத்து  போட்டு அவள்  ஏதோ உலகமகா குற்றம் புரிந்து விட்டது போல் ஆளாளுக்கு கருத்து சொல்லிக் கொண்டிருப்பது என்ன வகையான நாகரிகம் என்று புரியவில்லை.  உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் செல்வதுதானே?  நன்றாக ரசிக்க வேண்டியது  பிறகு ஐயோ ஆபாசம்  என்று  சாட வேண்டியது.  நம் திரைப்படங்களில் இல்லாத ஆபாசமா?  அவற்றைப் பார்க்காமலா இருக்கிறார்கள் ஆண்கள்.  நீங்கள் ரசிக்க ரசிக்கத்தானே நடிகைகளின் ஆடை குறைந்து கொண்டே போகிறது. ஆபாசம் எனக் கூறி நீங்கள் அத்திரைப்படங்களைக் காண்பதைத் தவிர்த்து வந்தால்  நஷ்டம்  தாங்காது இனி இப்படி ஆடைக் குறைப்பு செய்தால் படம் ஓடாது என்று  ஆடைக் குறைப்பு காட்சிகளும் குறையுமா இல்லையா? 

சொல்லப் போனால் அந்தக் காலத்தில் நடிகைகள் டைட்  பேண்ட்  என்ற பெயரில் இறுக்கமான முக்கால் பேண்ட்  போட்டு மேலே ஒரு சின்ன ஸ்லீவ்லெஸ் ஜாகெட் அணிந்து நடித்திருக்கிறார்கள்.  இப்போதும் பழைய படங்களில் காணலாம். அட்லீஸ்ட் இன்று லெக்கின்ஸ் போடுபவர்கள் அதை மறைக்க முழங்கால் வரை டாப்ஸ் அணிகிறார்கள். அன்று அது கூட இல்லை. அவற்றை எல்லாம் ஆபாசம் எனக் கூறாதவர்கள்  இன்று முகநூலில் பெண்ணுக்கு ஆடை அணிய  சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஆண்களின் காமப் பசியின் அடையாளம்தான் சிவப்பு விளக்கு பகுதிகள் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன். எல்லோரும் ராமனாக இருந்தால் பெண்ணுக்கு ஏன் இந்த நிலை?   தன்னால் ராமனாக இருக்க முடியாதவர்கள்,  பெண்கள் மட்டும் கண்ணகியாய், சீதையாய், நளாயினியாய்,  கற்புக்கரசியாய் இருக்க வேண்டும் என  எதிர்பார்ப்பது   வேடிக்கை.

மொத்தத்தில் ஆபாசம் என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. உங்கள் தாயை கண்ணியமாகப் பார்க்கும் நீங்கள் இதர பெண்களையும் அப்படியே பாருங்களேன்.  சொல்லப் போனால் இன்றைய நாளில் அம்மாவும் பெண்ணும் அக்கா தங்கை போல்தான் தோற்றத்தில் தெரிகிறார்கள்.  இளமையாக இருப்பது அவரவர் விருப்பம்.  அம்மாவும் பெண்ணும் சேர்ந்தே லெக்கின்ஸ் வாங்கும் காலம் இது.  அவரவர் உடையை அவரவர் முடிவு செய்ய உரிமை இல்லையா?

தன்  தாயாரின் புடவை  காற்றில் நழுவும்  போது உடனே விழிகளைத் திருப்பிக் கொள்ளும்   எத்தனையோ ஆண்களை  நான்  பார்த்திருக்கிறேன்.  அதே போல் அந்தப் பெண் வண்டியில் செல்லும் பொது காற்றில்  டாப்ஸ் விலகியிருக்கலாம். விழிகளைத் திருப்பிக்கொண்டு செல்லாமல் அதை ரகசியமாய் படம் பிடித்து பொது இடத்தில் பகிரும் வக்கிரம் மிகுந்த ஆண்கள் உலவும்  இதே  பாரத கண்டத்தில்தான்  ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும்,  இன்னும் பல உத்தமர்களும் மகான்களும் உதித்திருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்தவிழைகிறேன்.  நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் பெயரை நினைவிலிருத்தி  பெண்களை கண்ணியமாகப் பார்த்தால் போதும்.

ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையும்  நான் இங்கு குறை சொல்லவில்லை. குற்றமுள்ளவருக்கு நிச்சயம் குறுகுறுக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். ஏனெனில் என் நட்பில் எத்தனையோ கண்ணியமான ஆண்கள் இருக்கிறார்கள்.  அவர்களுடைய நட்பில்  மிகுந்த பெருமிதம் அடைகிறேன் நான். 


Friday, August 28, 2015

வீடென்று எதனைச் சொல்வீர்?

வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே  கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ

எண்பதுகளில் படித்த மாலனின் இந்தக் கவிதை மார்க்கண்டேயனைப் போல் மரணமற்றது. அன்றைய என் வீட்டுக்கும் அது பொருத்தமாகவே இருந்ததால் எனக்குள்ளும் இக்கவிதை இன்னும் மரணமற்று மறக்கப்படாது இருக்கிறது. வீடென்பது வெறும் செங்கல்லும், சிமெண்ட்டும் மணலும் மட்டும் கலந்ததல்ல. அதனுள் வாழ்வது வெறும் வைக்கோல் பொம்மைகள் அல்ல. உயிருள்ள, உணர்வுகள் உள்ள மனிதர்கள். அவர்களின் அன்பும், பாசமும், சிநேகமும், தியாகமும், நல்லுணர்வுகளும் கலந்ததுதான் வீடு..

இப்போது நான் இருக்கும் வீட்டிற்கு மிகப் பெரிய சரித்திரம் உண்டு. மயிலையின் பஜார் வீதியில் மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஒரு கோவில் வீட்டில்தான் அப்பா குடியிருந்தார். அதே வீட்டின் இன்னொரு போர்ஷனில் சின்னத்தை குடும்பம் இருந்தது. ஒரு தெரு திரும்பினால் என் பெரிய அத்தை குடியிருந்த, (நான் இப்போதும் இருக்கும்) இந்த வீடு இருந்தது. பெரியத்தைக்கு நாராயண்ணா மட்டும்தான் ஒரே பிள்ளை. சின்னத்தை நாலு பெண்கள் கடைசியாக ஒரு பிள்ளை என்று ஐந்து பேரைப் பெற்றுக் களைத்து திடீரென்று உயிரை விட, அந்த ஐந்து போரையும் அப்பாவும், பெரியத்தையும்தான் பொறுப்பெடுத்துக் கொண்டு வளர்த்தார்கள். எங்கள் வீட்டிலும் நாங்கள் ஐந்து பேர்.

ஆரம்பத்தில் அப்பா உட்லாண்ட்ஸ் ஹோட்டலில்தான் தலைமை சமையலராக இருந்தார். அந்த அளவுக்கு அங்கு அவருக்கு மரியாதை உண்டு. பிறகு சொந்தமாய் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சற்றே பெரிய வீடாகத் தேடினார். பெரியத்தை குடியிருந்த வீட்டில் ஒரு பெரிய போர்ஷன் காலியாக அங்கே குடி பெயரத் தீர்மானித்தாலும் அப்பாவுக்கு பயமிருந்தது. கோயில் வீட்டில் பத்து ரூபாய் வாடகை மட்டுமே கொடுத்தவருக்கு திடீரென்று நாற்பது ரூபாய் வாடகை கொடுக்க வேண்டுமென்பது சற்றே கவலையும் பயமும் ஏற்படுத்தியது. அத்தையும் அம்மாவும் தைரியம் கொடுக்க, 1960 ஆம் ஆண்டுதான் (அப்போது எனக்கு மூன்று வயது) இந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தார். அன்று இங்கே மின் வசதி கிடையாது.

மாடியில் வீட்டுக்கு உரிமையாளர்கள். கீழே இரண்டே இரண்டு போர்ஷன்கள். ஒன்று ஒரு ஒற்றை அறையும், சிறிய சமையலறையும் கொண்டது. மற்றது ஒரு அறை, பெரிய கூடம், கூடம் போன்றே பெரிய சமையலறை. இரட்டை விறகடுப்பும், புகை போக்கியும் கொண்டது. அத்தை வீட்டின் சிறிய சமையலறைக்கும் தனி புகை போக்கி இருக்கும். அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலுமே அநேகமாய் புகை போக்கி இருக்கும். நடுவில் பெரிய முற்றம். முற்றத்தை சுற்றிலு, ரேழிகள், பர்மா தேக்கில் உத்தரக் கட்டைகள், கருங்காலி தூண்கள் முட்டுக் கொடுக்க, கனத்த பர்மா தேக்கு கட்டைகள், முற்றத்திற்கு கிழக்கு பகுதியில் கார்ப்பொரேஷன் குழாய், அது ஒரு தொட்டி போன்ற அமைப்புக்குள் இருக்கும். இரண்டு படிகள் இறங்கிச்சென்றுதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதை அடுத்து தரையில் பதிக்கப்பட்ட பெரிய ஆட்டுக்கல். முற்றத்தின் தென் கிழக்கு ஓரத்தில் ஆண்டிற்கு ஒரு முறை முழு வீட்டுக்கும் சுண்ணாம்பு அடிக்கிற காலத்தில் சுண்ணாம்பு கிளிஞ்சல்களை ஊற வைப்பதற்காகவே ஒரு தொட்டி இருக்கும். மற்ற நாட்களில் அதில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.



முற்றத்தின் தென் பகுதியில் மாடிக்கு செல்லும் படிகள். முற்றத்தின் வட கிழக்கில் என் அப்பா இருந்த போர்ஷனுக்கும் முற்றத்திற்கும் நடுவில் பின் பக்கமாக கொல்லைப்புறம். அதன் ஒரு பக்கம், குளியலறையும், மறு கோடி ஈசான்ய மூலையில் மேற் கூரையற்ற கழிப்பறையும் இருக்கும். குளியலறைக்கு மட்டும் தகரத்தில் மேற் கூரை போட்டிருக்கும். ஆனால் கதவு கிடையாது. இரண்டிற்கும் நடுவே பெரிதாய் துவைக்கும் கல் உண்டு. பின் பக்கம் முழுவதுமே வானம் பார்த்ததுதான். இரவில் பின் பக்கம் செல்வதற்கான ஒரு சிறிய மரக்கதவை மூடி தாள் போட்டு விடுவார்கள். வீட்டுக்குச் சொந்தக்காரர் மிக மிக நல்லவர். கண்ணியமானவர். எங்களுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். எங்கள் சொந்த வீடு போல்தான் நாங்கள் இருந்தோம்.இந்த வீட்டில்தான் நாங்கள் ஐந்து பேர் வளர்ந்தோம், படித்தோம், எங்கள் ஐநது பேரின் திருமணம் நடந்தது. இங்கேதான் என் அப்பாவின் அறுபதாம் கல்யாணம் கோலாகலமாய் நடந்தது. இந்த வீட்டில்தான் என் இரண்டு பெண்களும் பிறந்தார்கள். இந்த வீட்டில்தான் என் அப்பா செத்துப் போனார். என் கணவரை இழந்தேன். இங்குதான் என் ரெண்டு பெண்கள் வளர்ந்தார்கள். படித்தார்கள். இங்கிருந்துதான் அவர்கள் திருமணமாகி சென்றார்கள். என் பேரக் குழந்தைகள் வந்து விளையாடி விட்டுப் போகிறார்கள். நான்கு தலைமுறைகளைக் கண்ட வீடு இது. எத்தனையோ பிரபலங்கள் என் அப்பாவிடம் பட்சணங்கள் வாங்க வந்து சென்ற வீடு. பல எழுத்தாள நண்பர்கள் வந்து சென்ற வீடு. அற்புதமான பல நல்ல சிநேகிதங்கள் இன்றும் வந்து சென்று கொண்டிருக்கும் வீடு.





.

