ஆங்கிலமும் நானும் என்ற கோபியின் பதிவு படித்ததன் வெளிப்பாடு இது.
கணிப்பொறி என்பது நான் படித்த காலத்தில் இல்லை. எழுபதுகளில் பள்ளி, கல்லூரிப் படிப்பு. அப்போதெல்லாம் எஸ் எஸ் எல்.சி படிக்கும் போதே டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் கண்டிப்பாக சேர்ந்து விட வேண்டும். என் வீட்டுக்கருகில் அருண்டேல் தெருவில் கன்னட ராவ் ஒருவர் நடத்திய காமக் கோட்டி டைப்பிங் இன்ஸ்டிடியுட்டில் நானும் என் சிநேகிதியும் நல்ல நாள் பார்த்து சேர்ந்தோம். டைப்பிங் அடிப்பதே அந்த காலத்தில் ஒரு பெருமைக்குரிய விஷயம். அந்த சப்தமும் வேகமும் காதுக்கு இனிமையாகவே இருக்கும். ஆறாம் மாதம் லோயர், அடுத்த ஆறாம் மாதம் ஹயர். சுருக்கெழுத்தின் மீது எனக்கு ஒரு காதலே உண்டு. ஷார்ட் ஹாண்ட் இன்டர் வரை பாஸ் பண்ணிய போது என் அப்பாவுக்கு என்னை விட சந்தோஷமும் பெருமையும் கூடியது எனலாம்.
டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் தகுதிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருமணத்திற்குப் பிறகு சர்வீஸ் கமிஷனை பாஸ் செய்த போது (அதுவும் முதல் அட்டம்ப்ட்டிலேயே) சத்தியமாக எனக்குத் தெரியாது. டைப்பிங்கும் ஷார்ட் ஹான்டும் என்னை விட்டு விலகப் போகிறதென்று. வெறும் எழுத்தராகப் பணியில் சேர்ந்த போது டைப்பிங் பிரிவிலிருந்து கேட்கும் தட்டச்சு ஒலி ஏக்கமாக இருக்கும். காலப் போக்கில் அது பழகி விட்டது.
கணிப்பொறி அறிமுகமான புதிதில் அலுவலகத்தில் ஒரே ஒரு கணிப்பொறிதான் இருந்தது. இரண்டே பேருக்குதான் அதனருகில் செல்லும் உரிமை. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு சென்ற புதிதில் ஆங்கிலத்தைக் கண்டு மிரண்டது மாதிரிதான் கணிப்பொறியும் மிரள வைத்தது. அயல் கிரகத்திலிருந்து எதோ வந்திருப்பது போல் மலங்க மலங்க பார்ப்பேன் . அந்த உபகரணம் ஒரு காலத்திலும் எனக்கு தேவைப் படாது என்றுதான் நினைத்திருந்தேன். ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும். எனவே கண்டு பிடிக்கப்படும் ஒவ்வொரு பொருளையும் கையாளத் தெரிந்து கொள்ளும் இயல்பு அவனுக்கு உண்டு என்றாலும், மின்சாரத்திளிருந்து, கணிப்பொறி வரை முதலில் ஒரு பயமும் தயக்கமும் அனைவருக்குமே இருந்திருக்கிறது.
ஆண்டுகள் உருள உருள தட்டச்சு இயந்திரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ஓரம் கட்டப்பட, அலுவலகம் மெல்ல மெல்ல கணிப்பொறி மயமாகிக் கொண்டு வந்த நிலையில் திடீரென நான் பட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அதனாலென்ன என்று கேட்கிறீர்களா? பட்டியல் பிரிவில் பணியாற்ற கணிப்பொறி பயிற்சி அவசியம். நானோ அது வரை அதை தொட்டது கூடக் கிடையாது. மொத்த ஊழியர்களுக்கும் சம்பள பட்டியல் தயாரிக்க அரசாங்கம் ஒரு மென் பொருளை அளித்திருந்தது. அதன் மூலம் பட்டியல் தயாரித்து ECS இல ஊதியம் பெற்றுத் தருவதற்கு அசாத்திய பயிற்சி வேண்டும். பட்டியல் பிரிவில் ஒரு தற்காலிக ஊழியர் ஒருவர் இதில் தேர்ந்தவர். அந்த வித்தையை அவரிடமிருந்து யாரும் கற்கவும் முயலவில்லை. அப்படியே கேட்டாலும் அவர் சொல்லித்தந்து விட மாட்டார்.
