Tuesday, February 14, 2017

செம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)

வித்யா சுப்ரமணியம்
                    செம்புலப் பெயல் நீர் 
வாசு
அம்மா என் காதலை அங்கீகரிக்கவில்லை. சரசுவை நான் திருமணம் செய்து கொள்வதை மறுத்து விட்டாள். இனி என்ன செய்வது என்று நான் யோசிக்க வேண்டும். இதை சரசுவிடம் எப்படி சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை. அவள் இதற்கு எப்படி எதிரொலிப்பாள் என்று புரியவில்லை. நான் சரசுவைக் காணச் சென்றேன். என்னைக் கண்டதும் சரசு முகம் மலர வந்தாள்.

“அம்மா கிட்ட சொல்லிட்டயா வாசு....என்ன சொன்னாங்க?”

அவள் வெகு ஆவலுடன் கேட்டாள். என் நாக்கு தயங்கி மேலே ஒட்டிக் கொள்ள அவளையே பரிதாபமாப் பார்த்தேன். பிறகு மெல்ல சொன்னேன்.

“அம்மாவுக்கு விருப்பமில்லை சரசு” நான் சொன்னதும் அவள் முகம் வாடி விடும் என நினைத்த நான் ஏமாந்து போனேன். அவள் புன்னகை மாறாமல் இருந்தாள். வழக்கமாக அவள் எல்லாவற்றிற்கும் புன்னகைப்பாள். அது அவளின் பலம். ஆனால் இப்போதும் அவள் புன்னகைத்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. வலியை மறைக்கவும் புன்னகையா? எனக்குப் புரியவில்லை. இப்டி சிரிச்சா என்ன அர்த்தம் சரசு?  
“வேற என்ன பண்ணணும்ங்கற? அழச் சொல்றயா? நா அழுதா உங்கம்மா ஒத்துப்பாங்கன்னா சொல்லு அழறேன். அதைவிடு எந்த அம்மா உடனே ஒத்துக்குவாங்க வாசு? அதுவும் அப்பா அம்மா பேர் தெரியாத, அனாதை இல்லத்துல வளர்ந்து படிச்ச, உறவுன்னு சொல்லிக்க ஒருத்தருமில்லாத ஒரு பெண்ணை தன் பிள்ளை காதலிக்கறதை எப்டி ஏத்துக்குவாங்க? என் மேல அவங்களுக்கு நம்பிக்கை வர வேண்டாமா?”

“அதுக்கு நாம என்ன செய்யணும்? நா உன்னைப் பத்தி ஒண்ணும் மறைக்காம எல்லாத்தையும் சொல்லி, நீ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு சொல்லியும் கூட அவங்க மனமிரங்கலை. உன்னை வீட்டுக்கு  கூட்டிட்டு வரேன்னு கூட சொல்லிப் பார்த்தேன். ஆனா அவங்க உன்னைப் பார்க்கக் கூட மாட்டேன்னுட்டாங்க. இனி நாம என்ன செய்யணும்னு ஏதாவது சொல்லேன்”

“நீயே முடிவெடு வாசு. உன் முடிவு என்னவா இருந்தாலும் நா மறுக்க  மாட்டேன். உங்கம்மா மனசு மாறும் வரை காத்திருக்கணுமா? காத்திருக்கேன். அல்லது உங்கம்மா இஷ்டப்படி என்னை விட்டுட்டு உங்கம்மா சொல்ற பெண்ணைக் கட்டிக்கறயா? அதுக்கும் ஒகே"..

“உன்னால என்னை விட்டுட்டு இருந்துட முடியுமா?

“இதே கேள்வியை நானும் கேட்டா?

“நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்ல சரசு”

“எனக்கும்தான். ஆனா உங்கம்மாக்கு விருப்பம் இல்லையே. இனி நாம என்ன செய்யப் போறோம்னு சொல்லு.

“அவங்க கிட்ட விஷயத்தை சொல்லி நேர்மையா அவங்க அனுமதியைக் கேட்டேன். தரல. அதுக்காக நான் என் காதலைக் கை விடணும்னா அது முடியாது. அதே நேரம் அம்மா வேணாம்னு அவங்களை விட்டு வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. எனக்கு அவங்களும் வேணும். நீயும் வேணும். அப்பா இறந்த பிறகு தனி ஆளா நின்னு என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்காங்க. என்னைப் பத்தி அவங்களுக்கும் ஏதேனும் கனவுகள் இருக்கும். அதனால நம்ம காதலை ஏத்துக்காத காரணத்துக்காக அவங்களை வெறுத்து ஒதுக்கிட முடியாது. அதனால நா ஒரு முடிவு எடுத்திருக்கேன்.”