ஒரு வீடு என்பது தன் முன்னே பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும், சந்தோஷம், துக்கம், திறமைகள் என பலப்பல கதைகளையும், மௌனமாய் கண்டு கொண்டிருக்கும், வாயில்லா ஜீவன் என்றுதான் சொல்ல வேண்டும்.
எனக்கு நினைவு தெரிந்த பிறகு ஒரு முறை நான் அத்தையிடம் கேட்டேன். நீ எப்போ இந்த வீட்டுக்கு வந்த என்று. அத்தை, "நா இங்க வரும் போது உனக்கு ஒரு ஒரு வயசு இருக்கும்" என்றாள். "உனக்கு முன்னால இங்க யார் இருந்தா?" இது என் அடுத்த கேள்வி. யாரோ படம் வரையறவர் இருந்தாராம். அவரால வாடகை கொடுக்க முடியலைன்னு காலி பண்ண சொல்லிட்டாளாம். ஆனா அவா காலி பண்ணினப்பறம் வீட்டுக்காராளே இந்த இடத்தை உபயோகப்படுத்திண்டு இருந்தா. அதுக்கப்பறம் நா இங்க வந்தேன் என்றாள். ஓஹோ அப்டியா என்று கேட்டுக் கொண்டேன்.



நாராயண்ணா ஒரு அற்புதமான ஓவியர், கோட்டு சித்திரமானாலும் சரி, வர்ணப்படமாக இருந்தாலும் சரி அது உயிரோட்டமாய் இருக்கும். அண்ணாவால்தான் எனக்கு படம் வரையும் ஆசை ஏற்பட்டது எனலாம். ஒரு முறை அண்ணாவிடம் கேட்டேன். இதுக்கு முன்னால இங்க இருந்தவா கூட படம் வரையவராமே உனக்குத் தெரியுமா என்றேன். தெரியுமே. ஆனா பழக்கமெல்லாம் கிடையாது. விகடன்ல எல்லாம் வரைவார் என்று சொன்னார். அப்போது நானும் சின்ன பெண் என்பதால் அதற்கு மேல் அது யார் என்ன பேர் அவருக்கு எனத் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏதும் ஏற்படவில்லை.



இம்முறை மடிப்பாக்கத்திற்கு அம்மா வீட்டுக்கு சென்ற போது இத்தனை ஆண்டுகள் கழித்து,எங்கள் வீடு பற்றி பேச்சு வந்தது. அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் இருந்தது அது என எங்கள் வீட்டைப் பற்றிப் பேசியபடி பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தோம். அப்போது நான் என் அக்காவிடம், முன்பொரு முறை நாராயண்ணா என்னிடம் கூறியதைச சொல்லி, அந்தக்கால ஆனந்த விகடனில் படம் வரைந்து கொண்டிருந்தவர் நம் வீட்டில் குடி இருந்தாராம் அவரை உனக்குத் தெரியுமா என்றேன். அக்கா உடனே , "தெரியுமே அவர் யாருன்னு தெரியும். ஆனா பாத்ததில்ல. நம்மாத்துலேர்ந்து காலி பண்ணின ஒன்னு ரெண்டு வருஷத்துல அவர் செத்து போய்ட்டார்னு கேள்வி. நானுமே அப்போ சின்ன பொண்ணுதானே. அவர் பொண்ணு என் பிரெண்டோட பிரண்டு. அவாத்துக்கு கூட ஒரு முறை போயிருக்கேன் என்றாள். அவர் பேரென்ன என்று கேட்க, அதற்கு அவள் சொன்ன பெயரில் நான் சில வினாடிகள் சிலையாய் அமர்ந்திருந்தேன்.

"ராஜூன்னு பேர். கார்ட்டூன்லாம் போடுவாராம் விகடன்ல."

கார்டூனிஸ்ட் ராஜுவா? அந்த மாமனிதரா? அவர் குடியிருந்து கார்ட்டூன்கள் வரைந்த இடத்திலா இப்போது நான் இருக்கிறேன்? என்னால் நம்ப முடியவில்லை. இனம் புரியாத பெருமையும், கூடவே வாடகை கூட கொடுக்க முடியாமல் அவர் அன்று அவதிப்பட்டிருக்கிறார் என்ற உண்மை ஏற்படுத்திய சோகமும் ஒரு சேர என்னை அழுத்தியது. அதற்குப் பிறகு நான் வெகு நேரம் எதுவும் பேசாது மௌனமாகி விட்டேன். google ல் தேடியதில் கீழே உள்ள சிறிய விவரமும் அவர் வரைந்த சில நகைச்சுவைப் படங்களும் மட்டுமே கிடைத்தன. அவரது ஒரு புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை

//ராஜு( இயற்பெயர்: ஸ்ரீ நாராயணசாமி ) ‘மாலி’ கண்டெடுத்து ‘விகடனில் சேர்த்துக் கொண்ட ஒரு மாணிக்கம். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நகைச்சுவைச் சைத்திரிகர்களில் இவர் ஒருவர். 1953-இல் மிக இளம் வயதில் காலமாகி விட்டார்.//







ஒரு ஓவியர் இருந்த இடத்தில் பிறகு என் அத்தை குடியேறி, அதே இடத்தில் நாராயண்ணாவும் ஓவியத்தில் ஆர்வம் கொண்டு நிறைய வரைந்து, நாராயண்ணாவின் பாதிப்பால் நானும் ஓவியத்தில் ஆர்வம் கொண்டு ஏதோ வரையத்துவங்கி, அத்தை காலி செய்து போன பிறகு அந்த இடத்திற்கு நான் குடி வந்து, பிறகு, பத்தாண்டுகள் கழித்து, பாகப் பிரிவினை செய்யப்பட்ட வீட்டில் நூறு வருட பழமையான கஜலஷ்மி சிற்பம் செதுக்கிய முன்புற வாசலோடு, ஓவியர் ராஜுவும் அத்தையும் குடியிருந்த அந்த நானூற்றி சொச்சம் சதுர அடியை நான் வாங்கிக் கொள்ளும் சூழ் நிலை வந்து, இன்று வரை அந்த வீட்டில், என் அப்பா, அத்தை, நாராயண்ணா, மற்றும் அங்கு நடந்த சுவையான மகிழ்ச்சியான பலப்பல சம்பவங்கள், சில துக்கங்கள் என்று...மறக்க இயலாத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ..இதனால்தான் எனக்கு மாலனின் மேற்கண்ட கவிதை நினைவுக்கு வந்தது.




"வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு "

ஆம். என் வீடு எனக்கு வெறும் வீடு மட்டுமல்ல. அதற்கு ஒரு ஜீவன் உள்ளது. அது என் வளர்ச்சியை அணு அணுவாய் கண்டிருக்கிறது. என் மழலைப் பேச்சையும், இளமைக் குறும்பையும், பள்ளிப் பருவத்தையும், கல்லூரி காலங்களையும், கல்யாண கோலத்தையும், தாய்மைப் பேற்றையும் கண்டிருக்கிறது. என் சுக துக்கங்கள், சந்தோஷங்கள், கோபங்கள், குமுறல்கள், என் கண்ணீர், என அனைத்துக்கும் அது சாட்சி. என் முதல் கதையிலிருந்து சென்ற மாதம் தினமலருக்கு எழுதிய "துளசி" குறுந்தொடர் வரை இங்கு எழுதப்பட்டதுதான். என் ஓவியங்களை இதன் சுவர்கள்தான் முதலில் கண்டன. சந்தோஷமோ சங்கடமோ வெறும் தரையில் முகம் பதித்து படுத்தால் ஒரு தாயின் அரவணைப்பைத் தரும் எனக்கு இது.

அதனால்தான் நான் அதை முழுவதும் இடித்து கட்ட விரும்பாது, பழமையை மாற்றாது உள்ளது உள்ளபடியே இருக்கட்டும் என்று அதை புதுப்பித்து ரிப்பேர் மட்டும் செய்தேன். இன்னும் பர்மா தேக்கு மர உத்தரக் கட்டைகள் இருக்கின்றன. பல நல்லவர்கள் வாழ்ந்த வீடு இது என்பதால் இதை ஒரு கோயிலாகவும் எண்ணுகிறேன். . இங்கு வருபவர்களுக்கு நல்ல அதிர்வலை கிடைக்குமாறு சுத்தமும், அமைதியும், இனம் புரியாத நிம்மதியும் கிடைக்கச செய்கிறேன். என் வீட்டைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். இதுநாள் வரை, என் வீடு என்றால், என் வீட்டு பெரியவர்கள் மட்டும்தான் நினைவுக்கு வந்து போவார்கள். இனி மாமனிதர் ஓவியர் ராஜுவும் என் நினைவில் இருப்பார்.

இம்முறை மடிப்பாக்கத்திலிருந்து வந்ததும் என் வீட்டின் அந்த புகழ் பெற்ற அறையில் (இப்போது அது பூஜையறை) கண்ணீர் கசிய வெகு நேரம் மௌனமாய் அமர்ந்திருந்தேன். அந்த ஓவியர் வாழ்ந்த இடத்தில் இப்போது நான் வரைந்து மாட்டியிருக்கும் தெய்வீக ஓவியங்கள் எல்லாம் அவரது ஆன்மாவைக் குளிரச் செய்திருக்கும் என நம்புகிறேன்.


இப்படி ஒரு வீட்டில் என்னை இருக்கச்செய்த இறைவா ...
எத்தனை கோடி இன்பம் (எண்ணங்கள்) வைத்தாய் இங்கு .!!!.



Monday, August 3, 2015

பாலக்காடு அனுபவங்கள் - 1

இம்முறையும்  பாலக்காடு பயணம் எப்போதும் போல மனதுக்கு நிறைவாய் அமைந்தது. ஆகஸ்ட் ஒன்றாம்  தேதி போய்  இறங்கியதுமே குளித்து காப்பி குடித்து விட்டு காவசேரிக்கு  ஆட்டோவில் கிளம்பி விட்டோம்.  கர்கடக  மாசத்தில் பகவதியைத் தொழுதது மனதுக்கு நிறைவாக இருந்தது. என் கல்யாணம் ஆன புதிதில் என் மாமனார் மாமியார் என்று எல்லாரோடும் ஆண்டுக்கொரு முறை போவோம்.  அப்போதெல்லாம்  மிகச் சாதாரண நிலையில் இருந்த கோயில் இன்று நன்கு develop ஆகி விட்டது.  மாமனாருக்கு அங்கு  எல்லாரையும் தெரியும்.   எங்கள் வகையாக ஒவ்வொரு முறையும் பாயசம் தயாரிக்கச் சொல்வது வழக்கம்.

உள்  நடையிலேயே கருவறையின் பின்னால் பாயசம் தயாரிக்க ஒரு சின்ன இடம் உண்டு.  அரவணைப் பாயசம் என்பதால் மெதுவாகத்தான் தயாராகும். அதுவரை மாமனாரும் மற்றவர்களும் அங்குள்ளவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். கோவில்  வளாகத்திற்கு  உள்ளே  வலப்பக்கமாய் கொஞ்சம் நடந்தால் ஒரு குளம் இருக்கும். அதில்  குளித்து விட்டு, கோவிலை ஒட்டி வெளிப் பிரகாரத்தில் இருக்கும் ஒரு அறையில் உடை மாற்றிக் கொண்டுதான் பகவதியைத் தொழுவதற்குச் செல்லுவோம்.  பாயசத்திற்கு ஒரு தூக்குப் பாத்திரமும் பாலக்காட்டிலிருந்து எடுத்துச் சென்று விடுவோம்.

காலை ஏழு மணிக்கு சென்றோமானால் அங்கிருந்து கிளம்ப  உச்சிப் பொழுதாகிவிடும். அதெல்லாம் அந்தக் காலம்.  என் கணவர் இருந்த வரை  நாங்கள் குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தோம்.  அவர் போன பிறகு நானும் பெண்களும்  வருடம் தவறாமல் செல்வோம்..  இப்போதெல்லாம்  பழைய முகங்களைக்  காண முடியவில்லை. ரெண்டு பெண்களும் கல்யாணமாகிச்  சென்று  விட்டதால்  இம்முறை இங்கிருந்து நான் மட்டுமே. என் சித்தி (என் மாமியாரின் தங்கை)  என்னோடு காவிற்கு வந்தார்.  கற்கடகம் என்பது இராமாயண மாசமும் கூட. உள்ளே மேடையில் இராமாயண உபன்யாசம் நடக்கத் தயாராகிக்கொண்டிருந்தது.  ராம நாமத்தையும் இராமாயண உபன்யாசத்தையும்  இந்த  கற்கடக மாதத்தில் எல்லா கோவிலிலுமே  கேட்க முடியும்.