கற்றுத்தந்துவிட்டால் தன மவுஸ் (mouse) பறிக்கப் பட்டு விடும், பிறகு யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தார். பட்டியல் பிரிவே அவர் இல்லாவிட்டால் ஸ்தம்பித்து நின்று விட வேண்டும் என்பது அவர் ஆசை.
இது வரை அவரைச் சார்ந்தே இருந்து விட்ட மற்றவர்களை போலவே நானும் இருப்பேன், அவருக்கு எடுபிடி ஊழியம் செய்வேன் என்று எதிர்பார்த்தார். நானாவது விடுவதாவது. பட்டியல் போட கற்றுத்தருமாறு கேட்டேன். முடியாது என்றார். கூடவே அதெல்லாம் உங்களால கற்றுக்கவே முடியாது. கம்முனு மத்த வேலையப் பாருங்க என்றார். கணிப்பொறியை பாஸ்வோர்ட் போட்டு திறக்க முடியாமல் வைத்து விடுவார். அது என்னமோ யாராலும் கற்க முடியாத பிரம்ம வித்தை என்பதொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அவரது திமிரும் கர்வமும் அலட்சியமும் என் வெறியை அதிகரித்தது. தலையைக் கொடுத்தாவது அந்த வித்தையை அறிவது என உறுதி கொண்டேன். இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும். என் வீட்டில் என் பெண்களுக்காக கணிப்பொறி ஒன்று வாங்கி பல வருடங்களாகி இருந்தது. அம்மா கம்ப்யுட்டர் கத்துக்கோ என்று பெண்களும் சொல்லி சொல்லி பார்த்தார்கள். நான் கேட்பதாயில்லை. முதல் காரணம் நேரமில்லை. இரண்டாவது எனக்கு எலி என்றால் பயம். அதனால் மௌஸை பிடிக்க பயம் என்று என் பெண்கள் கேலி செய்வார்கள்.
ஆக மொத்தம் நான் கணிப்பொறி கற்க வேண்டிய அவசியம் வந்தே விட்டது. ஆன்னா ஆவன்னா தெரியாது. அடிப்படை பயிற்சியே இனிமேல்தான். கூச்சப்படாமல் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி பெண்களிடமும் சக ஊழிய நண்பர்களிடமும் சரி கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு என் பயிற்சியைத் துவங்கினேன். முக்கியமாக எக்ஸ்செல்லில பணியாற்ற பழகிக் கொண்டேன். எது பிரம்ம வித்தை என்று அந்த உதவியாளர் நினைத்தாரோ, அந்த பட்டியல் தயாரிக்கும் வித்தையை நான் ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டேன். மறு மாதம் நம்புங்கள் அத்தனை ஊழியர்களுக்கும் ஊதிய பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்தேன்.
பிறகுதான் சோதனையே. நான் அந்த வித்தை கற்ற பிறகு அந்த உதவியாளருக்கு மிக சாதாரண பணிகள் அளிக்கப் பட, அவர் அந்த ஆத்திரத்தை வேறு விதமாய் காட்டினார். நான் இல்லாத நேரத்தில் நான் தயாரிக்கும் பட்டியல்களில் தன கைவரிசையைக் காட்டுவார். அதாவது ஒரு ஊழியரின் ஊதிய பிடித்தம் ஆறாயிரம் என்றால் அதில் ஒரு பூஜ்யத்தைக் கூட்டி விடுவார். அறுபதாயிரம் என்றாகி விடும். அவர் செய்து வைத்த மாற்றங்களுக்கெல்லாம் பழி எனக்கு. என்னை பட்டியல் பிரிவிலிருந்து ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்தார். அவர் விருப்பப் பட நான் தூக்கியும் அடிக்கப் பட்டேன்.