அம்மா

எதைப் பார்த்தாலும் கோபம் வந்தது. ஜன்னல் திட்டில் வைத்த அன்னத்தைக் கொத்த வந்த காக்கையின் மீது கூட கோபம் வந்தது. கரண்டிகளும் பாத்திரங்களும் டம் டம்மென்று ஓசையோடு கூடையில் விழுந்தன. சுருணைத்துணி கையில் படாத பாடு பட்டது. வாசு இப்படி செய்வான் என நான் நினைக்கவில்லை. அவன் காதலை நான் அங்கீகரிக்கவில்லை. அந்த அளவுக்கு நான் உறுதியாக என் மறுப்பைத் தெரிவித்து விட்டேன். ஒற்றை ஆளாக அன்பும் அறிவும் புகட்டி வளர்த்தவன் என்னை மதித்து என் பேச்சைக் கேட்பான் என்று நம்பியிருந்தேன். ஆனால் இந்த பாழாய்ப் போன காதல்  பெற்ற தாயைக் கூட பின்னுக்குத் தள்ளி விடும் போலும்.. தாய் தந்தை யாரென்று தெரியாத ஒரு பெண் மீதா போயும் போயும் இவனுக்கு காதல் வர வேண்டும்? யாரை வேண்டுமானாலும் இவன் காதலிப்பான். ஆனால் குலம் கோத்திரம் பார்க்காமல் நான் எப்படி அட்சதை தூவி ஆசீர்வதிக்க முடியும்? அந்தப் பெண்ணை ஒரு தாயின் நிலையில் நின்னு பார்க்கச் சொல்லு. என் பக்கத்து நியாயம் அவளுக்குப் புரியும் என்றேன். ஆனால் வாசு உடனே “நீ ஏன் அவள் பக்கத்து நியாயத்தை பார்க்க மறுக்கிறாய் அம்மா?” என்று திருப்பிக் கேட்டான்.

நான் அவனை வெறித்துப் பார்த்தேன். “உங்கள் பக்கம் ஆயிரம் நியாயங்கள் இருக்கட்டும் எனக்கு அக்கறையில்லை. என் தாய்ப்பாசத்திற்கு முன் எந்த நியாயமும் நிற்க முடியாது. என்னை மீறி நீ அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நம் உறவுகள் ஒவ்வொருவரும் என்னைத்தான் எள்ளி நகையாடுவார்கள். எனக்கு வளர்க்கத் தெரியவில்லை என்பார்கள். என் அவமானத்தில் உனக்கு ஆனந்தம் என்றால் உன் இஷ்டப்படி இருந்து கொள். நான் பிள்ளையே பெறவில்லை என்று எண்ணிக் கொள்கிறேன்.” என்றேன். 

அவன் மௌனமாக இருந்தான். அதன் பிறகு என்னிடம் எதுவும் பேச துணிவற்றவனாக தன் அறைக்குச் சென்றான். சற்று நேரத்தில் வெளியில் செல்வதற்குத் தயாராக உடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தான். என்னிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் சிட் அவுட்டில் கூடைச் சேரில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொண்டு விர்ரென்று புறப்பட்டு விட்டான் தன் பைக்கில். கண்டிப்பாக அவளைத்தான் பார்க்கப் போவான். போகட்டும். இதுவே கடைசி சந்திப்பாக இருக்கட்டும். நான் என் வேலையைப் பார்க்கப் போனேன். இரவு சிற்றுண்டிக்கு அடைக்கு ஊறப் போட்டு விட்டு, பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தேன். வேலைக்கு வரும் பெண்ணுக்கு வைரல் ஜுரமாம். வாசு நிச்சயம் நினைத்துப் பார்ப்பான். 

நான் அவனுக்காக எத்தனை சிரமங்களை வாழ்க்கையில் எதிர் கொண்டிருக்கிறேன் என்று. வாசுவின் அப்பா இறந்து போன போது அவனுக்கு ஆறு வயது. இருவரின் உடன் பிறப்புக்களோ, மற்ற உறவுகளோ யாரும் பெரிதாய் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. நான் வேலைக்குச் செல்லும் பெண்ணும் அல்ல. அவர் வேலை பார்த்த  அலுவலகத்தில் ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்., யார் யாரையோ கெஞ்சி கூத்தாடி சத்துணவு கூடம் ஒன்றில் சமையல் வேலை கிடைத்தது., அங்கிருந்த படி பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்று, துறை சார் பரீட்சைகள் எழுதி மெல்ல மெல்ல நானும் முன்னேறி, வாசுவையும் முன்னேற்றி, பொறியியல் படிக்க வைத்து, அவனுக்கு நல்ல வேலை கிடைத்ததும், அவனது வேண்டுகோளின்படி ஆறு மாசத்திற்கு முன்புதான் விருப்ப ஓய்வு பெற்றிருந்தேன். அவனுக்கு எந்த குறையும் வைக்காமல், அதே நேரம் என் சுகங்களைக் குறைத்து சேமித்து, நகை நட்டை விற்று ஊருக்கு வெளியில் இந்த வீட்டையும் வாங்கி இங்கு குடியேறினோம்.
 .
இடைப்பட்ட இத்தனை காலத்தில்தான் எவ்வளவு கஷ்டங்கள். எத்தனை அவமானங்கள். உறவுகள் ஒத்தாசை எதுவும் செய்யவில்லை என்றாலும் குற்றங்குறை கண்டு பிடித்து குத்திக் காட்டுவதில் கில்லேடிகள். ஒற்றை ஆளாய் எப்படியோ பிள்ளையை ஜோராக வளர்த்து விட்டாளே என்று பொறாமையில் தவிப்பவர்களுக்கு இவனது காதல் விவகாரம் தெரிந்து விட்டால் வெறும் வாய்க்கு அவலாகிவிடும். அதுவும்.அப்பா அம்மா பேர் தெரியாது, அநாதை இல்லத்தில் வளர்ந்த பெண் என்று தெரிந்தால் விதம் விதமாய் திராவகம் கொட்டி நோகடிப்பார்கள். இவ்வளவு காலம் பரம பதத்தில் ஏணியில் ஏறி சின்னச் சின்ன பாம்பில் சறுக்கி எப்படியோ இறுதிப் பகுதிக்கு வரும் நிலையில் அவர்கள் கை கொட்டி சிரிக்கும்படி பெரிய பாம்பில் சறுக்கி விழுவோமா என்று காத்திருப்பவர்களுக்கு எதிரில் அதைத் தாண்டி மேலே செல்ல வேண்டும். பாம்புகளைக் கடந்து பயமற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே என் உறுதியாக இருந்தது. இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்தக் காதலை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறுவேன். 