பகவதிக்கு பாவாடை சார்த்தி,  எல்லார் பெயருக்கும் புஷ்பாஞ்சலி செய்து, மெய்மறந்து பகவதியின் முன்பு நின்று மானசீகமாய் உரையாடி விட்டு வருவது என்று என் வழிபாடு,  அன்றைய விஸ்தாரமான வழிபாட்டிலிருந்து  நிறையவே மாறி விட்டது.   எப்போதும் காவுக்கு செல்வது என்னை பரவசப்படுத்தி விடுகிறது. அத்தனை அழகும், சாந்தமும், அமைதியும் கொண்டவள் பரக்காட்டு பகவதி.

முன்பொரு காலத்தில்  தேவி மூகாசுரனை வதம் செய்ய முனைந்த போது அவனது ஒவ்வொரு ரத்தத் துளியிளிருந்தும் ஒவ்வொரு அசுரன் உருவாக, ஒவ்வொருவராக சம்ஹாரம் செய்திருக்கிறாள் பகவதி. அதில் ஒருவன் பெயர் "பர".   இந்தக் காட்டில்தான் அவனை வதம் செய்திருக்கிறாள். அதனால்தான் பரக்காட்டு பகவதி என்ற பெயர்.  முன்பு இவளிருந்தது பறச்சேரி என்ற ஸ்தலத்தில் அங்கு ஏதோ அதிருப்தி எழுந்ததால்                                                         அங்கிருந்த உன்னிக்குமாரத்து குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியிடம் தீப்பந்தம் வேண்டுமென்று கேட்டிருக்கிறாள்.  நெற்கதிர்களைக் கொண்டு  அந்தப் பெண் பந்தமொன்று கொளுத்திக் கொடுக்க, அதன் வெளிச்சத்தில் பகவதி இந்த பரக்காட்டுக்கு வந்து குடியேறியதாக சொல்லப்படுகிறது

அதிப்பேட்டு மாங்கோட்டு பகவதி இவளது சகோதரி.  எனவே மீன மாசத்தில் (மார்ச்-ஏப்ரல்) ஏழு நாட்கள் இந்த ஆலயம் பூட்டப்பட்டு , பரக்காட்டு பகவதி தன்  சகோதரி மாங்கோட்டு பகவதியிடம் அழைத்துச்செல்லப்படுகிறாள்.  ஏழு நாட்கள் இவள் தன்  சகோதரியோடு இருந்து விட்டு திரும்புகிறாள்.

(பாலக்காடு அனுபவங்கள் தொடரும்)

Wednesday, July 22, 2015

அல்லயன்ஸ் பதிப்பகம்.

அல்லயன்ஸ் பதிப்பகம்:

மேற்கு மாடவீதியில் நேற்று சில புத்தகங்கள் வாங்க அல்லயன்ஸ் பதிப்பகத்திற்குள் நுழைந்தோம் நானும் ரேவதி, வல்லபாவும்.   என் மனசு 1977 க்கு பின்னோக்கி சென்றது.  இலை தழை  எல்லாம் குறுக்கும் நெடுக்குமாய் வெட்டி மைக்ரோஸ்கோப்பில் பார்த்து  வரைந்து, எழுதி என்று எனது B.Sc  பாட்டனியின் கடைசி பரீட்சையை எழுதி விட்டு  ரிசல்ட்டுக்கு  காத்திருந்த நேரம் அது.  பி.யு.சி.யோடு சேர்த்து  நான்கு  வருட கல்லூரி காலங்கள் முடிந்து விட்ட சோகம் ஒரு பக்கம், அடுத்து என்ன என்ற கவலை ஒரு பக்கம், ரிசல்ட் வரும் வரை ஏதாவது வேலை தேடலாம் என்றால் provisional  certificate ஆவது வேண்டுமே.  வீட்டில் யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும், வெறுமே புத்தகங்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்த  போது மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்படவே செய்தது.

அந்த நிலையில்தான் என் கல்லூரித் தோழி ஒருத்தி, அவள் கெமிஸ்ட்ரி மேஜர். ஒரே துறை கூட கிடையாது என்றாலும்  கல்லூரியில் அடிக்கடி பார்த்து பேசி பழக்கம்.  மயிலையில்தான் அப்போது இருந்தாள்.  அவள்தான் என்னிடம் ஒருநாள், ஒரு வேலை இருக்கு வரயா என்று கேட்டாள். என்ன வேலை certificate  எல்லாம் வேண்டாமா என்றேன்.  வேண்டாம், நம்மளை மாதிரி ஒரு இருபது பேர்கிட்ட அங்க வேலை செய்யறா. ஆள் தேவைப்படறது. எல்லாரும் பட்டதாரிகள்தான். சீஸனல்  வேலைதான். ஆனா இண்டரஸ்ட்டா இருக்கும் என்றாள்.  மேற்கொண்டு அது பற்றி விசாரித்தேன்.  அவள் சொன்னது திருப்தியாக இருக்க, வீட்டிலும்  சொல்லி சம்மதம் வாங்கிய பிறகு நானும் வேலைக்கு போகப்போறேன்ற  சந்தோஷத்தோட மறுநாள் நான் சென்ற இடம், அல்லயன்ஸ் பதிப்பகம் இருந்த வீட்டுக்குள்தான்.





அப்போது அது  அழகான பழங்கால  ஒட்டு வீடு.  அல்லயன்ஸின்  பெருமை எல்லாம் அப்போது  எனக்குத் தெரியாது.   அந்த வீட்டில் குப்புஸ்வாமி ஐயரின் இரண்டு பிள்ளைகளும், அவர்களது குடும்பங்களும் இருந்தன.  நாங்கள் வேலை பார்த்தது  ஸ்ரீனிவாசனின் சித்தப்பா பாலு என்பவரிடம். அப்போது ஸ்ரீனிவாசனும்  இளைஞர்தான்.    வீட்டுக்குள் நுழைந்ததும் வழிநடைக்கு வலப்பக்கம் முன்புறமாகவே  ஒரு பெரிய அறை  இருந்தது. அதுதான் பதிப்பகம். உள்ளே  நிறைய மர  அலமாரிகள், அதில் நிறைய புத்தகங்கள்.  புத்தகங்கள் மீது தீராக்காதல் கொண்டிருந்த  என் மனம் அதனுள் நுழைந்து புத்தகங்களைப் பார்க்கத் துடிக்கும். கால்கள் தயங்கும்.  தவிர பாலு சார் வேலைக்கு வந்தாயா புத்தகம் பார்க்க வந்தாயா என்று கேட்டு விட்டால்?


முதல் நாள் நான் சென்ற  போது உள்ளே ஆண்களும் பெண்களுமாய் நிறைய பட்டதாரி இளைஞர்கள்.  ஜாலியாய் பேசி சிரித்தபடி தரையிலமர்ந்து மடி நிறைய  அச்சடித்த தாள்களை கற்றை கற்றையாய் வைத்துக் கொண்டு அவற்றைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.  பாலு சார் வந்தார். வாம்மா உஷா என்றார் ரொம்ப நாள் பழகினாற்போல்.  அங்கே என்னென்ன வேலைகள் நடக்கிறது என்று விளக்கி விட்டு என்னை ஓரிடத்தில் உட்காரச் சொல்லி விட்டு  என் கையிலும் கற்றைக் காகிதங்களைக் கொடுத்தார்.

 அவை கேள்வித்தாள்கள்.  ஏழாம்  வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை  ஆங்கிலம், கணக்கு, தமிழ், விஞ்ஞானம், சரித்திரம் தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள், இவை தவிர அவரவர் விருப்பப் பாடத்திற்கான கேள்வித்தாள்கள் என்று  ஏகப்பட்ட கேள்வித்தாள்கள்.   தென் மாவட்டங்களில், மாவட்ட வாரியாக பல ஊர்களிலும் உள்ள,  அரசுப் பள்ளிகளுக்கு  வகுப்பு வாரியாக, குழந்தைகளின் எண்ணிக்கை வாரியாக  பிரித்து  தனித்தனியாக பெரிய கவர்களில் போட வேண்டும். சின்ன தப்பு நடந்தால் கூட, ஒரு பள்ளியில் கேள்வித்தாள் குறையும், ஒன்றில் கூடி விடும். எனவே  கவனமாகப் பிரிக்க வேண்டும்.  ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாவட்டம்,  அங்குள்ள, பள்ளிகளின் எண்ணிக்கை,  வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் எல்லாம்  தனியாக கொடுத்து விடுவார். அதன் படி கவனமாக கேள்வித்தாளைப் பிரிக்க வேண்டும்.

ஒரு முறை பாலு சார் என்னை எல்லார்  முன்பும் சத்தமாக அழைத்தார்.  உஷா மத்தியானம் என்ன சாதம்? என்றார்.  வீட்டுக்கு போனாதான் சார் தெரியும் என்றேன்.

இன்னிக்கு  வீட்டுக்கு  போய்  நீ  சாதம் சாப்டக் கூடாது அதுக்கு பதிலா ஒரு கிளாக்ஸோ  டின் வாங்கிண்டு  போய் கலந்து பாட்டில்ல விட்டு குடிக்கணும் சரியா என்றார்.  நான் பேந்த பேந்த விழித்தேன். எல்லாரும் சிரித்தார்கள்.

ஏன் சார்?  என் குரல் மெலிந்தது.

பின்ன என்னம்மா ஏழாம்  கிளாஸ் குழந்தைக்கு பதினோராம்  கிளாஸ் கொஸ்டின் பேப்பரை வெச்சா?  நீயும் சாப்பாட்டுக்கு பதிலா கிளாக்ஸோதான் குடிக்கணும். அதான் பனிஷ்மெண்ட்.   மீண்டும் கொல்லென்ற சிரிப்பலை எழும்பியது நான் அசடு வழிய சிரித்தேன். அதிலிருந்து நண்பர்கள் சிலர் அங்கு எனக்கு கிளாக்ஸோ  பேபி என்ற செல்லப் பெயரும் இட்டனர். (பெயர்க்காரணம் எழுதும்  போது இதை மறந்துட்டேனே)

அதற்குப் பிறகு படு கவனமாக கேள்வித்தாள்களைப் பிரித்து பாலு சாரிடம் சபாஷ் வாங்கி விட்டேன் அது வேறு விஷயம்.  அரைப் பரீட்சை, முழுப் பரீட்சை என்று அவ்வப்போது சில மாதங்களுக்கு முன்பே இந்த பணி  துவங்கி விடும்.  எல்லா கேள்வித்தாள்களும்,   பிரிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக அனுப்பி முடிப்பதற்குள் மண்டை காய்ந்து விடும்.  கவரில் விலாசம் சரியாய் எழுத வேண்டும்.  ஒரு தோழி செய்யாறுக்கு பதில் "செய்யறது"  என்று எழுதி நாங்கள் எல்லாம் அவளை கேலி செய்து சிரித்தது நினைவிருக்கிறது.  "என்ன செய்யறதுன்னு சொல்லு" என்று கலாய்ப்போம்.   இதனால் கஷ்டம் தெரியாமல்  நாங்கள் படு ஜாலியாய்  எங்கள் வேலையைச் செய்தோம். காரணம் எல்லாருமே டிகிரி படித்த இளைஞர்கள்.