இந்த நிலையில் அவருக்கு பணி நிரந்தரமாகி வேறு ஒரு துறைக்கு மாற்றப்ப்பட்டார். எந்த பட்டியல் பிரிவு தன தலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்தாரோ அந்த பிரிவு இப்போதும் யார் தலையிலோ ஓடிக கொண்டுதான் இருக்கிறது.
அந்த ஒரு வருடத்தில் நான் புலியானேனோ இல்லையோ எலி (மௌஸ்) பிடிக்க நன்றாகவே கற்றுத் தேர்ந்தேன். முதலில் அலுவலக வேலை, பிறகு மெல்ல மெல்ல மின்னஞ்சலனுப்புவது, வலைத்தளங்களில் தேடுவது, என்று இன்டர்நெட்டிலும் இயங்கத் தெரிந்து கொண்டேன். இன்று பதிவு எழுதும் அளவுக்கு முன்னேறி உள்ளேன் என்றால் காரணம் அன்று பட்ட அவமானம்தான். அது ஏற்படுத்திய வலி தான். அனைத்தும் நன்மைக்கே என்று நம்புகிறவள் நான். அந்த உதவியாளர் உண்மையில் எனக்கு உதவிதான் செய்திருக்கிறார். அவர் மட்டம் தட்ட தட்ட நான் அதிகம் கற்றேன். அதற்கு நான் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
எட்டு மாதம் முன்பு அந்த உதவியாளர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்த போது எல்லோரையும் விட அதிகம் அதிர்ந்ததும், வருத்தப்பட்டதும் நான்தான். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தது. உயர உயர பணிவு வர வேண்டும். இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்.
பதிவுலகம் வந்த பிறகுதான் எவ்வாவு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இங்கிருக்கிரார்கள் என்பது புரிந்தது. நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது. எந்தரோ மகானுபாவலு...........!
27 comments:
நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்!
//ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும்//
முற்றிலும் உண்மை.
பல விஷயங்களில் தயக்கமும் பயமும் உள்ளோருக்கு
அவற்றைத் தெளிய வைக்கும் பதிவு.
பகிர்ந்த விதமும் அருமை.
pl visit
http://suharaji.blogspot.com/2011/03/blog-post_19.html
முயலாதோர் முயற்சிக்கவும்
முயற்சி செய்வோர் தொடரவும்
ஊக்கமளிக்கும் சிறந்த பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி
வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
மிக அற்புதமான கட்டுரை அம்மா.
//ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும்//மிகவும் சரி
இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்.
தன்னம்பிக்கை டானிக் குடித்த திருப்தி..
தாங்கள் வித்தை கற்றுக்கொண்ட விதத்தை
சுவைபடக் கூறினீர்கள். நானும்
கணினி தொழில்நுட்பம் எதுவும்
படிக்கவில்லை; இருப்பினும்
பதிவராய் வந்துவிட்டேன்.
தாங்களும் என் வலைப்பூவிற்கு
வருகை தருமாறு அழைக்கிறேன்.
// ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும்..
இரண்டு தலைமுறைகளையும் இணைக்கும் பாலங்கள் மாதிரி.. இல்லையா!!
நல்ல பதிவு.
//பதிவுலகம் வந்த பிறகுதான் எவ்வாவு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இங்கிருக்கிரார்கள் என்பது புரிந்தது. நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது. எந்தரோ மகானுபாவலு...........! // நிரம்ப தன்னடக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
அழகான பதிவு!
தெளிய வைக்கும் பதிவு.
இம்மாதிரி நிகழ்வுகள் அநேகமாக நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். அதுவும் பெண்கள் வேலைக்கு வருவது பொறுக்காமலும் நாம் நன்றாக வேலை செய்வதை பார்த்து ஒருவித பொறாமையிலும் இப்படி சிலபேர் நடந்துகொள்வது இப்பவும் நடக்கிறது என்பதுதான் வேதனை. மிக அருமையான தகவல் பதிவு
நானும் கம்ப்யூட்டர் கத்துக்கிட்ட கதையை ஒரு பதிவாப் போடலாம் போலருக்கே:-) கிட்டத்தட்ட இந்த மாதிரிதான்
தங்களின் இந்தப்பதிவு மிகவும் நன்றாகவே இருக்கிறது.
