Friday, January 29, 2016

அஹோபிலம் - 2

அஹோபிலம் - 2

கிழக்குத்  தொடர்ச்சி  மலையை  ஆதிசேஷனாக  கொண்டால், அதன்  தலைப்பகுதியில்,  திருப்பதியும்,  நடுப்பகுதியில், நல்லமல்லா  மலைத்தொடரில்  அஹோபிலமும்,  வால்பகுதியில்  ஸ்ரீ சைலமும்  இருக்கிறது. ஜ்வாலா நரசிம்மர்  இருப்பது   2800  அடி  உயரத்தில்.

மறுநாள்  காலை ஆறுமணிக்கு  காப்பி  மட்டும்  குடித்து  விட்டு   மலையேற்றத்திற்குத்  தயாராகக்  கிளம்பினோம்.  கீழ்  அஹோபிலத்தில்  எங்களை  இறக்கி  விட்டது  எங்கள்  பேருந்து.   இயற்கையான  ஒரு  குகையில்தான்  இங்கே  சுயம்புவான அஹோபில நரசிம்மர்  இருக்கிறார்.  ஹிரண்யனை  வதம்  செய்யும்  கோலத்தில்  உக்கிரமூர்த்தியாய்.  கீழே  பிரஹலாதனும் உள்ளான்.   நரசிம்மரை  தரிசிப்பதற்கு  முன்  ஆதிசங்கரர்  பிரதிஷ்டை  செய்த  சிவலிங்கமும்,  சுதர்சன,  ஸ்ரீ  சக்ரங்களும்   இருக்கிறது.   இஸ்லாமிய  படையெடுப்பின் போது  இங்குள்ள  குகை  ஒன்றில்  உள்ளே  நுழைந்த  ஜீயர்  ஒருவர்  பின்னர்  வெளியில்  வரவில்லை  என்றார்  வழிகாட்டி.  அந்த  குகை  இப்போது  மூடப்பட்டுள்ளது.  கருடனும்,  ராமரும்  வழிபட்ட  மூர்த்தி  இவர். தாயார்  சந்நிதி   தனியே  உள்ளது.





இந்தக்  கோயிலின்  வாசலில்  மலையேறுவதற்கு  உதவியாக  மூங்கில்  கழி  கிடைக்கும்.   இங்கிருந்து  ஒளவையார்  கோலம்தான்.   நெல்லிக்கனியும்  விற்கிறார்கள்.  கொஞ்சம் வாங்கிக்  கொண்டால்  நல்லது.  வாயில்  அடக்கிக்  கொண்டால்  அதிக  தாகம்  எடுக்காது.  சிறிய  தண்ணீர்  பாட்டிலும்,  கொஞ்சம்  சாக்லேட்களும்  வைத்திருக்கலாம்.  பையில்  அதிக  சுமை  வைத்திருக்க  வேண்டாம்.

அடுத்து  நாங்கள்  சென்றது  ஜ்வாலா  நரசிம்மரை  நோக்கி.   பாதை  எல்லாம்  கிடையாது.  பவநாசினி  நதியை ஒட்டி,  குட்டியானை  சைஸிலிருந்து,  குட்டிக்  குரங்கு  சைஸ்  வரை  பாறைக்  கற்கள்  கொட்டிக்  கிடக்கிறது.  இதில்  ஏறியும்,  புகுந்தும்,  புறப்பட்டு  செல்ல  வேண்டியதுதான்.  புகைப்படங்களைப்  பார்த்தால்  உங்களுக்கே  புரியும்.  ஜெய்  நரசிம்மா  என்று  கூறியபடி  முதலடியை  வைத்தோம்.  எனக்கு  இது  மாதிரி  டிரெக்கிங்  என்றால்  அல்வாதான்.  செம  குஷியாகி  விடுவேன்.   நடு  நடுவே  மரப்பலகைகள்    அடிக்கப்பட்ட  பாலங்களும்  இருக்கிறது.  பலகைகளில்  நிறைய  பிளவுகளும்  உடைந்து  போய் ஓட்டைகளும்  இருக்கிறது.  ஜாக்கிரதையாக  நடக்க  வேண்டும்.





ஜ்வாலா  போகும்  வழியிலேயே  குரோட  (வராஹ)  நரசிம்மர்  இருக்கிறார்.  ஒரு  காலத்தில் குகைக்குள்   தவழ்ந்து  சென்று  போய்த்தான்  இவரைப்  பார்க்க  முடியுமாம்.  இப்போது  குகையை  செதுக்கி  முன்  மண்டபம்  எழுப்பி  வசதி  செய்திருக்கிறார்கள்.  இவரை  வராஹ  மூர்த்தியாய்  மூக்கின்  மீது  பூதேவியை  சுமந்த  சுயம்பு வடிவம்.   ஒவ்வொரு  நரசிம்மர்  கோயிலிலுமே  சுயம்பு  வடிவத்தோடு  அதே  போன்ற  பிரதிஷ்டா  வடிவமும்  இருக்கிறது.  எங்கள்  யாத்திரை  மலை மேல் நோக்கி  தொடர்ந்தது.