எங்களுக்கு வரும் கேள்வித்தாள்களைப் படித்து திடீர் திடீரென்று மற்றவர்களிடம் அந்த கேள்விக்கான பதிலைக் கேட்போம். பதிலை முந்திக் கொண்டு செல்வதில் ஒரு போட்டியே நடக்கும்.  பள்ளிப் பாடங்களை எல்லாம் வீட்டுக்குச் சென்று  மறுபடியும் மேயும் பழக்கம் ஏற்பட்டது எனக்கு. ஒரு நாளைக்கு யார் அதிக பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு பாலு சாரின் சபாஷ் கிடைக்கும். அதைப் பெறுவதில் ஒரு தனி சுகம். மொத்தத்தில் அறிவைத் தூண்டும் ஒரு சுவாரசியமான பணி. நேரம் போவதே தெரியாது.  சிரிப்பும், கிண்டலும், கேலியுமாய்  நாட்கள் ஓடும். ஒரு சீசன்  வேலை முடியும்  போது அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்ற ஏக்கம் வரும். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்களோ?

இந்த வேலைக்கு ஒரு நாள் ஊதியம்  ஐந்து ரூபாய்.  வாரா வாரம் அந்த வாரத்திற்கான ஊதியம் கிடைக்கும். ஞாயிற்றுக் கிழமை வேலை செய்தால் அதற்கும் கணக்கிட்டு கொடுத்து விடுவார்.

ஒரு  முறை கடைசி நாள் வேலை  முடிந்து கிளம்பும்  போது பதிப்பகத்தின் அருகில் என் கால்கள்  தயங்கி நின்றது. பிறகு உள்ளே மெல்ல சென்றேன். சீனிவாசனின்  அப்பா உள்ளே அமர்ந்து மேஜையில் வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

என்னம்மா?

புத்தகம் பார்க்கலாமா?

பாரேன்.

அவர் தன வேலையைத் தொடர, நான் அலமாரிகளுக்கு அருகே சென்றேன். ஒரு புத்தகமாவது வாங்கி விட வேண்டும் என்பது என் ஆசை.  தேவனின் CID  சந்துரு என்னை இழுத்தது. ஏற்கனவே துப்பறியும் சாம்பு பலமுறை லைப்ரரியிலிருந்து படித்திருந்ததால் துப்பறியும் கதையே படிக்கும் ஆவலில் அதை கையில் எடுத்தேன்.  இதை வாங்கிக்கறேன் என்றேன்.   அந்த புத்தகம் என்ன விலை என்று இப்போது நினைவில்லை.   என் கையிலிருந்த  சம்பள பணத்தில் என்னிடம் மீந்திருந்தது ஐந்து ரூபாய் மட்டுமே. என் உழைப்பில் நான் வாங்கிய முதல் புத்தகமும் அதுதான்.  நான் படித்ததோடு எல்லோருக்கும் படிக்கக் கொடுத்தேன். பல கை மாறிய புத்தகம் ஒரு நாள் பக்கங்கள் எல்லாம் நைந்து போய்  வந்து சேர்ந்தது.  ஏழெட்டு  வருடத்திற்கு முன்புதான்  மற்றொரு நகல் வாங்கினேன்.

அப்போது அல்லயன்ஸில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு புத்தகத்தில் மகாத்மா காந்தி அங்கு வந்து சென்ற விஷயமும், இன்னும் பல தலைவர்கள் அதைப் பாராட்டி எழுதிய விஷயங்களும்  தெரிய வந்தது.

ஆஹா நானும் காந்தி வந்து சென்ற வீட்டிற்கு சென்று வேலை பார்த்து விட்டேன் என்ற பெருமிதம் ஏற்பட்டது.

மூன்றாம் தலைமுறை இருபதடி பாய்ந்து அல்லயன்சை வானுயரத்திற்கு எழுப்பியிருப்பதைக் கண்டு நேற்று மனது மகிழ்ந்தது. நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்,

1. கி.வா.ஜ  வின் கவி பாடலாம்,
2. வேத காலத்தில் பெண்கள் நிலை
3. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்.

கீழே அல்லையன்ஸ்  இன்று.

Monday, May 18, 2015

இன்று புதிதாய்ப் பிறந்தேன்.

ஏன் பிறந்தோம் என்று இன்று வரை எதற்கும் சலித்துக் கொண்டதில்லை. அப்படி ஒன்றும் வாழ்க்கை சுகமான நீரோட்டமாய் இருந்ததுமில்லை. மேடும், பள்ளமும், கும்மிருட்டுப் பிரயாணமுமாகவே இருந்திருக்கிறது. அடுத்தடுத்து ஆழிப் பேரலைகள் வீசியிருக்கிறது.  ஆயினும் எந்தச் சுழலிலும் என் சிரிப்பையும், எழுதுகோலையும் நழுவ விட்டதில்லை.   அப்பா அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது உழைப்பு, அதீத நேர்மை. போராடி ஜெயிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.   என் வெற்றி எல்லாமே அப்படி கிடைத்தவைதான்.  நான் தனிமை விரும்பி.  மிகச்சிறிய என் வீடே என் சொர்க்கம்.   புத்தகங்களும்,  நல்ல சங்கீதமும் ஓவியமும், கிருஷ்ணஸ்மரணையுமாய்  எவ்வித குழப்பமுமின்றி  அமைதியாய்ச் செல்கிறது வாழ்க்கை.  கற்றுக் கொடுப்பவர் எல்லோரும் என் குருவே.  கொஞ்சூண்டு அன்பு காட்டினால் கூட நெகிழ்ந்து விடுவேன். என்னைப் பிடிக்கவில்லையா....மௌனமாய் ஒதுங்கி விடுவேன்.   நேர்மறைச் சிந்தனைகளால் வாழ்க்கைப் படகை ஒட்டிக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி  ஓடிக் கொண்டிருக்கும் நதி நல்லவர்களால் நிரம்பியது.  முகநூல், மற்றும் பதிவுலகம்  மற்றுமொரு சாளரமாய்  எனக்கு உலகம் காணச் செய்திருக்கிறது.  நல்ல நட்புக்கள் இதன் மூலம் கிடைத்திருக்கிறது.  கெட்ட குணம் இருக்கிறதா?  ஈகோ கெட்ட  குணம் எனில் என்னிடம் அது உண்டு.  அதையும் விரைவில் விரட்ட  வேண்டும்.  முன்பு முன் கோபம் இருந்தது. இப்போது அது அறவே இல்லை.  ஒரு காலத்தில் இருந்த  சின்னச் சின்ன  ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விட்டது.  கூடிப் பிறப்பதுமில்லை,  கூடி மரிப்பதுமில்லை. இதில் எதற்கு அர்த்தமற்ற துவேஷங்கள் ?   இத்தனை வருட வாழ்க்கையில் கற்றதும், பெற்றதும், இழந்ததும் நிறைய.  என்னைப் பெற்ற தாய்  இருக்கிறாள் ஆசீர்வதிக்க.  இந்தப் பிறந்த நாளில் நான் பெற்ற முதல் ஆசி அவளிடமிருந்துதான்.   

Monday, March 30, 2015

நானும் மயிலையும்

நான் பிறந்து வளர்ந்து இன்று வரை  வாழ்ந்து கொண்டிருப்பது மயிலையில்தான்.  நினைவு தெரிந்த நாளில் நான் கண்ட மயிலைக்கும், இன்று காணும் மயிலைக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்.  சுதந்திர நாட்டில் வளர்ச்சி தேவைதான் என்றாலும், அந்த பண்டைய அழகு அடியோடு அழிந்து விட்டதே என்ற ஆதங்கம் ஏற்படத்தான் செய்கிறது.  குளத்தை சுற்றிலும்  கடைகள் கிடையாது. தென்னை மரங்களைக்  காணலாம். குளக்கரை படியில்தான் ரெண்டு மாசத்துக்கொருதரம் அத்தை அம்பட்டனிடம் தலை மழித்துக்கொண்டு குளத்தில் ஸ்நானம் பண்ணுவாள்.  தலை பண்ணிக்கபோறேன் கூட வா என்று என்னை இழுத்துச் செல்வாள். அந்தக்  கொடுமையெல்லாம் புரியாத வயது அது.  நீ மட்டும் எதுக்கு மொட்டையடிச்சுக்கற  ஏன் நல்ல புடவை கட்டிக்கறதில்ல , சட்டை போட்டுக்கறதில்ல? என்று கேட்பேன். அத்தை பதில் சொல்ல மாட்டாள்.

இப்போது கோயிலைச்சுற்றியிருந்த பாரம்பரிய அழகுகள் எல்லாம்  அடியோடு அழிந்து விட்டது.  அழிக்கம்பி போட்ட திண்ணைகள் கொண்ட பெரிய பெரிய வீடுகள் எல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன.  இன்றைய அம்பிகா அப்பளம் கடை,  NAC,  சுக்ரா, விஜயா ஸ்டோர்ஸ் எல்லாம் அன்றைய அழகான  பெரிய வீடுகளிருந்த இடம். அந்த வீடுகளின் மாடியிலிருந்து தேர் இழுத்துச்செல்பவர்கள் மீது சிலீரென தண்ணீரை மோந்து மோந்து கொட்டுவார்கள்.

நள்ளிரவில் எழுந்து, அத்தையின் கை பிடித்து ரிஷப வாகனம் காணவும்,  வியர்க்க விறுவிறுக்க, தேரோட்டம்  காணவும்,  மூன்று மணி வெயிலில் 63 நாயன்மார்கள் அணிவகுத்து செல்வதை  தரிசிக்கவும், சென்றதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மல்லிகை பூக்கும் காலம் இது.  எங்கள் குடும்பம் அப்போது பெரியது. அத்தை குடும்பங்கள் எல்லாம் அருகருகே வசித்த காலம்.  ஒரு படி மல்லிகை மொக்குகளை வாங்கி கூடத்தில் கொட்டி, பெரியத்தையும், சின்ன அத்தை பெண்களும், அம்மாவும், அக்காக்களும், தொடுப்பார்கள்.  சுவாமிக்கும் அம்பாளுக்கும் சார்த்த அப்பா வேட்டி புடவை வாங்கி தயாராக வைத்திருப்பார். ரெண்டு மணிக்கெல்லாம், ஒவ்வொருவராய் கிளம்பத்தயாராவார்கள்.  அத்தை பெண்ணோ அல்லது அக்காவோ எனக்கு ரெட்டைப் பின்னலிட, அத்தை அதில் பூவை சொருகுவாள்.  நல்ல பாவாடை சட்டை அணிவித்து என்னை தயார் செய்வாள் அக்கா.

மொத்த குடும்பமும் பேச்சும் சிரிப்புமாய்  கிளம்புவோம்.என்னை அத்தையின் கை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும்.  வீட்டில் எத்தனை பட்சணங்கள் இரைந்தாலும், அங்கே தள்ளுவண்டியில் தட்டு நிறைய அடுக்கி வைத்திருக்கும், கமர்கட்டுக்கு நாக்கு ஏங்கும். வாங்கித்தா என்று கேட்டால் அத்தை விழி உருட்டி முறைப்பாள்.  அதெல்லாம் சாப்டப்படாது. பேசாம வா கேட்டயா?  அவள் ஆசையாய்  வளையல் ரிப்பன்கள்,  சாந்துக் குப்பிகள்,  மணிமாலைகள் என்று வரிசையாய்  வாங்கித் தந்ததும்,  கமர்கட் மறந்து விடும்.

தாவணி அணிய ஆரம்பித்ததிலிருந்தே நான் திருவிழாக்களுக்கு செல்வதை விரும்பவில்லை.  அந்தக் கூட்டம் அலர்ஜியை ஏற்படுத்தியது.  தவிர வாசலில் உட்கார்ந்து வண்ண மயமாய் திருவிழாக்களுக்கு செல்லும் கூட்டத்தைப் பார்ப்பதே ஒரு சுவாரசியமாயிற்று.  ஆனால் பிக்ஷாண்டவர்  தரிசனம் மட்டும் இன்று வரை காணத் தவறியதில்லை   வருடம் முழுக்க நமக்கு படியளப்பவன் அன்று பிட்சை  பாத்திரம் ஏந்தி வளம் வருகிறான். அவன் பிச்சைப் பாத்திரத்தில் பணம் போடுவதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?  அதனால் அதை மட்டும் தவற விடுவதில்லை.