பாத்திரத்தை தேய்த்து முடிப்பதற்குள் அழைப்பு மணி ஒலித்தது. வாசுவாகத்தான் இருக்க வேண்டும் என்றெண்ணியபடி வந்து கதவைத் திறந்தேன். வாசு அந்த பெண்ணோடு நின்றிருந்தான்.
        ***********************************

வாசு
அம்மாவுக்கு அளவற்ற அதிர்ச்சியை அளித்திருந்தேன். சரசுவை வீட்டுக்கு அழைத்து வருவேன் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. வாசலில் வைத்து அம்மா ஏதேனும் பேசி விடக் கூடாது என்ற பதற்றத்தோடு நான் சட்டென உள்ளே வர என் பின்னே சரசுவும் வந்தாள். அம்மாவின் அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. சரசுவின் முகத்தில் புன்னகையும் மறையவில்லை. அவள் அம்மாவின் காலைத் தொட்டு வணங்க முற்பட, அம்மா விலகினாள்.

சற்று நேரம் மௌனமாக நகர, மௌனத்தை அம்மாவே கலைத்தாள். 

“எதுக்காக இவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க.?”

“சரசுவை நீ பாக்கணும்னுதான்”

“பாத்துட்டேன் கிளம்பச்சொல்லு”

“நா சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளும்மா. எனக்கு உன் மேல எவ்ளோ அன்பும் பாசமும் உண்டோ அதே அளவுக்கு சரசு மேலயும் உண்டு. உனக்காக அவளையோ, அவளுக்காக உன்னையோ இழப்பதை நா விரும்பல. ரெண்டு பேரும் வேணும் எனக்கு. அவ ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. இப்போ ஒரு மாசம் விடுமுறை. பெத்தவங்களோ மத்தவங்களோ யாருமில்லாதவ முதல் முறையா அன்பைத் தேடி இங்க வந்திருக்கா. உன் கண் பார்வைலதான் நாங்க இருப்போம். இந்த ஒரு மாசத்துல இவளை உனக்கு நிச்சயம் பிடிச்சுடும்னு நம்பறேன். இப்போதைக்கு உன் கோப தாபத்தை எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு ஒரு விருந்தாளியா இவளை பாவிச்சு உன் அன்பைக் குடு. உனக்கு நா சத்தியம் பண்ணித் தரேன். உன் அனுமதியில்லாம எங்க கல்யாணம் நடக்காது.”

“ஒரு வருஷம் அவ இங்க இருந்தாலும் என் அனுமதி கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க ரெண்டு பேரும்?”

“ஒண்ணும் செய்ய மாட்டோம்மா. ரெண்டு பெரும் வாழ்நாள் முழுக்க காதலிச்சுக் கிட்டே இருப்போம்.”

“அப்போ நா பாக்கப் போற பொண்ணை நீ கட்டிக்க மாட்ட?

“இவளை நா கட்டிக்க கூடாதுன்னு நீ சொல்லும் போது நா உன் சம்மதத்துக்காக காத்திருக்கேன்னு சொல்றேனே தவிர நீ சம்மதிச்சுதான் ஆகணும்னு கட்டயமா படுத்தினேன்.? அதே மாதிரி நீயும் என்னை வேறொரு பெண்ணைக் கட்டிக்க கட்டாயப் படுத்தாதே. எல்லாரும் அப்டியப்டியே இருப்போம்.”

நான் சரசுவை என்னறையில் தங்கிக் கொள்ளச் சொல்லி விட்டு, ஒரு பாயும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் வைத்தேன்.
                       ***********************
அம்மா:

நான் இதை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை. நான் பெற்று, உசிரைக் கொடுக்காத குறையாய் வளர்த்திய என் மகன் முதல் முறையாக என் பேச்சை மீறி நடந்து கொள்கிறான் என்பது என்னால் ஏற்க முடியாததாக இருந்தது. எனக்குள் இது நாள் வரை உறங்கிக் கொண்டிருந்த குரோதத்தைத் தட்டி எழுப்பியது. எனக்கும் என் மகனுக்கும் இடையில் புகுந்து விட்ட அந்தப் பெண், பரம விரோதியாகத் தெரிந்தாள் என் கண்களுக்கு. அடுக்களை சென்றேன். ஊற வைத்திருந்த பருப்புகளை மிக்சியிலிட்டேன். என் கோபத்தை மிளகாயில் கூடக் காட்டினேன். கைக்கு வந்ததை அள்ளிப் போட்டேன்.

முதல் இரண்டு அடையைத் தயார் செய்து ஹாலில் உட்கார்ந்தவன் கையில் நீட்டினேன். அவன் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு அதை எடுத்துக் கொண்டு போய் அவன் அறையிலிருந்த அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். எரிச்சலில் என் முகம் சிவந்தது. மீண்டும் அடுக்களை சென்று அவனுக்கு அடை சுட்டேன். தேங்க்ஸ்மா என்றபடி அவன் சாப்பிட நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தேன். சற்று நேரத்தில் அந்த பெண் அடுக்களைக்கு வந்தாள். 

"முதல் முறையா ஒரு தாயோட கைருசியை அனுபவிச்சேன் ஆண்ட்டி. இது அடை இல்லை. அன்பு” அவள் சொல்ல ஒரு வினாடி என் வயிறு குழைந்தது. ஐயோ பாவம் என்ற உணர்வு!  ம்ஹும்...இதற்கெல்லாம் உருகுவதா? இதெல்லாம் என்னைக் குளிர வைக்கும் முயற்சி. நான் அவளை எரித்து விடுவது போல் பார்த்தேன். நாளைக்கு காட்டுகிறேன் நான் யாரென்று....உள்ளுக்குள் கருவினேன்.