கடுமையான  காட்டு  வழி  என்பதால்  தனியே  செல்வதைத்  தவிர்க்கலாம்.  ஆனாலும்  நான்  மொபைலில்  நின்று  நிதானமாக  படம்  எடுத்துக்  கொண்டுதான்  நடந்தேன்.   இருந்தாலும்  வேகத்தைக்  கூட்டி  என்னோடு  வந்தவர்களுடன்  இணைந்து  விடுவேன். நம்மைக்  கடந்து  டோலிகளில்  செல்பவர்களையும்  காணலாம். வழியில்  ஓரிடத்தில்  வழிகாட்டி  இங்கே  வந்து  பாருங்க  என்று  எதையோ  காட்டினார்.  அவர்  காட்டிய  இடத்தில்  தெரிந்தது  உக்கிரஸ்தம்பம்.     நரசிம்ம்மர்  வெளிப்பட்ட  தூண்.  அதன்  உச்சியில்  செந்நிறக்  கொடிகள்.

ஏறமுடியுமா?  நான்  கேட்டேன்.  கொஞ்சம்  கஷ்டம்மா. என்றார்

எவ்ளோ  நேரமாகும்?

ரெண்டு  மணி  நேரமாவது  ஆகும்.

கவிதாவின்  மைத்துனன்  மிதுன்  நா  போயிட்டு  வரட்டுமா  என்றான்  தன்   தாயிடம்.  எனக்கும்  போக வேண்டும்  என்ற  ஆசை.   ஆனால்  சம்மந்தியிடமிருந்து  அனுமதி  கிடைக்கவில்லை.  மற்ற  நரசிம்மரை  எல்லாம்  பார்த்துட்டு  நாலு  மணிக்கானம்  புறப்பட்டாதான்  ஊர்  போய்ச்  சேர  முடியும்  என்று  மறுத்து  விட்டார்.  தவிர  நாங்கள்  ரிஸ்க்  எடுத்து  அந்தக்  குறுகிய  செங்குத்தான  ஸ்தம்பத்தில்  ஏறுவதையும்  அவர்  விரும்பவில்லை. மிதுனிற்கு  இதில்  நிறைய  வருத்தம்.  பாவம்  சின்ன  பையன்.  சுலபமாக  ஏறி   விடக்  கூடியவன்தான்.  என்ன  செய்ய?

ஸ்தம்பத்தை  ஏக்கத்தோடு  பார்த்தபடி  தொடர்ந்து  நடந்தேன்.   பாறைக்  கற்களைக்  கடந்து  நடந்த  பிறகு  படிகள்  மூலம்தான்  ஏற  வேண்டும்.  உண்மையில்  படிகளில்  ஏறிச் செல்வதுதான்  கடினம்.  கிட்டத்தட்ட  எழுநூறு  எண்ணூறு  படிகள்  இருக்கும்.  ஆனால்  நம்புங்கள்.  நெல்லிக்கனி  உபயத்தில்  நான்  அதிகம்  நீர்  அருந்தவில்லை.  உடனடி  சக்திக்கு  சாக்லெட்டும் .   தேவைப்படவில்லை.  சர்க்கரை அளவு   குறைந்து  விடக்  கூடாதே  என்பதற்காக  நானாக  நடுவில்  ஒரே  ஒரு  சாக்லேட்  எடுத்து  சாப்பிட்டேன்.  ஒரு  வழியாக  படிகள்  முடிந்து  சற்று  தூரத்தில்  நமக்கு  இடப்புறம்  கோயில்  தெரிந்தது.  ஒற்றையடிப்பாதை.  வேதாத்திரி  மலைக்கும்,  கருடாத்ரி  மலைக்கும்  இடையே  ஒரு  சிறிய  குகைக்  கோயில்.  குகைக்கு  வெளியே  கம்பிக் கதவு.





அந்த  ஒற்றையடிப்  பாதையில்  வேதாத்திரி  மலையைத்  தொட்டபடி  நடக்கையில்  மலையிலிருந்து  நம் மீது  நீர்  சொறிகிறது.  மழையற்ற  போதே  நீர்  சொரிகிறது  என்றால்  மழையின்  போது?     குற்றாலம்  மாதிரி  கொட்டுமாம்.  இணையத்தில்  அருவி  கொட்டும்  ஒரு  புகைப்படமும்  கிடைத்தது.  ஜ்வாலாவுக்கு  செல்லும்  வழியிலேயே  வலப்புறமாய்  உக்கிரஸ்தம்பத்திற்கு  ஏறும்  வழி  உள்ளது.  வழியா?  வானரம்  போல்  ஏற  முடிந்தால்  அதுதான்  வழி.  உடலால்  செல்ல வாய்ப்பு  கிடைக்கா விட்டால்  என்ன?.  நமக்குதான்  மானசீகமாகவும்  செல்ல  முடியுமே.  கிடு கிடுவென்று  மனசால்  ஏறிசென்று, அங்கு  வீசும்  பேய்க் காற்றை  அனுபவித்து  விட்டு,  நரசிம்ம  பாதங்களை,  கொடியையும்  பார்த்தாயிற்று, முழுவதும்  ஏறா  விட்டாலும்  மிதுன்  ஆசைக்கு  கொஞ்ச  தூரம்  ஏறி  விட்டுத்  திரும்பினான்.  இருவரும்  அந்த  வழியில்  நின்று  புகைப்படம்  மட்டும்  எடுத்துக்  கொண்டோம்.