திருவிழாவுக்கு போகா விட்டாலும் அப்போதெல்லாம் திருவிழா  முடிந்து கோயிலில் கச்சேரி களை  கட்டும்  போது  மட்டும் தவறாமல் அத்தையோடு ஆஜராகி விடுவேன்.  பாதி கச்சேரியில் அத்தை போலாம் வாடி  என்று என்னை இழுக்கும் போது  முழுசும் கேட்டுட்டு போலாம் அத்தை என்று கெஞ்சுவேன்.  நாளைக்கு வேலை இருக்குடி, ஏந்துர்க்கணும் வா போலாம் என்று இழுத்துக் கொண்டு செல்வாள்.

ஆனால் ஒருவரது  கச்சேரிக்கு மட்டும் அப்பாவைத்தவிர அத்தனை பேரும் முன்னாலேயே போய்  இடம்பிடித்து உட்கார்ந்து விடுவோம்.  கச்சேரி முடியும் வரை அசங்க மாட்டோம்.  அன்று கோவிலில் எள்ளு போட்டால் கீழே விழாது.  நவக்கிரக சந்நிதி ஆரம்பித்து முன்னால்  இருக்கும் சந்நிதிகளின் மேலே எல்லாம்  சிவகணங்கள் மாதிரி ஏறி அமர்ந்திருக்கும் வாலிபர்களின் கூட்டம்.  அந்த பாடகர் வெண்கலக்குரல் மன்னன் சீர்காழி கோவிந்தராஜன்.  தனி வாசிப்பின் போது கடம் வாசிப்பவர் கடத்தை  ரெண்டு முறை தூக்கிப் போட்டு பிடிப்பார் பாருங்கள், கரகோஷம் அள்ளும்.


அப்போதெல்லாம் அறுபத்திமூவரன்று மிஞ்சிப்போனால் நீர் மோர் கொடுப்பார்கள் பார்த்திருக்கிறேன். பிறகு ரோஸ்  மில்க் அதோடு சேர்ந்து கொண்டது. அதன் பிறகு, சாம்பார் சாதம், தயிர்சாதம் சர்க்கரைப் பொங்கல் என்று விநியோகித்தார்கள்.  இப்போது பிரிஞ்சி பிரியாணி என்று  பட்டை லவங்க  வாசனை மயிலை முழுக்க காற்றில் பரவி வருகிறது. பசிக்கு உண்டது போய்  ருசிக்கு உண்ணும் கூட்டம் அதிகரித்து விட்டது.  தேவையோ தேவையில்லையோ கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, பாதி தின்று, மீதியை வீதி எல்லாம் எறிந்து, கால் வைக்கும் இடமெல்லாம்  அன்று அன்னம்தான். மகா வேதனையாய்  இருக்கும்.

இதோ இப்போது திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.  அத்தையின் நினைவு வருகிறது. அவள் காட்டிய பாசமெல்லாம் நினைவுக்கு வருகிறது. அவளது விரல் ஸ்பரிசத்திற்கு மனசு ஏங்குகிறது. "பைத்தாரி நீயே பாட்டி ஆயாச்சு இன்னும்  என் கையைப் பிடிச்சுப்பயாக்கும்?"  அத்தை கெக்கலிப்பது கேட்கிறது. எனவே,  ஏற்கனவே கண்டதை எல்லாம் மனசில் நிறுத்தி மானசீகமாய் தரிசித்து திருப்திப் பட்டுக் கொள்கிறேன்.

இப்போதெல்லாம்  கோவிலுக்கருகில் சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்குள் நம் சக்தியெல்லாம் வடிந்து விட்டாற்போல் ஆயாசமேற்படுகிறது.  அத்தனை டிராபிக்,  நெரிசல், சத்தம், நடப்பவர்க்கு வழியற்ற பாதுகாப்பற்ற சூழல்.

கீழே  நடைபாதை கடைகளற்ற அழகான அமைதியான மயிலை தெப்பக்குளம்.



Saturday, March 21, 2015

உப்பு வேலி (The Great Hedges of India)

ஒரு வாரமாய்  முகநூல் பக்கம் செல்லவில்லை.   நான்  ஒரு கொடுமையான முட்புதர்  வேலியில் தொலைந்து போயிருந்தேன்.    மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் சரித்திரத்தின் மிச்சங்களைக்  கண்டறியும் ஒரு நீண்ட தேடலில் நானும்  கூடவே அலைந்து கொண்டிருந்தேன்.  சென்ற  வாரம்   "உப்பு வேலி" என்ற புத்தக வெளியீட்டைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா. அதன் தொடர்ச்சிதான் இது.  நண்பர் கிருஷ்ணா மூலம் அன்றிரவே புத்தகம்  என் கைக்கு வந்து சேர்ந்தது. பிரித்ததும் ஆச்சர்யம். உள்ளே ஆங்கில மூலத்தை எழுதிய Roy  Moxham  மற்றும் ஜெயமோகன்,   ஆகியோரின் கையொப்பங்களுடன்  புத்தகம் எனக்கு வந்திருந்தது. . உங்கள்  "உப்புக் கணக்கு"  பற்றி  Roy Moxham  இடம் கூறினேன்.  புத்தகத்தையும் காட்டினேன் என்று கிருஷ்ணா கூறிய  போது எனக்கு  மகிழ்ச்சியும் நன்றியும் பொங்கியது.  ஜெயமோகனிடமும் உப்புக் கணக்கு பற்றி தான்  சொன்னதாகவும்,  இப்படி ஒரு புத்தகம் வந்திருப்பதே எனக்கு தெரியாதே என்று  அவரும் ஆச்சர்யப்பட்டதாகவும்  கூறினார் கிருஷ்ணா.

கிருஷ்ணாவும் நானும்  வெகு நேரம் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.  கிருஷ்ணா ஒரு லட்சிய இளைஞர்.  மிகுந்த தேசப் பற்று கொண்டவர்.  இந்திய தேசம் பற்றி பல கனவுகள் உண்டு இவருக்கு. எனது  "உப்புக் கணக்கு"  வெளியான உடன்  புத்தகம் குறித்து எனக்கு முதலில் வந்த  மின்னஞ்சல் இவரிடமிருந்துதான்.  இன்று வரை அந்த  புத்தகத்தை எத்தனையோ பேரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.   2009 ல் எனது உப்புக்கணக்கு பிரிண்ட்டாகி  பைண்டிங்கில் இருந்த சமயத்தில்தான் நான் இந்த முட்புதர் வேலியைப்  பற்றிய குறிப்பை இணையத்தில் படித்தேன்.  அடடா இதைப் பற்றி எதுவுமே எழுத இயலாது  போய் விட்டதே என்று வருத்தப்பட்டேன்.  ஆனால் அதிக விவரம் அப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  Roy Moxham  இது குறித்து எழுதியிருப்பது பற்றி அப்போது தெரியவில்லை எனக்கு.   இப்போது  தமிழில் உப்புவேலியாக  வெளி வந்திருக்கிறது இது.

இனி "உப்புவேலி " பற்றி:

நம் நாட்டில் நடந்த ஒரு அவலத்தை, நம் சரித்திரங்களில் மறைக்கப்பட்டு விட்ட, அல்லது மறக்கப்பட்டுவிட்ட  மிகப்பெரியதொரு   உண்மையின் மிச்சங்களைத் தேடியறிவதே  தன்  வாழ்வின் லட்சியமாகக் கருதி பெரும் பொருட் செலவுகளைப் பொருட்படுத்தாமல்  ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டவர்,  நம்புங்கள்  அவர்  ஒரு இந்தியரல்ல,  ஆங்கிலேயர்.  ஒரு பழைய புத்தகக் கடையில் அவர் வாங்கின ஒரு புத்தகத்தில்தான் இந்தத் தேடலின் விதை  அவருக்குள் விழுந்திருக்கிறது என்பது  கண்டிப்பாக அசாதாரணமான ஒரு நிகழ்வுதான். அவருக்கிருந்த ஆவலும், லட்சியமும்,  நம் இந்திய அரசுக்கோ, இந்திய சரித்திர ஆய்வாளர்களுக்கோ, இந்தியக் கல்வித்துறைக்கோ  ஏன் துளியும் இல்லாமல் போனதென்று புரியவில்லை.

நம் சரித்திரத்தைப் பற்றி நாமே கவலைப்படவில்லை.  ஆனால் Roy  Moxham, பிரித்தானிய அரசு இந்திய மக்களுக்கு செய்த கொடுமையின் உச்சக்கட்டமான ஒரு விஷயத்தை   தனது கடுமையான  தேடலின் முடிவில், பல்வேறு  ஆதாரங்களுடன்  வெளிப்படுத்தியிருக்கிறார்.

உப்பு பெறாத விஷயம் என்று  சுலபமாகச் சொல்கிறோம்.  ஆனால் இந்த உப்பை விலை கொடுத்து வாங்க இயலாமல்  இந்த தேசத்தில் கோடிக்கணக்கானவர்கள் உயிர் துறந்திருக்கிறார்கள்.  உப்பை வைத்து மிகக் கேவலமான அரசியலை நிகழ்த்தியிருக்கிறது ஆங்கில அரசு.   இந்திய அடிமைகளின் உழைப்பைச்சுரண்டி உற்பத்தி செய்யப்பட்ட உப்பு  மூலம், ஆங்கிலேயர்கள்  மாபெரும் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள்.  இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அளவற்ற  பணம் பிரிட்டனை வளப்படுத்தியிருக்கிறது.   ஏழைகளுக்கு மிகச் சுலபமாக கிடைக்க வேண்டிய உப்பு, அவர்களுக்கு எட்டாக்கனியாக மாறி கூட்டம்கூட்டமாய் இந்திய ஏழைகள் உயிரைவிடக் காரணமாகி இருக்கிறது அவர்கள் விதித்த உப்பு வரி.

உப்பு வரியை வசூலிக்கவும், உப்புக் கடத்தலைத் தடுக்கவும் அவர்கள் எழுப்பியதுதான்  சுங்கவேலி.  இந்தியாவின் குறுக்காக கிட்டத்தட்ட 2500 மைல் நீளத்திற்கு, முட்புதர்களையும், இலந்தை மரங்களையும், சப்பாத்திக் கள்ளிகளையும் இன்னும் பலவிதமான தாவரப் புதர்களையும் கொண்டு 12 அடி உயரம், பதினான்கடி  அகலத்தில்  ஒரு முட் சுவரை எழுப்பி இருக்கிறார்கள்.   ஜஸ்ட் 150 வருடங்களுக்கு முன்புதான்  இந்த மெகா திட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.   இதை அமைக்க எந்த அளவுக்கு மனித சக்தி தேவைப்பட்டிருக்கும்.  எத்தனை கிராமங்கள் பாதிக்கப் பட்டிருக்கும்.  1857 ல் நடந்த கலகத்தைக் குறித்து  எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டுள்ள  நிலையில்,  அதே காலக் கட்டத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையான  வேலி  திட்டத்தைப் பற்றி நம் சரித்திரத தொடர்பான நூல்களில் எங்குமே எழுதப்படவில்லை என்பது புரியாத புதிர்.  ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மன்னர்கள் குறித்து ஆர்வமுடன் எழுதுபவர்கள் கூட 1800 களில் நடந்த இந்த விஷயத்தைப் பற்றி  தெரிந்து கொள்ள  ஆர்வம் காட்டாமல் விட்டது ஆச்சர்யமாயிருக்கிறது.