நிச்சயமாக பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.
எனக்கே இதுபோல பல அனுபவங்கள் உள்ளன.
அதை நீங்கள் அப்படியே அழகாக எழுத்தில் கொண்டுவந்துவிட்டது தான் தங்களின் தனித்திறமையாக உள்ளது.
//நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது//
பிரபல எழுத்தாளராகிய தங்களின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
மட்டம் தட்ட தட்டதான் மனிதனுக்கு மேலும் வேகம் கூடுகிறது.அந்த வேகத்தை ஆக்க பூர்வமான வழியில் செலுத்தும்போதுதான் மனிதன் முன்னேறுகிறான்.இந்த உண்மை தங்கள் பதிவில் வெளிப்படுகிறது.
"உயர உயர பணிவு வர வேண்டும். இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்."
அருமையான வரிகள்!!
பொதுவாகவே ஒவ்வொரு மனிதனிடமும் தனித்தன்மைகளும் தனித்திறமைகளும் நீருபூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை யாராவது தூண்டி விடும்போது, அந்தத் திறமைப்பொறி சுடர் விட்டு பிரகாசமளிக்கிறது. உங்கள் விஷயத்தில் அந்த உதவியாளர் தெரிந்தோ, தெரியாமலோ, தன் கீழ்மைக்குணங்களினால்கூட உங்களுக்கு நல்லதே செய்து விட்டார்.
சுவையான கட்டுரை. motivation எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது தான்!
இப்போதுதான் வந்தேன். சுவையான நெகிழவைத்த பதிவு. பாலகுமாரன் எழுதுவார். அவமானம் படபடத்தான் உறுதி வரும் என்று.தடைகளைத் தகர்த்த உங்களின் தன்னம்பிக்கைதான் ஒரு நல்ல எழுத்தாளராக உங்களை வடிவமைத்திருக்கிறது. ஒன்று தடைப்படும்போது இன்னொரு பெரிய ஒளி தரிசனம் வாய்க்கிறது. தன்னம்பிக்கை தளராத பதிவு.
உங்களால் முடியாது என்று சொல்லும்போதுதான் உத்வேகம் பிறக்கிறது.சுவைபடக் கூறினீர்கள்.
உத்வேகம் தரும் இம்மாதிரியான நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் அதை நல்ல பதிவாக மற்ற முடிந்த உங்களுக்கு என் வணக்கம்,
இந்த மாதிரி அனுபவம் எல்லாரும் படுகிறோம்..சமயத்தில் வேலையை விட்டு விடலாமா என்று தோன்றும் என்ன செய்வது? கமிட்மெண்ட்..கமிட்மெண்டுக்கு மேல் கமிட்மெண்ட் என்று போய்க் கொண்டிருக்கும் கால கட்டத்தில் ஏதாவது part time job கிடைக்காதா என்று வாயச காகம் போல் மனம் அலை பாய்கிறது..என்ன செய்ய?
நமக்காக நாம் என்று வாழப் போகிறோம்?
வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
//அருமையான கவிதை. இந்த ஏக்கம் பல விஷயங்களில் எல்லோருக்கும் இருக்கிறது.//
எழுத்துலகில் மிகவும் புகழ்பெற்ற, நிறைய இலக்கிய விருதுகள் பெற்ற தாங்கள், இன்று முதன்முதலாக என் வலைப்பூவுக்கு விஜயம் செய்துள்ளது, நான் செய்த பெரும் பாக்யமாகக்கருதி மகிழ்கின்றேன்.
தங்களை வருக! வருக!! வருக!!! என இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.
அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com
09.04.2011
நம்ப கேப்டன் மாதிரி நீங்களும் எல்லாமே பட்டியலோடதான் சொல்லுவீங்கனு சொல்லுங்க அப்போ!!..:))
அன்பு வித்யா!
உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
விபரங்கள் என் வலைப்பூவில்.
சாட்டையடி
அருமையான எழுத்து நடை.
வாழ்த்துக்கள் அம்மா.
Post a Comment