வேதாத்திரி  மலையை  ஒட்டி இன்னும்  இரண்டடி  நடந்தால்  மலையை  ஒட்டி  கீழே  ஒரு  குண்டம்.  அதற்கு  மலையே  குடை  பிடித்தாற்போல்  இருக்கிறது. மூங்கில்  கழிகளால்  தடுப்பு  கட்டியிருக்கிறார்கள்.   உள்ளே  இளம்  சிவப்பு  நிறத்தில்  நீர்.  அதுதான்  ரக்த  குண்டமாம்.  ஹிரண்ய  வதம்  முடிந்த  பின்  நரசிம்மர்    இரத்தம்  படிந்த  தன  கரங்களைக்  கழுவிய  இடம்.    தண்ணீர்  கல்கண்டு  போல்  இனித்தது.  என்  தண்ணீர்  பாட்டிலை  காலி  செய்து  விட்டு  தடுப்புக்கு  உள்ளே  சென்று  நீர்  எடுத்துக்  கொண்டிருந்த  ஒரு  மனிதரிடம்  கேட்டு  பாட்டிலில்  நீர்  சேகரித்துக்  கொண்டேன்.

ரக்த  குண்டத்தை  ஒட்டி  ஜ்வாலா  நரசிம்மர்.  மிஞ்சிப்போனால் உள்ளே  பத்து  பேர்  நிற்கலாம்.  அவ்வளவுதான்  இடம்.  சுயம்பு  நரசிம்ம  மூர்த்தியைப்  பார்த்து  பக்தியோடு  ஆச்சரியமும்  ஏற்பட்டது.  மடியில்  ஹிரண்யன்,  இரு கைகள்  அவன்  தலையையும்,  தொடையையும்  அழுத்திப்  பிடிக்க,  இரு  கைகள்  வயிற்றைக்  கிழிக்க,  இரு  கைகள்  குடலை  உருவி,  மாலையாக  அணிய, உக்கிரமூர்த்தியாக  சிலையாக  வடிக்கப்  பட்டாற்போல்  ஒரு  சுயம்பு மூர்த்தியா  என்று  வியக்காமல்  இருக்க  முடியவில்லை.  அவ்வளவு  துல்லியம்.

ரக்த  குண்டத்திலிருந்து  காணும்  போது  எதிர்புறம்  தெரிந்த   கருடாத்ரி  மலை  சிறகு  விரித்த  கருடன்  போலவே  தெரிகிறது.  உற்று  கவனித்தால்  மூக்கு  கூடத்  தெரியும்.  நரசிம்ம  அவதாரத்தை  காண  விரும்பிய  கருடனை  மகா  விஷ்ணு  இம்மலைக்குச்  சென்று  தவம்  செய்யுமாறு  கூறியனுப்ப,   அவரும்  இங்கே  வந்து  தவக்கோலத்தில்  இருந்திருக்கிறார்.  கிருத  யுகத்தில்  இம்மலை  ஹிரண்யனின்  அரண்மனையாக  இருந்திருக்கிறது.  ஹிரண்ய  வதத்திற்காக   தூண்  பிளந்து  வந்த  நரசிம்மமூர்த்தியை  கருடனும், பிரஹலாதனும்   சேவித்திருக்கிறார்கள்.

(காத்திருங்கள்  தொடர்ந்து  தரிசிப்போம்)



2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஜ்வாலா நரசிம்மர் இருப்பது 2800 அடி உயரத்தில். //

அடேங்கப்பா. பாதைகள் சரியில்லாமல் குச்சி ஊன்றி ஒளவையாராக நடப்பது மிகவும் த்ரில்லிங்கான அனுபவம் தான்.

குச்சியுடன் சோளிங்கர் மலையும் அதன் அருகே உள்ள அனுமார் மலையும் சமீபத்தில் ஏறி இறங்கினேன். அங்காவது ஏறிச்செல்ல வசதியாக சுமார் 2000 படிகள் இருந்தன. ஆனால் படிக்கு 10 குரங்குகள் வீதம் 20000 குரங்குகள் இருந்து எங்களை மிகவும் பயமுறுத்தின. குரங்குகளுக்காகவே கீழே கடைகளில் வாடகைக்குக் குச்சி தருகிறார்கள்.

தங்களின் இந்தப் படங்களும் பதிவும் மிக அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Anuprem said...

அப்பாவும் ,அம்மாவும் ...இங்கு சென்று வந்த அனுபவங்களை கேட்டு இருக்கிறேன் ....ஆனால் படங்களை இன்று தான் பார்க்கிறேன் ....

மிகவும் அருமை...