1823 ல்  சிறிய அளவில் எழுப்பப்பட்ட இந்த சுங்க வேலி   1869 ல் 2500 மைல் அளவுக்கு எழுப்பப்பட்டு   முழுமையடைந்திருக்கிறது.  கோடிக்கணக்கில்  இந்திய மக்களிடமிருந்து உப்பு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.  12000 பேர் இந்த வேலியின் பாதுகாப்பிற்கும், வரி வசூலிக்கவும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  மக்கள் இதற்கெதிராகப்  போராடி இருக்கிறார்கள்.  திருட்டுத்தனமாய் உப்புக் கடத்தல் செய்திருக்கிறார்கள்.  வேலியைப்  பல இடங்களில் தீயிட்டு கொளுத்தி இருக்கிறார்கள்.  பல இடங்களில் வேலி  இயற்கை இடர்பாடுகளால்  தானாய் அழிந்திருக்கிறது.  பஞ்சக் காலங்களில்  கூட  ஈவிரக்கமின்றி உப்பு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.  லட்ச லட்சமாய் மக்கள் பஞ்சத்திலும், உப்புக் குறைபாட்டினாலும் நோய் கண்டு மடிந்திருக்கிறார்கள்.  1879 ல் இந்த சுங்க வேலி  வரி வசூலிப்பு கை விடப்பட்டிருக்கிறது.

இந்திய மக்களின் உழைப்பைக் கொண்டு வேலி எழுப்பி,  இந்திய  மக்களின் உழைப்பைக் கொண்டு உப்பு உற்பத்தி செய்து,   இநதிய மக்களுக்கே வரி விதித்து,  அவர்களை கசக்கிப் பிழிந்து, கோடி கோடியாய்  செல்வம் சேர்த்து அவற்றைக்கொண்டு செழிப்பாய் வாழ்ந்துள்ளனர் ஆங்கிலேயர்.  உழைத்தவனுக்கு மாதத்திற்கு காலணா கூலி.  ஆனால் அவன் வரியாகக் கட்ட வேண்டிய தொகையோ அதை விட பத்து மடங்கு.  பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்தின் அவலங்களைத்  மிகுந்த வேதனையுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்  ராய் மாக்ஸம்.

சட்ட விரோதமாய் வேலியைத் தாண்டிய  மனிதர்கள் மட்டுமல்ல, மான்களும், மற்ற விலங்குகளும்  கூட கூட்டம் கூட்டமாய் குழி பறித்துக்  கொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு பயணக் கட்டுரையாக ஆரம்பிக்கும் இந்தத் தேடல் போகப் போக ஒரு துப்பறியும்  நாவல் படிப்பதைப் போல் விறு விறுப்பாகச் செல்கிறது.   தன் வேலி  தேடிய  பயணத்தினூடே இன்றைய இந்தியாவில்  தான் கண்டவை கேட்டவை,  சந்தித்த மனிதர்கள்,  என அனைத்தையும் உள்ளது உள்ளபடி எவ்வித மேல்பூச்சுமின்றி விவரித்திருக்கிறார்.

உப்பின் சரித்திரம், முக்கியத்துவம், உப்புக் குறைபாடுகளால் ஏற்படும் மரணம் என  உப்பைக் குறித்து  எத்தனை   எத்தனை தகவல்கள்! அவை எல்லாமே வெகு விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கின்றன. உலக அளவில் சீனாவின் மேற்கு எல்லையில் தங்கக் கட்டிகளைப் போல் உப்புக்கட்டிகள் அரசு முத்திரையோடு உருவாக்கப்பட்டு  அவை தங்கத்திற்கு பண்ட மாற்றாக விற்கப்பட்டுள்ளன,  இந்த பண்டமாற்றிலும் கூட தந்திரம் மிகுந்த வியாபாரிகள் அதிகம் சம்பாதித்தனர் என  அறியும்  போது பிரம்மிப்பேற்படுகிறது.

உப்புக்காக பல போர்கள் நிகழ்ந்துள்ளது இந்த உலகில் என்கிறார் இதன் ஆசிரியர். இன்றைக்கு  தனக்கு வேண்டாதவரைக் கைது செய்ய அவர் வீட்டில் கஞ்சா  வைத்து விட்டு கைது செய்து சிறையில் அடைப்பதைப்போல, 1850 களில்  உப்பை ஒருவர்  வீட்டில் சிதற விட்டு, அதை காரணம் காட்டி அவர் சட்டவிரோதமாய் வீட்டில் உப்பு தயாரித்தார்  என்று கைது செய்து சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

இந்த பிரும்மாண்டமான நீளம் கொண்ட முட்புதர் வேலியின் சிறிய பகுதியையாவது  நிச்சயம் தான் கண்டு பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன்  அதற்கான, ஆதாரங்கள், வரை படங்கள், ஜி.பி.எஸ். கருவி, எனக் கிளம்பி இந்தியா வரும் ராய் மாக்ஸம் அட்சரேகை, தீர்க்க ரேகைகளை விவரங்களைத்  துல்லியமாக கணக்கிட்டு தனது கருவியில் குறித்துக் கொண்டு  அவற்றின் உதவியோடுதான். தன்  பயணத்தைத் துவக்கியிருக்கிறார். அவருடன் பயணித்த அந்த சந்தோஷ் எனும் இளைஞர் பாக்கியம் செய்தவர். அவரது பயணம் அசாதாரணமானது. ஆக்ரா, ஜான்சி, இட்டாவா, என்று அவர் சென்ற பாதைகளில் சரியான போக்கு வரத்து வசதிகள் கூட அவருக்குக் கிடைக்கவில்லை.  இறுதியில் இட்டாவாவிலிருந்து   சம்பல் நதி வழியே, நடைப்பயணமாக பல இடர்களை எதிர்கொண்டு  பலிகர் வந்து,  இறுதியில் ஒரு முதியவரின் துணையோடு Parmat  Lein  என்று அவரது  ஆழ்மனதில் பதிந்து விட்ட அந்த புதர்வேலியின் மிச்சங்களை அவர் காணும்  போது வாசித்துக் கொண்டிருந்த என் கண்களில் நீர் பொங்கியது.  நானே கண்டு விட்டாற்போல் ஆனந்தம் ஏற்பட்டது.

முட்புதர் வேலி அமைப்பதற்கான  பாதை நன்கு உயர்த்தப்பட்டு  அதன் மீதுதான்  இந்த வேலியை  ஆங்கிலேயர்கள் அமைத்திருக்கிறார்கள். சில இடங்களில் இவை உயிருள்ள முள் மரங்களாலும், சில இடங்களில் வெட்டப்பட்ட புதர்களாலும்  அமைக்கப்பட்டிருக்கிறது.  1879 ல் இத்திட்டம் கைவிடப்பட்ட பிறகு இவற்றின் பெரும்பகுதி விவசாய நிலங்களாகவும். சாலைகளாகவும் மாறியது போக,  ராய் மாக்ஸம்  கண்டது அதன் ஒரு சிறு பகுதிதான்.  இனியாவது இந்திய அரசு விழித்துக் கொண்டு,  ஒரு கொடும் நிகழ்வுக்கு ஆதாரமாக மிச்சமிருக்கும் அந்த முட்புதரை சரித்திரச் சின்னமாக பாதுகாக்குமா? என்ற பெருமூச்சு வெளிப்பட்டது என்னிடமிருந்து.

ராய் மாக்ஸம்  இறுதியாய் பயணித்துக் கண்டறிந்த அந்த குறிப்பிட்ட இடத்தை Google  Earth ல்  தேடிப் பிடித்து screen  shot  எடுத்து அளித்துள்ளேன்.  (கடைசி படம்) ஏதோ என்னால் முடிந்தது.  சம்பல் நதியின் மீது அப்போது கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்த பாலம் கூட ஒரு கோடாகத் தெரிகிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. ஆங்கிலத்தில் "The Great Hedges of India" by Roy Moxham. தமிழில் "உப்புவேலி"  சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். "எழுத்து" பதிப்பிட்டிருக்கிறது.  ஜெயமோகன் முன்னுரை அளித்திருக்கிறார்.

இனி உணவு தயாரிக்க உப்பு ஜாடியை எடுக்கும்போதெல்லாம் அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டுதான்  உபயோகிப்பேன்  எனத் தோன்றுகிறது.








Friday, March 13, 2015

7.83 ஹெர்ட்ஸ் (புத்தக விமர்சனம் )

ஒரு வாரம் முன்னாடி படிப்பதற்காக இதை எடுத்தேன்.  என்னமோ தெரியவில்லை. கவனச் சிதறல்கள்.  40 பக்கம் தாண்ட நாலு நாளாயிற்று. இப்டி படிச்சா வெளங்கிடும்  (இது சுதாகரின் மைண்ட் வாய்ஸ் )  நேற்று மீண்டும் எடுத்ததும் எனக்கே ஒரு ரோஷம் ஏற்பட்டது.  எப்படியாவது இன்று இதை முடித்து விட்டுத்தான் மறுவேலை என்று முடிவு செய்து கொண்டேன்.

காலையில் பாலை அடுப்பில் வைத்து விட்டு புத்தகத்தைப் பிரித்தேன்.  குக்கர் பாட்டுக்கு விசிலடித்துக் கொண்டிருந்தது நம்புங்கள் என் காதில் உறைக்கவேயில்லை.   வாசல் பெருக்க வந்த வேலைக்காரி  கதவைத்தட்டி அக்கா ரொம்ப நாழியா விசில் சத்தம் வருதே என்று குரல் கொடுக்க ஓடிச்சென்று அடுப்பை அணைத்தேன்.  காப்பியைக் கலந்து கையில் வைத்துக் கொண்டு மீண்டும் வாசிப்பு.  எனக்கு காப்பி ஞாபகம் வரும்போது அது ஆடைபடிந்து ஆறிப்போய்....

அதை  மீண்டும் ஓவனில் சுடவைத்து குடித்த  கையோடு  அரிசியைக்  களைந்து குக்கரில்  வைத்து விட்டு கோவைக்காயை நறுக்கி கறிக்கு தாளித்து விட்டு  வந்து  மறுபடியும் புத்தகத்தை எடுத்தேன்.   கோவைக்காய் அடி பிடித்து கரிந்து போக, அதை மேலோட்டமாக எடுத்து  வைத்து விட்டு மீண்டும் வாசிப்பு.  சாம்பார், ரசம்  எதுவும் கிடையாது. பருப்புப் பொடியும் கோவைக்காய் கறியும் போதும் என்பது முடிவு.  ஒரு வழியாய்  விடிய விடிய விழித்திருந்து  வாசித்து முடித்த  போது மணி அதிகாலை  2.26.

உன் கதை போதும் நீ கதைக்கு வா என்று யாரோ கத்துவது புரிகிறது.  தோ வந்துட்டேன்.   கோயம்பேடிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸில் போயிருக்கிறீர்களா?   பஸ்  கிளம்பி,  தாம்பரம் வரும் வரை  ஒரே சத்தமும், கசகசப்புமாய்  லோக்கல் டிராபிக்கில்  நின்று நின்று  பயணத்தில் செட்டில் ஆக கொஞ்சம் டைம் எடுக்குமே  அது மாதிரி ஆரம்பத் தடுமாற்றம்  எனக்குக் கொஞ்சம்  ஏற்பட்டது.   ஆனால்  அதற்குப் பிறகு தாம்பரம், வண்டலூர் தாண்டி தங்க நாற்கர சாலையில் பேய்க்காற்று முகத்தில் அறைய  ஒரு வேகம் எடுக்கும் பாருங்கள்.  அதை விட நாலு மடங்கு வேகம் இதில் எடுக்கிறது  கதை.

அடேயப்பா...   எங்கேயோ ஆரம்பித்து, உலகம் முழுக்க ஒரு சுற்று சுற்றி வந்து, எத்தனை தகவல்கள்!   பிரம்மிப்பாய் இருக்கிறது.   இது வெறும் அறிவியல் புனைவுக்  கதை   மட்டுமல்ல.   சரித்திரம்,  பூகோளம், விலங்கியல், கணக்கு, மனோதத்துவம்,  காதல்,  பாசம்,  தத்துவம், உணர்வுகள்   என்று எல்லாமே  சரி விகிதத்தில் கலந்த அழகான கலவை இது. 