மறுநாள் காலை ஆறு மணிக்கே காப்பியைக் குடித்து விட்டு அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றதும் நான் அடுக்களை சென்று எனக்கு மட்டும் காப்பி போட்டுக் கொண்டேன். பிறகு அடுக்களைக் கதவைப் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக் கொண்டேன். அன்று முழுக்க அவளுக்கு ஒரு சொட்டு நீர் கூட வேண்டுமா என்று கேட்கவில்லை. நான் இவ்வளவு இரக்கமில்லாதவளா என்று எனக்கே அவமானமாகத் தோன்றினாலும் நான் என் இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ளவில்லை. அவளும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மதியம் தானே வெளியில் வந்து பானையிலிருந்து நீர் எடுத்து குடித்தாள். "பரவால்லையே ஆண்ட்டி இந்தக் காலத்துலயும் நீங்க பானை உபயோகிக்கறீங்க! இத மாதிரி இயற்கையா குளிர்ந்த நீரரைக் குடிக்க ஆனந்தமா இருக்கு". அவள் புன்னகையோடு கூற என் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எனக்கே தெரிந்தது. 

"இதோ பார் பெண்ணே நீ என்ன மாய்மாலம் செய்தாலும் என் பிள்ளையை வளைச்சுப் போட்டாப்போல என்னை வளைச்சுப் போட முடியாது. என் பிள்ளையை விட்டுட்டு போய்டு. என் குடும்பத்தோட நிம்மதியைக் குலைச்சுடாதே புரிஞ்சுதா? உனக்கு சூடு சுரணை இருந்தா இந்த வீட்டுல பச்சத் தண்ணி கூட குடிக்கக் கூடாது இனி. அவன் வரதுக்குள்ள கிளம்ம்பிப் போய்டு.” வெறுப்புடன் சொன்னேன்.

அவள் அபோதும் புன்னகைக்க எனக்கு பிரஷர் எகிறி விடும் போலிருந்தது. "பரவாயில்லை ஆண்ட்டி. நா உங்களை எதுக்கும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  ஆனா ஏனோ இந்த வீடு எனக்கு ஒரு இதத்தைத் தருது. என் மனசுக்கு பிடிச்சவங்க இருக்கற வீடு. முதல் முறையா ஒரு வீட்டு சூழலில் இருக்கேன். எனக்கு பசி கூட இல்ல. மனசு முழுக்க சந்தோஷம் நிரம்பி இருக்கு. வாசுவோட மனம் புண் படற மாதிரி எதையும் நா செய்ய மாட்டேன். எனக்காக நீங்களும் சாப்டாம உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க ப்ளீஸ்” இப்படி சொல்லி விட்டு அவள் உள்ளே போக நான் குழம்பிப் போனேன். என்ன மாதிரியான பெண் இவள் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் ஒரு உயிரை பட்டினி போட்டு விட்டு சாப்பிட எனக்கும் பிடிக்காமல் நானும் பட்டினிதான் கிடந்தேன்.
                           ****************
வாசு:

காலை முதல் இரவு வரை வீட்டில் என்ன நடந்திருக்குமோ என்ற பரபரப்புடனே வீட்டுக்கு வந்தேன்.  அம்மா எனக்கு சப்பாத்தியும் குருமாவும் தயார் செய்து வைத்து விட்டு படுத்து விட்டிருந்தாள். தூங்குகிறாளா இல்லை என்னிடம் பேசப் பிடிக்காமல் படுத்திருக்கிறாளா என்று புரியவில்லை.

நான் சப்பாத்தியை பிளேட்டில் போட்டு எடுத்துக் கொண்டு என் அறைக்கு வந்தேன். சாப்ப்ட்டயா சரசு என்று கேட்டேன். “ம். நீ சாப்டு” என்றாள். மதியம் என்ன சாப்பாடு இன்னைக்கு? என்று கேட்டபடி சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து வாயிலிட்டேன். அவள் லேசாய்த் தடுமாறியது போலிருந்தது. ஒரு வினாடி யோசித்து விட்டு கத்திரிக்கா காரக் குழம்பு கோஸ் பொரியல் என்றாள் புன்னகையோடு. நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். “மத்தியானம் சாப்ட்டயா நிஜமா?”

“ஏன் வாசு சாப்பிட்டேன்.”

அம்மா?

“அவங்களும் சாப்பிட்டிருப்பாங்க.”

“எங்க வீட்ல கத்திரிக்கா பண்ண மாட்டங்க சரசு. அம்மாக்கு அலர்ஜி உண்டு. இப்போ சொல்லு நீ சாப்ட்டயா? உண்மையைச் சொல்லு.
சரசு புன்னகை மாறாமல் என்னைப் பார்த்தாள்.
                         *****************

அம்மா:

இது என் இயல்பல்ல. நான் ஏன் இப்படி மாறிப்போனேன்? மனைவி, தாய் என்ற நிலைகளைத் தாண்டி மாமியார் என்ற பதவிக்கு வரும் நிலையில் இந்தத் திமிரும், இயல்பற்ற நிலையம் ஏற்பட்டு விட்டதா? நாள் முழுக்க நானும் சாப்பிடவில்லை. நான் சாப்பிடுவதும் சாப்பிடாததும் என் விருப்பம். ஆனால் ஒரு விருந்தாளியாக நினைத்து நடத்து என்று வாசு சொல்லியும், அந்தப் பெண்ணைக் கொலைப் பட்டினி போட்டிருக்கிறேன். சத்தியமாக இது என் இயல்பல்ல. எத்தனையோ கஷ்டப்பட்ட காலங்களில் கூட முன் பின் தெரியாதவர்களும் பசி என்று சொன்னால் அன்போடு இருப்பதைக் கொடுத்து அவர்கள் பசியை ஓரளவுக்கேனும் தீர்த்திருக்கிறேன். 