எத்தனை  எத்தனை புதிர்கள்!....  அவை ஒவ்வொன்றும் தெளிவாக விடுவிக்கப்படும் போது ஆசிரியரின் அறிவுத்திறமை வியக்க வைக்கிறது. அதுவும் அந்த போர்ஜ் துப்பாக்கியின் புதிர் விடுவிக்கப் படும்  போது சபாஷ் சொல்ல வைக்கிறது.  இதற்கென நீண்ட ஆராய்ச்சி செய்திருந்தாலொழிய, இது மாதிரி கதைகளை எல்லோராலும் எழுதி விட முடியாது.  சாண்டில்யன் படிக்கும்  போது  அவர் எழுதும் அரசியல் தந்திரம், போர் வியூகம் இதெல்லாம் நம்மை விழி விரிக்க வைக்குமே..   அப்படி ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   இந்த மனுஷனா ஒண்ணுமே தெரியாதது போல் என் எதிரில் அன்றொரு நாள்  உட்கார்ந்து படு சாதுவாய் பேசிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது.

ஓநாய்களின் மீது மரியாதையே வந்து விடும் அளவுக்கு  எத்தனை தகவல்கள். அதுவும் வேதநாயகம் தன்  இயல்பான தின்னவேலி பாஷையில்  அவற்றைப் பற்றிய தகவல்களை  சுவாரசியமாக சொல்லும்  போது   எனக்கு அந்த காதாபாத்திரத்தில் சுதாகரின் முகம்தான்  தெரிந்தது.  எத்தனை சவத்தெளவு!
அதுவும் சர்வைவல் மற்றும் உணவுச் சங்கிலி பற்றிய விரங்கள்.....அசத்தல்

பழிவாங்க இப்படியெல்லாம் கூட அறிவியல் யுத்தம் செய்ய முடியுமா? பயமாக இருக்கிறது.   இப்போதே இப்படித்தான் பலர் கொலைவெறியோடு அலைகிறார்கள்.  அவர்களது எம்.ஏ.ஓ  அல்லீல்களை  ஆராய்ந்தால் நல்லதாக இருக்குமோ?

மீன்கள்,  மீன்வளர்ப்பு,  மீன் ஏற்றுமதி  தொடர்பான தகவல்கள்,   இந்த உலகம் எந்த அளவுக்கு வணிகத்தில் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.   எல்லாவற்றிலும் கலப்படம்.  உண்ணும் உணவு விஷமாகும் அவலம்,  நோய்களின் முற்றுகை   இவையெல்லாம் கூட ஒருவித   பயோ டெர்ரரிசம்தானோ?

இந்த அறிவியல் நாவலுக்குள்,   கண்ணீர்த் துளிர்க்க வைக்கும், நமது 7.83 ஹெர்ட்ஸ்  அலைவரிசையை எகிரவைக்கும் ஒரு குட்டிக் கதையும் இருக்கிறது. வித்யாவின் flashback.  கொஞ்ச நாளாய் பாலியல் பலாத்காரத்தைக் குறித்து பெண்களாகிய நாங்கள்  நெஞ்சக் கொதிப்போடு விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது என் ரத்தக் கொதிப்பை அதிகரித்தது. நான் ஓநாயாக மாறி  18 Hz  ஐக் கடந்து  அந்த ராட்சஸனைப் பாய்ந்து குதறி குடலை உருவினேன் என் மனசுக்குள். 

திரிகோண எண்களைப பற்றி  புரிந்து கொள்ளும்  அளவுக்கு நான் கணக்கில் புலியில்லை.  என் கணக்கு ஞானத்தைப் பற்றி கொஞ்ச நாள் முன்பு நான் ஒரு பதிவே போட்டிருந்தேன்.  ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கவே கால்குலேட்டரோடு கடைக்குப் போகும் அளவுக்கு என் கணக்கு மூளை மந்தம். இந்த லட்சணத்தில்.......இதெல்லாம் எங்கே புரிய?  ஒருவேளை அய்யோ  பாவம் என்று  சுதாகர் ஒரு பத்து நாள் திரிகோண எண்கள்  பற்றி தனி வகுப்பு  எடுத்தால்  கண்டிப்பாக அவரிடம் சான்றிதழ் வாங்கி விடுவேன் சவத்தெளவென்று.    மற்றபடி கணக்குப் புலிகள் நிச்சயம் என்ஜாய் பண்ணுவார்கள்.

வண்ணத்துப் பூச்சியை இப்படி ஒரு உதாரணமாக இதில்தான் படிக்கிறேன். இதுதான் உண்மை என்றும் தோன்றியது.   "நம்பிக்கைதான் வாழ்க்கை. என்னளவுல நான் உண்மையா வாழறேனா?  அதான் முக்கியம். ஊரைப்பத்தி கவலைப்படல" என்று சொல்லும்  எம்.ஜி.கே. மீது இறுதியில் மரியாதை ஏற்படுகிறது.

வாசிப்பு அனுபவம் என்பது பலவகைப்படும்.  கண்ணீர் சிந்த வைக்கும்,  பேய் பிசாசு என்று பய அனுபவம் தரும்.  மேஜிகல் ரியலிசம் என்று புது மாதிரி அனுபவத்தைத் தரும்,  வாழ்வின் யதார்த்தங்களை கண் முன் நிறுத்தி உணர வைக்கும்.  காதல் மட்டுமே வாழ்க்கை என்ற கற்பனை சுகத்தைத் தருபவையும் உண்டு.   7.83 Hz  நாம் எந்த அளவுக்கு அறிவு ஜீவி என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

முருகன் ஜி..  உங்கள் முன்னுரையின் இறுதியில் உங்கள் பெயருக்கு மட்டும் xyz  போட்டுக் கொண்டது  தன்னடக்கத்தினாலா?  கூச்சத்தினாலா ? அல்லது அந்த XYZ யார் என்று கதை வாசிக்கும்  போது தானே தெரிந்து கொள்ளட்டும் என்றா?

முடிப்பதற்கு முன்,  இந்த புதினம் வாசித்த பிறகு என் மனசுக்குள் ஏற்பட்ட சில ஆசைகளை வரிசைப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.   இந்த மாதிரி  மின் காந்த அலைகள்  மூலம்  கீழ்க்கண்டவற்றை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 

1. தனியே செல்லும் பெண்கள்  குழந்தைகளைக் காணும்  போது அவளைக்  கெட்ட  எண்ணத்தோடு நெருங்கும் ஆண்களின் மனநிலையை மாற்றி, அவனுக்கு கூச்ச உணர்வை அதிகரித்து,   அவள் காலைத் தொட்டு வணங்கி விட்டு, வாயில்  இடது கை சுட்டு விரலை  வைத்து ஓரக்கண்ணால் பார்த்தவாறு,  உடம்பை ஒரு வெட்டு வெட்டியபடி அந்தக் கால ஒல்லிப்பிச்சான் கே.ஆர் விஜயா  ஓடுவாங்களே அந்த மாதிரி ஓடிரணும். இதற்கான நேனோ ரிசீவர் பெண்களின் செருப்பில் இருக்கும்..  அவள் அதை அழுத்தினால் அவனது காம உணர்வு மாறி வெட்க உணர்வு மேலிட்டு  ஓடிடுவான்.

2.  தேர்தல்ல ஓட்டு  வாங்கி கெலிச்சு மந்திரி பதவி ஏத்துக்கும்போது அவங்க மனநிலை 7.83 க்கும் கீழ போய்,  இந்த லஞ்சம் ஊழல்ங்கற வார்த்தையெல்லாம் மறந்து போய்  குறுக்கு வழில வர பணம்னாலே அலர்ஜி ஆய்டணும்.  அரசு ஊழியர்களுக்கும் இதேதான்.

3. ஆசைகளை எல்லாம் துறந்துட்டேன்னு கப்ஸா  விட்டு  சாமியார்ங்கற  பேர்ல, ஊரை ஏமாத்தி கோடி கோடியா சுரண்டி வெள்ளை மாளிகை அளவுக்கு ஆசிரமம் கட்டற பேராசை பிடிச்ச ஆன்மீகவியாதிகளுக்கு ஸ்பெஷல் தண்டனை என்னன்னா,  அவங்களுக்கு முன்னால  உட்கார்ந்திருக்கற பக்த கோடிகளுக்கு ஏதாவது  அயனோஸ்பியரிலிருந்து  நாச அலைகளை புகுத்தி வெறியேற்றி, அவர்களைக் கொண்டே  அந்தாளை துவம்சம் பண்ணணும்.

4. தான் எந்த மதம், என்ன ஜாதின்னு  எல்லார்க்கும்  சுத்தமா மறந்து  போய்டணும்.  மனுஷன்ற  நினைப்பு மட்டும்தான் இருக்கணும்.
எல்லாரோட அதிர்வலையும் 7.83  Hz லயே   உறைஞ்சு நின்னுடணும்.


ஏதோ இந்த பூமிப் பந்து  நல்லபடியா இருக்க என்னாலான யோசனைகள். நமக்கு டெக்னிக்கலா எல்லாம் சொல்லத் தெரியாது. நேயர் விருப்பம் இது. மானே தேனே பொன் மானேல்லாம் சேர்த்து என்ன செய்யணுமோ  செய்து மேற்படி விருப்பங்களை நிறைவேத்தணும்.

கடைசியா ஒரு அல்ப ஆசை.  இந்த மாதிரி ஏதாவது  அலையை அனுப்பி  (நா சுனாமியச் சொல்லல)  என்னை கணக்குப் புலியா  மாத்த முடியுமா? ரொம்பல்லாம் இல்ல, ஒரு சகுந்தலா தேவி  அளவுக்கு போதும்.

மொத்தத்தில் Hats off  to  you   வேறென்ன சொல்ல?



  

Sunday, February 1, 2015

குகைக்குள் ஒரு பயணம் (பாதாள் புவனேஸ்வர்)

2007 ல்  ஆதி கைலாஷ் செல்லும் வழியில், உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள்  புவனேஸ்வர் என்று ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். என்னால் மறக்கவே  முடியாத அதிசயம் இது. .சரயு நதியும், ராம்கங்கா நதியும் ஓடும்  இந்த இடத்தில்தான்  உலகிலேயே மிக  மிக அதிசயமான,  பல ரகசியங்களை  தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பாதாள குகை இருக்கிறது. நம் புராணங்களில் சொல்லப்பட்ட அத்தனை சம்பவங்களும் தெய்வங்களும் இங்கே சுயம்புவாய் காட்சியளிக்கின்றன  என்பதுதான் இதன் அதிசயம்.  உலகின்  ஏழு  பாதாள அதிசயங்களில் இதுவும் ஒன்று. அல்மோராவில்  கங்கோலிஹட்  என்ற இடத்திலிருந்து 14 km  தொலைவில் உள்ளது.

நான்தான் இறங்குவதற்கு முன்னால்  ஒரு போஸ் 

இது காளமேகம் 


திரேதா  யுகத்தில்தான் இது முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியை ஆண்ட ரிதுபர்ணன் என்ற மன்னன் ஒரு நாள் ஒரு மானைத்துரத்திக் கொண்டு செல்ல,  இந்த குகைக்கருகில் வந்ததும் மான் மறைந்து விட, மன்னன் அந்த குகையைக்கண்டு  அதனுள்  இறங்கிப் பார்த்திருக்கிறான்.   பூமிக்கடியில் ஆதிசேஷன் எழுப்பிய  சுவர்க்கம் இது என அறிகிறான். அறிந்த ரகசியத்தை வெளியில் சொல்லாதே என எச்சரிக்கிறது ஆதிசேஷன்.   ஆனால் அவன் மனைவியிடம் சொல்ல, மரணம் அவனை கொண்டு செல்கிறது.  அவன் மனைவி குகைக்கு வருகிறாள்,  அதற்குள் இறங்குகிறாள்.   அவளும் ரகசியம் அறிகிறாள்.

இறங்கும் வழி 




திரேதா யுகத்திற்குப்பின், துவாபர யுகத்தில் பாண்டவர்கள் இதனுள் நுழைத்திருக்கிறார்கள்.   இதிலுள்ள ஒரு வழி மூலம்தான்  அவர்கள் சுவர்க்க ரோகினிக்கு சென்றிருக்கிறார்கள். அதன் பின் கலியுகத்தில் ஆதிசங்கரர் இதனுள் இறங்கி மாதக்கணக்கில் இங்கே தவமிருந்திருக்கிறார்.  . அங்கே உள்ள சுயம்பு  லிங்கங்களை (பிரும்மா, விஷ்ணு, சிவன்)  பூஜித்து  அவற்றிற்கு செப்புத்தகடு ஒன்றும் அணிவித்திருக்கிறார். அது இன்னமும் உள்ளது.  இந்த லிங்கங்கள்தான் குகையின் கர்ப்பக்கிரஹ தெய்வங்களாக  பூஜிக்கப்படுகிறது.  இங்கிருந்துதான் ஒரு ரகசிய வழி மூலம் அவர் கயிலாயம் சென்றிருக்கிறார். 1941 ல்  சுவாமி பிரணவானந்தர் இதை மீண்டும் கண்டறிந்து உள்ளே சென்று தரிசித்திருக்கிறார்.

ஆதிசங்கரர் பூஜித்த லிங்கங்கள் 


அதன் பிறகு எழுபதுகளில்  ராணுவ அதிகாரி  ஜெனரல் டெயிலர்  என்பவரின்  கனவில் சத்திய சாயி பாபா தோன்றி அவருக்கு  ஒரு பாதையைக் காட்டி மறைந்திருக்கிறார். அந்த அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவர் தன பணி  நிமித்தமாய் இந்த இடத்திற்கு வந்த  போது இதை தான் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட அவருக்கு தன்  கனவும் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் உடனே தேடித் தேடி இந்த குகையைக் கண்டு பிடித்திருக்கிறார்.  பின்னர்தான் இது மக்கள் சென்று வரும்படியான  இடமாயிற்று. குகையைச்சுற்றி கோயில் போல அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனுள் அப்படி என்னதான் அதிசயங்கள் இருக்கின்றன?   உண்மையிலேயே அதிசயங்கள்தான்.   பிரும்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, பஞ்ச பாண்டவர்கள், ஆதிசேஷன்,   கொய்யப்பட்ட பிரும்மனின் தலை மீது பால் சொரியும் காமதேனு  (இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம்),  தொங்கிக் கொண்டிருக்கும், காலபைரவனின் நாக்கு,  அதிலிருந்து உமிழ் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால்  கபால மாலைகளோடு சிவனின் இருப்பு,

கழுத்து திருப்பிப் பார்க்கும் அன்னப்பறவை, இந்த அன்னப்பறவை, நாகங்களிடமிருந்து தண்ணீரைக் காக்க  பிரும்மாவால் நியமிக்கப்பட்டது. ஆனால் இது தன கடமைச் சரியாகச் செய்யாததால்  பிரும்மா இதன் கழுத்தை திரும்பியிருக்குமாறு சபித்து விட்டாராம். ஆயிரம் கால்கள் கொண்ட ஐராவதம் அதன் முன் பகுதியில் அதன் தலையும், தும்பிக்கையும்,   பஞ்ச பாண்டவர்கள் அருகிலிருக்க, சொக்கட்டான் விளையாடும் சிவன்  பார்வதி, சிவனின் கமண்டலம், சிவனின் ஜடை, அதிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் கங்கை நீர்,  கேதார்நாத் லிங்கம், பத்ரிநாதர், அமர்நாத் குகை,   தலை வெட்டப்பட்ட கணபதி,  உச்சியிலிருந்து அதன் மீது அமிர்த தாரை  சொட்டும் அஷ்ட தள தாமரை,  என அத்தனையும்  இங்கே சுயம்புவாய்  உருவாகியிருக்கிறது.   மூன்று யுகங்களாய் இந்த அதிசயம் பூமிக்குள் இருக்கிறது.

ஆதிசேஷன் 



பிரும்ம தீர்த்தம். அருகில் நந்தி 

தலை வெட்டப்பட்ட கணேஷா மேலே அஷ்ட இதழ் தாமரை 

கேதார், பத்ரி, அமர்நாத் 

சிவனின் கமண்டலம் 


பஞ்ச பாண்டவர்களுடன் சிவன் பார்வதி 

ஐராவதத்தின் கால்கள் 

ஐராவதத்தின் முகப் பகுதி 


முகம் திரும்பியிருக்கும் அன்னப்பறவை 

இவற்றை கற்பாறைகளில்  ஏற்பட்ட  தோற்றம் என நம்பவே முடியாது.  மென்மையான சதை ரூபம்  காண்பது  போல்  தத்ரூபமாய்த் தெரியும்.  கர்ப்பகிரகமாக பூஜிக்கப்படும்  பிரும்மா விஷ்ணு, சிவன் மூவருமே லிங்க வடிவில் வெவ்வேறு வர்ணங்களுடன் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு தெரிவது மிகவும் அதிசயம். அதிலும், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும் மேலிருந்து நீர்த்தாரை சொட்டுகிறது. பிரும்மாவின் மீது சொட்டுவதில்லை.   இந்த லிங்கங்களுக்கு நாங்கள்  கொண்டு சென்ற மானசரோவர் தீர்த்தால் அபிஷேகித்து, வில்வம் சார்த்தி பூஜித்தோம்.

பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த கதையைசொல்வது போல்  சிவனின் ஜடையிலிருந்து வடியும் கங்கை அதனடியில் பகீரதனின் உருவம்  அதற்கருகில் சிறிய குளம்  போல் பிரும்ம தீர்த்தம்,  அதனருகே உள்ள நந்தி, முப்பத்து முக்கோடி தேவ ரூபங்கள்.  என்று அத்தனையும் இயற்கையாய் உருவாகியிருக்கிறது.  இந்திர லோகத்திலிருந்து கிருஷ்ணர் கொண்டு வந்த பாரிஜாத மரமும் இங்குள்ளது.

சிவனின் ஜடை 


பாரிஜாத மரம்  



ஓரிடத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் லிங்கங்கள் உள்ளன. இவற்றில் கலியைக் குறிக்கும்  மற்றதை விட சற்று உயரமான விரல் அளவு லிங்கம் ஒன்றிருக்கிறது. இது மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இது எப்போது  குகையின் உச்சியைத்தொடுகிறது அப்போது கலியுகம் முடிந்து விடுமாம்.  இதன் பினால் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரகசிய பாதை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.  இது தவிர இந்த குகையிலிருந்து காசிக்கும், பூரிக்கும் கூட ரகசிய பாதைகள் உள்ளனவாம். ஆக மொத்தம் ஒரு மினியேச்சர் தெய்வ ரூபங்களைத்  தன்னுள் கொண்டிருக்கும் பாதாள அதிசயம் இது.  (புகைப்படங்களைப் பாருங்கள் நிச்சயம் உங்கள் விழிகள் விரியும்)

கலி லிங்கம் 


இந்த பாதாள குகை பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் நூறடிகள் வரை உள்ளே இருக்கிறது.  மேலிருந்து செங்குத்தாய் ஒரு  பள்ளம்,  அதில் குறுகிய பாதை  அதன்  இரண்டு பக்கமும் நம் பிடிப்புக்காக கட்டப் பட்ட இரும்புச் சங்கிலிகள்  இதனைப் பற்றிக்கொண்டு அமர்ந்த நிலையில்தான் நிதானமாக உள்ளே இறங்க வேண்டும். நம் காலுக்கு கீழே பாறைக் கற்களைக் கொண்டு  ஒரு சரிவு அமைக்கப் பட்டிருக்கும்.  இதில் இறங்குவதே ஒரு த்ரில்லிங்கான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நூறடி இறங்கி விட்டோம்  எனில்  பாதை பிரியும் இடத்தில் நரசிம்ம மூர்த்தியின் பாதங்கள் பதிந்திருப்பதைக் காணலாம்.  பின்னர் விஸ்தாரமான  பெரிய குகை.  குளுமையோ குளுமை.  உள்ளே ஜெனரேட்டர் உதவியோடு எரியும்  மங்கிய மின் விளக்குகளின் ஒளியில் அந்த அதிசயங்களைப் பார்க்கும்  போது  மனசு சிலிர்க்கும், திரேதா யுகத்திலிருந்து இருக்கும் இந்த  அதிசய குகையில்,  பாண்டவர்கள் கால் பதித்த,   ஆதிசங்கரர் தவம் செய்த, புண்ணிய இடத்தில் நாமும் கால் பதித்திருக்கிறோம்   என்ற சிலிர்ப்பு  நம் கண்களில்  ஜலப்பிரவாகத்தை வெளிப்படுத்தும்.

குகையின்  தரைப்பகுதி முழுவதும் வளைந்து நெளிந்து  தன் வயிற்றுப்பகுதியின்   தடங்களோடு  சிலந்தி வலையாய்  பரவிச் செல்லும் ஆதிசேஷனின் உடற்பகுதி அதிசயத்தின் உச்சம். சர்ப்ப வேட்டையில் இறங்கியிருந்த ஜனமேயஜயனிடமிருந்து  தப்பித்த ஆதிசேஷன்  இங்கே வந்து மறைந்திருந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.  இந்த ஆதிசேஷனே  இந்த பாதாலத்திளிருந்தபடி பூமியைத் தன தலையில் சுமப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனுள் நான்கு சுரங்கப் பாதைகளுக்கான கதவுகள் உள்ளது.  இந்த நான்கு கதவுகளைபற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது.  முதல் கதவு பாவப்பாதை.  ராவண வதத்திற்க்குப்பின் இது மூடப்பட்டு விட்டது.  அடுத்தது ரணப்பாதை (way to war)  இதுவும் பாரதப் போருக்குப் பின் மூடப்பட்டு விட்டது. இப்போது இரண்டு பாதைதான் திறந்துள்ளது.  ஒன்று  தர்மப்பாதை. இது கலியுகத்தின் முடிவில் மூடப்படும்.  மற்றொன்று, காலபைரவரின் நாவிற்கு அடியில் இருக்கும்  மோட்சப்பாதை.   இதில் மனதை ஒருமுகப்படுத்தி இறை நம்பிக்கையோடு பயணித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்கந்தபுராணம். இந்தப் பாதை அடுத்த யுகமான சத்ய  யுகத்தில் மூடப்பட்டு விடுமென ஸ்கந்த புராணத்தின் மானஸ்கந்தம்  சொல்கிறது.  இந்த குகைக்குள் இருக்கும் ஒரு சிறிய குகையில்தான் மார்க்கண்டேய மக்கரிஷி மார்க்கண்டேய புராணம் இயற்றியிருக்கிறார்.

காலபைரவரின் நாக்கு. பின்னால் மோட்சப் பாதை 


எனக்கு இந்த குகையும் இந்த அதிசயங்களும் மற்றொரு சிந்தனையை ஏற்படுத்துகிறது.  நம் மனம் கூட இப்படி ஒரு பாதாளத்தில் உள்ள இருண்ட குகைதானோ?  அதனுள் பயணிக்க நாம் முயற்சித்திருக்கிறோமா? ஒருவேளை   முயற்சித்தால் இப்படிப்பட்ட அதிசயங்கள்  நமக்கு தரிசனம் கொடுக்க நம் மனக்குகையிலும்  காத்திருக்குமோ?

உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு  ஆலயம்,
வள்ளல்   பிரானற்கு  வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா  மணிவிளக்கே

என்று சும்மாவா சொன்னார் திருமூலர்?

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறு பொருள் கண்டேன்
உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே

இதுவும் அவர் பாடியதுதான்.   உத்தமன் உள்ளேதான் இருக்கிறான். அங்கேயும் தேடிக்  கண்டறிவோம்,  அதற்கு முன்னால்  பாதாள்  புவனேஸ்வர் அனுபவத்தையும் ஒரு முறையாகிலும் பெற்று விடுங்கள்.  நம் மண்ணில்தான் அது இருக்கிறது. எங்கேயோ அல்ல.