அப்படி இருக்க, என் விருப்பத்திற்கு மாறாக வீட்டில் பிரவீசித்து விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணுக்கு உணவிடாது என் வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை அவள் நான் உணவிடவில்லை என்று வாசுவிடம் சொன்னால் என் பிள்ளை என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? நாளை என் விருப்பப்படியே ஒரு பெண்ணை மணந்து கொண்டால் கூட என்னை நம்பி அந்தப் பெண்ணை விட்டுச் செல்வானா? இப்படி நினைத்ததும் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒரு வித குறுகுறுப்போடு வாசுவின் அறைப் பக்கம் சென்றேன். கதவு சார்த்தியிருந்தாலும், உள்ளங்கை அகல இடைவெளியில் உள்ளிருந்து வெளிச்சம் தெரிந்தது. வாசு அவளிடம் பேசியதும் கேட்டது.

“எங்க வீட்ல கத்திரிக்கா பண்ண மாட்டங்க சரசு. அம்மாக்கு அலர்ஜி உண்டு. இப்போ சொல்லு நீ சாப்ட்டயா? உண்மையைச் சொல்லு”

“................................................”

“ஆக அம்மா உன்னை பட்டினி போட்ருக்காங்க.”

“அவங்க கோபத்தை நாம புரிஞ்சுக்கணும் வாசு. அவங்க எவ்ளோ நல்லவங்கன்னு நீயே என்கிட்டே பலமுறை சொல்லி இருக்க. அவங்க பக்கத்து நியாயத்தையும் நாம பார்க்கணும்”

“அந்த நம்பிக்கையில்தான் அவங்க கிட்ட நம்ம காதல் விஷயத்தைச் சொன்னேன். ஆனா எல்லா சராசரி அம்மாக்களையும் போலதான் தானும்னு நிரூபிச்சுட்டாங்க. .உன்னைப் பட்டினி போட்டதுல என் பங்கும் இருக்கு. நா சொன்னதாலதானே நீ இங்க வந்த? உன்னை இங்க கூட்டிட்டு வந்தா உன்னை நேரா பார்த்து, பழகினா அம்மா என் தேர்வு சரிதான்னு ஒத்துப்பாங்கன்னு முடிவெடுத்தேன். இந்த முடிவை நீ மறுத்திருக்கலாமே சரசு? இங்க கூட்டிட்டு வந்தும் உன்னை அனாதையா உணர வெச்சுட்டேன் இல்ல?

“இல்ல வாசு. எப்போ உன் மேல காதல் வந்துதோ அப்பவே அனாதைங்கற உணர்வு போய்டுச்சு. நா உன்னை நேசிக்கறேன் வாசு. உன் மீதான முழு நம்பிக்கையையும் உள்ளடக்கியதுதான் என் காதல். எனக்குன்னு தனி முடிவு ஏதுமில்ல.”

“ஏண்டா உன்னைக் கூட்டிட்டு வந்தோம்னு இப்போ தோணுது. முதல் நாளே இப்டின்னா? நாம தோத்துடுவோமான்னு கவலையா இருக்கு. எனக்காக நீ ஏன் கஷ்டப்படனும் சரசு? எங்கம்மாவை நீ எதுக்கு சகிச்சுக்கிட்டு இங்க பட்னியோட இருந்திருக்கணும்?. எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டு கிளம்பிப் போயிருக்கலாம் நீ.”

“என்ன பேசற வாசு? நா உன்னை மட்டுமா காதலிக்கறேன்னு நினைச்ச? உன் மேல எப்போ காதல் ஏற்பட்டுதோ அந்த நிமிடமே உங்கம்மாவையும் நா காதலிக்க ஆரம்பிச்சாச்சு. உன் வீடு, உன் உடைகள், உன் பேனா, உன் புத்தகங்கள், உன் கோபம், உன் வெறுப்பு, உன் வியர்வை, உன் சுக துக்கம், எல்லாமே என் காதலுக்குரியதுதான். சுயநலம் கொண்டது எப்படி காதலாகும்?. இந்த பசியைக் கூட நா நேசிக்கறேன். என் காதலால் எனக்கு கிடைத்த இந்த பசி எப்டி துன்பமாகும்?. கல்யாணம் தாலி எல்லாம் வெறும் சமூக அங்கீகாரம்தான் வாசு. அதை எல்லாம் எதிர் பார்த்து நா உன்னைக் காதலிக்கலை.கிடைச்சா கூடுதல் மகிழ்ச்சி. கிடைக்கலையா அப்பவும் என் காதல் எனக்குள்ள தொடரும். எனக்குள்ள காதலை ஏற்படுத்தின நீயும், உன்னைப் பெற்ற உன் அம்மாவும் எப்பவுமே என் காதலுக்குரியவர்கள்தான். பசி எனக்கு புதிதல்ல. சாப்பாடே கிடைக்காம எத்தனையோ நாள் பட்டினி இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு என் பட்டினியிலும் ஒரு காதல் இருக்கு. எந்த மாற்றமும் இயல்பா இருக்கணும் வாசு. வற்புறுத்தி யாரையும் நம்ம வழிக்கு கொண்டு வந்தா அது வெறுப்பைத்தான் வளர்க்கும். உங்கம்மாவோட கோபமும் வெறுப்பும் இயல்பானது. போலித்தனமில்லாதது. சொல்லப் போனா இப்பதான் நா அவங்களை அதிகம் நேசிக்கறேன். உன் மேல எவ்ளோ பாசம் அவங்களுக்கு! உன் மேல பாசம் வெக்கறவங்க எப்பவுமே என் காதலுக்குரியவங்கதான் வாசு”

நான் அழுகிறேனா என்ன? ஆம் என் கண்கள் வழிந்து கொண்டிருந்தது. இந்த வினாடி என்னை அதிகமாக நானே வெறுக்கிறேன். காதல் என்பதன் உண்மையான புனிதத்தைப் புரிந்து கொண்டேன். என் மகனின் சௌக்கியம்தானே எப்போதும் என் நோக்கமாக இருக்கிறது! அப்படியிருக்க இன்று அதற்கு எதிராக ஏன் நடந்து கொள்கிறேன்? என் சுய நலத்தைத் தவிர வேறென்ன காரணமிருக்க முடியும் இதற்கு? சுயநலம் கொண்ட அன்பு எப்படி உண்மையான அன்பாக இருக்க முடியும்? உன்னைப் பெற்றதால் உன் தாயையும் நான் காதலிக்கிறேன் என்று அவள் சொல்லும் போது, உன் தேர்வு எப்போதும் தரம் தாழ்ந்ததாக இருக்காது, நீ நேசிக்கும் பெண் என் நேசத்திற்கும் உரியவள்தான், என்று நானும் சொல்லி இருக்க வேண்டாமா? என் வளர்ப்பின் மீது நானே அவநம்பிக்கை கொள்ளலாமா? உதவிக்கே வராத உறவுகளுக்காகவும் சமூக கௌரவத்திற்குமா நான் வாழ்கிறேன்? என் மகனுக்காக நான் வாழவில்லையா? எனக்குள் எழும்பிய இக்கேள்வி என்னை வெட்கப்படச் செய்தது. என் கண்ணில் வழிந்து கொண்டிருந்த கங்கை என் பாவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி சுத்தப் படுத்திக் கொண்டிருந்தது.

நான் அந்த அறையின் கதவு திறக்கக் காத்திருந்தேன். என் மகளாக அடியெடுத்து வைக்கப்போகும் மருமகளிடம் என் காதலைச் சொல்லவும், என் அன்பால் அவள் பசி தீர்க்கவும் காத்திருந்தேன்.

                     *******************************************

Thursday, October 20, 2016

வெளிச்சம் - தீபாவளி சிறுகதை

வெளிச்சம்.

கதை  கேட்டபடி  என்  மடியிலேயே  தூங்கிப்  போயிருந்த மகளை,  அவள்  உறக்கம்  கலைந்து  விடாமல்  படுக்கைக்கு  மாற்றி,  போர்த்தி விட்டு அவள் முகத்தைச் சற்று நேரம் அன்போடு பார்த்தேன். ஆறு வயசுக்கு அதி புத்திசாலி. அடேயப்பா எத்தனை கேள்விகள்! பதில் சொல்லி  மாளாது.  சில கேள்விகள் திணறடிக்கும். அவள் கேள்விகளுக்கு பதில்  சொல்வதற்காகாகவே நான் நிறைய புத்தகம் புரட்ட வேண்டியிருந்தது. 

"சாமி  ஏம்பா  கண்ணுக்கு  தெரியறதில்ல?"  கோகுலத்து கிருஷ்ணனின்  லீலைகளைப்  பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது அவள் கேட்ட  கேள்வி  இது.  

"ஏன்  தெரியாம?  எத்தனையோ பேர் சாமியப் பாத்திருக்காங்களே"

"நீ  பாத்திருக்கயா?"

"இல்லையே"

"ஏன்?"

அதுக்கெல்லாம்  நிறைய  தவம்  பண்ணனும். பரிசுத்தமான பக்தியோட  எப்பவும்  கடவுள்  நினைப்புலயே  இருக்கணும்"

"நல்லவங்க  கூப்ட்டா  கடவுள்  ஓடி  வருவார்னு  சொன்னயே.  அப்போ  நாம  நல்லவங்க  இல்லையா?"

“இது  கலியுகம்டா  செல்லம். சாமி நேரா வர மாட்டார்.  மனுஷங்க  மூலமா வந்துதான் நல்லது செய்வார். "

"அப்போ  மனுஷங்கதான்  சாமியாப்பா?"

"அப்டித்தான்.'

"அப்போ  ஏன்  நிறைய  பாம்  பிளாஸ்ட்  எல்லாம்  நடக்குது?"

"நான் ஒரு வினாடி என்ன  சொல்வதெனப் புரியாமல்  திணறினேன். பிறகு சுதாரித்துக்க்குக் கொண்டு  சொன்னேன். தேவர்களுக்கு  எதிரா  அசுரர்கள் இருக்கறதில்லையா?  தெய்வம்  மட்டும்  மனுஷ  ரூபம் இல்லடா  செல்லம். அசுரரும் மனுஷ ரூபம்தான் கலியுகத்துல". 

பெண்ணின்  புத்திசாலித்தனம்  கண்டு  ஒரு  தந்தையாய்  பெருமிதம் கொண்ட அதே  நேரம்  மனசின்  மூலையில் மெலிதாய்  ஒரு வலி. இரண்டு  நாட்களுக்கு முன் நான்  கண்ட குழந்தைகள் என் நினைவுக்கு வர என் அடி வயிறு கனத்துப் போனது.  

குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆவணப் படமொன்று எடுப்பதற்காகத் தென்கோடியிலிருந்த ஒரு கிராமத்திற்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருக்க  நேரிட்டது. இதுநாள் வரை கேள்வி மட்டுமே பட்டிருந்த விஷயங்கள் கண்முன்னே காட்சிகளாய்க் கண்ட போது  மனம் சொல்லவொண்ணா துயரத்திலாழ்ந்தது. 

                                                     **********

விடியல்  இருளில்  பேருந்து  ஒலிப்பானின் சப்தம் அந்த ஊரின் நிசப்தத்தைக் கலைத்த சில நிமிடங்களில் ஒவ்வொரு வீட்டுக் கதவும் திறந்தது. பல குழந்தைகள் உறக்கம் கலையாமல் வெளிப்பட்டனர். கேமரா மூலம் அந்த சிறுவர்களின் முகங்களை நெருக்கத்தில் கண்ட போது மனசு அதிர்ந்தது. பால் வடியும் முகங்கள். தமக்கையின் கை பிடித்து தூக்கக் கலக்கத்தோடு நடந்தான் ஒரு பாலகன்,  விரல் சூப்பலைக் கூட நிறுத்தாத ஒரு ஐந்தாறு வயது சிறுமி வாயில் விரலோடு பேருந்தை நோக்கி நடந்ததைப் பார்த்ததும் என் உள்ளம் அதிர்ந்தது.    

சொகுசான பேருந்து பயணம் என்ற தூண்டிலில் பிடிக்கப் பட்ட சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள். கந்தக வாசத்துடன் களங்கமில்லாமல் சிரித்த மலர்கள். 

"உம்  பேரென்னம்மா ?"

"தாமர"

"அட  ....அழகார்க்கே  பேரு.  ஆமா  படிக்க  இஷ்டமில்லையா  உங்களுக்கெல்லாம்?  இந்த  வயசுல வேலைக்குப்  போறீங்க?"

என்  கேள்வி  புரியாதது  போல  அவள்  சிரித்தாள். 

"ஒரு  நாளைக்கு  எவ்ளோ  சம்பாதிப்ப?

"தெரியாது.  அம்மா  கிட்டதான்  தருவாங்க"

"கை  வலிக்கலையா  உனக்கு?"

"வலிக்கும்"

அம்மா கிட்ட  சொன்னயா  வலிக்குதுன்னு?"

"அம்மா  அடிச்சா  இத விட  வலிக்குமே"

"இது  படிக்கற  வயசு தெரியுமா"

"அப்டின்னா?"

அங்கே இருந்த பல குழந்தைகளுக்கு படிப்பு பற்றி, பள்ளிக்கூடம் பற்றி தெரியவில்லை. எது கேட்டாலும் சிரித்தார்கள். பசை, குச்சி, கந்தகம்,  தீப்பெட்டி, இதைத் தாண்டி வேறெதுவும் தெரியவில்லை. இருட்டோடு உறக்கம் கலையாத விழிகளுடன் கிளம்பும் இவர்கள் இருட்டிய பிறகு பேருந்திலேயே தூங்கிக் கொண்டு வீடு திரும்பிய கொடுமையைப் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிய போது மனசு கனத்துப் போயிற்று. கிளம்புவதற்கு முன் தாமரையின் தாயாரைப் பார்த்தேன்.  



"என்ன  கொடுமைங்க  இது?  இப்டி  குழந்தைகளை  வேலைக்கு  அனுப்பினா,  ஓடி  விளையாட  வேண்டிய  அவங்க  குழந்தைப்  பருவத்தை  இழந்துட  மாட்டாங்களா?"

"அதுக்கென்னய்யா  செய்ய?  பாவப்பட்ட ஜன்மம் நாங்க. இதான் எங்க தலையெழுத்து."

“அதுக்காக  குழந்தைகளை  வேலைக்கு  அனுப்பலாமா?

“என்ன  செய்ய  சொல்றீங்க?  வறுமை!.  அதுங்க வயத்துக்கு அதுங்க சம்பாதிச்சாதான் சோறு. எங்க  நிலைமை அதான். பழகிப் போச்சுங்க."

நான்  தாமரையை  அருகில்  அழைத்தேன்.  சாக்லேட்  டப்பா  ஒன்றை  நீட்டினேன்.  "பஸ்சுல   எல்லார்க்கும்  கொடுத்துட்டு  நீயும்  சாப்டு."

"என்ன  இது?"

"இனிப்பு"

"அப்டின்னா?"

"சாப்ட்டுப் பாரு. நான் வரட்டுமா? இன்னிக்கு ஊருக்குக் கிளம்பறோம்"

"மறுபடியும்  வருவீங்களா?"

"ஏதாவது  வேலையிருந்தா  வருவேன்"

"உங்களுக்கு  குழந்தை  இருக்கா?"

"ஒரு  பொண்ணு  இருக்கு.  ஆறு  வயசாகுது "

"உங்க பொண்ணு எந்த பட்டாசு கம்பெனில வேலை  பாக்கது?"  தாமரை கேட்டதும் அதிர்ந்தேன். அவளைப்  பொறுத்தவரை எல்லா குழந்தைகளும் பட்டாசு கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். அவளுக்கு அதுதான் தெரியும். நான் கனத்த மனதோடு அவள்  முதுகில்  தட்டிக்  கொடுத்து  விட்டு  கிளம்பினேன்.  



தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைகளுக்கு வேலையும் கூடியிருந்தது. கைகளில் கந்தகம்,  கண்களில் சோர்வு, இதழ்களில் புன்னகை. தாயின் மடிசுகம் தெரியாது. தந்தையின் அரவணைப்பு கிடையாது. தாயின் தாலாட்டு,  உணவுக்கு பதார்த்தமாய் பழந்தமிழ்க் கதைகள், காலைத் தூக்கம், மாலை விளையாட்டு, கல்வி,  நல்ல உணவு எதுவும் இவர்கள் வாழ்க்கையில் கிடையாது.  

நான்  பெருமூச்சு  விட்டேன்.  

*********************************

"ஊர்லேர்ந்து  வந்ததுலேர்ந்து  என்ன  யோசனை?"  திவ்யா நின்று போயிருந்த கடிகாரத்திற்கு பேட்டரி மாற்றியபடி என் சிந்தனையைக் கலைத்தாள். 

"ஒண்ணுமில்லை"

"போன  காரியம்  நல்லபடி  முடிஞ்சுதா?  ஆவணப்  படம்  சரியா வந்திருக்கா?"

"ம்"

"நாலு  நாளில்  தீபாவளி.  அப்பா  வேணும்னு உங்க பொண்ணு ஒரே ரகளை. நீங்கதான் டிரெஸ் எடுக்கணுமாம். நா எடுத்தா போட்டுக்க மாட்டாளாம். நாளைக்கு முதல் வேலையா அவளுக்கு டிரெஸ் வாங்கப் போறோம் சொல்லிட்டேன்”. 

"ம்"  நான் திரும்பிப் படுத்தேன். ஏனோ தாமரையின் முகம் கண்ணுக்குள் வந்து போயிற்று.  

மறுநாள் துணிக்கடைக்குப் போய் பெண்ணுக்கு விலை உயர்ந்த கவுன் வாங்கினோம். அவள் கேட்ட மற்ற பொருட்களையும் வாங்கிக்  கொடுத்தேன். 

"பட்டாசுப்பா?"

"வாங்கலாம்"

"நிறைய  வாங்கணும்பா"

"சரி"

பட்டாசுக்  கடையில்  கூட்டம்  அலைமோதியது.  திவ்யாவும்  பெண்ணும் பட்டாசு தேர்ந்தெடுப்பதில் மும்மூரமாக,  எனக்கோ ஒவ்வொரு பட்டாசிலும் தூக்கக் கலக்கத்தோடு ஒரு குழந்தையின் முகம் தெரிந்தது. சட்டென கடையை விட்டு வெளியில் வந்து நின்றேன்..  

***********************


தீபாவளிக்கு முதல் நாள் நான் திடுதிப்பென்று அந்த கிராமத்திற்கு கிளம்பினேன்.  

'அப்பா என்னப்பா தீபாவளிக்கு இருக்க மாட்டீங்களா" பெண் என்னை ஏமாற்றத்துடன் கேட்டாள்.  

"முக்கியமான வேலைடா செல்லம். நீ என்ஜாய் பண்ணு சரியா?" நான் கிளம்ப அவர்கள் முகத்தில் ஏமாற்றம். ஏனோ இந்த தீபாவளியை அந்தக் குழந்தைகளோடு கழிக்க வேண்டும் போலிருந்தது. அந்த குழந்தைகள் தங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் போலிருந்தது. அந்த கிராமத்தில் ஒரு என்பது குழந்தைகள் இருப்பார்களா?  அத்தனை பேருக்கும் இனிப்புகளும் மத்தாப்பும், புஸ்வான பெட்டிகளும்,  ஊசி வெடிகளும் வாங்கிக் கொண்டேன். நான் போய்ச் சேரந்த நேரம் இருட்டிப் போயிருந்தது. தீபாவளியின் உற்சாகம் எங்கும் தென்படவில்லை.  பட்டாசுக் கம்பெனி பேருந்து ஒலிப்பானை அலற விட்டபடி வந்து நின்று, தூக்கக் கலக்கத்துடன் இருந்த சிறுவர்களை உதிர்த்து விட்டுச் சென்றது.

என்னைப்  பார்த்ததும் படம் பிடிக்கத்தான்  வந்திருப்பதாக எண்ணி சற்றே நின்றார்கள்.  

"இனிப்பு  வாங்கிக்குங்க" நான் அவர்களிடம் இனிப்பு பெட்டிகளை நீட்ட எவர் முகத்திலும்  ஆர்வமில்லை. 

நாளைக்கு  தீபாவளியில்ல....உங்களுக்காக  பட்டாசு  வாங்கிட்டு வந்திருக்கேன். கொண்டு போய் வெடிங்க. இந்த மத்தாப்பு புஸ்வாணமெல்லாம்  நல்லா வெளிச்சமா கலர் கலரா இருக்கும்""

குழந்தைகள் அதிலும் ஆர்வம் காட்டாது அசட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

"தாமர...இந்தா  வாங்கிக்  கொடு  எல்லாருக்கும்"  நான் தாமரையைத்  துணைக்கழைத்தேன். 

"வேணாம்"

"ஏம்மா"

"எங்களுக்கு  இந்த  வெளிச்சம்  வேணாம்"

நான்  திகைத்து நின்றிருந்த போதே,  குழந்தைகள் என்னைத் தாண்டி அரைத் தூக்கத்தோடு நடந்து சென்றார்கள். தாமரை எந்த அர்த்தத்தில் இதைச் சொன்னாளோ தெரியாது. அதில் வேறொரு அர்த்தமுமிருந்தது எனக்கு உரைத்தது. நான் கையாலாகாதவனாக அடுத்த பேருந்தைப்  பிடித்தேன். 



                                 ****************************************